எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 12, 2019

இந்த உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

சில வருடங்கள் முன்னர் தான் ஓர் இயற்கைப் பேரிடரில் தமிழ்நாட்டு யாத்திரிகர்கள் வட மாநிலத்தில் இமயமலைப்பகுதியில் மாட்டிக் கொண்டிருந்த போது எழுதி இருந்தேன். வடக்கே பயணம் செய்ய ஆசைப்படும் தென்னாட்டவர், முக்கியமாய்த் தமிழர்கள் அதற்கான சரியான மாதத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.  மார்ச்-ஏப்ரல் பயணம் கூடப் பரவாயில்லை போல! மே மாதத்துக்குப் பின்னர் ஜூலை-ஆகஸ்ட் 15 தேதி வரை வடக்கே பயணம் செய்ய ஆசைப்படுவதைத் தவிர்த்து விடுங்கள்.  ஏனெனில் வடக்கே மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலும் கடுமையான வெயிலும் வெப்பமும் நிலவும். ஜூன் மாதத்தில் பருவக்காற்று ஆரம்பித்து மழை அங்கெல்லாம் முழுவதுமாகப் பரவ ஜூன் 20 தேதிகளுக்கு மேல் ஆகும். இடைப்பட்ட காலங்களில் அங்கே பயணிக்கும் தென்னாட்டவர் அதீத வெப்பத்தால் அல்லல் பட்டு உயிரையும் இழந்து விடுகின்றனர். அதே போல் மழைக்காலத்தில் மாட்டிக்கொள்ளும் பயணிகள் மலைப்பகுதிகளில் பயணம் செய்கையில் நிலச்சரிவு, பெருவெள்ளம் போன்றவற்றில் சிக்கிக் கொண்டு அவதிப்படுகின்றனர்.

இங்கே தமிழகக் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் வெயில் காலத்தில் நமக்கு அதிகமாக வியர்வை வந்து விடும். அதனால் உடல் வெப்பம் சமன் நிலையில் பாதுகாக்கப்படும்.  மேலும்  நாம் அதற்கேற்ற உணவை எடுத்துக் கொண்டு நம்மைக் காத்துக் கொண்டு விடுவோம். குறைந்த பட்சமாகத் தண்ணீராவது அதிகம் குடிப்போம். ஆனால் வடக்கே போகப் போக வெப்பம் அதிகம் ஆக ஆக அனல்காற்று வீசத் தொடங்கும்! வெயில் கடுமையாக இருப்பதோடு உடலில் இருந்து வியர்வை எல்லாம் வராது! முதலில் அதைப் பார்த்துவிட்டு நமக்கு ஆஹா இத்தனை வெயில் அடித்தாலும் இங்கே புழுக்கமே இல்லையே எனத் தோன்றும். ஆனால் இது தான் கெடுதல் அதிகம் உள்ளது. உடலில் சேர்ந்த வெப்பம் வியர்வையாக வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடுவதால் நம் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். அதனால் மயக்கம், வாந்தி, உடல் சத்தை இழப்பதால் வரும் சோர்வு போன்றவை அதிகரிக்கும். வெயிலுக்குப் பழக்கம் இல்லாதவர்களுக்கு சன் ஸ்ட்ரோக் எனப்படும் ஒருவகைப் பக்கவாதம் கூட வரலாம். இதனாலும் உடல் நலன் மோசமாகக் கெட்டுப் போகும். மேலும் நாம் உண்ணும் உணவிலும் மாற்றம் ஏற்படுவதால் அந்த உணவைச் சரிவரச் செரிக்க முடியாமல் அவதியும் படலாம்.

