எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 28, 2021

வெங்காய சாம்பார் சாப்பிட்ட கதை!

இட்லியில் பல்லி விழுந்தால் என்ன செய்வதுனு கேட்டிருக்காங்க! அதுக்கப்புறமும் இட்லி சாப்பிடத் தோணும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அப்புறமா இன்னொரு கேள்வி 200 இட்லிக்கு சாம்பார் எவ்வளவு வேண்டும்? இதெல்லாம் கணக்கு வைச்சுண்டா பண முடியும்?  அதோட இட்லி/தோசை என்ன க்ரூப்னு இன்னொரு கேள்வி. 

தெலுங்கிலே உள்ள நாயன்மார்கள் பெயரெல்லாம் கேட்டு ஒரு கேள்வி. சிவன் சொத்து திரும்பத்திரும்பப் பலர் கைகளுக்கு மாறினதை வாங்கலாமானு இன்னொரு கேள்வி!  என்னமோ அசட்டுத்தனமாக இருக்கு! 
*************************************************************************************
நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனாலும் பயமாகவே இருக்கிறது. ஊரடங்கை மேலே நீட்டிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அரசு நிர்வாகம் ஒரு நாளோ/இரண்டு நாளோ பொருட்கள் வாங்கிக் கொள்ள முன்போல் தளர்வும் உண்டு என்கிறது! இது தான் கொரோனாவைப் பரப்புகிறது என்று ஏன் புரியலை அவங்களுக்கு? சின்னச் சின்னப் பெட்டிக்கடைகள்/ மளிகைக்கடைகள்/ காய்கறிக்கடைகளை தினமும் 12 மணி வரை முன்போல் அனுமதிக்கலாம். கடைகளில் கூட்டம் இருக்காது. மக்களுக்கும் பிரச்னைகள் குறையும். இப்படி ஒரே நாள்/இரண்டு நாட்கள் எனச் சொல்லும்போது அடுத்த நாளைக்கே உலகம் அழிகிறாப்போல் நினைத்துக் கொண்டு மக்கள் கூட்டம் குவிகிறது. வெறும் காய்கறி/மளிகைப் பொருட்கள் கடைகளை மட்டும் திறந்தால் போதுமே? எல்லாக் கடைகளையும் திறந்து மக்கள் என்னமோ நாளைக்குப் போட்டுக்கத் துணி இல்லை என்பது போல் துணிக்கடைகளையும் முற்றுகை இட்டு! போதும்டா சாமி என்று ஆகிவிடுகிறது. இதை முந்தைய அரசு செய்த முறைப்படி இவங்களும் தொடர்ந்து வந்திருந்தாலே போதும். ஆனால் அவங்க செய்ததாலேயே இவங்க ஏற்றுக் கொள்வது கடினம்! என்ன செய்ய முடியும்?
***********************************************************************************
இந்த அரசால் அனுமதி பெற்று இயங்கும் காய்கறி வண்டிகள் முன்னர் வந்தாப்போல் எல்லாத் தெருக்களுக்கும் வருவதில்லை. வந்தாலும் நிறுத்தச் சொன்னால் நிறுத்துவதும் இல்லை என்கிறார்கள். அவர்களுக்கென ஓர் குறிப்பிட்ட இடம் இருப்பதாகவும் அங்கே தான் போய் வாங்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இந்த மாதிரிப் போக முடிந்தால் காய்கறிக் கடைகளையே திறந்து விடலாம். இன்று எங்கள் குடியிருப்பு வளாகத்தில் திருச்சி கார்ப்பொரேஷனில் அரசு விலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் வண்டியை வரவழைத்து எங்களுக்கு எல்லாம் இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்துப் போய் வாங்கி வந்தோம். காய்களை வண்டிக்குள்ளேயே வைத்திருப்பதால் பொறுக்கச் சிரமமாக இருப்பதாக நம்ம ரங்க்ஸ் சொன்னார். ஆனால் விலை மலிவு தான்! தக்காளி கிலோ இருபது ரூபாய் , மாங்காய் பெரிது கிலோ 30 ரூபாய் , ஐந்து ரூபாய்க்கு ஒரு கட்டுக் கொத்துமல்லி, இன்னொரு ஐந்து ரூபாய்க்குக்கருகப்பிலை, பத்து ரூபாய்க்குப் பச்சை மிளகாய், இஞ்சி பத்து ரூபாய் எனக் கொடுத்தார்கள். காய்கள் நாங்க ஏற்கெனவே நான்கு நாட்கள் முன்னர் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர் நிறைய வாங்கி இருப்பதால் எதுவும் வாங்கிக்கலை. அது தீரட்டும் என இருக்கோம். வாழைப்பழம், வெற்றிலை என எல்லாமும் வந்திருக்கிறது. எங்களுக்குத் தவறிப் போய் ஒரு வெற்றிலை வரவே அதை நான் ஓமவல்லி இலைகளோடு, முருங்கைக்கீரை, வெற்றிலை சேர்த்து சூப்பில் போட்டுவிட்டேன். 
**********************************************************************************
எல்லோருக்கும் ஒரே ஒரு பிறந்த நாள் வரும்னா, நமக்கோ 3 பிறந்த நாள் வந்துடுது. நேத்திக்குத் தான் நக்ஷத்திரப்பிறந்த நாள். இந்த வருஷம் மே மாதத்திலேயே வந்துடுச்சு! கல்யாண நாளும் ஆங்கில மாதம், தேதியோடு ஒத்தாற்போல் தமிழ்த்தேதி/கிழமை எல்லாமும் இந்த வருஷம் ஒன்றாக வந்திருந்தது.  ஒவ்வொரு வருஷமும். ஏப்ரலில் அலுவலக ரீதியான எஸ் எஸ் எல் சி. சான்றிதழின் தேதிப்படியான பிறந்த நாள். உண்மைப் பிறந்த நாளை விட வருடம், மாதம், தேதி எல்லாமே கூடக் கொடுத்திருப்பாங்க. இல்லைனா எஸ் எஸ் எல் சியே எழுதி இருக்க முடியாது! இஃகி,இஃகி,இஃகி. அப்புறமா மே மாதம் ஒரிஜினல் பிறந்த தேதி/மே அல்லது ஜூன் பதினைந்து தேதிக்குள் நக்ஷத்திரம் என 3 பிறந்த நாள் அந்தக் காலத்தில் பதினைந்து வருஷங்கள் முன்னர்//அதாவது நான் வலைப்பக்கம் ஆரம்பித்த புதுசில் நம்ம தொண்டர்/குண்டர் எல்லோரும் பல்லி மிட்டாய் வாங்கிக் கொடுத்து, பானர் எல்லாம் ஒட்டி (ஃப்ளெக்ஸ் பானர் தான்)  அமர்க்களமாகக் கொண்டாடி இருக்காங்க. அதெல்லாம் ஒரு காலம். (நானும் அப்போவே இருந்து  வஸ்த்ரகலா கேட்டுக் கேட்டு அலுத்துட்டேன். என்ன போங்க! தங்கம், வைரம் வேறே கொடுக்க வேண்டாமா?  இதுக்காகவே அப்போல்லாம் எடையைக் கூட்டி வேறே வைச்சிருந்தேன்.  இப்போ இளைச்சுட்டேன். ஆனாலும் தங்கமும் தரதில்லை/வஸ்த்ரகலாவும் தரதில்லை. சரி, போனாப் போகுது இப்போப் புதுசா வந்திருக்கிற விவாஹா ஏழு கலர்கள் மட்டும் வாங்கிக் கொடுத்தாப் போதும்னு இறங்கி வந்திருக்கேன். பார்த்துச் செய்யுங்க அண்ணன்மாரே/தம்பிமாரே!
***********************************************************************************
சமீப காலத்தில் இன்னும் சில புத்தகங்கள் படித்தேன். எஸ்.ஏ.பியின் மலர்கின்ற பருவத்திலே தவிர இன்னொரு திகில் நாவல், சரஸ்வதி ராமகிருஷ்ணன் என்பவர் எழுதியது! ஒரு மர்ம பங்களாவில் நடக்கும் கதை! பிவிஆரின் இன்னும் இரு நாவல்கள்! இன்பமான பூகம்பம், மற்றும் ஓடும் மேகங்கள். இரண்டுமே பரவாயில்லை ரகம். அதிலும் இன்பமான பூகம்பம் கதையை நமக்கு நன்கு யூகம் செய்ய முடிவதால் சுவாரசியம் இல்லை. இவரோட மணக்கோலங்கள், டைவர்ஸ், கிண்டி ஹோல்டான் இதெல்லாம் கிடைச்சால் நல்லா இருக்கும். ஆனால் தமிழ் தேசியம் வலைப்பக்கத்தில் இதெல்லாம் கிடைக்கலை.  அதே போல் ராஜம் கிருஷ்ணனின் "அமுதமாகி வருக" கிடைச்சாலும் படிக்கணும். ஏற்கெனவே படிச்சிருக்கேன் தான். ஆனால் மறுபடி நினைவு  படுத்திக்கலாமே! இப்போ எஸ்விவியின் நகைச்சுவை படிச்சுட்டு இருக்கேன். அதிலே வைணவர்கள் வெங்காயம் சாப்பிடுவது பற்றி  "கல்யாணப் பேச்சு!" என்னும் ஒரு ஹாஸ்யக் கதையில் வருது பாருங்க! 

