அது வரை பெய்த மழையால் ஓரளவுக்குத் தண்ணீர் தேங்கி இருந்தாலும் வண்டிகள் வரவோ/போகவோஎந்தவிதமான பிரச்னையும் இல்லை. அதோடு விட்டு விட்டுத்தான் பெய்து கொண்டிருந்தது. தம்பி வீட்டில் நாங்கள் நுழைந்தபோது வைதிகர்கள் அப்போது தான் சமாராதனை வழிபாடுகளை முடித்துவிட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இது 2015 ஆம் ஆண்டில் எங்க வீட்டில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்ற சமாராதனைப் படம்.
ஆகவே நாங்கள் சாப்பிட இன்னும் நேரம் எடுக்கும். அங்கேயே இருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம். ஶ்ரீராமுக்குத் தொலைபேசலாமா என நினைத்து ரங்க்ஸைக் கேட்டப்போ "யோசிச்சுக்கோ!" என்றார். ஏனெனில் ஶ்ரீராம் அதற்கு முதல் வாரம் தான் 2,3 நாட்கள் காய்ச்சலில் படுத்துவிட்டு எழுந்திருந்திருக்கிறார். அவரை இந்த மழையில் அலைக்கழிக்கலாமா என்பது ஒரு யோசனை. அதோடு அவர் இருக்கும் இடமும் மாம்பலத்தில் இருந்து தூரமாகவே இருக்கிறது. என்னதான் ஆட்டோவில் வந்தாலும் இந்த மழைக்காலத்தில் வருவதற்கும் போவதற்குமே இரண்டு மணி நேரம் எடுத்து விடும். அதோடு மழை பிடித்துக் கொண்டால் மீண்டும் அவருக்கு உடம்பு வந்துட்டால் என்ன செய்வது? ஆகவே பார்த்துக்கலாம் நாளைக்கு என முடிவெடுத்துக் கூப்பிடவே இல்லை.
அந்தக் காலத்து வெங்கடாசலபதி இப்படித் தான் இருப்பார். நாமம் நெற்றியை முழுக்க மறைக்க ஆரம்பித்தது பின்னாட்களில் தான். அப்பா வீட்டிலும் இதே போன்ற வெங்கடாசலபதி படம் தான் சமாராதனைகளுக்கு.
பிறகு அங்கே சாப்பிடும்போதே தி.நகரில் நாங்கள் சந்திக்க இருந்தவர்கள் வாட்சப் மூலம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே சாப்பிட்டு முடித்த உடனே சுமார் மூன்று மணி அளவில் தி.நகர் கிளம்பினோம். என் அண்ணா பையரும் தம்பியின் மூத்த பையரும் வங்கிக்கு வேலையாகச் சென்றிருந்தார்கள். வெகு நேரம் ஆகியும் அவர்கள் வரவில்லையே என வீட்டில் அனைவரும் கவலைப்படுகையில் நாங்கள் கிளம்பி வாசலுக்கு வரவும், அவங்க கார் வரவும் சரியாக இருந்தது. ஆட்டோ பிடித்துக் கொடுக்க வந்த அண்ணாவின் மருமகள் அத்தை,அத்திம்பேரைத் தி/நகரில் விட்டுவிட்டு வரும்படி தன் கணவனுக்கு உத்தரவு போட அவரும் அதை உடனடியாக மறுப்பே சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். வழிகாட்டியாகத் தம்பியின் மூத்த பிள்ளையும் ஏறிக்கொள்ளச் சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சுற்றித் தி.நகருக்கு நாங்கள் போக வேண்டிய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதெல்லாம் துரைசாமி சுரங்கப்பாதை வழியாகவே சென்றோம். மாட்லி சாலை வழியாகச் சென்றால் கிட்டக்க என்றாலும் அங்கே பாலங்கள் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்ததால் அந்த வழியை ஏற்கெனவே அடைத்து வைத்திருந்தார்கள்.
தி.நகரில் நாங்கள் சென்ற வேலை முடிய ஆறரை மணிக்கு மேல் ஆகி விட்டது. அங்கே எங்களைச் சந்திக்க வந்திருந்த என் நாத்தனார் பெண் ஶ்ரீவித்யா வீரராகவன் (பிரதமரால் பாராட்டுப் பெற்றவர்) மற்றும் அவள் கணவர் இருவரும் அவர்கள் காரில் எங்களைத் தங்குமிடத்தில் கொண்டு போய் விட்டார்கள். சரிதான் இன்று நல்ல வாகன யோகம் என்றே பேசிக் கொண்டோம். இரவு உணவுக்காக தோசைகளை வார்த்துச் சட்னி/சாம்பாருடன் அனுப்புவதாகத் தம்பி மனைவி சொல்லி இருந்தார். கொஞ்சம் யோசிச்சாலும் காலை நான்கு மணிக்கு முன்னால் எழுந்திருந்து சென்னை வரை செய்த கார்ப்பயணம் அதன் பிறகு ஓய்வே இல்லாமல் அலைந்தது எல்லாம் சேர்ந்து எங்களுக்குச் சிரமம் ஜாஸ்தியாக இருந்ததால் வெளியே சாப்பிட ஓட்டலைத் தேடிச் செல்ல வேண்டாம், நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று தம்பி மனைவி சொன்னதுக்கு ஒத்துக்கொண்டோம். சுமார் ஏழரை மணி அளவில் இரவு உணவை எடுத்துக் கொண்டு தம்பியின் பெரிய பிள்ளை வந்தார். அவரிடம் சாப்பிட்டுவிட்டுப் பாத்திரங்களைக் கொடுத்துவிடுவதாகவும் சற்றுக் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டுச் சாப்பிட்டோம். அவர் காலை உணவுக்கு என்ன வேண்டும் என்று கேட்க நாளைக்குச் சாப்பாடெல்லாம் கொண்டு வர வேண்டாம். இங்கேயே பார்த்துக்கறோம். காமேஸ்வரி மெஸ், ஸ்டேஷன் ரோடில் ஒரு மாமி கொடுக்கும் மதிய உணவை வாங்கிக்கறோம். அதுக்காகக் காரியர் எல்லாம் கொண்டு வந்திருக்கோம் என்று சொல்லிவிட்டோம். ஆனால் நாளை நடக்கப் போவது என்னனு அந்த ஈசனுக்குத் தானே தெரியும்.
விடுதியில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்தாலும் அதை ரீ சார்ஜ் செய்யவில்லை. சில ஓட்டல்களில் கூட இம்மாதிரி வைப்பார்கள். நாமே பணம் கட்டி ரீ சார்ஜ் செய்துக்கணும். அது போல இங்கேயும் வைச்சிருப்பாங்க போல. அநாவசியமாக இரண்டு நாட்களுக்காக எதுக்கு ரீ சார்ஜ் செய்துக்கணும்னு விட்டுட்டோம். தம்பி பையரும் தொலைக்காட்சிப் பெட்டியை ஆராய்ந்து விட்டு நாம் தான் ரீ சார்ஜ் செய்துக்கணும் போல என்றார். ஆகவே எட்டு/எட்டரைக்கெல்லாம் போய்ப் படுத்துட்டோம். அசதியில் இருவருமே நன்றாய்த் தூங்கி விட்டோம். சுமார் பதினோரு /பனிரண்டு மணி அளவில் பெரிய சப்தம். கடமுடா/கடமுடானு எல்லாம் இல்லை. அண்டமே விழுந்து விட்டது போல் தோன்றியது.
சஸ்பென்ஸ் வைத்து நன்றாகவே எழுதியிருக்கீங்க.
ReplyDeleteகல்யாணத்துக்குப் போயிட்டு வெளில சாப்பாடா?
கல்யாணச் சாப்பாடு செவ்வாயன்று தானே ஆரம்பம் நெல்லை! அது வரை வெளியிலோ தம்பி வீட்டிலோ தானே சாப்பிட்டாகணும். திங்களன்று சுமங்கலிப் பிரார்த்தனை வைத்திருந்தார்கள்.
Deleteமாமா நல்ல ஆலோசனையை உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteஆண்களின் நுண்ணறிவு ரொம்ப ஒசத்தி, பெண்களைவிட என நான் சொல்லியா உங்களுக்குத் தெரிய வேண்டும்? ஹா ஹா ஹா
ஆஹா! ரொம்பத் தான் நல்ல யோசனை போங்க!
Deleteஅதானே பார்த்தேன்..ஆயிரம் யோசனைகள் சொல்லியிருப்பார். அவை ரொம்பவே சரியாக இருந்திருக்கும். அவை எவற்றையும் எழுதாமல், ஒன்றே ஒன்று சொதப்பினதை இங்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோலத் தோணுதே
Deleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteதொலைக்காட்சிப் பெட்டி, ரீசார்ஜ். - இது பற்றி பொதுவெளியில் எழுத முடியாத அனுபவம். 2002ல் எனக்கு லண்டனில் ஏற்பட்டது
ReplyDeleteஇரண்டு மூன்று நாட்களுக்கு மட்டும் ரீசார்ஜ் என்றால் செய்யலாம்! அதற்கு சாத்தியமில்லையே!
Deleteஆமாம், நெல்லை எங்க உறவுப் பெண்ணிற்கும் ஜார்ஜியாவில் ரிச்மான்ட் போனப்போக் குழந்தை கேட்டதால் விஷயம் தெரியாமல் ரீ சார்ஜ் செய்து போட்டுவிடத் திண்டாடிப் போனாள் பணம் கட்ட!
Delete2002ல் ஆபீஸ் வேலையாக கம்பெனியின் டாப் 4 பேருடன் சென்றிருந்தபோது, தங்கியிருந்த என் அறையில் ரிமோட்டை வைத்து ஏதோ ஒரு சேனலை அழுத்தில், கசமுசா சேனல், அது பெய்டு சேனல் என்று தெரியாமல், பில்லில் 12 பவுண்ட் அதிகம் வந்தது. அதை யாரும் பொருட்படுத்தாமல் பணத்தை pay பண்ணிட்டாங்க.
Deleteகம்பெனி பொறுப்பேற்றுக் கொண்டிருந்திருக்கும். ஆகவே உங்களுக்குப் பிரச்னை இல்லை.
Deleteஆஹா என்ன சத்தம் அந்த நேரம் ?
ReplyDeleteதொடர்ந்து வருகிறேன்...
என்ன சத்தமா? மின்னல் மழை மோகினிதான்!
Deleteகில்லர்ஜி, ஶ்ரீராம் போட்டு உடைக்கிறார்.
Deleteஶ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteநீங்க சென்று வந்த துரைசாமி பாலமும் மேட்லி பாலமும் மறுநாள் எப்படி இருந்தன என்றும் பார்த்திருப்பீர்கள்! ஆனால் டிவி தான் இல்லையே... கேள்விப்பட்டிருப்பீர்கள்!
ReplyDeleteமறுநாள் பார்க்கச் சந்தர்ப்பமே வாய்க்கவில்லை ஶ்ரீராம். :)
Deleteஎப்படியோ தி நகர் சென்று சந்திக்க வேண்டியவர்களை சந்தித்து வந்தது நல்ல விஷயம். எனக்கு இருந்த மழை, ஆபீஸ் பரபரப்பில், டென்ஷனில் நீங்கள் சென்னை வருவதையே மறந்து போயிருந்தேன்!
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பார்த்தீங்களா! நான் தான் தினம் தினம் நினைச்சுக்கறேன் போல! :( போகட்டும் விடுங்க. தி.நகர் சந்திப்பு ரொம்ப முக்கியமானது என்பதால் அன்று நல்லபடி சந்திக்க முடிந்தது குறித்து சந்தோஷமே!
Deleteபயண அனுபவங்கள்! அதுவும் மழை காலத்தில் என்றால் நிறைய இருக்கும்
ReplyDeleteதொடர்கிறேன்.
இத்தனைக்கும் நடுவில்பார்க்க நினைத்த்வர்களை பார்த்தது சாதனைதான்.
வாங்க கோமதி. ஆமாம்.ஆனால் ஏற்கெனவே இந்த மழைக்காலங்களால் பயணாங்களில் பல்வேறுவிதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று.
Deleteஎல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்.. காய்ச்சலால் உடம்பு மிகவும் அயர்ச்சியாக இருக்கின்றது...
ReplyDeleteபிறகு வருகின்றேன் அக்கா..
எனது தளத்தில் சமீபத்திய பதிவுகளுக்கு கருத்துரை பதிவு செய்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி..
வாங்க துரை. மெதுவாய் வாங்க. ஒண்ணும் அவசரமே இல்லை. உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளவும்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteமிகவும் சுவாரஸ்யமாக நிறுத்தி நிதானித்து பயண அனுபவத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். கூடவே உங்களுடன் பயணிக்கும் உணர்வை தருகிறது.
முன்பு இந்த மாதிரி வெங்கடாஜலபதி படம் எங்கள் அம்மா வீட்டிலும் பார்த்துள்ளேன். சமாராதனை பிரசாதங்களுடன் உங்கள் வீட்டு அழகான படத்தையும் பகிர்ந்து விட்டீர்கள். இறைவனை மனமாற தரிசித்து கொண்டேன். நாங்கள் சுமங்கலி பிராத்தனை செய்த மறுநாள் சமாராதனை செய்வோம்.
தி. நகரில் பார்க்க நினைத்தவர்களை இந்த மழையில் சென்று பார்த்தமைக்கு மகிழ்ச்சி அதற்கு உதவிய உங்கள் உறவுகளின் செய்கைகளுக்கு இறைவனுக்கு நன்றி கூற வேண்டும்.
மழை வலுத்த சத்தம் கேட்டதும் அதுவும் இரவு நேரத்தில் சற்று பயமாகத்தான் இருந்திருக்கும். இத்தனை மழை வெள்ளத்தில் திருமணத்திற்கு சென்று நலமாக நீங்கள் ஊர் திரும்பியதற்கும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். மேலும் உங்கள் அனுபவ பயணத்தில் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, சுமங்கலிப் பிரார்த்தனையை முதலில் வெள்ளியன்று தான் வைத்திருந்தது. அதனால் தான் தீபாவளி முடிந்ததுமே கிளம்ப இருந்தோம். ஆனால் அன்று சுக்ல பக்ஷப் பிரதமை என்பதால் குடும்பப் புரோகிதர் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால் திங்களன்று மாற்ற நேர்ந்தது. ஆமாம், பலரும் மனமாற உதவி செய்கின்றனர். அந்த விஷயத்தில் மக்கள் மனதில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதும் தெரிய வந்தது.
Deleteபயணம் நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி இருப்பீர்கள். மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Delete