எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, September 05, 2017

வெண்ணெய் திரண்டு வருது! :)

ஆதி வெங்கட் தான் ஹார்லிக்ஸ் பாட்டிலில் பால் ஏடுகளைச் சேகரித்துப் போட்டு வெண்ணெய் எடுத்ததைக் குறித்து முகநூலில் பகிர்ந்திருந்தார். அதைப்பார்த்ததும் நான் இன்னமும் கையால் மத்தை வைத்துக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைக் குறிப்பிட்டேன். அவரும் பகிரச் சொன்னார். இப்போதைய தலைமுறைக்கு மத்து என்றால் என்ன என்று தெரியுமா? சந்தேகமே! ஆனால் நாங்கல்லாம் சின்ன வயசில் பாட்டி வீட்டில், சித்தி வீட்டில் லீவுக்குச் செல்கையில் அங்கே தூணில் சங்கிலிகள் அல்லது கயிறு கட்டி வைத்திருப்பதில் பெரிய அடுக்கு நிறைய உள்ள பாத்திரத்தில் பாலேடுகளைச் சேகரம் செய்து போட்டுத் தருவார்கள். சங்கிலியையோ அல்லது கயிறையோ முன்னும், பின்னும் இழுப்போம்.

அப்போதைய பாலின் தரத்துக்கு அநேகமாக தினமும் வெண்ணெய் எடுக்கும்படி இருந்தது என்பதையும் சொல்ல வேண்டும். அப்போப் பழகினது பின்னால் கல்யாணம் ஆனதும் மாமியார் வீட்டிலும் பயன்பட்டது. ஆனாலும் அவங்களுக்கு அப்போவே சந்தேகம்! எனக்குக் கடையத் தெரியுமா என்பதிலும் இம்மாதிரி முறையைப் பார்த்திருப்பேனா என்பதிலும்! ஆனாலும் முதல் முயற்சியிலேயே தேர்வில் முழு வெற்றி! :) அப்புறமாத் தான் அவங்க தஞ்சை ஜில்லாவைத் தவிர்த்த மற்ற ஊர்களில் உள்ள மாடுகளின் பாலிலும் வெண்ணெய் எடுக்க முடியும் என்பதை ஒத்துக் கொண்டார்கள்! ஹிஹிஹி, விலைக்கு வாங்கற பாலில் வெண்ணெய் எடுக்க முடியுமானு அவங்க சந்தேகம். ஆனால் அப்போதெல்லாம் அவ்வளவா யாரும் ஏமாற்றினதில்லை. கொஞ்சம் தண்ணீர் கலப்பாங்க தான்! ஆனால் அதுவும் குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்! அப்படியே பாலைக் குடிக்கக் கூடாது என்பதால் கலப்பாங்க! அதையும் நமக்கு நேரேயே கலந்து தருவார்கள்.

வைக்கோலில் கன்றை முதல் முதல் சென்னை வந்து தான் பார்த்தேன். (நாகேஷ் மாதிரி அப்போப் பாடத் தெரியலை) அதே போல் எருமைப்பாலும் கல்யாணம் ஆகி வந்த பின்னர் மாமியார் வீட்டிலும் குடித்தனம் வைத்த பின்னர் சென்னை வாழ்க்கையிலும் பழக்கம் ஆனது. வடமாநிலங்களில் வாழ்ந்ததில் ராஜஸ்தானில் மட்டும் எருமைப்பால், பசும்பால் இரண்டும் கிடைக்கும். பசும்பாலே ஒரு பெரிய வாளியை வைத்துக் கறப்பார்கள். குஜராத்தில் பசுக்கள் தான்! பசும்பால் தான் முழுக்க முழுக்க! அங்கே சாப்பிட்ட வெண்ணெய் போல் இனி எங்கும் சாப்பிட முடியாது! குல்ஃபி செய்த வண்ணம் இருப்பேன்! பால் பதார்த்தங்கள் அதிகம் செய்வேன்.

