எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 24, 2016

சோசியம் பார்க்கலியோ, சோசியம்!

ஜோசியத்தை எத்தனை பேர் நம்பறீங்க? அநேகமா வாழ்நாளில் ஒரு முறையாவது ஜோசியம் பார்க்காதவங்களே இருக்க மாட்டாங்கனு நம்பறேன். குறைந்த பட்சமாகப் பத்திரிகைகளில் வரும் ராசி பலன்களையாவது பார்த்திருப்பாங்க. ஆனால் நம்ம ரங்க்ஸ் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி வரைக்கும் உள்ள எல்லா ஜோசியர்களையும் பார்த்துட்டார். ஊட்டியிலே இருந்தப்போ ஒரு ஜோசியரைப் பார்க்கப் புஞ்சைப் புளியம்பட்டிக்கு என்னைக் கூட்டிப் போனார்னா பாருங்களேன். அந்த ஜோசியர் ரயில் சிநேகமாம். விலாசமெல்லாம் வாங்கி வைச்சுண்டு வருங்காலத்தைத் தெரிஞ்சுக்கக் கிளம்பிட்டார் என்னையும் அழைத்துக் கொண்டு! :)))) தெருவிலே வரும் குறி சொல்றவங்க, குடுகுடுப்பைக்காரங்கனு ஒருத்தர் பாக்கி இல்லை! :))))

புஞ்சைப் புளியம்பட்டிக்காரர்  சொன்னது எல்லாம் பலிச்சதா, பலிக்கலையாங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். சில ஜோசியர்கள் நாட்டு பலன், தலைவர்கள் பத்தி எல்லாமும் சொல்றாங்க. அப்படிச் சொன்னவர்களிலே சிலர் சென்ற வருஷம் சென்னை வெள்ளத்தைப் பற்றி ஆற்காடு  பஞ்சாங்கத்திலே குறிப்பிட்டிருந்ததாகவும், இந்த வருஷமும் அதே போல் மழை வெள்ளம் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொன்னாங்க. அதே போல் பிரபலமான பெண் அரசியல் தலைவர் இறப்பு பற்றியும் சொல்லி இருந்ததாச் சொல்லிட்டு இருக்காங்க. ஜெயலலிதா இறந்ததும் உடனே வர்தா புயல் வந்ததும் அந்தப் பஞ்சாங்கத்தைக் கொஞ்சமானும் நம்பணும்னு சொல்றாப்போல் ஆயிட்டது! மேலும் ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து போனது குறித்தும் அதிலே சொல்லி இருப்பதாகச் சொல்கின்றனர். தேதி குறிப்பிட்டே அதிலே ரூபாய் நோட்டு மதிப்புக் குறைவு பத்தி  வந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

கறுப்புப் பண நடவடிக்கை குறித்தும் அதன் மூலம் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். அதுவும் நடந்திருக்கிறது. இனி வரப் போகும் வருடத்திற்கு  என்ன சொல்லி இருக்காங்க என்று தெரியலை! எங்க வாழ்நாளில் பல ஜோசியர்களைப் பார்த்தாச்சு. பெரும்பாலானவர்கள் சொன்னது பலித்ததே இல்லை. சும்மா சாதாரணமா எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் சொன்னவங்க ஜோசியம் பலிச்சிருக்கு! என் கல்யாணமும் அப்படி ஜோசியர் சொன்ன மாதிரியே நடந்தது. என் கைரேகையைப் பார்த்துட்டு என் நண்பர் சிவா என்பவர் ஐம்பது வயசுக்கு மேலே நீ வெளிநாடு போவேனு சொன்னப்போச் சிரிச்சேன். ஆனால் அது உண்மையாக நடந்தது. ஆனால் பொதுவாக எனக்கு ஜோசியம் பார்ப்பதிலேயோ வார பலன்கள் படிப்பதிலேயோ அவ்வளவு ஆர்வம் இல்லை. நடக்கிறது நடக்கட்டும், வருவதை எதிர்கொள்வோம்னு இருப்பேன்.

நம்ம ரங்க்ஸ் ஶ்ரீரங்கத்திலே இருந்தவரைக்கும் காலை ஏழு மணிக்குத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போட்டுட்டு உட்கார்ந்தார் என்றால் ஒவ்வொரு தொலைக்காட்சியா ஜோசியம் சொல்றவங்க சொல்றதை எல்லாம் கேட்டு முடிச்சுட்டு ஒருவழியா அரைமனசோடு எட்டரை மணிக்கு எழுந்திருப்பார். இதிலே ஏதோ ஒரு சானலிலே ஹரிகேசநல்லூர் ஜோசியர் ஒருத்தர் சொல்லுவார். யாருக்குமே கெடுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லவே மாட்டார். எல்லோருக்குமே வாழ்க்கையில் வளம் சேரும் என்றே சொல்லுவார். இதிலே சங்கரா தொலைக்காட்சியிலே சொல்றவர் ஒருத்தருக்கும் நல்லதாவே சொல்ல மாட்டார். நம்ம ரங்க்ஸ் தான் ரொம்பவே ஈடுபாட்டுடன் கேட்டுக் கொண்டு இருப்பார். அநேகமா ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொருத்தர் வீட்டிலே இருக்கிறதாலே மொத்தமும் கேட்டுப்பார்.


 நான் பாட்டுக்குச் சமைச்சுட்டோ அல்லது ஏதேனும் வேலை செய்து கொண்டோ இருப்பேன், இந்த ஜோசியக்காரங்க சொல்றதைக் கேட்டு ரங்க்ஸ் என்னிடம் , "இன்னிக்கு உனக்குச் சந்திராஷ்டமம்! ஜாக்கிரதையா இரு!" னு சொல்லிடுவார். அது வரைக்கும் நல்லாச் செய்துட்டிருந்த வேலை அப்புறமாத் தடுமாறுகிறாப்போல் இருக்கும்.  அப்போ வர கோபம் அன்னிக்குப் பூராப் போகாது. இதெல்லாம் சந்திராஷ்டமத்தோட வேலைனு ரங்க்ஸ் சொல்ல, "நான் பாட்டுக்கு இருந்தேன், நீங்க சொன்னதும் தான் எனக்கு இப்படி ஆயிடுச்சு,"னு நான் சொல்ல ஒரு குருக்ஷேத்திரம் தான் அங்கே நடக்கும்!

எது எப்படியோ, நமக்குனு உள்ளது, நமக்குக் கிடைக்க வேண்டியது கட்டாயமாய்க் கிடைத்தே தீரும்! கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும்?  எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம். ஆனாலும் பாருங்க, மக்களுக்கு எதிர்காலம் குறித்து அறியறதுக்குத் தான் அதிக விருப்பம் இருக்கு!  இந்தியா குறித்தும் மோதி ஆட்சி குறித்தும் கூட நாஸ்ட்ரடோம்ஸ் எழுதி வைச்சிருக்கிறதாச் சொல்றாங்க. நான் தேடினவரைக்கும் புத்தகத்தில் கிடைக்கலை; அல்லது எனக்குத் தேடத் தெரியலை! எதிர்காலத்தை நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை விட்டு விடாமல் இருக்கணும். அதான் வேண்டியது.

ஜோசியம் பாருங்க, பொழுது போக்கா வைச்சுக்கோங்க. அதையே நம்பிக் கொண்டு உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாம் முயற்சி செய்வதைப் பொறுத்தே கடவுள் அனுகிரஹமும் இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் மட்டும் என்ன செய்வார்! அவரும் பேசாமல் தான் இருப்பார். முயற்சி தான் திருவினை ஆக்கும்! 

65 comments:

 1. ராசிபலன் பார்ப்பதில்லை. கண்ணில் படும்போது பார்ப்பேன். பெரிய நம்பிக்கை ஏதும் இல்லை. ஓரிரு சமயங்களில் நடந்ததும் உண்டு. அதனால் உடனே அதில் நம்பிக்கை ஏற்பட்டு விடவும் இல்லை! தொலைக்காட்சியில் ராசிபலன் பார்ப்பதே இல்லை. படிக்கும்போது கண்ணில் படுவதுதான்! அதைத் தீவிரமாக நம்பும் சில நணபர்கள் அதைப்பற்றி அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். என்னிடம் பேசமாட்டார்கள்! "போங்க ஸ்ரீராம்... நீங்க ஏதாவது விதண்டாவாதம் பண்ணுவீங்க" என்று நிறுத்திக் கொள்வார்கள்!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், முக்கியமா மன நிம்மதியைக் கெடுக்கும் ஒன்று! :(

   Delete
 2. முடிவில் சொன்னது தான் சரி...

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு. எனக்கு பெரிதாய் இதில் நம்பிக்கை இல்லை. பார்ப்பதும் இல்லை!

  ReplyDelete
  Replies
  1. பார்க்காதவரைக்கும் நல்லது தான்!

   Delete
 4. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று குழம்பியிருந்தேன். உங்கள் பதிவில் தெளிவு கிடைத்தது. சந்திராஷ்டமம்தான் அது எனப் புரிந்துகொண்டேன்!

  ReplyDelete
  Replies
  1. என்னவோ போங்க! கொஞ்சம் இல்லை நிறையவே கவலையா இருக்கு! :(

   Delete
 5. எனக்குத் திருமணம் ஆகும் முன்பு ஒரு முறை என் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன் அங்கே குறி பார்ப்பவர் ஒருவர் எனக்கு நானே ராஜா என்கிறமாதிரி ஏதேதோ சொல்லிக் கடைசியில் நான் இன்னும் ஆறு மாதங்களில் உயிர் இழக்க நேரலாம் என்றார் அப்போது நான் சற்றுப் பயந்து எனக்குப்பின் (ஆறு தலைகள் என்னை நம்பி இருந்தனர்) ஒரு லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி ஒரு பெரியதொகைக்கு எடுத்து பிறகு அதன் ப்ரீமியம் கட்டமுடியாமல் லாப்ஸ் ஆனதெல்லாம் ஒரு பெரிய கதை பதிவில் எங்காவது பகிர்ந்த்திருப்பேன் நான் கை ரேகை பார்க்கக் கற்றுக் கொண்டு என் வாக்கை பலர் நம்ப இப்போது நினைத்தாலும் புன்முறுவல் வருகிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மையான ஜோதிடர்கள் இப்படி எல்லாம் சொல்ல மாட்டார்கள். தெரிந்தால் கூடச் சொல்லக் கூடாது!

   Delete
 6. //எது எப்படியோ, நமக்குனு உள்ளது, நமக்குக் கிடைக்க வேண்டியது கட்டாயமாய்க் கிடைத்தே தீரும்! கடவுள் அதை நிறுத்த மாட்டார். ஆகவே இந்த ஜோசியம் எல்லாம் எதுக்குப் பார்க்கணும்? எல்லாவற்றையும் ஆண்டவன் கைகளில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியா இருப்போம்.//

  இப்படித்தான் என் கணவர் அடிக்கடி கூறுவார்கள். எனக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. எல்லாம் இறைவன் விருப்ப படிதான் நடக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதான் உண்மை. இறைவன் கையில் விட்டு விட்டால் அப்புறம் எதுக்குக் கவலை!

   Delete
 7. ஜோசியத்தில் முதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. பிறகு நம்பிக்கை வந்தது. காரணம், திறமை, உழைப்பு எல்லாம் இருந்தும் சில விஷயங்கள் கை கூடாமல் மனம் நொந்த பொழுது அதற்கு விடையை ஜோசியம்தான் கொடுத்தது. கிரகங்கள் பாதகமான நிலையில் இருக்கும் பொழுது மனிதர்களின் புத்தி கேட்டு போவதையும், அதே கிரகங்கள் சாதகமான நிலைக்கு மாறும் போது நாம் எந்த முயற்சியும் செய்யாமலேயே காரியங்கள் சுளுவாக நடப்பதும் ஆச்சர்யமூட்டுகின்றன.

  சந்திராஷ்டமத்தை பற்றி பேசும் பொழும்பொழுது என் சிநேகிதி கூறிய விஷயம் நினைவுக்கு வருகிறது. அவளுடைய அம்மா, "குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் சந்திராஷ்டம தினத்தில் வாயை மூடிக்கொள் என்பாராம். அதற்கு அவள், எனக்கு சந்திராஷ்டமம் என்றல் நான் வாயை மூடிக் கொள்கிறேன், என் கணவருக்கு சந்திராஷ்டமம் என்றாலும் நான்தான் வாயை மூடிக் கொள்ள வேண்டுமா? என்பாளாம்.

  ReplyDelete
  Replies
  1. பலரும் நம்புகிறார்கள் என்பதே உண்மை! என் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட ஜோசியர் சொன்னது பலித்திருக்கிறது தான்! ஆனாலும் அதற்காகத் தொட்டதெற்கெல்லாம் ஜோசியம் பார்ப்பது என்பது சரியாக வராது என்றே நினைக்கிறேன். கிரஹங்களின் பாதகங்கள் குறித்தும் நிறையப் படித்திருக்கிறேன். பாதகமான நிலையில் இருக்கையில் குணக்கேடு ஏற்படுவதும் உண்மை தான். அதற்காகத் தான் ஸ்லோகங்கள் இருக்கின்றன. :) மற்றபடி தற்காலத்தில் உண்மையான ஜோசியர்கள் விரல் விட்டு எண்ணும்படி தான் கிடைப்பார்கள்.

   Delete
 8. முழுமையாக சோசியத்தை நம்புவதைத் தவிர்த்தல் நலம். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரியே டாக்டர் ஜம்புலிங்கம்.

   Delete
 9. iT IS ONLY AN INTERESTING PASS-TIME, IF YOU HAVE TIME TO SPARE...NO MORE

  MAWLEY

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் சொல்ல முடியாது! சும்மாப் பொழுது போக்கிற்காக ஜோசியம் பார்ப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உண்மையிலேயே ஆர்வமாகப்பார்ப்பவர்கள் தான் நிறைய! அப்படிப் பொழுது போக்கிற்குப் போனாலும் பின்னர் அதில் பலருக்கும் ஆர்வம் வந்து விடும்!

   Delete
 10. நம்பிக்கை இல்லை பார்ப்பதுமில்லை.

  ReplyDelete
  Replies
  1. நல்லது தான்! நம்பினால் நல்ல வார்த்தை சொன்னால் பிரச்னை ஒன்றுமில்லை.

   Delete
 11. நான் ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கிற்காக மட்டும் பலரிடமும் போய் ஜோஸ்யம் கேட்டுள்ளேன். கைரேகை பார்ப்பவர்கள், ஜாதகம் பார்ப்பவர்கள், குறி சொல்பவர்கள், பல்வேறு (ஓலைச்சுவடி) நாடி ஜோஸ்யர்கள், உடுக்கடிப்போர், அம்பாள் உபாசகர், காளி உபாசகர், ஹனுமான் உபாசகர், நாம் வாங்கிச்செல்லும் ஒரு கவுளி வெற்றிலையை வைத்து ஜோஸ்யம் சொல்லும் நம்பூத்திரிகள் என பலவகையானவர்களிடம் சென்று வந்த அனுபவங்கள் என்னிடம் உண்டு.

  அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லுபவனவற்றை உடனுக்குடன் தேதி போட்டு ஒரு நோட்டில் குறித்து வைத்துக்கொள்வதும் உண்டு.

  இதற்காகவே ஒரு காலக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய்கள் நான் செலவழித்ததும் உண்டு.

  இவ்வளவு பணமும், பொன்னான நேரமும் செலவழித்துப் பலரிடம் போய் ஜோஸ்யம் பார்த்ததில் ஒருசில புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு தெளிவானதோர் முடிவுக்கு நான் வந்ததும் உண்டு. அவற்றைப்பற்றியெல்லாம் மிகவும் இரத்தின சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ......

  அதாவது எந்த ஒரு ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. என்னோட மாமியார், மாமனார் இருவருமே நீங்க சொல்றாப்போல் குறி சொல்பவர்கள், அம்பாள் உபாசகர்கள்னு போய்க் கேட்பாங்க! அதை முழுக்க நம்பவும் நம்புவாங்க. எனக்கு இதில் எல்லா நம்பிக்கை இல்லை. நாடி ஜோசியம் நம்பக் கூடியது என்றே சொன்னாலும் அதிலும் ஏமாற்று நிறையவே இருக்கு! மற்றபடி நீங்க கடைசியில் சொல்லி இருப்பது தான் சரி.

   Delete
  2. // நாடி ஜோசியம் நம்பக் கூடியது என்றே சொன்னாலும் அதிலும் ஏமாற்று நிறையவே இருக்கு! மற்றபடி நீங்க கடைசியில் சொல்லி இருப்பது தான் சரி.//

   நான் நிறைய நாடி ஜோஸ்யர்களிடம் போய் வந்துள்ளேன். திருவானைக்கோயிலில் ஒரே நாளில் காலையில் ஒருவரிடமும், மத்யானத்திற்கு மேல் மற்றொருவரிடம் சென்று கதை கேட்டுவிட்டு வந்துள்ளேன். அன்று ஒரு நாள் செலவே அதுவும் அந்தக் காலத்திலேயே (அதாவது ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பே) ரூபாய் ஆயிரம் ஆனது.

   அவர்கள் நம்மிடமே ஏராளமான பெர்மிடேஷன் - காம்பினேஷன் கேள்விகளாகக் கேட்டுவிட்டு, மின்னல் வேகத்தில் தங்களுக்குள் கணக்குப்போட்டுக்கொண்டு, (கால்குலேஷன் + நினைவாற்றல் அதிகம் உள்ளவர்கள் இவர்கள்) உள்ளே போய் ஏதோ ஒரு ஓலைச்சுவடியைத் தேடி எடுத்துக் கொண்டு வருவார்கள்.

   அதில் ஆக்சுவலாக என்ன எழுதியிருக்கிறது என்பது நம்மைப் போன்றவர்களுக்கு ஒன்றுமே தெரியாமல் இருக்கும். மேல்வந்த வாரியாக சில பொதுவான தகவல்களை மட்டுமே சொல்லி நம்மை முதலில் நம்ப வைப்பார்கள். மேலும் விபரமாக ஒவ்வொன்றையும் பற்றி அறியவும், போன ஜன்மா பற்றி அறியவும், கஷ்டங்களுக்கு பரிகாரம் சொல்லவும், மேலும் சில சுவடிகளை எடுத்துப் பார்த்தால் மட்டுமே சொல்ல முடியும் .... அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் தர வேண்டும் என்பார்கள்.

   அவர்கள் ஆரம்பத்தில் நம்மிடம் கேட்கும் பல சின்னச்சின்னக் கேள்விகளால், நாம் நம்மை அறியாமல் பலவற்றை அவர்களிடம் உளறி விடுகிறோம். அதனை நன்கு ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, நமது பிறந்த தேதி, நக்ஷத்திரம், ராசி, நம் அம்மா பெயர், அப்பா பெயர் முதலியவற்றுடன் நமக்கான சுவடியைத் தேடி கண்டு பிடித்து விட்டதாகச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள் என என் பெரிய சம்பந்தி மாமா எனக்கு நிரூபித்துள்ளார்.

   அவருக்கு (என் பெரிய சம்பந்தி மாமா அவர்களுக்கு) அடிப்படையாக கொஞ்சம் ஜாதகம் பார்க்கத் தெரியும். அதனால் அவரும் நான் சொன்ன அதே நாடி ஜோஸ்யர்களிடம் போய் விட்டு வந்து, என்னிடம் இதுபோல அவர்கள் செய்வதெல்லாம் மிகவும் சுலபம். இது ஒரு புதுமையான ஏமாற்று வேலை மட்டுமே என நிரூபித்தார்.

   நம்மிடம் எந்த ஒரு சின்னக் கேள்வியுமே கேட்காமல் நம்மைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களாகவே ’இதுவரை நடந்துள்ளது, இப்போது நடப்பது, இனிமேல் நடக்கப்போவது’ ஆகியவற்றைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும். அவ்வாறு தனித்திறமைகள் வாய்ந்த ஒருசிலரே ஒருவேளை உண்மையான ஜோஸ்யர்களாக இருக்க முடியும் என்பது எனது இன்றைய அபிப்ராயமாகும்.

   Delete
  3. ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை தான்! தனித் திறமைகள் வாய்ந்தவர்கள் ஒரு சிலரே இருக்கிறார்கள்.

   Delete
 12. இருப்பினும், பொதுவாக 99% ஜோஸ்யர்கள் நம்மை ஏமாற்றும் பேர்வழிகளாகவும், காசு பிடுங்குபவர்களாகவே இருப்பினும்கூட, ஆங்காங்கே மிகப்பிரபலமான தனித் திறமைகள் வாய்ந்த ஜோஸ்யர்கள் 1% இருக்கத்தான் இருக்கிறார்கள்.

  நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நம் விதி, நம்மை அவர்களிடம் கொண்டு சேர்க்கக்கூடும். அதுபோன்ற ஒருசிலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அதிலும் மிகக் குறிப்பாக ஒருவரைப்பற்றி நான் சொல்ல நினைக்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பல ஜோசியர்களும் கன்சல்டிங் ஃபீஸ் கூட வாங்குவாங்க. பரிகாரம் அது இதுனு ஆயிரக்கணக்கில் பிடுங்குவதுண்டு. சென்னை தண்டையார்ப்பேட்டையில் ஒரு மலையாள ஜோசியர் வருகிறவர்கள் எல்லோருக்கும் சக்கரம் வாங்கி வீட்டில் வைச்சுக்கணும்னு சொல்லுவார். அந்தச் சக்கரத்தைப் பூஜையில் வைக்கணும்னு சொல்லி அதுக்கு ஆயிரக்கணக்கில் பணம் வாங்குவார். :)

   Delete
  2. ஜோசியம் பொய் அல்ல.
   ஆனால் ஜோசியர்கள் பொய் அல்ல.

   என் அனுபவம்.
   என் கணவர் இலவசமாக ஜோசியம் சொல்வார். சில வருடங்களுக்கு முன்பு (2008க்கு முன்பு) நாங்கள் மண்ணிவாக்கம் என்ற இடத்தில் இருந்த போது எங்கள் நகரில் PLOT வாங்கிப் போட்டிருந்த ஒருவர் ஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரிடம் “என் மனைவி பல வருடங்களாக (கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக) படுத்த படுக்கையாக இருக்கிறாள். எனக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். அதனால் அவர்களிடம் இருந்தும் எந்த உதவியும் எதிர் பார்க்க முடியவில்லை. நானே அவளை எல்லா விதத்திலும் கவனித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது” என்று சொல்லி கண்ணீர் விட்டார். மேலும், “அவள் படும் கஷ்டத்தைப் பார்க்கும் பொழுது அவள் விரைவில் பரமபதம் அடைந்தாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது” என்றும் சொல்லி கண் கலங்கினார். அந்தப் பெண்மணியின் ஜாதகத்தை வாங்கி என் கணவர் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஏதேதோ கணக்கு (எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது) போட்டுப் பார்த்து ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் அவர் மனைவி இறைவனைடியை அடைவார் என்று கூறினார்.

   எனக்கே ஆச்சரியம். என் கணவர் குறிப்பிட்ட நாளில் அவர் மனைவி இறந்ததும் முதலில் என் கணவருக்கு தொலைபேசியில் அழுது கொண்டே செய்தியை தெரிவித்தார்.

   இது போல் பல அனுபவங்கள்.

   Delete
 13. என் அலுவகத்தில், ஃபாக்டரி ஏரியாவில், வேறு எங்கோ ஒரு உற்பத்திப் பிரிவினில் ஒருவர் வேலை பார்த்து வந்தார் .... அவர் பெயர்: தியாகராஜன் என்பது .... கும்பகோணத்துக்காரர் அவர். எப்போதாவது கேண்டீனிலோ அல்லது என் ஆபீஸ் பக்கம் அவர் வரும்போதோ கொஞ்சம் எங்களுக்குள் பழக்கம் உண்டு.

  மற்றபடி என்னைப்பற்றியோ, என் குடும்பம் பற்றியோ, என் பிரச்சனைகள் பற்றியோ அவருக்கு ஏதும் தெரியவே தெரியாது.

  ஒருநாள் அவர், சற்றும் எதிர்பாராத வகையில், தனக்கு தன் வாழ்க்கையில் ஏற்பட்டதோர் மிகச் சுவையான அனுபவத்தை என்னிடம் சொன்னார். இதுபோல நடக்கும் என ஓராண்டுக்கு முன்பே ஒரு ஜோஸியர் அவரிடம் சொல்லியிருக்கிறாராம். இவரால் அன்று அதனை நம்பவே முடியவில்லையாம்.

  என்னையும் தேவைப்பட்டால் அந்த ஒரு குறிப்பிட்ட ஜோஸ்யரிடம் போகச்சொல்லி ஆலோசனை கூறினார். என்னிடம் அவரின் விலாசம் மட்டும் கொடுத்திருந்தார்.

  ஒருவேளை நீங்கள் அவரிடம் போக விரும்பினால், அவருக்கு ஓர் ரிப்ளை கார்டு மட்டும் போட்டு, அவர் உங்களை வரச்சொல்லி உத்தரவு கொடுக்கும் நாளில் போய் அவரைக் கட்டாயம் சந்திக்கவும் எனச் சொல்லிவிட்டுப்போய் விட்டார்.

  பணம் எவ்வளவு தரும்படியாக இருக்கும் என நான் அந்தத் தியாகராஜன் என்பவரிடம் கேட்டுக்கொண்டேன். உங்கள் விருப்பம்போல, உங்கள் வசதிக்கு ஏற்ப எவ்வளவு தர முடியுமோ அதனை அங்குள்ள ஓர் தட்டில் வைத்துவிட்டு வந்தால் போதும். நிர்ணயிக்கப்பட்ட தொகை என்று ஏதும் கிடையாது எனச் சொல்லிவிட்டார்.

  அதன்பிறகு பலநாட்கள் அவரை நான் சந்திக்கவே இல்லை. நான் ரிப்ளை கார்டு போட்டதோ, அந்த ஜோஸ்யரிடமிருந்து எனக்கு பதில் வந்ததோ அவருக்குத் தெரியவே தெரியாது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் நடக்கும் தான். ஒரு சிலர் முகத்தைப் பார்த்தே சொல்லுவதுண்டு. எங்க குடும்ப ஜோசியர் (அப்பா வீட்டில்)மிக ஏழை. சாப்பிடக் கூடக் கையில் காசு இருக்காது. சாப்பிடணும்னு எங்க வீட்டுக்கு வரும்போதே அவருக்கு மனதில் இன்னிக்குச்சாப்பாடு கிடைக்காது என்று தோன்றி இருக்கும். அதே போல் எங்க வீட்டுக்கு அவர் வரும்போது அநேகமாக ஆசாரக் குறைவாக இருக்கும். சாப்பிட மாட்டார். அப்புறமா அரிசி, பருப்புக் கொடுத்து அனுப்புவோம். என் கல்யாணத்துக்கு அவர் தான் தேதி பார்த்துச் சொன்னார். பெண் பார்க்கும் முன்னரே! :)

   Delete
 14. சுமார் ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பு, விடியற்காலம் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டு, திருச்சியிலிருந்து புறப்பட்டு, காரைக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கி கல்லுப்பட்டி என்ற கிராமத்திற்கு ஓர் ஆட்டோவில் நான் என் மனைவியுடன், அவர் குறிப்பிட்டிருந்த நாளில் காலை 8 மணிக்குள் சென்று விட்டேன்.

  அந்தக் குக்கிராமத்தில் ஓர் மிகப்பெரிய கோயிலும், கோயிலின் எதிரே இந்த ஜோஸ்யரின் வீடும் மட்டுமே. வேறு எதுவும் பெரிய கடைகளோ, வீடுகளோ கூடக் கிடையாது. சற்று தொலைவில் சில குடிசைகளும், ஒரேயொரு பெட்டிக்கடையும் மட்டுமே இருந்தன.

  நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்த நேரத்தில் அவர் வீட்டைச் சுற்றி ஒரு பத்துக்கும் மேற்பட்ட கார்களில், வெளியூர்களிலிருந்து பெரும் பணக்காரர்களாக சிலர் வந்து இறங்கி, அங்கு அவர் வீட்டு வாசலில், மரத்தடி நிழல்களில் ஆங்காங்கே, அவரின் அழைப்புக்காகக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

  நான் வந்திருக்கும் தகவலை அங்கிருந்த உதவியாளரிடம் தெரிவித்து ஆஜர் சொல்லிவிட்டு எதிரே இருந்த கோயிலுக்குப் போய் தரிஸனம் செய்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டேன்.

  சீனியாரிட்டிபடி வந்திருந்தவர்களை உள்ளே அழைக்கும் வழக்கம் ஏதும் அங்கு இல்லை. காளி அம்பாளின் உத்தரவு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களை மட்டுமே, உள்ளே அழைப்பார்களாம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இம்மாதிரி ஜோசியர்கள் சொல்வது அநேகமாய்ப் பலிக்கிறது உண்டு.

   Delete
 15. அந்த ஜோஸ்யரின் பெயர்: திரு. சீதாராம ஐயர் (அவர் ஒரு காளி உபாஸகர்).

  காலை 8 மணிக்கு அங்கு சென்ற எங்களுக்கு மாலை 4 மணி வரை அழைப்பு ஏதும் வரவில்லை.

  நடுவில் மதியம் பசிக்கு, அங்கிருந்த ஓரேயொரு பெட்டிக்கடையில் ஆளுக்கு அரை டஜன் வீதம் மோரீஸ் பச்சை வாழைப்பழங்கள் + சிப்ஸ் + பிஸ்கட்ஸ் போன்ற ஏதோ மட்டுமே வாங்கிச் சாப்பிட்ட நினைவு உள்ளது.

  நாங்கள் உள்ளே அழைக்கப்பட்டதும், அங்கு ஒரு மிகப்பெரிய காளி சிலை இருந்தது. அதன் கீழே அவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அப்போதே சுமார் 50 வயதுக்கு மேல் இருக்கும். தோற்றத்தில் அவர் உபன்யாசகர் திரு. புலவர் கீரன் அவர்களைப்போலவே இருந்தார். அவரை வணங்கிவிட்டு அவருக்கு எதிரில் நாங்கள் அமர்ந்துகொண்டோம்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரித் தான் புஞ்சைப் புளியம்பட்டி ஜோசியரை நாங்க பார்க்கப் போனப்போ அவர் எங்கோ வெளியே போயிருந்தார். நாங்க சாப்பாடு சாப்பிடாமல் போயிருந்தோம். அங்கே போய்ச் சாப்பிட வசதி இல்லாமல் தவிச்சோம். மாலை மூன்று மணி ஆச்சு அவரைப் பார்க்க! அதுக்கப்புறமா ஏதோ ஒரு ஓட்டலில் டிஃபன் சாப்பிட்டோம். அவர் வீட்டில் எலுமிச்சைச் சாறு மட்டும் சாப்பிட்டோம்.

   Delete
 16. என் குடும்பத்தார் அனைவரின் ஜாதகங்களும் உள்ள ஒரு பெரிய ஜாதக நோட்டினை என்னுடன் கொண்டு போய் இருந்தேன். அதை அவரிடம் நான் நீட்டியபோது, அவர் அதெல்லாம் எனக்குத் தேவையே இல்லை என்பதுபோல, மிகவும் அலட்சியமாக என் ஜாதகத்தின் முதல் பக்கத்தில் இருந்த ‘ராசி’ + அம்சம்’ கட்டங்களை மட்டும் ஓர் இரண்டு நிமிடம் உற்றுப்பார்த்தார். அதை அப்படியே மூடி பையில் வைத்துக்கொள்ளச் சொல்லி என்னிடமே கொடுத்துவிட்டு, என்னைப் பார்த்து இரண்டே இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்டார்.

  (1) உங்களுக்கு 1974-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி, பங்குனி மாதம் திங்கட்கிழமையில், உத்திராட நக்ஷத்திரத்தில் முதல் ஆண் குழந்தை பிறந்தானா?

  (2) 1975-ம் ஆண்டு புரட்டாசி மாதம் திங்கட்கிழமை, ரேவதி நக்ஷத்திரத்தில் இன்னொரு ஆண் மகன் பிறந்திருக்கணுமே?

  நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப்போய் ‘ஆமாம்..... ஆமாம்’ என ஒத்துக்கொண்டேன்.

  தாங்கள் என்னிடம் சற்றுமுன்பு காட்டிய தங்களின் ஜாதகம் சரியானதாக இருந்தால், இதுபோல தங்களுக்கு இரு மகன்கள் பிறந்திருக்கணும். அதை சரியா என உறுதிப் படுத்திக்கொள்ள மட்டுமே கேட்டேன் என்றார்.

  உண்மையான ஜோஸ்யர் என்றால் இந்த உலகில் இவர் ஒருவர் மட்டுமே என எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஒரு சிலர் ஜோசியம் பார்க்க வருபவர்கள் மனம் மகிழும்படி சொல்வாங்க. நாங்க கர்நாடகாவில் கிஷ்கிந்தை போயிருக்கையில் அங்கே ஓர் சித்தர் இருந்தார். மிக இளம் வயது. நாங்க ஒரு பதினைந்து இருபது பேர் போயிருந்தோம். எங்களில் ஒரே ஒருவரை மட்டும் அந்த சித்தர் அழைத்து அவரிடம் அவர் குடும்பத்தில் சமீபத்திய நிகழ்வு ஒன்றைக் குறித்துச் சொல்லிக் கேட்டறிந்தார். அந்த நபர் திகைத்துப்போயிருந்தார். பின்னர் அவரை உடனே அங்கிருந்து கிளம்பும்படி அறிவுறுத்தினார். அவர் சொன்னவை பலித்ததாகப் பின்னர் கேள்விப் பட்டோம்.

   Delete
 17. அத்தோடு நில்லாமல் நான் எதற்காக இப்போது அவரை நாடி வந்துள்ளேன். எனக்கு ஏற்பட்டுள்ள அன்றைய காலக்கட்டத்தின் பிரச்சனைகள் என்ன என்பதை தெளிவாக, தேங்காய் உடைத்தது போல உடைத்து என்னை மேலும் வியப்படையச் செய்துவிட்டார். அந்தப்பிரச்சனைகளுக்கான ஒருசில கடுமையான பரிகாரங்களைச் செய்யுமாறு என்னிடம் சொன்னார். அவற்றை நானும் அப்படியே செய்து முடித்தேன். பிரச்சனைகளின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து போனது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. நன்மையே நடந்திருக்கிறது. நல்ல ஜோசியர் தான்!

   Delete
 18. அடுத்த ஆச்சர்யமாக.......

  “திருச்சி டவுனில், பிரதானமானதோர் கிழக்கு மேற்கு சாலையின் நடுவே, தெற்கு பார்த்து நான் வாங்கியுள்ள ஓர் வீட்டினைப்பற்றி அவரே கூறியதுடன், அதில் கிழக்கு நோக்கி சமையல் மேடை இருக்குமே என்று கேட்டு மேலும் என்னை வியப்பில் ஆழ்த்தினார்.

  ”ஆம் ....” என்றேன்.

  அதில் நீங்கள் ஒருநாள் கூட வாழ முடியாது. வாடகைக்கு விட்டிருப்பீர்கள். பிறகு ஒருநாள் நல்ல விலைக்கு விற்றும் விடுவீர்கள் என்று சொன்னார்.

  அவர் சொன்ன அதுபோலவேதான் பிறகு நடந்தும் உள்ளது. கடைசிவரை நான் அந்த வீட்டில் ஒருநாள் கூட நான் வாழவும் இல்லை. வீட்டை வாங்கிய நாளிலிருந்து வாடகைக்கு மட்டுமே விட்டிருந்தேன். அந்த வீட்டினை இப்போது ஓர் 10 ஆண்டுகளுக்கு முன்பு விற்கும்படியாகவும் ஆனது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. இந்த வீடு விஷயம் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! அம்பத்தூரில் எங்க வீட்டைக் கட்டிய சில மாதங்களில் வீட்டில் பிரச்னைகள் தலை தூக்கியதன் காரணமாக வீடே வேண்டாம் வித்துடலாம்னு முடிவு செய்து இருந்தோம். அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் யார் கிட்டேயோ ஜோசியம் கேட்க இந்த வீட்டை விற்கவே முடியாதுனு சொல்லிட்டார். நாங்க விற்கச் செய்த முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இப்போவும் ஃபெப்ரவரி மாதம் வீட்டை விற்க ஏற்பாடு செய்து அட்வான்ஸ் கூட வாங்கி விட்டோம். விற்க முயற்சி செய்து கடைசியில் வீடு விற்கவே இல்லை. எனக்கு உடனே எப்போவோ முப்பது வருடங்கள் முன்னர் ஜோசியர் சொன்னவை தான் நினைவில் வந்தது. இனி போகப் போக எப்படியோ தெரியாது!

