எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 11, 2021

சௌந்தர்ய லஹரி 5! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

வழக்கம் போலப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இதை ஆரம்பிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் புரிந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன். குற்றம், குறைகளைப் பொறுத்தருள வேண்டும். நம் அனைவருக்கும் குருவாக இருந்து இந்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய ஆசாரியருக்கு நம்முடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம். 

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா கதி:ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஹூதி-விதி: ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மத்மார்ப்பண-த்ருசா ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம் 

நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பணம் செய்கிறோம். இதுவே அதி உந்நதமானதொரு நிலை. ஆனால் எல்லாராலும் இது இயலுமா? என்றாலும் அத்தகையதொரு முயற்சியை அம்பிகை வழிபாட்டின் மூலம் தொடங்க வேண்டும். இந்த நிலையால் இந்த சமர்ப்பணத்தால் நம்முடைய ஒவ்வொரு பேச்சுமே அம்பிகைக்குரிய ஜபமாகவும், நாம் செய்யும் அனைத்துத் தொழில்களும் அவளுக்குச் சமர்ப்பணம் செய்யும் முத்திரைகளின் விளக்கமாயும், நம் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நடையும் அம்பாளுக்குச் செய்யப் படும் பிரதக்ஷிணமாகவும், நாம் உட்கொள்ளும் உணவு, போன்றவை ஹோமத்தின் ஆஹுதியாகவும், நாம் ஓய்வெடுக்கப் படுப்பது அவளுக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இன்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செய்கையும் அம்பிகைக்குச் சமர்ப்பிக்கிறோம். எப்போதும் இந்த நினைப்போடு இருந்தோமானால் நம்மைத் துன்பங்கள் அண்டாது. அவமானங்கள் தகிக்காது; துயரங்கள் சூழாது. அனைத்தும் அவள் செயலே என நினைப்போம்.

இது சமர்ப்பண ஸ்லோகத்தின் பொருள். 

அடுத்து ஆநந்த லஹரி முதல் ஸ்லோகம் ஆரம்பம்: 

சிவ:சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் 

ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி 

அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி 

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி


 ஶிவ: ஶக்₁த்₁யா யுக்₁தோ₂ யதி₃ ப₄வதி₁ ஶக்₁த₁: ப்₁ரப₄விது₁ம்ʼ

 ந சே₁தே₁வம்ʼ தே₃வோ ந க₂லு கு₁ஶல:ஸ்ப₁ந்தி₃து₂-மபி₁ 

அத₁ஸ்த்₁வா -மாராத்₄யாம்ʼ ஹரி -ஹர - விரின்சா₁தி₃பி₄ -ரபி₁

 ப்₁ரணந்து₁ம்ʼ ஸ்தோ₁து₁ம்ʼ வா க₁த₂-மக்₁ருத₁பு₁ண்ய: ப்₁ரப₄வதி₁ 

சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு 

சேரின் எத்தொழிலும் வல்லதாம் 

இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது

அரிதெனா மறை இரைக்குமாம்

 நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்

 நடத்தி யாவரும் வழுத்து தாள்

 அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்

 ஆவதோ பரவல் ஆவதோ 

கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் 

கொடுத்து உதவியது அப்பாதுரை! 

சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சிவன் சீவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்த சித்சக்தி தான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக்கிடக்காமல் வெளியே வந்தால் தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் ப்ரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும்.

ஆகையால் சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக்காத்து ரக்ஷிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம்.

இதையே அபிராமி பட்டரும், 

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் 

கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,

 மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும் 

துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 

அபிராமி அந்தாதி 7 

இப்படி விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் மூவராலும் அம்பிகை வழிபடப் படுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்பிகையை நாமும் வழிபடுவதெனில் இது முன் ஜென்மப் புண்ணியம் அன்றி வேறென்ன இருக்க முடியும். பிறவிப் பெருங்கடலாகிய மாபெரும் சுழலில் சிக்கித் தயிர் கடையும் மத்தைப் போல் நாம் அலையாமல் நம்மைத் தடுத்தாட்கொள்ள அந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்க அம்பிகையின் சேவடிகளைப் பற்றினாலே இயலும். நம்மால் அதாவது நம் போன்ற சாமானியர்களால் நிர்குணமான பிரம்மத்தை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. புரிந்து கொள்ளவும் இயலாது. அதனால் ரூபஸ்வரூபமாக அம்பாளை ஸ்தாபித்து வழிபட்டு வந்தோமானால் நம் மனதை அந்த அம்பாளின் ரூபத்தில், பக்தி மார்க்கத்தில் திருப்பினால் அது தானாகவே நம்மை ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். நம்முடைய தேவதை ஆராதனைகளின் தாத்பரியமும் இதுவே. 

சிவனை விட்டு ஒரு கணமும் பிரியாத இந்தச் சக்தியை நாம் வழிபட்டு வந்தால் ஸர்வ விக்னங்களும் நாசம் அடைந்து, நாம் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் ஸித்தி அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இதை அபிராமி பட்டர், 

கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமங்கசிந்து பத்தி 

பண்ணியதுன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவா

நண்ணியதுன்னை நயந்தோர் வையத்து நான் முன்செய்த 

புண்ணியமேது என்னம்மே புவியேழையும் பூத்தவளே. 

அபிராமி அந்தாதி 12. 

என்று கூறுகிறார். 

ஊனும், உடலும் உருக உருக, அபிராமி அன்னையின் திருவருள் வேண்டிப் பாடிய இந்த அந்தாதித் தொகுப்பில் மேற்கண்ட பாடலுக்குப் பொருள் காண்கையில்,  அபிராமி பட்டர் 

புவி ஏழையும் பெற்றெடுத்த அம்மா, என் தாயே, அபிராமி அன்னையே, உன் புகழையே நான் நினைந்து நினைந்து பாடி வருகிறேன், உன் திருநாமம் தவிர மற்ற நாமங்களைக் கற்றேன் அல்ல; எப்போதும், எந்த நேரமும் உன்னையே நினைந்து பக்தி செய்தும் வருகிறேன். அம்மா, உன்னை நினைத்துக்கொண்டே இருந்ததால் அன்றோ, உன் பூரண நிலவு போன்ற முகத்தை நினைத்த காரணத்தால் அன்றோ அமாவாசையைப் பெளர்ணமி எனக் கூறினேன். இப்படி நான் என்னையே மறக்கும் அளவுக்கு பக்தி செய்து வந்திருக்கிறேன் என்கிறார் பட்டர். பகலும், இரவும் உன்னை நெருங்கி எந்நேரமும் உன் புகழ் பாடும் அடியார் கூட்டத்தை அல்லவோ நான் எப்போதும் நாடுகிறேன். இவை எல்லாம் உன் திருவருளால் அன்றோ நடைபெறுகிறது! என் தாயே, நான் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பிறவியில் எனக்கு இவை எல்லாம் கிடைக்கப் பண்ணி இருக்கிறாய்.

14 comments:

 1. எப்பவோ படித்த போதும் இன்றைக்கும் என் அம்மா சொல்லும்போதும் சிலிர்க்க வைத்த/வைக்கும் சுலோகம். கவிராயர் ஞாபகம் வர... சட்டுனு அவர் படைப்பு..

  எல்லாம் நலமாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 2. நாலுமுகப் பிள்ளையார் படம் இப்போது தான் பார்க்கிறேன்.

  தினமலர் வாரமலர் (இந்த வாரம்) மூளைக்கு வேலை பகுதி நினைவுக்கு வந்தது.
  பஞ்சமுகம், அஷ்டலட்சுமி என்று உதாரணங்கள் கொடுத்துவிட்டு "இதில் எந்த எண் வருகிறது?" என்று கேட்டிருக்கிறார்கள். (அடக்கஷ்டமே.. இத்தனை மோசமாயிடுச்சா மூளை இப்ப?!)

  ReplyDelete
  Replies
  1. இதை விட மோசம் அப்பாதுரை! எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள்னு கேட்டால் கூடப் புரிஞ்சுக்கறவங்க இல்லை! :(

   Delete
 3. அருமையான விளக்கம். அம்பிகையைக் கொண்டாடுவோம்.

  ReplyDelete
 4. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற தத்துவம் கருத்துகள் விளக்கம் எல்லாம் அருமை அக்கா. அரூபசக்தி - அண்டத்தின் எனர்ஜி - ஆம் அதுதான் அந்த எனர்ஜியிலிருந்துதானே நாம் எனர்ஜி பெறுகிறோம் அதைப் பெறுவதற்கான வழிகள் என்றுதானே யோக தியான வகைகள் பல கூறப்படுகிறது. நம்மால் எங்கு செய்ய முடிகிறது.

  ரூபமாக வரும் போதே மனம் அலை பாய்கிறது இதில் அரூப சக்தியோ? நீங்கள் சொல்லியிருப்பது போலத்தான் அதனால்தான் நாம் ரூபம் கொடுத்துக் கொண்டாடுகிறோம். எல்லாமே பொருள் பொதிந்தவை.

  எனக்கு இந்த எனர்ஜி லெவல் விளக்கம் ரொம்பப் பிடிக்கும். ரெய்க்கி, ப்ரானிக் ஹீலிங்க் இதைச் சார்ந்ததுதான். அதற்கு நல்ல பயிற்சி வேண்டும்.

  ரசித்து வாசித்தேன் அக்கா.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, எனக்கு இந்த ரெய்க்கி, ஹீலிங்க் பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. சிரமப்படும் நேரங்களில் கை கொடுப்பது ஶ்ரீராமஜயமே! ஜபிக்க ஆரம்பிச்சால் கொஞ்சம் நிதானத்துக்கு வரும்.

   Delete
 5. விளக்கம் அருமை தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. முந்தையப் பதிவும் வாசித்துவிட்டேன். இப்பதிவும்.

  நல்ல விளக்கங்கள். சக்தி இல்லையேல் சிவனும் சவமாகும். இதன் தத்துவம் மிகப்பெரியது இல்லையா? அதனால்தானே அர்த்தநாரீஸ்வரர் தத்துவம். சிவனைத் தொழுதல் முழுமை அடைய வேண்டும் என்றால் சத்தியைத் தொழுதல் மிக முக்கியம். அம்மையைத் தொழுதுவிட்டுத்தான் அப்பனை தரிசிப்பது வழ்க்கம்.

  நல்ல தொடர், சகோதரி.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசிதரன். அர்த்தநாரீசுவரத் தத்துவத்தைப் புரிந்து கொள்பவர்கள் அரிதிலும் அரிது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.

   Delete
 7. அம்பிகை நினைவோடு இருந்தால் அவள் வழி நடத்தி செல்வாள் என்பது உண்மை. அருமையான விளக்கம்
  அம்பிகையை நினைத்து வழிபட புண்ணியம் செய்து தான் இருக்க வேண்டும் அபிராமி பட்டர் சொன்னது போல்!
  உங்களுக்கு சொல்லும் புண்ணியம், எனக்கு கேட்கும் புண்ணியம் தந்து இருக்கிறாள்.
  அம்மாவின் பாதகமலங்களை பற்றிக் கொள்வோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி! சரணாகதி ஒன்றுதான் நமக்கு கதி!

   Delete