எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 10, 2017

உங்க வீட்டுப்பாப்பாவுக்கு ஒரு பாடல்!

குழந்தை க்கான பட முடிவு
குழந்தை முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாட்களிலேயே குப்புறத்திக்கொள்ள முயலும். மெல்ல மெல்லக் குப்புறத்திக்கும். பின்னர் தலையைத் தூக்கும். தலையைத் தூக்கி நம்மைப் பார்த்துச் சிரிக்கும். நாம் கையில் தூக்கிக் கொண்டால் நம் வயிற்றில் காலை வைத்து உதைத்துக் கொண்டு மேலே ஏறும்.
அடுத்து ஆறு மாசம் ஆகும்போது கைகளைப் பயன்படுத்தத் தெரிந்திருக்கும். கையை வாயில் கொண்டு போகும். அப்போக் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா சொல்லிக் கொடுத்தால் புரிந்து கொண்டு கையைத் தட்டும். மாசம் ஆனால் கையை மேலே தூக்கிக் கொண்டும் கோவிந்தா போடும். பின்னர் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பாடலைப் பாடினால் இடுப்பிலேயே குதிக்கும். கையில் பிடிபடாமல் ஆடும்! முன்னும், பின்னும் ஆடும்.


சங்குசக்கர சாமிவந்து
ஜிங்கு ஜிங்குனு குதிக்குமாம்!

கொட்டு கொட்டச் சொல்லுமாம்-அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம்!--அது
ஓங்கி வானம் அளக்குமாம்!

கலகலன்னு சிரிக்குமாம்!--அதைக்
காணக்காண இனிக்குமாம்!

அடுத்து நீஞ்சித் தவழ முற்படும் போது முதலில் முட்டிக்கால் போட்டுக் கொண்டு முன்னும், பின்னும் ஆடும் குழந்தை!

அப்போப் பாடும் பாடல்

ஆனை ஆனை! அழகரானை!
ஆனயும் குட்டியும் ஆடுமானை!

ஜல்லைக் கரும்பை முறிக்கும் ஆனை!
சீராடி சீராடிக் கொஞ்சும் ஆனை!

குட்டி ஆனைக்குக் கொம்பு முளச்சுதாம்!
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்!

எங்க குட்டிப் பேத்திக்கு இந்தப்பாடலைப் பாடினால் குதிப்பாள்! தவழ ஆரம்பிக்கும் குழந்தை உட்கார முயற்சிக்கும்போது கொஞ்சம் சாய்ந்தாப்போல் தான் முதலில் உட்காரும். அப்போப் பாட வேண்டிய பாடல்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!
சாயக் கிளியே சாய்ந்தாடு!/சந்தனக்கிளியே சாய்ந்தாடுனும் பாடலாம்.
குத்துவிளக்கே சாய்ந்தாடு!
கோவில் புறாவே சாய்ந்தாடு!

உட்கார்ந்து கொண்ட குழந்தை தவழ ஆரம்பித்தால் கொஞ்சம் ஆடிக்கொண்டே போகும். அப்போ

ஆடுமாம் பெருச்சாளி ஆடுமாம்
அது ஐந்து கொழுக்கட்டைக்கு ஆடுமாம்
குட்டிப் பெருச்சாளி ஆடுமாம்
கொழுக்கட்டை கொண்டான்னு கேட்குமாம்

அடுத்து எழுந்து நிற்க முயல்கையில் கீழே பொத், பொத் என்று விழும்.

யானை வந்தது யானை
எங்கே வந்தது யானை
சண்டைக்கு வந்தது யானை
சறுக்கி விழுந்தது யானை

என்று சொல்லிக் கைதட்டினால் குழந்தையும் கை தட்டும். சிரிக்கும்.

குழந்தை க்கான பட முடிவு
குழந்தை அழும்போது பாடும் தாலாட்டு

ஆராரோ ஆராரோ ஆரிரரி ஆராரோ

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுது!
அடிச்சாரைச் சொல்லி அழு ஆக்கினைகள் செய்து வைப்பேன்!
தொட்டாரைச் சொல்லி அழு தோள்விலங்கு பூட்டி வைப்பேன்!