அதுக்கப்புறமாச் சென்னை வந்தும் கறந்த பால் ஆனால் எருமைப்பால் கிடைத்து வந்தது. அம்பத்தூரிலிருந்து கிளம்பும் வரை இது தொடர்ந்தது. இங்கே வந்ததுமே ஒரு பால்காரர் கிடைத்தார். அவர் தான் தொடர்ந்து நாங்கள் அம்பேரிக்கா போகிற வரை பால் கொடுத்து வந்தார். திரும்பி வந்ததும் அவரால் இயலாமல் போக இரண்டு பால்காரர்களை வைத்து சோதித்தும் திருப்தி இல்லாமல் ஆவின் பால் வாங்கினேன். அப்புறமாத் தான் திடீர்னு பழைய பால்காரரின் தம்பியே பால் கொடுப்பது நினைவில் வந்தது. அவரிடம் வாங்கிப் பார்த்தோம். பால் உண்மையான சுத்தமான பசும்பால் என்பது சாப்பிட்டுப் பார்த்ததுமே புரிந்தது. இரண்டு நாட்கள் சோதித்துப் பார்த்து விட்டு இப்போது போன மாசத்திலிருந்து அவரிடம் தான் பால் வாங்குகிறோம். அதில் எடுத்த வெண்ணெய் தான் கீழே நீங்கள் பார்ப்பவை! ஏற்கெனவே ஒரு முறை எடுத்து அதை நெய்யும் காய்ச்சி விட்டேன்.


வெறும் ஏடுகளை மட்டும் எடுத்துச் சேகரித்துப் போட்டிருக்கேன். தயிரிலிருந்து அதுவே தானாகத் தோல் உரிகிறாப்போல் வந்து விடும். மோர் வேண்டுமெனில் ஏட்டோடு சேர்த்து அரைக்கரண்டி தயிரையும் போட்டு வைக்கலாம். ஆனால் மோர் கொஞ்சம் புளிப்பு வந்து விடும். ஏடுகளை மட்டும் போட்டுக் கடைகிற போது வரும் மோர் குடிக்கச் சுவையாக இருக்கும்.  பாத்திரத்தின் மேல் இருப்பது மத்து! மரத்திலும் உண்டு. மர மத்து தமிழ்நாட்டில் அவ்வளவு நன்றாய்க் கிடைப்பதில்லை. கொஞ்சம் தேடிப் பிடித்து வாங்கணும்! இல்லைனா தெரிஞ்ச ஆசாரி இருந்தால் பண்ணித் தரச் சொல்லலாம்.


முதலில் வழக்கம் போல் படம் எடுக்கும் நினைவில்லாமல் மத்தைப் பாத்திரத்தில் போட்டுக் கடைய உட்கார்ந்தேன். அப்புறமாத் தான் நினைவு வந்து மத்தை எடுத்து வெளியே வைத்து விட்டுப் படம் எடுத்தேன். ஆகவே இது முதலில் எடுத்த படம். மேலே உள்ளது அப்புறமா எடுத்தது.


வெண்ணெய் திரண்டு விட்டது கண்ணா! ஓடி வா! ஓடி வா! மஞ்சளாக இருப்பதால் பசுவின் வெண்ணெய் என்று அறிக! நெய்யும் கொஞ்சம் மஞ்சளாகத் தான் வரும். இருக்கிற வேலை போதாதா என்பவர்களுக்கு கையால் கடைவதால் கைகளுக்குப் பயிற்சி கிடைக்கும். ஸ்பான்டிலிடிஸ் வலி வந்தால் தோள்கள் அசைத்துப் பயிற்சி செய்யச் சொல்வார்கள். அதுக்கு இது சரியாக இருக்கும். கையில் ஒரு மத்து போன்ற கட்டை அல்லது ப்ளாஸ்டிக் கட்டையைக் கொடுத்து அதை இரு கைகளாலும் தேய்க்கச் சொல்வார்கள். அதற்கு நாம் தினசரி இல்லாட்டியும் வாரம் இரு முறை தயிர் கடைந்தால் போதும்.