   Delete
 19. ”திருச்சி அருகே உள்ள ‘பிக்ஷாண்டார் கோயில்’ என்ற கிராமத்திற்கும் உங்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா” எனத் தன் கண்களை மூடியபடி, காதினில் கை விரல்களை வைத்தபடி என்னிடம் கேட்டார்.

  “ஆம் ..... அது என் மாமியார்-மாமனார் வாழ்ந்த ஊர். அவர்களின் வீடு இன்னும் அங்கு உள்ளது என்று சொன்னேன்.

  ”அங்குள்ள அம்பாள் என்னிடம் ஏதோ இப்போது சொல்ல வந்தாள். ஆனாலும் இப்போது அந்த கனெக்‌ஷன் கட் ஆகிவிட்டது ...... இத்துடன் நீங்கள் உடனே புறப்படலாம். இன்னும் 5 நிமிடங்களில் இங்கிருந்து ஒரு பஸ் காரைக்குடிக்குச் செல்ல உள்ளது. அவசரமாகப் போய் அதைப் பிடித்து, அங்கிருந்து உங்கள் ஊருக்குச் செல்லுங்கள்” என உத்தரவு கொடுத்துவிட்டார்.

  மேலும் ஏதேதோ கேட்க நினைத்துத் தயங்கிய எனக்கு அன்று காளியின் உத்தரவு அதற்கு மேல் கேட்கப் ப்ராப்தம் இல்லாமல் ஆகிவிட்டது. அவரையும் காளி தேவியையும் நமஸ்கரித்து விட்டு, அங்கிருந்ததோர் தட்டில் ரூ.200 பணம் வைத்து விட்டு புறப்பட்டு விட்டேன். அதன் பிறகு இன்று வரை அவரை சந்திக்க நினைத்தும் எனக்குப் ப்ராப்தம் அமையவில்லை.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம், கடைசியில் சஸ்பென்ஸில் விட்டுட்டார் போல! அதையும் சொல்லி இருந்திருக்கலாம்.

   Delete
 20. நம் வாயால் எதுவுமே நாம் சொல்லாமல், நம்மிடம் தூண்டித்துருவி அவர்கள் எதுவும் கேட்காமல், நம் ஜாதகங்களையும் பார்க்காமல், நாம் எதற்காக வந்திருக்கிறோம், நம் பிரச்சனைகள் என்ன, அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதைப் புட்டுப்புட்டுச் சொல்லக்கூடிய திறமைகள் வாய்ந்த மிகப்பிரபல ஜோஸ்யர்களும் இதுபோல் ஆங்காங்கே ஒருசிலர் மட்டும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்ல மட்டுமே, என் சொந்த அனுபவங்களை மிகச் சுருக்கமாக இங்கு சொல்லியுள்ளேன்.

  இவற்றையெல்லாம் நம்புவதோ நம்பாததோ அவரவர்கள் இஷ்டம் மட்டுமே.

  -oOo-

  ReplyDelete
  Replies
  1. உண்மையான ஜோசியர்கள் மிகக் குறைவு என்று தான் சொன்னேனே! திறமை உள்ளவர்கள் எங்கோ மூலையில் ஒதுங்கி வாழ்கின்றனர்.

   Delete
 21. /​/ ​ஜோசியம் பாருங்க, பொழுது போக்கா வைச்சுக்கோங்க. அதையே நம்பிக் கொண்டு உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாம் முயற்சி செய்வதைப் பொறுத்தே கடவுள் அனுகிரஹமும் இருக்கும். ஒண்ணுமே செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு பொறுப்புக்களைத் தட்டிக் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் கடவுள் மட்டும் என்ன செய்வார்! அவரும் பேசாமல் தான் இருப்பார். முயற்சி தான் திருவினை ஆக்கும்! //

  கடைசியில் வைகோ சார் சொன்ன கதையில் உங்க கொள்கையே மாறிப்போச்சு.
  //இம்மாதிரி ஜோசியர்கள் சொல்வது அநேகமாய்ப் பலிக்கிறது உண்டு.//
  என்றாகி //நன்மையே நடந்திருக்கிறது. நல்ல ஜோசியர் தான்!// என்று ஜோசியத்திற்கு ஒரு ஓ போட்டு விட்டீர்கள்.

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய கருத்தில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை ஜேகே அண்ணா! உண்மையான ஜோசியர்களைக் குறித்து நானும் சொல்லி இருக்கேன். என் பிறந்த வீட்டு ஜோசியர் சொன்னதும் என் நண்பன் சிவா என்பவர் கூறியதும் பலித்து இருப்பதாகவே சொல்லி இருக்கேன். என்னுடைய முக்கியமான கருத்து ஜோசியம் என்பது கடல். அதிலே மூழ்கி முத்தெடுப்பவர்கள் குறைவு. ஆகவே அதையே முழுதும் நம்பி நம்மால் இயன்றதைச் செய்யாமல் இருக்கக் கூடாது என்பதே! மேலும் இப்போது எல்லா வார, மாதாந்தரிகளும் அவரவருக்கென ஒரு ஜோசியரை வைத்துக் கொண்டு வார, மாத, வருட பலன்கள் என்று சொல்வதோடு கிரஹப் பெயர்ச்சிக்கான தனிப் புத்தகங்களும் வெளியிடுகின்றன. மக்கள் கூட்டம் இவற்றில் நம்பிக்கை கொள்கிறது. இப்படியானவற்றைத் தான் நம்ப வேண்டாம் என்று சொல்கிறேன். நான் எனக்காக என்றும் ஜோசியம் பார்த்துக் கொண்டதோ, கொள்வதோ இல்லை. என் முக்கியக் கருத்தே போலி ஜோசியர்களையும் அவங்க சொல்றதையும் நம்பிக்கொண்டு மனதையும் வாழ்க்கையையும் வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்பதும் முயற்சிகளைக் கைவிடக் கூடாது என்பதுமே! நான் யாரையும் ஜோசியம் பாருங்க என்று சொல்லவும் இல்லை. வைகோ பார்த்த ஜோசியர் சரியாகச் சொன்னார் என்று அவரே சொல்லி இருப்பதால் நல்ல ஜோசியர் என்று சொன்னேன். அதில் எந்த முரண்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னளவில் நான் அதே ஜோசியரைப் பார்த்து அவர் எனக்குச் சொல்லும் விஷயங்கள் என்னளவில் உண்மையாக இருந்தாலே நான் அவரை நம்புவேன். :) ஆனால் நானாக ஜோசியம் பார்க்கப் போக மாட்டேன். பார்ப்பவர்களையும் என் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிடுவேன். பல ஜோசியர்களும் நான் பயப்படுவதாகக் கேலி செய்திருக்கிறார்கள். இருக்கட்டும்னு விட்டுடுவேன்.

   Delete
 22. ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை. பார்ப்பதும் இல்லை. மனதைக் கெடுக்கும் என்பதும் காரணம். முயற்சி திருவினை ஆக்கும்....முயற்சியுடன் இறை உணர்வுடன், பலனை எதிர்பாராமல் அவரிடம் விட்டுட்டு முயற்சி செய்து... வேலையைப் பார்துக் கொண்டே செல்வதுதான்..

  ReplyDelete
  Replies
  1. எதுக்கெடுத்தாலும் ஜோசியம் பார்க்காமல் நம் சொந்த முயற்சியை நம்புவதே சிறந்தது. எனினும் ஜோசியம் ஓர் கடல்! அதில் மூழ்கி முத்தெடுப்பவர்களும் உண்டு. :) ஆனால் அவர்கள் மிகக் குறைவு.

   Delete
 23. இது சம்பந்தமாக மேலும் ஏராளமான செய்திகளை தாராளமாக உங்களுடன் தனிப்பட்ட முறையில், தனித்தனி மெயில்கள் மூலம் பகிர்ந்துகொண்டுள்ளேன்.

  தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் மீள், மீள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வைகோ சார்.

   Delete
 24. புத்தாண்டு வாழ்த்துக்கள் கீதா மேடம்.

  ஜோசியம் என்பது உண்மையானது. ஆனால் அதைச் சரியாகச் சொல்லுபவர்கள் மிகவும் குறைவு. இயற்கை என்ன தீர்மானித்திருக்கிறதோ, அதனை இவர்கள் வெளிப்படுத்துவதால், இந்தத் தொழில் அவர்களுக்குப் பெரும்பாலும் நன்மை செய்யாது. அதுவும்தவிர, அவர்கள் மற்றும் அவர்களின் சுற்றத்திற்கு அந்த ஜோசியர்களால் சரியாகக் கணிக்க இயற்கை அனுமதிப்பதில்லை.

  ஜோசியம் என்பது (சரியாகச் சொல்பவர்களது) ஓரளவு காலத்தைக் காட்டும் கண்ணாடி. அதன் விளைவின் தாக்கத்தை, பரிகாரம் (அதாவது கோவிலுக்குச் செல்லுதல் மற்றும் சரியான பரிகாரங்கள்) ஓரளவு குறைக்கும். ஆனால் எழுதியிருப்பதை மாற்றிவிடமுடியாது. நமக்கு ஜோசியர் கூறுவது guidance ஆக இருக்க முடியும்.

  தொலைக்காட்சியில் சொல்லும், இன்று இந்த ராசி நேயர்கள் பச்சை சட்டை போட்டுக்கொள்ளவும் போன்றவை நகைப்புக்குரியவை. பத்திரிகைகளில் வரும் பொதுவான ஜோசியமும் அந்த வகைதான். (அனேகமாக ஆண்குழந்தை.. தவறினால் பெண் குழந்தை போன்றது) நாடி ஜோசியமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். நமக்கு வரும் விளைவுகள் நம் செயல்களினால் (இந்த அல்லது முந்தைய பிறப்பு, அதில் நம்பிக்கை இருந்தால்) வருவது. அதை எப்படி மாற்ற இயலும்? ஓரளவு நம் வேண்டுதல்கள் மூலம், அதன் தாக்கத்தைக் குறைக்கலாம், அல்லது அதனைத் தாங்கும் சக்தியைப் பெறலாம்.

  எனக்கு ஜோசியர்களைக் கன்ஸல்ட் செய்வதில் ஆர்வம் அதிகம். ஆனாலும் வரும் காலத்தை ஓரளவுக்குமேல் தெரிந்துகொள்வது நல்லதல்ல. அதனால் பிரயோசனமும் இல்லை.

  கோபு சாரின் அனுபவம்போல் எனக்கும் சில வாய்த்திருக்கின்றன. அவைகள் அபூர்வமானவை.

  ReplyDelete
  Replies
  1. ஜோசியம் குறித்த என் கருத்தும் அது ஓர் கடல் என்பதே! அதில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் இந்தப் போலி ஜோசியர்களை நம்பவேண்டாம் என்பதே என் முக்கியக் கருத்து. இன்னும் சொல்லப் போனால் குறிப்பிட்ட நக்ஷத்திரத்தில் பிறந்தால் அவர்கள் குணம் அப்படி, இப்படினு சொல்வார்கள். உண்மை நேர்மாறாக இருக்கிறது. யாரோ எங்கோ நக்ஷத்திரங்களைக் குறித்துத் தவறாகக் குறிப்பிட்டிருப்பதை அப்படியே எடுத்துக் கொண்டு அந்த நக்ஷத்திரத்துப் பெண் என்றால் வேண்டாம்னு சொல்றவங்க இந்தக் காலத்திலும் உண்டு. மற்றபடி உண்மையான நாடி ஜோசியரைப் பார்த்ததில்லை. ஆனால் எங்க சம்பந்தி அம்மா மும்பையில் ஓர் நாடி ஜோதிடரைப் பார்த்து அவர் சொல்வது எல்லாம் சரியாக இருந்ததோடு எதிர்காலம் குறித்தவையும் பலித்ததாகச் சொல்லி இருக்கிறார்.

   Delete
 25. எனக்கும் ஜாதகம் பார்த்த அனுபவங்கள் உண்டு. இரண்டு குழந்தைகளின் திருமணத்திற்கக ஜாதகப் பொருத்தம் பார்க்கப் போயிருந்த போது, மேலதிகத் தகவல்களாக அவர்களின் எதிர்காலம் பற்றிய சில துல்லியத் தகவல்கள் கிடைத்தது. பின்னர் அது நடந்த போது ஆச்சர்யபட்டுத் தான் போனேன்.

  ஆனால் அதை மட்டுமே நம்பாமல் , நம் முயற்சியைத் தொடர வேண்டயது தான்.
  மிக சுவாரஸ்யமானப் பதிவு. கோபு சாரின் அனுபவப் பகிர்வு, மேலும் ரசனை சேர்க்கிறது.
  நன்றி கீதா மேடம்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை ராஜலக்ஷ்மி பரமசிவம். ஜோதிடத்தையே நம்பாமல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சரியான முடிவு.

   Delete
 26. அதேதான் அவங்கவங்களுக்கு நடக்கும் அநுபவங்களால்தான் நம்பிக்கையோ அவநம்பிக்கையோ வருது..

  ReplyDelete
  Replies
  1. சரி தான். அவரவருடைய அனுபவங்களைப் பொறுத்து!

   Delete
 27. இந்தப்பதிவின் தொடர்ச்சியாக ......

  ‘மன அலைகள்’ வலைப்பதிவர் பெரியவர் முனைவர் திருவாளர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள் ’ஜோசியம் - பாகம்-1’ என்ற தலைப்பில் ஓர் பதிவு இன்று வெளியிட்டுள்ளார்கள். அதிலும் பலரின் பின்னூட்டக் கருத்துக்கள் குவிந்து சுவாரஸ்யம் ஏற்படுத்தி வருகின்றன. அதற்கான இணைப்பு இதோ:

  http://swamysmusings.blogspot.com/2017/01/1.html

  இது அனைவரின் பொதுவானதோர் தகவலுக்காக மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. ஜோதிடம் என்பது இறைவன் அருளால் கிடைக்கக்கூடிய ஒரு வரம். நவகோள்களின் நிலையை உணர்ந்து, அவர்களின் தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப பலாபலங்களை கூறுவது என்பது ஒரு சிலாரால் மட்டுமே முடியும். வணிக நோக்கத்தில் இந்த ஜோதிடத்தைப்பயன்படுத்தும்போது, ஜோதிடர்களின் வாக்குபலிப்பதில்லை. திருப்பட்டூரில் ( திருச்சி அருகில் ), " விதி இருந்தால், விதியை மாற்றி அருளுக " என்று பிரமனுக்கு, வரமளித்தாராம், சிவபெருமான். இதைப்போன்றே, ஜோதிடம் கேட்பவர்களுக்கு விதி இருந்தால் மட்டுமே, ஜோதிடரின் வாக்கு பலிக்கும்.

