எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 13, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா! பயணம் 2

ரொம்ப முக்கியமான அவசியம் ஆன ஒரு விஷயத்தை நேற்றுப் பகிர மறந்து விட்டேன். கீழத் திருப்பதியில் ரயிலில் இருந்து இறங்கியதும் வெளியே செல்லவேண்டி படிக்கட்டுகளை நோக்கி நடந்தபோது கூட வந்த சிலர் படிக்கட்டுகளுக்குக் கொஞ்சம் முன்னாடியே லிஃப்ட் இருப்பதாகவும் அதில் செல்லலாம் என்றும் கூறினார். என்ன லிஃப்ட் இருந்து என்ன பயன்? இருக்கும் கூட்டமெல்லாம் அங்கே தானே செல்லும் என நினைத்துக் கொண்டே எதுக்கும் பார்க்கலாம் என்று போனோம். லிஃப்ட் இயக்குநரோடு அங்கே காத்திருந்தது. சின்ன வயசுக்காரங்க வந்தாலும் விரட்டி விட்டுடறாங்க. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமே லிஃப்ட். ஆகவே நாங்கள் லிஃப்டின் அருகே செல்லும் வரை காத்திருந்து எங்களை ஏற்றிக் கொண்டு மேலே கொண்டு விட்டதோடு அல்லாமல் கீழே இறங்கி முதல் நடைமேடைக்குச் செல்லும் லிஃப்ட் கொஞ்ச தூரத்தில் இருக்குனும் சொன்னாங்க.

கூட வந்தவங்க கொஞ்சம் வேக நடை நடந்ததால் அவங்க கிட்டேச் சொல்லி லிஃப்டைக் காத்திருக்கச் சொல்லிட்டு நாங்களும் சென்று லிஃப்டில் ஏறினோம். கீழே முதல் நடைமேடையில் வெளியேறும் வாசலுக்குக் கொஞ்சம் அருகே கொண்டு விட்டது. வெளியே வந்து நண்பருக்குத் தொலைபேசியில் முயன்றுவிட்டுப் பின்னர் பீமவிலாஸ் ஓட்டலில் லேசாக ஆகாரம் செய்து கொண்டு பின்னர் தான் அலைபேசியைச் சரி செய்து கொண்டு நண்பருடன் தொடர்பு கொண்டு மேலே வந்து வியாசராஜ மடத்தில் தங்கினோம். இதை இங்கே இப்போப் பகிரக் காரணமே நம்ம தெற்கு ரயில்வேயும் தாம்பரம், மாம்பலம், எழும்பூர் போன்ற இடங்களில் இது போன்ற லிஃப்டை அமைக்கலாம் என்னும் கருத்தைத் தெரிவிக்கத் தான். அதிலும் மாம்பலத்தில் இறங்கினாலோ, தாம்பரத்தில் இறங்கினாலோ ஏ.சி. பெட்டியிலிருந்து நடைமேடை முழுவதும் (சுமார் ஒன்றரை கிமீ) நடந்து வந்து பின்னர் படிகளில் பையையும் தூக்கிக் கொண்டு ஏறணும். போர்ட்டர் வைக்கலாம் எனில் அவங்க வேகத்துக்கு நம்மால் நடக்க முடியறதில்லை. அதோடு அவங்க கேட்பதும் கிட்டத்தட்ட நாம் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர ஆகும் பணம்!

கொஞ்சம் கருணை காட்டித் தெற்கு ரயில்வே முக்கிய ரயில் நிலையங்களில் இம்மாதிரி லிஃப்ட் வசதியைப் பயணிகளுக்கு முக்கியமாக மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் செய்து கொடுக்கலாம். எழும்பூரில் நடமாடும் படிக்கட்டுகள்(எஸ்கலேட்டர்) இருக்கின்றன தான்! ஆனால் அதில் எல்லோராலும் ஏற முடியவில்லை. தாம்பரத்திலும் இருக்கோ? என்றாலும் அதில் மாட்டிக் கொண்டு ஏறவோ இறங்கவோ முடியாமல் தவித்தவர்களின் அனுபவங்களைக் கேட்டால் அதில் செல்லத் தயக்கம் தான் ஏற்படுகிறது.
***************************************
வியாசராஜ மடத்தில் காலை நாலரை ஆனதும் ஊழியரைக் கூப்பிட்டுக் காஃபி வாங்கி வந்து கொடுத்த பின்னர் வெந்நீர் கொடுக்கும்படி சொன்னோம். அவரும் கொடுத்தார். பின்னர் மூத்த குடிமக்களுக்கான டோக்கன் கொடுக்கும் இடத்திற்கு ஐந்தரைக்குள் செல்லும்படி வற்புறுத்தினார். சரினு நாங்களும் குளித்து முடித்த பின்னர் கிளம்பிவிட்டோம். செல்ஃபோன் கட்டாயமாக எடுத்துச் செல்ல முடியாது என்பதோடு மேலே வந்ததிலிருந்து சிக்னல் கிடைக்காமல் பிஎஸ் என் எல் சுத்தமாக வேலை செய்யவும் இல்லை. ஆகவே ஊழியர் பிடித்துக் கொடுத்த டாக்சியில் சென்று டோக்கன் கொடுக்கும் இடத்தை அடைந்தோம். அங்கே சென்றால் எங்களுக்கு முன்னாடியே சுமார் 40 பேர்கள் இருந்தனர். டோக்கன் கொடுக்கும் இடம் ஒரு அஸ்பெஸ்டாஸ் ஷெட்டால் மூடப்பட்டிருந்தது. நான்கு கவுன்டர்கள் இருந்தன. வரிசையில் நிற்கக் கம்பி கட்டி இருந்தாலும் ஒரு சமயத்தில் சுமார் 30 பேர்களே நிற்கலாம். விமான நிலையங்களில் இமிக்ரேஷனுக்குக் காத்திருப்பது போல் காத்திருந்து இரண்டு இரண்டு பேராகவே செல்லலாம்.  அந்த ஷெட்டில் உட்கார நாற்காலிகள் இல்லை என்பதோடு காத்திருப்பவர்களும் ஷெட்டிற்கு வெளியே தான் காத்திருக்கணும். ஷெட் திறக்க ஆறரை மணி ஆகுமாம். அதுவரை வெளியே இருக்கும் சின்னக் கைப்பிடிச் சுவரில் தான் அமரணும். அதுவும் இடம் இருக்கும்வரை தான் கிடைக்கும். இடம் இல்லை எனில் வெளியே தான் நிற்கணும். எங்க அதிர்ஷ்டம் கொஞ்சம் இடம் கிடைக்கவே உட்கார்ந்து கொண்டோம்.

எவ்வளவோ செய்யும் சந்திரபாபு நாயுடு இதையும் கவனித்து எல்லோரும் அமரும்படி நாற்காலிகள் போடச் செய்யலாம். வரிசைக்கிரமமாக வருவதற்குரிய டோக்கனையும் கொடுத்துவிட்டால் மூத்த குடிமக்கள் வரிசையாகவும் வருவார்கள். மூத்த குடிமக்கள் அமைதியாகவே வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு உதவியாக என்னும் பெயரில் வரும் இளைஞர்கள்/வயது குறைந்தவர்கள் கூட்டம் தான் கொஞ்சம் தொந்திரவு கொடுக்கின்றனர். (இது குறித்துப் பின்னர்) ஆனால் ஷெட்டில் வரிசையாக நிற்பதில் எவ்விதப் பிரச்னையும் இல்லை. சரியாகக் காலை ஆறரை மணிக்கு தேவஸ்தான ஊழியர்கள் இருவர் வந்து அனைவருக்கும் காஃபி கொடுத்தார்கள்.  நல்ல சூடாகவும் நன்றாகவுமே இருந்த அந்தக் காஃபி குளிரில் வெளியே நின்றுகொண்டிருந்தவர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது. ஆறே முக்காலுக்கு ஷெட் திறந்து முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு ஊழியர்கள் நான்கு பேர் மூத்த குடிமக்களுக்கான டோக்கன்களைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.படங்களுக்கு நன்றி கூகிளார்

லட்டுக்கான டோக்கனையுமே இங்கேயே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்கள். ஒருத்தருக்கு நான்கு லட்டு என்றும் நான்குக்கும் சேர்த்து 70 ரூ என்றும் சொன்னார்கள். நாங்களும் எட்டு லட்டுக்கான பணம் கொடுத்து லட்டுகளுக்கும் சேர்த்து டோக்கன் வாங்கிக் கொண்டோம். டோக்கன் வாங்க ஆதார் கார்டு முக்கியத் தேவை. கணினியில் பொருத்தி இருக்கும் ஸ்கானிங் காமிரா மூலம் ஆதார் எண்ணைப் போட்டு நம்முடைய கண்களைச் சோதனை செய்து திருப்தி அடைந்தால் மட்டுமே டோக்கன். சிலருக்கு ரேகை சோதனையும் உண்டு. எங்களைக் காமிரா மூலம் பார்த்துவிட்டே டோக்கன் கொடுத்துவிட்டனர்.  ஒரு அம்மா ஏற்கெனவே இருமுறை (எப்படியோ) வந்து விட்டு மூன்றாம் முறையும் வர அதைக் கண்டு பிடித்து அவரை ஓரம் கட்ட, அவர் கத்திக் கொண்டே இருந்தார். டோக்கன் பெற்றவர்கள் அங்கே வந்த தேவஸ்தான இலவசச் சிற்றுந்தில் ஏறிக் கொண்டு தரிசனம் செய்யக் காத்திருக்க வேண்டிய இடத்தை நோக்கிச் சென்றார்கள். சிற்றுந்தில் சுமார் 20 பேர் அமர்ந்த வண்ணம் பயணிக்கலாம். ஆனால் சிற்றுந்து ஓட்டுநர்களும் சரி, மக்களும் சரி, அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறவே நாங்க செய்வதறியாமல் யோசித்தோம்.

அதற்குள்ளாக அங்கே இரண்டு பாட்டரி கார் வர அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் எனப் போட்டிருக்கவே மீண்டும் யோசித்தோம். சிலர் போய் ஒரு காரில் அமரவே அந்தக் காரோட்டியும் ஓட்டிக் கொண்டு சென்றதோடு எங்களையும் இன்னொரு காரில் அமரச் சொன்னார். எங்கள் கார் ஓட்டி வரக் கொஞ்சம் தாமதம் ஆனது. வந்ததும் அமர்ந்திருந்த ரங்க்ஸைப் பின்னால் போய் உட்காரச் சொல்ல, நான் கொஞ்சம் கலங்கினேன். ஆனால் பின்னால் இருந்தவர் அவருக்கு இடம் கொடுத்தார்.  எங்கள் காரும் கிளம்பியது. நாங்களும் இன்னும் சிலரும் முட்டாள் தனமாகச் செருப்பை அணிந்து கொண்டு வந்து விட்டோம். (ஆனால் அது எவ்வளவு புத்திசாலித் தனம் என்பது திரும்பும்போது தான் புரிந்தது.) ஆகவே செருப்புக்களை எங்கே விடுவது எனக் குழம்பியபோது ஓட்டுநர் எங்களை இறக்கி விட்ட இடத்தில் அங்கேயே மர நிழலில் விடச் சொன்னார். செருப்புக்கள் அணிந்து சென்றவர்கள் அங்கேயே விட்டுவிட்டு உள்ளே தரிசனத்துக்குச் செல்ல வேண்டிய பாதையில் சென்றோம். உள்ளே முதல் கூண்டு வந்தது. எங்களுக்கு முன்னால் 100,150 பேர் வந்து காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை உணவோடு காஃபியும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

நாங்களும் காலை உணவு வாங்கிக் கொண்டோம். பொங்கல் தான் காலை உணவு. சுமாராக இருந்தாலும் நல்ல சூடாக இருந்தது. எல்லோருக்கும் எத்தனை முறை கேட்டாலும் கொடுத்தார்கள். முதலில் கொடுத்ததே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஏற்கெனவே இரண்டு காஃபி சாப்பிட்டு விட்டதால் மீண்டும் காஃபி வேண்டாம், ஒன்பது மணிக்குப் பால் கொடுத்தால் வாங்கிக்கலாம் என்று முடிவு செய்தோம். அந்தக் கூண்டில் சென்று நாங்கள் அமரும்போது காலை மணி ஏழரை ஆகி இருந்தது. அங்கேயே கழிவறை, குடிநீர் வசதி எல்லாம் இருந்தது. தண்ணீர் அலறிக் கொண்டிருந்தது. நாங்கள் அமர்ந்திருந்தது வெளிப்பிரகாரத்தில் சந்நிதியை ஒட்டிய ஒரு கூண்டு. எங்களுக்குப் பின்னால் உயரத்தில் இன்னொரு கூண்டும், அதன் பக்கம் இன்னொரு கூண்டும் இருந்தது. மெல்ல மெல்ல எல்லாக் கூண்டுகளும் நிரம்பிக் கொண்டிருந்தன. தாமதமா வந்த பலரும் பொங்கல் வாங்கும் சாக்கில் முன்னால் நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து அங்கேயே நுழைவாயில் அருகே இருப்பதைப் பார்த்ததும் அங்கேயே தங்கி விட்டனர். இப்படிச் சுமார் நூறு பேருக்கு மேலே அங்கே வந்து விட்டனர்.

ஒன்பது மணிக்குப் பால் கொடுக்க ஆரம்பித்ததும் இளைஞர் கூட்டம் எல்லாம் அங்கே சென்று ஒரே நெரிசல். அதிலும் ஒரு குடும்பத்தில் மாமனார், மாமியார் வந்தால் அவங்களுக்கு உதவியாகப் பெண், மாப்பிள்ளை அல்லது பிள்ளை, மருமகள் என்று வந்திருந்ததால் மொத்தக் குடும்பமே குழந்தைகளோடு வந்திருந்தனர். ஒவ்வொருத்தருக்கும் இரண்டு குழந்தைகள் என்ற கணக்கில் இருந்ததால் பால் வாங்க அடிதடி, கூட்ட நெரிசல், நான் போகவே இல்லை. பாலே வேண்டாம்னு விட்டுட்டேன். சரியாக ஒன்பதே முக்காலுக்குக் கூண்டைத் திறந்தார்கள். உடனே வந்தது பாருங்க ஒரு கூட்டம். பின்னால் இருந்த சிறுவயதுக்காரர்கள் எல்லாம் அடித்துப் பிடித்துக் கொண்டு நாற்காலிகளின் மேல் ஏறி அதைத் தாண்டிக் கொண்டு முண்டி அடித்து முன்னே சென்றார்கள். இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்தாலும் எங்களால் போக முடியலை. ஊழியர்கள் முதல் கூண்டைத் திறந்து அனைவரையும் அனுப்பிய பின்னர் இரண்டாம் கூண்டைத் திறந்திருக்கணும். ஆனால் இரண்டாம் கூண்டிலிருந்தே கழிவறை செல்லவோ, குடிநீருக்குச் செல்லவோ முடியும் என்பதால் அது திறந்தே இருந்தது. வேறு வழியில்லை. ஆகவே எல்லோரும் வர வசதியாகி விட்டது. நடுவில் உள்ள கூண்டுக்காரர்களும் ஏறிக் குதித்து முன்னேற நாங்கள் கொஞ்சம் பின் தங்கியே சென்றோம்.

மூத்தகுடிமக்களிடம் கடுமை காட்டக் கூடாது என்றும், கையைப் பிடித்துத் தள்ளவோ, ஜரிகண்டி சொல்லவோ கூடாது என்னும் கடுமையான கட்டளை இருப்பதால் யாரும் எதுவும் சொல்லவில்லை. ஆகவே கூட்டத்தினருக்கு இது வசதியாகப் போகிறது. என்றாலும் கொஞ்ச தூரம் நடந்ததுமே சந்நிதி வந்து விடுவதால் ஒண்ணும் பிரச்னை இல்லை. என்ன ஒரு பத்து நிமிடம் போல் தாமதமாக தரிசனம் செய்வோம். அவ்வளவு தான். சந்நிதிக்கு அருகே வரும்போது ஷிர்டியில் இருப்பது போல் மூன்று வரிசைகளாக விடுகின்றனர். அதோடு எங்குமே ஏறவோ இறங்கவோ படிகளே கிடையாது என்பதும் என் போன்றோருக்கு ஒரு சௌகரியம். எல்லாம் சாய்வான பாதைகளே! ஆகவே ஏறவோ, இறங்கவோ கஷ்டப்படவே வேண்டாம்.  சந்நிதிக்குச் செல்ல வரிசைகளில் காவலர்கள் பிரித்து விடுகின்றனர். என்னை நடுவரிசைக்குச் செல்லும்படி பெண் காவலர் அனுப்ப நம்ம ரங்க்ஸ் இங்கே வலப்பக்கம் வா, அப்போத் தான் பெருமாள் தெரிவார் என்று சொல்லிவிட்டார். ஆனால் நடுவில் போனால் தான் பெருமாளுக்கு நேரே நின்று பார்க்க முடியும். வலப்பக்கமோ, இடப்பக்கமோ போனாலும் பெருமாள் தெரிந்தாலும் நடுவில் நின்று பார்ப்பது போல் வராது!

முன்னெல்லாம் உள்ளே அர்த்த மண்டபத்துக்குள்ளே கூட்டமாய்ப் போய் தரிசனம் செய்ய வேண்டி இருந்தது. இப்போ துவார பாலகர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே (மதுரை மீனாக்ஷியை தரிசனம் செய்வது போல்) பார்க்க வேண்டும். ஆனாலும் பின்னால் சாய்வுப்  பாதை உயரமாக இருப்பதால் நாம் தூரத்திலிருந்து போகும்போதே தரிசனம் செய்து கொண்டே போகலாம். சாய்வுப் பாதை போகப் போகக் கீழே இறங்குவதால் யாரும் மறைப்பார்கள் என்றெல்லாம் இல்லை. அதோடு நின்று ஒரிரு வினாடிகள் பார்ப்பதற்கும் காவலர்கள் மறுப்புச் சொல்வதில்லை. கையைப் பிடித்துத் தள்ளுவதில்லை. கடைசி முறையாகப் பத்து வருடங்கள் முன்னே போனபோது காவலர்கள் பிடித்துத் தள்ளியதில் தான் சந்நிதிக்கு உள்ளேயே விழுந்தேன். இப்போ அதெல்லாம் இல்லை. பணிவாக வேண்டிக் கொள்கின்றனர். 

44 comments:

 1. துளசி: இப்போது வயதானவர்களுக்குத் தனி ஏற்பாடுகள் என்று தெரிந்து கொண்டோம். அது உங்களுக்கு வசதியாகவே இருந்திருக்கும். நல்லபடியாகத் தரிசனம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி சகோதரி.

  கீதா: சீனியர்களுக்கு எந்த இடத்திலிருந்து விடுகிறார்கள் அக்கா?

  நாங்கள் முன்பு சென்றிருந்த போதே அங்கு உணவு, காபி எல்லாம் ஃப்ரீயாகக் கொடுத்தார்கள். நிறைய வசதிகள் செய்து கொண்டேதான் போகிறார்கள். எனக்கு திருப்பதி மலையில் உள்ள பிற இடங்களுக்குச் செல்ல ஆசைப்பட்டதால் அப்போது குடும்பத்தினரில் சிலரும் ஆர்வம் காட்ட நாங்கள்மட்டும் மலையில் உள்ள ஜபாலி தீர்த்தம் கீழே கபில தீர்த்தம் (சிவன் கோயில்...மலை நீர் சிறிய அருவி போன்று குளத்தில் சேரும்...) போன்றவை சென்றதுண்டு. மலையின் அழகைச் சில இடங்களில் கூட்டமில்லாத பகுதிகளில் ரசிக்கலாம்...உங்கள் தரிசனம் நலல்படியாக அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அக்கா

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், ரயில்வே மாதிரிப் பெண்களுக்கு 55 வயதுனு வைக்கலை! என்றாலும் அதிகம் சிறுவயதுக்காரர்களும் வந்தார்கள் தான்! தரிசனம் செய்யத் தள்ளுமுள்ளு இல்லை என்பதும் ஜரிகண்டி என்ற வார்த்தையே உச்சரிக்கப்படவில்லை என்பதும் தான் ஹைலைட்! :))))

   Delete
  2. வெளிப் பிராகாரத்தில் உள்ளே விடும் வாயில் அருகேயே மூத்த குடிமக்களை விட்டு விடுகிறார்கள். ஆகையால் கொஞ்சம் கூட்டம் முன்னே சென்றதால் ஒரு பத்து நிமிஷம் ஆச்சு சந்நிதிக்குப் போக. எங்கள் வரிசையில் எங்களை அனுமதித்திருந்தால் ஐந்து நிமிடம் கூட ஆகி இருக்காது! நீங்க சொன்ன பிற இடங்களுக்கு நாங்கள் 2007 ஆம் வருடம் சென்று வந்தோம். மலையிலேயே இரண்டு நாட்கள் தங்கினோம்.

   Delete
 2. ஆஹா... உங்கள் அனுபவம் படிக்க ரசனையாத்தான் இருக்கு.

  அவனைப் பார்க்க அவன் கூப்பிடணுமே. விரைவில் அவன் தரிசனத்துக்குச் செல்கிறேன்.

  லட்டு படம்தான், மசால்வடை மாதிரி தெரியுது. ஒருவேளை பெரிய லட்டு படம் போலிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. ஆமாம், அவன் அழைத்தால் தவிர நம் முயற்சிகளால் போவது கடினமே. பெரிய லட்டுக்களின் படம் தான் அது! எங்களுக்குக் கிடைச்சது சின்ன லட்டு. நண்பர் வாங்கி வைத்திருந்திருக்கிறார். ஆனால் தகவல் பரிமாற்றம் சரியாக இல்லாததால் எங்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை! :( என்றாலும் இப்போக் குட்டிக் குஞ்சுலுவின் காது குத்தன்று எங்க சம்பந்தி யாரோ கொடுத்தனுப்பியது என்று சொல்லி பெரிய லட்டுவும் வடையும் கொடுத்தார்.

   Delete
  2. நீங்க ஞாபகப்படுத்திட்டீங்க. நாளை அனேகமா வெங்கட் நாராயணா திருப்பதி தேவஸ்தானக் கோவிலுக்குப் போய் சேவிச்சுட்டு, 5 லட்டு பிரசாதம் வாங்கலாம்னு இருக்கேன். பார்ப்போம். வாய்ப்பு கிடைக்கறதான்னு :)

   Delete
  3. போய் தரிசனம் செய்துட்டு லட்டுவும் வாங்கிக்கோங்க நெ.த. :) நேற்றுக் கூட எதிர் வீட்டுக்காரர்கள் திருப்பதி போயிட்டு வந்து பெரிய லட்டு வாங்கி வந்ததைக் கொடுத்தார்கள்.

   Delete
 3. திருப்பதியில் பல கட்டளை நிகழ்ச்சிகளுக்கும் (சுப்ரபாத சேவை, கல்யாண உத்சவம் போன்று) 9 மணி என்று போட்டிருந்தால் 8 மணிக்கே போயிடணும். அங்கேயும் பெரிய கியூ இருக்கும் (நுழைவு இடத்திலேயே).

  ReplyDelete
  Replies
  1. நெ.த. இந்தக் கட்டளை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நாங்க பணம் கட்டுவதே இல்லை. நாம் கேட்கும் சமயம் கிடைக்காது. அவங்க கொடுக்கும் தினத்தன்று நாம் போக உகந்த நாளாக இருக்கணும்! ஆகையால் மனதால் நினைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளில் சில சேவைகளைப் பார்ப்பதோடு சரி!

   Delete
 4. நீங்கள் கூண்டு என்று சொன்னதைத்தான் நான் தியேட்டர் என்றேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நீங்கள் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். ஆனால் அங்கே அதைச் சொல்லி இருக்கலை! :)

   Delete
 5. //இப்போ அதெல்லாம் இல்லை. பணிவாக வேண்டிக் கொள்கின்றனர். //
  கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
  நன்றாக தரிசனம் செய்து இருப்பீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, நன்றாகவே தரிசனம் செய்து கொண்டோம்.

   Delete
 6. கோவிந்தா கோவிந்தா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி! கோவிந்தா தான். உள்ளே செல்லும்போது நம்மையும் அறியாமல் சொல்லத் தோன்றுகிறது.

   Delete
 7. ஒரு நல்ல விஷயம் அண்மையில் சென்று வந்ததால் உங்களால் விவரமாகக் கூற முடிகிறது நாங்கள் திருமலைக்குச் சென்று ஆகிவிட்டன சுமார் பத்து ஆண்டுக்கள் அப்போதெல்லாம் சீனியர் ஜூனியர் பாகு பாடு இருக்க வில்லை

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் பத்தாண்டுகள் கழித்தே இப்போப் போனோம் ஜிஎம்பி சார். இப்போ ஏற்பாடுகள் அருமையாக இருக்கின்றன. எந்தக் குழாயைத் திறந்தாலும் நீர் கொட்டுகிறது. முக்கியமாய் ஓட்டல்களில் சென்னையை விட உணவு விலை குறைவு! கீழேயும் சரி, மலைமேலும் சரி குறைந்த விலைக்கே விற்கின்றனர்.

   Delete
 8. கோவிந்தன் அருளால் பல நல்ல தகவல்கள். குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான வசதிகளை அறிந்து கொண்டேன். ரயில் நிலையத்தில் லிஃப்ட் பற்றிய யோசனை அருமை. அதைவிட பல வட மானில நிலையங்களில் ப்டிக்கட்டுக்குப் பதில் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. சக்கரம் உள்ள லக்கேஜ்களை இழுத்துச் செல்ல வசதியாக உள்ளது, அதை இங்கும் செயல் படுத்தினால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க திரு ஸ்வாமி அவர்களே! முதல் வரவுக்கு நன்றி. சென்னையிலும் எழும்பூரில் ஆறாம் நடைமேடைக்கு அருகிலுள்ள வெளியே செல்லும் படிக்கட்டு சாய்வு தளம் தான். வெளியே செல்லும்வரை சாய்வு தளம் என்பதால் வெளியேறும்போது சிரமம் தெரியாது. ஆனால் அப்போதெல்லாம் அம்பத்தூரில் இருந்தோம். சோழன் அங்கே தான் வந்து நிற்கும், கிளம்பும். இப்போது திருச்சியில் இருப்பதால் பெரும்பாலும் நான்காம் நடைமேடையே!