ஆகவே கூடியவரை வடக்கே பயணம் செய்பவர்கள், சுற்றுலா செல்லுபவர்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களைக் கட்டாயமாகத் தவிர்க்கவும்.  இந்த நேரம் குளிரெல்லாம் இருக்காது அதனால் வடக்கே செல்லச் சரியான நேரம் என நினைத்தீர்களானால் அதைவிடப் பெரிய துன்பம் வேறே இல்லை. இன்றைய செய்தியில் வட மாநிலச் சுற்றுலா சென்றவர்கள், குறிப்பாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெயிலின் கொடுமை தாங்காமல் ரயிலிலேயே இறந்திருக்கின்றனர் எனச் சொல்கின்றனர். நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, பெங்களூர் போன்ற ஊர்களில் இருந்து பயணம் மேற்கொள்ளுபவர்களுக்கு வெயிலின் கொடுமை தெரியாது! இதைச் சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் புரிந்து கொண்டு தக்க பாதுகாப்புடன் வருமாறு அறிவுறுத்தி இருக்க வேண்டும். மேலும் அவர்கள் பயணம் செய்த பெட்டியும் சாதாரணப் பெட்டி. குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி அல்ல. சாதாரணப் பெட்டி. பயணத்திற்கான செலவு குறைவு என்பதால் இதில் ஏற்பாடு செய்திருக்கலாம். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கொஞ்சம் யோசித்துத் தங்களுக்குக் கொடுக்கப்படும் பயணச்சீட்டுச் சலுகை  பற்றி சுற்றுலா ஒருங்கிணைப்பாளரிடம் கலந்து பேசி அதற்குண்டான சான்றுகளை அளித்துப் பயணச்சீட்டில் சலுகை பெற்று வசதியாகக் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பிரயாணம் செய்திருக்கலாம்.

ஏனெனில் இறந்தவர்கள் அனைவருக்குமே மூத்த குடிமக்கள் சலுகைக்கு ஏற்றவர்களாக இருந்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் அந்த சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு குறைந்தது மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியிலாவது பயணம் செய்திருக்கலாம். பெண்களுக்கு 55 வயதில் இருந்தே சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இவற்றைப் பற்றிய விழிப்புணர்வைப் பயணம் செய்பவர்களிடம் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்படுத்த வேண்டும். ரயில்வே நிர்வாகம் இனியாவது வருங்காலத்தில் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சாதாரணக் குளிர்சாதன வசதியற்ற இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்குப் பதிலாக முழுவதும் குளிர்சாதன வசதியோடு கூடிய மூன்றாம் வகுப்புப் பெட்டிகள் அதிகம் கொண்ட ரயில்களை இயக்க வேண்டும். அதுவும் முக்கியமாகத் தொலைதூரப் பயணத்திற்கு.  அதற்கான கட்டணம் சாதாரண இரண்டாம் வகுப்பிற்கு மக்கள் செலுத்திய கட்டணமாகவே இருந்தால் நல்லது. அல்லது 50 ரூ வரை ஏற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க முடியும். அதோடு இல்லாமல் ஜூன் மாதத்திற்குப் பின்னர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இமயமலைப்பகுதிகளில் பயணம் செய்வோர் தங்கள் பயணத்திட்டத்தை ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். ஏனெனில் அங்கெல்லாம் அப்போது தென்மேற்குப் பருவ மழை முழு வீச்சில் இருக்கும். நம் ஊரில் தென்மேற்குப் பருவ மழை அவ்வளவாக இருக்காது. அதை நினைத்துக் கொண்டு வடக்கே சுற்றுப் பயணம் செய்யக் கூடாது. அதிலும், காசி, கயா, ப்ரயாகை போன்ற ஊர்களுக்குப் போகிறவர்கள் ஆகஸ்ட் 15 தேதிக்கும் பின்னர் சென்றால் நலம். அப்போது அங்குள்ள சீதோஷ்ணமும் ஏற்கும்படியாக இருக்கும். குளிரெல்லாம் நவம்பருக்குப் பின்னரே முழு வீச்சில் ஆரம்பிக்கும். நவம்பர் வரை நம்மால் தாங்கக் கூடிய குளிர் தான் இருக்கும்.

மலைப்பிரதேசங்களில் பயணம் மேற்கொள்வோர் நிலச்சரிவுக்குத் தயாரான மனநிலையுடன் செல்ல வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் மனோபாவமும் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அங்கெல்லாம் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். பல சமயங்கள் உணவோ, குடிக்க நீரோ இல்லாமல் மணிக்கணக்காகக் காத்திருக்க நேரிடும். இதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் மனோபாவம் வேண்டும். பொதுவாகத் தமிழ்நாட்டு மக்கள் ஆகஸ்ட், செப்டெம்பரில் போனால் அங்கெல்லாம் குளிர் வந்துவிடும் என நினைக்கின்றனரோ எனத் தோன்றுகிறது.  அப்படி எல்லாம் குளிர் வந்துவிடாது. இது போன்ற சுற்றுலாக்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்களுக்காகவே ஏற்படுத்தப்படுவதால் அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள் தான்.

குலு, மனாலி, ஷிலாங், டார்ஜிலிங், காங்டோக் போன்ற நகரங்கள் மே, ஜூன் மாதங்களில் பயணம் செய்யச் சிறந்தவை! இவற்றுக்குக் குழந்தைகளையும் தைரியமாக அழைத்துச் செல்லலாம். ஆனால் புனிய யாத்திரை செய்யும் வயோதிகர்கள் மட்டும் கொஞ்சம் யோசித்துத் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

46 comments:

 1. நல்ல விழிப்புணர்வு பதிவு.
  பயணம் செய்ய விரும்புவர்கள் பாதுகாப்பாய் பயணம் செய்ய வேண்டும்.
  என் கணவரின் அக்கா(பெரியப்பாமகள்) விளாத்திகுளத்திலிருந்து பஸ்ஸில் வட நாட்டு சுற்றுலா அதுவும் தனியாக ஜூன் மாதம் பயணம் செய்தார்கள், பல வருடங்களுக்கு முன்பு. டெல்லி வந்த போது உடல்நிலை பாதிப்பு அடைந்து இறந்து விட்டார்கள். நீண்ட தொலைவு எப்படித்தான் பஸ் பயணம் ஏற்பாடு செய்வார்களோ! இந்த சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள்.

  நல்ல விவரமாக செய்திகளை சொல்லி இருக்கிறீர்கள். அனைவருக்கும் உதவும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! நேற்றைய செய்தியைப் படித்ததும் மனம் வருந்தியது! மக்கள் இன்னமும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். என் நாத்தனார் கூட இப்படித் தான் தமிழ்நாட்டுச் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஒருவர் மூலம் முக்திநாத், அயோத்தி, காசி, கயா, பிரயாகை, சித்ரகூடம், நைமிசாரணியம் ஆகிய இடங்களுக்குப் பேருந்திலேயே பயணித்திருக்கிறார்! அதிலும் போக்ரா வரை முக்திநாத் பயணத்தில் பேருந்து! அதன் பின்னர் குதிரைப் பயணம் போல! எப்படியோ அந்த இறைவன் அருளால் பத்திரமாய்த் திரும்பி விட்டார்!

   Delete
 2. வணக்கம் சகோதரி

  நல்ல விபரமான விழிப்புணர்வு பதிவாக கொடுத்திருக்கிறீர்கள். பயணம் மேற் கொள்பவர்கள் படித்து பயன் பெறும் அருமையான பதிவு. எந்த செய்தி எனத் தெரியவில்லை. ஏதோ ஆபத்தை சந்திந்தவர்களை கண்டதும் தங்கள் மனம் பொறுக்காமல் எழுதியிருப்பது மட்டும் புரிகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா! எல்லா தினசரிகளும் இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதாக என் கணவர் சொன்னார். நாங்க திருக்கயிலை யாத்திரை சென்றபோதும் இப்படித் தான் இரண்டாம் நாள் பரிக்ரமாவின் போது ஒரு பெண்மணி, தெலுங்கு எழுத்தாளர், ஆக்சிஜன் போதாமல் இறந்தார். இத்தனைக்கும் இரண்டாம் நாள் கடினமான பரிக்ரமா என்றும் அப்போது எங்கும் நிற்கக் கூடாது, வழிகாட்டி அழைத்துச் செல்லும் வழி வேகமாக அதிக உயரமான கணவாயைக் கடந்து விட வேண்டும் என்றும் பலமுறை அறிவுறுத்தி இருந்தார்கள்.

   Delete
 3. நல்ல விவரமான விழிப்புணர்வு பதிவு... விவரம் அறிந்தவஎகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும்...

  >>> நீண்ட தொலைவு எப்படித்தான் பஸ் பயணம் ஏற்பாடு செய்வார்களோ!
  இந்த சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள்..<<<

  என்று ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் வருந்தியிருக்கின்றார்கள்...

  சுற்றுலா அமைப்பாளர்களுக்கு கூடுமானவரை தட்ப வெப்ப சூழ்நிலைகள் எல்லாம் தெரியும்..

  இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொன்னால் கல்லாப்பெட்டி நிறைவது எப்படி?...

  அவ்வடியே சொல்லியிருந்தாலும்
  நம்மவர்களுக்கு விடாப்பிடியான குணம் -

  அதெல்லாம் ஒன்னும் பண்ணாது... பார்த்துக்கலாம்!... - என்று!..

  எப்படியோ இறை நிழலைச் சேர்ந்து விட்டார்கள்... இனியாவது அமைதி பெறட்டும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை, இங்கே ஶ்ரீரங்கத்திற்கும் குஜராத், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பேருந்துகள் வருவதைப் பார்த்தால் கவலையாகவும் பயமாகவும் தான் இருக்கிறது. இங்காவது பரவாயில்லை. வடக்கே பல இடங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய இடங்கள்! அங்கெல்லாம் பேருந்துப் பயணம் என்பது மிகவும் கஷ்டம். பணத்திற்காக இம்மாதிரி சேவைகள் செய்யாமல் மக்கள் உயிரும் காப்பாற்றப்பட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தில் இம்மாதிரியான பயண ஏற்பாடுகளைச் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய வேண்டும்.

   Delete
 4. நல்ல பதிவு கீதாமா.
  இது எப்போது நடந்தது. மஹா பயங்கரமாக இருக்கிறது.
  இவரோட மாமா மனைவி இப்படித்தான் கடுங்கோடையில் அங்கு சென்று
  வரும்போது க்ஷீண நிலையில் வந்து இறந்தும் விட்டார். பாவம் அந்த மாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி! கடுங்கோடையில் வடமாநிலப் பயணம் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதிலும் ஒரு சிலர் இந்தக் கோடையில் பத்ரிநாத், கேதார்நாத் போன்ற குளிர் பிரதேசங்கள் போனால் சரியாக இருக்கும் என நினைக்கின்றனர். அது முற்றிலும் தவறு. உடல் கடுங்கோடைக்குப் பழக்கப்பட்டு இருக்கையில் திடீரென அதற்குக் கடுங்குளிரை அறிமுகம் செய்யலாமா?

   Delete
 5. வேதனை. இன்றைக்குக் கூட சில பெரியவர்களை - கொடுமையான அனல் காற்று வீசும் இச்சமயத்தில் வட இந்தியா பயணம் வந்திருக்கும் பெரியவர்களை - அலுவலகத்திலிருந்து வரும் போது பார்த்தேன். குளிர் காலம் அல்லது கோடைக்கும் குளிருக்கும் இடைப்பட்ட காலம் தான் தலைநகர்/வட இந்தியா வர சரியான காலம். ஆனால் பலரும் மே-ஜூன் மாதத்திலேயே வருகிறார்கள்.

  இரயிலில் ஏற்பட்ட மரணங்கள் - மனதை வருத்தியது..... இந்த ஊரிலேயே பல வருடங்கள் இருந்து பழகியவர்களுக்கே, சில சமயம் வெயில் தாங்க முடியாது! பாவம் அந்த பெரியவர்கள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்! நீங்க சொல்வது உண்மை தான். எல்லாம் நம்ம ஊர்ச் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் செய்யும் வேலை தான் இது! வெயிலை யாராலும் தாங்க முடியாது என்னும்போது சுற்றுலா வருபவர்களால் எப்படிச் சுற்றிப் பார்க்க முடியும்!

   Delete
 6. அதுவும் குன்னூர் ஊட்டிக்காரர்கள் சென்று அந்த வெயிலில் மாட்டி இருக்கிறார்கள். அவர்கள் வசிப்பதோ குளிர்ப்பிரதேசம். இப்படி ஒரு வெயிலில் மாட்டினால் என்ன செய்வார்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்...இப்போ பொறந்த குழந்தையே வெளில வரும்போது மொபைல்லதான் வருது. ஒரு இடத்தின் தட்ப வெப்பம் பார்க்காமலா டிரிப் ப்ளான் பண்ணுவாங்க? மழை இருக்குமா, மேகம் உண்டா என்றெல்லாம் உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாமே..

   Delete
  2. உயிரிழந்தவர்கள் வயதானவர்களாகத் தெரிகிறார்கள். அவள் மொபைலோடு பரிச்சயமில்லாதவர்களாக இருக்க வாய்ப்புஇருக்கிறது. மேலும், பரிச்சயமிருந்தாலுமே இதைப்பார்க்க வேண்டும் என்று தோன்றியிருக்க வாய்ப்பில்லையே... எப்படியோ.. பாவம்.

   Delete
  3. ஸ்ரீராம், குன்னூர், ஊட்டிக்காரங்க இம்மாதிரிக் கடுங்கோடையை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க! அதுவும் அவங்க சுற்றுலாவின் போது நடந்த பயணத்தில் இறக்கவில்லை. திரும்பும்போது ரயில்பெட்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தப்போ ஏற்பட்ட அதீத வெப்பம் காரணமாக இறந்திருக்கின்றனர்.

   Delete
  4. நெல்லைத் தமிழர் சொல்லுவதைப் போல் எல்லோருமே மொபைலைப் பார்ப்பதில்லை. நானும் சேர்த்து. காலையில் ஒருமுறை பார்த்தால் மதியம் ஒரு முறை, இரவு படுக்கையில் ஒரு முறை பார்ப்பேன். நடுவில் ஏதேனும் அவசரச் செய்தி வந்திருந்தால்/வரும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கும். அப்போது பார்ப்பேன்.

   Delete
  5. மொபைல் இருக்கிறதே என்று சொன்னவர் நெல்லை. பார்க்க மாட்டார்கள் என்று சொல்லி இருந்தது நான். முந்தைய தலைமுறையினர் சிலருக்கு சாதா மொபைல் பற்றியே தெரியாது

   Delete
  6. அதே தான் நானும் சொல்கிறேன். மொபைல் இருக்கிறதே என்று நெல்லைத் தமிழர் சொல்லுவதைப் போல் எல்லோருமே மொபைலைப்பார்ப்பதில்லை என! முந்தாநாளில் இருந்து நேற்று மதியம் வரை நான் மொபைலைப் பார்க்கவே இல்லை. இன்றும் மத்தியானம் தான் பார்த்தேன்.

   Delete
 7. நான் சென்றபோதே வெயில் நாற்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது. நான் சென்றது ஏப்ரல் ஆறு! என் அனுபவத்தில் சுற்றுலா அமைப்பாளர்கள் சரியாய்ச் செய்வதில்லை என்றுதான் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்... இதுக்கு சில காரணங்கள் இருக்கு. அமையும் கூட்டம், அவர்களின் விருப்பம். அப்புறம் எவ்வளவு ஒத்துழைப்பு அவங்க கொடுக்கிறார்கள் என்பதும் முக்கியம். எங்க குழுவின் தலைவர், 8 மணிக்கு கிளம்பணும் என்றால் நாங்க ரெடியா இருக்கணும் என்று எதிர்பார்ப்பார். லேட்டாக்குறவங்களுக்காக வண்டி நிற்காது (10 நிமிடம்தான் அதிகபட்சம்). அப்புறம் அவர் சொல்கிற வரிசைப் பிரகாரம் கோவிலில் தரிசனம் பண்ணிட்டு டக்குனு வந்துடணும். அதேபோல சாப்பிடுவதும், முழுசா போதுமான அளவு சாப்பிடறாங்களா, என்ன பிரச்சனைன்னு அப்போ அப்போ கேட்டுக்கொண்டிருப்பார்.

   குழுவில், நடக்கவே முடியாதவர்கள் இருந்தால், அதுவும் பிரச்சனைதான். திரிவேணி சங்கமக் குளியல், தர்ப்பணம் இவற்றில் அதிகமான நேரம் செலவழிந்ததால் உங்கள் குழு கோட்டைக்குள் செல்லவில்லை என்று தோன்றுகிறது.

   எங்கள் முக்திநாத் பிரயாணத்தில், பொகாராவில் திட்டமிட்டதற்கு மாறாக இரு நாட்கள் தங்கவேண்டி வந்துவிட்டது (முக்திநாத்துக்கு ஹெலிகாப்டர் கிடைக்காததால்-அப்போது எலெக்‌ஷனுக்காக ஹெலிகாப்டர் சென்றிருந்தது).

   Delete
  2. பேஸ்புக்கில் எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம் மேடம் புகழ் பெற்ற பணிக்கர் டிராவல்ஸையேசரியில்லை என்று சொல்லியிருக்கிறார். எங்கள் குழுவில் 80 பேர்கள். அனைவரையும் கட்டி மேய்ப்பது கடினம்தான். ஆனாலும் அவர்களுக்கு அது கைவந்திருக்கவேண்டும். பதினோரு மணிக்கு மேல் கிளம்பிய முதல் குழுவுக்காவது காட்டி இருக்கலாம். அதுவும் செய்யவில்லை.

   Delete
  3. வெயில் 40 என்ன 38 என்னும்போதே தாங்க முடிவதில்லை. வித்யா சுப்ரமணியம் எழுதி இருந்ததை நானும் படித்தேன். அம்மாதிரி ஒரு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் எங்களுக்கும் மந்த்ராலயம், நவ ப்ருந்தாவனம் பயணத்தின் போது கிடைத்தார். சாப்பாடுக்கு எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு கடைசியில் மந்திராலயம் மடத்தில் போட்ட இலவசச் சாப்பாடையே எங்களுக்கு வாங்கிக் கொடுத்தார். பின்னர் திரும்பி வருகையில் முன் கூட்டியே ஏற்பாடு பண்ணிட்டேன்னு சொல்லி எல்லோருக்கும் வெஜிடபுள் சாதம் பொட்டலம் கொடுத்தார். ஊசிப் போய்விட்டது. கடைசியில் அந்த ரயிலில் பான்ட்ரி கார் இருந்ததால் அவங்களிடம் சொல்லிச் சப்பாத்தி வரவழைத்துச் சாப்பிட்டோம்.

   Delete
  4. முக்திநாத் பயணம் என்னதான் நாம் திட்டமிட்டாலும் அதன்படி அமைவது அந்த முக்திநாதன் அருளால் தான்! நாங்கள் போனப்போவும் ஹெலிகாப்டர் மத்தியானம் பதினொன்றரை வரை கிடைக்கவில்லை வானிலை காரணமாக! பின்னர் கிடைத்துச் சென்றோம். அங்கிருந்து தரிசனம் முடித்துக் கிளம்புகையில் மறுபடி மேகங்கள் மூடிக் கொண்டு ஹெலிகாப்டர் கிளம்புமா, கிளம்பாதா என்னும் சம்சயம். எங்களில் பலரும் அன்று மாலை விமானத்தில் தில்லி திரும்ப வேண்டும். கடைசியில் அரை மணி நேரத் தாமதத்துக்குப் பின்னர் ஹெலிகாப்டர் கிளம்பியது! காத்மாண்டு வந்து சேர்ந்தோம்.

   Delete
 8. சமீபத்தில் வித்யா சுப்பிரமணியம் மேடம் சுற்றுலா சென்றுவிட்டு அங்கிருந்த நிலச்சரிவுகளைக் காணொளியாகக் காட்டியபோது பயமாய்தான் இருந்தது. இந்த ஜூலையில் எங்கள் உறவுகளில் சிலர் வடநாட்டு சுற்றுலா செல்கின்றனர். எந்த ஊர் என்று சரியாய் நினைவில்லை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நானும் பார்த்தேன். ஆதி கைலாஷில் அவர் காட்டிய இடங்கள்!

   Delete
 9. பயனுள்ள பதிவு சாவைப் பற்றி பயம் கூடாதுஆனால் உடல் ஒத்துழைக்காது

  ReplyDelete
  Replies
  1. ஆம், ஐயா. உடம்பு ஒத்துழைக்கணும் தான்!

   Delete
 10. மிக முக்கியமான பதிவு. நான் செப்டம்பரில்தான், ஸ்ரீராம் பார்க்கவிட்டுவிட்ட இடங்களைப் பார்க்க (கயா...) செல்கிறேன். அதற்கு முன்பு தஞ்சைப் பகுதியில் யாத்திரை...

  ReplyDelete
  Replies
  1. கயா, புத்தகயா இடங்களில் புத்தர் சம்பந்தப்பட்ட ஒன்றையும் நாங்கள் பார்க்கவில்லை. மோசமான பயணத்திட்டம். அங்கிருந்து கிளம்பி காசி வந்து ஞாயிறு முழுவதும் சும்மா இருந்தோம். அங்கு தம்பதிபூஜை செய்தவர்கள் மட்டும் அன்று என்கேஜ்ட் ஆக இருந்தார்கள்.

   Delete
  2. சென்று வாருங்கள் நெ.த.

   ஶ்ரீராம், புத்தகயாவில் நீங்க சரியாக் கேட்டுக்கலைனு நினைக்கிறேன். நீங்க கிளம்பும் முன்னரே வெங்கட் புத்தகயா பற்றிய பதிவு போட்டு விட்டார்! அப்போதே தகவல்கள் சேகரித்துக் கொண்டிருக்க வேண்டும்.

   Delete
  3. தகவல்கள் சேகரித்து பயன் என்ன? நள்ளிரவு மூன்று மணிக்கு புத்தகயா. காலை ஏழுமணிக்குப் புறப்பட்டு ஸ்ராத்தம்செய்யும் இடம். அங்கிருந்து திரும்பியபோது மாலை மணி ஐந்தரை. தங்கி இருக்கும் இடத்தை உடனே காலி செய்யவேண்டும் என்று சொல்லி விட்டார்கள் என்று சொல்லிக் கிளம்பி விட்டார்கள். நாங்கள் அந்த இடங்கள் பார்க்கவில்லையே என்று சொன்னாலும் ஏதோ நொண்டிச் சமாதானங்கள் சொன்னார்கள். கிளம்பி காசி வந்து விட்டோம்.

   Delete
  4. ஒரு யாத்திரையில் எல்லா இடங்களையும் கவர் பண்ண முடியாது. நாங்க வடநாட்டு யாத்திரை போனபோது முந்தின நாள் அங்கு வந்தவங்களுக்கு ஆக்ரா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாங்க போகும் குரூப்பில் முடிந்த அளவு எல்லா இடங்களையும் (வைணவக் கோவில், மற்றும் முக்கியமான சைவ கோவில்-பசுபதிநாத் போன்று) காட்டிடுவாங்க.

   யாத்திரைல சிரமங்கள் சகஜம். பொகாராவில் ஒரு நாள் அதிகமானதுனால, நாங்க நேபாள் எல்லைக்கு நடு இரவில் வந்து, அங்கயும் ஒரு தங்குமிடம் ஏற்பாடு செய்து சாப்பாடு பண்ணிப்போட்டாங்க (உணவு குறை சொல்லவே முடியலை. காலை-10 மணி சாப்பாட்டில் ஒரு ஸ்வீட். அதுபோல யாத்திரை முடியும் நாளில் பெரிய லட்டு, காரம் போன்றவை கைல தந்தாங்க. குறைவா சாப்பிட்டால்தான் வந்து கேள்வி கேட்பாங்க. ஆனால் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க).

   ஆனால் குழுவோட போகும்போது நாம் நினைக்கும் இடங்களுக்குப் போக முடியாது. உதாரணமா, சோழ நாட்டுத் திருப்பதிகள் சேவிக்க போகும்போது, கும்பககோணத்தில்-பெரிய கடைத்தெரு பக்கத்தில் ஒரு கடையில் ஜாங்கிரி வாங்கணும்னு நினைத்திருக்கேன். அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். 40 கோவில்கள் 6-7 நாட்களில் என்று இருக்கும்போது நிறைய மற்ற இடங்களுக்குப் போக முடியாது.

   Delete
  5. திருக்கயிலை, அஹோபிலம், நவ பிருந்தாவன், நாசிக், பஞ்சவடி, ஷிர்டி, ஷனி ஷிங்க்னாப்பூர் தவிர்த்த மற்றப் பயணங்கள் எல்லாம் தனியாகத் தான் போனோம். அவற்றில் அஜந்தா, எல்லோராவும் அடக்கம். குழுவோடு எல்லாம் போகவில்லை. சுற்றுலாப் பேருந்து!ஆனால் சுற்றிப் பார்க்கச் சென்றது நாங்க தனித்தனியாக!

   Delete
 11. கீசா மேடம்...பெண்களுக்கு 58 வயதுதானே சீனியர் சிடிசன்? அதுவும் தவிர அவங்களுக்கு 50% சலுகை, ஆண்களுக்கு 40% சலுகைன்னு நினைக்கிறேன். எனக்கெல்லாம் அந்த வயது வருவதற்கு இன்னும் 60 வருடங்கள் இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. பெண்களுக்கூ 55 வயது என எப்போதிலிருந்தோ சலுகைகள் இருக்கின்றன.

   Delete
 12. உண்மையான தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு மா ...

  இதே போல் அப்பா அம்மா பல வருடங்களுக்கு முன் சென்ற பயணத்தில் உடன் பயணித்த பெரியவர் உயிரழந்த இழப்பு என்றும் மறக்க முடியாது ...

  இப்பொழுது இங்கு விரிவாக வாசிக்கும் போது தான் பல செய்திகள் தெரிகின்றன ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனுராதா, பல மாதங்களுக்குப் பின்னர் வருகை தந்ததுக்கும் கருத்துப் பதிந்ததுக்கும் நன்றி.

   Delete
 13. வடநாடு பயணம் மேற் கொள்பவர்கள் படித்து பயன் பெறும் அருமையான பதிவு. ஆனால் எவ்வளவு வெப்பம் தாக்கினாலும் வியர்வை வராது என்கிற செய்தி புதுமையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜட்ஜ்மென்ட் சிவா, முதல் வருகை? கருத்துக்கு நன்றி. கீழே நீங்க சொல்லி இருக்கும் காரணம் சரியானது! சென்னை போலக் கசகசவென வியர்க்காது!

   Delete
 14. அனல் காற்று அதிகமாக வீசுவதால் காற்றிலுள்ள வெப்பத்தினால் வியர்வை துளிர்ப்பதற்கு முன்னாலே ஆவியாகிவிடுகிறது என நினைக்கிறேன்... இதனாலேயே உடல் உஷ்ணம் அதிகரித்து வெய்யிலினால் உயிர்பலி அதிகரிக்கிறது என நினைக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், இதுவும் ஆபத்தானதே!

   Delete
 15. மிகவும் வேதனையான விஷயம். நாங்களும் தில்லிக்கு ஏப்ரல் மாதம் கடைசி வாரம் சென்றோம். எங்களுக்கு வேறு சமயம் இல்லாததால். போகும் போது ஃப்ளைட். முதல் முதல் ஃப்ளைட் பயணம். வரும் போது ரயிலில் தான் ஆர்டினரிதான் கிடைத்தது. நாங்கள் சென்றது மூன்று வருடம் முன்பு. வெயில் கடுமைதான். நல்ல பதிவு சகோதரி.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. ஏப்ரல் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாம். குளிரின் மிச்சம், மீதி கொஞ்சம் கொஞ்சம் இருக்கும். மே, ஜூன் கடுமை!

   Delete
 16. கீதாக்கா எனக்குத் தெரிஞ்சே பலரும் தில்லி ஆக்ரானு இந்த ஏப்ரல் மே லதான் போறாங்க. எங்கிட்ட யாராவது கேட்டாங்கனா இந்த மாசத்துல போகாதீங்க நுதான் சொல்வேன். ஆகஸ்ட் கடைசில போங்கனு. அதுவே பாத்தீங்கனா நாங்க ஒரு தடவை ஆகஸ்ட் கடைசில செப்டம்பர் முதல்ல தில்லிக்கு போனப்ப சென்னையே பெட்டர்னு தோணிடுச்ஹ்கு. அப்படி குளிக்கறா மாதிரி வியர்த்துக் கொட்டியது. நாம் சென்னல பார்க்காத வியர்வை கிடையாதுதான். ஆனாலும் அது ட்ரெஸ் எல்லாமே ஈரமார அளவு அப்ப வியர்த்தது அதுவும் ரயில்வே ஸ்டேஷனில். அப்புறம் ரயில்ல ஏறினப்புறம்தான் அதுவும் ஏசிப் பெட்டி என்பதால்..
  என்றாலும் இந்த சம்மர் மாதங்களில் மட்டும் நாங்க வடக்கே போகவே மாட்டோம்...போக அஞ்சுவோம். சிம்லா மணாலி மலைப்பிரதேசம் தவிர...

  குளிர் கூட நான் தாங்கிடுவேன் ஆனால் வெயில் ரொம்பவே சிரமப்படுவேன் நான்.

  நீங்க சொல்லியிருக்கும் ஐடியா சூப்பர் நானும் நினைப்பதுண்டு. ஒரு 50 ரூ கூட்டி எல்லாப் பெட்டிகளுமே குளிரூட்ட்ப்பட்ட பெட்டியா வைக்கலாமேனு. உடனே சொல்லுவாங்க ராஜ்தானி இருக்கேனு...ஆனா அதெல்லாம் எல்லா சாதாரண மக்களால போக முடியாதே பாவம்...அரசு அப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது போகத் தேர்ந்தெடுக்கின்றனர். கோடையைத் தவிர்க்க வேண்டும் என்று தோன்றுவதில்லை.

   Delete
 17. இந்த நிகழ்வுமிகவும் வேதனைக்குரிய நிகழ்வு பாவம் எல்லா மக்களும்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், என்ன செய்ய முடியும்! :(

   Delete