எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 13, 2012

இந்தக் கதையை எப்படி முடிக்கிறது? தொடர்ச்சி! :D

முதல்லேயே டிஸ்கி போட்டுக்கறேன். இது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவது அல்ல. ஆகவே யாரும் மனசு சங்கடப் பட்டுக்க வேண்டாம்.  நான் கேள்விப் பட்ட ஒரு விஷயத்தைக் கொஞ்சம் போல் மாற்றி என் இஷ்டத்துக்குக் கற்பனை செய்கிறேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இப்போ முதல் அத்தியாயத்தின் தொடர்ச்சி: இதைப் படித்தால் கொஞ்சம் வசதியாய் இருக்கும். :))))))
*************************************************************************************
வனிதா என்ன சொன்னாலும் ரம்யாவுக்கு அதில் சம்மதம் இல்லை. "எப்படியேனும் உண்மை தெரிஞ்சுக்கணும்.  அம்மா யார்னு தெரியணும்.  அவங்க தான் இந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கணும். பெத்த அம்மா உயிரோடு இருக்கிறச்சே வளர்த்தவ ஏன் கல்யாணத்தை நடத்தணும்? கூடாது; இதுக்கு நான் இடம் கொடுக்க மாட்டேன். பாட்டியிடமே கேட்டு விட்டால்? அதென்னமோ தெரியலை; பாட்டி அம்மாவைக் கண்டால் பயப்படுகிறாளோனு தோணுது.  இங்கே வந்தாலே அம்மாவை வலிய உட்கார்த்தி வைச்சுப் பேச்சுக் கொடுப்பாள்.  அதோடு சித்தியோடு அம்மாவை ஒப்பிட்டு, அம்மாதான் உசத்தினு வேறே சொல்லிப்பா.  எல்லாம் என்னைச் சமாதானம் செய்யத் தான். எனக்குத் தெரியாதா! அவ்வளவு முட்டாளா நான்? "

"இதே பாட்டி ஒரு காலத்தில் அம்மா என்னைச் சரியா வளர்க்கலைனு எவ்வளவு குத்தம் சொல்லி இருக்கா!  சாப்பாடு கூடப் போடுவியா மாட்டியானு எல்லாம் கேட்பாளே!  நானும் பாட்டி பக்கம் தான் இருந்திருக்கேன்.  அம்மா ஒண்ணுமே தரதில்லைனு சொல்லிட்டு பாட்டி வாங்கித் தரதையும் சாப்பிட்டுருக்கேன்.  அப்புறமா வாந்தி வந்து அவஸ்தைப் படுவேன். ஸ்கூல்லேயும் அம்மாவைப் பத்திக் குத்தம் சொல்லி இருக்கேன்.  பாட்டியும் அதுக்கு ஒத்து ஊதி இருக்காளே. இப்போ நான் உண்மைக் காரணத்தைச் சொல்லிக் கேட்டால் சொல்ல மாட்டாளா? நான் படிக்கிற காலத்தில் என்னை எவ்வளவு பாடு படுத்தி இருக்கா இந்த அம்மாங்கறவ!  நாளைக்கு யூனிட் டெஸ்ட்டுன்னு எனக்கு நினைவு இருக்கோ இல்லையோ அவ நினைவு வைச்சுண்டு என்னைக் காலங்கார்த்தாலே எழுப்பிப் படிக்கச் சொல்லி......."

ரம்யாவுக்குக் காலைத் தூக்கம் என்றால் அலாதி பிரியம்.  ஏழரை மணிக்குப் பள்ளிக்குக் கிளம்பணும்னா ஏழுமணி வரை தூங்குவாள்.  யாரும் எழுப்பக் கூடாது. ஆனால் அம்மாவோ ஆறரை மணியிலே இருந்து எழுப்பிண்டே இருப்பா.  ரம்யா கத்தக் கத்தக் கேட்காமல் எழுப்பிக் கூட்டிப் போய்ப் பல்லைத் தேய்க்க வைச்சுக் குளிக்க வைச்சுச் சாப்பாடைக் கையிலே போட்டு, தலை பின்னிவிட்டுப் பள்ளிக்குத் தயாராக்குவாள். காலைத் தூக்கம் போன கோபத்தில் ரம்யா எத்தனையோ நாள் காலை சாப்பிடவே மாட்டாள். கோபத்தோடு ஸ்கூலுக்குப் போவாள். இப்போதும் காலை ஏழரைக்குக் குறைந்து ரம்யா எழுந்திருக்கிறதில்லை.  எட்டரைமணிக்கு அலுவலகம்.  ஏழரைக்கு எழுந்து தயாராவதற்குள்ளாக அவள் அம்மாவுக்கு இடுப்பு ஒடிந்து தான் போகிறது.  ஏற்கெனவேயே அம்மாவைப் பாடாய்ப் படுத்தின ரம்யாவுக்கு இவள் தன் அம்மாஇல்லைனு தெரிந்ததும், உள்ளூற ஒரு திருப்தியே மேலோங்கியது.  ஆனால் அப்பா முகத்தில் தான் சோகம் தெரியும்.  ரம்யாவைப் பார்க்கும் பார்வையில் நீ செய்வது சரியில்லைனு சொல்வது தெரியும். ஹூம், அவர் பெண்டாட்டியை அவர் விட்டுக் கொடுப்பாரா?

கலவையான நினைவுகளோடு வீட்டை அடைந்தாள் ரம்யா.  வாசலில் வண்டியை வைத்தாள்.  வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது அம்மாவின் தூண்டுதலில் தான். அதென்னமோ தெரியலை; எல்லாத்தையும் கத்துக்கோனு ஒரு அம்மா. கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டா!  ஓய்வு நேரங்களில் ரம்யாவுக்குத் தொலைக்காட்சி பார்ப்பதும், பேசிக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும் என்றால் அம்மா அப்போப் பார்த்து இதைக் கத்துக்கோ, அதைக் கத்துக்கோனு நீட்டி முழக்குவாள்.  ஆனால்........ என்ன இருந்தாலும் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது பேருந்தில் கூட்டத்தில் அடிபடாமல் போக வசதிதான்.  ஆனால் தனக்கு இது வசதி என்பதை அம்மா அறியக் காட்டிக் கொள்ளக் கூடாது.  ரம்யா யோசனையுடன் உள்ளே போனாள்.  அப்பா மட்டும் ஊஞ்சலில் உட்கார்ந்து இருந்தார். அம்மா இல்லை.  அவள் அண்ணா வீட்டிற்குப் போயிருக்கிறாளாம்.  நல்லதாப்போச்சு. அப்பாவிடமே கேட்டுவிடலாம்.

"உள்ளே உனக்கு டிபன், காப்பி வைத்திருக்கிறாள் அம்மா. அதைச் சாப்பிட்டு விட்டு மாடிக்கு வா ரம்யா, உன்னிடம் நான் பேச வேண்டும்." அப்பா கூறியதைக் கேட்ட ரம்யாவுக்குக்கொஞ்சம் கலக்கமாய் இருந்தாலும் என்னவாய் இருந்தாலும் சமாளிக்கலாம் எனத் தோன்றியது.  "எனக்கு டிபனும் வேண்டாம்; ஒண்ணும் வேண்டாம். என்னனு நீங்க சொல்லுங்க முதல்லே." என்றாள் பிடிவாதமாக.  அவளையே சிறிது நேரம் பார்த்த அப்பா ஒன்றும் பேசாமல் தன் அறைக்குச் சென்றவர் நாலைந்து டயரிகளோடு வந்தார். 

"இந்தா, நேரம் இருந்தால் இவற்றைப் படி. உனக்குத் தெரிய வேண்டியது எல்லாமும் இதில் இருக்கு!" என்றபடி மறு வார்த்தை பேசாமல் உள்ளே போய்விட்டார் அப்பா. ரம்யா தன் அறைக்குச் சென்றாள். டயரிகள் வருஷ வாரியாக இருந்தன. அவற்றில் ஒன்றில் அப்பா, அம்மா கல்யாணப்பத்திரிகை ஒட்டி இருக்கவே அதை எடுத்து முதலில் படிக்க ஆரம்பித்தாள்.  பாட்டி அம்மா கல்யாணத்திற்கு மறுநாள் முதலிரவில் மயக்கம் போட்டு விழுந்தது வரை படித்தாள் ரம்யா.  விபரம் தெரிந்த இளம்பெண்ணாக இருந்ததினால் இந்த விஷயம் அவள் மனதைச் சங்கடப் படுத்தியது.  பாட்டி இப்படியா நடந்து கொண்டாள்?

3 comments:

  1. மறுபடியும் முதல்லேருந்தா.... இப்பவே சஸ்பென்ஸ் வெளிப் பட்டிருக்கும்னு நினைச்சி வந்தேன்.... ம்...ஹூம்... தொடருமா?!

    இந்தக் கதையை எப்படி முடிக்கிறது?
    இந்தக் கதையை அதுக்குள்ள எப்படி முடிக்கிறது?!! :))

    ReplyDelete
  2. இந்தக் கதையை அதுக்குள்ள எப்படி முடிக்... அதான் நாலைஞ்சு டைரி கொடுத்துட்டாங்களே.. விறுவிறு முடிவு தான்!

    ReplyDelete
  3. 'ஜம்ப் கட்' உத்தியப் புரட்டியெடுக்கிறீங்களே?
    ப்லேஷ்பேக்கையும் இப்பத்தையும் சேத்துப் படிச்சா கதை புரிஞ்சுடும் போல..

    ReplyDelete