எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 18, 2020

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி!

இன்று காலை எழுந்ததே தாமதம். அப்புறமா வீடு சுத்தம் செய்யும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டுக் காஃபிக்குப் பால் காய்ச்சினால் பால் திரிந்துவிட்டது. சரி, பாத்திரம் சரியில்லைனு நினைச்சு வேறே பாத்திரமும் வேறே பாலும் வைத்துக் காய்ச்சினால் அதுவும் பெப்பே தான்! சரிதான்! வேறே பாக்கெட் எடுத்துக் கொண்டு பாலைக் காய்ச்சலாம்னு வேறே இன்னொரு பாக்கெட்டை எடுத்துப் பாலைக் காய்ச்சினால் பாத்திரமே துள்ளிக் குதிக்கிறது.  அந்தப் பாலும் ஓஹோ தான். அதில் மிச்சப் பாலையும் காய்ச்சிப் பாத்திரத்தைத் தேய்ப்பதில் சேர்க்கவேண்டாம்னு எல்லாப் பாலையும் ஒரே பாத்திரமாய்க் கொட்டி வைத்தேன். வேறே புதுப் பால் பாக்கெட் வாங்கறேன்னு ரங்க்ஸ் கிளம்பினார். ஏற்கெனவே பூத்திற்கு வரும் வாடிக்கையாளர்களில் சிலர் பால் திரிந்து விடுவதாகப் புகார் சொல்லிக் கொண்டே இருந்திருக்கின்றனர். நமக்கு இன்று வரை எந்தப் பிரச்னையும் இல்லை. தேதியை வேறே பார்த்துவிட்டே வாங்குவோம். எல்லாம் சரியாய் இருக்க ஏன் இப்படினு புரியலை. மொத்தமாகப் பால் கொள்முதல் செய்யும் தொட்டியில் சுத்தம் இல்லாமல் இருந்திருக்கும், அல்லது சரியாகச் சுத்தம் செய்திருக்க மாட்டார்கள் என ஒரு தரப்பார் சொல்கின்றனர். எப்படியோ தெரியலை. அப்புறமா வேறே பால் வாங்கி வந்தார். அதில் ஓர் சிவப்புப் பாக்கெட் பாலை எடுத்துக் காய்ச்சிக் காஃபி கலந்து குடிக்கையில் ஆறே முக்கால் மணி ஆகி விட்டது. அதன் பின்னர் கணினியில் உட்கார்ந்தால் வீட்டு வேலைகள் தாறுமாறாகச் செய்யும்படி ஆகிடும் என்பதால் கணினியில் உட்காராமல் நேரே வேலைகளைச் செய்ய ஆரம்பித்து விட்டேன். எல்லாம் முடிந்து கணினியில் உட்காரும்போது மணி பனிரண்டரை ஆகி விட்டது.

ஏற்கெனவே இரண்டு கணினியிலும் வேர்ட் சரியாகத் திறக்க முடியாமல், அதில் காப்பி, பேஸ்ட் பண்ண  முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன். இரண்டு கணினியிலும் வேர்ட் டாகுமென்ட் திறப்பதிலும் உள்ளே வேலை செய்வதிலும் பிரச்னை. தினம் அரை மணி நேரம் இரண்டிலும் மாற்றி மாற்றிப் பார்த்தும் ஒண்ணும் புரியலை. இன்னிக்கு மனசில் ஏதோ க்ளிக் ஆகப் புது "டெல்" கணினியில் வேர்ட் 2007 ஐப் புதுசாக இன்ஸ்டால் செய்தேன்.அது வேலை செய்ய ஆரம்பித்ததோடு அல்லாமல் பழைய வேர்ட் டாகுமென்டையும் சரி செய்து விட்டது. அதில் ஏற்கெனவே சேமித்தவற்றை எடிட் செய்ய முடியாமலும், அதில் புதுசாகச் சேர்க்க முடியாமலும் அவதியாக இருந்தது. அது இப்போச் சரியாகி இருக்கிறது. இனி அதில் தொடர்ந்து சில வேலைகள் செய்யணும். அதோடு மின்னூல் வெளியிடவும் முயற்சிகள் செய்து கொண்டு இருக்கேன். கிண்டிலில் செய்வது பெரிய சிரமமாகத் தெரியலைன்னாலும் இன்னமும் பழகிக்கொள்ளவில்லை. இனிமேல் தான் புத்தகம் தயார் செய்ய முயற்சிக்கணும். வெங்கட்டையோ, கில்லர்ஜியையோ, கௌதமனையோ கூப்பிட்டுக் கேட்கலாம் என்றாலும் இந்த ஒரு விஷயத்தில் நாமே முயன்று பார்த்துட்டுச் சரியாய் வரலைனால் கேட்கலாம் என்னும் எண்ணம். எத்தனை நாளைக்குத் தான் க.கை.நா.வாகவே இருப்பது? நாமும் தொ.நு.நி. ஆகவேண்டாமா? பதினைந்து வருஷமாகக் கணினியில் உலவி வருவதற்கு அப்புறமா என்ன அர்த்தம்? எல்லாரையும் விட நான் சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈனியர் வேறே! ஹிஹிஹி, அதுக்காக வயசில் சீனியர்னு நினைச்சுடாதீங்க! நான் இன்னமும் குட்டிக் குழந்தை தான்! :)