"ஒரு நாள் என்ன ஆச்சுத் தெரியுமோ? ராத்திரி வீட்டிலே வெங்காய சாம்பார் பண்ணி இருக்கிறாள்.  திடீரென்று எட்டரை மணிக்கு ஒரு விருந்தாளி வந்து சேர்ந்தார். எனக்கு ஊரிலே வைதிகன் என்று பெயர்!வந்தவர் அதற்கு மேல் நடிக்கிறவர்; எல்லாம் வேஷம்; இருந்தாலும் வேஷமென்று காட்டிக் கொள்ளலாமா? அவர் வந்ததைப் பார்த்துவிட்டு வீட்டுக்காரி உள்ளே கையைப் பிசைந்து கொள்ளுகிறாள்.

"ஐயோ! ராமானுஜா! இன்றைக்குத் தானா அவர் வர வேணும்!" என்று முட்டிக் கொள்கிறாள். எனக்கும் ஒன்றும் தோன்றவில்லை. அவர் தெருத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டு குசலப் பிரச்னப் பேச்சுகள் ஆரம்பித்துவிட்டார். அந்தப் பேச்சு என் காதில் விழுகிறதா என்ன? நான் தான் கவலையில் மூழ்கி இருக்கிறேனே! எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

உள்ளே சென்றால் வீட்டுக்காரி குசுகுசுவென்று, "ஐயோ! இங்கே வாருங்களேன்! என்ன செய்கிறதோ தெரியவில்லையே, ராமானுஜா!" என்று உதைத்துக் கொள்ளுகிறாள். "ராமானுஜரைக் கூப்பிட்டு என்ன பண்ணுகிறது? அவர் வந்து வெங்காய சாம்பாரை வெண்டைக்காய் சாம்பாராய் ஆக்கிவிடுவாரா? நான் சொல்வதைக் கேள்! மடமடவென்று அடுப்பை மூட்டி ஒரு துவையல் அரைத்து அப்பளம் பொரித்து விடு! நான் அதுவரையில் அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்!" என்றேன்.

வெளியில் வந்ததும், "உடம்பு சௌக்கியமாயிருக்கிறதோ, இல்லையோ?" என்று அவர் கேட்டார். "எல்லாம் சௌக்கியந்தான். மூல வியாதிதான் கொஞ்ச நாளாய்  உபத்திரவப் படுத்துகிறது. நாலிலே ஐந்திலே ரொம்பத் தொந்தரவு ஆரம்பித்து விடுகிறது." என்றேன். "அதற்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார். "என்ன செய்கிறது? உபத்திரவம் பொறுக்க முடியவில்லையே?" என்றேன். "அதனால் என்ன பிசகு? ஏதோ அது ஒரு பதினேழாம் பசலிக்கட்டுப்பாடு!" என்றார். எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. "இன்றைக்குக் கூட உபத்திரவம் அதிகம்! அதைப் போட்டுக் குழம்பு வைக்கச் சொன்னேன். நீங்கள் வந்தீர்களே என்று உங்களுக்கு ஒரு துவையலாவது அரைக்கச் சொன்னேன். இன்னும்  பத்து நிமிஷங்களுக்குள் ஆய்விடும்!" என்றேன். "ஐயைய, அநாவசியம்! அதையே நானும் சாப்பிட்டு விடுகிறேன். வீண் சிரமம் வேண்டாம்." என்றார்.

கதை இன்னமும் இருக்கு. சும்மா ஒரு மாதிரிக்காகக் கொஞ்சம் போல் எடுத்துப் போட்டுத் தட்டச்சி இருக்கேன். சுமார் 23 கதைகள். எல்லாமே அந்தக் காலத்து 1936/37 ஆம் வருஷங்களில் ஆனந்த விகடனில் வந்தவை! அலையன்ஸ் பதிப்பக வெளியீடு.

76 comments:

  1. கதம்பம் நன்று.

    இங்கேயும் வீட்டு வாசலில் இன்று தான் ஒரு காய்கறி வண்டி வந்தது. விலை ஓகே! தக்காளி கிலோ 12 ரூபாய். உருளை கிலோ 35 ரூபாய். இப்படித் தான் விலை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நீங்க சொல்வதைப் பார்த்தால் இங்கே விலை அதிகம் போல! :) தக்காளி 20 ரூபாய்க்குக் கிலோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உ.கி. மண்டியே வீட்டில் இருக்கு, என்பதால் வாங்கலை.

      Delete
  2. மடமடவென நிறைய கதைகள் படித்திருக்கிறீர்கள் போல...   எனக்கு படிக்கவே ஓடமாட்டேன் என்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், பதிவுகள் எழுதுவதிலும், புத்தகம் போட எடிட் செய்யவும் கொஞ்சம் சுணக்கமாக இருக்கிறது. எல்லாம் பாதியிலேயே நிற்கின்றன. குற்ற உணர்ச்சி உறுத்தத் தான் செய்கிறது. ஆனால் மனம் பதியவில்லை. ஆகவே மாற்றாகப் புத்தகங்களை விட வேறென்ன இருக்க முடியும்? மத்தியானத்தில் படித்துவிடுவேன்.

      Delete
  3. எஸ் வி வி புத்தகம் ஒன்றோ இரண்டோ என்னிடமும் இருக்கிறது என்று நினைவு தேடவேண்டும்.  வெங்காய சாம்பார் வைப்பது அவ்வளவு பெரிய குற்றமா அந்தக் காலத்தில்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம் எங்க வீட்டில எல்லாம் வைக்கவே மாட்டாங்க அதுக்கப்புறம் பாட்டி எங்களுக்காக அதற்கென்று தனி கும்முட்டி அடுப்பு விறகு அடுப்பு வைச்சிருப்பாங்க இல்லேனா ஒரு கல்லு போட்டு அதுக்கு மேல வாணலி போட்டுத் தனியா இப்ப க்வாரண்டைன் மாதிரி கொட்டில்ல வைத்து சமூக இடைவெளியில் தனியா சமைத்து அப்புறம் அதுக்கு சாணி சானிட்டைசர் எல்லாம் போட்டுத்தான் சமைப்பாங்க அதுவும் ஞாயிற்றுக் கிழமை மட்டும் தான்!!!!! இது அப்பாவின் அம்மா. அப்பாவின் அப்பா, என் அத்தைகள் சாப்பிடுவார் என்பதால் எங்களுக்கும் கிடைக்கும். இத்தனைக்கும் இந்தப் பாட்டிதான் ரொம்ப ஆச்சாரம். ஆனால் அம்மாவின் அம்மாவை விட எங்களுக்குச் சுதந்திரம் கொடுத்தவர். எங்களுக்காகச் செய்து தருவார்

      அம்மாவின் அம்மா ரொம்ப ஆச்சாரம் என்று சொல்ல முடியாது ஆனால் மிலிட்டரி டிசிப்ளிண் அதனால் வெங்காயம் வீட்டில் மூச்!!! ஆனால் மூன்றாவது மாமா வெங்காய பஜ்ஜி, பக்கோடா என்று கடையில் வாங்கி வந்து எங்களுக்கும் கொடுத்துச் சாப்பிடுவார் ஆனால் பாட்டி இல்லாதப்ப. கூட்டுக் குடும்பம்....அடுத்தடுத்து...அதனால் பாட்டி இருக்கும் இடத்தில் சமைக்கமாட்டாங்க பெரிய மாமா இருந்த பகுதியில் கிச்சன் இதற்கென்று என்று பாட்டி அனுமதி கொடுத்தபின் சமைச்சு தருவாங்க...

      பாட்டி எங்காவது ஊருக்குப் போனால் (போவது என்பது ரொம்பவே அபூர்வம்) அப்ப எங்கள் ராஜ்ஜியம். பாட்டி காலத்துக்குப் பிறகு ஹிஹிஹிஹி...சொல்லவே வேண்டாம்...

      மாமியார் வீட்டில் வெங்காயம் வீட்டுப் பின்புறம் ஞாயிறு மட்டும் பெரிய அக்கா சமைத்துக் கொடுப்பாங்களாம் தம்பிகள் தங்கைக்கு என்று சொல்லித்தான் கேட்டேன். ஆனால் நான் கல்யாணமாகி வந்த பிறகு மாமியார் வீட்டில் இதுவரை வெங்காயம் வீட்டிற்குள் வந்ததே இல்லை. நான் அங்கிருந்தால் நோ வெங்காயம். வெங்காயம் பூண்டை நானும் மகனும் சொல்வது சங்கு சக்கரம்! ஹா ஹா ஹா

      கீதா

      Delete
    2. என்னிடமும் சிவராமன், அப்புறமா இன்னொரு புத்தகம் இருந்தது ஶ்ரீராம். தொலைந்து விட்டன. வெங்காய சாம்பார் முக்கியமாய் வைணவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். எனக்குத் தெரிந்து எழுபதுகளில் கூட! இப்போல்லாம் வெங்காயம் சர்வ சகஜம்!

      Delete
    3. எங்க வீட்டிலும் என் மாமியார் வெங்காய விஷயத்தில் ரொம்பவே கண்டிப்பு. தனியான ஸ்டவில் தான் குழந்தைகளுக்குச் சேர்த்தாலும் செய்யணும். மாமனார் செய்யப் போகும் ஸ்ராத்தம் வருவதற்கு 2 மாதம் முன்னாலிருந்தே வீட்டில் வெங்காயமே வாங்கக் கூடாது. நாங்களும்/அவ்வளவு ஏன் குழந்தைகளும் கூடச் சாப்பிட முடியாது/கூடாது. மறந்து போயோ அல்லது அவசரத்திலோ சமைக்கும் எரிவாயு அடுப்பில் வெங்காயம் போட்டுப் பண்ணிவிட்டால் அதை எடுத்த பின்னர் அடுப்பை பர்னர் உள்பட நன்றாக அலம்பித் துடைக்கணும். சூடாக இருக்கும்போதே கிட்ட இருந்து அலம்பி வைக்க வற்புறுத்துவார். கையைச் சுட்டுக் கொண்டு எல்லாமும் செய்ய வேண்டும்.

      Delete
  4. காய்கறி வண்டிகள் அனுபவம் இங்கும் அதே நிலைதான்.  முன்னர் வந்த அளவு வரவில்லை.  மளிகை எல்லாம் கூட எல்லா டிஅதிலும் வந்து விற்பதாய்ச் சொல்கிறார்கள்.  எங்கள் ஏரியாவில் எங்கும் கண்ணில் படவில்லை!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், முந்தைய அரசு நடைபாதை வியாபாரிகளை அனுமதித்திருந்ததால் எங்களுக்கு இலைக்குக் கூடத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. இப்போ நாங்க இலையில் சாப்பிட்டே 2 மாதங்கள் ஆகிவிட்டன. வண்டி இங்கேயும் தெருவில் போய்க் கொண்டிருக்கின்றன என்றுசொன்னார்களே தவிர வரவில்லை. குடியிருப்பு வளாகத்தில் அசோசியேஷன் மூலம் வரவழைத்தார்கள்.

      Delete
    2. மளிகைப் பொருட்கள் வாங்குவது பெரிய வேலையாக இருக்கும் போலிருக்கிறது.  கடைகளுக்கும் அனுமதி கிடையாது. வாசலிலும் எங்கள் ஏரியாவுக்கு வருவதில்லை...

      Delete
    3. இன்று காய்கள் வந்தன. மளிகைக்கடை நாடாரும் தள்ளுவண்டி/தொலைபேசி அழைப்பு இரண்டுக்கும் வந்து சேவை செய்கிறார். திரும்ப புதன் அன்று வருமாம்.

      Delete
  5. இதோ ஜூன் 7 வரை மறுபடியும் ழாக் டவுன் அறிவித்து விட்டார்கள்.  நாளையும், நாளை மறுநாளும் என்ன செய்வார்களோ...   

    ReplyDelete
    Replies
    1. கடைகள் இல்லைனே நினைக்கிறேன். லாக் டவுனையும் அறிவித்துவிட்டுக் கடைகளையும் திறந்தால் அதன் அர்த்தமே இல்லாமல் போகிறது.

      Delete
    2. 31 ஆம் தேதியிலிருந்து மளிகைக்கடைகள்/காய்கறிக்கடைகள் காலை சில மணி நேரங்கள் திறந்திருக்க அனுமதி கொடுத்திருப்பதாகப் பேச்சு. என்னனு சரியாத் தெரியலை.

      Delete
  6. ஹா ஹா ஹ ஹா வெங்காய சாம்பார் கதை சுவாரசியம்...புரிந்துவிட்ட்து என்றாலும் அந்தக் காலத்து எழுத்தை ரசித்தேன்...

    இப்படியானவர்கள் எங்கள் வீட்டிலும் உண்டு. ரொம்பவே ஆச்சாரம் என்பது போல் காட்டிக் கொள்பவர்கள் நைசாக வெங்காய பக்கோடா, வெங்காய பஜ்ஜி எல்லாம் சாப்பிடுபவர்கள். தெரிந்துவிட்டால் அதுக்கு ஒரு சாக்குபோக்கும்..அதுவும் எப்படின்னா ஆயுர்வேத டாக்டர்தான் சொல்லியிருக்கார் சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி உப்பு துளி போட்டு கொஞ்சம் சாதத்துல போட்டு கலந்து சாப்பிட நல்லதுன்னு அதான் என்று ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, சீக்கிரமா வந்திருக்கீங்க என்பதால் கணினி கிடைக்கப் பிரச்னை இல்லையோ? எஸ்விவியே ஓர் வைணவர் தான். இந்த மாதிரி எழுதவும் தைரியம் வேண்டுமே! ஆனால் வெகு நாசூக்கான ஹாஸ்யச் சுவை. யார் மனதையும் புண்படுத்தாதவை.

