எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 29, 2021

சேவை சாதிக்கிறேன்!

 நேற்றுக் காலம்பரக் கொஞ்சம் சீக்கிரமா எழுந்துட்டேன். நம்ம ரங்க்ஸ் எழுந்திருக்கலை. ஆனால் நான் ஏற்கெனவே தைப்பூசத்துக்கு உம்மாச்சிக்கு ஏதேனும் பண்ணி நிவேதனம் பண்ணிட்டு அதையே எடுத்துக்கலாம்னு நினைச்சிருந்தேன். தை வெள்ளி கொழுக்கட்டை இப்போப் பண்ண முடியாது. ஆகவே பூசத்தன்னிக்குச் சும்மாப் பத்துக் கொழுக்கட்டை பண்ணிடலாம்னு நினைச்சேன். காலம்பரவே அரிசியையும் ஊற வைச்சுட்டு அம்மிணிக்கொழுக்கட்டையாப் பண்ணிடலாம்னு அதற்காக உளுந்தையும் கொஞ்சம் துபருப்பு, கபருப்பையும் அதோட சேர்த்தேன். ஸ்ராத்தம் தவிர்த்த மற்ற நாட்களில் வெறும் உளுந்து வடை பண்ணக் கூடாதுனு எங்க வீடுகளிலே ஒரு சம்பிரதாயம். ஆகவே எப்போவும் முப்பருப்பு வடை தான். ஆனால் உளுந்து வடைங்கறச்சே உளுந்து நிறையப் போட்டுட்டுக் கொஞ்சமா துபருப்பு+கபருப்பு சேர்ப்போம்.

அப்புறமா சமையலுக்கு வாழைப்பூ இருந்ததால் அதைப் பொரிச்ச குழம்பு/கூட்டுக்குழம்பு ஏதானும் பண்ணிடலாம்னு கூட்டுக்காகப் பருப்பு வகைகளையும் நனைச்சு வைச்சுட்டுப் புளியையும் ஊற வைச்சேன். கூட்டிலே போட சிவப்புக்காராமணி நல்லா இருக்கும்னு எப்போவும் அதை வறுத்துச் சேர்ப்பேன். நேற்று அதையும் ஊற வைச்சேன். அப்புறமா நம்மவர் எழுந்து வந்தார். காஃபி முதலான கடமைகள் முடிஞ்சதும் என்னோட தைப்பூசத்திற்கான அட்டவணையைச் சமர்ப்பித்தேன். சரினாரா, நான் எழுந்து போயிட்டேன், வேறே ஏதோ வேலை இருந்தது. இவர் சும்மா இருக்காமல் மண்டை குடைச்சல் தாங்காமல் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்திருக்கார். ஞாயிற்றுக்கிழமை சங்கட சதுர்த்தினு பார்த்ததும் என்னைக் கூப்பிட்டு உடனே அது என்ன கொழுக்கட்டையா இருந்தாலும் கான்சல்னு சொல்லிட்டுச் சமையல் திட்டத்தையும் தலைகீழாய் மாற்றிட்டார்.

குட்டிப் பறங்கிக்காய் இருந்ததால் அதில் துவையல் பண்ணிட்டுப் பாகற்காய் வறுத்து வைச்சுடு. ஏதேனும் ரசம் வேண்டும்னு சொல்லிட்டு முடிச்சுட்டார். நான் திருதிரு. நனைச்சு வைச்ச அரிசியை/பருப்பு வகைகளை என்ன பண்ணுவது? புளியும் ரசத்துக்கும் துவையலுக்குமாய்ச் சேர்த்து ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்குப் போதும். என்ன பண்ணலாம்? யோசிச்சேனா. இவர் ரொம்ப நாட்களாக சேவை வீட்டிலே பண்ணவே இல்லையேனு கேட்டுட்டு இருந்தார்.  இந்த அரிசியோடு இன்னும் கொஞ்சம் அரிசியை நனைச்சுட்டு சேவை பண்ணிடறேன்னு அறிவித்தேன். பின்னர் சத்தம் போடாமல் நனைத்த பருப்பு வகைகளை உளுத்தம்பூரணத்துக்காக ஊற வைச்சிருந்த உபருப்புக் கலவையோடு சேர்த்துட்டேன். வேறே வழி? அதை உப்புக் காரம் போட்டு அரைச்சு நறுக்காமல் வைச்சிருந்த வாழைப்பூவை நறுக்கிச் சேர்த்து வாழைப்பூ வடையாப் பண்ணிடறேன்னும் சொல்லிட்டேன். ஒரு வழியாக சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது.

பின்னர் சமையலை ஒரு வழியா முடிச்சுட்டு நனைச்சு வைச்ச பருப்பு வகைகளை மறுபடி களைந்து நீர் போக வடிகட்டி வைச்சுட்டு ஊற வைச்ச அரிசியை சேவைக்கு அரைச்சு வைச்சேன். பின்னர் பருப்பு வகைகளோடு உப்பு, காரம், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சேன். சாயந்திரம் தானே வடை தட்டணும்! பின்னர் ஒரு வழியா 3 மணிக்குச் சேவைக்கு மாவைக் கிளறிக் கொட்டி அதைத் தண்ணீரில் போடலாமா கொழுக்கட்டைகளாக வேக வைக்கலாமானு சீட்டுப் போட்டுப் பார்த்துவிட்டுக் கொழுக்கட்டைகளாக வேக வைச்சுப் பிழிந்து எடுத்தேன். புளிக்காய்ச்சல் வீட்டில் இருந்ததால் கொஞ்சம் புளிக்காய்ச்சல் சேவையும், தேங்காய்ச் சேவையும் தேங்காயைத் துருவித் தாளித்துக் கொண்டு பண்ணி விட்டுக் கொஞ்சம் சேவையைத் தயிரில் போடத் தாளிதம் மட்டும் சேர்த்துவிட்டுச் சாப்பிடும்போது தயிரைச் சேர்த்துக்கலாம்னு எல்லாத்தையும் மூடி வைச்சுட்டு சேவை நாழியை அலம்பிட்டு (கையோடு அலம்பிடுவேன். வேலை செய்யும் பெண்மணி வரணும்னு போட்டு வைச்சால் துரு ஏறிடும்.) துணியைப் போட்டுத் துடைத்து எண்ணெய் தடவிக் காய வைச்சுட்டு வடை தட்டலாம்னு அடுப்பை அலம்பப் போனால் நம்மவர் இன்னிக்கு எனக்கு வடை வேண்டாம். வடை சாப்பிட்டால் அப்புறமா ராத்திரி சேவை சாப்பிட முடியாதுனு சொல்லிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஙே! என விழித்தேன். நல்லவேளையா மாவு குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்கு! வாழைப்பூவையும் நறுக்கலை! 

பின்னர் அடுப்பை அலம்பிட்டுத் தேநீர் தயாரித்துக் கொடுத்துவிட்டு அப்பாடானு ஆசுவாசமாக உட்கார்ந்தேன். 

அப்பாடா! ஒரு வழியா சாமான் வீணாகாமல் எப்படியோ ஒப்பேத்தியாச்சு? படங்கள் எங்கேனு கேட்கிறவங்களுக்கு! சேவை மாவு கிளறும்போது படம் எடுக்க முடியாது. அப்புறமா சேவையைப் பிழிஞ்சுட்டு எடுக்கலாம்னா மறந்தே போச்சு! கலந்த சேவையை எடுத்திருக்கணும். வேண்டாம்னு விட்டுட்டேன். ஏற்கெனவே சேவை பண்ணும்போது எடுத்த படங்கள் இருக்கு! ஆனால் அது புழுங்கலரிசியில் இட்லி மாதிரிப் பண்ணிப் பிழிந்தது. பரவாயில்லைனு அதைப் போட்டு வைக்கிறேன். ரொம்ப வருஷம் ஆச்சேனு நினைக்காமல் அந்தப் படத்தையும் சேவையையும் பார்த்து சந்தோஷப்படுங்க.




32 comments:

  1. திட்டமிட்டபடி சமைக்க முடியாமல்... ஹாஹா... சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது. சமீபத்தில் ஒரு நாள் மாலை இப்படி சமைக்கலாம் என ஆரம்பிக்க, நண்பர் வந்து சேர்ந்தார் - இரவு உணவு உன்னோடு தான் என்று சொல்லிக் கொண்டு - அதுவும் சப்பாத்தி தான் வேண்டுமென்று சொல்லிக் கொண்டே! So plan changed!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், எனக்கு அடிக்கடி இப்படி ஆகும். இதோடு மட்டுமில்லை. சாப்பிட்டு ஒழித்துப் போட்டுவிட்டு அடுப்பையும் சுத்தம் பண்ணிட்டு நிமிர்ந்தால் மறுபடி சமைக்கிறாப்போல் யாரேனும் வருவாங்க. நம்ம ராசி இதான்னு வைச்சுட்டேன். :))))

      Delete
  2. வணக்கம் சகோதரி

    எவ்வளவு வேலைகள். மறுபடி எத்தனை மாற்றங்கள். பொறுமையாக யோசித்து எல்லாவற்றையும் நல்லபடியாக முடித்துள்ளீர்கள். சேவை படம் அழகு.. புழுங்கல் அரிசியில் செய்தது அது ஒரு ருசி.. நேற்று செய்தது பச்சரியில் செய்தீர்களோ ? அதுவும் ஒரு தனிப்பட்ட ருசிதான். புழுங்கலரிசி சேவைக்கு மோர்குழம்பு துணையாக ஒத்து வரும். எங்கள் புகுந்த வீட்டில் நான் வந்த புதிதில் அதைதான் செய்யச் சொல்லி, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். அரிசியோடு தேங்காயும் போட்டு கல்லுரலில் (அப்போது எல்லாமே கல்லுரல்தான்) அரைத்து விடுவேன். ஆனால் அம்மா வீட்டில் இந்த மாதிரி கலவை சேவைகள்தான். அவர்களுக்கு அவ்வளவாக சேவைக்கு மோர் குழம்பு பிடிக்காது.ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசிகள். எனக்கு இரண்டுமே பழகி விட்டது. இப்போது என் குழந்தைகள் வளர்ந்த பிறகு இரண்டு விதமாகவும் அவ்வப்போது செய்து வருகிறேன். என் கணவர் வெல்லம் சேர்த்த இனிப்பு சேவையும், உ.ப காரத்துடன் அரைத்து உதிர்த்த பருப்புசிலி சேவையும், விருப்பமாய் கேட்பார்.

    வாழைப்பூ வடை இன்று ஒருவழியாக முடித்து விட்டீர்களா? இல்லை.. அது காலை டிபனுக்கு அடையாக மாறி விடப் போகிறது.. ஹா.ஹா.ஹா.. அரிசி, பருப்புகளும், காய்கறிகளும் நம்மிடம் வந்து மாட்டிக் கொண்டு புது புது ரூபங்கள் எடுப்பதற்குள், ஒரு வழியாக திண்டாடித்தான் போகிறது. அதற்கும் வாய் இருந்தால் நம்மிடம் மனம் விட்டு பேசுமென நான் நினைத்துக் கொள்வேன்..

