எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 13, 2010

வந்தாச்சு வந்தாச்சு, பிள்ளையார் வந்தாச்சு! 7


இப்போ நாம் பார்க்கப் போகும் விஷயம் ஏன் இந்த சுக்லபக்ஷ சதுர்த்தி, அதுவும் ஆவணிமாசத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறோம் என்பதற்கான காரணம். இது கொஞ்சம் கிருஷ்ணரோடு சம்பந்தப் பட்டது. கிருஷ்ணருக்குத் திருட்டுப் பழி, ம்ஹும் இல்லை, இல்லை வெண்ணெய் திருட்டு இல்லை, இது வேறே விலை உயர்ந்த ச்யமந்தக மணித்திருட்டுப் பழி ஏற்பட்டதும் அதனால் மனம் வருந்திய கிருஷ்ணர் எப்படி அந்தப் பழியைப் போக்கிக் கொண்டார் என்பதுமே கதை. ஆகையால் முதலில் கதையில் கிருஷ்ணரே வருவார். அதுக்கு அப்புறமாத் தான் பிள்ளையார் வருவார். பிள்ளையார் விசர்ஜனம் செய்யறதுக்குள்ளே வந்துடுவார்.

சூரியனைக் குறித்துத் தான் செய்த தவம் மூலம் தனக்குக் கிடைத்த ஒப்பற்ற மணியான ச்யமந்தகத்தைக் கிருஷ்ணர் கேட்டது சத்ராஜித்திற்குப் பிடிக்கவில்லை. என்னதான் கிருஷ்ணர் மணியைத் தனக்காகக் கேட்கவில்லை என்றாலும், சத்ராஜித் அந்த மணியைக் கிருஷ்ணர் தனக்கென ஆசைப்பட்டுக் கேட்டதாகவே நினைத்தான். அந்த மணியைத் தன் தம்பியான பிரசேனனிடம் கொடுத்து வைத்தான். பிரசேனன் ஒருநாள் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். இந்த ச்யமந்தக மணியை வைத்திருப்பவர் அனுஷ்டிக்கவேண்டிய ஆசார நியமங்களைக் காட்டில் பிரசேனனால் கடைப்பிடிக்கமுடியவில்லை. அவனுடன் கூட வந்தவர்களில் கிருஷ்ணரும் ஒருவர் என ஸ்காந்த புராணம் சொல்லுகின்றது. நம் கதையும் அதை ஒட்டியே போகும். கூட வந்த கிருஷ்ணரையும் , மற்றவர்களையும் பிரசேனன் பிரிந்துவிடுகின்றான். தனியாய்ச் சென்ற பிரசேனன் ஒரு வலிமை வாய்ந்த சிங்கத்திடம் மாட்டிக் கொள்ள சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு மணியை ஏதோ உண்ணும் பொருளென நினைத்து வாயில் கவ்விக் கொண்டு சென்றது.

காட்டில் உள்ளே ஒரு மலைக்குகையில் நம்ம ராமாயணத்து ஜாம்பவான் தன் குடும்பத்தோடு வசித்துக் கொண்டிருந்தார். அவர் இங்கே எங்கே வந்தார் என்பதை அப்புறம் தனியாச் சொல்றேன். இந்த ஜாம்பவானுக்குத் திருமண வயதில் ஒரு பெண் இருந்தாள் ஜாம்பவதி என்ற பெயரில். அந்தப் பெண் பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர் ஜாம்பவானுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸுகுமாரன் என்ற பெயரிட்டு அந்தக் குழந்தையை மிக மிக ஆசையுடன் வளர்த்து வந்தார் ஜாம்பவான். ஜாம்பவான் காட்டில் உலாவிக் கொண்டிருந்தபோது வாயில் ஒளிவீசும் மணியுடன் வந்து கொண்டிருந்த சிங்கத்தைப் பார்த்தார். உடனேயே மிகுந்த பலசாலியான அவர் அந்தச் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மணியைத் தான் எடுத்துக் கொண்டார். அருமையாகப் பிறந்திருக்கும் தன்னுடைய ஆண் குழந்தைக்கு இந்த அபூர்வமான ஒளி வீசும் மணி ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கும் என நினைத்த ஜாம்பவான் ச்யமந்தக மணியைத் தன் அருமைப் பிள்ளையின் தொட்டிலில் மேலே கட்டி வைத்தார். தொட்டிலுக்குள்ளே இருக்கும் குழந்தைக் கரடி அந்தப் பொம்மையின் ஒளியைப் பார்த்துக் குதூகலித்துக் கூக்குரலிட்டுக் கொண்டு விளையாடியது. ஜாம்பவதிக்கும் தன் தம்பியின் விளையாட்டைப் பார்த்துக் குதூகலம் உண்டாக அவளும் சந்தோஷம் அடைகின்றாள். இது இவ்வாறிருக்க, இங்கே காட்டினுள் வெகு தூரம் சென்ற கிருஷ்ணரும், மற்றவர்களும் பிரசேனனை எங்கும் காணாமல் தேடினார்கள்.சூரிய அஸ்தமனமும் ஆகிவிட்டது.

காட்டில் மெல்லிய இருள் கவ்வத் தொடங்கியது. தற்செயலாக வானத்தைப் பார்த்த கிருஷ்ணர் கண்களில் பிறைச்சந்திரன் தென்பட்டான். அன்று நாலாம்பிறை நாளாக இருந்தது. நாலாம் பிறைச் சந்திரன் தான் பளிச்செனக் கண்ணில் தெரியும். அதே போல் கிருஷ்ணர் கண்ணிலும் பட்டது. ஆகா, நிலவு தோன்றிவிட்டதே, இனி இருட்டி விடும், காட்டில் இருக்க முடியாது என நினைத்த கிருஷ்ணர் த்வாரகைக்குத் திரும்பினார். கிருஷ்ணருடன் ப்ரசேனன் வராதது கண்ட சத்ராஜித்திற்குச் சந்தேகம் வருகின்றது. தம்பியைத் தேட ஆட்களை அனுப்ப, பிரசேனன் இறந்து கிடப்பது கண்டு சத்ராஜித் கோபம் அடைந்தான். ச்யமந்தக மணியை அடைய கிருஷ்ணர் செய்த வேலைதான் இது என நினைத்தான் சத்ராஜித். ஆட்களை அனுப்பியோ, அல்லது கிருஷ்ணரே தந்திரமாகவோ பிரசேனனைக் கொன்றுவிட்டு ச்யமந்தக மணியை அபகரித்துக் கொண்டதாய் த்வாரகை முழுதும் தென்படுவோரிடம் எல்லாம் சத்ராஜித் சொல்ல ஆரம்பித்தான். மெல்ல, மெல்ல நாட்கள் கடக்கக் கடக்க, சிலர் நம்பவும் ஆரம்பித்தனர். கிருஷ்ணர் மனம் சஞ்சலம் அடைந்தது.

ஆஹா, தான் ஒரு பாவமும் அறியாதிருக்கத் தன் மேல் இப்படி அபாண்டமாய்ப் பழி சுமத்துகின்றார்களே என மனம் வருந்திய கிருஷ்ணர் சத்ராஜித்தின் ஆட்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் காட்டுக்குச் சென்றார். பிரசேனன் இறந்து கிடந்த இடத்திலிருந்து தொடர்ந்து செல்ல ஆட்களையும் பணித்துத் தாமும் உடன் சென்றார். சிறிது தூரம் வரையிலும் ஒரு மிருகத்தின் காலடி ரத்தத்தில் தோய்ந்த நிலையில் காணப்பட்டது. சிறிது தூரத்திற்குப் பின்னர் இன்னும் கொஞ்ச தூரம் போனதும் சிங்கத்தின் செத்த உடலும் கிடைத்தது. சிங்கத்தின் உடல் கிடந்த இடத்திலே ஒரு பெரிய சண்டை நடந்திருப்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. மற்றோர் மிருகத்தின் காலடியும் தென்பட்டது. சிங்கத்தைவிடக் காலடி பெரியதாய் இருந்ததால் கரடியாகவோ, அல்லது வேறே ஏதோ மிருகமாகவோ இருக்கலாம் என நினைத்தார்கள். அந்தக் காலடிச் சுவட்டைப் பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு குகையில் கொண்டுவிட்டது. குகைக்குள் எட்டிப் பார்த்தால் ஒரே இருட்டு. சத்ராஜித்தின் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இந்த மாயக் கிருஷ்ணன் ஏதோ தந்திரம் செய்து இருட்டுக் குகையில் நம்மை எல்லாம் தள்ளப் பார்க்கின்றானே? நாம் இந்த ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தவர்களாய் உள்ளே வர மறுத்தனர். கிருஷ்ணரும் சரி எனச் சம்மதித்துவிட்டுத் தான் மட்டும் உள்ளே செல்கின்றார். கிருஷ்ணரின் உடலின் பிரகாசமே வெளிச்சமாய்த் தெரிய கிருஷ்ணர் குகைக்குள்ளே நுழைந்தார்.

1 comment:

  1. Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com

    ReplyDelete