      Delete
    2. ஓ எஸ்விவியே வைணவர் தான்// ஓஹோஒ....ஹாஸ்யம் பிடிக்கும் வாசிக்க வேண்டும் ....இணையத்தில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

      ஆமாம் அக்கா ஒவ்வொரு நாள் ஒவ்வொரு சமயம் கிடைக்கும். இன்று காலை அவர் எடுக்க வேண்டிய ஆன்லைன் வகுப்பு கான்சல் ஆகி மதியம் 2.30 க்கு என்று ஆனதால் இதோ இன்னும் ஒரு முக்கால் மணி நேரத்தில் பார்க்க வேண்டியதைப் பார்த்துடனும்

      கீதா

      Delete
    3. இவ்வளவு நேரமா இந்தக் கருத்தைப் போட இணையத்தோடு போராடி....கிட்டத்தட்ட 15, 20ம்னிமிஷமா

      மத்த தளத்தில் எல்லாம் கருத்து போனது இங்கு மீண்டும் வந்து போட்டால் (கருத்துகளை வேர்டில் காப்பி செஞ்சு வைச்சுடுவோம்ல!!!! இல்லேனா திரும்ப அடிக்கனுமே!) இங்கு மட்டும் போகவே இல்லை...

      ஹப்பா ஒரு வழியா இப்ப போச்சு..

      கீதா

      Delete
    4. எனக்குத் தெரிஞ்சு எஸ்விவி இணையத்தில் இல்லைனு நினைக்கிறேன் தி/கீதா! இன்னும் சொல்லப் போனால் பலருக்கும் அவர் பெயரே தெரியலை. நானும் தேடிப் பார்க்கிறேன்.

      Delete
    5. சில சமயங்களில் இணைய இணைப்பின் வேகம் சரியில்லைனாலும் கருத்துப் போட்டால் போவதில்லை. அது மாதிரி ஆயிடுச்சோ?

      Delete
  7. கீதாக்கா நானும் வெற்றிலை ஓமவல்லி கருகப்பிலை சூப் செய்கிறேன். முருங்கைக் கீரை கிடைப்பதில்லை இப்ப.

    லாக்டவுன் நீங்க சொல்லிருப்பதுதான் என் கருத்தும்...இங்கும் ஜூன் 7 வரை லாக் டவுன் என்று தெரிகிறது. குறைந்தால் நல்லது...நம்புவோம். இங்கு காய்கள் விலை சில கடைகளில் குறிப்பாகத் தள்ளு வண்டிகளில் குறைவாகத்தான் இருக்கிறது. பெரிய கடைகள் இல்லாமல் தள்ளு வண்டியில் விற்பதை அனுமதித்தாலே நல்ல விஷயம் கீதாக்கா...அத்தனை கூட்டம் இருக்காது நம் வீட்டு வாசலில் வரும் போது வாங்கிக் கொள்லலாம் நாங்கள் இங்கு அப்படித்தான் பெரும்பாலும்

    புத்தகங்கள் நானும் தரவிறக்கி வைத்தது, ஸ்ரீராம் அனுப்பியது எல்லாம் வாசிக்கிறேன் அவ்வப்போது. நீங்கள் சொல்லிருப்பது போல் இதுக்கு முன்னவும் சொன்ன நினைவு.....பானுக்காவும் கிண்டி ஹோல்டான், மிலார்ட் புத்தகம் சொல்லி நானும் தேடுகிறேன் கிடைக்கவில்லை.

    எஸ் ஏ பி கதைகலும் கிடைக்கவில்லை தேடுகிறேன்.

    அக்கா சரஸ்வதி ராமகிருஷ்ணர் என்பவர் எழுதிய திகில் நாவல் பெயர் என்ன? நெட்டில் கிடைக்கிறதா?

    உங்கள் மூன்று பிறந்த நாளுக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, மீள் வருகைக்கு நன்றி. நான் தினமும் கஷாயம் அல்லது சூப் பண்ணுகிறேன். தள்ளு வண்டி நேற்றுத் தான் வந்தது. புத்தகங்களில் எஸ்.ஏ.பி. நாவல் எல்லாம் இணையத்தில் எனக்குத் தெரிந்து இல்லை. நான் தமிழ் தேசியம் வலைப்பக்கமே போய்ப் பார்க்கிறேன், உங்களுக்கும் சுட்டி அனுப்பிய நினைவு. சரஸ்வதி ராமகிருஷ்ணன் எழுதிய "தாழம்பூ பங்களா" என்னும் நாவலும் அந்த எஸ்.ஏ.பி.நாவலோடு சேர்ந்து பைன்டிங்க் செய்து வைத்திருக்கிறார் ஶ்ரீராமின் அப்பா.

      ஹிஹிஹி, தாமதமாய்ப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னதுக்கு நன்னி! சீக்கிரமா வஸ்த்ரகலா/வைர நெக்லஸ் எல்லாம் அனுப்பி வைச்சுடுங்க. :))))))

      Delete
    2. /சரஸ்வதி ராமகிருஷ்ணன் எழுதிய "தாழம்பூ பங்களா" என்னும் நாவலும் அந்த எஸ்.ஏ.பி.நாவலோடு சேர்ந்து பைன்டிங்க் செய்து வைத்திருக்கிறார் ஶ்ரீராமின் அப்பா.//

      நினைவிருக்கிறது.  அதற்கான படமும் நினைவுக்கு வருகிறது!  ஒரு முகம் க்ளோசப்பில்...

      Delete
    3. https://www.kameswarijewellers.com/jewellery-collections/necklaces/dazzling-diamond-necklace

      இந்த நெக்லஸ் உங்களுக்கு நல்லாருக்கும்னு தோணிச்சு அனுப்பியுருக்க்ன் பாருங்க ஹ்ஹிஹிஹி இது பிடிக்கலைனா அடுத்து மஹாராணி நெக்லஸ் பாருங்க!!!

      https://blingvine.com/products/american-diamond-necklace-set-maharani

      அக்கா எனக்கு நகை பத்தி தெரியாது. ஸோ என் கண்ணுக்குப் பட்டதை அனுப்பிருக்கேன் ஹிஹிஹிஹி

      ஆர்கானிக் காட்டன் புடவை !!!!!!

      https://knotnthreads.com/products/coffee-brown-khadi-cotton?variant=36283182055588&currency=INR&utm_medium=product_sync&utm_source=google&utm_content=sag_organic&utm_campaign=sag_organic&gclid=CjwKCAjwzMeFBhBwEiwAzwS8zKzGKyA5B0wBx3kXeAILQQtzZa_YbXhJg8ge8gMNrXuR-FCgL6B9YhoCYhAQAvD_BwE

      https://knotnthreads.com/products/butta-sarees

      புத்தகம் ஓ ஸ்ரீராமிடம் இருந்தா ஓகே ஓகே...

      நன்றி கீதாக்கா

      கீதா

      Delete
    4. இன்னொன்றும் இருக்கு ஶ்ரீராம். இன்றிரவுன்னோ என்னவோ பெயர்! அதான் முதலில் இருக்கு/ அதன் பின்னர் மலர்கின்ற பருவத்திலே அதன் பின்னர் தாழம்பூ பங்களா! இன்றிரவு எஸ் ஏ பினு நினைக்கிறேன். படிச்ச மாதிரி இல்லை. இப்போ எடுத்தப்போப் படிக்கலை. படிக்கணும்.

      Delete
    5. நெக்லஸ்/புடைவை எல்லாமே அருமை. அந்த இரண்டாம் சுட்டியில் காதுத் தொங்கட்டானோடு கூடிய நெக்லஸ் ரொம்பப் பிடிச்சிருக்கு. அதையே அனுப்பிடுங்க. காதுக்குத் தனியா வாங்க வேண்டாம் பாருங்க. :))))

      Delete
  8. கதம்ப பதிவு அருமை.
    இப்படி எல்லாம் கேள்விகளா?
    கொரோனா பாதிப்பு குறைந்தால் நல்லது.
    மதுரையில் 100 ரூபாய்க்கு பை கொடுத்து விடுகிறார்கள். பணத்தை கொடுத்து விட்டு அப்படியே வாங்கி வந்து விடலாம். குடியிருப்புக்கு வந்து கொடுக்கிறார்கள் என்று சொன்னாள் தங்கை.



    நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    புத்தகம் வாசித்து அதில் ஒரு பகுதி பகிர்வு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. ஆமாம், என்னோட டாஷ்போர்டில் வரும் கேள்விகள். இங்கேயும் அப்படிச் சில இடங்களில் கொடுப்பதாய்ச் சொல்கிறார்கள். ஆனால் எங்க பக்கம் வரலை. வாழ்த்துகளுக்கு நன்றி. புத்தகம் இப்போல்லாம் தினம் கொஞ்சமாவதுனு வாசிக்கிறேன்.

      Delete
  9. என்னமோ போங்க... வாணலியில் தப்பி அடுப்புக்குள் விழுந்த மாதிரி ஆகி விட்டது நல்ல மக்களுக்கு...

    தெரிந்தோ தெரியாமலோ மகா பாதகங்கள் அரங்கேற்றம் ஆகின்ற வேளையில் எந்தத் தெய்வத்திட்ம் சென்று முறையிடுவது?..

    ReplyDelete
    Replies
    1. நேற்று ஒருத்தர் அனுப்பிய வாட்சப்பில் கலியுகம் முற்ற முற்ற கடவுள் இருக்காரா/இல்லையானே தெரியாமல் போயிடுமாம். அதில் உள்ளதெல்லாம் இப்போ நடந்துட்டு இருக்கே!

      Delete
  10. எல்லாத்துக்கும் சேர்த்து - ..... ஒயிக!... ந்னு சத்தம் போட்டா சரியாப் போச்சுந்னு ஜனங்க இருக்காங்க..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவர் ஒருத்தர் இருக்காரே! எதையும் தாங்கும் இதயத்தோடு! இன்னமும் எதிர்க்கட்சிகள் ஊசி போடும் வேகம் பத்தலை/அது இல்லை/இது இல்லைனு சொல்லிட்டு இருக்காங்க. ஊசி போடக் கிராமங்களில் மக்கள் வருவதே சிரமமாக இருப்பதாய் இன்னொரு பக்கம் சொல்கின்றனர். இது யார் தப்பு? அரசா? மக்களா? இந்த ஊசியைப் போட்டுக் கொள்வதால் மோதிக்கு நிறையப் பணம் கிடைக்குமாம் என்றொரு பிரசாரமும் நடக்கிறதே! அதனாலும் மக்கள் மறுக்கிறார்கள். இன்னொரு காரணம் இரண்டு முறை ஊசி போட்டுக் கொண்டும் இறந்து போன சிலர்! :(

      Delete
  11. தொகுப்பு முழுவதும் சுவாரஸ்ய‌மான தகவல்கள்!
    என் சினேகிதி [ வைணவர்] இன்றளவும் வெங்காயம் வாங்கி வீட்டில் வைத்திருக்க மாட்டார். ஆனால் மகன் வெங்காய சாம்பார் கேட்டால், அன்று மட்டும் கொஞ்சம் வாங்கி சாம்பார் செய்வார். என் வீட்டில் வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை. என் வீட்டில் வந்து தங்கும்போது, ரசித்து அனைத்தும் சாப்பிடுவார். வெங்காயம் சேர்க்காததற்கு காரணம் இருக்கிறதா?
    தாமதமான, ஆனால் மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! பிறந்த நாள் என்று எழுதியிருக்கிறீர்கள், ஆனால் என்ன சமையல், என்ன இனிப்பு, எப்படி கொண்டாடினீர்கள் என்பதை எழுதவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ! பாராட்டுக்கு நன்றி. வைணவர்கள் மட்டுமல்ல/எங்களிலும் நிறையப் பேர் வெங்காயம் இப்போதும் சாப்பிடாதவர்கள் இருக்காங்க. பொதுவாகப் பூண்டு/வெங்காயம் இரண்டும் மனக்கிளர்ச்சி அதன் காரணமாக உடல் கிளர்ச்சியைத் தூண்டும் என்பதால் தினசரி சேர்க்கக் கூடாது என்பார்கள். மருந்து போல இரண்டையும் பயன்படுத்தலாம் என்றும் சொல்வார்கள். நாங்க தினம் வெங்காயம் சேர்ப்பதில்லை. வாரம் ஒரு நாள் சேர்த்தால் அதிகம். அதிலும் அந்த நாள் விரத நாளாக இல்லாமல் இருக்கணும். பூண்டு எனக்கு/என் கணவருக்கும் ஒத்துக் கொள்வதே இல்லை. ஆகவே வாங்குவதே இல்லை. பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு நன்றி. அதெல்லாம் சிறப்பான சமையல் எல்லாம் எதுவும் இல்லை. இனிப்பெல்லாம் பண்ணவே இல்லை. மே 17 ஆம் தேதி எங்கள் திருமண நாளைக்கு இனிப்புக் கொஞ்சம் போல் பண்ணினேன். எனக்குப் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கமே இல்லை. எங்க குழந்தைகளுக்கு விபரம் தெரிந்த பின்னர் அவங்க வாழ்த்து அட்டை/சாக்லேட் என அவங்களிடம் இருக்கும் பணத்தில் வாங்கிக் கொடுப்பாங்க. அந்த வாழ்த்து அட்டைகள் எல்லாம் இன்னமும் வைச்சிருக்கேன். "பைத்தியம்" என்பார் நம்ம ரங்க்ஸ். ஆனால் எனக்கு அவை பொக்கிஷம். இணையத்துக்கு வந்ததும் நண்பர்கள் மூலம் வாழ்த்துப் பெற ஆரம்பித்து அது தொடர்கிறது.

      Delete
    2. நானும் நீங்கள் சொன்ன பொக்கிஷங்களை நிறைய சேர்த்து வைத்திருக்கிறேன். பெண்களுக்கு அது இயல்பு போல!
      தாமதமான திருமண நாள் வாழ்த்துக்களும்கூட!!

      Delete
    3. நன்றி மனோ சாமிநாதன்.

      Delete
  12. நட்சத்திரப் பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரி. மற்ற இரு பிறந்த நாளுக்கும் சேர்த்து தாமதமான வாழ்த்துகள் ஆரோக்கியமான மகிழ்வான வாழ்விற்கு பிரார்த்தனைகள்.

    முதலில் அது என்ன கேள்விகள் புரியவில்லையே. எங்கு வருகிறது ஓ டேஷ்பொர்டிலா

    எங்கள் பகுதியில் 2.5 கி மீ தூரம் எடக்கரா டவுன் போய்தான் சாமான் வாங்க வேண்டும். நாங்கள் இருப்பது கிராமத்துப் பகுதி. எனவே வீட்டு வாசலில் எதுவும் வராது ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. என்பதை விட இல்லை எனலாம். வீடுகளும் தள்ளி தள்ளி ரப்பர் தோட்டங்களுக்கு இடையில். டவுனுக்கும் வாரத்தில் செல்வதுதான். அங்கும் மக்கள் கூட்டம் நகரத்தைப் போல இருக்காது என்றாலும் அப்படியும் இங்கும் கோவிட் பரவுகிறது.

    மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், வாழ்த்துகளுக்கு நன்றி. என்னோட டாஷ்போர்டில் பதிவுகள் வரிசைக்குப் பக்கத்தில் இவை எல்லாம் ஓர் யோசனையாக வரும்/ அறுபதாம் பிறந்த நாளைச் சத்திரத்தில் கொண்டாடலாமா என்றெல்லாம் கேட்டிருப்பார்கள். விசித்திரமான கேள்விகள்.
      கேரளாவில் இப்போது தொற்று குறைந்திருக்கிறது என நினைக்கிறேன். இப்போதைக்குத் தமிழ்நாடு தான் முதலிடம் பெற்றுக் கொரோனாவில் முதலிடம் பெற்றிருக்கிறது. இனி கடைகளைத் திறந்தால் அதிகம் ஆகவே வாய்ப்புகள். என்ன செய்யப் போறாங்களோ!

      Delete
  13. //இட்லியில் பல்லி விழுந்தால் என்ன செய்வதுனு கேட்டிருக்காங்க// - அடக்கொடுமையே...

    //விவாஹா ஏழு கலர்கள் மட்டும்// - என்னே உங்கள் பெருந்தன்மை

    //எல்லாக் கடைகளையும் திறந்து மக்கள் என்னமோ நாளைக்குப் போட்டுக்கத் துணி இல்லை என்பது போல் துணிக்கடைகளையும் முற்றுகை இட்டு// - எனக்கும் அதே டவுட் தான், இப்ப வாங்கி எங்க போட்டுட்டு போவாங்க, என்னமோ போங்க

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏடிஎம். உடம்பு பரவாயில்லையா? கவனமாக இருங்க.
      ஹாஹாஹா, என்னோட பெருந்தன்மை பத்தி உங்களுக்கு இன்னமும் புரியலை பாருங்க. ஏழு நிறங்கள் போதும்னு சொன்னதே அதுக்கு சாட்சி! இஃகி,இஃகி,இஃகி!

      Delete
  14. அன்பின் கீதாமா,

    அருமையான வெங்காயம் மிதக்கும் பதிவு.
    எஸ் வி வி அவர்களின் இதமான நகைச்சுவை என்றுமே
    இனிமை.

    பெரிய மாமனார் வீட்டுக்கு வரும்போது
    மோப்பம் பிடிப்பது போலக் குறை சொல்வார்.'' என்ன
    அம்மா. பேரன் அகமுடையாள் வந்து நம் ஆசாரத்தை மாற்றி
    விட்டாளா" என்று கோபமாகப் பேசுவார்.

    ''இது என்னடா பிரமாதம் பழைய வீட்டில் உங்களுக்கெல்லாம் தனித் தனி
    இடம் இருந்தது. இது சின்ன வீடு, அவர்களுக்கென்று
    பால் காய்ச்ச, வெங்காய சாம்பார் செய்ய
    தனி அறை கொடுத்திருக்கிறேன் '' என்று சமாதானம் சொல்வார்.
    எத்தனையோ வேஷ தாரிகள்.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் நேர்மாறாக இருக்கும் வல்லி. பெரிய மாமியார்/மாமனார் எல்லோருமே அனுசரிக்கும் இயல்பு. எங்க மாமியார் தான் ரொம்பக் கண்டிப்பு. அவங்கல்லாம் குழந்தைங்க சாப்பிட்டால் என்னனு சொல்லுவாங்க. இவங்களோ வீட்டிற்குள்ளேயே வரக் கூடாது என்பார்கள். குழந்தைகளுக்குக் கையில் டிஃபன் கட்டிக் கொடுக்கலைனா ஓட்டலில் இட்லி/பூரி வாங்கிக் கொடுப்பார். அப்போதெல்லாம் அந்த ஓட்டல் டிஃபன் வகையறாக்களை வீட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்பார் மாமியார். ஆகவே ரயிலில் குழந்தைகளை ஏற்றிவிடும் வழியில் உள்ள ஓட்டலில் அங்கேயே டிஃபன் டப்பாவைக் கொடுத்து டிஃபன் வாங்கி வைத்துக் கொடுத்துவிட்டு ஏற்றி விடுவார் நம்ம ரங்க்ஸ். என்ன கொடுமைனா கடைசிக் காலங்களில் மாமியார் ஓரிரு மாதங்கள் செவிலியரின் உதவியோடு கழிக்க வேண்டி வந்தது. அவருக்கு முழு நினைவு இருந்ததால் தன்னோட ஆசாரம் கெட்டுவிட்டதை மனதில் நினைத்து வருந்துவார். என்ன செய்ய முடியும்?

      Delete
  15. படிப்பது மனதுக்கு அமைதி தருகிறது. பொன்னியின் செல்வன் புத்தகங்கள்
    கிடைத்திருக்கின்றன. படித்துக் கொண்டிருக்கிறேன்.
    எல்லார்வி.ஆர்வி, பிவிஆர் , ரிஷபன் ஜி என்று எல்லோர்
    புத்தகங்களும்
    நல்ல சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரேவதி. எஸ்விவியின் உல்லாச வேளை கூட என்னிடம் இருந்தது. தேடுகிறேன், கிடைக்கலை. யாரானும் எடுத்துட்டுப் போயிட்டாங்களோ தெரியலை. ரிஷபன் பரிசாய்க் கொடுத்த ஒரு கதைத் தொகுப்பு மட்டும் இருக்கு. மற்றவை எல்லாம் இணையம் மூலம் தான் தரவிறக்கிப் படிப்பேன்.

      Delete
  16. தமிழ் நாட்டில் தொற்று குறைய வேண்டும். தலைகீழாக நடக்காமல் சரியாக
    அரசு நடந்தால் தேவலை.மனதின் கலவரம்
    அடங்க சுந்தர காண்டம் பாராயணம் தான் வழி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ரேவதி! சென்ற வருடம் தெருவோரக் காய்கறிகள்/பழங்கள், சின்னச் சின்ன மளிகைக்கடைகள் எனத் திறந்திருந்ததால் மக்களுக்கு வசதியாக இருந்தது. அதோடு ஒவ்வொரு வார்டுக்கும் குறிப்பிட்ட நாள் கொடுத்து வெளியே செல்ல அனுமதித்தார்கள் என்பதால் அந்த நாள் வெளியே சென்று பொருட்கள் வாங்கி வரவும் வசதியாக இருந்தது. கடைகளிலும் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். டோக்கன் கொடுத்து வெளியே இடைவெளி விட்டு உட்காரச் சொல்லிவிட்டு மூன்று பேராகத் தான் அனுமதித்தார்கள். :( முந்தைய அரசு திறமையாகக் கையாண்டது என்றே சொல்லலாம்.

      Delete
  17. Happy happy blessed birthday akka.

    May all your wishes ☺️ vastrakala ,vaira kallaa come true 😺😺😺

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஏஞ்சல்! வாங்க! வாங்க, வாழ்த்துகளுக்கு நன்றி. வஸ்த்ரகலா, வைரக்கல்லெல்லாம் நம்ம அதிரடி சொல்றாப்போல் தானே நான் சொல்லுவதும்! அவங்க வைர மூக்குத்தியை எத்தனை பேருக்குக் கொடுத்திருக்காங்க. அது போல் நான் வாங்கிக்கலாம்னு சொல்றேன். அம்புடுதேன்!

      Delete
  18. கீசாக்கா 200 இட்டலிக்கு சாம்பாறு எவ்ளோ எனக் கேட்டால், ஏன் திட்டுறீங்க:))... கேள்வி கேய்ட்டால் பதில் ஜொள்ளோணும்:)..


    அதுசரி கடசி வரைக்கும் உங்கட பிறந்ததேவி எப்போதெனச் சொல்லவே இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    ReplyDelete
    Replies
    1. வாங்க, வாங்க, அதிரடி! ரொம்ப நாள் கழிச்சு வெங்காய சாம்பார் சாப்பிட வந்திருக்கீங்க! இட்லிக்கு எவ்வளவு சாம்பார்னு திட்டமா எப்படிச் சொல்ல முடியும்? குடிக்கிறவங்களா இருந்தா?
      க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னோட பிறந்த நாள் மே 23, அன்னிக்கு எல்லோரும் வாழ்த்துச் சொல்லி இருப்பதில் இருந்து தெரிஞ்சிருக்கணும். கவனம் இல்லை! எங்கே! :))))))

      Delete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீசாக்கா... என்றும் நலமோவும் மகிழ்ச்சியாகவும் இருக்கோணும் நீங்கள் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்..

    ஆரும் போடாட்டில் என்ன. அதிரா அனுப்புகிறேன் ஒரு வைரக்கற்கள் பதிச்ச சாறி... அழகா பிளீட் பண்ணி உடுத்துப் படமெடுத்து அனுப்புங்கோ.. எங்கள்புளொக்கில் போடச் சொல்கிறேன்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, வாழ்த்துகளுக்கு நன்னியோ நன்னி! பிரார்த்தனைகளுக்கும் நன்னி ஹை! வைரக்கற்கள் பதிச்சுப் புடைவையா? எத்தனை கிலோ வைரக்கற்கள்? முன்னாடியே சொல்லி இருந்தா ஒரு ஏழெட்டு கிலோ எடையைக் கூட்டி இருப்பேன் இல்ல? :))))))

      Delete
  20. டாஷ் போர்டில் இப்படியெல்லாம் கேள்விகளா? நான் பார்ப்பதே மில்லை.

    நீங்கள் பட்டுப்புடவை கட்டிக்கொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பதாக வந்த செய்திகளை நம்பி உங்களுக்காக எடுத்து வைத்திருந்த வஸ்திரகலா புடவையை ரிட்டர்ன் பண்ணி விட்டேனே? இப்போ என்ன செய்வது? வஸ்திரகலா வேறு அவுட் ஆஃப் ஃபேஷனாம். கிடைப்பதே கஷ்டமாக இருந்தது.

    எஸ்.வி.வியின் கட்டுரை ஸ்வாரஸ்யம். என் பிறந்த வீட்டில் வெங்காயம் சமைப்பது வெகு அபூர்வம். இப்போது எங்கள் வீட்டில் வெங்காயம் இல்லாமல் சமைப்பது அபூர்வம் என்றாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. biometric parameteres of egg plant பத்தி எல்லாம் கேட்டிருக்கு! கத்திரிக்காய் எத்தனை நாட்களுக்கு வைச்சுக்கலாம்னு வேறே கேள்வி. போன வெள்ளிக்கிழமை வாங்கின கத்திரிக்காயை இன்னிக்குப் பயன்படுத்தி இருக்கேன். ஆகவே குறைந்த பட்சமாகப் பத்து நாட்கள் இருக்கலாம். எஸ்விவியின் எழுத்தே சுவாரசியமாகவும் பக்கத்து வீட்டு நடப்பைக் கவனிப்பதாகவும் இருக்கும்.

      Delete
    2. //"நீங்கள் பட்டுப்புடைவை கட்டிக்கொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பதாக வந்த செய்திகளை நம்பி உங்களுக்காக எடுத்து வைத்திருந்த வஸ்திரகலா புடைவையை ரிடர்ன் பண்ணிவிட்டேனே?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அநியாயமா இல்லையோ? நான் ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு ப்ரான்ட் பட்டுப் புடைவை கேட்டு வாங்கிட்டு இருக்கேன். வஸ்த்ரகலா ரொம்ப வருஷமாப் பென்டிங். அதான் இந்த வருஷமாவது வாங்கிக் கொடுங்கனு சொன்னேன்! எங்கே நீங்க என்னோட வலைப்பக்கமே வரதில்லையா? உங்களுக்கு எதுவுமே தெரியலை. இல்லைனால் ஒவ்வொரு வருஷப் பிறந்த நாளின்போதும் பார்த்திருப்பீங்க! நாராயணா! நாராயணா! :))))))))))))

      Delete
  21. உங்க பதிவை நேற்று காலைல பார்த்து, வீட்டில் மெனுவை மாற்றி வெங்காய சாம்பார் பண்ணச்சொன்னேன். பசங்க ரெண்டுபேரும் வெங்காயம் ஏன் பண்ணினீங்கன்னு சாப்பிடலை.

    ஆனால் நான் நல்லா சாப்பிட்டேன். சௌசௌ கூட்டு சேப்பங்கிழங்கு ரோஸ்டுடன்

    ReplyDelete
    Replies
    1. என்னடா காணோமேனு பார்த்தேன். வெங்காய சாம்பார் பண்ணிட்டு எழுந்துக்க முடியலையா? :)))))) குழந்தைகளுக்கு அவங்களுக்குப் பிடிச்சதைப் பண்ணி இருக்கலாமே! எங்க வீட்டில் நான் குழந்தைகளுக்குப் பிடிக்கலைனா அவங்க சாப்பிடற மாதிரிப் பண்ணிக் கொடுத்துடுவேன். இதை எங்க மாமனார், மாமியார், அப்பா எல்லோருமே என்னைக் கண்டித்திருக்கிறார்கள். குழந்தைகளைக் கெடுப்பதாகச் சொல்லுவார்கள். ஆனால் குழந்தைங்க வயிறு நிறையணுமே! ஆகவே சிரமம் பார்த்ததில்லை.

      Delete
    2. அடடே...   இன்று எங்கள் வீட்டிலும் சௌசௌ கூட்டு!

      Delete
    3. இன்னிக்கு எங்க வீட்டில் சேப்பங்கிழங்கு ரோஸ்ட். சௌசௌ வாங்கவே மாட்டார். எனக்கும் அத்தனை பிடிக்காட்டியும் பஜ்ஜி, துவையல் பிடிக்கும். வெஜிடபிள் சாதம் செய்யும்போதோ சப்பாத்திக் குருமாவுக்கோ சௌசௌ போட்டால் நன்றாக இருக்கும். பூஷணிக்காய் கிடைக்கலைனா அவியலில் கூடப் போடுவேன். ஆனால் வாங்கினால் தானே! என் அம்மா பஜ்ஜி, துவையல் அடிக்கடி பண்ணுவார்.

      Delete
    4. எனக்கு சௌசௌ ரொம்பவே பிடிக்கும். இங்க சில மாதங்கள்ல கிலோ 45 கொடுத்தும் வாங்கியிருக்கேன். 10 ரூபாய்க்கும் கிடைக்கும். அதுல தேங்காய் சீரகம் அரைத்த கூட்டு ரொம்பவே பிடிக்கும்.

      ரெண்டுபேருக்கும் வெங்காயம் தேவையற்றதில் போட்டால் பிடிப்பதில்லை. (பூரி மசாலா ஓகே. நார்த் இண்டியன் சைட் டிஷ்ஷில் அரைத்துவிட்டால் ஓகே...குழம்புல எல்லாம் போட்டால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ங்கறாங்க. நல்லதுதானே).

      அது சரி...இங்க பங்கனபல்லி (கிலோ 50 ரூ), மல்லிகா (கிலோ 60 ரூ), ரஸ்பூரி (கிலோ 60 ரூ), மல்கோவா மட்டும் 100 ரூபாயை விட்டு இறங்கவில்லை, இனி பதாமி (அதாவது கர்நாடகா அல்போன்ஸா) வந்துடும் கிலோ 60 ரூபாய்க்கு.. மாங்காய் கிலோ 30-40 ரூபாய்.

      உங்க ஊர்லலாம் விலை எப்படி?

      Delete
    5. வாங்க நெல்லை, மீள், மீள் வருகைக்கு நன்னி ஹை! ரொம்பச் சொன்னதுக்கப்புறமா ஒரே ஒரு குடமிளகாய் வாங்கி வந்திருக்கார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எதுக்குனு போடறது? சௌசௌவைக் கண்ணால் பார்த்தே மாதங்கள் ஆகின்றன. நான் ரொம்ப ஒதுக்க மாட்டேன். ஆனால் இப்போல்லாம் எண்ணெயில் வதங்கிய காய்கள் ஒத்துக்கறதில்லை. ஆகவே சேப்பங்கிழங்கு ரோஸ்ட், கத்திரிக்காய்க் கறி, வெண்டைக்காய்க் கறி, புடலங்காய்க் கறி, பாகற்காய் ரோஸ்ட், வாழைக்காய் ரோஸ்ட் எல்லாம் தவிர்க்கிறேன். கொஞ்சமாய்ப் பண்ணி அவருக்கு மட்டும் போட்டுட்டு நான் பெயருக்குப் போட்டுப்பேன். அப்பளம் வாட்டி(சுட்டு)க் கொண்டு விடுவேன்.

      Delete
    6. நான் சப்பாத்திக்கான சைட் டிஷ் கூட வெங்காயம் சேர்க்காமல் பண்ணுவேன். வெங்காயக் குழம்பு, சாம்பார் இவை பிடிக்கும். மற்றபடி உ.கி.வேக வைத்துச் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்துக் காரக்கறி ரொம்பப் பிடிக்கும். ஆனால் கொஞ்சமாய்ப் பண்ணுவேன். நடுத்தர அளவில் இரண்டே இரண்டு உ.கி. போட்டு.

      Delete
    7. மாங்காய் இங்கே குறைந்த பக்ஷம் 20 ரூபாயிலிருந்து அதிக பட்சம் 30 வரை. தொக்கு மாங்காய் மட்டும் (அது தனியாக இருக்கும், ரொம்பப்பெரிசாக) 50 ரூ வரை விற்கிறது. நாங்க மாம்பழம் யாரானும் தவறிப் போய் வாங்கி வந்தால் தான்! இல்லைனா வாங்கறதில்லை. இன்னைக்கு ஒரு வீடியோவில் ஓர் சத்துணவு நிபுணர் மாம்பழம் தாராளமாச் சாப்பிடுங்க, ஆனால் மாம்பழம் சாப்பிட்டால் சாதம் சாப்பிடாதீங்க! என்று பழங்கள் சாப்பிடும் முறையை சர்க்கரை நோயாளிகளுக்காகச் சொல்லி இருக்கார். ஆகவே வாங்கலாமானு யோசனை! :)))))

      Delete
  22. அன்புள்ள கீதாம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சென்ற வாரம் முழுதும் இணைய தளம் வர இயலவில்லை. அருமையான பதிவு. ரசித்து படித்தேன். நன்றி மா .

    ReplyDelete
    Replies
    1. நன்றி வானம்பாடி. அதனால் என்ன பரவாயில்லை. வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  23. உண்மையில் என் நிலை இப்போது எதுவும் சாப்பிடவே பிடிக்காமல் இருக்கிறது.  ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது உண்மை ஶ்ரீராம், இங்கேயும் தினம் எழுந்தால் என்ன சமைப்பது என்பது கொஞ்சம் மனதில் அலுப்புத் தட்டுகிறது. சும்மாப் பசிக்குச் சாப்பிடுகிறோம். அவ்வளவு தான்! அதிலும் தொலைபேசி அழைப்பு வந்தால் நடுக்கம் தான்! மூன்றாவது அலை இன்னமும் கடுமையாக இருக்கும் எனவும் அது அக்டோபரில் ஆரம்பித்து அடுத்த வருஷம் ஃபெப்ரவரி வரை இருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள். நிறையப் பேர் கொத்துக் கொத்தாக மடிவார்கள் எனவும் சொல்கின்றனர். இப்போவே கவலையாயும் பயமாயும் இருக்கு! நல்ல நாட்கள் எப்போ வரும்? :(

      Delete
    2. தடுப்பூசிகள் பெருமளவு போடப்பட்டு, மக்களும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் மூன்றாவது அலை அவ்வளவு கடுமையாக இருக்காது என்று தோன்றுகிறது.  பார்ப்போம்.  பிரிட்டனில், அமெரிக்காவில், ன்ன ஆகிறது என்றும் பார்ப்போம்.  இஸ்ரேல் பாருங்க...   இதிலிருந்து வெளில வந்துட்டாங்க...   ஜித்தர்கள்.

      Delete
    3. நாங்க இரண்டாவது டோஸ் போட்டுக்கணும். ஆஸ்பத்திரியில் திருப்பி அனுப்பறாங்க எனவும் 18/44 வயதுக்காரங்களுக்குத் தான் போடுவதாகவும் சொன்னார்கள். ஆஸ்பத்திரிக்குத் தொலைபேசினால் எடுப்பதே இல்லை. எங்க பெண்ணும்/பையரும் இன்னும் 2 வாரங்கள் போகட்டும்னு சொல்லி இருப்பதால் பேசாமல் இருக்கோம்.

      Delete
  24. செந்தூரா, பங்கனப்பள்ளி வாங்கி ஏமாந்தபின் எங்கள் பூக்காரர் ருமானி கொண்டுவந்து தந்தார்.  அது நன்றாய் இருந்தது ஒரு ஆறுதல்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு ருமானி பிடிக்கும். நல்ல கதுப்புடன் இருக்கும் மாம்பழம் அது. ஆவக்காய் மாங்காய் போடவும் ருமானிக் காய்கள் நன்றாக இருக்கும். ஊறுகாயும் நன்றாய் வரும். நாங்க மாம்பழங்கள் வாங்கியே 3,4 வருடங்கள் ஆகின்றன. வாழைப்பழம் வாங்கிக் கொண்டிருந்தோம். மாமா சந்தைக்குப் போனால் மாதுளை, கொய்யா, பப்பாளி, எப்போவானும் அன்னாசி என வாங்கி வருவார். ஸ்வாமிக்கு வைக்க வாழைப்பழம் கொஞ்சம்வாங்குவோம். இப்போ ஒரு மாதங்களுக்கும் மேலாகப் பழங்களே இல்லை.

      Delete
    2. மதுரையில் காசாலட்டு என்றொரு வகை கிடைக்கும்.   மிகச் சுவையானது.  சற்றே சிறிய சைசில் இருக்கும் அதை ஒரு ஆள் இரண்டு மூன்று கூட சாப்பிடலாம்.  நான் அதை மிஸ் செய்கிறேன்.

      Delete
    3. ஆமாம், காசாலட்டு, காசுக்கு எட்டு என்று முன்னெல்லாம் கூவுவாங்க. தோல் கசந்தாலும் உள்ளே பழம் நிறையச் சாறுடன் தித்திப்பாக இருக்கும். அதெல்லாம் இப்போ எனக்கு மறந்தே போச்சு.

      Delete
  25. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    இங்கும் லாக்டவுன். இன்று சைனா பாம் ஊசி போட்டாகி விட்டது.இதுதான் இப்பொழுது கிடைத்தது.

    எனக்கும் வேலைநேரம்போக மிகுதி புத்தகங்களுடன் களிகிறது மலையாள நாவல்கள் படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்ததுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete