எனக்கு முடியாமல் இருந்தப்போ எங்க வீட்டில் வீட்டு வேலைகளுக்கு உதவும் பெண் எனக்காக சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவர் அடிக்கடி சமயபுரம் போவார். போயிட்டு வந்து எனக்குப் பிரசாதம் கொடுப்பார். வாங்கிப்பேன். ஆனால் அவர் பிரார்த்தனை பற்றி என்னிடம் இப்போத்தான் சில நாட்கள் முன்னர் சொன்னார். அதுவும் நான் வெளியூர் போகும் அளவுக்குக் கிளம்புவது தெரிந்ததும் தான் சொன்னார். ஊருக்குப் போவதற்குச் சில நாட்கள் முன்னால் தான் சொன்னதால் ஊரில் இருந்து வந்ததும் போகலாம்னு நம்மவர் சொல்லிட்டார். இங்கே வந்ததில் இருந்து காலை வேளையில் சிறு தூற்றல், பெருந்தூற்றல், பெரிய மழைனு இருந்து கொண்டே இருந்தது. இப்போத் தான் திங்களில் இருந்து எதுவும் இல்லை. அதுவும் அவருக்கு சொப்பனத்தில் அம்பிகை வந்தாப்போல் கண்டதும் உடனே போயிட்டு வரணும்னு முடிவெடுத்தாச்சு. அதோடு இல்லாமல் ஒரு இரண்டு நாட்கள் கழிச்சுக்கிளம்பினாலும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் தாளாது. ஏற்கெனவே இன்னிக்குக் கார்த்திகை ஒண்ணு. மாலை போட்டுக்கும் நாள். அந்தக் கூட்டம் இருந்தாலே கொஞ்சம் சிரமம் தான். என்றாலும் போயிடலாம்னு முடிவு பண்ணி இன்னிக்குக் காலையில் ஐந்தரைக்குக்கிளம்பணும்னு எங்களுக்குத் தெரிந்த ஆட்டோக்காரரிடம் சொல்லி வைத்தோம். அவரும் வரேன்னு சொல்லிட்டார்.
ஆனால் பணம் அதிகம் கேட்டார். என்ன செய்ய முடியும்! பேரம் பேசவில்லை. இன்னொரு ஆட்டோக்காரர் இருக்கார் என்றாலும் அவரோடது இப்போ வர டிவிஎஸ் ஆட்டோ. அதில் என்னால் ஏறவே முடியாது. இது பழைய ஆட்டோ. ஏறுவது கொஞ்சம் சிரமம் என்றாலும் ஏறிடுவேன். காலையில் ஐந்தரைக்குக் கிளம்பி சமயபுரம் போய்ச் சேர்ந்தோம்.என்னதான் சாலைகள் விரிவாக்கத்தில் சாலைகளெல்லாம் நன்றாக இருந்தாலும் இதில் தூரம்கொஞ்சம் அதிகம் தான் தெரிந்தது. உள்ளே போவதற்கு நூறு ரூபாய்ச் சீட்டுக்குப் போனால் எங்களுக்குச் சீட்டுக் கிடையாதுனு உள்ளே விட்டுட்டாங்க. அந்த வரிசையில் யாருமே இல்லை/ இலவச தரிசனம்/20 ரூபாய் தரிசனத்தில் தான் அதிகக் கூட்டம் அந்தக் காலை வேளையிலேயே இருந்தது. கொஞ்சம் சுற்றிச் சுற்றிப் போக நேர்ந்தாலும் உள்ளே போய் அம்மனுக்கு மிக அருகே நின்று கொண்டு திவ்ய தரிசனம்/ அம்மன் அழகாய்ப் பேசுகிறாப்போல் உட்கார்ந்திருந்தாள். நாங்கள் கொண்டு போன பெரிய மாலையை (ஶ்ரீரங்கம் மாலைகளுக்குப் பிரபலம்) அம்மனுக்குச் சார்த்திவிட்டுக் கற்பூர தீபாராதனையும் காட்டி எங்களுக்கும் காட்டினார் குருக்கள். பூசாரியும் இருந்தார். பின்னர் மல்லிகைப் பூச் சரம் பிரசாதமாய்க் கிடைத்தது. அதை வாங்கிக் கொண்டு மறுபடி மறுபடி கண் குளிர அம்மனைத் தரிசனம் செய்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு! சுமார் இரண்டரை வருடங்கள் கழித்துக் குலதெய்வம் கோயிலுக்குப் போனது போன மாசம். இப்போ சமயபுரம். எல்லாம் அவள் அருள்!
