எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 21, 2019

தண்ணீர், தண்ணீர்!

சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம்! அம்பத்தூரில் இருந்து வந்திருந்த உறவினர்கள் அங்கே தண்ணீரே இல்லை.  ஆழ்துளைக்குழாயில் கூடத் தண்ணீர் வராமல் மோட்டார் போட்டால் சேறும் சகதியுமாக வருகிறது என்றார்கள். தமிழகம் எங்கும் வறட்சி நிலவினாலும் காவிரிக்கரையில் இருப்பவர்களுக்கு அவ்வளவு கஷ்டம் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் நாமும் கடைசிச் சொட்டு வரை விடாமல் மாட்டைக் கறந்து கன்றைப் பட்டினி போடுவது போல் நடந்து கொள்வோம். அல்லது கன்றைப் போல வைக்கோல் அடைத்த பொம்மையைக் காட்டி மாட்டை ஏமாற்றுவது போல் காவிரித் தாயையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம். எங்கெல்லாம் தண்ணீர் வருமோ அங்கெல்லாம் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். அறுபதுகளில் இம்மாதிரி ஒரு தண்ணீர்க் கஷ்டம் சென்னைக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்போதும் இதே போல் மக்கள் ஊரை விட்டு வெளியேறியதோடு யாரேனும் உறவினர் வந்தால் வீட்டில் தங்கக் கூட அனுமதிக்க யோசிப்பார்கள். இதைக் குறித்துச் சித்தப்பா ஓர் நாவலே எழுதினார்.

கிட்டத்தட்ட அதே நிலை இப்போதும் ஏற்பட்டிருக்கிறது. வீட்டில் குறைந்த நபர்கள் இருந்தால் பிரச்னை இல்லை. ஓரளவு ஓட்டி விடலாம். ஆனால் இரண்டு பேருக்கு மேல் இருந்தால் பிரச்னை தான்! மாம்பலத்தில் தம்பி வீட்டில் ஒரு நாளைக்கு ஒருத்தர் என்னும் கணக்கில் குளிக்கும்படி இருக்கிறது என்றார் தம்பி!  சின்ன ஸ்பூன் கிடைத்தால் கூடத் தண்ணீர் நிரப்பி வைக்கும்படியாக இருக்கிறது என்கின்றனர். லாரியில் தண்ணீர் வாங்கி நிரப்பினாலும் அதற்கும் நிறையப் போட்டிகள். இந்தச் சாக்கில் லாரிக்காரர்கள் கன்னாபின்னாவென்று எங்கெங்கிருந்தோவெல்லாம் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்துவிடுவதோடு அதிகப் பணமும் கேட்கின்றனர்! அந்தத் தண்ணீர் ஒத்துக்காமல் உடல்நிலை பாதிப்பு வேறே வந்து விடும். அதோடு மட்டும் இல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள்,  ஓட்டல்கள், ஐடி கம்பெனிகள், சின்னச் சின்னத் தொழிற்சாலைகள் ஆகியவை தண்ணீர் இல்லாத காரணத்தால் விடுமுறை விடுகின்றனர். அல்லது ஒரே ஷிஃப்ட் வேலை கொடுக்கின்றனர். அல்லது ஓட்டல்களில் மதியச் சாப்பாடே இல்லை என்கின்றனர்.  பள்ளிகள், கல்லூரிகள் மதியமே குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி விடுவதாகச் சொல்கின்றனர். புதிதாகச் சென்னையில் தங்கவென்று வந்த சில சின்னச் சின்னக் குடும்பங்கள் அவரவர் ஊர்களுக்கே திரும்புவதாகச் சொல்கின்றனர். திரும்பட்டும். அது தான் நல்லதும் கூட! எல்லோரும் வேலை வாய்ப்பு, பிழைக்க வழி எனச் சென்னைக்கே வந்தால் அத்தனை பேரையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறது சென்னை!