விரைவில் என்னுடைய எழுத்துக்களைப் புத்தக வடிவில் கொண்டு வர முயற்சி செய்கிறேன். பெரிசாய் ஒண்ணும் எழுதலைனாலும் எழுதினவற்றில் முக்கியமானவை வரும். ஏற்கெனவே மின்னூல்களாக இருப்பனவற்றைத் திரும்பப் போடலாமானு தெரியலை. போடலாம்னா என்னோட கல்யாண நிகழ்வுகளை மின்னூலாகப் போட்டதைத் திரும்பப் போட எண்ணம், அதில் நிறையவே எழுத்துப் பிழைகள் இருப்பதாய் வெங்கட் சொன்னார். அவற்றைத் திருத்திப் புத்தகமாக மீண்டும் வெளியிட ஆசை.முடியுமா, பார்க்கணும்

நிகழ்கால உலகுக்கு வந்தால் ரஷ்யா கொரோனாத் தடுப்பு மருந்துக்கு வெளியீடு தேதி அறிவித்து விட்டது. யு..கேயும் ஓரளவுக்குத் தயார் என்றே கேள்விப் படுகிறோம். போகப் போகத் தான் தெரியும். அம்பேரிக்காவுக்கு அங்கிருந்து இந்தியா வரும் யுனைடெட் ஏர்லைன்ஸ் மூலமாக விமான சேவைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் என்றாலும் அது "பெண்"களூர், தில்லி, மும்பை வழியாகத் தான். சென்னை இல்லை. அதோடு அங்கு போகும் ஊர்களும் வடகிழக்கு நகரங்களான நேவார்க், நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன் போன்றவை. அவற்றில் சிகாகோ கூட இல்லை. எப்படி இருந்தாலும் நம்ம ஆட்கள் நல்லபடியாப் போய்ச் சேர்ந்தாச்சு! "வந்தே பாரத்" புண்ணியம் கட்டிக் கொண்டது. ஆனாலும் பணம் மிக மிக அதிகம். நேத்திக்குக்  குட்டிக் குஞ்சுலு என்னைப் பார்த்துட்டு "நீ ஏன் பாட்டி மாஸ்க் போட்டுக்கலை?" என்று கேட்டது. ஆங்கிலத்தில் தான்! தாத்தா பால் வாங்கப் போனார். அதனால் மாஸ்க் போட்டுக் கொண்டார். நான் வீட்டிலே தான் இருக்கேன் என்று சொன்னேன். என்ன புரிந்து கொண்டதுனு தெரியலை.

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் தினமும் ஒரு குழந்தை ஐந்திலிருந்து பத்து வயதுக்குள்! பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை. இவங்க என்ன மனிதர்களா? மிருகங்களானு தெரியவில்லை. அதோடு வரதக்ஷிணைக் கொடுமையால் ஓர் இளம்பெண் கொலை/தற்கொலை! என்னனு தெரியலை. யாரோ ஒருத்தர் போலீஸிடமிருந்து தப்பிக்கக் கை நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி! ஒண்ணும் சொல்லும்படி இல்லை. இதெல்லாத்தையும் விடப் பெரிய விஷயம் சென்னை கொரோனா தாக்கியவர்கள் பட்டியலைக் குறைச்சுச் சொல்றாங்க என்பது தான். எதையுமே நம்ப முடியவில்லை. திருச்சியில் 100ஐக் கடந்து விட்டது. உத்திர வீதியில், இங்கே பக்கத்தில் கீதாபுரம் காலனி னு கொரோனா கிட்டேக்கிட்டே வருது. வெளியில் தலை காட்டவே பயம்மா இருக்கு. யாராவது தும்மின சப்தம் கேட்டால் மரக்கதவையே சார்த்திடறோம். எங்கானும் காற்றில் வந்ததுன்னால் என்ன செய்ய முடியும்! விரைவில் கடவுள் தான் கண்ணைத் திறந்து பார்த்து எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். ஸ்ரீராம் பார்த்துட்டுத் தலைப்பு சரியா வைக்கலைனு சொல்லப் போறார்! ஒண்ணும் புதுசா யோசிக்க வரலை!

69 comments:

  1. நீங்க சீநிநிநிநிநிநியர் என்று சொன்னாலே.... வயசுலதான் சீனியர் என்று என்னைப்போல சின்னக் குழந்தைகள் கூட புரிந்துகொள்ளுமே. உங்களுக்கு இதுல என்ன சந்தேகம்?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நீங்க சின்னக் குழந்தையா? :)))))

      Delete
  2. நீங்க மின்னூல் வெளியிடறதை வரவேற்கிறேன். பாராட்டறேன்.

    ஆனா முன்னுரிமை, கயிலாய பயணம், அரங்கனின் ஊர்வலம் போன்ற முக்கியமான இடுகைகளைத் தொகுத்து படங்கள் சேர்த்து புதிய மின்னூல்களுக்குக் கொடுக்கணும்னு கேட்டுக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. கயிலைப்பயணம் எல்லாம் மின்னூலாக வந்து விட்டது. ஆகவே அதை வெளியிட முடியாது. கீழே வெங்கட் சொல்லி இருக்கார் பாருங்க.

