எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 26, 2021

பானுமதியின் பரிசு! சுஜாதா/பிவிஆரின் கதைகள்!

 கடந்த நாட்களில் சுஜாதாவின் கதை ஒன்றும் "கமிஷனருக்குக் கடிதம்!" பிவிஆரின் கதை ஒன்றும் "அதிர்ஷ்ட தேவதை" படித்தேன். முதல் கதை காவல்துறையையும் அதன் செயல்பாடுகளையும் பற்றியது. பெண் ஒருத்தி காவல் துறை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்கிறாள். இந்தக் கதை எழுதிய கால கட்டம் பெண்கள் காவல் துறையில் அதிகம் பங்கெடுக்காத காலம் என நினைக்கிறேன். எண்பதுகளின் ஆரம்பமோ! இருக்கலாம். அந்தக் காவல் நிலையத்தின் கமிஷனரில் இருந்து உதவிக்கமிஷனர் வரை அந்தப் பெண்ணின் மேல் ஆசை கொள்கின்றனர். அந்தப் பெண்ணுக்கோக் காவல் துறையில் சாதிக்க எண்ணம்.  வேலையில் சேர்ந்த அன்றே விபத்து/அதில் இறந்தவரின் உடல், மார்ச்சுவரி, தற்கொலை செய்து கொண்டவரைப் பார்க்க அழைத்துச் செல்லுதல் என அந்தப் பெண்ணுக்கு அடுத்தடுத்துப் பார்த்துத் திகைக்க நேரிடுகிறது. இதற்கு நடுவே இரண்டு அதிகாரிகளும் மாற்றி, மாற்றி அந்தப் பெண்ணைத் தன் வசப்படுத்த முயலும் முயற்சிகள்.

இவற்றிலிருந்து அந்தப் பெண் எப்படி மீண்டாள் என்பதே கதை என்றாலும் அதற்காக அவள் எடுத்துக் கொண்ட விஷயம் கொஞ்சம் ஆபத்தானது. அவள் வேலையே போய்விடும் அபாயம் கொண்டது. இதற்கு நடுவில் சிவப்பு விளக்குப் பகுதியில் ஒரு பெண்ணைப் பார்த்துப் பரிதாபம் கொண்டு அவளை மாற்றவும் முற்படுகிறாள். முடியவில்லை. ஆனால் அதனால் அந்தப் பெண் காவல் துறை அதிகாரிக்குக் கெட்ட பெயர் தான் மிச்சம். மேல் மட்டத்தில் இருந்து அவளைப் பணி இடை நீக்கம் செய்யச் சொல்லி உத்தரவு வர, தன் மேலதிகாரியின் குடும்ப விஷயத்தைப் பார்த்து விட்டு அதைச் சரி செய்ய அந்தப் பெண் அதிகாரி மேற்கொண்ட முயற்சிகளால் கடைசியில் அவளாகவே வேலையை விட்டு ராஜினாமா செய்யும்படி நேருகிறது. இடைப்பட்ட பக்கங்களில் நடந்தவைகளை நேரில் படிக்கையில் விறுவிறுப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணாக இருந்தால் அவள் காவல் துறையில் நீடித்து நிற்க முடியாது என்னும்படியான ஓர் எண்ணத்தை சுஜாதா இதில் ஏற்படுத்தி இருக்காரோ? ஆகவே அந்தப் பெண் தானாகவே ராஜினாமா செய்யும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தி சுஜாதா எழுதி இருக்கும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு வேளை இது அவருடைய ஆணாதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறதோ என்றும் தோன்றியது. 

இன்னொரு கதையான பிவிஆரின் "அதிர்ஷ்ட தேவதை"யில் ரங்கன் என்னும் ஓர் அப்பாவிக்கு ரமணி என்னும் ஓர் வாலிபன் தற்செயலாக அறிமுகம் ஆகிப் பின்னர் உள்ளார்ந்த நட்புப் பாராட்டும்படி ஆகிறது. இந்த ரங்கனுக்கு எல்லாமே ரமணி தான். ரமணி சொல்படி தான் அவன் எல்லாமும் கேட்பான். அப்படிப்பட்ட ரங்கன் ரமணி பேச்சைக் கேட்காமல் செய்து கொண்ட கல்யாணமும், ரங்கனின் ஆசையால் அவன் அடுத்தடுத்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவுக்குப் பணமும் வந்து சேரக் கடைசியில் ரமணியின் குடும்பமும்/தாத்தாவும், ரமணி மணந்து கொள்ளக் காத்திருக்கும் பெண்ணுமாகச் சேர்ந்து ரங்கனின் வாழ்க்கையைச் செப்பனிடுகிறார்கள். ஆனாலும் துரதிர்ஷ்டம் பிடித்த ரங்கனுக்கு நுரையீரல் வலுவிழந்து போக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல நேரிடுகிறது.  பணம் இல்லாதபோதெல்லாம் நன்றாக இருந்த ரங்கன் லட்சாதிபதி ஆனதும் அடிக்கடி மருத்துவமனை வாசம். பணத்தை அவனால் அனுபவிக்க முடியவில்லை.