***********************************************************************************
பாட்டையா என அன்புடன் அழைக்கப்படும் திரு பாரதி மணி அவர்கள் காலமாகிவிட்டதாக முகநூலில் பெண்ணேஸ்வரன் போட்டிருந்தார். அதன் பின்னர் நம்ம ரேவதியும் பதிவு போட்டிருந்ததைப் பார்த்தேன். வயது ஆனாலும் உள்ளத்தால் இளமையான பாட்டையா எனக்கும் முகநூல் சிநேகிதர். திருமண நாள்/பிறந்த நாட்களில் மெசஞ்சர் மூலம் வாழ்த்துச் செய்திகள் அனுப்புவார். அவர் மாமனார் க.நா.சு. அவர்கள் தூரத்து உறவு. ஆனால் பாட்டையா அதை அறிவாரா இல்லையானு எனக்குத் தெரியாது. அவரின் நகைச்சுவையான கட்டுரைகளையும் விதம் விதமான நாகர்கோயில் சமையல்களையும் இனிக் காண முடியாது! அவரின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.
***********************************************************************************
காலையில் இன்னொரு அமர்க்களம் முகநூலில். யாரோ நம்ம ரிஷபன் சார் அவர்கள் நேற்றிரவு காலமாகிவிட்டதாகச் சொல்லி இரங்கல் பதிவைப் பெரிசாகப் போட்டதோடு அல்லாமல் யாரைத் தொடர்பு கொண்டால் அவங்க வீட்டோடு பேச முடியும்னும் கேட்டிருந்தார். இதைப் பார்த்த நண்பர் என்னைக் கேட்க எனக்கோ திக் திக்! என்னடாப்பானு பார்த்தால் நண்பர் மேலே சொன்ன முகநூல் பதிவின் சுட்டியைக் கொடுக்க அதைப் படிச்சுட்டு நானும் இரங்கல் தெரிவிக்கையிலேயே ரிஷபன் அவர்களே வந்து "நான் சாகலை. உயிரோடு தான் இருக்கேன்." என்றாரே பார்க்கலாம்! அப்படியே தொலைந்த சந்தோஷம் திரும்ப வந்தது. அவரை மனமாற வாழ்த்திவிட்டு வந்தேன். நீடுழி வாழட்டும்! சில திரைப்படப் பிரமுகர்கள் பற்றியும் இப்படி எல்லாம் வதந்தி பரவி இருந்தது தெரியும். நெருங்கிய வட்டத்தில் இப்போத் தான் முதல் முதலாக ரிஷபன் சார்! பதிவு போட்டவர் தீர விசாரிக்கலை. மன்னிப்பாவது கேட்டாரானு தெரியலை. :(
***********************************************************************************
தெரிந்த ஒரு சிநேகிதியின் பிள்ளைக்கு 39 வயதாகிவிட்டது. 40 இருக்கலாம்னு அனுமானம். ஆனால் இல்லை என்றார் சிநேகிதி. இப்போப் பிரச்னை அது இல்லை. இந்தப் பையருக்குப் பத்து வருஷங்களுக்கும் மேலாகப் பெண் தேடிக்கொண்டு இருக்கிறார் அந்த சிநேகிதி. என் தம்பி பையருக்கு ஆகிறாப்போல் கிட்டி முட்டி வரும்; நின்னுடும். பையர் ஐடியில் இருக்கார்.நல்ல சம்பளம். ஒரே தங்கை/ திருமணம் ஆகி அம்பேரிக்கா வாசம். பிக்குப் பிடுங்கல் இல்லை. நல்ல இடம் தான். ஆனால் ஏனோ தட்டிப் போய்க் கொண்டே இருந்தது. இப்போத் தான்சில நாட்கள் முன்னர் அந்த சிநேகிதி வந்து பையருக்குத் திருமணம் நிச்சயம் ஆகப் போவதைச் சொல்லிவிட்டுச் சென்றார். அதோடு இல்லாமல் நீங்க ஊருக்குப் போயிட்டு வந்ததும் தான் நிச்சயம் என்றும் சொன்னார். ஊரிலிருந்து வந்ததும் இந்த வாரம் ஞாயிறன்று நிச்சயம் எனக் கேள்விப் பட்டேன். ஆனால் சிநேகிதியைப் பார்க்கவில்லை. நானும் அதிகம் வெளியே செல்வதில்லை என்பதால் பார்க்க நேரவில்லை.