      Delete
  3. ஒரு மாதத்திற்கு மேல், தொலைக்காட்சி சேனல்களை ரினியூ செய்யாமல் பார்க்காமல் இருந்தோம். நேற்றுதான் மீண்டும் பார்க்கலாம் என்று நினைத்து பணம் கட்டினோம். ஆனா ஒரு செய்தியும் உருப்படியா இல்லை. வெட்டி விவாதங்கள், சின்ன சின்ன குற்றங்களை மிகப் பெரும் குற்றங்களாக பிரேக்கிங் நியூஸ் என்று டென்ஷன் செய்கிறார்கள். ஒரு செய்திச் சேனலும் உருப்படியா இல்லை. என்ன பண்ணறது?

    ReplyDelete
    Replies
    1. நான் தொலைக்காட்சிப் பக்கமே செல்வதில்லை நெல்லை...   மகன்கள் இப்போதைக்கு லைவ் கிரிக்கெட் அபார்க்கிறார்கள்.  பிளே ஸ்டேஷன் ஆடுகிறார்கள்!

      Delete
    2. எங்களுக்கு அரசுத்தொலைக்காட்சி தானே! செட் டாப் பெட்டியும் அவங்களே கொடுத்தது. அதில் என்ன சானல் கொடுக்கிறாங்களோ அதெல்லாம் வரும். மொத்தமாய் 80 ரூபாய் வாங்கின இடத்தில் இப்போது 200 ரூபாய் வாங்கறாங்க.

      Delete
  4. திரிந்த பாலை என்ன செய்தீர்கள்? நான் சென்னை வந்த புதிதில் (இரு வருடங்களுக்கு முன்), பால் திரிந்தால் ஐயோ வீணாகிவிட்டதே என்று நினைப்பேன். பிறகு சிறிது எலுமி விட்டு, அதனை பன்னீராகப் பிரித்து அதைச் சாப்பிடுவேன். அதனால் பால் திரிந்துவிட்டால் அலட்டிக்கொள்வதில்லை.

    இங்க இன்று வரும் பால், 'இன்றே கடைசி' என்று தேதி போட்டுத்தான் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. தானாய்த் திரிந்த பாலில் பனீர் தயார் செய்து சாப்பிடுவது ஆரோக்யமில்லை என்று யாரோ சொன்னார்கள் என்று நான் அதைக் கொட்டி விடுவேன்!

      Delete
    2. நெல்லை! வடக்கே இருந்தப்போவே பால் திரிந்தால் பனீர் தான். ப"ன்"னீர் இல்லை. அங்கேயே ஒருத்தரிடம் கேட்டுக் கொண்டேன். பால் திரிய ஆரம்பித்ததுமே எலுமிச்சை பிழியச் சொன்னார். அது மாதிரி பிழிந்ததும் அந்தப் பனீரை எடுத்துப் பயன்படுத்திக்கலாம் என்றார்கள். அந்த வடிகட்டிய "வே" நீரில் எலுமிச்சை இன்னும் கூடப் பிழிந்து குடித்தால் வயிற்றுக்கு நல்லது என்பதால் அம்மாதிரிக் குடித்து விடுவோம். இன்னிக்குக் குடிக்கலை!

      Delete
    3. இங்கேயும் பால் "இன்றே கடைசி" தேதியுடன் தான் வருது.

      Delete
    4. ஐயோ... 22 ரூபாயையா? அது சரி... நான் சாப்பிடும்போது (திரிந்த பாலை, நன்றாகவே கொதிக்கவைத்து, அப்புறம் தண்ணீரை இரத்து, பனீர் மட்டும் தங்கும்போது) பனீர் நன்றாகத்தானே இருக்கு. உடலுக்கு பிரச்சனை வருமோ?

      Delete
    5. நெல்லை, பணம் பற்றிச் சொல்லவில்லை. ஏனெனில் அதை எப்படியானும் பயனுக்குக் கொண்டு வந்து விடுகிறோமே! என்னைப் பொறுத்தவரை பனீர் நன்றாகவே இருக்கிறது. வங்காளத்தில் பனீர் தயாரிக்க முதலில் பாலைத் திரித்துக் கொண்டு வடிகட்டி எடுத்துக் கொண்டு அந்த "வே" தண்ணீரை வைத்துப் பயன்படுத்திப் பனீர் தயாரிப்பார்களாம். ரசகுல்லாவுக்குக் கூட அப்படித்தான் செய்யணும் என்பார்கள்.

      Delete
  5. அடுத்தடுத்து மூன்று பாக்கெட் பால் திரிந்தால் எரிச்சலாக இருக்கும்!  நல்லவேளை, நீங்கள்  இதை சகுனத்தோடு எதுவும் குழப்பிக் கொள்ளவில்லை நீங்கள்.  

    என் பாஸ் என்றால், நாள் முழுவதும் கவலைப் பட்டிருப்பார்!