மாமன் அடிச்சானோ மல்லிகைப் பூச் செண்டாலே
பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் சங்காலே
அத்தை அடிச்சாளோ அல்லிப் பூச் செண்டாலே
அம்மா அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகுறது!

இன்னொரு தாலாட்டு!


கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு

கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ

முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?

ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ

யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ

சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே

24 comments:

 1. அனைத்துப் பாப்பாக்களுக்காகவும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், முனைவர் ஐயா! எல்லாப் பாப்பாக்களுக்கும் தான்! :)

   Delete
 2. இன்று பேத்தி ஞாபகமா? கைக்குழந்தைப் பாடல்களில் புகுந்து விளையாடறீங்க.

  ReplyDelete
  Replies
  1. பேத்தி ஞாபகம் மறந்தால் தானே புதுசா வர! வாரா வாரம் ஸ்கைபில் பத்து நிமிஷம் காட்டுவார் பையர். அதுக்கே அது கையில் நிற்காமல் துள்ளும்! :) பொதுவாக இம்மாதிரிக் குழந்தைப்பாடல்கள், கதைகள்னு இருக்கிறதை எல்லாம் சேகரம் செய்து வைத்திருக்கேன்! நிறையத் தாலாட்டுப்பாடல்களை மின் தமிழ்க் குழுமத்தின் மரபு விக்கியில் வலை ஏற்றியும் வைத்திருக்கேன். இந்தக் குழந்தைக் கதைகளில் முக்கியமாய்ப் பாப்பா கதைகளில் உள்ள மறைமுகமான நீதியை எடுத்துச் சொல்லவும் ஆசை! சில வருடங்கள் முன்னர் முத்தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ காக்கா-நரி-வடை கதையை ஒருத்தர் புதுமை என்ற பெயரில் எழுதி இருந்தார். அதைப் பற்றிய வாதத்தில் காக்கா-நரி--பாட்டி--வடை கதையில் உள்ள நீதிகளை எடுத்துக் காட்டினேன். இம்மாதிரிக் கதைகள் பல உள்ளன. உதாரணமாகக் குருவி பாயசம் குடிச்ச கதையில், ஈ பெயர் தேடி அலையும் பாடல், கொழுக்கட்டைக் கதை என்று பல கதைகளிலும் உள்ள நீதிகளை வெளியே எடுத்துப் போட்டு இன்றைய பாப்பாக்களுக்குக் கதை வடிவில் போய்ச் சேர்க்க வேண்டும் என்னும் ஆசை தான்!

   Delete
  2. அதைப் பற்றிய வாதத்தில் காக்கா-நரி--பாட்டி--வடை கதையில் உள்ள நீதிகளை எடுத்துக் காட்டினேன். இம்மாதிரிக் கதைகள் பல உள்ளன. உதாரணமாகக் குருவி பாயசம் குடிச்ச கதையில், ஈ பெயர் தேடி அலையும் பாடல், கொழுக்கட்டைக் கதை என்று பல கதைகளிலும் உள்ள நீதிகளை வெளியே எடுத்துப் போட்டு இன்றைய பாப்பாக்களுக்குக் கதை வடிவில் போய்ச் சேர்க்க வேண்டும் என்னும் ஆசை தான்!// அக்கா ஹைஃபைவ்!! எனக்கும் இதே ஆசை உண்டு. சமீபத்தில் கூட ஒரு 3 மாதங்களுக்கு முன் என் தங்கையின் மகள் அமெரிக்காவில் நார்த் கரோலினாவில் இருக்கிறாள் அவளுக்கு ஒரு மகன் 1 1/2 வயது இப்போது குட்டிப் பேத்தி பிறந்திருக்கிறாள். பேரனுக்கு ஸ்கைப்பில் நான் கதைகள் சொன்னேன்..தமிழில்தான் மகளும் என்னிடம் கேட்டுக் கேட்டு நிறைய சொல்லித் தருகிறாள். யுட்யூபிலும் சில கார்ட்டூன்களுடன் இருக்கிறது அதையும் அவளுக்கு அனுப்பிக் கொடுத்தேன் ஆனால் கம்ப்யூட்டரில் காட்டாமல் அவளையே ஆக்ஷனுடன் சொல்லிக் கொடுக்கச் சொன்னேன். அவளும் செய்தாள். இப்போது அடுத்தக் குழந்தைக்கும் அவளுக்குச் சொல்லியிருக்கிறேன்...

   கீதா

   Delete
  3. எங்க பேத்திக் கணினியிலும் பார்க்கிறாள்! எங்களைப் பார்க்கையிலும் செய்து காட்டுவேன். கொஞ்ச நாட்கள் போனால் அவள் அமெரிக்கன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் தான் பிரச்னை! :)

   Delete
 3. ஈயின் பெயர் வந்தகதையைப் பதிவாக்கி இருக்கிறேன் பார்க்க/http://gmbat1649.blogspot.com/2011/12/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. ஏற்கெனவே பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன்.

   Delete
 4. அருமையான பாடல்கள் கீதாக்கா...என் மகனுக்குப் பாடியிருக்கிறேன்...ஆனை ஆனை அழகரானை யில் நீங்கள் ஜல்லைக்கரும்பை என்று சொல்லியிருக்கிரீர்கள் இல்லையா அதை நான் ஆலைக் கரும்பை முறிக்கும் யானை என்று பாடுவேன்...

  அது போன்று ஆரிராரோ பாடல் "மன்னுபுகழ் கோசலை தன் மணி வயிறு வாய்தவனே " என்ற பிரபந்தப் பாடலைப் (பி வி ராமன் லக்ஷ்மணன் சகோதரர்கள் பாடியது ராகமாலிகை) பாடுவது வழக்கம்....மகனுக்கு நிறைய நீதிக்கதைகள் சொல்லியதுண்டு. ஒவ்வொரு வாய் ஊட்டும் போதும்...ஆறு மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டேன்...அதுவும் நடித்துக் காட்டி, குரல் மாற்றிப் பேசி என்று.....அப்புறம் பஞ்சதந்திரக் கதைகள் அப்புறம் அவன் வளரத் தொடங்கியதும்..அவன் வாசிப்பது போல் பஞ்சதந்திரப் புத்தகங்கள், ஜாதக் கதைப்புத்தகங்கள் சந்த்மாமா, அம்புலிமாமா என்று காமிக்ஸ் எல்லாம் பழைய புத்தகக் கடையில் வாங்கிக் கொடுத்ததுண்டு. இப்படி வளர வளர ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப....ஆங்கில தமிழ் என்று...ரொம்ப ரசித்தேன் பதிவை..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா ரெங்கன்...

   பிவிஆர் பிவிஎல் பாடிய மன்னுபுகழ் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்..

   Delete
  2. நம் வசதிக்கு ஏற்ப வார்த்தைகளைப் போட்டுக்கலாமே! எனக்கும் பிவிராமன், லக்ஷ்மணன் சகோதரர்களின் "மன்னுபுகழ் கோசலை" பாடல் பிடிக்கும். எங்க குழந்தைகளுக்கு விபரம் தெரிந்ததும் தமிழ்க் கதாசிரியர்களின் கதைகளைப் படித்துக் காட்டுவேன். முக்கியமாய் தேவன் கதைகள்!

   Delete
 5. தாலாட்டுப் பாடல்தான் வரிகளில் கலக்குகிறது. குழந்தைப் பாடல்களில் சில அறிந்திருக்கிறேன். சில புதியவை.

  ReplyDelete
  Replies
  1. தாலாட்டுப் பாடல்கள் இன்னும் இருக்கின்றன. சேகரம் செய்து வைத்திருக்கேன்!

   Delete
 6. இளையராஜா ஒரு பாடலில் பாடுவார் (கரட்டோரம் மூங்கில் காடு.. காட்டைச் சுத்தி வந்து பறக்குது)

  அப்பா அடிச்சா அன்னான் வருவார் அழுவாதே..

  அண்ணன் அடிச்சா அக்கா வருவா அழுவாதே...

  அக்கா அடிச்சா அம்மா வருவா அழுவாதே...

  அந்த அம்மாவே அடிச்சுட்டான்னு அழுவறியாடா கண்ணா.. கவலைப்படாதேடா

  என் பாட்டு இருக்கு கலங்காதே அதைக்கேட்டு உறங்கு பொழுதோடே...

  ReplyDelete
  Replies
  1. *அன்னான் இல்லை அண்ணன்!

   Delete
  2. என் நல்ல வேளை - இதை நான் கேட்காமல் போனது. :-)

   Delete
  3. வாங்க ஶ்ரீராம், இளையராஜா பாடிய இந்தப் பாடல் நான் கேட்டதில்லை! அப்பாதுரை, சரியான நகைச்சுவையாளர்! :)

   Delete
 7. சொன்னபடியே தாலாட்டுப்பதிவு போட்டு விட்டீர்கள் இரசித்தேன்.
  இதில் சில பெண்கள் சாடையாக பாடி குடும்பத்தில் பிரச்சனையை கிளப்புபவர்களும் உண்டு.

  ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, உங்கள் பதிவின் மூலமே அறிந்தேன். தாலாட்டில் குடும்பச் சண்டைகள் வரும் என்பது! கணினி திறந்து எல்லாம் சரியா இருக்கு தானே!

   Delete
 8. எங்கள் வீட்டில் அடிக்கடி பாடப்பட்ட தாலாட்டு: ஜிலு ஜிலு ஜிலு சப்தம் கேட்குதே க்ருஷ்ணா சப்தம் கேட்குதே.

  நான் தூங்கியதாக என் அம்மா சொன்ன பாடல்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை. அப்பவே இந்த மாதிரி தான் உனக்கு பிடிக்கும் என்பார் என் அம்மா. பாடியதும் உடனே தூஞ்கிவிடுவேனாம்.
  இன்னொரு எம்எல்வி பாட்டு இலேசாக நினைவிருக்கிறது - என்றைக்காவது நினைவுக்கு வரும்.
  நான் என் பிள்ளைகளுக்குப் பாடிய தாலாட்டு பாடல்கள்: இரவுப் பாடகன் ஒருவன் வந்தான், edelweiss, rock a bye baby. என் பிள்ளைகள் எடல்வைஸ் பாடலுக்கு கூடவே சேர்ந்து ம்ம்ம்ம்ம்ம் என்று முனகி முனகித் தூங்கி விடுவார்கள். ஹ்ம்ம். சமீபத்தில் ஒரு 10 வயது சிறுமி பாடி அசத்திய எடல்வைஸ் - அவசியம் பார்க்க வேண்டும் .

  என் மகளுக்குகாக இந்தப் பாடலை நிறைய முணுத்திருக்கிறேன்.

  ReplyDelete
 9. என் கமென்ட் காணோம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, கூகிளாருக்கு உங்க கமென்ட் ரொம்பப் பிடிக்கும் போலே! ஹிஹிஹி! ஆனால் இதைப் போலத் தான் அவர்கள் உண்மையும், பானுமதி வெங்கடேஸ்வரனும் சொல்கின்றனர். :) ஒண்ணு செய்யுங்க! என்னோட மெயில் ஐடிக்கு அனுப்பிடுங்க. உங்க பேரோடு காப்பி, பேஸ்ட் செய்துடறேன். வேறே வழி தெரியலை!

   Delete
 10. பாடல் பகிர்வு அருமை. எத்தனை எத்தனை பாடல்கள் இருக்கிறது! கொஞ்சம் மாறுதல்கள் இருக்கும் .
  நகரத்தார் வீடுகளில் கல்யாணத்திற்கு முன் தாலாட்டு பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
  எங்கள் பக்கத்து வீட்டு அக்கா சிலேட்டில் எழுதி பழகினார்கள் அவர்கள் அம்மாவிடம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, விதம் விதமாகத் தாலாட்டுப் பாடல்கள் இருக்கின்றன! ஆனால் எனக்குச் சொல்லிக் கொடுத்தது இல்லை. பாடுவதைக் கேட்டுக் கேட்டு வந்தது தான்!

   Delete