   Delete
 9. அன்பு மனங்களுக்கு என்றும் இன்பம் தான்.
  அம்மு ,ரிஷபன் தம்பதிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தப்பாய்க் கொடுத்துட்டீங்க ரேவதி! :)

   Delete
 10. நான் எழுதின பின்னூட்டம் வந்ததா தெரியவில்லை.
  அழகியில் எழுதி காப்பி பேஸ்ட் செய்வதால் தடுமாறி விடுகிறது.

  கோவிந்தன் கருணையில் நீங்கள் போய் வந்த விவரம் அற்புதமாக இருக்கிறது.

  நம் ஊரில் தான் பெற்றோரைச் சாக்கிட்டு இத்தனை தள்ளு முள்ளு நடக்கிறது.
  இருந்தும் கோவிந்தன் அருகாமை கிடைத்ததே நலம்.
  இவ்வளவு விவரமான தகவல்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். எப்பொழுது கூப்பிடுகிறான் பார்க்கலாம். நான் இரண்டு அடி வைத்தால் அவன் நான்கு அடி முன் வருவான்.
  மிக நன்றி கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. நீங்க எழுதினதிலே இது வந்திருக்கு ரேவதி! தள்ளுமுள்ளு செய்து முன்னால் சென்றவர்களை விட்டுவிட்டு நாம் கொஞ்சம் பின்னாலேயே போயிக்கலாமே! எப்படியும் பனிரண்டு வரை தரிசனம் உண்டுனு சொன்னாங்க! ஆகவே அவசரப்படலை. ஆனாலும் நாங்க பத்தேமுக்காலுக்குள்ளாகப் பார்த்துட்டு வெளியே பிரகாரத்துக்கு வந்தாச்சு.

   Delete
 11. மூத்த குடிமக்களுக்கான வசதிகள் சிறப்பு - இன்னும் சிறப்பாகச் செய்ய கோவிந்தன் வழி காட்டட்டும்....

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், பொதுவாக மக்கள் தரிசனம் செய்யும் கட்டண சேவைகளிலும் தள்ளுமுள்ளு இல்லை என்றே சொல்கின்றனர்!

   Delete
 12. மெட்ரோ ரயில் நிலையத்தில் லிப்ட் இருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், மெட்ரோவில் ஒரே ஒருமுறை தரமணியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை பயணித்திருக்கேன். அங்கே லிஃப்ட் இருப்பது தெரியாது. எழும்பூர் ரயில் நிலைய பாட்டரி காருக்குப் பணம் கொடுக்கணும். ஒரு நபருக்கு இத்தனைனு கணக்கு உண்டு!

   Delete
 13. விளக்கமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவ்வளவு பொறுமையாக உட்காரும் பழக்கம் எனக்கு இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், விளக்கமாகச் சொன்னால் அடுத்துச் செல்பவர்கள் பயனடையலாமே!

   Delete
 14. என் அலுவலக நண்பர் மாதா மாதம் சுப்ரபாத சேவைக்குச் செல்வார். அதுதான் நல்ல தரிசனத்து ஏற்றது, நின்று பார்க்க முடியும் என்றும் சொல்வார்.

  ReplyDelete
  Replies
  1. சுப்ரபாத சேவைக்கு மாதா மாதம் பணம் கட்டுவாரா? ஒரு முறை கட்டினாலே ஆறு மாசத்துக்குப் பின்னரே தரிசனம் கிடைக்கும் என்றார்களே! புரியலை!

   Delete
 15. கோவிந்தா.. கோவிந்தா.. நல்ல அனுபவம்தான்.. ஆனா அனுபவிச்சதைக் காட்டிலும் ரெண்டு மடங்கு கூட்டி எழுதியிருக்கிறா கீசாக்கா:). சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)) புதுவருசம் பிறக்கப்போகுது.. கைவிசேடம் எடுக்கோணும்:))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அதிரடி, முந்தைய பதிவைப் படிக்கலை போலிருக்கே!நான் கூட்டியும் சொல்லலை, குறைச்சும் சொல்லலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது என்ன கைவிசேடம்?

   Delete
 16. நல்ல அனுபவம். பிறருக்கு பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், மற்றவருக்குப் பயன்படணும் என்பதே முக்கியக் கருத்து!

   Delete
 17. TTD website says the timings for Senior Citizens and Physically challenged devotees are 10 AM and 3 PM. The devotees are asked to be present two hours before to receive the entry tickets. Why did you go at 6 AM? Where is the place to get the entry tickets? Please name it. When I went some time back, I saw an enclosure like seating arrangement for such devotees in front of the Main Gopuram to enter for darshan. Do you mean after getting entry tickets you went there to wait? In another site, I read that at an appointed time, such devotees in waiting at the said enclosure are allowed to walk staright to the Temple entry and join others. When they go, others are not allowed and only such devotees get darshan and come out relaxed. Was it so in your case - when such devotees were allowed, no others were allowed?

