எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 29, 2021

சென்னை மழையும் நானும்!

 தண்ணீருக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருந்த தமிழ்நாட்டில்/முக்கியமாகச் சென்னையில் இப்போது எங்கே பார்த்தாலும் தண்ணீர்! தண்ணீர்!  இன்னிக்குச் சென்னையில் ஒரு முக்கியமான கல்யாணம். நேற்றே போயிருக்கணும். வண்டி எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டோம். ஆனால் இந்த மழையால் போகவில்லை. விழுப்புரம்/செங்கல்பட்டுப் பக்கம் உள்ள மழை நீரையும் வெள்ளத்தையும் பார்த்துவிட்டுப் போவதற்குத் தயக்கம். ஏற்கெனவே மதுராந்தகம் ஏரி நீரில் விட்டுக் கொண்டிருந்த உபரி நீர் ஏரி நிரம்பியதால் வெளியேற்றப்படுகிறது எனவும், அதனால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் இருப்பதால் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் வந்தன.  ஆனால் திருமணத்தை நேரடி ஒளிபரப்பாகக் காட்ட ஏற்பாடு செய்திருந்தனர். நேற்றைய ரிசப்ஷனில் இருந்து இன்று திருமணம் சப்தபதி வரை பார்த்தோம். உண்மையில் சத்திரத்துக்குப் போயிருந்தால் இத்தனை வசதியாகப் பார்த்திருக்க முடியாது.  மிகவும் எதிர்பார்த்திருந்த திருமணம். நேரில் பார்க்க முடியலையேனு இருந்தது. ஆனால் அதை விட வசதியாக மொபைல் மூலம் பார்த்தாச்சு!


நேற்றுத் தண்ணீரில் கூடுவாஞ்சேரி அருகே முதலை என வீடியோ வாட்சப்புகளில் வந்தன. இன்னொரு வீடியோ கேகே நகரில் என்றது. என் அண்ணா பெண் அதெல்லாம் இல்லைனு மாவட்ட ஆட்சியரே சொல்லிட்டார். அது உண்மையில் டயர் என்றும் சொன்னாள். மக்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தப்படுகிறார்கள் என்பதும் புரிந்தது. இன்னொரு வீடியோவில் இளையராஜா வீட்டைக் காலி செய்து கொண்டு போகிறாப்போல் வந்தது. சரினு சித்தி அங்கே தானே இளையராஜா வீட்டுக்கு எதிரே இருக்காங்கனு தம்பிக்குத் தொலைபேசி விசாரிச்சா அது 2015 ஆம் ஆண்டு வெள்ளத்துக்கான வீடியோவாம். இப்படிப் பலவும் 2015 ஆம் ஆண்டிற்கான வீடியோக்கள் சுற்றுவதாகவும் தெரிவித்தார்.  என்ன மக்கள்! மனித  மனத்தின் பலவீனத்தையும் தற்போது இருக்கும் நிராதரவான நிலையையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை மேலும் மேலும் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி மகிழும் சிலரின் வக்கிரமான எண்ணம் வேதனையில் ஆழ்த்துகிறது. 


படங்களுக்கு நன்றி கூகிளார். 

என் முதல் பிரசவத்தின் போது வேலைக்குப் போய்க் கொண்டிருந்தபடியால் அறுபது நாட்களே பிரசவ கால விடுமுறை. அறுபத்தி ஒன்றாம் நாள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்கணும். அதுக்கப்புறமாத் தேவைன்னா விடுமுறை எடுத்துக்கலாம். குழந்தையைப் பார்த்துக்க ஆள் இருந்தா வேலைக்கும் போய்க்கலாம். எனக்கு செப்டெம்பர் கடைசியில் பிரசவம் ஆனதும். நவம்பர் கடைசியில் விடுமுறை முடிந்து வேலையில் சேரணும். அலுவலகத்தில் இருந்து நினைவூட்டுக் கடிதமும் வீட்டுக்கு வந்திருப்பதாக நம்ம ரங்க்ஸார்  எனக்கும் மதுரைக்குக் கடிதம் எழுதி இருந்தார். குழந்தை பிறந்து கணக்குக்கு மாதம் மூன்று ஆனதால் (தமிழ் மாதக்கணக்கு) என் அப்பா/அம்மா என்னையும் குழந்தையையும் சென்னையில் கொண்டு விட முடிவு செய்து நாள் பார்த்தார்கள். நவம்பர் 29 ஆம் தேதி வேலையில் சேரணும். அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் மதுரையை விட்டுக் கிளம்பினோம். இப்போ குருவாயூர் விரைவு வண்டி என அழைக்கப்படும் வண்டி அப்போது காலை ஆறே கால் மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்குப் போய்க் கொண்டிருந்தது. முதல் நாள் இரவே குருவாயூரில் இருந்து வந்து மதுரையை அதிகாலை அடைந்து அங்கிருந்து காலை ஆறேகாலுக்குக் கிளம்பிச் சென்னை நோக்கிச் செல்லும். அந்த வண்டியில் முன்பதிவு செய்திருந்தார்கள். காலை சீக்கிரமே எழுந்து அம்மா ரயிலுக்கு வேண்டிய உணவு வகைகள், குழந்தைக்குத் தேவையான வெந்நீர். உடனே கொடுப்பதற்கு வேண்டிய பால் எனத் தயாரித்து எடுத்துக் கொள்ள தம்பி அப்போது காலேஜில் படித்ததால் அவனை வீட்டில் விட்டு விட்டு நான், அப்பா, அம்மா குழந்தையுடன் சென்னைக்குக் கிளம்பினோம்.

நானும் அம்மாவும் குழந்தையுடன் சைகிள் ரிக்‌ஷாவில் ஸ்டேஷனுக்குப் போக அப்பாவும் தம்பியும் மூட்டை முடிச்சுக்களை முடிந்தவரை ரிக்‌ஷாவில் வைத்தது போக மிச்சத்தைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்தனர். ரயில் வந்ததும் எங்களுக்கான பெட்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். நான்கு பேர் உட்காரும் ஒரு பக்கப் பலகையில் நாங்கள் 3 பேர் இருந்ததால் இடம் தாராளமாகவே இருந்தது. சாமான்களை வைத்துவிட்டு நான் ஜன்னலோரம் உட்கார்ந்து கொண்டு குழந்தையை எனக்கும் அம்மாவுக்கும் நடுவில் போட்டுவிட்டுத் தூங்கப்பண்ணிவிட்டுக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ரயில் என்னமோ கிளம்பவே இல்லை. தம்பி என்னனு போய் விசாரித்த்தற்கு இஞ்சின் மாற்றணும்னு சொல்லி இருக்காங்க. சரிதான், சித்தரஞ்சன்லே இருந்து இஞ்சின் எல்லாம் வரணும் போலனு நாங்க கேலி பேசிக் கொண்டோம். பின்னர் ஒருவழியாக ஏழு மணிக்குக் கிளம்பியது.  வழியில் இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் போன்றவற்றைச் சாப்பிட்டு முடித்தோம். குழந்தைக்கும் நானும் பால் கொடுத்து விளையாட விட்டுப் பார்த்துக் கொண்டோம்.  சாயந்திரமாய் ஐந்தேகால் மணிக்கு சென்னை/எழும்பூர் போகணும். மத்தியானம் இரண்டரை மணி இருக்கும் விழுப்புரம் வந்தது. விழுப்புரத்தில் அரை மணியாவது நிற்கும். எப்போதும் மத்தியானம் ஒரு மணிக்குக் காஃபி குடிச்சுப் பழகிய அப்பா காப்பி வாங்கி வரக் கீழே இறங்கினார். வண்டி கிளம்பறதுக்குள்ளே வரணுமேனு எனக்குக் கவலை. 

எனக்கு எப்போவுமே வண்டி நடுவில் நிற்கும் ஸ்டேஷன்களில் இறங்கி ஏதாவது வாங்கணும்னா கொஞ்சம் யோசனையா இருக்கும். அதுக்குள்ளே வண்டி கிளம்பிடுமோனு பயம் வரும். ஆனால் அப்பா காஃபி வாங்கி வந்துட்டார். கூடவே ஒரு செய்தியையும் கொண்டு வந்தார்.அது தான் வண்டி விழுப்புரத்தை விட்டுக் கிளம்புமா என்பது! விழுப்புரம்/செங்கல்பட்டு நடுவே மழையினால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும் வண்டியை மேலே செலுத்திக் கொண்டு போவது கடினமான காரியம் எனவும் பேசிக் கொண்டதாய்ச் சொன்னார். கவலை சூழ்ந்தது. நிலைமை புரியாமல் குழந்தை கத்தி விளையாடிக்கொண்டிருந்தாள்.  ஆனால் அதற்குள்ளாக வண்டி கிளம்பி மேலே சென்றது. அப்பாடா! என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொஞ்ச நேரத்திலேயே ஒரு நீண்ட குரல் எழுப்பி விட்டு ஓய்ந்த இஞ்சின் தடாரென இழுக்கப்பட வண்டி சட்டென நின்றது. பின்னர் மெல்ல மெல்ல அப்படியே பின்னாலேயே போக ஆரம்பித்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை.38 comments:

 1. தொடர்ச்சியாக ம‌ழையில் மாட்டிக்கொண்டு தவித்த நிகழ்வுகளாகவே எழுதி வருகிறீர்கள்! ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்று புரிகிறது!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ! மழையுடனான என்னோட அனுபவங்கள் நிறையவே உண்டு. அநேகமாக ஆரம்பகாலங்களில் எல்லாவற்றையுமே எழுதி இருக்கேன். இந்த நிகழ்வையும் முன்னரே பகிர்ந்திருக்கேன். இப்போ மறுபடி எழுதறேன். மீள் பதிவெல்லாம் இல்லை. புதுசாவே எழுதறேன். :)

   Delete
 2. சென்னைப் பயணம் முடிந்த மாதிரி தெரியலை. அதுக்குள்ள செல்லாத ஒரு பயணம், முன்னொரு காலத்தில் சென்ற பயணம் என்று எங்கெங்கோ பயணிக்க ஆரம்பித்துவிட்டீர்கள்... இதில் சஸ்பென்ஸ் வேறு. அநியாயமாக இல்லையோ

  ReplyDelete
  Replies
  1. அதான் பார்த்தேன் நெல்லை...சென்னைப் பயணம் முடிந்தா மாதிரி தெரியவில்லையே ஒரு வேளை நான் பார்க்கவில்லையோ என்று பின்னில் சென்று பார்க்க நினைத்தேன்....

   இன்னிக்கு ஒரே சஸ்பென்ஸ் தான் எனக்கு...எபியில் ஒரு சஸ்பென்ச் இங்கு கீதாக்காவின் பதிவிலும்

   கீதா

   Delete
  2. நாங்க ஹோட்டலுக்குப் போய்ச் சேர்ந்ததோடு சென்னைப் பயணம் முடிந்து விட்டதாக அல்லவோ நினைச்சேன். தொடர்ந்து எழுதுவதுனால் கல்யாண நிகழ்வுகள் தான் இருக்கு. :)))))

   Delete
  3. தி/கீதா, மழை நீர் வெள்ளம் சூழப் பாதுகாப்பின்றி மின்சாரமும் இல்லாமல் அவதிப்பட்ட நாங்கள் ஒருவழியாக மீண்டு ஓட்டலுக்கு வந்ததோடு அதை முடித்துவிட்டதாக நினைத்தேன். சரி, முடிஞ்சால் மற்றக் கல்யாண நிகழ்வுகளையும் எழுத முடியுமானு யோசிக்கிறேன்.

   Delete
  4. வணக்கம் சகோதரி

   நானும் நீங்கள் உங்கள் தம்பி பையரின் கல்யாணத்திற்கு சென்று மழையில் சிரமபட்ட பதிவை தொடரவில்லையே... அதற்குள் வேறு பயணம் குறித்து எழுதுகிறீர்களே எனவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.ஆமாம்.. நீங்கள் மழையில் அவஸ்தைபட்டு ஹோட்டலுக்கு சென்று கல்யாணத்திற்கு வந்திருந்த உறவுகளோடு சேர்ந்த வரை எழுதி விட்டீர்களே.. அதன் பிறகு மழையினால் ஏதும் பிரச்சனையில்லையே.. அதன் பிறகும் எப்படி நாங்கள் தொடரை முடிக்கவில்லையே என எதிர்பார்த்தோம் என்பது இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக உள்ளது. உங்களின் சிறந்த எழுத்தாற்றலில், கவரப்பட்டு மேலும் என்ன ஆயிற்று? எனத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறோம் போலும்... இன்று எ. பியிலும் அந்த கதை எழுதியவர் யாராக இருக்கக் கூடும் என்ற ஆவலை தூண்டி விட்டு, வேறு வேலைகளை ஓடவில்லை.:) என் பதிவுக்கு வந்த உங்களைனைவரின் கருத்துரைகளுக்கு பதிலளிக்க கூட இயலவில்லை. தாமதமாகிறது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  5. ஓஹோ! அப்போ எல்லோருமே அது தொடரும் என எதிர்பார்த்திருக்கீங்க போலவே! :( நான் தான் உங்களை எல்லாம் ஏமாற்றி விட்டேனோ? ஆனால் தொடர்ந்து எழுதச் சுவாரசியமாக எதுவும் நடக்கவில்லை.ஞாயிறன்று மாலை ஓட்டலுக்குப் போய்ச் சேர்ந்த பின்னர் திங்களன்று அங்கே தற்செயலாகக் காசே தான் கடவுளடா! படம் தொலைக்காட்சியின் ஏதோ ஒரு சானலில் பார்த்தோம். என்னைப் பொறுத்தவரை அந்தப் படத்தைப் பார்த்தது பல மலரும் நினைவுகளைத் திரும்பக் கொண்டு வந்தது. அது தான் கொஞ்சம் சுவாரசியம்.

   Delete
 3. சென்னை நிலவரம் 2015 விடீயோக்களை எல்லாம் போட்டு படுத்துகிறார்கள் என்றாலும், பல இடங்களில் நிலைமை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.  ஆங்காங்கே தண்ணீர் நிற்கிறது.  ஒவ்வொரு இதையும் அடைவது சிரமமாக இருக்கிறது.  பிரதான சாலைகள் மட்டுமல்ல, உள் தெருக்கள், இணைப்புச் சாலைகள் எல்லாமே 70 சதவிகித இடங்கள் நீரால் சூழப்பட்டுள்ள.  

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஶ்ரீராம், தண்ணீர் இன்னமும் முழுதாக வடியவில்லை என்பதாகத் தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருப்பதோடு கூடவே டிசம்பர் 3 ஆம் தேதியில் இருந்து மீண்டும் மழை எனவும் பயமுறுத்துகிறார்கள். இங்கே இன்னிக்கு நல்ல வெயில். சூடெல்லாம் இல்லை என்றாலும் பிரகாசமான சூரியன். மோடம் போடாமல் இருக்கு பல நாட்களுக்குப் பின்னர்.

   Delete
 4. இன்று மாலை அருகில் உள்ள இடத்துக்கு நீரில் அந்தந்த சென்று திரும்பிய பாஸ் குளிர் தூக்கித் தூக்கிப் போட படுத்திருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயம்... நம்ம ஊரில் பெருச்சாளிகள் எலிகள் நிறைய உண்டு. அதனால் நீரில் படும்போது நமக்கு இன்ஃபெக்‌ஷன் வந்துவிடக் கூடாது

   Delete
  2. ஏற்கெனவே தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு மற்ற ஜூரங்களால் அனைவருக்கும் கஷ்டமாக இருக்கும் வேளையில் உங்க பாஸ் வெளியே செல்லாமல் கொஞ்சம் பாதுகாப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம். இப்போ உடம்பு எப்படி இருக்கு?

   Delete
  3. நெல்லை சொல்வது சரியே. அவற்றின் சிறுநீர் மழை நீரில் கலந்து அந்தத் தண்ணீரில் நாம் நடக்கும்போது தோல் மட்டும் இல்லை, மொத்த உடல்நிலையும் பாதிக்கலாம்.

   Delete
  4. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

   தற்சமயம் உங்கள் துணைவியார் நலமடைந்து விட்டாரா? இந்த மழை குளிரில் காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. கவனமுடன் அவர் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  5. இன்னும் முற்றிலும் குணமாகவில்லை.  நன்றி அக்கா.

   Delete
  6. உங்கள் பாஸின் உடல்நிலை விரைவில் பூரண குணம் அடையப் பிரார்த்தனைகள் ஶ்ரீராம்.

   Delete
 5. பழைய கதை தொடங்கும்போதே ரயில் பின்னணி என்றுதான் நினைத்தேன்.  சரியாய்ப் போனது.  இது மாதிரி சமயங்களில் நாம் நடுவழியில் மாட்டிக்கொள்வது கலவரத்தைக் கொடுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இந்த போபியா உண்டு. இரயில் நிலையங்களில் இடையில் இறங்க ரொம்ப பயப்படுவேன். சட்னு இரயில் போயினும், நாம் ஏற நினைக்கும்போது தள்ளுமுள்ளு ஏற்படும், கதவை அடைத்துக்கொண்டு சில ஜென்மங்கள் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் என்று

   Delete
  2. வாங்க ஶ்ரீராம், இங்கே மட்டுமா? இது போல் நிறையத் தரம் பல இடங்களிலும் நடு வழியில் மாட்டிக் கொண்டிருக்கோம்.

   Delete
  3. வாங்க நெல்லை. எனக்கு எப்போவுமே ரயிலில் செல்கையில் அது மற்ற நிலையங்களில் அரை மணி நேரமாவது நிற்கும் என்று தெரிந்தாலே பயப்படாமல் இறங்குவேன். இல்லைனா இறங்க மாட்டேன். யாரையும் இறங்க விடமாட்டேன். ஒரு முறை நம்ம ரங்க்ஸ் சென்னை அலுவலகத்தில் இருந்து அலுவலக வேலையாக ஜி.டி.யில் தில்லி அலுவலகம் சென்றார். அப்போது ஜிடி நடுப்பகலுக்கு நாக்பூர் வரும். இவர் மேலே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர் (முதல் வகுப்பு) ரயில் நிற்கவும் என்ன ஸ்டேஷன் எனக் கேட்டுக் கீழே இறங்கி இருக்கார். தேநீர்க்கடையில் தேநீர் வாங்கி இருக்கார். படுத்துக் கொண்டிருந்ததாலும் முதல் வகுப்பு என்பதாலும் வெறும் பனியனோடு இருந்திருக்கார். கையில் எதுவுமே இல்லை, தேநீருக்காக வைத்திருந்த பத்து ரூபாய் தவிர்த்து. தேநீரை வாங்கும்போதே ரயில் நகர ஆரம்பிக்கக் கடைக்காரர் அவரிடம் எச்சரித்திருக்கார். தூக்கக் கலக்கத்தில் ஒரு நிமிஷம் என்ன செய்வது எனத் தவித்து விட்டுப் பின்னர் அவருக்கு நேரே வந்த பெட்டியில் ஏறிக்கொண்டு விட்டார். அப்போதெல்லாம் ரயிலில் வெஸ்டிப்யுல் வசதி இல்லை. சுமார் 30 வருடங்கள் முன்னர்! அந்தப் பெட்டியில் ஏறிக்கொண்டு பயணித்தவரிடம் பயணச்சீட்டோ, பணமோ எதுவும் இல்லை. அலுவலக சம்பந்தமான முக்கியமான ஆவணங்கள் எல்லாமும் அடங்கிய பெட்டியும், அவரின் துணிமணிகள், மற்றப் பணம் அடங்கிய கைப்பெட்டியும் முதல் வகுப்பிலே அவருடைய இடத்திலே. அங்கே வந்த டிடிஆரிடம் நிலைமையைச் சொல்லவும் அவர் ரயில் எங்காவது சிக்னலுக்கு நின்றால் தான் கார்டிடம் சொல்லி நிறுத்துவதாகவும் அதற்குள்ளாக அவருடைய பெட்டியில் ஏறிவிடும்படியும் சொல்லி இருக்கார். அதே போல் சுமார் ஒரு மணி நேரப் பிரயாணத்துக்குப் பின்னர் ரயில் நிற்க அவருடைய முதல் வகுப்புப் பெட்டியைத் தேடிச் சென்று ஏறிக் கொண்டிருக்கார். இல்லைனா என்ன ஆகி இருக்குமோ? நல்லவேளையாகப் பொருட்கள் பத்திரமாக இருந்தன.

   Delete
 6. இனிய காலை வணக்கம் கீதாமா.

  அப்போதே மதுரையிலிருந்து பகல் வண்டி இருந்ததா!!

  வெள்ளம் பார்த்தே அலுத்து விட்டது. முதலை செய்தி பொய்யா..
  அடக்கடவுளே.

  நான் முதலில் நடந்த கல்யாண செய்திகளையே இன்னும்
  பார்க்கவில்லை.
  இப்போது இன்னோரு கல்யாணம்.
  நீங்கள் அங்கே செல்லாததே நன்மை.
  எங்கள் உறவினர்களில் இருவர் வீடு விட்டு
  அத்தை மகன் ,மாமன் மகள் வீடு என்று
  போய்க் கொண்டிருக்கிறார்கள்.
  அதுவும் தள்ளாத வயதில். என்ன செய்யலாம்.
  நேற்று அனைவரும் சூம் மீட்டிங்கில்
  கலந்து வேறு ஏற்பாடுகள் பேசிக்கொண்டிருக்கிறோம்.
  புது மணமக்களுக்கு வாழ்த்துகள்.
  உங்கள் பயணம் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. உடம்பு எப்படி இருக்கு இப்போ? கண்கள் எரிச்சல் பரவாயில்லையா? உடம்பைக் கவனித்துக் கொள்ளவும்.
   ஆமாம், வல்லி, அறுபதுகளிலேயே மதுரையிலிருந்து சென்னைக்குப் பகல் வண்டி வரும். நான் தனியாகச் சென்னை செல்லும்போதும்/அங்கிருந்து வரும்போதும் அதில் தான் போய் வருவேன். முதலைச் செய்தி முழுக்க முழுக்கப் பொய் தான். கார்த்திக்கும் (எல்கே) உறுதி செய்தார். இப்போதைய நிலவரப்படி இரண்டு, மூன்று நாட்களாகப் பரவாயில்லை என்றாலும் மழை விட்டு விட்டுப் பெய்கிறது என்றார்கள். கல்யாணத்தை முதல் நாளில் இருந்து மறுநாள் வரை பார்க்கும்படியாக ஏற்பாடு செய்திருந்ததால் நன்றாகப் பார்த்தோம். மிக முக்கியமான கல்யாணம். எப்படியோ நன்றாக நடந்தது. இந்தக் கல்யாணம் 2020 ஆம் ஆண்டிலேயே முடிஞ்சிருக்கணும்.

   Delete
 7. கீதாக்கா முதலை எதுவும் வரவில்லை சும்மா நிறைய பொய்ச்செய்திகள் வருகின்றன. ஏன் ஊடகத்திலும் கூட.

  நான் நேரில் இருந்து பார்த்ததையே ஒரு செய்திச் சானலில் பார்த்த போது, காணொளி போட்டுத் தவறான தகவல் கொடுத்து இருக்காங்க. என்ன சொல்ல? செய்திச் சானலை கூட நம்பக் கூடாது. ஏனென்றால் செய்தி சேகரிப்பவர்களுக்குப் பொது அறிவு இல்லை, கூடவே அந்த ஏரியா பற்றி ஒன்றும் தெரியவில்லை. அல்லது சரியான தகவல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. சமூகப் பொறுப்பும் இல்லை. தங்களுக்குத் தோன்றியதை அல்லது தங்கள் காதுகளில் விழுவதைக் கொடுத்துவிடுகிறார்கள். நான் செய்திகளை நம்புவதில்லை.

  வாட்சப் கேட்கவே வேண்டாம். ஏகப்பட்ட ஒட்டல்கள் நறுக்கல்கள் பழைய வீடியோக்கள் செய்திகளைச் செய்து புதிது போல் சுற்ற விடுவது!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, ஆமாம், இப்போதைய புதிய வைரஸைப் பற்றியும் அதை விட அதிகமாக வதந்திகள் பரவுகின்றன. நம் மக்களுக்கு இதில் என்ன சந்தோஷம்னு தெரியலை. தொலைக்காட்சிச் சானல்களின் செய்தியாளர்களைப் பற்றி ஒண்ணுமே சொல்லவேண்டாம். என்ன பேசறாங்க. இப்போ வந்து! பார்த்தீங்கன்னா என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையிலே, "இப்போ வந்து" "பார்த்தீங்கன்னா" தி.நகரிலே "பார்த்தீங்கன்னா" "இப்போ வந்து" மழை பெய்திருக்கக்கூடிய நிலைமை! என்று சந்தேகமாச் சொல்லுவாங்க. மழை பெய்து கொண்டிருக்கிறது என்றோ மழை பெய்தது என்றோ சொல்லுவதில்லை.

   Delete
 8. இந்தக் கல்யாணத்தை நீங்கள் வீடியோவில் பார்த்ததே நல்லதாயிற்று கீதாக்கா.

  சென்னையில் தண்ணீர் வடியும் வசதி சுத்தமாக இல்லை. இதைப் பற்றி நிறைய சொல்லலாம். கழிவு நீர் வேறு கலக்கிறது. அபாயம். நல்ல காலம் நீங்கள் மீண்டும் தண்ணீரில் மாட்டிக் கொள்ளாமல் இருந்தீர்களே. அதுவே நல்லதாயிற்று.

  அப்போவே இப்படி ஆகியிருக்கு பாருங்க. பின்னோக்கிப் போன ரயில் முன்னோக்கி எப்போது சென்றது? ரொம்பவே கஷ்டம்தான். அப்போது தொலை பேசி கையில் கிடையாதே.

  தொடர்கிறென் கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், தி/கீதா! முக்கியமாக விழுப்புரம், செங்கல்பட்டுப் பகுதியிலும் மதுராந்தகத்திலும் தண்ணீரைப் பார்த்ததாலேயே பயணத்தை நிறுத்தினோம். எப்படியோ பல ஆண்டுகளாகக்காத்திருந்த கல்யாணம் ஒருவழியாக நல்லபடி நடந்து முடிந்தது.

   Delete
 9. வணக்கம் சகோதரி

  உங்களின் பயண அனுபவங்கள் மழை வெள்ளத்தில் என படிக்கும் போதே கலவர மூட்டுகின்றன. சின்னக் குழந்தையை வைத்துக் கொண்டு அவ்வளவு தூரம் அதுவும் தண்டவாளம் மூழ்கிய அந்த வெள்ளத்தில் அதன் பின் எப்படி பயணித்தீர்களோ? பின்னோக்கிச் வந்த ரயில் வேறு பாதையில் திருப்பி விடுவதற்காகவா? ஊருக்குச் சென்ற மறுநாளுக்கு அடுத்த நாளே வேலையில் வேறு ஜாயின் செய்ய வேண்டுமே? அந்த நேரத்தில் ஒரே டென்ஷனாக இருந்திருக்கும் உங்களுக்கு. இது போன்ற சில பயண அனுபவங்கள் நமக்கு மறக்க முடியாதவையாக இருந்து விடுகிறது.உங்கள் ரயில் பயண சிரமங்களை விவரித்த போது என்னுள்ளும் நான் பட்ட சிரமமான ரயில் பயணம் அனுபவம் ஒன்று "இருக்கிறேன்" என எட்டிப் பார்த்தது.

  இப்போது நீங்கள் திருமணத்தை ஆன்லைனில் பார்த்ததுதான் செளகரியம். இந்த மழை வெள்ளம் வேறு, புதிய உருமாறி கொரோனா வேறு என மக்களை பயமுறுத்தும் போது எங்கும் வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது.

  வதந்திகளை ஈசியாக பரப்புவதில், உண்மை நிலவரம் தெரிய வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. எல்லா தொலைக்காட்சி நியூஸ் சானல்களிலும் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகள்தாம். ஆனால். இன்னமும் சென்னையில் ஆங்காங்கே வெள்ளம் வடிந்த பாடில்லை என சகோதரர் ஸ்ரீராம் சொல்லியுள்ளாரே.. கொஞ்சம் வெய்யில் முகம் நிரந்தரமாக கண்டதும் வெள்ளம் வடிந்து விடும். ஆனால், அதுவரை மக்களுக்கு சிரமங்கள்தான்.

  என்னவோ இந்த தடவை எங்குமே மழை அதிகந்தான். இல்லாவிட்டால் ஒரே வறட்சி. மக்களின் மனங்கள் சுலபமாக மாறுவது போல் இயற்கையும் மனம் மாறி இப்படி போக்கு காட்டுகிறது. இன்னும் நான்கு மாதங்களில் தண்ணீர் சிக்கனம் குறித்து ஆங்காங்கே செய்திகள் வரும். ஒரு சொட்டேனும் மழையை எதிர்பார்க்கும் வெய்யிலின் உக்கிரம் அவைகளை நா புரட்டி தடம் மாற்றி பேச வைக்கும். வெய்யிலும் மழையும் எந்நாளும் நிரந்தரந்தானே..

  பிறகு எப்படி சென்னைக்கு பத்திரமாக சென்று அடைந்தவர்கள்.? உங்கள் பதிவை தொடர்கிறேன். மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. பத்திரமாக சென்று அடைந்தீர்கள் என வந்திருக்க வேண்டும். தட்டச்சு பிழை. தம்பி பையரின் கல்யாண பதிவை குறித்து இன்னொரு கருத்துரை போட்டிருந்தேனே காணவில்லையே..

   Delete
  2. வாங்க கமலா. சின்னக் குழந்தையை வைத்துக்கொண்டுப் பத்துப் பேருக்குச் சமைத்துப் போட்ட அனுபவங்கள் எல்லாம் இந்த ரயில் பயணத்தை மிஞ்சிவிடும். அதுக்காக யாரும் வந்து உதவியும் செய்ய மாட்டார்கள். :)))) அநேகமான ரயில் பயணங்கள் எங்களுக்குத் திகில் ஊட்டும் அனுபவமாகவே வாய்த்திருக்கிறது. மழை இப்போது குறைந்திருந்தாலும் நான்காம் தேதிக்குப் பின்னர் அதிகரிக்கும் என்கிறார்கள். பார்ப்போம். உங்கள் கருத்துரை எனக்கு வந்தவற்றை வெளியிட்டேன். ஸ்பாமில் ஏதும் இல்லை. :))))

   Delete
 10. ஆஹா, இப்படி பதிலை நிப்பாட்டி சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்களே மாமி, என்னாச்சு அப்புறம்? Train ஏதும் ரிப்பேரா?

  உண்மை தான் மாமி, செய்தி சொல்லும் நோக்கை விட இப்பெல்லாம் பரபரப்பு கிளப்பி குளிர் காயும் மனப்போக்கு தான் நிறைய பேர்கிட்ட இருக்கு, கொடுமை தான் போங்க 

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏடிஎம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 11. மழையும் வெள்ளமும் தொடர்கதைதான் போல.....
  சிரமமான அனுபவங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஆனால் அந்த முறை தான் மழை, வெள்ளத்தின் முதல் ரயில் பயண அனுபவம்.

   Delete
 12. மழை அனுபவம் எனக்கும் நிறைய இருக்கிறது.

  இந்த கல்யாணம் வீட்டில் இருந்தே பார்த்தது நல்லது. தம்பி வீட்டு கல்யாணத்திற்கு போய் வந்த அனுபவம் அடுத்த திருமணத்திற்கு போக அச்சம் கொடுத்து இருக்கும்.
  29. 30 நிறைய மழை இருக்கும் என்று வேறு சொன்னதால் போகாமல் இருந்து இருப்பீர்கள்.


  என் மாமா பேரனுக்கு போன மாதம் 10ம் தேதி திருமணம் உறுதி செய்யும் விழா வைத்து இருந்தார்கள் மழை காரணத்தால் பின்னர் 29 ல் வைத்தார்கள், அப்போதும் மழை அறிவுப்பு அதனால் நிறைய பேர் சென்னை செல்ல ரயில் டிக்கட் எடுத்து இருந்ததை ரத்து செய்தார்கள். ஆனால் காலை மட்டும் சில இடங்களில் மழை தூற்றல் போட்டு விட்டு போய் விட்டது. விழா சிறப்பாக நடந்து விட்டது இரை அருளால். நாங்கள் நேரடி ஓளிபரப்பில் பார்த்தோம்(ஜூம் மீட்டில்)

  உங்கள் பழைய மழை அனுபவம் படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. கை குழந்தையை வைத்து கொண்டு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் முன்பு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அதோடு கல்யாணத்துக்கு முதல்நாளே போகணும், தங்குமிடம் பிரச்னை, மடிப்பாக்கம் சம்பந்தி வீட்டில் போய்த் தங்கத் திட்டம். ஆனால் மழையினால் அங்கேயும் பாதிப்பு வரலாம். எல்லாம் யோசனைகள்! பின்னர் வேண்டாம்னு விட்டுட்டோம். பலரும் கல்யாணத்தில் கலந்துக்க முடியாமல் போய்விட்டது. அனுபவங்கள் அதிகமாகவே இருக்கின்றன. :))))

   Delete
 13. உங்கள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது போல ரயிலும் பின்னோக்கிச் சென்றதோடு நிறுத்தியிருக்கிறீர்கள்.
  முந்தைய பதிவை அரைகுறையாக முடித்து விடாடீர்கள். எழுத பெரிதாக எதுவும் இல்லையென்றாலும் திருமணம் நல்லபடியாக முடிந்தது, நாங்களும் செளகரியமாக திருச்சி வந்து சேர்ந்தோம் என்று அந்த பதிவிலேயே எழுதியிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, அரைகுறையாக எல்லாம் முடிக்கலை. நாங்கள் ஓட்டலுக்கு வந்து சேர்ந்ததோடு முடிச்சேன். அந்த நிகழ்வின் முடிவு அதாகத் தானே இருக்க முடியும். அதன் பின்னர் எழுத எதுவும் முக்கியமாக இல்லை என்பதால் எழுதலை.

   Delete