   Delete
  2. திரு பழனி கந்தசாமி அவர்களின் பதிவையும் அங்கே கருத்துச் சொல்லி இருந்த திரு ரமணன் அவர்கள் பதிவுகளையும் படித்தேன். ஜோதிடம் பார்ப்பவர்களுக்கு நேரம் சரியாக இருந்தால் ஜோசியரிடமே போக மாட்டாங்களே! கஷ்டமான நேரத்தில் தானே ஜோசியரைத் தேடிப் போகச் சொல்கிறது! :)

   Delete
  3. மன்னிக்கணும். பழனி கந்தசாமி அவர்களின் பதிவல்ல. திரு நடனசபாபதி அவர்களின் பதிவுகளைத் தான் படித்தேன். தவறாய்க் குறிப்பிட்டிருக்கேன். திரு பழனி கந்தசாமி அவர்களின் பதிவையும் படிச்சுட்டு வரேன். :)

   Delete
 28. ஜோஸ்யம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஜோஸ்யர்களில் சிலர் சரியாக கணித்தாலும் பெரும்பாலானோர் இதை ஒரு வணிகம் போலவே நடத்துகின்றனர் என்பது எனது கருத்து. குதிரை பந்தயத்தில் வெறி கொண்டவர்கள் இருப்பதுபோல் ஜோஸ்யம் பார்ப்பதிலும் பெரும்பாலான் நேரத்தை வீணடிப்பவர்கள் அதிகம் என எண்ணுகிறேன்.
  .எனது மலையாள நண்பர் ஒருவருக்கு உதவுவதற்காக (அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க) வைத்தீஸ்வரன் கோவில் சென்றபோது நாடி சோதிடம் என்பது புரட்டு என்பதை நான் நேரடியாக கண்டிக்கிறேன். இது பற்றி எனது பதிவில் நம்பலாமா நாடி சோதிடத்தை என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. வே.நடனசபாபதி 04 January, 2017

   //எனது மலையாள நண்பர் ஒருவருக்கு உதவுவதற்காக (அவருக்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க) வைத்தீஸ்வரன் கோவில் சென்றபோது நாடி சோதிடம் என்பது புரட்டு என்பதை நான் நேரடியாக கண்டிக்கிறேன். இது பற்றி எனது பதிவில் நம்பலாமா நாடி சோதிடத்தை என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். //

   தங்களின் அந்த நான்கு பகுதிகளையும் ஆவலுடன் ஒரே மூச்சில் இன்றுதான் படித்து முடித்தேன்.

   நான், தங்கள் நண்பர் திரு. ஷெனாய் அவர்களைப் போன்றே இந்த நாடி ஜோஸ்யர்கள் குறிப்பிட்டுச்சொன்ன என் பெற்றோர்கள் பெயர்கள் முதலியவற்றால் முதலில் ஏமாறித்தான் போனேன்.

   பிறகு தங்களைப் போன்று சற்று விபரமான (ஜாதகங்களின் அடிப்படை அறிவும், பிறரிடம் லேஸில் ஏமாறாத உஷாரான முன்னெச்சரிக்கைப் பேர்வழியுமான) ஆசாமியுமான என் நீண்ட நாள் நெருங்கிய நண்பரும், பிறகு எனக்கே பெரிய சம்பந்தியுமாக நேர்ந்தவருமான திரு. பாலசுப்ரமணியன் என்பவரால் இவையெல்லாமே ஏமாற்று வேலைகள் என்பதை அறியலானேன்.

   தங்களைப் போன்றே பாய்ண்ட் பாய்ண்ட் ஆக, ஒவ்வொன்றையும் எனக்கு எடுத்துச் சொல்லி நிரூபித்துப் புரிய வைத்தார் என் சம்பந்தி திரு. பாலசுப்ரமணியன் அவர்கள்.

   இதையெல்லாம் எனக்கு நிரூபிக்க வேண்டியே, அவர் தனக்காக நாடி ஜோதிடம் பார்க்கப்போனார். அப்போது திரு. ஷெனாய் அவர்களுடன் தாங்கள் போனதுபோலவே, என்னையும் தன்னுடன் அழைத்துப் போய், கடைசிவரை இவரும் என்னுடன் தான் இருப்பார் என்று கண்டிஷன் போட்டுவிட்டே, நாடி ஜோதிடம் பார்க்கலானார்.

   தங்களின் பதிவினில் சொல்லியுள்ளது எல்லாம் உண்மையே. பகிர்வுக்கும், அதன் இணைப்பினை இங்கு கொடுத்து உதவியுள்ளதற்கும் என் நன்றிகள்.

   Delete
  2. திரு நடனசபாபதி அவர்களின் பதிவுகளையும் அங்கே கருத்துச் சொல்லி இருந்த திரு ரமணன் அவர்களின் பதிவுகளையும் படித்தேன்.

   Delete
 29. ஜோதிடம், ஜாதகம், கைரேகை இவற்றில் ஒரு மனிதனுடைய குணாதிசியங்களை சொல்லக்கூடிய அம்சங்கள், கடந்த காலத்தை சொல்லக்கூடிய அம்சங்கள் நிறைய உண்டு. நாடி ஜோதிடத்திலும் அது போலவே எனது தாய் தந்தை பெயரை உடன் பிறந்தோர் முதலானவற்றை, கடந்த காலத்தை சரியாக கணித்தவர்கள் உண்டு. ஏகத்திற்கும் பயமுறுத்திய ஜோதிடர்களையும் பார்த்திருக்கிறேன். எதிர்மறையான விஷயங்களை சொன்னால் பரிகாரம் என்று போகாமல் ஆண்டவனை சரணாகதி அடையவேண்டியதுதான். நான் விரும்பிப் படிக்கும் சில விஷயங்களில் ராசிபலனும் ஒன்று. அது நமக்கு ராசியும் இல்லை ஒரு பலனும் இல்லை! மற்றபடி பார்த்தால் நல்ல பொழுது போக்குகளில் ஒன்று!!!!...;-))))

  ReplyDelete
  Replies
  1. கடந்த காலத்தை அநேகமாய் நம் வாயிலிருந்து விஷயங்களைப் பிடுங்கிக் கொண்டு எல்லோருமே சரியாகச் சொல்லி விடுவார்கள். எதிர்காலம்? ஒரு சிலரால் தான் சொல்ல முடியும். மற்றபடி ராசிபலன் எல்லாம் என் கணவர் பார்க்கச் சொல்லிப் பார்ப்பேனே தவிர எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை.

   Delete
 30. சோசியம் பார்க்கலியோ, சோசியம்! - பகுதி-2, இன்று 07.01.2017 சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

  அதற்கான இணைப்பு: http://sivamgss.blogspot.in/2017/01/2.html

  அதிலும் என்னுடைய சொந்த அனுபவங்கள் சிலவற்றை, சுவாரஸ்யமான பின்னூட்டங்களாகக் கொடுத்துள்ளேன்.

  இது ஜஸ்ட் அனைவரின் ஓர் தகவலுக்காக மட்டுமே.

  ReplyDelete