படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என அனைத்துத் தொழில்களையும் புரிபவள் ஆதிபராசக்தியே என்றே கூறுவார்கள். சக்தியிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது. அவ்வளவு ஏன்! பரப்ரம்மம் ஆன சிவனும் அவள் செயலாலேயே தனது அசலத்தில் இருந்து அசைந்து கொடுத்து பிரபஞ்சத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பரிபூரணமாக இருக்கும் ப்ரம்மத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி அவளே. அத்தனை சக்தி வாய்ந்த பராசக்திக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்படும் விழாவாகிய இந்த நவராத்திரியில் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான பண்டிகைகளிலேயே மிகவும் விமரிசையாகப் பத்து நாட்கள் கொண்டாடப் படுவது இந்த சாரதா நவராத்திரியே. நவராத்திரி என்றால் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய இரவுகளை ஒரு பக்கம் சுட்டினாலும், மற்றொரு பக்கம் ஒன்பது இரவுகள் என்றும் பொருளைக் கொடுக்கும். எப்போதுமே உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்குமே இரவில் அமைதி கிட்டுகிறது. நம் அன்றாட வேலைகளைப் பகலில் செய்தாலும் இரவிலேயே தூங்கி ஓய்வெடுத்து அமைதியைப் பெறுகிறோம். இதற்கு இன்றைய அவசர நாட்களில் பொருளில்லை என்றாலும் பொதுவானதொரு நியதி இரவிலே உடல் ஓய்வெடுக்கும் வேளையில் மனமும், மூளையும் சேர்ந்து ஓய்வெடுக்கும் என்பதே.
பிறந்த குழந்தையானது எவ்வாறு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் தங்கிப் பின்னர் வெளிவருகிறதோ அதைப் போல் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளிடம் பக்தி செலுத்தி அந்தக் கர்ப்பவாசத்தில் மூழ்கி இருக்கிறோம். நம் மனதிலுள்ள துர் எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் தலை தூக்கும். புதியதோர் ஜீவசக்தி உடலில் பாய்ந்தாற்போல் இருக்கும். ஆகவே இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும். இது நவராத்திரியில் அம்பிகையைத் தியானிப்பதற்கு ஒரு காரணம் ஆகும். முந்தின ஸ்லோகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அம்பிகை வழிபாட்டில் நம்மால் ஈடுபடமுடியும் என சங்கரர் மட்டுமின்றி பட்டரும் கூறுவதைப் பார்த்தோம். அடுத்த ஸ்லோகம் அவளுடைய பாததூளி மஹிமையாலேயே அனைத்துத் தொழில்களும் நடைபெறுவது குறித்து ஆதிசங்கரர் சொல்கிறார்.
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி:ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி:கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர:ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்
த₁னீயாம்ஸம் பா₁ம்ʼஸும்ʼ த₁வ ச₁ரண -ப₁ன்கே₃ருஹ-ப₄வம்ʼ
விரிஞ்சி₁: ஸஞ்சி₁ன்வன் விரச₁யதி₁ லோகா₁ -நவிக₁லம்ʼ
வஹத்₁யேனம்ʼ ஶௌரி: க₁த₂மபி₁ ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ
ஹர: ஸங்க்₁ஷுத்₃யைனம்ʼ ப₃ஜ₁தி₁ ப₄ஸிதோ₁த்₃து₄லன - விதி₄ம்
பாத தாமரையி னுள் உண்டு கட்பரம
வணுவினில் பலவியற்றினால்
வேத நான்முகன் விதிக்க வேறுபடு
விரிதலைப் புவனம் அடைய மான்
மூதரா அடி எடுத்த அனந்த முது
கண-பணா அடவி பரிப்ப மேல்
நாதனார் பொடி படுத்து நீறணியின்
நாம் உரைத்தென் அவள் பான்மையே
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்
அசையாத பிரம்மமாக இருந்த சிவனை ஞானஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வைத்தவள் அம்பிகை. அவனை வெளியே இருந்து எல்லாம் அவள் அசைக்கவில்லை. அவனுள்ளே சக்தியாக ஐக்கியமடைந்திருப்பவள் இங்கே எண்ணமே இல்லாமல் இருந்த ஞான ஸ்வரூபத்திற்கு “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அசைத்தாள். இது இவ்வுலகின் முதல் அசைவு எனலாம். ஆட்டமான ஆட்டம்! இதுவே ஸ்ருஷ்டி மூலமாகவும் ஆனது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்த ஒரு அசைவு தானே அதிர்வு தானே முதல் முதல் வெளிப்பட்டது! இது தான் big bang எனப்படும் பெருவெடிப்பு என்று அறிவியல் கூறுவதாய்ப் பரமாசாரியார்(காஞ்சி) கருதுகிறார். பரப்ரஹ்மத்தின் அதிர்வே சப்த ரூபமான வேதமந்திரங்களாகி அதிலிருந்தே ஸ்தூல வஸ்துக்கள் அனைத்தும் உண்டானதாய்ச் சொல்கிறார். இதைத் தான் ஸ்பந்தனம் எனப்படும் அசைவு. இத்தகைய அசைவை உண்டாக்கின அம்பிகை இதன் மூலம் ஐந்தொழில்களையும் நடத்துகிறாள். பிரம்மா, விஷ்ணு , ருத்ரன் ஆகியோரின் உதவியோடு. அவர்கள் மூவரும் முறையே படைத்து, காத்து அழித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.
பிரம்மா அன்னையின் திருவடித்தாமரைகளிலுள்ள மிக மிக நுட்பமான துகள்களே அந்த அதிர்வின் மூலம் வந்ததோ என்னும்படி அவற்றைச் சேகரித்தே இவ்வுலகை சிருஷ்டிக்கின்றாராம். ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உருவில் விஷ்ணுவும் இவ்வுலகை மட்டும் தன் தலையில் தாங்காமல் அம்பிகையின் அந்தப் பாததூளியையும் சேர்த்தே தாங்குகிறான். ருத்ரனோ அவற்றை விபூதியாகத் தன் உடலில் பூசிக்கொள்கிறார். இவ்விதம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே அம்பிகையைத் தியானிக்கின்றனர் என்கிறார் ஆசாரியர். இதையே அபிராமி பட்டர்,
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே
என விளிக்கிறார். தெய்வீக மணம் கமழும் கடம்பமலரைத் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் அணங்காகிய அம்பிகையை ஏத்தும் பல அடியவர்களோடு இந்த ஈரேழு உலகினையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில்களையும் செய்து வரும் மும்மூர்த்திகள் கூட தெய்வ மணம் பொருந்திய உன் திருவடிகளை வணங்கி, உன்னையும் வணங்கித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளைப் போற்றிப் புகழும் அளவுக்கு என்னால் என்ன பாடல் புனைய முடியும்! இருந்தும் என் பாடலையும் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாயே! அம்மா, அபிராமி, எளியோனாகிய என் நாவில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற சொற்களால் பாடப்படும் பாமாலையையும் நகைப்புக்குரியதாய்க் கருதாமல் ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா!
எனக்கு அவ்வப்போது அல்பமாக சிறு சந்தேகங்கள் வரும். ஆதி சிவன்தான் எல்லார்க்கும் முதல் என்பார்கள். ருத்ரனையும் அப்படிச் சொல்வார்கள். இப்போது அம்பிகை. எல்லாம் ஒன்றுதான், நாம் வெவ்வேறு ரூபங்களில் பார்பபது நம் வசதிக்காக என்றும் சொல்லலாம்...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், எல்லோருக்கும் சந்தேகங்கள் வரத்தான் செய்யும். எல்லாவற்றின் சக்தி வடிவமே வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன. நம் வசதிக்காகத் தான் வெவ்வேறு ரூபங்களில் பார்க்கிறோம்.சரியே!
Deleteஅருமையான பதிவு...
ReplyDeleteஆச்சார்ய தம் அமுத வாக்கும்
அபிராம பட்டரின் அருள் வாக்கும்
போற்றுவதும் ஏற்றுவதும்
அன்னை அவளது அடியிணையே!..
ஓம் சக்தி.. ஓம் சக்தி..
ஓம் சக்தி ஓம்!..
வாங்க துரை! மிக்க நன்றி.
Deleteஅம்பிகையை வழி பட்டு நம்மை புதுபித்துக் கொள்வோம்.
ReplyDeleteஅம்பிகை வழிபாடு பற்றிய சிறப்பு பதிவு அருமை.
நன்றி கோமதி!
Deleteவிளக்கம் கொடுப்பதால் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது நன்றி சகோ.
ReplyDeleteவிடாமல் படிப்பதற்கு நன்றி கில்லர்ஜி!
Deleteசௌந்தர்ய லஹரி விளக்கம் - நல்ல விஷயம். முந்தைய பதிவுகளும் படிக்க வேண்டும். பணிச்சுமைகள் காரணமாக பதிவுகள் படிக்க முடியாமல் இருக்கிறது. முடிந்த போது படித்து விடுவேன்.
ReplyDeleteநன்றி வெங்கட்! எனக்கும் உங்களோட பல பதிவுகளைப் படிக்க முடியலை! அதிக நேரம் உட்கார முடியாமையே காரணம்! :(
Deleteஆதியும் அந்தமும் எல்லாமும் அவனும் அவனின் உள்ளிருந்து இயக்கும் அந்த சக்தியுமே ஆவாள்.
ReplyDeleteகீதா
நன்றி கீதா!
Deleteமிக நல்ல விளக்கங்கள். சக்தியைப் போற்றித் தொழுவோம்.
ReplyDeleteபிரபஞ்சத்தின் சக்தியைத்தானே நாம் வணங்கிப் போற்றுகிறோம்.
இதில் வரும் விளக்கங்கள், பிரபஞ்சத்தில் ஏற்படும் அதிர்வுகள் அதிலிருந்து பிறப்பவை என்பது உட்பட்டதோ. எனது முதல் குறும்படத்தில் மஹாமுடியில் இதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்த அளவு விளக்கமாக அல்ல.
துளசிதரன்
ஆமாம், இதைப் பற்றி "தெய்வத்தின் குரல்" புத்தகத்தில் பரமாசாரியாரின் விளக்கம் நன்றாக இருக்கும். உங்கள் முதல் குறும்படம் நான் பார்த்தேனானு நினைவில் இல்லை.
Deleteஆம் அக்கா பிக் பேங்க் தான் ஆகாச தத்துவத்தில் வருவதுதான். சிதம்பர ரகசியம் அதுவே என்றுதான் நான் அறிந்தவகையில். நம் வீட்டில் இந்த பிக் பேங்க் பற்றியும் அசையாததை அசைய வைக்கும் சக்தியும் ஒப்பீடு செய்து பேசப்படுவதுண்டு. தத்துவ ரீதியாக.
ReplyDeleteகீதா
ஆமாம், அகண்ட ஆகாசவெளியில் ஈசன் ஆடும் நடனமே சிதம்பர ரகசியம்/ நன்றி கீதா!
Delete