எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 31, 2010

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள்.

கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.

மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ!

அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.

நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான்.

கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்.

மூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம்
தத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி
பூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்
வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ

ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே!

1 comment:

  1. //ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே//

    பிடித்த வரிகள் கீதாம்மா !
    நன்றி .,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete