எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 29, 2010

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள் 14

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!

அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா??


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள்.

இப்படிப் பரம்பொருளுக்கே அடிமையாய் இருப்பதைப் பற்றிய பக்தி யோகத்துக்கு பட்டத்திரி கூறுவது:

த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ:
டஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்

இவ்வுலகிலுள்ள புழு, பூச்சிகளில் இருந்து மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதர் வரை அனைவருமே , உயிரற்ற மரம், மலை போன்ற ஜடப் பொருட்களும் கூட பரமாத்மாவின் அம்சம் என்ற நினைப்பே வரவேண்டும். அவ்வாறு நினைக்க எத்தனை நாட்கள் ஆனாலும் அதுவரை நான் தங்களை ஆராதித்துக்கொண்டே இருப்பேன். எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!
************************************************

1 comment:

  1. நல்ல பதிவு கீதாம்மா

    ReplyDelete