எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 09, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 2

கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டது.  ராதாவுக்கு விழிப்பு வந்துவிட்டது.  ஜன்னல் வழியாக வெளியே விடியும் நேரம் என்பதைப் புரிந்து கொண்டாள்.  அதான் எழுப்பறாங்க போல என நினைத்த வண்ணம் எழுந்தாள். ஒரு நிமிஷம் நிதானித்துக் கொண்டு தான் மணமாகிக் கணவன் வீடு வந்திருப்பதையும், நேற்று இரவு அவளுடைய முதல் இரவு என்பதையும், அருகே இருக்கும் கணவனையும் பார்த்ததும் அவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.  மெல்ல சப்தம் போடாமல் எழுந்து கதவைத் திறந்தாள்.  வெளியே அம்மா நின்று கொண்டிருந்தாள். இரு பெண்கள் கையில் ஆரத்தியுடன் காத்திருந்தனர். அம்மா முகத்தில் ஏதோ வாட்டம்! என்னவா இருக்கும்?

வெளியே வந்த ராதாவுக்குஆரத்தி எடுத்துவிட்டு அந்தப் பெண்கள் நகர்ந்ததும்,அம்மா அவளிடம், கிசுகிசுவான மெல்லிய குரலில்,"முதலில் உன் மாமியாரைப் போய்ப் பார்த்து நமஸ்காரம் பண்ணு.  அவங்க என்ன சொன்னாலும் காதிலேயும் போட்டுக்காதே, மனசிலேயும் வைச்சுக்காதே.  அடுத்து என்ன செய்யணும் என்பதை மட்டும் கேட்டுக்கோ." என்றாள். ராதா, "ஏன், என்ன ஆச்சு? அவங்க ஏதாவது சீரிலே அதில்லை; இதில்லைனு சொன்னாங்களா? " ஒரு நிமிடம் தாமதித்தவள், "வெள்ளிச் செம்பிலே பால் வைக்கணுமாமே, அது ஏன் வைக்கலைனு அவரை விட்டுக் கேட்கச் சொல்லி இருக்காங்க; பாரேன் எவ்வளவு" என ஆரம்பித்த ராதாவைத் தடுத்த அம்மா, "நீ என்ன சொன்னே?" என்று கேட்க, "எனக்குத் தெரியாது."னு சொன்னேன்.  நிஜம்மா எனக்கென்ன தெரியும்?" என்றாள்.

"சரி, வா,"என்று பெருமூச்சுடன் பெண்ணை அழைத்துச் சென்ற அம்மா, அவள் காலைக்கடன்களை முடித்ததும், மாமியாரைப் போய்ப் பார்க்கச் சொல்ல, ராதாவும் மாமியார் இருக்குமிடம் தேடிச் சென்றாள்.  கொல்லையில் தாழ்வாரத்தில் இருக்கும் அடுப்பில் காப்பி போடுவதாய்ச் சொல்ல அங்கே சென்றாள். மாமியார் அடுப்படியில் அமர்ந்திருக்கச் சுற்றி அவர்களின் இரண்டாவத் பெண், மூன்றாவது பெண் மற்றும் மற்ற இரு பிள்ளைகள் அமர்ந்திருந்தனர்.  எல்லாரும் அம்மாவையே சோகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க மாமியார் முகத்தில் சுரத்தே இல்லை. "மாமி," வாய் வரைக்கும் வந்த வார்த்தையை விழுங்கி விட்டு, "அம்மா, நமஸ்காரம் பண்ணறேன்." என்று கூறினாள்.

அவ்வளவு தான். நிமிர்ந்து பார்த்த அகிலாண்டம்மாள்," என் பிள்ளையை என் கிட்டே இருந்து பிரிச்சுட்டையே?  உயிரோட உன் கிட்டே தூக்கிக் கொடுத்துட்டேனே.  எல்லாருமாச் சேர்ந்து சதி செய்து என் பிள்ளையைப் பிரிச்சுட்டாங்களே! குஞ்சும், குளுவானுமாக் குழந்தைகளை வைச்சுண்டு நான் இனிமே என்ன செய்யப் போறேன். மகமாயி, தாயே, அம்மா, உன்னையே கதினு நம்பினவளை நீ இப்படி மோசம் செய்யலாமா?" என்றெல்லாம் கேட்டுக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

விக்கித்துப்போனாள் ராதா.  என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழிக்க, சுற்றி அமர்ந்திருந்த  அவளின் நாத்தனார்களும், மைத்துனர்களும் அவளை வெறுப்புடனும், கோபத்துடனும் பார்க்க ராதா வெலவெலத்துப் போனாள். அவளுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.  அப்போது அங்கே வந்த மாமனார், "சந்துரு எழுந்து பல் தேய்ச்சுட்டான்.  காப்பிக்கு வரான்." என்று மெல்லச் சொல்ல, அவ்வளவு தான், அங்கே சூழ்நிலையே மாறியது.

2 comments:

  1. எப்படியும் இந்தக் கதை அறுபதுகளில் நடந்திருக்கணும்....... ஏன்னா இப்பல்லாம்தான் இப்படியெல்லாம் நடக்கறதில்லையே...!

    ReplyDelete
  2. இப்ப நிஜமாவே curious.. இவங்க தான் ரம்யாவுக்கு முந்தின தலைமுறையா?

    ReplyDelete