சில ஓட்டல்களில் சாப்பாடு தயாரிப்பது கஷ்டம், தயாரித்துக் கொடுக்க வேண்டும் எனில் அதற்குத் தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை என்கின்றனர். சிலர் சாப்பாடு உண்டு ஆனால் தண்ணீரை நீங்களே கொண்டு வாருங்கள் என்கின்றனர். இதற்கெல்லாம்  யார் காரணம்? அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம் சுமத்திக் கொண்டு இருப்பதை நாம் கவனிக்க வேண்டாம். நாமே யோசிப்போம். தவறு நம்மீது தானே!  இப்போது சென்னையை மட்டும் எடுத்துக் கொண்டால் அங்கே நீர் ஆதாரங்களே இல்லையா? அல்லது இருந்ததே இல்லையா?  முந்தைய அரசுகள் தெலுங்கு கங்கை நீர்த்திட்டம், வீராணம் குடிநீர்த்திட்டம் என்றெல்லாம் திட்டங்கள் போட்டுச் சென்னைக்குக் குடிநீர் வழங்கி வந்தனவே அதெல்லாம் என்ன ஆனது? எனக்கு நினைவு தெரிந்து அறுபதுகளின் மத்தியில் இருந்து எண்பதுகள் வரை சென்னையைச் சுற்றிப் பல ஏரிகளைப் பார்த்திருக்கிறேன். அவற்றில் தண்ணீரையும் பார்த்திருக்கேன். அதான் முக்கியம். அவை எல்லாம் என்ன ஆனது? இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் யார்? மக்களாகிய நாம் தான்!

ஏரிகள் இருந்த இடங்களைத் தூர்த்துக் குடி இருப்புக்கள் கட்டினால் நாம் தான் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினோம். வயல்களை அழித்துக் குடியிருப்புக்கள் வருவதை ஆதரித்தோம். குடி இருப்புக்களோடு நிற்காமல் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் என ஏரிகள் தூர்க்கப்பட்டு வந்து விட்டன.  தொழில்கள் சென்னையில் மட்டும் தான் துவங்க வேண்டுமா? உள் நகரங்களில் துவங்கக் கூடாதா? ஆனால் நாம் யாருமே அதற்கு இடம் கொடுக்காமல் சென்னையை மையமாகக் கொண்டே அனைத்துத் தொழில்களையும் தொடங்கி இருக்கிறோம். அதே போல் மருத்துவமும்! சென்னையை விட்டால் மற்ற ஊர்களில் மக்கள் இல்லையா? அங்கெல்லாம் மருத்துவமனைகளைத் துவங்கலாமே! எல்லோருமே சென்னைக்கு வந்து வைத்தியம் செய்து கொள்ள முடியுமா? முக்கியமான சிகிச்சைகளுக்கு எல்லோரும் தண்ணீருக்கு எங்கே போவார்கள்? அங்கே வேலை செய்ய வரும் மக்கள் கூட்டம் தண்ணீருக்கு என்ன செய்யும்? இது எதையுமே யோசிக்காமல் சென்னையிலேயே அனைத்து மக்கள் தொகையும் கூடி இருக்கிறது!  பத்துப் பேருக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரை ஆயிரம் பேருக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது.  சர்வதேச அளவில் சென்னையின் தண்ணீர்க் கஷ்டம் பேசப் படுகிறது. வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலாவுக்காக அதிகம் வருவது சென்னைக்கும், சென்னையைச் சுற்றி உள்ள தமிழகக் கோயில்களைப் பார்க்கவும் தான். அதெல்லாம் இப்போது பாதிப்படையும். சுற்றுலா பாதித்தால் அதைச் சார்ந்துள்ள மற்றத் தொழில்களும் பாதிக்கும்.

சென்னையில் தொழில், வர்த்தகம் பாதித்தால் தமிழக வருமானம் பாதிப்பதோடு அல்லாமல் தமிழகம் முன்னணி மாநிலங்களில் இருந்து பின்னுக்குத் தள்ளப்படலாம். இவை அனைத்தும் எதனால்? தண்ணீரால்! அந்தத் தண்ணீரைச் சேமிக்க நாம் என்ன செய்தோம்! என்ன செய்கிறோம்! இனி என்ன செய்யப் போகிறோம்! உலகிலேயே தமிழர்கள் தாம் கெட்டிக்காரர்கள் என நம்மை நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் தண்ணீர் விஷயத்தில் இப்படி ஏமாந்து நிற்கிறோமே! இதற்கு என்ன செய்வோம்? தண்ணீருக்கு எங்கே போவோம்?ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்தோமா? அல்லது இனியாவது செய்வோமா? ம்ஹூம்!  வழக்கம் போல் இதுவும் பேசி, எழுதி, விவாதங்கள் செய்து பின்னர் அடுத்த மழை அடித்துப் பெய்தபின்னர் மறந்தும் போகும். அடுத்த கோடையில் தான் தண்ணீரைப் பற்றியே நினைப்போம்.

