எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 15, 2021

சௌந்தர்ய லஹரி! 8! நவராத்திரியில் அம்பிகை வழிபாடு!

 அம்பிகையின் பாத கமலங்களின் சக்தி எப்படிப்பட்டதெனில், மற்ற தெய்வங்கள் எல்லாம் தங்கள் திருவடிகளைச் சுட்டிக்காட்டி அபய வரத முத்திரை காட்டுகையில் அம்பிகையோ அதெல்லாம் இல்லாமலேயே தன்னிரு பாதங்களை இறுகப் பற்றிக்கொண்டவர்களை ஒரு நாளும் கைவிடுவதே இல்லை. நேரே தன்னில் அவர்களை ஐக்கியப்படுத்தி மோக்ஷத்தை அளிக்கிறாள். இந்த உலகம், ஈரேழு பதினாலு லோகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் சக்திகள் போன்ற எல்லா சக்தியும் அம்பிகையிடமிருந்தே வந்திருக்கையில் அவளுக்கெனத் தனியாக அபய வர ஹஸ்தங்கள் எதுக்கு என்கிறார் ஆசாரியார். அம்பிகையின் வெவ்வேறு வடிவங்களே மற்ற தெய்வங்கள் எல்லாம் என்றாலும், இங்கே அனைத்தும் அடங்கிய லலிதா திரிபுர சுந்தரியாக அம்பிகையைக் காண்கிறார் ஆசாரியார். அத்தகைய லலிதா திரிபுர சுந்தரி இவ்வுலகத்து மாந்தரெல்லாம் அடைக்கலம் புகும் புகலிடமாகவும் இருக்கிறாள். அவள் என்னைச் சரணடையுங்கள்; நான் உங்களை ரக்ஷிப்பேன்; என்றெல்லாம் அபயவர ஹஸ்தம் காட்டவேண்டும் என்பதே இல்லை. அவளை மனதில் தியானித்தாலே போதும். தன்னோடு சேர்த்துக் கொண்டு கேட்டதை வாரி வாரி வழங்குகிறாள். 

த்வ-தன்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண: 

த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா 

பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்

 சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணெள 

தேவெனப் புகழ அதில் நிமிர்ந்து நிகர் 

செப்புவார் அபய வரதமாம் 

பாவகத்து அபினயத்தோடு உற்ற கை 

பரப்பி என் பயம் ஒறுக்குமே யாவருக்கும் அஃதரிது நின் பதம் 

இரப்ப யாவையும் அளிக்கு மான் 

மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என் 

மூலமே தழையு ஞாலமே. 

கவிராஜப் பண்டிதரின் தமிழாக்கம் 

ஸம்சார பயத்தைப் போக்கி மோக்ஷத்தை அளிக்கும் அபய முத்திரையைக் காட்டும் பிற தெய்வங்களைப் போலன்றித் தன் காலடியில் வந்து வணங்கினாலே மோக்ஷத்தைக் கொடுக்கக் கூடியவள் அம்பிகை. நாம் கேட்பதற்கும் அதிகமாகப் பலனைத் தருவாள். லலிதா திரிபுரசுந்தரிக்குக் கரங்களில் பாசாங்குசங்கள், புஷ்பபாணங்கள், கரும்பு வில் போன்றவற்றோடு காட்சி அளிப்பதால் அம்பாளுடைய கைகளால் தன்னைச் சரணடை என இடக்கை பாதங்களைச் சுட்டாமலும், வலக்கை மேல்நோக்கிக்காட்டாமலும் அவளுடைய பாதங்களே சரணம் செய்யத் தக்கவை என்பது இங்கே சூசகமாய்ச் சொல்லப் படுகிறது. பொதுவாகவே பெரியவர்களை நமஸ்கரிப்பது வழக்கம். யார் வீட்டிற்கானும் போனாலும் அங்கே வயது முதிர்ந்தவர்கள் இருந்தால் நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக்கொள்வோம். இப்போதெல்லாம் இந்த வழக்கம் இல்லை எனினும் இன்னமும் சிலர் கடைப்பிடித்து வருகின்றனர். வீட்டுப் பெரியவர்களை வணங்கினாலே ஆசிகளும், வாழ்த்துகளும் கிடைக்கிறது. கீழே விழுந்து வணங்குவதன் மூலம், நாம் அனைத்திலும் சிறியோன் என்ற எண்ணம் தோன்றி விநயம் பிறக்கும். வீட்டின் பெரியவர்களை விழுந்து வணங்கிப் பழகினோமானால் நாளாவட்டத்தில் அம்பிகையின் பாதங்களைப் பூரணமாய்ப் பற்றிக்கொள்ளலாம். நாம், நம்முடைய, என்ற நமது ஆணவம் விலகவேண்டுமானால் பரிபூரண சரணாகதி தான் சிறந்தது. 

ஆனால் அம்பிகையோ மூத்தோர்களுக்கெல்லாம் மூத்தவள்! அபிராமி பட்டரும் கூட அம்பிகையை "மூத்தவளே" என ஒரு பாடலில் அழைக்கிறார். ஆதிமூலமான பராசக்தியை அனைத்தையும் இயக்கும் சக்தியை வணங்கினால் கிடைக்கும் பெறர்கரிய பேற்றைப் பற்றி எண்ணுகையிலேயே, அவள் நாமத்தைச் சொல்கையிலேயே மனம் ஆனந்த சாகரத்தில் மூழ்குகிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையையே லலிதா திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம். அப்போதாவது நம் ஆணவத்தை எல்லாம் விட்டு விட்டு அம்மா, தாயே, நீயே சரணம், உன் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிக்கிறேன்; என்னை ஏற்றுக்கொண்டு நான் நல்வழிக்குத் திரும்பச்செய்வாய்! உன்னை என்றும் மறவாமல் இருக்கும்படி பண்ணுவாய்! என்று நம்மை மறந்து தேவியின் பாதங்களையே நினைத்துக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும். 

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே

 மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே! 

முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே 

பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 

இதையே அபிராமி பட்டர் கூறுகையில் சிந்தூரத்தை ஒத்த செந்நிறப்பெண்ணே! அம்பிகையை உதிக்கின்ற செங்கதிருக்கும் ஒப்பிட்டிருக்கிறார் பட்டர். இங்கேயோ சிந்தூரத்தைக் கூறுகிறார். அவ்வளவு செக்கச் சிவந்த மேனியை உடைய பெண்ணரசியே, நான் என்றும் வணங்கி தாள் பணிவது உன் பொன்னிறத் திருவடித் தாமரையில் தானே! தாமரை மலர்களை ஒத்த அந்தத் திருவடியில் விழுந்து வணங்குவதோடு அந்தத் திருவடியைத் தம் சிரசின் மேலும் தாங்குகிறார் பட்டர். அம்பிகையின் திருவடியைத் தம் சிரசின் மேல் தாங்கிக்கொண்டு, தன் மனதினுள்ளே அம்பிகையின் திருமந்திரமான சக்திப் பிரணவத்தை நினைத்த வண்ணம் துதிக்கிறார். அம்பிகையும் தானும் ஒன்றாகி தானே அம்பிகை என்னும் வண்ணம் இரண்டறக் கலந்து விடுகிறார் பட்டர். இவ்வளவும் போதாது என்று, அம்பிகையைத் துதிப்பதே தங்கள் வாழ்நாளின் பெரிய கடமை, பெரும்பேறு என எண்ணும் அடியார் கூட்டத்தோடும் சேர்ந்து அவர்கள் அம்பிகை குறித்த நூல்களைப் பாராயணம் செய்து வாழ்த்திப் பாடுகையில் தாமும் சேர்ந்து கொண்டு அம்பிகையை வாழ்த்திப் பாடுகிறார். இப்படிச் சொல், செயல், நினைவு என எல்லாமும் அம்பிகையாகவே இருக்கத் தான் செய்த புண்ணியம் தான் என்ன என வியந்து மகிழ்கிறார் பட்டர். அவரோ உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அமாவாசை அன்று தாம் பெளர்ணமி என அம்பிகையின் முகதரிசனத்தைக் குறித்துச் சொன்னதை மன்னன் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தும், மன்னன் கட்டளை இட்டுவிட்டான். பெளர்ணமி பூரணச் சந்திரனைக் காட்டு என! என்ன செய்ய முடியும் அவரால்! அம்பிகையைச் சரணடைந்தார். உன் பக்தன் ஆன நான் சொல்வதும் பொய்யாகுமா அம்மா! என நம்பிக்கையோடு பாடுகிறார். அம்பிகையைப் பூரண நிலவை வரச் செய்தாகவேண்டிய கட்டாயமான சூழ்நிலை; அந்தக் கடுமையான நிலையிலும் கூட அவருக்கு அம்பிகையின் மேன்மையையும், அவள் கருணையையும், அவள் பாதார விந்தங்களின் பெருமையையும் மறக்க முடியாமல் அவற்றைக் குறித்துப்புகழ்ந்தே சொல்லுகிறார் எனில் என்றோ ஓர் நாள், ஒரு நிமிடம் நின்றுகொண்டு நாம் சொல்லுவதற்கே இவ்வளவு செய்கிறாளே அம்பிகை அதை என்னவென்று சொல்வது!

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

நவராத்திரி அனுபவங்கள்!


நவராத்திரி முடிஞ்சாச்சு. இந்தப் பதிவு நேற்று வந்திருக்கணும். நேற்றுப் பூராவும் கணினியில் வேலை செய்ய நேரம் கிடைக்கவில்லை. ஆகவே இன்று போடுகிறேன். இன்றோடு கொலு முடிந்து விடுகிறது. ஆனால் இந்தப் பதிவுகள்  இன்னமும் இருக்கின்றன. முடிந்தவரை போடுகிறேன்.

இந்த வருஷம் நவராத்திரிக்குக் கொலு வைக்க முடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால் எப்படியானும் வைச்சுடணும்னு ஓர் உறுதியும் இருந்தது. படி கட்டி எல்லாம் வைக்கும் அளவுக்குப் பொம்மைகளும் இல்லை என்பதால் இருப்பனவற்றைச் சீராக அமைத்து வைத்து விட்டேன். பொம்மைகளைப் பெட்டியில் இருந்து எடுத்துத் துடைத்துக் கொடுத்தது நம்ம ரங்க்ஸ் தான். வரிசைப்படி வைத்தது நான்.  ஒரு மாதிரியாக இந்த ஒன்பது நாட்களை ஒப்பேற்றி விட்டேன். தினமும் ஒரு சுண்டல் கட்டாயமாய்ப் பண்ணிடுவேன். ஒரு நாளைக்குக் குணுக்குப் போட்டேன். இந்தப் பத்து நாட்களில் பலவிதமான அனுபவங்களும் கூட. வெற்றிலை, பாக்கு வாங்கிக்கொள்ள அழைத்தாலும் வராதவர்கள்! ஒரு நாள் வாங்கிக் கொண்டாச்சே தினம் தினம் வாங்கிக்கணுமா என்று சிலர்! தினமுமா சுண்டல் பண்ணுவாய் என்று கேட்டுக்கொண்டு சிலர்! ஒரு தரம் வெற்றிலை, பாக்குக் கொடுத்தாச்சு என்பதால் மற்ற ஒன்பது நாட்களும் அழைக்கவே அழைக்காத சிலர்! இப்படிப் பல்வேறு வேடிக்கையான மனிதர்கள். 

நான் தினம் தினம் அழைத்ததால் என்னைக் கண்டாலே ஓடி ஒளிந்த சிலரும் இவர்களில் அடக்கம். இந்தக் கொலுவுக்கு அழைப்பதிலும் சரி, வருவதிலும் சரி சென்னையை மிஞ்ச யாரும் இல்லை என்பது நன்கு புலனாயிற்று. அங்கே அம்பத்தூரில் நாங்க அனைவருமே ஒரே தெருக்காரர்கள் தான். வருஷா வருஷம் பார்க்கிற/பார்த்த கொலு தான்! என்றாலும் அழைத்தால் உடனே வருவார்கள். யாருக்கு முடிகிறதோ அவங்க தினம் வருவார்கள். இன்னும் சிலர் செவ்வாய், வெள்ளி தப்பாமல் வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிக் கொண்டு செல்வார்கள். இங்கே மாதிரி கௌரவம் பார்த்தது இல்லை. ஏனெனில் நவராத்திரியில்வெற்றிலை, பாக்கு மஞ்சள் குங்குமம் கொடுப்பதே முக்கியம். அதோடு அம்பிகைக்குத் தினம் ஒரு சுண்டலும் நிவேதனம் செய்ய வேண்டும். காலையும் ஏதேனும் கலந்த சாதம், அம்பிகைக்குப் பிடித்தமான பாயசம் பண்ணி நிவேதனம் செய்ய வேண்டும். கொலுவை வைத்து விட்டுத் தினமுமா சுண்டல் எனக் கேட்டுக் கொண்டும், யாரையும் அழைக்காமல் ஏதோ ஒரு நாள் மட்டும் அழைத்துக் கொடுத்துவிட்டுப் போதும் என இருந்தால் அது என்னமோ எனக்கு மனதுக்குக் கேட்கவில்லை. கொலுவை வைத்து விட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டும் சிலர் போகின்றனர். :( அதுவும் சரியில்லை. 

முன்னெல்லாம் சென்னையில் தபாலில் கொலுவுக்கு அழைப்பதைப் பற்றி வேடிக்கையாகப் பேசிச் சிரித்திருக்கிறோம். ஆனால் அது தொலைவில் இருந்தவர்களுக்கான அழைப்பு என்பது பின்னால் புரிந்தது. இப்போதெல்லாம் என்னிக்கானும் ஒரு நாள் மட்டும் அழைத்து மஞ்சள், குங்குமம் கொடுத்துவிட்டு மற்ற நாட்களில் யாரையும் கூப்பிடாமல் இருப்பது என்னவோ மாதிரி இருக்கிறது.  எப்படியோ இந்த வருஷம் ஓட்டியாச்சு. இனி பிழைத்துக் கிடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்னடா அம்பிகை பற்றிய பதிவோடு சேர்த்துப் போட்டுட்டேன்னு நினைக்காதீங்க! மனசில் தோன்றியதை உடனே எழுதிட்டேன். :) மேலும் தனியாப் போட்டிருந்தால் அதான் போணி ஆகும். அம்பிகை குறித்த பதிவுக்கு யாரும் வரமாட்டாங்க! :))))

19 comments:

  1. சௌந்தர்யா லஹரி விளக்கம் படித்தேன்.  மனதினால் தரிசனம் செய்து மனக்கண்ணால் பார்ப்பதை அப்படியே வர்ணனை செய்கிறார்கள்.  அம்பிகையைச் சரணடைவோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. இப்போது எங்களை கொலுவுக்கு அழைக்கிறார்கள் என்றால் நாங்கள் ஒருநாள்தான் செல்கிறோம்.  நாங்கள் செல்லும் இடத்திலும் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதாவது ஒருநாள்தான் வருகிறார்கள் என்று அறிகிறேன்.  தினம் தினம்செல்ல அவர்களே கொஞ்சம் தயங்குவார்கள் என்று தோன்றும்.  சிலர் வெறும் வெற்றிலை பாக்குதானா என்று விட்டு விடுவார்கள்.  ஏதாவது பரிசுப்பொருள் கொடுத்தால் மகிழ்வார்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது வெளியே இருந்து வரவங்க பத்தி! நான் சொல்வது இங்கேயே இருப்பவர்கள் பற்றி. எதிரே இருப்பவர்கள் கூட தினம் தினம் வந்து மஞ்சள், குங்குமம் வாங்கிக்கத் தயக்கம். சிலருக்குக் கோபம். அதனால் என்னை ஒரு நாள் கூடக் கூப்பிடவும் இல்லை! :)))) கொஞ்சம் நெருங்கிப் பழகினவங்க இரண்டு பேர் மட்டும் தினம் வந்தாங்க. எங்க தளத்திலேயே எதிரேயே இருப்பவங்க யாரையும் கூப்பிடக் கூட இல்லை. அவங்க உறவுக்காரங்க மட்டும் வந்து போனாங்க. பரிசு கொடுப்பது ஒரு நாள் மட்டும் தான். ஆனால் மஞ்சள், குங்குமம் தினம் வாங்கிப்பது விசேஷம். அதன் தாத்பரியம் யாருக்கும் புரியலை! :( கௌரவம் பார்க்கிறாங்க.

      Delete
  3. // நவராத்திரியில் வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம் கொடுப்பதே முக்கியம்..//

    இவையனைத்தும் அம்பிகை நித்ய வாச்ச்ம் செய்கின்ற மங்கலப் பொருட்கள்..

    இவற்றைக் கொடுப்போர்க்கும் கொள்வோர்க்கும் குறை என்பதே வராது...

    ஓம் சக்தி.. ஓம் சக்தி.. ஓம்!..

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீங்க துரை. அதன் உள்ளார்ந்த அர்த்தம் யாருக்கும் புரியலை. கொலுவுக்கு வந்து மஞ்சள், குங்குமம் பெற்றுக்கொள்வது ஒரே ஒரு நாள் மட்டும் என நினைக்கிறாங்க. அதுவும் வாங்கிய பரிசை வைச்சுக் கொடுத்துட்டொமெனில் மறுநாள் முதல் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. :(

      Delete
  4. இறுதியில் மனதில் இருப்பதை சொல்லி விட்டது நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  5. கீதாக்கா நான் ஊரில் இருந்த வரை ஒரு சில வீடுகளில் மட்டுமே கொலு வைப்பார்கள். கொலு வைக்கும் வீடுகளில் ஒரு நாள் தான் அழைப்பு இருக்கும் அதாவது எந்த தடங்கலும் இல்லாமல் கொலு வைச்சிருக்கோம் என்று அறிவுப்பு...எனவே தினமும் போகலாம் தினமும் வந்தாலு ஒன்றும் சொல்ல மாட்டார்கள் எல்லோரையும் கூப்பிட்டும் வெத்தலை பாக்கு எல்லாக் குழந்தைகளையும் அழைத்துச் சுண்டல் என்று. ஏண்டா/ஏண்டிக் குழந்தே வரலை என்று கூப்பிட்டுக் கொடுப்பார்கள். ஒரு வேளை வீட்டில் மற்றவர்கள் வரவில்லை என்றால் வந்திருக்கும் நபரிடம் எல்லாருக்கும் கொடுங்கோ என்று விடுபட்டவர்களுக்கும் கொடுப்பார்கள்.

    சென்னை வந்த எனக்கு புகுந்த வீட்டில் நான் வந்த பிறகு முதல் கொலுவுக்கு 15 நாள் முன்பிருந்தே கொலுவுக்கு அழைத்து லெட்டர் போடச் சொல்லி ஒரு அச்சடிக்கப்பட்ட கார்டு இருக்கும் அதில் முகவரி எழுதி அனுப்பச் சொன்னது புதியதாக இருந்தது. அதன் பின் அப்போது யாரேனும் வீட்டில் இருப்பதுண்டு என்பதால் எப்போது வேண்டுமானாலும் யாரும் வ்ரலாம் என்று. நான் ஊருக்கே புதியவள் என்பதால் மாமியார் தான் போகும் வீடுகளுக்கு என்னையும் தன்னோடு அழைத்துச் செல்வார். அல்லது எனக்கு முன்னான அண்ணி என்னை அழைத்துச் செல்வார்.

    அதன் பின் போகப் போக ஒவ்வொரு வீட்டிலும் பெரிய குடும்பம் என்பது சிறிய குடும்பம் என்றானதால், நேரம் சொல்லி அதன் பின் இந்த நாளில் இந்த நேரத்தில் என்றானது. இவர்களும் வெளியே போக வேண்டும் வீட்டிற்கு மற்றவர்கள் வரும் போது இருக்க் வேண்டுமே என்பதால் இப்படி நேரம் நாள் எல்லாம்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா! யாருமே சரியாப் புரிஞ்சுக்கலை என்பது உங்கள் பதிலில் இருந்தும் புரிகிறது. ஶ்ரீராமுக்குச் சொல்லி இருக்கேன் பாருங்க.

      Delete
  6. அக்கா, ஆச்சாரியார் சொல்லியிருப்பது அப்படியே...அதே ...அபயஹஸ்தம் என்பதை விட பாதம் தான் எதற்கு எதிர்பார்ப்பு அப்படியே டோட்டல் சரண்டராக வீழ்ந்துவிடவேண்டியதுதான்...அவள் அந்த சக்தி இல்லை என்றால் இந்த உலகமே இல்லையே ஏன் அண்டசராசரமே இல்லை என்றாகிவிடுமே...அதனால் தான் எந்த வேலை செய்தாலும் எல்லாமே உன்னால் என்று நினைத்துக் கொண்டே மனதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவது.

    அக்கா கண்டிப்பாக வரும் வருடங்களிலும் நீங்கள் இன்னும் உத்வேகத்தோடு செயல்படுவீர்கள் கொலு வைப்பீர்கள் சிறப்பாகச் செய்வீர்கள்! சக்தி உங்களுக்குச் சக்தி கொடுப்பாள்!


    இது அண்டவெளி இயற்பியல் சித்தாந்தம் அடங்கிய (மேட்டர் அண்ட் எனர்ஜி) மாபெரும் தத்துவம்.

    இதன் அடிப்படையில் நான் எழுதிய ஒரு கதை கூட இருக்கிறது தளம் தொடங்கிய போது.. வெளியிடவில்லை. அப்போது எபியும் பரிச்சயமாகவில்லை...எங்கள் தளத்திலும் போடவில்லை. தயக்கம் இருந்தது. தளம் தொடங்கிய சமயம் வகை பிரித்து ஃபோல்டர் போட்டு வைக்கவில்லை அதன் பின் தான் கட்டுரைகள், கதைகள் என்று வகை பிரித்து அததது ஃபோல்டர் போட்டு சேமித்தேன். அதன் பின் கணினி பல தடவை க்ராஷ் ஆகி, ஃபைல்ஸ் எல்லாம் கரெப்ட் ஆகி....

    இப்போது அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். எங்கு ஒளிந்திருக்கிறதோ தெரியவில்லை...அதை எந்த தலைப்பில் சேமித்தேன் என்றும் தெரியாமல் கிடைக்க மாட்டேன் என்கிறது.

    சக்தி உங்களுக்கு எல்லா சக்தியும் கொடுத்திடப் பிரார்த்தனைகள்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி தி/கீதா. சக்தியைப் பிரார்த்திப்போம்.

      Delete
  7. அக்கா சென்னையும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே மாறிவிட்டது. நீங்கள் ஆதங்கத்துடன் சொல்லியிருப்பதுதான் அங்கும். இங்கும் எங்கும்...காலமே முன் போல் இல்லை கீதாக்கா. எனவே சென்னையை மிஞ்ச என்றெல்லாம் இல்லை..

    ஆதி உங்க வீட்டுக் கொலு ஃபோட்டோ இரண்டு போட்டிருந்தாங்க அங்கு வந்தது பற்றியும் சொல்லியிருந்தாங்க

    கீதா

    ReplyDelete
    Replies
    1. 2011 ஆம் ஆண்டு வரை அம்பத்தூர் மாறலை. இப்போ எப்படினு எனக்கும் தெரியாது. எங்க வீட்டுக் கொலு படங்களை எ.பி.குழுமத்தில் போட்டிருந்தேன்.

      Delete
  8. அக்கா இங்கு உங்கள் கொலு ஃபோட்டோ புல் போடுங்க...எபி க்ரூப்பில் இல்லாதவங்க பார்ப்பதற்காக.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் போடறேன்.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. அம்பிகையின் பாதார விந்தங்களின் சக்தி குறித்து அழகாக எழுதியுள்ளீர்கள். சௌந்தரிய லஹரி ஸ்லோகமும், அதன் விளக்கமும் அருமை. அபிராமி பட்டரின் பாடலும், அதன் அர்த்தங்களும் படிக்கும் போது நமக்குள் அன்னையை தரிசித்த ஒரு மகிழ்வு, சிலிர்ப்பு வருகிறது. இந்த மகிழ்வு நமக்குள் நீடித்திருக்க அன்னையின் பரிபூரண அருள் கிடைக்க வேண்டும். பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தங்களது கொலு அனுபவங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் மனதில் எழும்/எழுந்த அத்தனை எண்ணங்களும் உண்மையானவைதான். சிலருக்கு தினமும் வர நேரமும், காலமும் அமையாது. சிலர் தினமும் வந்து அழைக்கவில்லையே என குறைப்பட்டுக் கொள்வார்கள். மனித மனமே அனைத்திலுமே விசித்திரமானதுதான்.

    நீங்கள் உங்களுக்கு முடியாத இந்த நேரத்திலும் கொலு வைத்து வழிபாடு செய்ததற்கு வாழ்த்துகள். அந்த அன்னை உங்களுக்கு கண்டிப்பாக உடல் நலம் சீராகி சிறக்க மென்மேலும் சக்தியை தந்தருவாள். நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இங்கு என் பேத்தி நலம் பெற்று வருகிறாள். குழந்தை வலி லேசாக இருக்கிறதென்று சொன்னாலும், காயம் ஆறி வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா! குழந்தை தேறி வருவது குறித்து சந்தோஷம். எத்தனை மன உளைச்சல்! என்னவோ போங்க! வீட்டில் யாரானும் படுத்தாலே மனசு கேட்காது. அதுவும் சின்னக் குழந்தை எனில் கேட்கவே வேண்டாம். கொலு அனுபவங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரசியமானவை. அவற்றில் சிலவற்றைச் சில வருஷங்கள் முன்னர் பகிர்ந்திருக்கேன். அதன் பின்னர் அனுபவங்கள் இருந்தாலும் அத்தனை சுவாரசியமாக இல்லை. அனைவருக்கும் அம்பிகையின் அருள் கிடைத்து மன அமைதியுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  10. நவராத்திரிகாலத்தில் செளந்தர்ய லஹரி சிறப்பான பகிர்வு கண்டு கொண்டோம். அம்பிகை அருளை வேண்டி நிற்போம்.

    ReplyDelete