    நேற்று முழுவதும் சேவை செய்யும் வேலைகளோடு, உங்கள் கணவருக்காக எப்போதும் செய்யும் சேவைகளுடன், நேற்று அவர் மாற்றிக் கேட்ட சேவைகள் பலவும் செய்து விட்டீர்கள்.:) ஞாயறு சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு கொழுக்கட்டைகள் செய்தால், சகோதரர் நெல்லை தமிழருக்காகவாவது கொழுக்கட்டை படம் போடுங்கள். ஹா.ஹா.ஹா. அதைக் காண நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்..சேவை பகிர்வினுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. கமலா ஹரிஹரன் மேடம்..... கீசா மேடம் கொழுக்கட்டைகள் படம் போடுவார். ஆனால் நாங்கள் வருவதற்கு முன்பு நீங்கள் கொழுக்கட்டை தயார் செய்து வைக்க மறந்துடாதீங்க

      Delete
    2. வாங்க கமலா, ஆமாம், பச்சரிசியில் தான் செய்தேன். கொழுக்கட்டைக்குப் பச்சரிசி மாவு தானே வேண்டும். அதனால் பச்சரிசி தான் நனைச்சு வைச்சிருந்தேன். அதில் தான் சேவை பண்ணினேன். வடை அன்றே தட்ட முடியாமல் நேற்றுத் தட்டி அதுவும் தீரமால் இன்னிக்கு அதைத் தயிர்வடையாய்ப் போட்டு வைச்சிருக்கேன். இன்னிக்காவது அதைச்சாப்பிடுவோம்னு நினைக்கிறேன். என்னவோ தெரியலை, அந்த உளுந்து மாவுக்கு ராசியே இல்லை. 3 நாட்களாய்ச் சாப்பிட முடியலை! :))) காலை எங்க வீட்டில் கஞ்சி தான். அதுவும் மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் கஞ்சி! அதிலேயே கொஞ்சம் பயறு, வெந்தயம் போட்டுக் கறுப்பு ஜீரகம், உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கஞ்சி காய்ச்சிப் பின்னர் ஆறியதும் மோரை விட்டுக் கொண்டு ஆளுக்கு இரண்டு தம்பளர் குடிப்போம். தொட்டுக்க மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் இல்லைனா மோர் மிளகாய். நானும் முன்னர் கல்லுரலில் தான் அரைத்துக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 90/91 வரை கல்லுரலில் அரைச்சிருக்கேன். அதுவும் அடைன்னா கட்டயமாய்க் கல்லுரல் தான்! அதன் பின்னர் தான் முடியாமல் போய் நிறுத்தினேன். புழுங்கலரிசியோ, பச்சரிசியோ எங்க வீட்டில் எலுமிச்சை/புளி, தேங்காய்/தயிர் சேவைகள் கட்டாயம் உண்டு. வெல்ல சேவை இப்போல்லாம் பண்ணுவதில்லை. பருப்பு உசிலி சேவை, தக்காளி சேவை எல்லாம் குழந்தைகள் இருந்தால் தான்!

      Delete
  3. சேவை தயாரித்த கதை மிக அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நன்றி மனோ சாமிநாதன்.

      Delete
  4. 'நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று " என்று எங்கள் ப்ளாக்கில் பாடியது இதற்கு தானா ?
    மெனு மாறிவிட்டது இல்லையா!

    வல்லி அக்கா சேவை செய்யும் காணொளி போட்டு இருந்தார்கள். அந்த பெண் சந்தகை என்று சொன்னார் என்று நினைக்கிறேன்.
    சேவை நாழியை காட்டினார் எங்கு வாங்குவது என்று சொன்னார்.
    என் மாமியார் வீட்டில் இந்த நாழியில்தான் மாவை கொழுக்கட்டையாக செய்து பிழிவார்கள்.
    எல்லோரும் கொஞ்சம் பிழிந்து சேவை செய்வார்கள்.
    புளிகாய்ச்சல், தேங்காய் சீனீ போட்டு இனிப்பு எல்லாம் எங்கள் வீட்டிலும் உண்டு.
    படம் நல்லா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த சேவை நாழி எங்கள் வீட்டிலும் இருந்தது.  அம்மா அதில்தான் செய்வார்.  நான்தான் பிழிந்து கொடுப்பேன்.  ஆனால் இப்போதெல்லாம் ரெடிமேட் சேவைதான்!

      Delete
    2. வாங்க கோமதி. ஆமாம், அதைக்குறித்துத் தான் எ.பி.யில் பாடி ஆடினேன். வல்லி கொடுத்த காணொளி எனக்குத் திறக்கலை. ஆனால் கட்டாயமாய் ஒருதரமாவது பார்க்கணும். கொழுக்கட்டையாகவும் செய்வோம். மாவை வெந்நீரிலும் போட்டு வேக வைப்போம். என் அம்மா கொழுக்கட்டையை விட வெந்நீரில் போட்டால் தான் உள்ளெல்லாம் வெந்து நன்றாய் வரும் என்பார்கள். குழந்தைகளுக்குத் தேங்காய், வெல்லத்தூள் அல்லது வெள்ளைச் சர்க்கரை போட்டுக் கலந்து கொடுப்போம். வயிற்றுக்கு நல்லது என்பதால்.

      Delete
    3. இந்தச் சேவை நாழி எனக்குச் சீரில் அம்மா திண்டுக்கல்லில் தெரிந்தவர்கள் மூலம் 2 ரூபாய்க்கு வாங்கினார். எத்தனையோ வீடுகள்/ஊர்கள் பார்த்துவிட்டது.

      Delete
    4. பஹ்ரைன்ல 6 சேவை நாழி வைத்திருந்தேன். இங்க உள்ள சேவை நாழியில் சேவை போடும் பகுதியைக் கழற்றி சுத்தம் செய்ய முடியாது. அதனால் மனைவிக்கு கொஞ்சம் கஷ்டம். நல்லதா ஒன்று வாங்கணும்னு இருக்கேன். கீழ காலை ஒருத்தர் பிடித்துக்கொண்டு மேல சுற்ற வேண்டியிருக்கு. கொஞ்சம் ஸ்டிராங்கா நிற்கும் சேவை நாழியைத் தேடணும், இரும்பில் இருந்தாலும்.

      Delete
  5. நேற்று எங்கள் வீட்டில் சேவை (நான் மட்டும் சாப்பிட்டேன்). பிழியும் உதவியோட என் வேலை முடிந்தது. குழம்பு, அவளைப் பண்ணச் சொன்னேன்.

    சேவையும், மொறுமொறு வடையும் நல்ல காம்பினேஷனாக இருக்குமோன்னு தோணுது. நீங்கதான் வடையும் பண்ணலையே

    ReplyDelete
    Replies
    1. நேற்று எங்கள் வீட்டில் முள்ளங்கி சாம்பார், வாழைப்பூ உசிலி, வெள்ளரிக்காய் தயிர்பச்சடி...  

      Delete
    2. வாங்க நெல்லை, அது ஏன் நீங்க மட்டும் சாப்பிடவா சேவை பண்ணினாங்க? குழந்தைங்க உங்க மனைவி எல்லாம் என்ன சாப்பிட்டாங்க? வடையோட அது நல்ல காம்பினேஷன் தான். ஆனால் வடை நேற்றுத் தட்டி அதுவும் சாப்பிடாமல் இன்னிக்குத் தயிரில் போட்டு வைச்சிருக்கேன்.

      Delete
    3. @ஸ்ரீராம், முள்ளங்கி எல்லாம் சாப்பிட்டே ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

      Delete
    4. எனக்கும் எங்க அம்மாவுக்கும் சேவைனா அவ்வளவு பிடிக்கும். பஹ்ரைன்ல சேவை (இடியாப்பம் கிடையாது. புழுங்கரிசில பண்ணுவது) வார இறுதில தயாரிக்கும் இடத்துக்குப் போய் வாங்கிவருவேன். மனைவி இருந்தபோது வீட்டில் பண்ணுவோம். ஆரம்பத்திலிருந்து பசங்களுக்கு அவ்வளவு இஷ்டம் கிடையாது. இட்லி மிளகாய்ப்பொடி, ந.எண்ணெய் கலந்து சேவையைக் கொடுத்தா சாப்பிடுவாங்க. அதுனால மனைவிக்கு 20 சதம் எனக்கு 80 சதம்னு சாப்பிடுவோம். நான் சேவைப் பிரியன். அடையார்ல இருந்தபோது, மைலாப்பூர் போனா அங்க வாங்கிவருவேன். ஆனா அதில் நிறைய தேங்காய் எண்ணெய் கலந்துடறாங்க.