இதற்கு நடுவில் ரமணியின் குடும்பச் சூழ்நிலை/அவன் தாத்தாவின் பாசம்/ரமணியின் நேர்மை/ அவன் காதல்/கடைசியில் வெகு காலத்துக்கும் பின்னர் நடந்த திருமணம்/ ரமணிக்கு ரங்கனின் திருமணப்பரிசு என்றெல்லாம் விவரித்து நேர்மைக்குக்கிடைத்த பலனாக ரமணியின் வாழ்க்கையை ஓர் உதாரணமாகக் காட்டி இருக்கார் பிவிஆர் அவர்கள். கதை முழுவதும் அநேகமாக உரையாடல்களிலேயே போனாலும் ஆங்காங்கே விவரணைகளும் வருகின்றன. சுவாரசியமாக இருந்தது கடைசி வரைக்கும். ரங்கனின் முடிவு வெகு விரைவில் ஏற்பட்டு விடும் என்பதில் ரமணிக்கு மட்டுமா வருத்தம்? நமக்கும் ஏற்படுகிறது. இரண்டு புத்தகங்களும் இணையம் வழி படித்ததால் எங்கே கிடைக்கும்/எப்போ எழுதினது/என்ன விலை என்பதெல்லாம் தெரியாது.

எங்கள் ப்ளாகில் பானுமதி சுஜாதாவின் ரிசப்ஷன் கதையின் முடிவு பற்றிக் கேட்டிருந்த கேள்விக்கு ஓரளவு சரியான பதிலைக் கொடுத்ததால் எனக்கு சுஜாதாவின் புத்தகம் ஒன்றைப் பரிசாகக் கொடுக்கப் போவதாகச் சொல்லி இருந்தார். நானும் ஏதோ விளையாட்டு என்று சும்மா இருந்துவிட்டேன். பின்னர் வாட்சப்பில் செய்தி கொடுத்துத் தொலைபேசியில் அழைத்துப் பேசி என் விலாசத்தை வாங்கிக் கொண்டு புத்தகத்தை அனுப்பி வைத்திருக்கிறார். நேற்று வந்து சேர்ந்தது.  சுஜாதாவின் "ப்ரியா" புத்தகம். குமுதத்தில் தொடராக வந்தப்போப் படிச்சிருக்கேன். அதை நம்ம ரங்க்ஸும் நினைவு கூர்ந்தார். பின்னர் திரைப்படமாக வந்தப்போவும் தொலைக்காட்சி தயவில் பார்த்தோம். படம் படு சொதப்பல். ஶ்ரீதேவியையும் ரஜினியையும் போட்டும் சோபிக்கவில்லை. இந்தப் புத்தகத்தை இன்னமும் மீள் வாசிப்புக்கு உட்படுத்தவில்லை. இனிமேல் தான் ஆரம்பிக்கணும். சில மாதங்களாகக் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்காமல் இணைய வழியே படித்து வந்தேன். இனி இந்தப் புத்தகத்தில் ஆரம்பிக்கணும். 

அநேகமாய்த் தலைப்பு சரியில்லைனு ஶ்ரீராம் சொல்லுவாரோ? அவரைக் கேட்டுத் தலைப்புப் போடலாம்னா இது நான் நேரடியாக எழுதிக் கொண்டு இருக்கேனே! இந்தத் தலைப்பே இருக்கட்டும் விடுங்க ஶ்ரீராம்!

30 comments:

  1. பரிசு பெற்றது மகிழ்ச்சி. நம்ம ரஞ்சனி நாராயணன் மேடத்தையும் எனக்கு, கன்னடம் எழுதப் படிக்க புத்தகம் தரச் சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே! உங்களோட படிக்கும் ஆர்வம் என்னை வியக்க வைக்கிறது. ஒரு காலத்தில் நானும் இப்படித்தான் தேடித்தேடிப் படித்துக் கொண்டிருந்தேன். 92 ஆம் ஆண்டிற்குப் பின்னர் எல்லாமும் கனவாகி விட்டது.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உங்களது புத்தக விமர்சனங்கள் அந்தப் புத்தகங்களை படிக்கத் தூண்டுகிறது ப்ரியா திரைப்படம் பார்த்துள்ளேன். ஆனாலும் முழுக் கதையும் தெளிவாக நினைவிலில்லை. உங்களுக்கு சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களிடமிருந்து வந்த சிறப்பு பரிசுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். கருத்தில் சொன்ன மாதிரியே அனுப்பி வைத்த பானுமதி சகோதரிக்கும் வாழ்த்துகள். நன்றிகள்.

    தலைப்பு நன்றாக பொருத்தமாகத்தான் இருக்கிறது என உங்களைப் போல நானும் நினைக்கிறேன். எனினும் சகோதரர் ஸ்ரீராம் என்ன தலைப்பு சொல்கிறார் எனவும் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா! ஶ்ரீராம் இப்போக் கல்யாணங்களில் மும்முரம் போல. தலைப்பைப் பத்தி ஒண்ணும் சொல்லவே இல்லை.:) இதற்கு முன்னால் ஜிஎம்பி சார் அவர் எழுதிய ஒரு கதையை கிட்டத்தட்ட அவரின் முடிவோடு ஒத்துப் போறாப்போல் எழுதினதுக்கு அவரே வரைந்த தஞ்சாவூர் ஓவியக் கிருஷ்ணன் படமும் ஒரு புத்தகமும் அனுப்பி இருந்தார். எங்கள் ப்ளாக் நடத்திய சில போட்டிகளிலும் கலந்து கொண்டு புத்தகங்கள்/பணம் எனப் பரிசு கிடைத்துள்ளது. போன வருஷம் சஹானா இணைய இதழ் மூலம் நடத்திய தீபாவளிப் பண்டிகைக்கான பக்ஷண வகைகளில் என்னோட வரகுத் தேன்குழல்/ முறுக்கு முதல் இடம் பெற்றது. அதுக்கு ஒரு புடைவை பரிசாகக் கிடைச்சிருக்கு. இன்னுமும் கட்டிக்கலை! :)))) அதே சஹானாவில் அதிகம் எழுதிய நபர் என்பதற்காகவும் ஓர் பரிசு கொடுத்தார்கள். ராதாகிருஷ்ணரின் அலங்காரமான வடிவம். கொலுவிலோ அல்லது வீட்டில் அலங்காரப் பொருளாகவோ வைக்கலாம்.ஹிஹிஹி, சுய தம்பட்டம் ஜாஸ்தியா இருக்கோ? திடீர்னு நாம நம்மளைப் பத்தி ஒண்ணுமே எழுதறதில்லையேனு தோணித்து. அதான் சொல்லிட்டேன். :)))))

      Delete
  3. சுவாரஸ்யமான பதிவு. இதை சனிக்கிழமை' நான் படிச்ச கதை'க்கு அனுப்பி இருக்கக் கூடாதோ என்று கேட்க விருப்பம். ஆனால் நீங்கள் சொல்லலாம், நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு போட்டிருக்கேன், அதையும் அங்க அனுப்பச் சொன்னா எப்படின்னு!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம். தினம் தினம் இன்னிக்குப் பதிவு போடணும்/இன்னிக்குப் பதிவு போடணும்னு நினைச்சுப்பேன். ஆனால் என்னவோ மனசே பதியறதில்லை. கொஞ்ச நாட்களாகவே இப்படி இருக்கு. பல விஷயங்கள் எழுதாமல் கிடக்கின்றன. ஆரம்பித்தவற்றையாவது முடிக்கலாம்னா உட்கார்ந்து எழுதும்படியான மன நிலை அமையவில்லை. :( நீங்கள் கேட்டிருக்கும் சனிக்கிழமை "நான் படிச்ச கதை" க்கு வேறே ஏதேனும் அனுப்ப முடியுமானு பார்க்கிறேன். ஆனால் உடனே இல்லை. :)

      Delete
    2. முன்னெல்லாம் நான் தினம் ஒரு பதிவு/சில சமயங்களில் 2 கூடப்போடுவேன். நண்பர்களெல்லாம் அப்போது இடைவெளி விடச் சொல்லுவாங்க. படிச்சுக் கருத்துச் சொல்ல நேரம் கொடுக்கணும் என்பார்கள். என்றாலும் நான் என்னமோ எழுதுவேன். இப்போதெல்லாம் எழுதணும்னு நினைச்சால் கூட உட்கார்ந்து எழுத மனம் வருவதில்லை. நீங்க, வெங்கட் இருவரும் தினம் ஒரு பதிவு போட்டுடறீங்க. அதை நினைச்சு இப்போ ஆச்சரியப் பட்டுக் கொண்டு இருக்கேன்.

