எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 07, 2021

இது ஒரு கொரோனா காலம்! :(

 கொரோனா ஆட்டம் பார்க்கவும்/கேட்கவும்/படிக்கவும் கவலையும் பயமுமாக இருக்கிறது. நாட்கள் நகர்வதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. என்னதான் வெளியில் போகாமல் இருந்தாலும் வெளி ஆட்கள் வருவதையும் தவிர்க்க முடியாது. பால்காரர், பேப்பர்காரர், காய் கொண்டுவருபவர் என்று வரத்தான் செய்கிறார்கள். கடவுளை வேண்டிக் கொண்டு தான் ஒவ்வொரு நாளையும் நகர்த்த வேண்டி இருக்கு. இந்த அழகில் மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது எனவும் அது குழந்தைகள் முதல் அனைவரையும் தாக்கும் என்றும் சொல்கின்றனர். வரப் போகிறது எனக் கண்டுபிடிப்பவர்களால் அதைத் தடுக்கத் தெரியாமல் இருப்பது நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது. எப்போத் தான் கடவுள் நம்மை இந்தப் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பாரோ? இதில் ஆக்சிஜன் கிடைக்காமல் இருப்பது இன்னமும் கொடுமை என்றாலும் அதற்கு அரசைக் காரணமாகச் சொல்லுவதும் சரியாகத் தெரியலை. திடீரென இத்தனை நோயாளிகள் பெருகக் காரணம் மக்களின் அலட்சியமே தான். அதற்காக அரசு நடவடிக்கை எடுக்காது என்றோ எடுக்கக் கூடாது என்றோ அர்த்தம் இல்லை. இதை எல்லாம் பார்த்தாவது மக்கள் இனியாவது பொறுப்பாக நடந்துக்க வேண்டாமா?

திருச்சியில் சிங்காரத்தோப்பு/சிந்தாமணிக் கடைகளில் முக்கியமாகத் துணிக்கடைகளில் பெரும் வெள்ளமாக மக்கள் குவிந்திருக்கிறார்கள். என்ன சொல்லுவது? இப்படி எல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு நோய் வந்தபின்னர் அதன் கடுமையைப் பார்த்த பின்னர் அரசு உதவி செய்யலைனு சொன்னால் என்ன அர்த்தம்? நாம் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா?  நீதிமன்றங்களும் அரசைத் தான் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றன. என்னவோ போங்க! எல்லாம் அந்த ஆண்டவன் தான் பார்த்துச் சரி செய்யணும்!

2,3 நாட்களாக வீட்டில் அலமாரிகளைச் சுத்தம் செய்யும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. வீட்டு வேலை செய்யும் பெண் வரும்போது இதை எல்லாம் கவனிக்க முடியாது. அவங்க வரதுக்குள்ளே பாத்திரங்களை ஒழிச்சுப் போட்டு, வீடு சுத்தம் செய்யத் தயாராக்க வேண்டி இருக்கும். அலமாரிகளை ஒழிக்க உட்கார்ந்தால் காலை பத்து மணி வரை சரியாய் இருக்கும். மத்தியான நேரங்களில் உட்கார அலுப்பாக ஆகிவிடுகிறது. ஆகவே வேலை செய்யும் பெண்மணி வராத இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நாளைக்கு ஒரு அலமாரி என்னும் கணக்கில் சுத்தம் செய்து கொண்டிருக்கேன்.  இன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பதால் நோ சுத்தம் செய்யும் வேலை! நாளைக்குத் தான் மறுபடி!

இப்படிச் சுத்தம் செய்ததில் ஒரு சில/பல புத்தகங்களையும் ஒழுங்கு செய்தேனா! அதில் கண்டு பிடிச்சது ஶ்ரீராமோட எஸ்.ஏ.பி. கதைகள் அடங்கிய தொகுப்பு என்னிடம் இருக்கு. ஹிஹிஹி! ஶ்ரீராம் யாரோ "தேட்டை" போட்டுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருக்கார். இருங்க இருங்க, இருங்க! நான் தேட்டை எல்லாம் போடவில்லை. முன்னொரு காலத்தில் எப்போவோ அவர் வீட்டுக்கு அதுவும் ஶ்ரீராமே ஆட்டோ அனுப்பி வரவைச்சப்போ அங்கே இருந்த புத்தக அலமாரியையும் புத்தகக் குவியலையும் பார்த்துட்டு மயக்கம் வந்து அந்த அரைகுறை மயக்கத்தில் எதை எடுப்பதுனு தெரியாமல் எடுத்து வந்தவை இவை!  இன்னொரு புத்தகம் ரா.கி.ர.வோடது. ப்ரொஃபசர் மித்ரா இன்னும் ஏதோ ஒண்ணு! எஸ்.ஏ.பி.யின் மலர்கின்ற பருவத்தில் என்னிடம் இருக்கும் தொகுதியில் இருக்கு. மறுபடி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். என்ன? விமரிசனமா? ம்ஹூம்! அதெல்லாம் கிடையாது. ஆன்லைன் தயவில் நிறையப் புத்தகங்கள் தரவிறக்கிப் படிச்சுட்டு இருக்கேன்! ஆனால் நோ விமரிசனம். ஓகே! வீட்டு வேலைகள் அழைப்பதால் மத்தியானமாப் பார்க்கலாம். 

43 comments:

  1. நானும் க்ளீனிங்க் செய்ய வேண்டும். ஆனால் இப்போது முடியாத நிலை.

    எஸ் ஏ பி கதைகள் ஆன்லைனில் இருக்கிறதா கீதாக்கா? தேடிக் கொண்டிருக்கிறேன்...

    பிற எழுத்தாளர்களின் கதைகள் சில டவுன்லோட் செய்திருக்க்கிறேன் ஆனால் வாசிக்க வேஎண்டும்..

    ஸ்ரீரான் மறந்து போய்ட்டார் போல உங்களிடம் அப்புத்தகங்கள் இருப்பதை!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இல்லை, மறக்கவில்லை சின்ன கீதா!! :))

      Delete
    2. ஶ்ரீராமோட புத்தகங்கள் என்னிடம் இருப்பது எனக்கும் தெரியும் தான் தி/கீதா! ஆனால் என்ன நாவல்கள் என்பது தான் மறந்துவிட்டது. சில நாட்கள் முன்னர் "மலர்கின்ற பருவத்திலே" பற்றிப் பேச்சு வந்தப்போ எங்கேயோ/எப்போவோ படிச்சிருக்கோம்னு நினைச்சேன். கடைசியில் பார்த்தால் என்னிடம் உள்ள தொகுப்பிலேயே இருக்கு! இஃகி,இஃகி!

      Delete
    3. நானும் மறக்கவில்லை ஶ்ரீராம். மதுரை மேலாவணி மூலவீதியில் இருந்தப்போ அங்கேயும் என்னைச் சேர்த்து இரண்டு கீதா! அந்த இன்னொரு கீதா மராட்டி/கன்னட ராயர் வீட்டுப் பெண். மொட்டை அடித்துக் கொண்டிருந்ததால் மொட்டை கீதா என்பார்கள் ஆரம்பத்தில் எல்லாம். பின்னர் அவள் அம்மா கோவித்துக் கொண்டதும் அவளைச் சின்ன கீதா என்றும் என்னைப் பெரிய கீதா என்றும் அழைப்பார்கள். அது இங்கேயும் ரேவதி தயவில் தொடர்கிறது! :))))))

      Delete
    4. 'சின்ன கீதா' - இரட்டை இலைச் சின்ன கீதாவா?

      Delete
  2. விமர்சனம் எழுதாட்டியும் ஓகே கீதாக்கா....ஆன்லைன் லிங்க் மட்டும் கொடுக்க முடிந்தால் கொடுங்க. எஸ் ஏ பி என்றில்லை, மற்ற எழுத்தாளர்களின் கதைகளுக்கான லிங்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கடவுளே! முதல்லேயே தெரிஞ்சிருந்தா வாட்சப்பிலேயே தம்பி அனுப்பியதை ஃ1பார்வார்ட் பண்ணி இருப்பேன். இருங்க! தம்பிட்டே மறுபடி அனுப்பச் சொல்லிக் கேட்கிறேன்.

      Delete
    2. ராஜம் கிருஷ்ணன் புத்தகங்கள் நாட்டுடமை என்பதால் "அமுதமாகி வருக!" இன்னும் ஒரு சிலவற்றைத் தவிர்த்த மற்றவை கிடைக்கின்றன. அனுத்தமாவோடதும் கிடைக்கின்றன.

      Delete
  3. பலவற்றை படிக்க நேரம் கிடைப்பதில் மகிழ்வே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன். மத்தியானம் 3 மணியிலிருந்து ஐந்துக்குள் படிக்கும் நேரம். அல்லது மத்தியானம் இரண்டு மணியிலிருந்து ஒரு மணி நேரம் படிப்பேன்.

      Delete
  4. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல, கொரோனா பிரச்சனை மக்களால் அதிகமாகியிருக்க, அரசைக் குறை சொல்வது எப்படிச் சரியாகும்?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆக்சிஜன் கிடைக்கலைனா மத்திய அரசின்/மாநில அரசுகளின் மந்திரிகள்/அதிகாரிகள் தான் பொறுப்பு எனச் சொல்லாமல் சொல்கின்றன நீதிமன்றங்கள். ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் என்றோ அதிக அளவில் எல்லா மாநிலங்களுக்கும் தேவைப்படும் என்றோ முன்கூட்டியே கணிக்கவா முடியும்? இந்த நோய் தான் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு மாதிரி வருதே!

      Delete
  5. இத்தனை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரியாததால் ஆக்சிஜன் கிடைக்காதது அரசின் தவறல்ல.  உண்மைதான்.  ஆனால் தேர்தல் பொதுக்கூட்டங்களும் கும்பமேளாவை அனுமதித்தது போன்ற செயல்களும் தடுக்கப் பட்டிருந்தால் பெரிய விபரீதம் தடுக்கப் பட்டிருக்கலாம்.   ஜனவரி பிப்ரவரியில் அவ்வளவு பாதிப்பு இல்லை என்றதும் மக்களிடமும் ஒரு அலட்சியம் காணப்பட்டது.  அட்வைஸ் செய்தவர்களை பூச்சியைப் போல பார்த்தனர்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாகக் கும்பமேளா, ஹோலி கொண்டாட்டங்கல் வடக்கே எனில் தெற்கே தேர்தல் திருவிழா! இதை எந்த அரசும் அனுமதித்திருக்கக் கூடாது. அரசின் அலட்சியத்தை விட மக்களின் அலட்சியம் நூறு மடங்கு அதிகம். அதனால் தான் இத்தனை நோயாளிகள்.

      Delete
  6. ஆம்.  நீங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது உங்களிடம் புத்தகம் கொடுத்தது எனக்கு நன்றாகவே நினைவில் இருக்கிறது...!  இப்போதுதான் எடுக்கிறீர்களா!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, மறுபடி படிக்க ஆரம்பிச்சிருக்கேன் என்று பதிவிலேயே சொல்லி இருக்கேனே ஶ்ரீராம்! வரவர எல்லோரும் நெல்லையைப் போல் மேம்போக்காகப் படிக்கிறாங்க போல! அப்புறமா அவரோட தனித்தன்மை என்னாவது? :)))))

      Delete
    2. சும்மா இருக்கறவனை வம்புக்கு இழுக்கறீங்களே.... எனக்கு ஒன்றை பல முறை படித்தால்தான் மனதில் தங்கும். இன்னொரு பிராப்ளம், எனக்கு முகங்கள் நினைவில் இருக்காது. பத்து முறை திரும்பத் திரும்பப் பார்த்தால்தான் எனக்கு ஒருத்தர் முகம் பரிச்சயமாகும். ரொம்ப வருஷம் கழித்துப் பார்த்தால், இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுமே தவிர, இது ஸ்ரீராம், இது கீசா மேடம் என்பதெல்லாம் சட் என்று தோன்றாது. இதுக்காகத்தான் நான் புகைப்படங்கள் எடுத்து வைத்துக்கொள்வேன். அவ்வப்போது பார்த்துக்கொள்வேன்.

      Delete
    3. போட்டோவை அவ்வப்போது பார்த்துக் கொண்டால்தான் நினைவுக்கே வருமா?! 

      Delete
    4. ஹிஹிஹி, ஶ்ரீராம், நான் அ.வ.நின்னேனே! நினைவில் இருக்கோ? நல்லவேளையா சுஜா கூட வந்ததால் தப்பிச்சீங்க! இல்லைனா யாரு நீங்கனு கேட்டிருப்பேன். :))))))

      Delete
    5. ஆமாம் ஸ்ரீராம். இல்லைனா, எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்றுதான் எனக்குத் தோன்றும். கேஜிஒய் அவர்களின் மனைவியையும் பெண்ணையும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் பார்த்தபோது என் மனைவிதான் அவர்களை அடையாளம் காண்பித்துச் சொன்னாள். இல்லைனா, எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பேன். ஹாஹா.

      எங்க ஆபீஸ்ல, என்னைப் பார்க்க வருகிறவர்கள்தான், அவர்களை அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். என்னால் அவர்களை நினைவுக்குக் கொண்டுவர முடியாது.

      Delete
    6. என் மனைவி அதுக்கு, எனக்கு கவனம், கூர்மையா கவனிக்கும் தன்மை குறைவு என்று சொல்வாள். ஆனால் வீட்டில் ஏதேனும் பொருளை இடமாற்றம் செய்தால் அல்லது வேறு ஏதோ புதுப்பொருள் இருந்தால் உடனே தெரியும். அதனால, என் அலுவலக அறையில் யார் வந்தாலும் எனக்குத் தெரிந்துவிடும்.

      Delete
    7. ஆமாம்..   ஆமாம்...   நான் திகைத்தே போனேன்!   இன்னமும் பாஸ் கிட்ட சொல்வேன்.  அவருக்கு பெருமை தாங்காது!

      Delete
    8. ஹிஹிஹிஹி!

      Delete
  7. வணக்கம் சகோதரி

    என்ன செய்வது? தினமும் இந்த மாதிரி பயங்களுடனே வாழுகிறோம். நீவ்கள் சொல்வது போல வீட்டிற்கு ஆர்டர் செய்து வரும் பால், காய்கறிகள், சாமான்களை கண்டால் கூட தொடுவதற்கே பயமாக இருக்கிறது. அவைகளை நன்றாக கவனமாக கழுவி துடைத்து.. அதுவே ஒரு பெரிய வேலையாகவும் ஆகிறது. பாக்கி தினமும் எத்தனையோ வீட்டு வேலைகளும் உடல்/மனச் சோர்வை தருவது போததென்று இது வேறு...

    /இந்த அழகில் மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது எனவும் அது குழந்தைகள் முதல் அனைவரையும் தாக்கும் என்றும் சொல்கின்றனர். வரப் போகிறது எனக் கண்டுபிடிப்பவர்களால் அதைத் தடுக்கத் தெரியாமல் இருப்பது நினைத்தால் கஷ்டமாகத் தான் இருக்கிறது./

    அதானே... இதை எப்படி தடுப்பது என்றுதான் தெரியாமல் திண்டாடுகிறோம். இப்படி அலை,அலையாக வந்து கொண்டிருந்தால், அதை நினைத்தாலே இன்னமும் நம் கவலையும் அடுக்கடுக்கான அலைகளாக வருகிறது.

    நீங்கள் நிறைய புத்தகங்கள் படிப்பதற்கு வாழ்த்துகள். படிக்கும் ஏதாவது நூல்களுக்கு விமர்சனமும் முடிந்த போது எழுதுங்கள். அந்த சாக்கில் நாங்களும் கதை படித்த மாதிரியான உணர்வை பெறுவோம். அத்தி மலை தேவன் நூலைப் பற்றிய விமர்சனமே நீங்கள் முடித்து விட்டீர்களா? இல்லை தொடருமா? அவ்வளவுதானா.. அதைப் படிக்கும் போது நன்றாக இருந்தது. கதை சார்ந்த மற்ற நிறைய விஷயங்களை பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது. கதையையும் ஒரளவு யூகிக்க முடிந்தது.

    நானும் அப்படித்தான். வீட்டு வேலைகளுக்கு நடுவிலோ, இல்லை முடித்து விட்டோ, கைப்பேசியை வைத்துக் கொண்டு எழுதவும். படிக்கவும். பதிவுகளை பார்க்கவும் அமர்ந்து விடுவேன். இடையே வீட்டு வேலைகளே மறுபடி அழைக்கும். இல்லை கைப்பேசியிலேயே அதிசயமாய் யாராவது அழைப்பார்கள். பையன் தினமும் பேசுவார். இதனால் எனக்கு சமயங்களில் என் பதிவுகளுக்கு பதில் தர தாமதமாகிறது. என் பதிவுக்கு நீங்கள் வந்து தந்த கருத்துகளுக்கு இங்கும் உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், காய்களைக் கழுவிடலாம், மற்ற சாமான்கள்? அதான் கொஞ்சம் இல்லை நிறையவே பயம்/கவலை! கடந்த இரு மாதங்களில் அனுத்தமாவின் 2,3 நாவல்கள், ராஜம் கிருஷ்ணனின் ஒரு நாவல், பி.வி.ஆரின் சில/பல நாவல்கள், அப்புறமா நம்ம காலச்சக்கரம் நரசிம்மாவின் அத்திமலைத்தேவன் ஐந்து பாகங்கள்னு படிச்சேன். அத்திமலைத் தேவன் விமரிசனம் அவ்வப்போது தொடரும். சிலருக்குப் பிடிக்கலை. கதை நீங்க எப்படி யூகிச்சீங்களோ அப்படி இருக்காது என்றே நினைக்கிறேன். இது மற்ற எல்லாச் சரித்திர நாவல்களைப் போல் அல்ல. இன்னமும் தொடரும் ஒன்று. நான் எல்லா வீட்டு வேலைகளையும் முடிச்சுக் கொண்டே என்னோட தனிப்பட்ட வேலைகளைப் பார்ப்பேன். கணினியைத் திறந்தாலும் சில/பல சமயங்கள் நம்ம ரங்க்ஸுக்காகச் சில வேலைகள் செய்யறாப்போல் இருக்கும். அப்போ பதிவுகள்/முகநூல் என்றெல்லாம் பார்க்க நேரம் இருந்தால் தான் பார்ப்பேன். இல்லைனா இல்லை. மெதுவாய் வந்து பதில்கள் கொடுங்க. ஒண்ணும் அவசரம் எல்லாம் இல்லை.

      Delete
  8. புதக வாசிப்பு என்பது தனித்ததோர் மகிழ்ச்சி... இருபது வயதில் கூடியது... இப்போது அதற்கெல்லாம் இயல வில்லை..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, ஆமாம் தான். ஆனால் எனக்கெல்லாம் அந்த அளவுக்கு வேலைப்பளு இல்லை. என்பதோடு தினம் இரண்டு மணி நேரமாவது வாசிக்கனு ஒதுக்கிடுவேன்.

      Delete
  9. //ஸ்ரீராமின் எஸ்.ஏ.பி. கதைகள் அடங்கிய தொகுப்பு..//

    அப்படினா என்ன அர்த்தம்?.. எஸ்.ஏ.பி. சிறுகதைகள் ஏதும் எழுதியதில்லை, இப்படித் தொகுப்பாக தொகுக்க. கதைகள் என்று பன்மையில் சொல்லும் அளவுக்கு அவரது நாவல்களைத் தொகுக்கவும் முடியாது. ஒவ்வொரு நாவலும் அதிக பக்கங்கள். விளக்கமான பதிலை ஸ்ரீராம் தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜீவி சார், உங்களுக்கு எப்படிப் புரிஞ்சதோ அப்படி வைச்சுக்கலாம். ஶ்ரீராம் வந்து பதில் சொல்லட்டும். மலர்கின்ற பருவத்திலே எல்லாம் அதிக பக்கங்கள் இல்லைனே நினைக்கிறேன். 30,32 அத்தியாயங்களுக்குள் தான். எஸ்.ஏ.பி.யின் "காதலெனும் தீவினிலே" பெரிய புத்தகமாகப் படிச்சேன். நினைவில் இருக்கு. ஆனால் தி.ஜா.வின் மோகமுள், மலர் மஞ்சம் மாதிரிப் பெரிசெல்லாம் இல்லை.

      Delete
    2. எஸ் ஏ பி சிறுகதைகள் எழுதியதில்லையா என்று தெரியாது.  எப்போதாவது தொகுப்பு கண்ணில் பட்டால் சொல்கிறேன்.  கீதா அக்காவிடம் கொடுத்திருபதில் என்னென்ன இருக்கின்றன என்று எனக்குநினைவில்லை!  கீதா அக்காதான் லிஸ்ட் தரவேண்டும்.

      Delete
    3. ஶ்ரீராம், நான் இரண்டு நாவல்கள் சேர்த்துச் செய்த பைன்டிங்கை எஸ்.ஏ.பி. அவர்களின் நாவல்களின் தொகுப்பு எனச் சாதாரணமாகச் சொல்லி இருக்கேன். அதற்கு எஸ்.ஏ.பி.யின் சிறுகதைகள் எனவும் அவற்றின் தொகுப்பூ எனவும் அர்த்தம் எடுத்துக் கொண்டால் என்ன செய்ய முடியும்? என்னிடம் உள்ள பைன்டிங்கில் எஸ்.ஏ.பியின் இன்றிரவும், மலர்கின்ற பருவத்திலேயும் சேர்த்து பைன்டிங்க் செய்யப் பட்டுள்ளது. இன்னொன்றில் ரா.கி.ர.வின் ப்ரொஃபசர் மித்ராவும் இன்னும் ஒன்றும் உள்ளது. பார்த்துட்டுச் சொல்றேன். சாதாரணமாக எழுதிய ஒரு சொல்/வார்த்தை! இப்படி எல்லாம் அர்த்தம் கொள்ள வைக்குமா என்பதை நினைத்து வியப்பாக இருக்கிறது. எஸ.ஏ.பி. சிறுகதைகள் எழுதி இருப்பாரா என்பது குறித்து நானும் அறியேன். சும்மா ஒரு குறிப்புக்காக/ வார்த்தைக்காகச் சொன்னது விஸ்வரூபம் எடுக்கிறது! :((((((

      Delete
  10. இந்தகாலத்தைப்பற்றி படிப்பது, கேள்விபடுவது , எல்லாமே மனதுக்கு கவலை அளிப்பது உண்மை.
    குழந்தை தாய் அடித்தாலும் அவள் காலை கட்டிக் கொண்டுதான் அழும். அது போல இறைவன் துன்பம் கொடுத்தாலும் அதிலிருந்து மீட்பதும் அவன் தான் என்று அவனை சரண் அடைந்து வணங்குவோம்.

    மிக அவசியம் ஏற்பட்டால் மட்டும் வெளியே போவோம், என்ற மன உறுதியுடன் இருந்தால் விரைவில் எல்லாம் நலமாகும்.

    புத்தங்கள் படிப்பது நல்லது. நானும் கதை கேட்பது, கொஞ்சம் கதை படிப்பது என்று இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. தினம் தினம் வாட்சப் செய்திகள் பார்க்கவோ, தொலைபேசி அழைத்தாலோ கவலை/பயம் முன்னிட்டு நிற்கிறது. நாங்க முக்கியமாய் அவர் வெளியே போய்ப் பத்துநாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஏற்கெனவே ஒரு வருஷமாகக் காஃபி பவுடர், மருந்துகள்னு வீட்டுக்கு வந்து கொடுத்தார்கள். இப்போக் காய்களையும் அப்படியே வாங்க ஆரம்பிச்சுட்டோம். வீட்டை விட்டு வெளியே போனால் மாஸ்க் இல்லாமல் போவது இல்லை. போவதும் கீழே குப்பை போடத்தான்! புத்தகங்கள் படித்தால் அதை முடிக்கிறவரைக்கும் மனசு அதிலேயே இருக்கும். இப்போ கமலா சடகோபனின் "கதவு" படிக்கிறேன். என்னிடமே இருந்தது. அங்கே இங்கே மாற்றல் ஆனதில் எங்கேயோ போய்விட்டது. பல வருஷங்கள் கழிச்சுத் திருப்பிப் படிக்கிறேன் என்பதால் சுவாரசியமாகவே செல்கிறது. இன்னும் பொன்னியின் செல்வன், தேவன் புத்தகங்களை மறுபடி உருப்போடலாமானு யோசனை. :)))))

      Delete
  11. அன்பின் கீதாமா,
    இனிய காலை வணக்கம்.
    நீங்கள் சொல்வது அத்தனையும் நிஜம்.
    தினம் தினம் இந்த செய்திகள், மனசை அதிரச் செய்கின்றன.

    நம் தொடர்புகள் அதிகரித்த அளவு அவர்களால்
    வரும் செய்தியும் நிறைய வருகின்றன.
    மனமாற்றத்துக்காக நானும் புத்தகங்களே கதி என்று இருக்கிறேன்.

    தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம் படித்துக் கொண்டிருக்கின்றேன்.
    பின்னால் மிதிலா விலாசம் வரும்.

    சகிக்க முடியாத இந்தக் கொடுமையிலிருந்து பகவான் எப்போது
    விடுவிக்கப் போகிறாரோ.
    எஸ் ஏ பி அவர்கள் புத்தகங்களும் ஆன்லைனில் கிடைக்கிறதா.

    ஸ்ரீராம் வீட்டுப் புத்தகம் புன்னகை வரவழைத்தது.

    இனிய அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரேவதி, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். தேவனின் லக்ஷ்மி கடாக்ஷம் எனக்கும் பிடிக்கும் என்றாலும் ரொம்பவே சோதனைகள்/ கலக்கங்கள் நிறைந்த நாவல் என்பதால் அவ்வளவாய்ப் படிக்கப் பிடிக்காது. படிக்கும்போதே மனசு ரொம்ப வேதனைப்படும். நான் அவருடைய நகைச்சுவை நாவல்கள்/துப்பறியும் சாம்பு போன்றவற்றையே விரும்பிப் படிப்பேன்/படிக்கிறேன். :))))) இந்தக் கொரோனாக் கொடுமை இப்போது கண்களையும் தாக்குகிறதாம். குஜராத்தில் கொரோனா குணமாகி வீட்டுக்கு வந்தவர்களுக்குக் கண்கள் பாதிப்படைந்திருப்பதாகச் சொல்கின்றனர். என்னவோ போங்க! ஒரேயடியாக மனித குலத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்து இதுவரை பார்க்கவில்லை. இது எப்போ சரியாகும்/எப்படி/எதில் போய் முடியும் என்றும் தெரியலை. எல்லோருக்குமே பிரதமர் மோதி தான் இப்படி ஓர் ஆபத்தில் நாட்டைக் கொண்டு போய்விட்டார் என்று ஆத்திரம், கோபம். குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆண்டவன் தான் கருணைபுரிய வேண்டும். அனைவர் நலமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

      Delete
  12. ஆ! எஸ்.ஏ.பி. கதைகளா?? எங்கே எங்கே? யாரங்கே கொண்டு வாருங்கள் அந்த பறக்கும் ஜமக்காளத்தை, அதில் அமர்ந்து கீதா அக்கா வீட்டிற்குச் சென்று, வாசலில் நின்று கொண்டு கதவை தட்டலாம், அவர் அந்த புத்தகங்களை வாசலில் வைப்பார், எடுத்துக் கொண்டு வந்து விடலாம். பி.வி.ஆரின் 'கிண்டி ஹோல்டான்', மிலாட்' மதுரை நாயகி போன்றவற்றை படிக்க ஆசை. எந்த லிங்கில் உங்களுக்கு கிடைத்தது?  

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி! இதுக்காகவாவது என் வலைப்பக்கம் வந்ததுக்கு நன்றி. பறக்கும் கம்பளம்/ஜமுக்காளம் எதுவும் வேண்டாம். ஏனெனில் என்னிடம் எஸ்.ஏ.பி. கதைகள் எதுவும் இல்லை ஶ்ரீராமிடருந்து நான் எடுத்து வந்த புத்தகத்தைத் தவிர்த்து. ஆனலைனில் கிடைக்கிறதானும் தெரியாது. தம்பியைக் கேட்கிறேன். பி.வி.ஆரின் கிண்டி ஹோல்டான், மணக்கோலம், மிலாட், மதுர நாயகி நானும் தேடிக் கொண்டு இருக்கேன். உங்களுக்குக் கிடைச்சால் சொல்லவும். நன்றி.

      Delete
    2. மிலாட், கிண்டி ஹோல்டான் எல்லாம் எங்கள் வீட்டு கலெக்ஷனில் இருந்தது...  ஹூம்...

      Delete
  13. @தி/கீதா, @பானுமதி, இந்தச் சுட்டிக்குப் போனால் கூடியவரை பிரபலங்களில் நாவல்கள்/எழுத்துக்கள் கிடைக்கும்.
    https://tamil-desiyam.com/sujatha-novels-pdf-in-tamil-free-download

    ReplyDelete
  14. இந்தச் சுட்டியில் அநுத்தமா நாவல்கள் எல்லாம் கிடைத்தன. இப்போக் காணோம். :(

    ReplyDelete
  15. முன்பொரு காலத்தில் லைப்ரரியிலிருந்து எடுத்துப்படித்த 'தேவனின்' கதைகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. நானும் புத்தகங்களின் துணை கொண்டு தான் நாட்களைக் கடத்துகிறேன். ஊரிலிருந்து கொண்டு வந்த புத்தகங்கள் தீர்ந்து கொண்டே இருக்கின்றன. என் மிகப்பெரிய கவலை இது தான். சரக்கு முழுவதும் தீர்ந்து விட்டால் ஊருக்கு வரும் வரை என்ன செய்வது? ஆன்லைனில் படிக்கப் பழகிக்கொள்ள‌ வேண்டுமோ?

    தேவன் கதைகள் என்றதும் என் சினேகிதி நினைவுக்கு வருகிறார். சென்னையைச் சேர்ந்த அவர் நாற்பதாண்டு பழகிய சினேகிதி. தேவன் கதைகள் என்றால் அவருக்கு அத்தனை பிடித்தம். சென்ற வாரம் நுரையீரல்கள் கொரோனாவால் சேதமடைந்த நிலையில் மரணமடைந்தார். எங்கள் குடும்ப நண்பரின் அம்மா, விபத்தொன்றில் கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க வந்த யாரோ ஒருவர் மூலம் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தார். என் சினேகிதியின் மாப்பிள்ளை கொரோனா தொற்ரால் ஆக்ஸிஜன் குறைந்து ஓமந்தூராரில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிழைத்தெழ வேண்டும். என் சகோதரி மகன் நேற்றிரவு ஆக்ஸிஜன் குறைவால் இறந்து விட்டார். 102 வயதான என் அம்மாவின் அழுகையை காதால் கேட்க முடியவில்லை. இப்படி தொடர் சோகங்களால் மனம் வெதும்பி தளர்ந்து போகிறது! எப்போது இதன் நிலை மாறுமென்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. நானே உங்களைக் கேட்க இருந்தேன், சகோதரி மகன் உடல்நிலை பற்றி. மிகவும் வருத்தத்தைத் தரும் செய்தி. உங்க சகோதரியின் நிலைமை இன்னமும் மோசமாக இருக்கும். இப்படிப் பலரும் அன்புக்குரியவர்களை இழக்க நேரிடுகிறது இந்தக் கொடிய நோயால். இதன் தாக்கம் இன்னமும் அதிகமாக ஆகும் என்றே சொல்லுகின்றனர். நேற்று திருமதி சௌம்யா ஸ்வாமிநாதன் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார். இதுவே தாங்க முடியவில்லை. குணமாகி வந்தாலும் கண்களைப் பாதிக்கிறது என்கிறார்கள். என்னனு செய்வது? அந்தக் கடவுள் தான் பார்த்துக் கண்களைத் திறக்கணும். பித்துப் பிடித்தாற்போல் இருக்கிறது.

      Delete
    2. மனோ சாமிநாதன் மேடம்...    மிகவும் வருத்தமாக இருக்கிறது நீங்கள் சொல்லி இருக்கும் செய்திகளை படிக்க...  

      Delete