      Delete
  6. என் மனைவியும் இந்தமாதிரி தினுமென மெனுவை மாற்றும்போது சலித்துப்பா...ஆனால் அதற்கான கொஞ்சம் உதவிகளைச் செய்துடுவேன்.

    அவளும், இன்று மோர்க்குழம்பு பண்ணு என்றால், இன்று மோர் கூடாது, புளிலதான் பண்ணணும், பருப்புக்குழம்பு இன்று கிடையாது என்றெல்லாம் சொல்லுவா

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் அடிக்கடி நடப்பது தான். பல சமயங்களில் நறுக்கின காய்களை எடுத்துப் பத்திரப்படுத்திட்டு வேறே சமையலுக்கு எனத் தயார் ஆனதும் உண்டு. புளி ஜலம் மிச்சம் ஆனால் ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு மறுநாள் அதன் அளவைப் பொறுத்து ரசத்துக்கோ, குழம்புக்கோ வைச்சுப்பேன். நான் குறிப்பிட்டுச் சொல்லுவது செவ்வாய், வெள்ளியில் பருப்புச் சேர்த்துச் சமைக்கணும்னு. ஆனால் இவருக்கு அன்னிக்குத் தான் துவையல், இல்லைனா வத்தக்குழம்பு, இல்லைனா எலுமிச்சை சாதம், புளி சாதம்னு பண்ணச் சொல்லுவார். சில சமயம் அதுக்கும் சரினுட்டு ரசத்துக்கு மட்டுமாவது பருப்பைச் சேர்த்து வேகவைத்துக் கொண்டு பண்ணுவேன். சில சமயங்களில் மைசூர் ரசமாகப் பண்ணிடறேன்னூ சொல்லிட்டுப் பருப்பு வேக வைப்பேன்.

      Delete
  7. நேற்று எங்கள் வீட்டிலும் வாழைப்பூ.  ஆனால் உசிலி.  அதைத்தவிர அதை சும்மா துவட்டுவதோ, தேங்காய் போட்டு பிரட்டி எடுத்தோதான் வழக்கம்.  குழம்பு பக்கம் போனதில்லை.  பொரிச்ச குழம்பு அதில் பண்ணலாமா?  

    ReplyDelete
    Replies
    1. இங்கே பருப்பு உசிலி எப்போவானும் தான் ஶ்ரீராம். அதென்னமோ அவருக்குப் பிடிப்பதில்லை. கொஞ்சமாப் பண்ணினாக் கூட என்னால் முழுவதும் போட்டுக்க முடியாது. தேங்காய்க் கறி தான். துவரம்பருப்பை ஊற வைச்சுச் சேர்த்து வாழைப்பூவோடு வேக விட்டுட்டுப் பின்னர் வெந்ததும் நீரை வடிகட்டிக் கொண்டுத் தாளிதத்தில் கடுகு, உபருப்பு, மி.வத்தல், கருகப்பிலை சேர்த்துத் தாளித்துக் கொண்டு கொஞ்சம் வெல்லத்தூளுடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறுவேன். வாழைப்பூ துவர்க்கும் என்பதால் உசிலி தவிர்த்த மற்ற வகைகள் பண்ணினால் ஒரு சின்னத் துண்டு வெல்லம் போடுவேன்.

      Delete
  8. மாமா அடிக்கடி திட்டத்தை மாற்றுகிறாரே..   ஹு......ம்!  நானெல்லாம் இப்படி மாற்றினால் வீட்டில் ப்ரளயம்தான்!  எதையும் சமாளிக்கும் உங்கள் திறமை வாழ்க...  விவ் ரிச்சர்ட்ஸ் மாதிரி எந்த பந்து போட்டாலும் சிக்ஸர் அடிப்பீர்கள் போல!

    ReplyDelete
    Replies
    1. பழகி விட்டது ஶ்ரீராம். அதனாலேயே ஒன்பது மணிக்கு முன்னால் காய்கள் எதுவும் நறுக்கி வைச்சுக்க மாட்டேன். இங்கே உறவினர்கள் வரும்போது அவங்க காய் நறுக்கித் தரேன்னு கேட்டால் கூட இதைத் தான் சொல்லுவேன். இப்போ வேண்டாம்னு! பலரும் இதை அவங்க நறுக்குவது எனக்குப் பிடிக்காமல் தட்டிக்கழிக்கச் சொல்றேன் என்றே நினைச்சுப்பாங்க! சரினு விட்டுடுவேன். :))))

      Delete
    2. எங்க வீட்டில் அனேகமா எல்லா நாளும் நான் சொல்ற மெனுதான் மதிய (அதான் காலைல) உணவுக்கு. பசங்களுக்காக அவங்களுக்கு விருப்பமானதும் அதில் ஒன்று இருக்கும். மாலைல 6 மணிக்கு முன்னால ஒரு தடவை டிஃபன் சாப்பிடுவேன். அவ்ளோதான். பசங்க சப்பாத்தி சைட் டிஷ் அல்லது அவங்களுக்குப் பிடித்ததுலாம் 8 மணிக்கு மேலத்தான் சாப்பிடுவாங்க. 6 மணி தாண்டுவதால் நான் அதனைச் சாப்பிடமாட்டேன்.

      இப்போலாம் இன்றைக்கு சாதம் வேண்டாம் என்று தீர்மானித்தால், அவங்க விருப்பப்படி பண்ணிக்கோங்க என்று சொல்லிடுவேன். (வெண்டை புளிக்கூட்டு, உப்புச்சார், மற்ற டிரையல்லாம் அப்போதான் பண்ணுவாங்க. நான் சாப்பிட்டுப்பார்க்கமாட்டேன். அவ்வளவு ஜனநாயகவாதி நான் சாப்பாட்டு விஷயத்தில் ஹாஹா)

      Delete
  9. அடடே...   எங்கள் வீட்டில் புளிக்காய்ச்சல் செய்தது நேற்றுதான் தீர்ந்தது.  புலி சேவை ஐடியா வராமல் போனதே...  சமயங்களில் என்ன டிப்பன் என்ன டிஃபன் என்று பாஸ் மண்டையை உடைத்துக் கொள்வது வாடிக்கையாகி விட்டது!

    ReplyDelete
    Replies
    1. " புலி"சேவை என்பதால் வேண்டாம்னு நினைச்சிருப்பாங்க ஶ்ரீராம். இஃகி,இஃகி,இஃகி! ஒரு மெனு வைத்துக் கொண்டு பண்ணினால் என்ன டிப்பன் என்று மண்டை காய வேண்டாம். முன்னெல்லாம் நான் யாரானும் என்ன டிஃபன் என்று கேட்டால் "அடி"ஃபன் என்று சொல்லுவேன்.

      Delete
  10. Replies
    1. சிரமம் ஏதும் இல்லை. நன்றி திரு தனபாலன்.

      Delete
  11. கடைசியில் எங்களுக்கு கண்ணில் காட்டவேயில்லையே.... ?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, கில்லர்ஜி! கொஞ்சம் தானே பண்ணினேன். நாங்களே சாப்பிட்டுட்டோம். :)))))

      Delete
  12. Sevai is my favourite, my mom does it in your style. I make flour and keep it ready, then put it in boiling water and sevai saadhippen. But this traditional method tastes better for sure

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நானும் மாவில் பண்ணி இருக்கேன். இப்போல்லாம் ஏனோ அது சரியா வரதில்லை. ஆகவே பழையபடி பாரம்பரிய முறைக்கே போயிட்டேன்.

      Delete