இன்று நம்பகமான ஒருத்தர் மூலம் தெரிந்த தகவல் அந்தப் பெண் இந்தப் பையரை வேண்டாம்னு சொல்லிவிட்டாளாம்.இத்தனைக்கும் இந்தப் பெண்ணையே இரு வருடங்கள் முன்னரே பார்த்துப் பிடிச்சுப் போய் ஆனால் பெண் தான் வேலை பார்க்கும் ஶ்ரீரங்கம் வங்கியிலேயே தொடர்ந்து இருக்கணும் என்றும் அப்பா/அம்மாவுக்கு வேறு யாரும் இல்லை என்பதால் அவங்களை விட்டுட்டு வரமாட்டேன் என்றும்சொல்லி விட்டாளாம். ஏற்கெனவே இரண்டு வருடங்கள் முன்னரும் இதே காரணம் தான் வேண்டாம்னு நிராகரிச்சிருக்காங்க. இப்போப் பெண் வீட்டிலே தானாக வந்து பையர் இரு வருடங்களாக இங்கேயே இருப்பது தெரிந்து பெண்ணைக் கொடுக்கலாம்னு வந்திருக்காங்க.ஆனால் பையர் முன் கூட்டியே சொல்லணும் என்பதால் எப்போ வேண்டுமானாலும் சென்னைக்குப் போக நேரிடும்னு சொல்லி இருக்கார். அதோடு இல்லாமல் அவர் ஒரே பையர் என்பதால் பெற்றோர் தன்னுடன் தான் இருப்பார்கள் என்பதையும் சொல்லி இருப்பார் போல!
அந்தப் பெண்ணுக்குச் சென்னைக்குப் போய் வேலை செய்யவோ மாமனார்/மாமியாருடன் கூட இருக்கவோ இஷ்டம் இல்லை. அதோடு தான் சென்னை சென்றுவிட்டால் தன் பெற்றோர் இங்கே தனியாகத் திண்டாடுவார்கள் என்றும் கவலையாம். ஆகவே வேண்டாம்னு மறுபடியும் நிராகரித்து விட்டாள். பெண்ணுக்கும் 37 வயது. பையரின் அம்மா/என் சிநேகிதி அந்தப் பெண்ணிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார். உங்களுக்குத் திருமணம் ஆனால் பையர் இங்கேயே ஶ்ரீரங்கத்திலேயே இருந்தார் எனில் உங்க வீட்டுக்கு வந்துடட்டும். நாங்க இதே வீட்டிலே இருந்துக்கறோம். அப்படிச் சென்னை மாற்றல் ஆனாலும் நீ உன் பெற்றோருடன் போய் அங்கே எங்க பையருடன் இருந்து வாழ்க்கையை நடத்து. நாங்க வரவே மாட்டோம். வரச் சொல்லி அழைப்பதற்கு மட்டும் வருவோம். என்றெல்லாம் சொல்லிப் பார்த்துட்டாங்க. நீ எங்களுடன் குடித்தனம் நடத்த வேண்டாம்னு எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு. பெண்ணின் மனம் இளகவில்லை. நாளைக்கு மறுபடி போய்ப் பார்க்கப் போறாங்க. எனக்குக் கண்களில் ரத்தம் வருது! இந்த மாதிரிப் பெண்களை என்ன சொல்லித் திருத்த முடியும்?
இந்தப் பெண்ணிற்கு வயது தான் முதிர்ந்திருக்கே தவிர மனம் முதிர்ச்சி அடையலை. இதுக்குத் தான் அந்தக் காலத்தில் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணினாங்க. சிந்தனை வேறு பக்கமெல்லாம் போகாமல் இருக்கும். அதோடு பெண்களை அந்த வயதில் சுலபமாக வளைக்கலாம். இப்போல்லாம் இருபது வயதில் கல்யாணம் பண்ணினாலே குழந்தைக் கல்யாணம் என்கிறார்கள். அதனால் 22,25 வயதுக்குள்ளாகவாவது கல்யாணத்தைப் பெண்களுக்குக் கட்டாயமாய்ப் பண்ணிடணும். முப்பது வயதுக்கு மேல் அந்தப் பெண்களுக்கெனத் தனிக் கருத்துகள்/பிடிவாதங்கள்/ருசிகள்னு ஏற்பட்டு நிலைத்து விடுவதால் அனுசரிப்பு என்பதை எதிர்பார்க்கவே முடியாது. எங்கேனும் ஒரு சில பெண்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்த இரண்டு, மூன்று பெண்கள் அப்படி இருந்திருக்காங்க/இருக்காங்க. ஆனால் இப்போதைய பெண்களின் பொதுவான மனோநிலை இப்படித்தான் இருக்கு!
பாரதி மணி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteசமயபுரம் மாரியம்மனே உங்களைக் கூப்பிட்டு தரிசனம் கொடுத்துவிட்டாள் போலிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.
உண்மையில் அம்பிகை அழைக்காமல் தரிசனம் கிடைக்காது தான். பாரதி மணியின் பெண்கள் பெயரில் அவருடைய முகநூல் பக்கம் வந்திருந்தவற்றை இப்போத் தான் படித்தேன். :( நல்ல மனிதர்.
Deleteரிஷபன் சார் விரைவில் எபி செவ்வாய்க்கிழமை கதை எழுதணும், நான் படிக்கணும்னு அவர்ட்ட இந்தப் பதிவு மூலமாகக் கேட்டுக்கறேன்.
ReplyDeleteநெல்லை, அவர் இதை எல்லாம் பார்க்கிறாரோ இல்லையோ! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே வந்திருக்கார் ஓரிரு முறை.
Deleteபெண்கள், திருமணம், கண்டிஷன் ..... இதையெல்லாம் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.
ReplyDeleteபெண்களை exploit பண்ணின சொசைட்டிலிருந்து இப்போதான் அவங்க மேல வர ஆரம்பித்திருக்காங்க. அதனால ஆரம்ப ஜோராக நிறைய கண்டிஷன்கள், நிர்ப்பந்தங்கள்னு இருக்கு. வாட்சப் க்ரூப்பில் பெண்களை சாபமிடாத குறையாகத் திட்டி ஏகப்பட்ட வாய்ஸ் மெசேஜ்களை நேற்று படித்தேன்.
வளர்ப்பு முறை இந்தத் தலைமுறையிலேயே சரியில்லை. பெற்றோர்தான் அதற்குக் காரணம். அப்புறம் யாரைக் குறை சொல்வது?
எனக்கு எந்த வாட்சப் குழுமத்தில் இருந்தும் இப்படியான செய்திகள் வருவதில்லை. அதான் நேரிலேயே மிக மோசமானவற்றை எல்லாம் பார்க்கிறோமே! அந்தப் பெண் "வீட்டோடு மாப்பிள்ளை" க்குச் சம்மதம் எனில் மேலே பேசலாம் என்கிறாளாம்.
Deleteரிஷபன் அண்ணா பற்றிய தகவல் - ஏன் இப்படிக் கொடுத்துவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. நாமுமே கவனமாகத்தான் செய்தி அறிந்து கருத்து போட வேண்டும். நம் வெங்கட்ஜி/ஆதி வீட்டிற்கு அருகில்தான் இருக்கிறார் ரிஷபன் அண்ணா, இல்லையா?
ReplyDeleteபாட்டையாவிற்கு அஞ்சலிகள். அவர் எங்கள் ஊர் பார்வதிபுரத்துக்காரர். பார்வதிபுரம் அழகான கிராமம். தற்போது அவர் பங்களூரில் இருந்ததாகத்தான் அறிந்தேன். சில படங்களிலும் நடித்திருக்கிறாரே.
அந்தப் பெண் போலத்தான் இப்போது 25 வயதுப் பெண்கள் சிலரும் கூட இருக்கிறார்கள் கீதாக்கா. இப்போதைய பெண்களின் அட்டிட்யூட் அப்படியாக இருக்கிறது. பாவம் பையனின் அம்மா. எவ்வளவு கெஞ்சுகிறார். மனம் வேதனைப்படுகிறது.
எனக்கு ஒரு கேள்வி கீதாக்கா தவறா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றுவது...தனிப்பட்ட என் எண்ணம், அப்படியேனும் கெஞ்சியேனும் கல்யாணம் செய்ய வேண்டுமா? நான் அவர்கள் நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக மாட்டேன் கீதாக்கா. ஏனென்றால் இப்படியான திருமணங்கள் மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்தப் பையன் மணவாழ்க்கை வாழ வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள் ஓகே. ஆனால் அதற்காக இப்படியான திருமணம் அந்தப் பையனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? அவர்கள் நினைக்கும் மகிழ்ச்சி கிடைக்குமா? கண்டிப்பாகக் கிடைக்காது கீதாக்கா. அப்போ பெற்றோர் எதிர்பார்க்கும் மகனின் மகிழ்ச்சி? பலிகடா ஆக்குவது போலத்தானே இருக்கு இல்லையா? ஏனோ எனக்கு இப்படியான திருமணங்களில் உடன்பாடில்லை அதற்கு பையன்கள் தனியாகவே இருந்துவிடலாம் என்று தோன்றும் மாட்டிக் கொண்டு பெற்றோரையும் விட்டு அவன் மனம் எத்தனை வேதனைப்படும் அதை நினைத்துப் பாக்கணும் இல்லையா? என்னவோ போங்க...
கீதா
சில பெற்றோருக்குத் தங்கள் மகன் எத்தனை வருடங்கள் பிரமசர்யம் காப்பான். வாரிசு இல்லாமல் நம் குடும்பம் அழிந்துவிடுமோ என நினைப்பு. எங்காவது மகன் நன்றாய் இருக்கட்டும் என்னும் எண்ணமும் தான். இப்போதெல்லாம் பெண்கள் தங்கள் கணவனுக்கும் பெற்றோர் இருப்பார்கள், அவங்களைக்காக்கும் கடமையும் உண்டு என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை. ஆனாலும் அந்தப் பையரே இப்போது வேண்டாம் விட்டுடுங்க எனச் சொல்லி விட்டாராம்.
Deleteசமயபுரத்துக்கு ஆட்டோக்காரர் எவ்வளவு கேட்டார் என்கிற ரகசியத்தைச் சொல்லவில்லை நீங்கள்! ஒன்றரை மணி நேர பிரயாணமா? தரிசனம் நல்லபடி கிடைத்தது அவள் அருள்.
ReplyDeleteஹாஹாஹா, அது ஒண்ணும் பெரிய ரகசியமெல்லாம் இல்லை ஶ்ரீராம். 500 ரூபாய் வாங்கிக் கொண்டார். ஒன்றரை மணி நேரம் மொத்தம் எடுத்துக் கொண்டது. கோயிலில் அரை மணி/முக்கால் மணி செலவு செய்திருப்போம்.
Deleteபாரதிமணி அவர்களின் மறைவு பற்றி நேற்று மாலை பேஸ்புக்கில் பார்த்தேன். அவரின் எளிமை, பழகும் தன்மையில் இனிமை பற்றி அறிந்திருக்கிறேன். அவர் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறப் பிரார்த்திப்போம்.
ReplyDeleteஶ்ரீராம், கலகலத்த சுபாவம். மிக மிக நல்ல ஆத்மா. நற்கதி அடையட்டும்.
Deleteரிஷபன் ஸார் பற்றிய வதந்தி நல்லவேளை நான் கேள்விப்படவில்லை. யார் செய்த அநியாயமோ.. இது மாதிரி வதந்திகள் அவர்களுக்கு கண்திருஷ்டி கழிந்து நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பார்கள். நீடூழி வாழ்க.
ReplyDeleteஎனக்கும் நண்பர் மூலம் தான் தெரிந்தது. இல்லை எனில் வாய்ப்பே இல்லை. நன்றாக ஆரோக்கியமாக வாழட்டும்.
Deleteதிருமணத்திற்கு காத்திருக்கும் மணமகன்கள் பாவம். கிடைக்கும் வரன்களையும் நிராகரித்துக் கொண்டு வரும் இளைஞர்கள் பின்னா அவதிப்படுவார்கள் என்று தெரிகிறது.
ReplyDeleteஇப்போல்லாம் இளைஞர்கள் சுதாரிப்புடனேயே இருக்கிறார்கள். பெண் எனக்கிடைத்தால் போதும் என்றே நினைக்கின்றனர்.
Deleteஅந்தப் பெண் தன் தாய் தந்தையரை விட்டு வரமாட்டார், ஆனால் மணமகன் மட்டும் தன் தாய்தந்தையரை விடவேண்டும் என்று சொல்லும் நியாயம் என்ன நியாயமோ...
ReplyDeleteஇதுல ஒரு பொதுக் கண்ணோட்டம் இருக்கிறது. தன் வீட்டில் கொஞ்சம் சௌகரியமாக இருக்கலாம் அந்தப் பெண். அதுவே மாமியார் வீடு என்பது வேறாகிவிடுவதால் அவ்வளவு comfortableஆக அமையாது.
Deleteநான் நிறைய பேர், மாமியார் வீட்டில் அவ்வளவு சுகப்படாதவர்களைப் பார்க்கிறேன். சிலர்தான் ரொம்பவே அட்ஜஸ்ட் செய்ய விரும்புகிறார்கள் (மாமியார்கள்)
பலரும் கணவனுடைய பெற்றோரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை இப்போதெல்லாம். சுமையாகவே நினைக்கின்றனர்.
Deleteஇப்போதைய மாமியார்கள் பெரும்பாலும் அனுசரித்துக்கொண்டே வாழ்கின்றனர். ஆனால் பெண்கள் சேர்ந்து வாழ்வதை அவ்வளவாக விரும்புவதும் இல்லை.
Delete//அந்தப் பெண்ணுக்குச் சென்னைக்குப் போய் வேலை செய்யவோ மாமனார்/மாமியாருடன் கூட இருக்கவோ இஷ்டம் இல்லை//
ReplyDeleteஇன்றைய பெண்களுக்கு கணவன் மட்டுமே வேண்டும். ஆனால் கல்யாணத்திற்கு முன் உறவுகள் இருப்பவராக வேண்டும்.
முன்கூட்டியே இவர்கள் அனாதை மாப்பிள்ளையை தேடலாமே...
நீங்கள் சொல்லுவதும் சரிதான் கில்லர்ஜி! அப்படியே பார்க்கலாமே இந்தப் பெண்கள்.
Deleteசமயபுரத்தில் அம்மனின் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது மகிழ்ச்சி.
ReplyDeleteஅம்மன் அருளுலால் நல்ல தரிசனம் கிடைத்தது.
பாரதி மணி அவர்களுக்கு அஞ்சலிகள்.
ரிஷபன் சாருக்கு ஆயுசு 100 வாழ்க வளமுடன்.
பெண்ணின் நிபந்தனைகளை, பெண் வீட்டாரின் விருப்பங்களை கல்யாணமாலை நிகழ்ச்சிகளில் கேட்டு இருக்கிறேன்.
வாங்க கோமதி. சமயபுரம் போய் அம்மனைப் பார்க்க முடியும் என்றே நினைக்கவில்லை. எதிர்பாரா தரிசனம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. முதலில் தாங்கள் சமயபுரம் மாரியம்மனை கூட்டம் இல்லாமல் அருகில் சென்று நன்றாக சேவித்து வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இது அம்மனின் அருளன்றி வேறெதுவும் இல்லை.
நீங்கள் தெரிவித்திருக்கும் திரு.பாரதி மணி அவர்களை நான் அறிந்ததில்லை.எனினும் அவரின் மறைவுச் செய்தி வருத்தம் வரவழைத்தது. அவருக்கு என் அஞ்சலிகள்.
மேலும் முகநூலில் வேண்டாத பொய்யான வதந்திகளை பரப்பியதற்கும் வருத்தப்படுகிறேன். திரு ரிஷபன் அவர்களை ஒரளவு பதிவுலகம் வந்ததிலிருந்து உங்கள் போன்றோரின் வாயிலாக அறிவேன். அவர் மனம் மட்டுமில்லாமல் அனைவரும் வருத்தப்படும் அளவிற்கு இப்படி பொய்யான தகவல் ஏன்.? வருத்தமாக உள்ளது. அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளை தர வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
இறுதி விஷயமாக தலைப்புகேற்றபடி நன்றாக அலசி எழுதியுள்ளீர்கள். பையனின் அம்மா சமாதானமாக இப்படியெல்லாம் கூறியும் சம்மதிக்காத அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன கல்மனம்..? இப்போதுள்ள பெண்களின் திருமண கண்டிஷன்களை நானும் அறிவேன். என்ன செய்வது? காலச் சுழற்சிதான் காரணம், இப்போது முற்றிலும் ஆண்கள் அடங்கிப் போக வேண்டிய கட்டாயங்கள் உருவாகி விட்டன. (இப்போதுள்ளது பூனைக்கொரு காலம்.. மறுபடி பழையபடி யானைகளின் காலங்களை நாம் பார்க்க இயலாது.:) ஆனால் அது ஒரு நாள் மறுபடியும் எப்போதாவது தலை தூக்கி வரும். ) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நான் இந்தப் பதிவுக்கு சில,பல வேலைகளினால் தாமதமாக வந்துள்ளேன். எ. பிக்கும் இப்போதுதான் கருத்துரைக்கச் சென்றேன். வருந்துகிறேன். மன்னிக்கவும்.
நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, தாமதமாகப் பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். அம்பிகையின் அருளால் அன்னிக்கு அவளை நன்றாகக் கண் குளிரத் தரிசனம் செய்து கொண்டோம். முகநூல் வதந்திகள் ஒன்றும் புதிதல்லவே! பல பிரபலங்களைப் பற்றியும் வாட்சப், முகநூல் மூலம் வதந்திகள் பரவுகின்றன. அந்தக் கல்யாண நிச்சயதார்த்தம் இன்று நடந்திருக்கணும். நின்று விட்டது. மோதிரம் வாங்கி, சாப்பாட்டுக்கு முன்பணம் கொடுத்து, வீடியோ, ஃபோட்டோவுக்குச் சொல்லி, மேஜை, நாற்காலிகளுக்கு ஆர்டர் கொடுத்துப் பெண்ணுக்குப் புடைவை எடுத்து ப்ளவுஸ் தைக்கக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து, புடைவை கட்டிவிட ப்யூடிஷியன் ஏற்பாடு செய்துனு எல்லாமும் நடந்த பின்னர் நின்று விட்டது.
Deleteவெகு நாட்கள் கழித்து சமயபுரம் அம்மன் தரிசனம்.
ReplyDeleteஅன்னை என்றும் நம்முடன் பேசுவாள்.
நீங்கள் சென்று தரிசனம் செய்ததும் சீக்கிரம் அவளைக் காண முடிந்ததும் மிக
நன்மை.
ஆட்டொவில் செல்வது மிக மிகக் கடினம். தூக்கி வேற போடுமே.
வாங்க வல்லி. நீங்க சொல்வது சமயபுரம் பழைய சாலை. இப்போதெல்லாம் சாலையில் பயணம் செய்வதே பிடிக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. இப்போப் போனதும் கொள்ளிடம் தாண்டி பைபாஸ் சாலையில். கொஞ்சம் தூரம் தான் என்றாலும் விரைவில் போய்விடலாம். சாலைப்போக்குவரத்தில் பாதிக்கப்பட மாட்டோம். சாலைப்பயணத்தில் இப்போதெல்லாம் எல்லாப் பெட்ரோல் பங்குகளிலும் கண்டிப்பாகக் கழிவறை வசதி இருக்கணும். ஆகவே அந்தப் பிரச்னையும் இல்லை. அதிலும் ஷெல் கம்பெனியின் ஃப்ரான்சைஸ் franchise எனில் கேட்கவே வேண்டாம். அம்பேரிக்காவில் இருக்கோமோனு தோணும். :))))))
Deleteரிஷபன் ஜி பற்றி இப்படி வந்ததா. என்ன ஒரு கொடுமை மா.
ReplyDeleteஇப்படி எல்லாம் செய்வார்களா.:(
நூறாயுசு நன்றாக இருக்கட்டும்.
ஆமாம், ரிஷபன் பற்றி இப்படி ஒரு வதந்தி பரவி இருந்திருக்கு. பின்னர் அவரே வந்து தனக்கு ஒன்றும் இல்லை என்றார்.
Deleteஎங்களுக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த பெண்ணின் நிபந்தனைகள் அவளுக்கு வரப்போகும் மாமனார், மாமியார் இவர்களை financialஆக சார்ந்து இருக்கக்கூடாது, இவர்களோடு சேர்ந்தும் இருக்கக்கூடாது. அதாவது ஒரு பையனை வளர்த்து ஆளாக்கி விட்டு அவன் பெற்றோர்கள் விலகிச் சென்று விட வேண்டும். என்ன ஒரு எண்ணம்!
ReplyDelete@பானுமதி, நீங்க அறிந்திருக்கும் இந்தப் பெண் மட்டும் இல்லை. அநேகமாக எல்லாப் பெண்களின் எதிர்பார்ப்பும் இது தான். கொஞ்சம் கூட மனதில் ஈரமே இல்லாமல் பேசுகின்றனர்.
Deleteரிஷபன் சாருக்கு பிறந்த நாள் என்று மத்யமரில் அறிவிப்பு பார்த்தேன். இப்படி ஒரு விபரீத அறிவிப்பு நல்ல வேளையாக என் கண்ணில் படவில்லை. அவருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
ReplyDeleteஎனக்கும் கண்ணில் படலை பானுமதி. நண்பர் கொடுத்த சுட்டியின் மூலம் போய்ப் பார்த்தேன். அநேகமாக அவர் அந்தப் பதிவை எடுத்திருப்பார். :))))
Delete