இது தான் நாம்!

50 comments:

 1. இதற்கெல்லாம் காரணம் அரசு மட்டுமல்ல மக்களும்தான்...
  நீங்கள் சொன்னதுபோல ஏரிகளையும், வயல்வெளிகளையும் கூறு போட்டதில் அரசுக்கும், அதை போட்டி போட்டு வாங்கியதில் மக்களுக்கும் பங்கு உண்டு.

  எல்லோருக்குமே சென்னைதான் வாழ்விடமா ?

  நகர வாழ்க்கை என்று சொல்லி நரக வாழ்க்கையே வாழ்கின்றனர் பலர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! மக்கள் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவதில் போட்டி போடுகின்றனர்! சில சமயங்களில் அவை அங்கீகாரம் இல்லாத இடம் எனத் தெரிய வந்ததும் செய்வதறியாமல் விழிக்கின்றனர்! :( ஏமாற்று வேலை அதிகம்! சென்னை வாழ்க்கை அறுபதுகளிலேயே எனக்கு நரகமாகவே தோன்றியது! என் கனவு நகரம் சென்னை அல்ல!

   Delete
  2. எனக்கும் சென்னை கனவு நகரம் இல்லை. ஆனால் வேறு வழியில்லை.

   Delete
  3. ஆனாலும் கடைசி காலத்திலாவது நாங்க சென்னையை விட்டோம். உங்களுக்கு? அதுவும் முடியாது என்றே நினைக்கிறேன். :(

   Delete
  4. அதைத்தான் சொல்கிறேன்!

   Delete
  5. :( ம்ம்ம்ம்ம்! அதான் சுடும் உண்மை!

   Delete
  6. அப்பீல்லாம் சொல்லப்படாது கீசா மேடம். ஶ்ரீராம்காரு வேற நகரத்துல செட்டிலாகலாம்.

   Delete
 2. சென்னையின் தண்ணீர்ப்பிரச்னை மிரட்டுகிறது.பீதியூட்டுகிறது. சமீபத்தில் எஸ்பிபி ஒரு விழாவில் இது குறித்துப் பேசினார். அவருக்கும் தண்ணீர்க்கஷ்டம் என்ற ரீதியில் பேசினாலும் இனியாவது விழித்துக்கொள்ளும் மனோபாவம் தேவை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நான் மிக மிக லேசாகக் கோடி தான் காட்டி இருக்கேன். யார் பேசினாலும் மக்களுக்கு விழிப்புணர்வு என்பது அறவே இல்லை என்றே சொல்லுவேன். அவரவர் காரியத்துக்குத் தண்ணீர் கிடைக்கிறதா, போதும்னு இருக்காங்க! ஆனால் அவங்க நிலைமையும் அத்தனை மோசம்!

   Delete
 3. வயலிலும் ஏரியிலும் வீடுகட்டினால் மக்கள் வாங்கத்தான் செய்வார்கள். தடுக்க வேண்டியவர்கள் அதிகாரிகளும், அரசாங்கமும்தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கக் கூடாது ஶ்ரீராம்! அதிலும் படித்தவர்கள் வாங்கலாமா? இந்த இடம் ஏரியாக இருந்ததே! இதை எப்படி லே அவுட் செய்தீர்கள் என்றெல்லாம் கேட்க வேண்டாமா? நாங்க சிலரிடம் இப்படிக் கேட்டு இருக்கோம். வாங்கியும் கட்டிக்கொண்டோம். அதிகாரிகளோ, அரசாங்கமோ வெளிப்படையாகத் தடுத்தால் நல்லது தான்! அது மட்டும் நடந்தால்!!!!!!!!!!!

   Delete
  2. ஸ்ரீராம்ஜி வயலில் போட்ட ப்ளாட்டை வாங்ககூடாது என்ற கொள்கையில் 2010-ல் மதுரை விமான நிலையத்துக்கு பின்புறம் (அருப்புக்கோட்டை ரோடு)நான் மட்டும் வாங்கவில்லை நண்பர்கள் வாங்கினார்கள்.

   அதேபோல மதுரை வில்லாபுரம் கண்மாயில் பிளாட் வாங்கவில்லை.

   அரசை குற்றம் சொல்ல எனக்கு எப்பொழுதுமே தகுதி வேண்டுமென்று நினைப்பவன் நான்.

   Delete
  3. பாராட்டுகள் கில்லர்ஜி! இம்மாதிரி ஒருவர், இருவர் என ஆரம்பித்தால் பின்னால் நிறையப் பேர் சேர்ந்து கொள்வார்கள்.

   Delete
 4. சென்னை உட்பட நிறைய மாவட்டங்களில் நிலத்தடி நீரே இல்லாமல் போகும் என்று இப்போதல்ல சில ஆண்டுகளுக்கு முன்னரே சொன்னார்கள். அப்போது நம்பமுடியவில்லை. இப்போது பயம் வருகிறது. ஆனாலும் இவர்கள் தேவர்கள் அல்ல, இவர்கள் சொல்வது அப்படியே நடப்பதற்கு. நிலைமாறும் என்று நம்பும் வாழ்க்கைதான் நமக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், இங்கே சில இடங்களில் நிலத்தடி நீர் 200 அடியிலும் சில இடங்களில் 100, 50 அடியிலும் கிடைக்கிறது. ஆனால் அதற்காக ஒரேயடியாகச் சுரண்டவும் கூடாதே! இங்கே பணம் பண்ணுவதே நோக்கம்! ஆகையால் கிடைக்கும் நீரைப் பணம் பண்ணவே பார்ப்பார்கள்! :( மக்களிடம் புரிதல் ஏற்பட அந்த ஆண்டவன் தான் அருள வேண்டும்.

   Delete
 5. அடுத்த உலக யுத்தம் தண்ணீருக்குக்காகததான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சாத்தியம். எங்கு ஓடுவோம் நாம்? தடையின்றி கிடைக்கும் வெயில் போல தடையின்றி தேவையான அளவு கிடைக்கவேண்டும் மழையும்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், பெய்யும் மழையில் சேமித்துக் கொண்டாலே போதுமே!

   Delete
 6. சென்னையின் தண்ணீர்ப் பிரச்னைக்கு முக்கிய காரணம் சென்னை வாசிகளே!...

  தஞ்சாவூரைப் பொறுத்தவரை கொஞ்சம் பற்றாக்குறைதானே தவிர பஞ்சம் எல்லாம் இல்லை...
  வற்றது வதங்காது நாங்கள் குடியிருக்கும் (வாடகை) வீட்டில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது..

  இந்த விஷயத்தில் மட்டும் எல்லாரையும் காப்பாற்று இறைவா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை! இங்கேயும் கொஞ்சம் இப்படி அப்படினு இருந்தாலும் சென்னை அளவுக்கு இல்லை!

   Delete
 7. சென்னையில் பருவமழை பெய்யத் தொடங்கியதுமே இந்த கூக்குரலும் கிளம்பி விடும்...

  இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

  இயல்பு வாழ்க்கைன்னா இன்னான்னு இவனுங்க நெனைச்சுக்கிட்டு இருக்கானுவோன்னு தெர்லே..

  இப்போ குடத்தைத் தூக்கிட்டு அலையறப்போ மறுபடியும் இயல்பு வாழ்க்கை பாதிப்புன்னு தினமலர்ல கூப்பாடு...

  மறுபடி மழை பெய்ய ஆரம்பிச்சதுன்னா அப்பவும் இதே கூக்குரல் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

  தினமலர் சொல்லியிருக்கு -

  உங்க உங்க ஊர்ல பஞ்சம் வறட்சி பற்றாக்குறை இதெல்லாத்தையும் படம் புடிச்சி எங்களுக்கு அனுப்பிப் போடுங்க... நாங்க உங்க பேரோட போட்டு பரிசி தர்றோன்..ன்னு...

  இதைத்தான் அன்னைக்கே மகாகவி பாடி வெச்சிட்டுப் போனாரு!...

  சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
  சிந்தை இரங்காரடி கிளியே!...
  செம்மை மறந்தாரடி!..

  ReplyDelete
  Replies
  1. துரை, பத்திரிகைகளும் ஊடகங்களும் வியாபார ரீதியில் தான் செயல்படுகின்றன. யாருக்கும் உண்மையான அக்கறை இல்லை! நீங்க சொன்னாப்போல் மஹாகவியின் வாக்குப் பலித்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

   Delete
  2. நான் ரசித்த பின்னூட்டம் உங்களுடையது துரை செலவராஜு சார்

   Delete
  3. இயல்பு வாழ்க்கை பாதிப்பு...இந்த வாசகத்தை கேட்கும் போதே ஒரு எரிச்சல் வருகிறது ...

   இந்த ஊடகங்கள் எல்லாம் நம்மை கொடுமை படுத்தியே பணம் பார்க்கிறார்கள்

   Delete
  4. வாங்க அனு! நீங்க சொல்வது உண்மை!

   Delete
 8. இருக்கறவங்களுக்கே தண்ணியில்லை. 20,000 கூடுதல் ஃப்ளேட்ஸ். அவங்களுக்கு எங்கிருந்து நண்ணீர் கொடுப்பாங்க?

  அராஜக ரியல் எஸ்டேட்ஸ் மற்றும் அரசாங்கம், அரசியல்வாதிகள்

  ReplyDelete
  Replies
  1. மக்களும் பொறுப்பு ஏற்க வேண்டும் நெல்லைத் தமிழரே!

   Delete
 9. தண்ணீர் கஷ்டம் சென்னையில் மிகவும் அதிகம்.
  நீங்கள் சொல்வது போல் ஜனத்தொகை அங்கு அதிகம்.
  பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் வீட்டிலிருந்து வேலை பார்க்க சொல்கிறார்கள் தங்கள் ஊழியர்களை.

  தண்ணீர் பற்றிய செய்திகளை தினம் படிக்கும் போது கவலை அளிக்கிறது.

  எங்கள் வீட்டில் தண்ணீர் கஷ்டமே இல்லை, ஒரு துளி மழை நீரைக் கூட வீண் செய்யவில்லை என்பது போன்ற வீடியோ பகிர்வுகள் வந்து கொண்டு இருக்கிறது. மழை நீர் சேகரிப்பை ஒவ்வொரு தனி மனிதனும் முறையாக செய்தால் தண்ணீர் கஷ்டமே இருக்காது.

  இந்த மாதிரி மனிதர்களிடம் ஆலோசனை பெற்று அரசும் போர்க்கால நடவடிக்கையாக செயல்படலாம்.

  நிறைய இடங்களில் 700 அடி தோண்டி கொண்டு இருக்கிறார்கள். கீழே கீழே நிலத்தடி நீர் போய் கொண்டே இருக்கிறது. மதுரையிலும். எங்கள் கிணற்றில் தண்ணீர் அத்தனை வீடுகளுக்கும் பத்தாது, அதனால் விலைக்கு வாங்கிதான் தருகிறார்கள். மாதாமாதம் தண்ணீருக்கு பணம் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
  மக்களும் மற்றவர்களுக்கும் தண்ணீர் வேண்டும் என்ற நினைப்பில் தண்ணீரை சிக்கனமாய் செலவு செய்ய வேண்டும்.

  நல்லது நடக்க வேண்டும் எல்லோருக்கும்.


  ReplyDelete
  Replies
  1. அரசு நிரந்தரத் தீர்வை முன்னெடுத்துச் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னைக்குத் தாற்காலிகத் தீர்வுகள் பலன் அளிக்காது. மழை நீர் சேமிப்புத் திட்டம் முறையாகச் செயல்பட்டிருந்தாலே இந்தப் பிரச்னை குறைந்திருக்கும். இப்போது புலம்பி என்ன செய்ய முடியும்! கடவுளைத் தான் பிரார்த்திக்கலாம்!

   Delete
 10. https://www.youtube.com/watch?v=tsq53DbaVww

  https://www.youtube.com/watch?v=nrfkuRm1EEg

  தண்ணீரை 25 மழை நீர் சேகரிப்பு செய்கிறார் கஷ்டமே இல்லையாம். பொறாமையாக இருக்கிறது இந்த மனிதனை பார்க்கும் போது.

  ReplyDelete
  Replies
  1. நானும் பார்த்தேன்.

   Delete
 11. https://www.youtube.com/watch?v=Bj_bySuWV0g

  இவர் சொல்லும் யோசனை மிக நன்றாக இருக்கிறது.
  இதை கடைபிடிக்கலாம். தனி வீடு , சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் இதை செய்யலாம். நீர் மேலாண்மை சிஸ்டம் நம்மிடம் இல்லை. அரசும், மக்களும் கை கோர்த்து செய்ய வேண்டிய ஒன்று என்கிறார்
  மிகவும் நன்றாக் சொல்கிறார். மழை நீர் பூமிக்கு அடியில் போக யோசனை சொல்கிறார்.

  ஏபரல், மேயில் பெய்யும் மழையை கால்வாய்க்குள் போகாமல் செய்ய சொல்லும் யோசனை நன்றாக இருக்கிறது.

  மண்ணில் விழும் இலைகளை பெருக்கி போட்டு விடாதீர்கள் என்கிறார், செடிக்கு அடியில் மரத்துக்கு அடியில் இருந்தால் அது அந்த செடியை, மரத்தை காப்பாற்றும் என்கிறார் காப்பாற்றும்.

  நீரை சுத்த படுத்த தேற்றாம் கொட்டையை உபயோக படுத்துங்கள் என்கிறார். அதை எல்லாம் மறந்து விட்டோம். காலில் மண் ஒட்ட கூடாது என்று வீட்டை சுற்றி சிமெண்ட் நடை பாதை போட்டு விட்டோம்.
  மர குப்பை இல்லாமல் தோட்டம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கூட்டி அள்ளி போட்ட்டு விடுகிறோம்.

  வெளி நாட்டில் குளிர் காலத்தில் பனி பொழிவு இருக்கும் வேர் அழுகி போகாமல் இருக்க மரத்தூள்களை மரத்தை சுற்றி போட்டு வைப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி அரசு, அவர் யோசனை நன்றாக இருந்தாலும் அரசு ஏற்கவேண்டும். செயல்படுத்த வேண்டும். நாங்க தேத்தாங்கொட்டையை நிறையப் பயன்படுத்தித் தண்ணீரைச் சுத்தம் செய்திருக்கோம். இப்போல்லாம் தேத்தாங்கொட்டைன்னா புரியுமா சந்தேகமே. வெளிநாடுகளில் இயற்கையைப் பேணிப் பாதுகாக்கும் ஆர்வம் இயல்பாகவே மக்களுக்கு இருக்கிறது. ஆனால் நம்மிடம்?

   Delete
 12. முதல் காணொளியில் காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் மிஷின் வாங்கி இருக்கார்.( சோலார் சுரேஷ் அவர்கள்)
  இனி ஒவ்வொருவரும் அதுதான் வாங்கி ஆக வேண்டும் போல. துணி துவைக்கும் எந்திரம், போல் அதுவும் இருக்கிறது .அதை காற்று உள்ள இடத்தில் வைத்தால் போதுமாம். அதன் விலை அதிகம் என்றாலும் அதற்கு கொடுக்கும் விலை வாங்கும் நீரை கணக்கும் பார்க்கும் போது குறைவே! அதுவும் அவருக்கு செலவு இல்லையாம் அவர் சோலார் செய்து இருக்கிறார் வீட்டை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதிசயம் தான், அவர் சொல்லி இருப்பதும், செய்து காட்டுவதும். இதை இனியாவது அனைவரும் பயன்படுத்திப் பார்க்க முயற்சி செய்தால் நல்லது.

   Delete
 13. வணக்கம் சகோதரி

  தண்ணீர் கஸ்டத்தை பற்றி நன்றாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள். நாங்கள் 80 களில் சென்னையில் இருந்தபோதே தண்ணீர் கஸ்டந்தான். ஒருநாள் விட்டு ஒருநாள் கார்ப்பரேஷன் தண்ணீர் வரும். அதுவும் வரும்/வராது என்ற பாணியில்தான் இருக்கும். நிலத்தடிநீர் கடல் உப்புநீர் கலந்து விட்ட அபாயமும் இருந்தது. தண்ணீருக்காக எவ்வளவோ கஸ்டப்பட்ட நினைவுகள் வருகின்றன. அப்புறம் மழைநீர் சேகரிப்பு குழாய்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டாயமாக இணைக்க வேண்டி கட்டளைகள் வந்ததும், மழை என்பது "தான் தண்ணீர்" சம்பந்தபட்டது என்பதையே சுத்தமாக மறந்து விட்டது. வந்தால் புயல், காற்று, வெள்ளம் என்ற ரீதியில் மட்டும் தலை காட்டி வந்து போனது. இதில் எங்கிருந்து சேகரிப்பது? தாங்கள் கூறுவது போல் மக்கள்தான் வெள்ளமாக கூடியிருக்கிறீர்கள்.

  இங்கேயே தண்ணீர் பிரச்சனை அடிக்கடி தலை காட்டுகிறது.எப்போதும் ஜூன்ல் ல் வரும் பருவமழையே காணோம். பசுமை அழிந்து பார்க்கும் இடமெங்கும் கட்டுமானங்கள் வளர்ந்து விட்டன. என்ன செய்வது? கூட்டு குடும்பங்கள் சிதைந்து கட்டுமானங்கள் பெருகிட வாய்பளிக்கின்றனவே... இனி இருக்கும் இடமெங்கும் தண்ணீர்ப் பிரச்சனை தீர நாம்தான் கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டும். தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வரவும் சேர்த்து பிரார்த்திக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, மழைக்காலத்து வெள்ளத்தைச் சேமித்தாலே தண்ணீர்ப் பஞ்சம் வராது! அப்போச் சேமிக்காமல் பின்னால் அரசையும், மழையையும் குறை சொல்வது சரியல்ல! இனியாவது நீர் ஆதாரங்களை அழிக்காமல் பாதுகாத்து வந்தால் போதும்!

   Delete
 14. இனியாவது விழித்துக் கொண்டு மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் நிலை பராமரிப்புகளை அரசும் மக்களும் மேற்கொள்ள வேண்டும் ....


  இனி வரும் காலங்களை நினைக்கவே பயமாக இருக்கிறது ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு, அரசு நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதோடு சென்னைக்கு மக்கள் அதிக அளவில் குடி வருவதைத் தடுக்கும் வகையில் உள் மாவட்டங்களின் உள்கட்டமைப்பை விரிவு செய்து எல்லோரும் பயன்பெறும்படி செய்தாலே போதுமானது. கூட்டம் கூட்டமாகச் சென்னைக்குப் படை எடுப்பதைத் தடுத்தாலே போதும்.

   Delete
 15. இதை எல்லாம் பார்க்கும் போது நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இங்கே எனக்கு (திருவனந்தபுரத்தில்) 24 மணி நேரமும் தண்ணீர் வருகிறது. 2ஆவது மாடியில் உள்ள டேங்குக்கு மோட்டார் இல்லாமலேயே தண்ணீர் ஏறி விடுகிறது.
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா! அங்கே மக்கள் தண்ணீர் குறித்த விழிப்புணர்வும், தண்ணீரைச் சேமிப்பதில் அக்கறையும் உள்ளவர்கள். எங்களுக்கும் தண்ணீர்ப் பிரச்னை என்பது இல்லை. நானும் இத்தனை வருஷங்களில் ராஜஸ்தான், குஜராத் போன்ற பாலைவனப் பிரதேசங்களில் இருந்தும் தண்ணீர் இல்லாக் கொடுமையை அனுபவிக்கவில்லை. இறைவன் கருணை தான் அது!

   Delete
 16. தண்ணீர் - அம்பத்தூர் பிரச்சனை பற்றி நானும் பேசும்போது சொன்னார் சித்தப்பா....

  மக்கள், அரசாங்கம், அதிகாரிகள் என அனைவரும் மாற வேண்டியது கட்டாயம். ஆனால் இங்கே யாரும் மாறப் போவதில்லை.

  மழை பெய்தாலும் குற்றம் சொல்கிறார்கள், தண்ணீர் இல்லை என்றாலும் குற்றம் சொல்கிறார்கள். மழை நீர் சேகரிப்பு பற்றிய உணர்வே நம் மக்களிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நிலத்தடி நீர் வளம் பெற செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், மழை பெய்தால் தான் உடனே இயல்பு வாழ்க்கை பாதிப்புனுடுவாங்களே! :(

   Delete
 17. கடல் நீரைக் குடி நீராக்க முடியாதா தண்ணிர் கஷ்டம் எல்லாமே ஏழைகளுக்கு மட்டும்தான் பணமிருப்பவர்கள் என்ன விலையானாலும் தண்ணீர் வாங்குகிறர்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி ஐயா! தண்ணீர் பிரச்னை ஜாதி வித்தியாசமோ, மத வேறுபாடோ, ஏழை, பணக்காரன் என்ற எண்ணமோ இல்லாமல் அனைவருக்கும் இருந்து வருகிறது. ஆகவே இதில் எந்தவிதமான பிரச்னையும் இல்லை! எல்லோரும் ஒரே மாதிரிக் கஷ்டப்படுகின்றனர்.

   Delete
 18. மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற அக்கறை கொஞ்சம் கூட யாருக்கும் இல்லை. பெரிய பெரிய அபார்ட்மெண்டுகள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஜெயலலிதா காலத்தில் மழை நீர் சேகரிப்பு, சூயேஜ் ட்ரீட்மெண்ட் பிளான்ட் இவைகள் இருந்தால்தான் கட்டிடம் கட்ட அப்ரூவல் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் பெரும்பாலான பில்டர்கள், மழை நீர் சேகரிப்பு என்று ஏதோ பெயருக்கு காட்டினார்களே தவிர, அதை முறையாக செய்யவில்லை. அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை.

  கோடையில் தண்ணீர் தண்ணீர் என்போம், மழை பெய்தால், மழையால் மக்களுக்கு அவதி என்போம். மழை பெய்யும் பொழுது அதை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.

  கிராமத்து இளைஞர்கள் நீர் நிலைகளை மீது எடுப்பது போல நகரத்து இளைஞர்கள் செய்வதில்லை.

  தெரியவில்லையே(நெல்லை தமிழனுக்கு தெரிந்திருக்கலாம்). இருந்தாலும் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை நன்றாகத்தானிருக்கிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. //தெரியவில்லையே(நெல்லை தமிழனுக்கு தெரிந்திருக்கலாம்). இருந்தாலும் உங்களின் வித்தியாசமான அணுகுமுறை நன்றாகத்தானிருக்கிறது. நன்றி. // எதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்றே புரியவில்லை. மற்றபடி உங்கள் கருத்துக்கு நன்றி.

   Delete
 19. தண்ணீர் வறட்சி பற்றி நானும் நிறைய அறிகிறேன் சகோதரி. தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில். அது மக்கள் பெருக்கம் கூடிப் போனதால்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல். சென்னையைச் சுற்றியே தான் எல்லாமும் எனும் போது..என்றாலும் மக்களும் அரசும் இன்னும் நிறைய விழிப்புணர்வைப் பெற வேண்டும்.

  எங்கள் ஊரில் இப்பிரச்சனை இல்லை. என்றாலும் இங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன், கேரள மக்கள் அறிவு பூர்வமாகச் சிந்திப்பார்கள். தமிழகத்தில் உணர்வு பூர்வமாகச் சிந்திப்பார்கள். ஆகவே இங்கே மக்களுக்கு விழிப்புணர்வு என்பது குறைவே! :(

   Delete
 20. கீதாக்கா அத்தனை பாயின்டுகளும் சரியே.

  ஒன்று மட்டும் உறுதி...கிராமங்கள் அழிந்து வந்தால் கண்டிப்பாக ஒரு நாடு வறட்சிக்குப் போகும். கிராமங்களிலிருந்து மக்கள் நகரத்திற்குப் போகும் சூழல் வரும் போதுதான் இத்தனையும். அரசு கிராமங்களையும் அதன் அருகில் இருக்கும் சிறு ஊர்களையும் கவனிக்க வேண்டும் நீங்கள் சொல்லியிருப்பது போல். எல்லமஏ பெரிய நகரங்களுக்கு வரும் போதுதான் இப்படிப் பிரச்சனைகள். அதுவும் அரசியல் ஊழலும் சேர்ந்து கொள்கிறது. அடாவடிகள்..தண்ணீய்ர் அரசியல் என்று.

  இப்போது சென்னை ஐடி நிறுவனங்கள் கோயம்புத்தூரைக் குறி வைத்துப் போக முயற்சி என்று கேள்விப்பட்டேன். கோயம்புத்தூரிலும் ஒன்றும் பெரிய அளவு தண்ணீர் கிடையாது. ஏதோ ஓடும் அங்கும் பல இடங்களில் பிரச்சனை உண்டு. இனி அந்த ஊரும் நாசம் தான்...என்று நினைத்துக் கொண்டேன்...

  விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழில்களும் எப்போது நலிந்தனவோ அப்போதே இக்கஷ்டங்கள் தொடங்கிவிட்டன...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மதுரை, கோவை போன்ற நகரங்களும் தண்ணீர்ப் பிரச்னைக்கு உள்ளாகி இருக்கும் நகரங்களே. ஒரு சில ஐடி நிறுவனங்கள் திருச்சிக்கு மாறலாமா என யோசித்து வருவதாகப் படித்தேன். எப்படியாயினும் சென்னையின் ஜனப்பெருக்கம் குறைந்தால் தான் விடிவு கிடைக்கும்.

   Delete