    ReplyDelete
    Replies
    1. இம்மாதிரி சுத்திகரிக்கப்பட்ட பால் எல்லாம் திரிந்து போவது ஆச்சரியம் ஒன்றும் இல்லையே! சில சமயங்களில் அம்பேரிக்காவிலேயே திரிய ஆரம்பிக்கும். தேதி இத்தனைக்கும் ஒரு மாசம் பின்னாடி போட்டிருப்பாங்க! ஆகவே அங்கேயும் தேதி பார்த்துத் தான் வாங்கவேண்டும்.

      இதில் கவலைப்பட எதுவும் இல்லையே! கறந்த பால் திரிந்தால் கவலையா இருக்கும். கறந்த பால் தான் காலைக் காஃபிக்கு வாங்கிக் கொண்டிருந்தேன். அது திரிய ஆரம்பிச்சதால் அதை நிறுத்திட்டுக் காலைக் காஃபிக்கு மட்டும் பாக்கெட் பால். மற்றபடி மத்தியானச் செலவு, தயிர், வெண்ணெய் எல்லாவற்றுக்கும் கறந்த பால் தான். மோர் அதில் தான் ருசியாக இருக்கும்.

      Delete
  6. ஒன்று அங்கு மின்சாரம் இருந்திருக்காது.  அல்லது உங்கள் வீட்டு பிரிஜ் சரியாக மூடாமல் இருந்திருக்கும்!  எனவேதான் கெட்டுப்போயிருக்கும்.  சும்மா சொல்லி வைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டும் பால் திரிந்ததுனு சொன்னால் எங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டினு சொல்லலாம். அப்படி எல்லாம் குளிர்சாதனப் பெட்டியை மூடாமல் வைத்ததில்லை. ராத்திரி படுக்கப் போகும் முன்னர் நன்றாகக் கவனித்துவிட்டே போவேன். எங்களுக்கு முன்னாலேயே பலரும் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள். புகார் கொடுத்ததில் இன்று ஆவின் சோதனைத் துறையிலிருந்து வந்து பார்த்துவிட்டுச் சோதனைகள் செய்துட்டுப் போயிருக்காங்க. இனி என்னனு இனிமேல் தான் தெரியும். பால் பண்ணை பிரதான சாலையில் இருப்பதால் மின்சாரம் அடிக்கடி போகாது. அதோடு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஜெனரேட்டரும் உண்டு.

      Delete
  7. பழைய வீட்டுக்கு பால் போட்ட பால்காரர் இப்படி அடிக்கடி பால் திரிந்து போனால் ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டுக் காய்ச்சச் சொல்வார்!  ஒன்றிரண்டு முறை அப்படியும் (அங்கு செய்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம், திரட்டுப்பால் காய்ச்சும்போது திரிந்தால் சோடா உப்புச் சேர்த்துவிட்டுக் கிளறுவேன். இப்போல்லாம் அப்படிச் செய்யறதில்லை. ஆனால் காஃபிக்கு அது நன்றாய் இருக்காதே!

      Delete
  8. சீக்கிரமே மின்னூல்கள் வெளியிட வாழ்த்துகள்.  க கை நா வுக்கு நான் நினைக்கும் பொருள்தானா, தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைப்பது என்னவென்று நானும் ஊகிக்கும்படி சிறிது தெளிவாக சொல்லியிருக்கலாம். கை. நா ஒரளவு ஊகிக்க முடிகிறது. க. வந்து கொஞ்சம் இடிக்கிறது. ஹா. ஹா.

      Delete
    2. எப்படியும் பத்து நாட்களாவது ஆகும். மத்தியானம் உட்காரும் 2,3 மணி நேரத்தில் எல்லாத்தையும் முடிக்கணும். முக்கியமாய் எடிட்டிங். க.கை.நா.வுக்கு ஏற்கெனவே எங்கள் ப்ளாகில் மின் நிலா பற்றிய ஒரு கருத்துக்குக் கௌதமன் சாரிடம் சொல்லிட்டேன். ஆகவே நோ!

      Delete
    3. ஹாஹாஹா, கமலா, யோசிச்சுக் கண்டு பிடிங்க!

      Delete
  9. தடுப்பு மருந்துகள் சீக்கிரம் வெளியாகவேண்டும் என்பதே பிரார்த்தனை.  அதுவும் ஒழுங்காக, உண்மையாக இருக்கவேண்டும் என்கிற கவலைப் பிரார்த்தனையும்..     கொரோனாவுக்கு மருந்து என்று ஒன்று எப்போது கண்டுபிடிக்கப்படுமோ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், இன்று எங்க பெண் கூட ரொம்பவே கவலைப்பட்டாள். குழந்தைகளைப்பள்ளி/கல்லூரிக்கு வரச் சொல்கிறார்களாம். ஆனால் அனுப்பப் போவதில்லை. ஆன்லைன் வகுப்புக்குத் தான் வழி செய்து கொடுக்கப் போகிறோம் என்றாள்.

      Delete
  10. தொலைகாட்சி நிகழ்ச்சி, செய்திகள் பார்ப்பதில்லை.  எனவே நோ கமெண்ட்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், செய்திகள் அது பாட்டுக்கு ஓடும். காதில் விழுமே!

      Delete
  11. ஏதோ ஒருமுறை நெல்லை தலைப்பு பற்றிச் சொன்னதும் நானும் ஆதரித்து விட்டேன்.  அதற்காக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு எப்போதும் தலைப்பில் தப்புப்  பார்க்கிறேன் என்று அர்த்தமில்லை!   கர்ர்ர்ர்....

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சொல்றதைப் பார்த்தால், நான் எப்போதும் ஏதோ 'தலைப்பில்' (அதில் மட்டுமா? ஹா ஹா) குற்றம் கண்டுபிடிக்கிறேன் என்கிறாரோ?

      Delete
    2. ஹாஹாஹா, ஸ்ரீராம்! :))))))

      நெல்லை, நீங்க தலைப்பில் மட்டும் குற்றம் சொல்கிறீர்கள் என்று நீங்களே சொன்னாலும் நான் நம்ப மாட்டேனே!

      Delete
  12. வணக்கம் சகோதரி.

    காலையில் எ. பியில் உங்களை என்னுடனே வரக் காணவில்லையே என நினைத்தேன். பிறகு என் கடமைகள் அழைத்து விடவே, முடித்து விட்டு இப்போதுதான் உங்கள் கருத்தை எ. பியில் பார்த்தேன். நீங்களும் பதிவு போட்டிருக்கவே இங்கு வந்து விட்டேன்.

    எனக்கும் இப்படிதான் பால் அடுக்கடுக்காக டான்ஸ் ஆடி விடும். இல்லையென்றால், ஒன்றுக்கு மூடு வந்து அது ஆடும் போது (அரை லிட்டர் பாககெட்) அதனுடன் நாம் இணைத்த மற்றொன்றையும் சேர்த்து ஆட வைத்து விடும். ஒரு தடவை இரண்டு லிட்டரும் இப்படி ஆடவே நான் அதை விடாமல் திரட்டிபால் செய்து விட்டேன். ஒரளவு நன்றாகத்தான் இருந்தது. அதிலிருந்து சகோ நெல்லைத் தமிழர் சொல்வது போல் வீணாக்க விருப்பமின்றி, திரட்டிப்பால், இல்லை மோர் குழம்பு இப்படி செய்து காலியாக்க பழகிக் கொண்டேன். என்ன செய்வது...?

    இந்த தொற்றுக்கு சீக்கிரம் மருந்து வந்தால் நல்லது. என்னதான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாலும், அருகருகே வந்து நலம் விசாரிக்கிறது.. பயந்தானே நமக்கு முதல் எதிரி. அதற்கு நண்(பி)பன். ஆக நண்(பி)பனுக்கு எதிரியும் நமக்கு நட்புதான் என அது நினைக்காமல் இருக்க வேண்டும். கவலைகள் பிராத்தனைகள் என இந்த கொரோனா நாட்கள் பறக்கின்றன.

    தொலைக்காட்சியே நான் பார்ப்பதில்லை. காலையில் அது பாட்டுக்கு பக்தி சானல்கள் ஒடும், இரவு குழந்தைகள் ஏதாவது மாற்றம் வேண்டி அவர்கள் குழந்தைகளை தூங்க வைத்துக் கொண்டே படம் பார்ப்பார்கள். நான் அப்போதுதான் விட்ட பதிவுகளுக்கு கருத்துரைகள் தந்து விட்டு தூங்கச் செல்வேன். இப்படித்தான் தங்கள் தலைப்புக்கேற்றபடி எனக்கும் நாட்கள் ஓடுகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, சில நாட்கள் இப்படித்தான். காலையில் கணினியை எடுக்கவே முடியாமல் போய்விடும். சில நாட்கள் மத்தியானம் உட்காரலாம்னு நினைச்சால் முடியாது/ ஏதோ சில்லறை வேலைகள் இழுத்துக் கொண்டே இருக்கும். இத்தனைக்கும் நாங்க இரண்டே பேர் தான். காஃபி, கஞ்சி, சமையல், வீடு சுத்தம் செய்தல், துணி தோய்த்தல், (நான் கையாலேயே துவைத்துக் கொள்வேன்) சமையலறை மேடை சுத்தம் செய்வது பெரிய வேலை. என்ன சுத்தம் செய்தாலும் காலை எறும்பார் வந்து விடுவார். காபினெட்டுகளைச் சுத்தம் செய்தல்னு வேலை வளரும்.

      Delete
  13. எனக்கும் இந்த லாக்டவுன் சமயத்தில் நான்கைந்து நாட்கள் பால் திரிந்து விட்டது மாமி..இன்று மாலையும்...ஆவின் ஏஜெண்ட்டிடம் சொல்லியிருக்கேன்..அன்றைய பாலை உடனே காய்ச்சி வைக்கும் படி சொல்றார்..இருவர் என்பதால் உடனே செலவாகாது..:( இத்தனை வருடத்தில் இதுவே முதல் முறை..

    டெல்லியில் கறந்த பாலை வடிகட்டி வாங்குவோம்..விடுமுறை நாளாக இருந்தாலும் இருவரில் யார் வாங்கினாலும் உடனே காய்ச்சி வைத்து விட்டு வேண்டுமானாலும் தூங்குவோம்..:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதி! பல வருடங்கள் கழித்து வரீங்களோ? நான் முகநூலில் கூடப்பகிரவில்லையே? அப்புறம் எப்படித் தெரிந்தது? லாக்டவுன் சமயம் தான் பால் திரிந்து போகிறது என்கிறீர்களா? எனக்கு அது பற்றித் தெரியவில்லை. ஏனெனில் நான் இப்போத் தான் நாலு மாசமாக ஆவின் பால் காஃபிக்கு மட்டும் என வாங்கறேன். நாங்க வடக்கே இருந்தவரைக்கும் பசும்பால், எருமைப்பால் இரண்டுமே கறந்து அப்படியே நேரடியாக வாங்குவோம். எருமைப்பால் ஒரு லிட்டர் வாங்கினால் வெள்ளம். பசும்பால் சுவையாக இருக்கும். குல்ஃபி செய்தால் நன்றாய் வரும்.

      Delete
    2. பால் திரிந்த கதையை அவரிடம் சொன்னதும், உங்க பதிவு லிங்க் அனுப்பினார் மாமி..அப்படித்தான் வந்தேன்..ரொம்ப வருஷம் ஒண்ணும் ஆகலையே மாமி..:))

      Delete
    3. இன்னிக்கும் ஒரு பாக்கெட் பால் திரிந்து விட்டது. இன்னொன்றைச் சோதிக்கவில்லை. மாமா பூத்துக்குப் போய் இன்றைய தேதி உள்ள புதுப் பாக்கெட் வாங்கி வந்து பால் காய்ச்சி இப்போத் தான் காஃபி! இரண்டு நாட்களாக இது புதுத் தொல்லை. வாழ்க்கை ரசனையுள்ளதாக மாற்ற இப்படி எல்லாம் வருது போலும்! இதோடு போதும் ஆண்டவானு வேண்டுகிறேன். தினம் தினம் காலை எழுந்ததும் பால் திரிந்ததுனால் மனசுக்குச் சங்கடமாக வருது. :(

      Delete
    4. சிவப்புப் பாக்கெட் பால் திரியாதோனு நினைக்கிறேன்.அதைத் தான் வாங்கி வந்தார். காய்ச்சியே வைச்சுட்டேன். உங்க பால் போடும் ஏஜென்ட் சொல்கிறாப்போல் உடனே தான் நாங்க காய்ச்சறோம்! அப்படியும் திரிந்து விடுகிறதே! எங்க குடியிருப்பு வளாகத்திலேயே நான்கைந்து வீடுகளில் புகார்.

      Delete
    5. எதுலதான் செண்டிமெண்ட் அட்டாச் பண்றதுன்னு இல்லையா? பொதுவா எங்களுக்கு மறுநாள் வரை காய்ச்சினால் பிரச்சனை ஏற்படுவதில்லை.

      Delete
    6. நெல்லை, இதிலே சென்டிமென்ட் எங்கே வந்திருக்கு? வாங்கிய பாலை உடனே காய்ச்சி வைச்சால் திரியாதுனு தான் சொல்லி இருக்கேன். மேலும் பலரும் புகார் சொல்லி இருக்கின்றனர். நாங்க இன்னிக்குப் பால் வாங்கினால் மறுநாள், அதுக்கு அடுத்த நாள் என்று தான் வைத்துக் கொண்டிருந்தோம். சில்லரில் வைத்தாலும் சமயங்களில் ஐஸ் கட்டியாகிவிடும். நான் தினமும் ஒரு முறை டீஃப்ராஸ்ட் பண்ணிடுவேன். அப்படியும் எப்படி ஐஸ்கட்டி? புரியாத விஷயம். ஆனாலும் அப்படி இருந்தும் என்றாலும் திரிந்தெல்லாம் போனதில்லை. இப்போத் தான் தினசரியில் வரும் அளவுக்குப் பெரிய விஷயமாகி இருக்கு. தினம் தினம் பால் காலை வேளையில் திரிந்தால் என்ன இருந்தாலும் மனம் கொஞ்சமானும் சலித்துத் தான் போகும். (என்னைப் போன்றவர்களுக்கு)

      Delete
  14. மின்னூல் - ஏற்கனவே வெளியிட்ட நூல்களை மீண்டும் வெளியிடுவது சரியல்ல. புதியதாக வேறு நூல் வெளியிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஓகே, வெங்கட், பலரும் கேட்டதால் போடலாமோ என நினைத்தேன்.

      Delete
  15. கொரோனாவிலிருந்து நம்மை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

    மின்நூல் வெளியிட வாழ்த்துகள் என்னிடம் கேட்பதற்கு நானென்ன தொ.நு.நி. இல்லையே...

    இதோ இந்த இணைப்பில் பாருங்கள்.

    https://youtu.be/HSGF9QLaGqA

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நீங்க தொ.நு.நி. இல்லைனா விடுவோமா? நீங்க பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாலே போதுமே/ நான் எத்தனையோ விபரங்கள் தெரிந்து கொள்வேனே. யூ ட்யூப் காலை பார்க்கிறேன்.

      Delete
  16. உங்களின் இந்த மாதிரி பதிவுகளை படிக்கும் போது உங்களிடம் நேரில் பேசியது போலவே இருக்கிறது..... எனக்கு தெரிந்தவர்களிடம் போனில் பேசுவதை விட நேரில் பேசுவது என்றால் பிடிக்கும் அது போல வீட்டிற்கு அழைத்து உபசரிப்பது மிகவும் பிடிக்கும் ஆனால் போனில் நான் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரைத் தமிழரே! வெகு நாட்கள் கழித்து வந்ததுக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. எனக்கும் தொலைபேசியில் அழைப்போரும் குறைவு தான். எப்போவானும் நண்பர்கள் யாரேனும் அழைப்பார்கள். ஆகவே பெரும்பாலும் வீட்டுக்கு அழைத்து உபசரிப்பது தான் எனக்கும் சரியாக இருக்கிறது.

      Delete
  17. புது மின்னூல் விரைவில் வெளியிட வாழ்த்துக்கள் மா ...

    அது எளிது தான் சீக்கிரம் உங்களால் செய்ய முடியும் ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுப்ரேம். என்னால் முடியுமா இல்லையானு தெரியாது. இன்னும் ஆழமாக உள்ளே சென்று பார்க்கவில்லை. இப்போதைக்கு எடிட்டிங் செய்து கொண்டிருக்கேன். நீக்க வேண்டியவற்றை நீக்கியும், படங்களைச் சேர்த்தும் செய்து கொண்டிருக்கேன்.

      Delete
  18. முதல் மின்னூல் வெளியிட தான் சற்றே சிரமம்... அடுத்தடுத்து ஆர்வத்தால் எளிதாகி விடும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன்!

      Delete
  19. எனக்கும் பொழுதுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரிதான் போகிறது. ஒரு நாள் போல ஒரு நாள் இல்லை.

    பால் முன்பு கெட்டு போனால் கவலையே படாமல் அதை பால்கோவா செய்து விடுவேன். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது என்றால் செய்ய பிடிக்காது கொட்டி விட வேண்டியதுதான்.

    எல்லா பாக்கெட் பாலும் கெட்டு போவதால் பால் கொள்முதல் செய்து பதபடுத்தி வருவதில்தான் ஏதோ தவறு.

    வரப்போகும் மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, நானும் திரட்டுப்பால் தான் காய்ச்சுவேன். இப்போக் காய்ச்சினால் நான் மட்டும் சாப்பிடணும்! அதான் பனீராகப் பண்ணி வைத்துவிட்டேன். சப்பாத்தி சப்ஜியில் போடலாம். பனீர் பராந்தா பண்ணலாம்.

      Delete
  20. பேத்தியின் அக்கறையான விசாரிப்பு மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பேத்தி புத்தகத்தை வைத்துக் கொண்டு எல்லாக் கோணங்களையும் சரியாகச் சொல்லிக் காட்டினாள். ஹெக்ஸகன் கூடத் தப்பில்லாமல் சொல்கிறாள். ஒன்றிலிருந்து 30 வரை சொல்கிறாள். சாப்பிடுவதைத் தவிர்த்து மற்ற எல்லாம் நன்றாகவே செய்கிறாள். நான் அவங்க அழைக்கும்போது சில சமயங்கள் சமையலறையில் வேலையா இருப்பேன். அப்போத் தாத்தாவிடம் பாட்டி எங்கே? என்று கேட்கிறாள். இப்போத் தான் வாக்கியங்களை முழுசாகப் பேச ஆரம்பித்திருக்கிறாள். பேச்சு அவ அப்பாவைப் போல் கொஞ்சம் தாமதம் தான்! அவ அப்பாவுக்குப் பற்கள் வரவே 3 வயசு ஆகிவிட்டது. வேண்டாத தெய்வம் இல்லை.

      Delete
    2. அன்பு கீதாமா, சில நாட்கள் இப்படித்தான். நம்மளுடைய எல்லாம் யோக நிலைக்கு கொண்டு போகிறது தொற்று.
      மின்னூலுக்கு நிறைய வேலைகள் இருக்கும் நீங்கள் செய்து முடிப்பீர்கள். இப்பொழுதே என் வாழ்த்துகளைப் பிடியுங்கள். குஞ்சுலு சமத்து. அப்புறம் அட்டா! ஓயாமல் பேசுகிறதே என்று சொல்லப் போகிறீர்கள். பத்திரமாக இருங்கள் மா. பால் பிரச்சினை ஓயட்டும்.

      Delete
  21. மின்னூல் விரைவில்வெளிவர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா! இப்போத் தான் வேர்ட் டாகுமென்டில் சேமித்து எடிட் செய்து கொண்டிருக்கேன்.

      Delete
  22. // இன்று காலை எழுந்ததே தாமதம். .... வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு காஃபிக்குப் பாலைக்காய்ச்சினால் பால் திரிந்துவிட்டது! //

    ஆஹா! அமர்க்களமான ஆரம்பம். ஆர்ட் ஃப்லிம் பார்ப்பதான உணர்வு!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, சில நாட்கள் இப்படித்தான் அமையும்.

      Delete
  23. கம்ப்யூட்டர் சரியாகிவிட்டது. இனி மின்னூல்தான்! கம்பீரமாக வெளிவர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கணினியில் பிரச்னையே இல்லை. வேர்டில் தான் பிரச்னை. இன்னொன்றில் சரி பண்ணிவிட்டேன். இந்தக் கணினியில் தான் முழி பிதுங்குகிறது. வேர்டில் எழுத வேண்டிய பக்கம் முழுசாக வராமல் இடது ஓரத்தில் சின்னதாக ஒட்டிக்கொண்டு பெரிசாக்கினாலும் பெரிசாக ஆகாமல் வம்பு பண்ணுகிறது. :( சைசை மாற்றி உள்ளே போய் ஏ4, ஏ5 என்றெல்லாம் கொடுத்துப் பார்த்தாச்சு. என்வலப் கொடுத்தால் இன்னமும் சின்னதாகிறது. ஒண்ணும் புரியலை. நான் ஒரு க.கை.நா. தானே!

      Delete
  24. அதிகார பூர்வமாய் உலகம் முழுவதும் அரசுகள் கொடுக்கும் எண்ணிக்கை எப்பொழுதும் உண்மையான எண்ணிக்கையை விட குறைவாய்தான் இருக்கும் . காரணம் 2. முதல் காரணம் மக்கள் பீதி அடைய கூடாது. 2. எதிர்க்கட்சிகள் பண்ணும் அரசியல்.

    முதல் மின்னூல் எப்பவும் பிரச்சனைதான். எனக்கும் கடினமாகத்தான் இருந்தது . நான் பிளாகில் இருந்து காப்பி பண்ணிதான் பண்ணுவேன். பாப்போம் அடுத்து எழுதிய கட்டுரைகளை தொகுக்கலாம்னு ஐடியா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் எல்கே. எண்ணிக்கை குறைவாகவே கொடுக்கிறார்கள். என்றாலும் பீதி இல்லாமல் இல்லை. எனக்குப் பிரச்னை காபி, பேஸ்ட் பண்ணுவதில் இல்லை. வேர்ட் டாகுமென்ட் வேலையே செய்யாமல் இருந்தது! அதான்! இந்தக் கணினியில் இன்னமும் வேர்ட் டாகுமென்ட் சரியாகவில்லை. இன்னொன்றில் சரிபண்ணி வைச்சிருக்கேன்.

      Delete
    2. ஓஹோ சரி சரி.. சீக்கிரம் சரியாகும்.

      Delete
  25. உங்கள் மின்னூல்கள் விரைவில் வெளிவர வாழ்த்துகள் சகோதரி!

    நாங்கள் கறந்த பாள் வாங்குவதால், திரியும் பிரச்சனை இதுநாள்வரை இல்லை. எங்கள் பகுதியில் பாக்கெட் பால் அவ்வளவு இல்லை.

    துளசிதரன்

    அக்கா சென்னையில் இருந்தப்ப இப்படி ஆனதுண்டு. வாங்கி வந்து பாத்திரத்தை நன்றாகக் கழுவி காய்ச்சினாலும்.

    பெரும்பாலும் திரிந்தவை பனீராகத்தான் ஆகும்.

    சோடா உப்பு போட்டுக் காய்க்சினால் கெடாது என்று மாமியார் சொல்லுவார். ஆனால் அப்படிச் செய்ததில்லை காப்பி எல்லாம் கலக்க எப்படி இருக்குமோ என்று.

    மின்னூல் வெளியிட முயற்சிக்கும் வெளிவரவும் வாழ்த்துகள் கீதாக்கா.

    செய்திகள் பார்க்கும் பழக்கமே இல்லை. டிவியும் கிடையாது.

    ஆனால் செய்திகள் சொல்ல குடும்பத்தில் பலர் இருக்கின்றனர்!!!!!!!! அப்படித்தான் காதில் எட்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, கறந்த பால் தான் நாங்களும் வாங்குவோம், அது தான் பிடிக்கும். பழைய பால்காரர் எங்கோ போய்விட்டார். அவர் தம்பி கொடுக்கிறது ரொம்ப சுமார். காஃபிக்குச் சரியா வரலை. ஆனால் வெண்ணெய் நன்றாக வரும். மோர் நன்றாக இருக்கும். காஃபிக்கு மட்டும் பாக்கெட், பச்சைப் பாக்கெட் பால்! நாலைந்து நாட்களாக எடிட்டிங் வேலையே செய்யலை. ஆகவே மின்னூல் எல்லாம் வெளிவரும்போது தான் நிச்சயம். அதுக்குள் அவசரப்பட்டுச் சொல்லிட்டேன், முந்திரிக்கொட்டை மாதிரி.

      Delete
  26. குட்டிக் குஞ்சுலு சேஃபா போய்ச் சேர்ந்தாச்சா ! சூப்பர் கீதாக்கா. டிக்கெட் ரொம்ப காஸ்ட்லிதான் வந்தே பாரத்தில்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. குட்டிக் குஞ்சுலு ஊருக்குப் போய்ச் சேர்ந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிறது.

      Delete
  27. YouTube
    https://youtu.be/SqxnEWYPCjY
    சிகரம் படம் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி! எஸ்பிபி நடிச்சதா? கட்டாயமாய்ப் பார்த்துட்டு எழுதறேன்.

      "நெல்லை" கவனிக்க! அடுத்த சினிமா விமரிசனம் விரைவில்!

      Delete