எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 05, 2017

உங்கள் கருத்து என்ன?

இதுவரை இல்லாத அளவுக்கு என்னோட ரவாதோசை பதிவுக்கு எக்கச்சக்கப் பார்வையாளர்கள்! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.  கடந்த செவ்வாய்க்கிழமை வந்த காமாட்சி அம்மாவின் சிறுகதையின் தாக்கம் இன்னமும் என்னை விட்டுப் போகவில்லை. கணவன் எத்தனை வருஷங்கள் விட்டுப் பிரிந்திருந்தாலும் மனைவி கணவனுக்காகக் காத்துக் கொண்டு நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் இருப்பாள். ஆனால் மனைவி ஒரு பத்துநாட்கள் இல்லை எனில் கணவனால் அதைக் கட்டிக் காக்க முடிவதில்லை. எல்லோரும் இப்படி இல்லை என்றாலும் சிலர் அப்படித் தானே இருக்காங்க! இதிலே அந்தத் தவறுக்கு ஒத்துழைக்கும் பெண்கள் பேரிலும் குற்றம் தான்! இன்னொருத்தியின் கணவன் என்பது தெரிந்தும் தவறு செய்கிறார்கள். மனசாட்சி உறுத்தாதா? கண நேர சுகத்துக்காக ஒரு குடும்பத்துக்கே துரோகம் இழைக்கலாமா? இத்தனைக்கும் ஏற்கெனவே திருமணம் ஆன பெண்மணி! :(

இந்தக் கதை எனக்கு மற்ற இரு கதைகளை நினைவூட்டியது. ஒரு விதத்தில் காமாட்சி அம்மாவின் கதாநாயகி நடந்து கொண்ட விதம் கணவனை அவள் விவாகரத்து செய்ததற்குச் சமம். சட்டப்படியான விவாகரத்து இல்லை எனினும் தார்மிகப்படி விவாகரத்துத் தான் அது! அதே போல் இரண்டு விவாகரத்துகள் நான் பல்லாண்டுகளுக்கு முன்னர் படித்த இரு கதைகளில் வந்திருக்கிறது. ஒன்றின் பெயரே "டைவர்ஸ்"! ஆகும். எழுதியவர் பிரபல நாவலாசிரியர் திரு பி.வி.ஆர். அவர்கள். குடும்பத்தைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் சங்கடங்களையும் எளிதான சம்பாஷணைகள் மூலமே சொல்லி விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதையை நகர்த்துவதில் வல்லவர்.  அவரின் எழுத்தைப் படிக்கையில் நாம் அந்த இடத்திலேயே இருந்து நேரிடையாக அந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் உணர்வு வரும். எனக்கு மிகவும் பிடித்த, ரசித்த எழுத்தாளர்களில் இவரும் முக்கியமானவர்.

மேற்சொன்ன டைவர்ஸ் நாவலில் ஒருமித்து அந்நியோன்னியமாக இருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படுவது குறித்து. அதுவும் மிகப் பணக்காரர்கள் ஆன தொழிலதிபர் ஆன கணவனின் பழைய வாழ்க்கை குறித்து மனைவிக்குத் தெரிய வருகிறது. அதுவும் பெண்ணின் மூலம் என நினைக்கிறேன். அந்தப் பெண் சாதாரணக் குடும்பத்துப் பிள்ளையைக் காதல் திருமணம் செய்யப் போகக் கதையில் ஒவ்வொன்றாக வெளியே வரும். கணவனின் பழைய காதல் வாழ்க்கையும் தன் தந்தையின் வற்புறுத்தலால் தன்னை மணந்ததும், ஆனால் இன்னமும் தன் காதலியை மறக்க முடியாமல் அவளுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரிய வந்ததும் அந்த மனைவிக்குக் கோபம் உள்ளூர வருகிறது. ஆனால் பெண்ணின் திருமண வாழ்க்கையில் இதனால் பிரச்னை வருமே என யோசித்துக் கணவனிடமிருந்து விலகி விடுகிறாள். காமாட்சி அம்மா சொன்னது போல் கணவனுக்கு அறுபது வயது சஷ்டி அப்த பூர்த்தி நிகழ்ச்சியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் முக மலர்ச்சியுடன் பங்கேற்கிறாள். துணை நின்று எல்லா வைதிக காரியங்களுக்கும் மனைவியாக நடத்தித் தருகிறாள். அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுக்கும்போது நினைவாகக் கணவனின் பழைய காதலிக்குக் கொடுக்காமல் தவிர்க்கிறாள். (எல்லாம் தெரிந்து விட்டதால் கணவர் தன் பழைய காதலியையும் தன் சஷ்டி அப்தபூர்த்திக்கு அழைத்திருப்பார்.)  இப்படிக் கணவனிடமிருந்து விலகி நிற்பதையே ஒரு வகையில் டைவர்ஸ் என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் பிவிஆர்.

ஒரு விதத்தில் இந்தக் கதை/நாவல் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை! ஏனெனில் கதை ஆரம்பத்தில் பெண் தான் இஷ்டப்பட்டு மணந்து கொண்ட கணவனை விட்டு டைவர்ஸ் வாங்கப் போகிறாள் என்னும்படி போய்க் கொண்டிருக்கும். பெண்ணைத் திருத்துவதற்காக அல்லது வேறே என்ன என்பது இப்போது நினைவில் இல்லை! கணவன், மனைவி நாடகம் ஆடப் போக உண்மை நிலை வெளியே வரும்! பிவிஆர் வேறே ஏதோ சொல்ல வந்து கடைசியில் கதையின் போக்கைக் கட்டுப்படுத்த முடியாமல் அதன் போக்கில் போய்விட்டாரோ எனத் தோன்றும்படி இருக்கும்.  இதற்கு ஓவியர் ராமு படங்கள் வரைந்திருப்பார். குமுதத்தில் வந்தது என நினைக்கிறேன்.

இப்போ இன்னொரு கதை! இது ரா.கி.ரங்கராஜன் எழுதினது என நினைக்கிறேன்.  இதுவும் குமுதத்தில் வந்தது தான். ஆனால் சிறுகதை என நினைக்கிறேன். ஒரு நீதிபதி! நேர்மைக்குப் பெயர் வாங்கியவர். அவருடைய தீர்ப்புகள் உண்மையை ஒட்டியே இருக்கும்.. மனைவி பெயர் மீனாட்சியோ என்னமோ வரும்.இவர்களும் வெகு அன்னியோன்னியமான தம்பதிகள். ஒருவரை ஒருவர் விரும்பித் திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த நீதிபதி நேர்மைக்குப் பெயர் போனவர்.  அவருடைய தீர்ப்புகள் எப்போதுமே குறிப்பிடத்தக்க அளவில் நேர்மையாகவே அமையும். யாருக்கும் எவ்விதமான குறைபாடுகளும் சொல்லத் தோன்றவில்லை. அப்போது ஓர் கொலை வழக்கில் கொலைகாரன் என்று தீர்மானமாகத் தெரிந்தபோதும் அவனுக்கு மரண தண்டனை கொடுக்கலாம் என்றிருந்த போதிலும் அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கிறார். (எனக்கென்னமோ கதைப்படி அவனை மன்னித்து விட்டு விட்டதாக நினைப்பு.) இது எல்லோருக்குமே ஆச்சரியத்தைத் தருகிறது. நிரூபணம் ஆன ஓர் குற்றவாளியைத் தண்டிக்காமல் விட்டுவிட்டாரே என நினைக்கின்றனர்.

அன்றிரவு மனைவியுடன் தனிமையில் இருக்கையில் மனைவி ஆச்சரியத்துடன் கேட்கிறாள். தீர்ப்பு ஏன் இப்படிச் சொன்னீர்கள் என்று அவள் கேட்பதற்கு நீதிபதி சொல்கிறார். "உனக்கு நினைவில் இருக்கிறதா? நீ கல்லூரியில் படிக்கையில் வீட்டில் உன் அறைக்குள் ஓர் கொள்ளைக்காரன் புகுந்து கொண்டு உன்னைக் கட்டிப் போட்டுவிட்டுக் கொள்ளை அடிக்க முயன்றானே! அப்போது உன் அறைக்குள் யாருக்குமே நுழைய முடியாமல் இருந்தது! கடைசியில் நான் தான் எப்படியோ போலீஸை வரவழைத்துக் கதவை உடைத்து உன்னை அவனிடமிருந்து காப்பாற்றினேன்!" என்று கேட்கிறார்.

அந்தப் பெண்மணியும் கண்கள் கலங்க, "ஆமாம், நினைவில் இருக்கிறது. உங்களுக்கு என் மேல் எவ்வளவு அன்பும், காதலும் இருக்கிறது என்பதை நான் பூரணமாக உணர்ந்து கொண்ட நாள் அது!" என நாத்தழுதழுக்கச் சொல்கிறாள். (உண்மையில் கதையில் இப்படி வராது! வேறே ஏதோ சொல்லுவாள். ஆனால் பொருள் இது தான்!) அந்த நீதிபதியும், "ஆமாம், அதற்கப்புறமாய்த் தான் நம் கல்யாணம் நடந்தது!" என்றார். அவளும், "ஆம், நன்றாகத் தெரியும்! பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அத்தனை நேரம் ஓர் முரடனுடன் ஒரே அறையில் இருந்திருக்கிறாள். என்னென்ன செய்தானோ என என் காதுபடவே பேசிக் கொண்டார்கள்! ஆனால் நீங்கள் எதையும் லட்சியம் செய்யவில்லை!" எனப் பெருமிதம் பொங்கச் சொன்னாள்.

அதற்கு நீதிபதி, "ஆமாம், ஆனால் கல்யாணம் செய்து கொண்டபின்னரும் எனக்கு என்னமோ உறுத்தலாகவே இருந்தது. ஆனால் நீ எனக்கு உண்மையாக இருந்தாய்! என்னை மிகவும் நேசித்தாய். நேசிக்கிறாய். என்றாலும் இன்று தான் எனக்கு மன ஆறுதல் கிடைத்தது! இனி உன்னை முழு மனதோடு நேசிக்க எனக்கும் எவ்விதத் தடையும் இல்லை!"

"என்ன சொல்கிறீர்கள்?" அதிர்ச்சியுடன் மனைவி கேட்கிறாள்.

"இன்று வழக்கில் குற்றவாளி யார் என நினைக்கிறாய்? அதே குற்றவாளி தான். உன்னைக் கட்டிப் போட்டுத் தொந்திரவு செய்தானோ அவனே தான். அவன் இப்போது செய்த ஓர் குற்றத்துக்காக அவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய நேர்ந்தது. அப்போது தான் தெரிய வந்தது அவன் சிறு வயதிலேயே ஆண் உறுப்பை விபத்தின் மூலம் இழக்க நேரிட்டது என்பதும் அவனுக்குச் சிற்றின்பம் என்பதோ, பெண் சுகம் என்பதோ தெரியவே தெரியாது என்பதும் புரிய வந்தது! அதைக் கேட்ட பின்னர், அந்தப் பரிசோதனையைப் படித்த பின்னர் தான் எனக்கு மனதில் ஆறுதல் வந்தது!" என்றார்.

கணவனைத் தழுவிய வண்ணம் படுத்திருந்த மனைவியின் கரங்கள் தளர்கின்றன.  திரும்பிப் படுக்கிறாள். கணவனும் மன நிம்மதியில் தூங்கி விடுகிறார். மறுநாள் இரவு படுக்கைக்கு வந்தவருக்கு அதிர்ச்சி! இணைந்திருந்த இரு கட்டில்களும் பிரிக்கப்பட்டிருந்தன. தனியாகப் படுத்திருந்த மனைவியைப் பார்த்து, "இது என்ன?" என்று கேட்கிறார். "விவாகரத்து! டைவர்ஸ்! நீங்கள் என்னிடம் கொண்ட நம்பிக்கையினால் என்னைத் திருமணம் செய்து கொண்டதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இல்லை! என்னைச் சந்தேகித்திருக்கிறீர்கள்! இப்படிப்பட்டவருடன் இத்தனை நாட்கள் வாழ்ந்ததை நினைத்து வேதனைப்படுகிறேன். வெளி உலகுக்குத் தான் நாம் இனி கணவன், மனைவி! உள்ளே நீங்கள் யாரோ, நான் யாரோ! இது தான் என்னுடைய தீர்ப்பு!" என்று சொல்லிவிட்டுப் படுத்து உறங்க ஆரம்பிக்கிறாள்.

நீதிபதி திகைத்து நிற்கிறார். தன் தவறும் புரிகிறது. நிரந்தரமாக மனைவியை இழந்து விட்டது தெரிந்து வேதனையில் ஆழ்கிறார்.

இது இரு வேறு பெண்கள் இருவேறு சூழ்நிலையில் தங்கள் கணவன் மார்களுக்குக் கொடுத்த தண்டனை! இதைக் குறித்த உங்கள் அனைவரின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.  இரு கதைகளுமே படித்து முப்பது ஆண்டுகளாவது ஆகி இருக்கும். கதையின் தன்மையாலும் அதன் முடிவாலும் இன்னமும் நினைவில் இருக்கிறது. சம்பவங்கள், சம்பாஷணைகள் நான் சொன்னபடி இருக்காது என்றாலும் கதைகளின் கரு நான் சொன்னபடி தான் அமைந்திருந்தது. 

37 comments:

  1. Replies
    1. என்ன ஆச்சு? ஒரே சிரிப்பு?

      Delete
  2. இத்தனை வருடங்கள் கழித்து நினைவில் இருக்கிறதே!

    இரண்டாம் கதையில் மனைவி தந்த தீர்ப்பு - பத்தாது! :(

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சில கதைகள்/நாவல்கள் அவற்றின் உத்தியினால் எழுத்தாளர்களின் திறமையான கற்பனை வளத்தினால் நம்மால் மறக்க முடிவதில்லை. அவற்றில் இம்மாதிரிக் கதைகளும் உண்டு. இரண்டாம் கதையில் மனைவி தந்த தீர்ப்புப்பத்தாதுனு தோணினாலும் குடும்பம், குழந்தைகள் என்று சொன்னதாக அரைகுறை நினைவு! :)

      Delete
  3. எல்லோரும் இப்படி இல்லை என்றாலும் சிலர் அப்படித் தானே இருக்காங்க! இதிலே அந்தத் தவறுக்கு ஒத்துழைக்கும் பெண்கள் பேரிலும் குற்றம் தான்! இன்னொருத்தியின் கணவன் என்பது தெரிந்தும் தவறு செய்கிறார்கள். மனசாட்சி உறுத்தாதா? கண நேர சுகத்துக்காக ஒரு குடும்பத்துக்கே துரோகம் இழைக்கலாமா? இத்தனைக்கும் ஏற்கெனவே திருமணம் ஆன பெண்மணி! :(//

    ஆமாம் கீதாக்கா மனசாட்சி எப்படி உறுத்தாமல் இருக்கும்? அப்படியென்றால் அவர்களது மனம் நல்ல விஷயங்களுக்குப் பட்டை தீட்டப்படவில்லை. பட்டை தீட்டப்பட்டு எது ஒழுக்கம், எது நெறி, எது தர்மம், எது நல்லது தீங்கு என்று பட்டை தீட்டப்பட்டிருந்தால், தவறு செய்யும் போது மனசாட்சி (அதுவும் மனம் தானே!!மூளையின் ஒரு பகுதிதானே!!!) உறுத்தி திருத்தும். தவறு செய்வது என்பது இயல்புதான். தவறு செய்யாதவர் இல்லையா என்ன ஆனால் அப்படிச் செய்யும் முன்னரேயே மனசாட்தி தலையில் குட்டும். செய்துவிட்டாலும் குத்தி எடுக்கும். பரிகாரம் தேடும்.

    ரா கி யின் கதை அருமை! யெஸ் இப்படி உண்மையில் நடந்தும் இருக்கிறது. டைவேர்ஸ் என்று வெளியில் தெரியாமல் வீட்டிலுள்ளேயே...இது இன்னும் பெரிய தண்டனை கணவனுக்கு. ஏனென்றால் சட்ட ரீதியாகப் பெறும் டைவேர்ஸ் கொஞ்ச நாள் தான் மனதில் இருக்கும். இது அப்படி அல்ல. வீட்டிலுள்ளேயே தினமும் பார்த்துப் பார்த்து....கடமைகள் ஒழுங்காக நடக்கும். ஆனால் வேறு எந்தவித தொடர்பும், சாதாரணமான பேச்சுக்களும் இல்லாமல் ஒரு விதமான தண்டனைதான்....ஆனால் இந்த தண்டனை பெண்ணுக்கும் தான் சுயதண்டனை என்றும் கூடச் சொல்லலாம்...காமாட்சி அம்மாவின் கதையிலும் அதே....பதிவு அருமை அக்கா!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா! பெண்ணுக்கு அக்னிப் பரிக்ஷை தான் இத்தகைய சம்பவங்கள்! வாழ்நாள் முழுவதும் அவள் உள்ளம் கொதிக்கும்! என்றாலும் நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை வேறு எப்படித் தண்டிப்பது? முதல் கதையில் ஒரு நியாயம் என்னன்னா காதலி ஏற்கெனவே இருந்தாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டி அவர் காத்திருக்கையில் குடும்ப நிலைமை கருதியோ அல்லது வேறு ஏதோ காரணமோ நினைவில் இல்லை. பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. ஆனாலும் காதலி வேறே கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்ததால் அவர் தொடர்பில் இருந்தார் என்று வரும். மனைவிக்கு உண்மை தெரிந்ததும் அவளிடம், "நீ இருக்கும் இடத்தில் இருக்க வேண்டியது அவள்! அவள் விட்டுக் கொடுத்ததால் தான் உனக்கு நான் கிடைச்சேன்!" என்று சொல்வதாகவும் காதலியை மதிச்சு நடக்கணும் என்றும் சொன்னதாக நினைவு. இதிலே ஓர் நியாயம் இருப்பதாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால் அந்தக் காதலி திருமணம் ஆன காதலனை விட்டு விலகி இருந்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஆனால் இப்போதும் கூட ஒரு சில பெண்கள் இப்படித் தான் நடந்து கொள்கிறார்கள் என்பது தான் இன்னமும் வேதனை! அடுத்தவர் கணவன் எனத் தெரிந்தும் மனம் பிறழ்கிற பெண்கள் அப்போது மட்டுமில்லாமல் இப்போதும் இருக்கின்றனர்.

      Delete
  4. இரண்டாவது கதையில் நீதிபதி தனது மனைவியிடம் இந்த விடயங்களை சொல்லியது மிகப்பெரிய தவறு.

    எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் உள்ளவர்
    அன்று எப்படி பெருந்தன்மையோடு மணந்து கொண்டார் ?

    தீர்ப்புக்கு ஏதோவொரு காரணத்தை சொல்லி சமாளித்து இருக்கலாம். (அவர்) பொய் சொல்ல மாட்டார் என்று (ஆசிரியர்) பொய் சொல்லிக்கூடாது.

    என்னைப் பொருத்தவரை இனிவரும் காலங்களில் ஆண் பெண் இருபாலருமே திருமணத்திற்கு முன்பே கடந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் இதை அவர்களும் ஒப்புக்கொள்வார்கள்.

    உடலால் மட்டுமல்ல மனதாலும்கூட கற்பை இழக்கலாம்.
    இதை சரி செய்ய இயலாது காரணம் சமூக கட்டமைப்பை குழைத்து விட்டோம்.

    பெற்றுக்கொண்ட எதையும் இழக்க நாம் தயாரில்லை சாதாரண வாட்ஸ்-அப் இதை இழக்க நாம் தயாரா ?

    நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் செல் வழி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இரண்டாம் கதையின் நீதிபதி மனைவியிடம் பகிர்ந்து கொண்டதற்கான வலுவான காரணம் ஏதோ படிச்ச நினைவு! ஞாபகம் வரலை! சமாளிச்சிருக்கலாம் தான்! ஆனாலும் அவர் மனசாட்சி உறுத்தத் தான் செய்யும்! மனைவியைக் கீழ்த்தரமாக நினைச்சுட்டார்! இதை அப்போவே கேட்டிருக்கலாமே! சமீபத்தில் ஒரு சீரியலில் திருமணம் ஆகி இரண்டே நாட்கள் ஆன மனைவியை முதலிரவு கூட நடக்கும் முன்னரே கணவன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறான். மனைவி கன்னியா எனத் தெரிந்து கொள்ள! அவளுக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு இதைச் செய்கிறான். கிட்டத்தட்ட அந்தச் சமயம் தான் காமாட்சி அம்மா கதையும் வந்தது! ஒரு வாரமாக இதை நினைத்து மன உளைச்சல்! :)))) பெண்களை ஏமாற்றும் ஆண்களை என்ன செய்வது? :)))))

      Delete
    2. ஆஹா நான் தான் தாமதமோ?.. காமாட்சி அம்மாவின் கதை இவ்ளோ தூரம் தாக்கத்தை உண்டுபண்ணி விட்டதே.... லேட்டா வந்ததால அதிகம் பேசாமல் போகிறேன், பெண்ணின் கன்னித்தன்மையை சோதிக்கிறாராமோ? அதுவும் மயக்க மருந்து கொடுத்து... அப்படியே கன்னா பின்னா எனச் சூட் பண்ணிடோணும்போல கெட்ட கோபமா வருது.... அது எல்லாம் இக்காலத்துக்கு ஒத்துவராது... ஏனெனில் இக்காலப் பெண்கள் கடின வேலை செய்கிறார்கள் சைக்கிள் ஓடுகிறார்கள்... இப்படிப் பல வேலைகள் செய்வதால்.. மருத்துவ ரீதியாக இச்சோதனை எல்லோருக்கும் சாத்தியமில்லை எனச் சொல்லப்படுது... வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை..

      Delete
    3. ஆமாம், அதிரா, வாங்க, இப்போத் தான் உங்க கருத்தைப் பார்க்கிறேன். நீங்க சொல்வது சரியே! ஆனால் அந்த மருத்துவப் பரிசோதனை வேறே~ எனக்கும் வெளிப்படையாகச் சொல்ல முடியலை! :(

      Delete
  5. எப்போது படித்திருந்தாலும் தாக்கத்தை கொடுத்த கரு மறக்காது என்ன சரியான வசனங்கள் வேண்டுமானால் மறக்கக்கூடும் இரண்டு கதையும் அந்த கால சூழ்நிலையில் மிகவும் சரி கடைபிடிப்பது கஷ்டமானது வெளி வாழ்வில் நடிக்கணும் சில கதைகளில் எனக்கும் அப்படித்தான் தோன்றும் ஆர்ம்பிக்கும் விதம் வேறொன்றை உணர்த்துவது போலவும் பின்னர் அதன் நடை வேறொன்றை நோக்கியும் போகும் முதல் கதை நிர்பந்தத்திற்கு ஆளாகிறது பெண்ணின் நிலைமை இரண்டாவது மன காயத்தினால் வெறுப்பு நிலையால் இங்கும் காலம் கடந்துவிட்டது சமூக விலங்கில் மாட்டி கொண்டவர்கள் அப்போது
    மனசாட்சி உறுத்தாதா? உறுத்தும் கண்டிப்பாய் அதை கடந்துவிட்டு போகிறார்கள் தன் சுயலாபத்திற்காக

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, கதை தாக்கத்தைக் கொடுக்கத் தான் செய்தது. நீங்கள் சொல்வது சரியே! அப்போது மட்டுமில்லாமல் இப்போதும் பெண்கள் பல சமயங்களில் நிர்கதியாக இருக்க நேரிடுகிறது. எனக்குத் தெரிந்து இரு குடும்பங்களில் மனைவிக்கு உதவி செய்வதற்காக உள்ளே புகுந்த பெண்கள் அந்தக் கணவனையே திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை விவாகரத்து செய்த நிகழ்வுகள் இருக்கின்றன! :( இத்தனைக்கும் முதல் மனைவி மூலம் குழந்தைகள் இருக்கின்றன.

      Delete
  6. நீதிபதி தன்னுடைய குணக்குறைவால் தான் அனுபவித்த தண்டனையை, நேர்மையான மனைவியிடம் உண்மையைச் சொல்லி, அவளுக்கும் ஏன் தரவேண்டும்? எப்போதுமே மௌனமாக இருப்பது நம் குணக்குறையை மற்றவர்களுக்குக் காட்டித்தராது.

    நம்பிக்கையைச் சீர்குலைப்பது, திருமணம் என்ற பந்தத்துக்குச் செய்யும் துரோகம் இல்லையா? அதிலும் மனைவி அதனைப் பெரிதுபடுத்தாமல், தண்டனையை தாங்கள் இருவரும் மட்டும் அறிந்திருக்கும்படிச் செய்வது, கணவனுக்கு இரட்டிப்புப் பாவம்தான்.

    இப்படி கதைகள், படித்த சம்பவங்கள் என்று இவ்வளவு STORE செய்துவைத்திருக்கிறீர்களே.. புதிய சிந்தனைக்கு இடம் இருக்கா இல்லையா? :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. மேலே கில்லர்ஜிக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க! ஏதோ வலுவான காரணம் எழுதி இருந்த நினைவு! ரா.கி.ர. ஆச்சே அப்படி எல்லாம் கேள்வி கேட்கும்படி விட்டிருப்பாரா? எனக்குத் தான் நினைவில் இல்லை! :)

      ஹிஹி, படித்த சம்பவங்கள், கதைகள் மட்டுமா சின்ன வயசு சம்பவங்கள் கூட நினைப்பில் இருக்கு! போன ஜன்மத்து நினைவெல்லாம் கூட இருக்குனு ரங்க்ஸ் சொல்லிட்டிருக்கார்! :) அப்புறமா புதிய சிந்தனைக்கு இடம் இருக்கிறதாலே தானே சென்னை மழை, மெர்சல் படம், கந்துவட்டி பத்தி எல்லாம் சொல்ல முடியுது! :)))))

      Delete
  7. நல்ல அலசல் ..

    எனக்கும் காமாட்சி அம்மா கதையின் தாக்கம் இன்றும் உள்ளது...அவர் சொன்ன விதமும்..காட்சி அமைப்பும் அவ்வாறு...


    இங்கு நீங்க பகிர்ந்த கதைகளுள் ...முதல் ஆண் அந்த பெண் உடன் பல வருடங்களாக தொடர்பில் இருப்பது என்பது மிக மோசமான செயல்...சமுதாயத்திற்காக என கூறி ஒரு நாடக பாணி வாழ்வு...


    இரண்டாவது கதையில்..அவரின் உள்ளத்தில் கடைசி வரை உறுத்தல் என்பது வேதனையான விசயமே...

    கற்பு என்பது உடல் சார்ந்த்தது அல்ல..மனம் சார்ந்த்தது என்று ..அன்றே அவ்வை கூறியுள்ளார்...அதை இன்னுமே உணராமல்....கற்பு கற்பு என்று உடல் சார்ந்த மொழியில் கூறுவது தான் வேதனை தருகிறது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா! ஆமாம் அவர் சொன்ன விதம் மனதில் பதியும்படி இருந்தது. முதல் கதையில் அந்த ஆணுக்குத் தான் காதலித்த பெண்ணை விடமுடியலை போல! இரண்டாம் கதையில் நீதிபதியே ஆனாலும் சறுக்கிவிடுவார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்.

      Delete
  8. காமாட்சி அம்மா கதை ரொம்பத்தான் மனதைப் பாதித்து விட்டது போல! டைவர்ஸ் கதை நானும் ரசித்துப் படித்திருக்கிறேன். ஜெ..யின் ஓவியங்கள் (ராமு அல்ல) நினைவில் இருக்கிறது.நாயகி வசு பணக்காரி, நாயகன் கோபி ஏழை. என் பைண்டிங் கலெக்ஷனில் எங்கோ இருக்கிறது. தேடமுடியாது இப்போது!

    இரண்டாவது கதை படித்ததில்லை. ஆனால் ஒரு சந்தேகம். அந்தச் சம்பவம் நடக்கும்வரை அவர்களுக்குள் அறிமுகம் இல்லை என்று தெரிகிறது. அப்புறம் ஏன் அவளை அவன் திருமணம் செய்யவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், எனக்கென்னமோ ராமுனு தான் நினைவு. புத்தகம் கிடைச்சா எடுத்துப் பார்த்துட்டுச் சொல்லுங்க! :) கொஞ்சம் ஜெ.ஸ்டைலில் வரைஞ்சிருப்பார்! இரண்டாவது கதையிலே அவங்க ரெண்டு பேரும் ஏற்கெனவே அறிமுகம்னு தான் நினைக்கிறேன். கதைக் கரு மட்டும் மனசிலே தங்கி இருக்கு! முழுக்கதையும் இல்லை! :)

      Delete
    2. ஓவியம் ஜெ என்று 100 சதவிகிதம் தெரியும். வசுவின் கையில் வாட்சுடன் வாணலியில் ஏதோ கிண்டுவாள். கோபி அருகில் நிற்பான். இன்னும் சில ஓவியங்களும் நினைவில் இருக்கின்றன. அப்பாவின் பழைய காதலி படம் கூட லேசாய் நினைவில்.

      Delete
    3. 'இன்னும் ஒரு பெண்' என்றொரு சுஜாதா கதை உண்டு. நாயகி பெயர் கூட சீதாதான்! இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாய் மனைவியிடமே சொல்வார் நாயகன். அப்புறம் பத்தினியின் ஆக்ஷன்தான் கதை!

      Delete
    4. சிவசங்கரி எழுதின ஓர் கதை உண்டு! அதைத் தொலைக்காட்சித் தொடராகக் கூட எடுத்தார்கள். முதல் மனைவியாக நல்லெண்ணெய் சித்ராவும், இரண்டாம் மனைவியாக நடிகை ரேகாவும் நடித்தார்கள். கணவனாக நடித்தவர் யார்னு நினைவில் இல்லை. :)

      Delete
  9. கதை என்பது ஒரு கதாசிரியரின் கற்பனை அது பற்றிக் கூறல் எனக்குச் சரியாகப் படவில்லைசரி தவறு என்பதெல்லாம் அவரவர் கண்ணோட்டம் நாம் விரும்புகிறோம் அல்லது விரும்பவில்லை என்பது வேறு விஷயம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், உங்களோட கருத்துக்கு நன்றி.

      Delete

  10. சிறந்த குடும்பக் கதைகள்
    அருமையான நடை

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்.

      Delete
  11. அன்பு கீதா. வாழ்க்கை முழுவதும் எத்தனை கேள்விப்படுகிறொம்.
    சகித்துக் கொள்ள பெண் தான் தேர்ந்தெடுக்கப் படுகிறாள்.
    எனக்குத் தெரிந்தே இரண்டு குடும்பங்களில் இது நடந்திருக்கிறது.
    மனம் நொந்த அந்தப் பெண் தன்னையே மாய்த்துக் கொண்டாள்.
    1983 என்று நினைக்கிறேன். படித்தவள் தான். கணவனின் மேல்
    அத்தனை அன்பு. துரோகம் தாங்க முடியவில்லை.
    கதைகள் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. @வல்லி, பெண் சகித்துக் கொள்கிறாள் என ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம் அதே பெண் தானே இன்னொரு பெண்ணுக்குப் போட்டியாக எதிரியாக முளைக்கிறாள்! என்னனு சொல்றது! சமீப காலங்களிலேயே அந்த மாதிரி நிறையப் பார்த்தாச்சு! :(

      Delete
  12. இதுபோன்ற கதைகளைப் படித்து நெடுநாள் ஆகிவிட்டது. கதைக்கருவின் நிலையிலான மாற்றம் வாசிப்பு ஆர்வத்தை மிகுவித்தது.

    ReplyDelete
    Replies
    1. இந்தக் கதைகள் எல்லாம் இணையத்தில் கிடைக்குமா எனத் தெரியவில்லை ஐயா! யாரிடமாவது இருந்தால் உண்டு!

      Delete
  13. அன்பு கீதாம்மா!.. மிக நல்ல அலசல்.. டைவர்ஸ், அப்பாவின் பைண்டிங் கலெக்ஷனில் படித்திருக்கிறேன்.. இப்பவும் இதெல்லாம் தொடர்கதை தான் என்றாலும், இந்த விஷயத்தில் டிவி சீரியல்களின் பங்கை சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது..கிட்டத்தட்ட, முறை தவறிய உறவுகள் இல்லாத கதையே இல்லையெனலாம். இதெல்லாம் பார்த்து, பார்த்து, இதெல்லாம் சகஜம் என்பது போன்ற மரக்கட்டைத் தனம் ஊறி விட்டதோ என்றும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இம்மாதிரி நெடுந்தொடர்கள் மிகச் சமீப காலத்து வரவுகளே! சுமார் பத்து அல்லது பதினைந்து வருஷங்களுக்குள்ளாக இத்தகைய மாற்றங்கள்! :( இப்போ அது எங்கேயோ போய்விட்டது. தொடர்கள் மூலம் கொலை, கொள்ளை, திருட்டுத் தனம், முறைதவறிய உறவுகள் எனச் சொல்லியே கொடுப்பதாகத் தோன்றுகிறது! :(

      Delete
  14. டைவர்ஸ் கதைக்கு படம் போட்டது ஜெயராஜ்தான். 100% உறுதியாக தெரியும். வசுவை எவ்வளவு அழகாக போட்டிருக்கிறார் என்று நாங்கள் வியந்து கொண்டாடுவோம். அதே போல மோ.மு.வ வுக்கு மாயா படம். அதில் அவர் வரையும் மேனகாவின் கணவரை பிடிக்கும்.

    கதாநாயகன் பெயர் கோபியா? முரளியா? அவன் திருச்சி நேஷனல் காலேஜில் படித்ததாக வரும்.

    ரா.கி.ரெங்கராஜன் கதை படித்த ஞாபகம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! மோ.மு.வ. படிக்கலை~அப்போ நான் அறிவு ஜீவி லெவலுக்குப் போயிட்டதாலே மணியன் கதைகள் எல்லாம் படிக்கிறதை நிறுத்திட்டேன்! ஹிஹிஹி

      Delete
    2. பி.வி.ஆர். கதை படிக்கும் அறிவு ஜீவி..! ஹா ஹா ஹா!

      Delete
    3. ஹெஹெஹெஹெ, பிவிஆர் ஓர் விதி விலக்கு இல்லையோ? அவர் நாவல்களில் ஓர் உள்ளார்ந்த பொருள் இருக்கும்! மணக்கோலங்கள் படிச்சிருக்கீங்களோ? கல்கி வெள்ளிவிழாவில் மூணாம் பரிசு கிடைச்சது! என்னைக் கேட்டால் இரண்டாம் பரிசு கொடுத்திருக்கணும்னு சொல்வேன்! போகட்டும்! ஒரு கட்டத்துக்கு அப்புறமா மணியன் அலுத்துப் போயிட்டார். அதோடு அப்போ சாவி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், பி.எஸ்.ராமையா, ஆர்வி, தி.ஜ.ர.. சி.சு. செல்லப்பானு தேடிப் பிடிச்சுப் போய்ப் படிச்சுட்டு இருந்தேன்! :)

      Delete
  15. 'டைவர்ஸ்' தொடர் கதை குமுதத்தில் தொடராக வந்தது. நான் அப்போது பள்ளி இறுதி வகுப்பா அல்லது பி.யூ.சி. யா என்று நினைவில் இல்லை. அதே சமயத்தில்தான் விகடனில் மோகம் முப்பது வருஷம் கதையும் தொடராக வந்தது. நாங்கள் இந்த தொடரையெல்லாம் படிப்பதற்காக எங்கள் அத்தை கோபித்துக் கொண்டது கூட நினைவில் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. டைவர்ஸ் மட்டுமில்லை, பல கதைகள் படிக்க அப்போத் தடா விதிச்சிருக்காங்க! குமுதமே நான் எங்க பெரியப்பா வீட்டிலே இல்லைனா தாத்தா(அம்மாவோட அப்பா) வீட்டிலே தான் படிப்பேன்! என் அப்பாவுக்குத் தெரிஞ்சாக் கிழிச்சுப் போட்டுடுவார்! ஓ.சி. வாங்கிப் படிக்கிறதைக் கிழிச்சுப் போட்டுட்டா அப்புறமா அவங்களுக்கு என்ன பதில் சொல்றது!:)

      Delete