மேலும் துணிகளைக் கசக்குகிறாப்போலும் பயிற்சி செய்யணும். அதுக்கு தினம் நம் துணியை நாமே துவைத்துக் கொண்டால் போதும். நான் பெரும்பாலும் என் துணிகளை நானே தோய்த்துக் கொண்டு அதை நீரில்லாமல் பிழிய மட்டும் வாஷிங் மெஷின் ட்ரையரில் போடுவேன். துவைக்கும்போது குனிந்து நிமிருவதும் பயிற்சி தானே! முடிஞ்ச வரை செய்யலாம்!

மத்து படங்களுக்கு நன்றி கூகிளார்

மத்து க்கான பட முடிவு

பொதுவாக மர மத்து இப்படித் தான் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் செதுக்கினால் கடைய சுலபம். கீழே உள்ளது போல் இருக்க வேண்டும்.

மத்து க்கான பட முடிவு

17 comments:

 1. எப்படியோ மத்து கடைஞ்சு பதிவை நல்ல கோர்வையாக பழைய நினைவுகளோடு கொண்டு வந்துட்டீங்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! பழைய நினைவுகள் நிறையவே இருக்கு!

   Delete
 2. தூணில் சங்கிலிகள் அல்லது கயிறு கட்டி வைத்திருப்பதில் பெரிய அடுக்கு நிறைய உள்ள பாத்திரத்தில் பாலேடுகளைச் சேகரம் செய்து போட்டுத் தருவார்கள். சங்கிலியையோ அல்லது கயிறையோ முன்னும், பின்னும் இழுப்போம்.// ஆம் அக்கா நானும் கடைந்திருக்கிறேன்.....இப்படித்தான் கிராமத்தில் இருந்த வரை...

  அப்புறம் மத்தினால் அதுவும் நீங்கள் கொடுத்திருக்கும் இரண்டாவது மர மத்து...கொஞ்சம் டார்க் ப்ரௌன் கலரில்...இப்போதும் அதை வைத்துத்தான் கடைகிறேன். ஆனால் பாக்கெட் பால்தான் ஆவின்!!! இருந்தாலும் கொஞ்சம் வரும். ஆவின் பால் அக்மார்க் பசும்பால் என்று சொல்ல முடியாதே. அவர்களுமிப்போது பசும்பால் என்று தனியாக டெட்ரா பாக்கில் விற்கிறார்கள்தான் ஆனால் வாங்கியதில்லை. நாங்கள் இருக்கும் இடத்தில் அவ்வளவாகக் கறந்த பால் இல்லை...கண்டுபிடித்து இப்போதுதான் கறந்த பாலுக்குச் சொல்லியிருக்கிறேன் பசும்பால்...வாங்கிப் பார்க்க வேண்டும் அரைலிட்டர் 25 ரூபாய் என்றார். என் அப்பா வெண்ணை எடுக்கிறேன் என்றால் அவருக்கு கடைய வராது என்பதால் பாட்டிலில்தான் குலுக்கி எடுப்பார். எனவே இரண்டு முறையும் இங்கு உண்டு..

  நானே தான் துணியைக் கையால் துவைத்துக் கொள்கிறேன்...பிழிவதும் கையால் இப்போதுவரை. முடியலை என்றால் மெஷினில் போட்டு பிழிந்து கொள்ளலாம்...எங்குச் சென்றாலும் நான் என் துணிகளை நானே தோய்த்துக் கொண்டு விடுவதுண்டு...ஆம் நீங்கள் சொல்லுவது போல் ஸ்பாண்டிலைட்டிஸ் தோள்வலி எல்லாவற்றிற்கும் நல்லது. ஆனால் பெரும்பாலும் எல்லோரும் வலி வலி என்று சோம்பேறித்தனத்தில் கை அசைக்காமல் சிறு வயதிலேயே மூட்டுகள் ஃப்ரீஸ் ஆகிவிடுகின்றன...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பலரும் என்னைக் கேலி செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள். ஆனால் பிசியோ தெரபி என்று போகும்போது இதைத் தான் செய்யச் சொல்கிறார்கள். அதுக்கு நம் வீட்டு வேலையை நாமே செய்து கொண்டால் உடம்பும் ஒரு நிலையில் இருக்கும்!

   Delete
 3. இன்னமும் தயிர் கடைஞ்சு வெண்ணெய் எடுக்கறீங்களா? வாளில வெண்ணெய் நல்லாத் திரண்டிருக்கு.

  வெண்ணெய் எடுத்தவுடன், கடைந்த மோர் ரொம்ப நல்லாருக்கும். 8வது படிக்கும்போது சாப்பிட்டது. அந்த ஊர்ல (தாளவாடி, மலைமேல் கிராமம் ) 77ல, கன்னு போட்டவுடனே கிடைக்கற சீம்பாலை வீட்டிற்குக் கொண்டவந்து பால்கார்ர் தருவார்.

  எங்க அம்மா வெண்ணெய் கடைய அலுமினிய மத்தும், கீரை கடைய மர மத்தும் உபயோகப்படுத்துவார். கடைந்த வெண்ணெய் தோசைக்கு நல்லாருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. வாளி இல்லை! அடுக்கு! :) சீம்பாலில் வெல்லம் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிடுவோம். அம்பத்தூரில் இருந்தப்போக் கூட பால்காரம்மாவுக்கு நாங்க வங்கிக் கடன் வாங்க உதவிகள் செய்ததால் மாடு கன்று போட்டதும் சீம்பாலைக் கொடுத்து விடுவாங்க! கீரை மசிக்க நானும் மரமத்துத் தான் பயன்படுத்துகிறேன்.

   Delete
 4. எங்கள் வீட்டில் ஒரு உடையாத ப்ளாஸ்டிக் பாட்டிலில் தயிர் ஏடுகளைப் போட்டு குலுக்கி வெண்ணை எடுப்போம்!! மத்தும் இருக்கிறது அவ்வப்போது உபயோகிப்பேன்!

  ReplyDelete
  Replies
  1. ப்ளாஸ்டிக் எல்லாம் கடந்த 30 வருடங்களில் வந்தவை! அதுக்கு முன்னாடி ஹார்லிக்ஸ் பாட்டிலில் தான் போட்டுக் குலுக்குவோம். ஹார்லிக்ஸ் பாட்டிலோடு கீழே விழுந்து உடைந்த சம்பவங்கள் உண்டு! :)

   Delete
 5. எங்கள் வீட்டிலும் மத்து இருக்கிறது. ஆவின் பால் வாங்குகிறோம். 25 வருஷங்களுக்கு முன்னால் கறந்த பசும்பாலும், எப்போதாவது எருமைப்பாலும் வாங்கியிருக்கிறோம். ஆனால் வெண்ணெய்?

  ஹிஹிஹிஹி.... அது எப்பவுமே கடையில்தான்!! எங்கள் பாட்டி எப்போதோ பெரும்பண்ணையூரில் இருந்த காலங்களில் இப்படி வெண்ணெய் எடுத்துக் பார்த்திருக்கிறேன். அது இருக்கும் 48 வருடங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நான் சின்ன வயசில் இருந்தே பார்த்திருக்கேன். கல்யாணம் ஆகியும் தொடர்கதை! :)

   Delete
 6. ஹிண்டாலியம், மரம் ஆகிய இரண்டிலும் மத்து பயன்படுத்தியதுண்டு. மத்து கொண்டு கடைந்தும், பாட்டிலில் குலுக்கியும் வெண்ணை எடுத்ததுண்டு..... இங்கே தில்லியில் கிடைக்கும் பாலில் வெண்ணை நன்கு வரும். என்றாலும் இப்போதெல்லாம் எடுப்பதில்லை. பொறுமை இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், உண்மையில் இதுக்குப் பொறுமை நிறையவே தேவை! என்றாலும் நான் இன்று வெண்ணெய் எடுக்கப் போகிறேன் என்றால் காலையில் எழுந்த உடனேயே ஏடுகள் சேகரம் செய்து வைத்திருப்பதை எடுத்து வெளியில் வைத்து விடுவேன். எட்டு மணிக்குள்ளாக அறையின் தட்பவெப்பத்துக்கு ஏற்ப வந்துடும். உடனே கொட்டிக் கடைந்தால் பத்து நிமிஷத்துக்குள் வெண்ணெய் திரளும். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த உடனே போட்டுக் கடைந்தால் நிச்சயம் அரைமணிக்கு மேலே ஆகும்.

   Delete
 7. என்மனைவி கொதித்த பாலில் இருக்கும் ஆடையைச் சேர்த்து வைப்பாள் கணிசமான ஆடை சேர்ந்ததும் பாட்டிலிலோ மிக்சியிலோ பாட்டு ஆட்டுவாள் வெண்ணை திரண்டு வரும் அதிலிருந்துதான் நெய் எப்போதும் நெய் வாங்குவதில்லை

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா, க்ரீம் வேணும்னாத் தான் நான் பாலில் இருந்து எடுத்துச் சேகரிப்பேன். வெண்ணெய் வேண்டும் எனில் பாலை உறை ஊற்றிவிட்டுத் தயிராக்கி அதில் இருந்தே ஏடுகளைச் சேகரிப்பேன். கணிசமான ஆடை சேர்ந்ததும் கடைவேன். மிக்சியிலும் சில சமயங்கள் போட்டிருக்கேன். நெய் நாங்களும் அதிகம் வெளியே வாங்குவதில்லை. பாலில் இருந்து எடுக்கும் ஆடைகளைச் சேகரம் செய்தால் அவற்றில் கொஞ்சம் போல் தயிர் சேர்த்து முதல் நாள் இரவே வெளியே வைத்துவிடுவேன். மறுநாள் கடைய வசதி! வெண்ணெயும் தயிரிலிருந்து எடுத்த ஆடைகளின் வெண்ணெய் போல் வாசமாக இருக்கும்.

   Delete
 8. கீரைகடையும் மத்தும், தயிர் கடையும் மத்தும் கல்யாணசீர்வரிசையில் கண்டிப்பாய் உண்டு.
  முன்பு செய்தேன், இப்போது செய்வதில்லை. வெண்ணெய் வாங்கி உருக்கி கொள்கிறேன்.
  படங்கள் நன்றாக வந்து இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு! படங்களுக்குப் பாராட்டுத் தெரிவித்ததுக்கு நன்றி. மத்து இல்லாத வீடே இருக்காது! ஆனால் இப்போதெல்லாம் தெரியுமா என்றே சந்தேகம். கீரையை மிக்சியில் போட்டு அடித்து விடுகின்றனர்! :)

   Delete
 9. ஆனாலும் முதல் முயற்சியிலேயே தேர்வில் முழு வெற்றி! :) அப்புறமாத் தான் அவங்க தஞ்சை ஜில்லாவைத் தவிர்த்த மற்ற ஊர்களில் உள்ள மாடுகளின் பாலிலும் வெண்ணெய் எடுக்க முடியும் என்பதை ஒத்துக் கொண்டார்கள்!

  ஹாஹாஹா !

  எங்கள் வீட்டில் மாடு வைத்துக் கொண்டிருந்ததால் தினசரி தயிரை கடைந்து வெண்ணை எடுப்போம்.

  சென்னைக்கு வந்த புதிதில் கே.கே.நகரில் ஒரு பால்காரரிடம் பால் வாங்கினேன். அப்பொழுதும், திருவண்ணாமலையில் பாலில் தண்ணீர் கலந்திருக்கிறாரா? அல்லது தண்ணீரில் பால் கலந்திருக்கிறாரா? என்று சந்தேகம் ஏற்படும் வண்ணம் ஒருவர் பால் ஊற்றினார். ஆனலும் அந்த பாலிலும் ஆடை புடைக்கும், அங்கும் ஆடையை சேர்த்து வைத்து அதை மிக்ஸியில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை போட்டு ரெண்டே ரெண்டே சுழற்று, வெண்ணை வந்து விடும்.

  ReplyDelete