  Please also tell the 10 AM and 3 PM entry for such devotees are on daily basis or once in a week. The TTD says once such a devotee got darshan, for ninety days he cannot get darshan as a senior citizen or PC devotee?

  Hope you will enlighten all the above points. Advance thanks.

  ReplyDelete
  Replies
  1. திரு விநாயகம், எல்லோருமே முன்னால் போனால் சீக்கிரம் தரிசனம் கிடைக்கும் என்னும் எண்ணத்தில் போனோம். ஆனால் அங்கே குறிப்பிட்ட நேரம் தான் கதவு திறக்கிறார்கள். பத்து மணி தரிசன சேவைக்கு ஒன்பதே முக்காலுக்கும், 3 மணி தரிச்ன சேவைக்கு இரண்டே முக்காலுக்கும் திறக்கின்றனர். சீக்கிரமாய்ப் போய் டோக்கன் வாங்கியது கூட்டத்தில் அடிபடாமல் இருக்கத் தான். போகப் போக வரிசை பெரியதாக ஆவதோடு இல்லாமல் வெயிலிலும் நிற்கவேண்டி இருக்கும். திருமலையில் மூத்த குடிமக்களின் சேவைக்கான டோக்கன் வாங்கும் இடம் எனக் கேட்டால் எல்லோருமே சொல்கின்றனர். டாக்சிக்காரங்களுக்குத் தெரிந்திருக்கிறது. மற்றபடி அதன் பெயர் எனக்குத் தெரியாது. முக்கியக் கோபுரத்துக்கு எல்லாம் போகவே வேண்டாம். நேரே சந்நிதிக்குள் செல்லும்படி பிராகாரத்தின் அருகேயே கூண்டு அமைத்திருக்கின்றனர். உள்ளே செல்லும் வாயிலுக்கு அது கொண்டு விட்டு விடுகிறது. அதிகம் அலைச்சல் எல்லாம் இல்லை.

   Delete
  2. Many thanks. However, the information whether the darshan for senior citizens and PC devotees in the manner explained by you, is on daily basis or once in a month. Last month, as I read, the TTD announced the date of 20th March for such darshan. It appears that it is once a month. Since you had gone there, did not pick up your own date as there is no online system for such worship now? Or did you come to know the specific (once in a month) from TTD website? Please tell the exact date when you went there so that I can trace out further from other sources.

   My simple question is whether the date was fixed by the TTD or you?

   Delete
  3. // Last month, as I read, the TTD announced the date of 20th March for such darshan// உண்மை, இதை நாங்களும் பார்த்தோம். ஆனால் நாங்க இரண்டு மாதம் முன்னாடியே பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தோம். ஃபெப்ரவரி 26 திங்களன்று காலை பல்லவன் - மதியம் சப்தகிரி, மாலை திருப்பதி, இரவு, திருமலை, மறுநாள் தரிசனம்.மதியம் கீழே இறங்கிப் பின் தங்கி மற்றக் கோயில்கள். புதனன்று காலை பத்துமணி அளவில் சப்தகிரி-- முன்மாலை மூன்றே முக்காலுக்குப் பல்லவன், இரவு ஶ்ரீரங்கம்!

   Delete
  4. திரு விநாயகம், அந்தச் செய்தியைப் படித்த உடனே திருமலா-திருப்பதி தேவஸ்தான அலுவலகத்துக்குத் தொலைபேசி விபரம் கேட்டோம். அவங்க தினசரி மூத்தகுடிமக்களுக்கான தரிசனம் உண்டு என்பதை உறுதி செய்தார்கள். சென்னை அலுவலகத்திலும் கேட்டுக் கொண்டோம். எங்கள் குடியிருப்பு வளாகத்தில் திருப்பதியைச் சேர்ந்த ஓர் தம்பதியர் இரண்டு வருஷமாகக் குடி வந்திருக்கிறார்கள். அவங்க மாசம் ஒரு முறை திருப்பதி செல்கின்றனர். அவங்களிடமும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். தினசரி உண்டு என்றே திருமலையிலும் சொன்னார்கள்.

   Delete
  5. பயணத் திட்டம் எங்களால் போடப்பட்டது தான்!

   Delete
  6. Many thanks again. It's a great arrangement by TTD. Hope it will be in practice honed year in and year out, till I reach 65.

   Delete
 18. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா/ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete