எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 18, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால்! 4

ராதா கலங்கினாள். இப்படி ஒரு பிரச்னை அவள் எதிர்பார்க்காத ஒன்று. கணவன் சொன்னதற்கு நேர் மாறாக அன்றோ மாமியார் சுபாவம் இருக்கிறது.  அவருக்கு இதெல்லாம் தெரியுமா?  நாம் இப்போவே சொன்னால் தப்பாக அன்றோ போயிடும்! அம்மாவைப் பார்த்துக் கேட்டாள். "அப்புறமா என்ன ஆச்சு?"

"அப்புறம் என்ன? மயக்கத்தைத் தெளிவிச்சாங்க.  உன் மாமியார், " உடனே பிள்ளையைக் கூப்பிடுங்க; நான் உயிரோடு இருக்கமாட்டேன். காலை வரை எனக்குத் தாங்காதுனு சொல்லறாங்க.  ஆனால் உங்க மாமனாரின் அண்ணாவும், அவரின் அக்கா பிள்ளையுமா, என்ன நடந்தாலும் சரி, நல்ல வேளை பார்த்து இரண்டு பேரையும் சாந்தி முகூர்த்தத்துக்கு அனுப்பி இருக்கு. நாளைக்கு வம்சம் விளங்க வேண்டாமா? நடக்கிறது நடக்கட்டும்.  இப்போக் கூப்பிடக் கூடாதுனு திட்டவட்டமா மறுத்துட்டாங்க.  அப்புறமும் உன் மாமியாரும், நாத்தனார்களும் அழுதுட்டே இருந்தாங்க.  எங்களுக்கெல்லாம் பயம்மா இருக்குமா ராதா.  அப்பா சொல்றார், "ராதாவை இங்கே விட்டு வைக்க வேண்டாம்.  இந்தச் சூழ்நிலையில் அவ இருக்கிறதை விடவும், நான் கல்யாணமே ஆகலைனு நினைச்சுக்கறேன்; அழைச்சுண்டு போயிடலாம்னு சொல்றார்." அம்மா முடித்தாள்.

தலைகுனிந்த வண்ணம் யோசனையில் ஆழ்ந்தாள் ராதா. மாமியாரின் பயம் என்ன வென்று அவளுக்குத் தெளிவாய்ப் புரிந்தது.  அந்த வீட்டின் ஒரே சம்பாதிக்கும் ஆண் அவள் கணவன் தான்.  ஆகவே தங்களுடைய பங்கு குறைந்துவிடுமோ எனப் பயம்.  அந்தப் பயத்தைப்போக்க முடியாதா?  முடியும்; என்னால் முடியும்.  இதற்காகக் கல்யாணம் ஆனமறு நாளே பிறந்த வீட்டில் போய் உட்கார்ந்தால்!  ம்ஹும் சரியாய் இருக்காது.  அவரிடம் என்ன காரணம் சொல்வது! இங்கேயே இருந்தால் ஒரு சமயம் இல்லைனா ஒரு சமயம் அவருக்குத் தெரிய வாய்ப்பு இருக்கு. அவராய்ப் புரிஞ்சுக்குவார். ஆகையால் நான் பிறந்த வீடு போகக் கூடாது.  இங்கேயே இருந்து தான் இதிலிருந்து மீண்டு வரும் வழியைத் தேடணும்.

நிமிர்ந்து பார்த்து அம்மாவைப் பார்த்து புன்னகைத்தாள் ராதா.  அம்மா மகளை விசித்திரமாய்ப் பார்த்தாள்.  எதுவுமே சொல்லாமல் தான் போய்க் குளித்துவிட்டு வருவதாய் சொல்லிவிட்டு ராதா குளிக்க ஆயத்தமானாள். "ராதா, ராதா," என அழைக்கும் குரல் கேட்க, ராதாவின் முகத்தில் வெட்கம் கவிந்தது.  இது அவர் குரல் இல்லையோ?  சட்டென வெளியே வந்து, எங்கே இருக்கிறார் எனப் பார்த்தாள்.   அவர்களுக்கு என ஒழித்து விடப் பட்டிருந்த அறையிலிருந்து சப்தம் கேட்கவே, உடனே அங்கே சென்றாள்.  அவளைப் பார்த்த சந்துரு முக மலர்ச்சியுடன், "ராதா, எங்கே போனே? அம்மாவுக்கு உன்னை ரொம்பப் பிடித்துவிட்டது.  நான் குளிக்கப் போறேன். என்னோட சோப்புப் பெட்டியைக் காணோம். கொஞ்சம் பார்த்து எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு வா." என்று கூறிவிட்டுத் தான் துண்டை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

சோப்புப் பெட்டியைத் தேடிய ராதா, அதைக் காணாமல் நேற்றுப் புதிதாய்க் கல்யாணத்தில்  வைத்திருந்ததில் இருந்து எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கிச் சென்றாள்.  அங்கே அவள் கடைசி நாத்தனார், சோப்புப் பெட்டியைக் கணவனிடம் கொடுப்பதைப் பார்த்தாள்.  ஓ, இவள் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாளா, அதான் சோப்புப் பெட்டி இடத்தில் இல்லை என நினைத்த வண்ணம் சிரித்துக் கொண்டே அவளைப் பார்த்து, "என்ன, அண்ணாவைக் காக்கா பிடிக்கிறாயா?" என விளையாட்டாய்க் கேட்டாள்.  ஒரு நிமிஷம் அவளை உறுத்துப் பார்த்த லதா," இது எங்க அண்ணா.  நான் ஏன் காக்காய் பிடிக்க வேண்டும்? நீ தான் இந்த வீட்டுக்குப் புதுசு.  உனக்குத் தான் அண்ணாவைக் காக்காய் பிடிக்க வேண்டும்.  எங்க அண்ணாவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்காமலேயே செய்ய எங்களுக்குத் தெரியும்.  நீ இன்னிக்கு வந்துட்டு என்னை அதிகாரம் பண்ண நினைக்காதே!" என்றாள் படபடவென.

ராதாவின் முகம் கறுத்தது.  சந்துருவும் திகைப்போடு நின்று கொண்டிருந்தான்.  தன் தங்கை சொல்வது சரியில்லை எனத் தெரிந்தும் அதை அவளிடம் சொல்ல முடியாமல் திணறினான்.  ராதா வந்த அன்னிக்கே தங்கையை நாம் கடிந்து கொண்டால் இன்னமும் அந்தப் பழியும் ராதாவின் தலையில் விடியுமே என யோசித்தான். அவளை வெற்றிப் பார்வை பார்த்த லதா, மெல்ல அவளிடம், "என்ன ரயிலில் அண்ணாவை உன் பக்கம் கூப்பிட முடிந்ததே உன்னாலே, இப்போ முயன்று பாரேன்!" என்றாள் கிண்டலாக.

ராதா மெல்ல உதட்டைக்கடித்துக் கொண்டாள்.  நேற்று அவர்கள் அனைவரும் ரயிலில் வருகையில் ராதா அருகே லதா அமர்ந்திருந்தாள்.  எதிரே சந்துரு உட்கார்ந்திருந்தான்.  அங்கிருந்து ராதாவிடம் பேச்சுக் கொடுக்க முயலும்போதெல்லாம் லதா குறுக்கிட்டு ஏதேனும் பேசினாள்.  கடைசியில் சந்துரு அருகே அமர்ந்திருந்த ஒருத்தர் இறங்குவதற்கு எழுந்திருக்க, சந்துரு, அவளை ஜாடை காட்டித் தன்னருகே அமரக் கூப்பிட்டான். அதற்குள்ளாக லதா வேகமாய் எழுந்து அண்ணன் அருகே அமர்ந்து விட்டாள்.  அந்தப் பெட்டியிலேயே அனைவரும் திகைத்தனர்.  லதாவிடம், இதமாகப் புதுக்கல்யாண ஜோடி, அம்மா, அவங்களுக்கு எவ்வளவோ பேச இருக்கும்; நீ தான் விட்டுக் கொடுத்துப் போகணும், நாளைக்கு நீயும் இப்படி ஒருத்தனைக் கட்டிக் கொண்டு போகப் போறவ தானே! என்றெல்லாம் சொல்லிப் பார்த்தனர்.  ஆனால் லதாவோ, "என் அண்ணா என்னைத் தான் கூப்பிட்டார்." என்று சொல்லிவிட்டாள். சந்துருவோ சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டுத் தானே எழுந்து ராதாவின் அருகே அமர்ந்தான்.

அப்போதே ராதாவுக்குச் சுருக்கென்றிருந்தது.  சந்துருவிடம் அங்கேயே போய் உட்காரச் சொன்னாள். ஆனால் சந்துருவோ, நான் தானே வந்தேன்; நீ ஏன் பயப்படறே! என் மனைவி கிட்டே நான் உட்காருவேன்." என்று சொல்லிவிட்டான்.  இதை லதா அவள் அம்மாவிடம் மாற்றிச் சொல்லிவிட்டாள். ராதா தான் சந்துருவைக் கூப்பிட்டதாக.  அவள் மாமியாரும் அதை உண்மை என நம்பிக் காலையில் வந்ததுமே அவளிடம், ரயிலில் சந்துரு லதாவைப் பக்கத்தில் உட்காரக் கூப்பிட்டுட்டான் என்பதற்காக அவனிடம் கோவித்துக் கொண்டாயாமே? அப்புறம் என் பக்கத்திலே உட்கார்ந்தால் தான் ஆச்சு எனப் பிடிவாதம் வேறே பிடிச்சிருக்கே? உனக்கென்ன வெட்கமே இல்லையா? வயசுப் பொண்ணு எதிரே என்னதான் கட்டினவனா இருந்தாலும் இப்படியா?" என்று கேட்டிருந்தாள். எல்லாம் ராதாவின் கண்களில் படம் போல் ஓடியது.  சந்துருவிடம் அதை எல்லாம் அவள் சொல்லவில்லை. பார்த்துக்கலாம் என விட்டு விட்டாள்.  இப்போ இந்தப் பெண் அதைச் சொல்லிக் காட்டுகிறாளே!

கடவுளே, சந்துரு பம்பாய் போகையில் அவளையும் அழைத்துச் சென்றால் தேவலை. என்ன நடக்கப் போகிறதோ!  ராதாவுக்கு உண்மையிலேயே கவலை. தான் எடுத்த முடிவு சரிதானா என்ற சந்தேகமும் வந்தது. அப்போது வாசலில் "தந்தி" என்ற குரல் கேட்கவே, கல்யாண வாழ்த்தாக இருக்கும் என நினைத்தனர் எல்லோருமே.

8 comments:

 1. அந்த கடைசி நாத்தனார் லதாவுக்கு ஸ்ரீராம் சஜஸ்ட் பண்ணின லலிதாங்கற
  பேரை வைச்சிருக்கலாம்ல்லே?.. நீங்க தான் அந்தப் பேரைக் கடன் வாங்கி வைச்சிருக்கீங்களே?.. இல்லே, லதாங்கற ரெண்டு எழுத்துக்கு நடுவே ஒரு 'லி' விட்டுப் போயிடுச்சா?..

  ReplyDelete
 2. வீடு புதுசு; ஆட்கள் புதுசு; உறவு முறை புதிசு; ஒரு இருபது இருபத்தைந்து வயதுக்கு மேல் பழக்கமில்லாத புதுசுகளுடன் ஒட்டி உறவாடி தன் இருப்பையும் நிலைப்படுத்திக் கொண்டு செட்டில் ஆகணும்னா.. பெண்களை நினைத்தால் இரக்கமாகத் தான் இருக்கிறது!

  ReplyDelete
 3. ராதாவைத் தெளிவாகச் சிந்திப்பவளாகக் காட்டுவது ஆறுதல். 'ம்.... இந்தப் பெண் சமாளித்து விடும்!' ரயில் பெட்டி சம்பவத்தில் வீட்டிலேயே மாலை நேர அரட்டையைக் களமாக எடுத்துக் கொண்டால் இங்கும் ஒரு சம்பவம் சமமாய் ரெடி! வீ.வீ.வா.ப. தான் போல!

  ReplyDelete
 4. "தந்தி" என்ற குரல் கேட்கவே, கல்யாண வாழ்த்தாக இருக்கும் என நினைத்தனர் எல்லோருமே.

  மாற்றப்போகிறீர்களா!???

  ReplyDelete
 5. வாங்க ஜீவி சார், ஶ்ரீராம் பெயர் கடன் கொடுத்ததே நினைவில் இல்லை! :))))) அநேகமா இந்தக் கதையை ஆன்லைனிலேயே எழுதறதாலே அப்போ என்ன தோணுதோ அதான்! கதைக்கரு மட்டும் மனசிலே புரண்டு உருண்டு, யார்ட்டயானும் சொல்ல மாட்டோமானு காத்துட்டு இருந்தது. :))))

  ReplyDelete
 6. பெண்களை நினைத்தால் இரக்கமாகத் தான் இருக்கிறது!//

  என்னைக் கேட்டால் இரக்கப்பட்டால் பெண்களின் தன்னம்பிக்கை போயிடுதுனு நினைக்கிறேன். சார்பு நிலை வந்துடறது. பரிதாபமோ, இரக்கமோ மனசுக்குள்ளேயே இருக்கும் வரைக்கும் சரி. அதுக்கேத்தாப் போல் நடந்து கொள்வதில் காட்டலாம்னு தோணுது. இல்லையா? :)))))))

  ஆனால் ஒரு விஷயம் இம்மாதிரி எந்தச் சூழ்நிலையையும் ஒரு பெண்ணால் தன்னந்தனியாகச் சமாளிக்க முடியும். :)))))

  ReplyDelete
 7. வாங்க ஶ்ரீராம், வீ.வீ.வா.ப. தான் தடுக்கி விழாமல் இருப்பதில் தான் சாமர்த்தியம் இருக்கு. :))))) ராதா என்ன செய்யப் போறா பார்க்கலாம்.

  ReplyDelete
 8. வாங்க ராஜராஜேஸ்வரி, நீங்களும் படிப்பதில் மகிழ்ச்சி. ம்ம்ம்ம்??? பார்க்கலாம்; தந்தியைப் பிரிச்சுப் படிச்சால் தானே தெரியும் விஷயம் என்னனு! :))))))))

  ReplyDelete