      Delete
  4. கமிஷனருக்கு கடிதம் படித்திருக்கிறேன்.  பி வி ஆர் கதை படித்ததில்லை.  சம்பிரதாயமான உணர்ச்சிபூர்வமான உறவுக்கதை ஒன்று, திடும் முடிவுகளுடன் சுஜாதா கதை ஒன்று, இரண்டும் வெவ்வேறு மூலை!

    ReplyDelete
    Replies
    1. நான் இரண்டுமே படிச்சதில்லை. இப்போத் தான் முதல் முதலாகப் படிச்சேன். கமிஷனருக்குக் கடிதம் முடிவைப் படிச்சதும் ஆத்திரம் ஆத்திரமா வந்தது. ஒரு பெண் என்பதால் அவளைக் காவல்துறையில் வேலை செய்யக் கூடாது என்பது போல் நடந்து கொண்டு அவளாகவே ராஜினாமா கொடுக்கும்படி செய்து விட்டார்களே கதாபாத்திரங்கள்! படைச்சவரைச்சொல்வதா? இம்மாதிரியான ஆண்கள் எப்போதும் இருப்பதைச் சொல்வதா? :( சுத்தப் பேத்தல் என்று தோன்றியது படிச்சு முடிச்சதும்.

      Delete
  5. தலைப்பு...  நீங்கள் சொன்னபிறகுதான் யோசிக்கத்தோணுது..  நான் எழுதி இருந்தால் என்ன வைத்திருப்பேன்?  முதலில் இரண்டையும் சேர்த்து ஓர் பதிவாக எழுதி இருக்க மாட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. தனித்தனியாத் தான் எழுதறதா இருந்தேன் ஶ்ரீராம். ஆனால் ஜாஸ்தி வளவளனு போயிடுமோனு நினைச்சுத் தான் இப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்.

      Delete
  6. ப்ரியா படம் நன்றாய் ஓடியது.  சுஜாதா ரசிகர்களுக்கு பிடித்தால் என்ன, பிடிக்கா விட்டால் என்ன, இளையராஜா பாடல்கள், ரஜினி ஸ்டைல், சிங்கப்பூர் காட்சிகள், இளமையான ஸ்ரீதேவி..  கதையைப் படித்திருந்த நாங்கள் ஏமாந்து போனோம்!  அது போலதான் அனிதா இளம் மனைவி கதையான இது எப்படி இருக்குவும்.  கணேஷாக ஜெய்யையோ ரஜினியையோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா படம் ஓடினது பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் அவரோட "கொலையுதிர் காலம்" தூர்தர்ஷன் மெட்ரோவில் தொடராக வந்தது. கொஞ்சம் பரவாயில்லை ரகம். கணேஷாக நடிச்சவர் பெயர் நினைவில் இல்லை. வசந்தாக நடிச்சவர் விஜய் ஆதித்யா! முன்னெல்லாம் இவர் இல்லாத தொலைக்காட்சித் தொடரே இருக்காது. இப்போ அவரே இருக்காரா என்னனு தெரியலை. ப்ரியா புத்தகத்தை மறுபடியும் படிக்கப் போறேன். முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே! படிச்சது தானே! நினைவு படுத்திக்கலாம்.

      Delete
  7. அன்பின் கீதாமா,

    நானும் இப்பொழுதுதான் படித்ததை எழுத வந்து எதையோ பதிவு செய்தேன்.
    நீங்களும் எழுதி இருக்கிறீர்கள்.

    சுஜாதா இது போலயும் எழுதி இருக்கிறாரா!!
    அவர் பெண்களைப் பற்றி அவ்வளவு உயர்வாகப் பேசி எனக்கு நினைவில்லை.

    இந்தக் கதையும் அது போலத்தான் இருக்கிறது.
    திலகவதி ஐபிஎஸ் நல்ல பெயர் தான் எடுத்தார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, எனக்கும் ஆச்சரியம் தான். சுஜாதாவைப் பொறுத்தவரை பெண்கள் என்றால் போகப் பொருளாகத் தான் காட்டுவார். இந்தக்கதை ஆரம்பத்தில் கடைசியில் அந்தப்பெண் அதிகாரி ஜெயிப்பார் என நினைச்சேன். வேலையையே விட்டுட்டுப் போகச் சொல்லிட்டார்! :(

      Delete
  8. பானுமதி பரிசு கொடுத்தாரா. அட!!
    முன்பே உங்களுக்குப் புடவை
    சஹானா இதழ் வழியாக வந்தது இல்லையா.
    சக்கப் போடு போடு ராஜா:)))

    அன்பு வாழ்த்துகள் மா.
    ப்ரியா கதை வந்ததும் படித்ததற்கும், சினிமாவுக்கும்
    தொடர்பே இல்லாத மாதிரி இருந்தது.

    சோபிக்கத்தான் இல்லை.உயிரில்லாமல்
    ஒரு படம்.
    பாடல்கள் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதா கதை ஒன்றின் முடிவையும் அது வெளிவந்த காலத்தையும் கேட்டிருந்தார் பானுமதி. நீங்களும் பதில் சொல்லி இருந்தீர்கள். முடிவு இப்படி இருக்கலாம் என்பதை நான் அனுமானித்துப் பெண்ணின் பெயர் "அருணா"சலம் அல்லது "அருண்"குமாராக இருக்கலாம்னு எழுதி இருந்தேன். :) குருட்டாம்போக்கில் எழுதினது! உண்மையாக இருந்திருக்கு! ஆகவே பரிசு!

      Delete
  9. பரிசு - வாழ்த்துகள்.

    நீங்கள் படித்த கதைகளின் கதை சொன்ன விதம் சிறப்பு. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! பாராட்டுக்கும் ரசனைக்கும் நன்றி.

      Delete
  10. Seeing you after a long time Geethamma! take care of your health. waiting to read your regular posts.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி! நடுவில் நவராத்திரிக்கான பதிவுகள் முன்னர் எழுதினதை மீள் பதிவாகப்போட்டிருந்தேனே பார்க்கலையா? அது நிறைய எழுதி இருந்தாலும் இந்த வருஷம் நவராத்திரி எட்டு நாளுக்கான பதிவுகளை மட்டுமே எடுத்து மீள் பதிவாகப் போட்டிருக்கேன்.

      Delete
  11. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

    கதை விமர்சனம் நன்றாக இருக்கிறது.
    பழைய உற்சாகம் திரும்பி வரட்டும். நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு முன்பு மாதிரி பரிசுகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் கிடைக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. பாராட்டுகளுக்கு நன்றி. மனச்சோர்வே காரணம். நானும் அதிலிருந்து மீண்டு என்னையே உற்சாகப்படுத்திக் கொண்டு இருக்கேன். சில சமயம் கண்டனங்களும் செய்துக்கறேன். மறுபடி ஏதேனும் எழுத ஆரம்பிக்கணும். :(

      Delete
  12. பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. பாராட்டுகள், வாழ்த்துகள் கீதாக்கா ஆமாம் அன்றெ சொல்லிருந்தாங்களே பானுக்கா உங்களுக்குப் பரிசு புத்தகம் அனுப்புகிறேன் என்று. சூப்பர்!

    சுஜாதாவின் கதை கமிஷனருக்குக் கடிதம் எந்த ஆண்டு எழுதப்பட்டதோ. ஒரு வேளை அந்தக் காலகட்டத்தில் பெண்கள் அத்தனை அதிகம் போலீஸ் துறையில் நுழையாத பீரியடாக இருந்திருக்குமோ? பொதுவாகப் பெண்கள் போலீஸ் துறையில் நுழைவது என்பது சமூகத்திலும் கூட அத்தனை சப்போர்ட் இல்லையே. சமீபத்தில் தானே பலரையும் பார்க்க முடிகிறது.

    பெரும்பாலான படங்களில் கூட பெண் போலீஸ் அதிகாரியைச் சிறப்பாகக் காட்டியது இல்லை என்றே தோன்றுகிறது.

    பிவி ஆரின் கதையும் நெட்டில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. இப்போ "ப்ரியா" தான் மறுபடி படிக்க ஆரம்பிச்சிருக்கேன். எழுதணும்னு மனசு சொன்னாலும் இன்னொரு மனசு சொன்னதைக் கேட்பதில்லை. இப்போ என்ன எழுதப் போறே? என்று அதட்டுகிறது. அதன் ஆதிக்கம் மறையணும்.

      ஆமாம், பெண் போலீஸ் அதிகம் வராத காலத்தில் எழுதப்பட்டிருக்கணும் "கமிஷனருக்குக் கடிதம்" நாவல். எனக்குப் பிடிக்கலை. திரைப்படங்களில் தான் கேவலமாக் காட்டுவாங்களே! :(

      Delete
  14. நேற்று வந்து இந்தக் கருத்து போட்டுப் பார்த்து எரர் எரர் என்றுகருத்து போகவே இல்லை அதான் இப்போது மீண்டும் முயற்சி செய்தேன் வந்ததா என்று தெரியலை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இது ஒண்ணு தான் வந்திருக்கு. ஸ்பாமில் போய்ப் பார்க்கிறேன்.

      Delete
  15. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete