எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, November 04, 2021

தீபாவளி வாழ்த்துகள்!

இந்த வருஷ தீபாவளிக் கொண்டாட்டத்தின் படங்கள். தீபாவளிக்கெல்லாம் எழுந்து நடமாடுவேன் என்றே எதிர்பார்க்கலை. ஆனால் எதிர்பாராவிதமாக நேற்றுக் கொஞ்சம் பக்ஷணம் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பக்ஷணங்கள் எல்லாமும் காடரிங்கில் செய்து தரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாச்சு. திங்கள் வரை அவங்க எப்போத் தருவோம்னு சொல்லலை என்பதால் நான் தொலைபேசியில் கேட்டேன். செவ்வாய் மாலைக்குள் கொடுத்துடுவோம் என்றார்கள். ஆனால் செவ்வாயன்றும் வரலை. புதன் அன்று கிடைச்சுடும் என நினைச்சால் மத்தியானம் ஒரு மணி வரை எந்தத் தகவலும் இல்லை. சுவாமிக்கு வைக்க பக்ஷணங்கள் வேண்டுமே. மற்ற வெற்றிலை, பாக்கு, பழங்கள், பூ எல்லாம் வாங்கியாச்சு. துணிமணிகளும் தயார் நிலையில். பக்ஷணம் முக்கியம் இல்லையோ?
அப்புறமா யோசித்து வீட்டில் இருந்த அரிசி மாவில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் வறுத்த உளுத்தமாவைச் சேர்த்து வெள்ளைத் தேன்குழலாகப் பத்துப் பனிரண்டு (கரெக்டாப் பதினைந்து) பண்ணிவிட்டுப் பின்னர் சட்னிக்கு வாங்கி வைச்சிருந்த பொட்டுக்கடலையைச் சிவக்க வறுத்துச் சர்க்கரை வேண்டாம்னு நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய், முந்திரிப்பருப்புப் போட்டு நெய்யைச் சுட வைத்து ஊற்றிக் கலந்து சுமார் 20 லாடுகள் பண்ணி வைத்துவிட்டு மருந்து சாமான்களை வறுத்துப் பொடித்துக் கொண்டு தனியா/இஞ்சி அரைச்சுச் சாறை வடிகட்டிக் கொண்டு அதில் வெல்லம் சேர்த்துக் கொதித்த பின்னர் மருந்துப் பொடியைப் போட்டு மருந்தையும் கிளறி வைச்சேன்.

ராமர் மேல் அந்த வெளிச்சப் பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை.


அலுமினியம் ஃபாயில் பேப்பரில் இருப்பது காடரிங்கில் கொடுத்த முள்ளுத் தேன்குழல், ஓட்டு பக்கோடா/(ரிப்பன்), மிக்சர். டப்பாவில் நான் செய்த சாதாரணத் தேன்குழல். பக்கத்து டப்பாவில் பொட்டுக்கடலை மாவு உருண்டைகள். அதன் பக்கம் காய்ச்சிய எண்ணெய், சூடான வெந்நீரில் கரைத்த சீயக்காய் (மீரா), மஞ்சள் பொடி மருந்து, வெற்றிலை பாக்கு, பழங்கள் காடரிங்கில் கொடுத்த உருண்டைகள், மைசூர்ப்பாகு முதலியன.

பக்ஷணங்களுக்கு நடுவே அவரோட வேட்டிகள், டீ ஷர்ட்டுகள்/ பக்கத்தில் என்னோட புடைவை. ஒன்று பருத்திச் சேலை. சிவப்பிலும் நீலத்திலும் கட்டம் போட்டது. இன்னொன்று மஞ்சள் பொடி கலர்/மாம்பழக்கலர்/ மெஜந்தா பார்டர்/தலைப்பு உள்ள சில்க் காட்டன்/ஆந்திரா கைத்தறிப்புடைவை!. ஜேகே அண்ணா கண்களுக்கு என்ன நிறமாய்த் தெரியப் போறதோ தெரியலை. சில்க் காட்டன் புடைவையைக் கட்டிக் கொண்டேன் சிறிது நேரம். 


காடரிங்காரர்கள் பக்ஷணங்கள் விநியோகம் செய்யப்படுவதாயும் எங்க வீட்டிற்கு  மாலை ஏழு மணிக்கு மேல் வரும் எனத் தகவல் சொன்னார்கள். ஆர்டர் நிறைய என்பதால் காலை ஏழு மணியில் இருந்து கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்கள். மதியம் ஒரு மணி நேரம் வீட்டுக்குப் போய் மத்தியான உணவு சாப்பிட்டுக்கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடி ஆரம்பிச்சுக் கொடுத்திருக்காங்க. எட்டு மணி போல் ஒரு வழியாக வந்து சேர்ந்தது. அதிகம் பக்ஷணம் சொல்லவில்லை. எல்லாமே கால் கிலோ தான். 

காலை அலாரம் வைக்காமலேயே 3 மணிக்கு விழிப்பு வந்துவிட்டது. உடனே எழுந்தால் ரங்க்ஸ் திட்டுவார் எனக் கொஞ்ச நேரம் பேசாமல் படுத்திருந்தேன். இருப்புக் கொள்ளவில்லை. மூன்றரைக்கு முன்னால் எழுந்து கொண்டு ஒவ்வொரு வேலையாக முடித்துக் கொண்டு குளித்துப்புடைவை கட்டிக்கொள்கையில் மணி ஆறுக்கும் மேல் ஆகிவிட்டது. ரங்க்ஸ் காலை எண்ணெய் தேய்த்துக் கொண்டால் திரும்பத் தர்ப்பணம் பண்ணுகையில் மறுபடி குளிக்க வேண்டும் என்பதால் தீபாவளியும்/அமாவாசையும் சேர்ந்து வந்தால் தாமதமாகவே குளிப்பார்.  சிறிது நேரம் புதுப்புடைவையில் இருந்துவிட்டுப் பின்னர் உடை மாற்றிக் கொண்டு சமையல் வேலைகளைத் தொடங்கினேன். அம்பத்தூர் எனில் குறைந்த பட்சமாக ஐந்து வீடுகளாவது போகும்படி இருக்கும். இங்கே அப்படி எல்லாம் இல்லை. 

 புடைவையைக் கட்டிக் கொண்டு வெளியே எங்கும் போகாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பதும் ஒரு சாகசம் தான் எனத் தோன்றி விட்டது! :))))) 


அனைவருக்கும் மனம்நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்.

26 comments:

 1. இனிய பட்சணங்களுடன் சிறப்பான தீபாவளி .
  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் .
  .

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   Delete
 2. மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
  நீங்கள் செய்த பலகாரங்களை சரியாக பார்க்க முடியவில்லை. சற்று பெரிதாய் புகைப்படங்கள் எடுத்திருக்கலாமே?

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ! பெரிதாய்ப் படம் எடுக்கணுமா? புரியலை. இதையே பெரிசாக்கிப் பார்க்கலாமே! நான் அவ்வளவாக் காமிராவைப் பயன்படுத்தியது இல்லை. டிஜிடல் காமிராவில் கொஞ்சம் எடுப்பேன். அதுவே வீடியோ என்றால் அவர் தான் எடுப்பார். இப்போ மொபைல் வழி எடுக்கும்போது கொஞ்சம் கை நடுக்கம்/ஆட்டம் எல்லாம் இருக்கு! அவருக்கு மொபைலில் எடுக்கவே வரலை. :)

   Delete
 3. நான் இப்போதெல்லாம் புடவை கலர் பார்ப்பதில்லை. புடவை கட்டுபவரின் மனங்களை பார்க்கிறேன். இன்றைய பதிவு 2021 தீபாவளி-ஒரு டைரி குறிப்பு என்று கூறலாம். டீ ஷர்ட் எப்போது பிரண்ட் ஓபன் சட்டையாக மாறியது. படத்தில்  பாருங்கள்.

   Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா. ஏமாத்திட்டீங்களே! புடைவை கலரைப் பார்ப்பதில்லைனு சொல்லி என் மனதைச் சுக்கு நூறாக்கிட்டீங்க! :)))))) அது டீ ஷர்ட் தான். அம்பேரிக்காவில் வாங்கியவை. இப்போல்லாம் அவர் ஷர்ட்டே துணி வாங்கித் தைக்க வேண்டி இருக்குனு வாங்குவதே இல்லை. ரெடிமேடில் வாங்கினால் காதியில் வாங்குவார். பல வருஷங்களாக டீ ஷர்ட் தான். அவரோட எல்லா டீ ஷர்டும் முன்பக்கம் திறப்புடன் பொத்தான் வைத்திருக்கும். க்ளோஸ் டீ ஷர்ட் வாங்கிக்கறதே இலை.

   Delete
 4. அன்பின் கீதா,
  இனிய வாழ்த்துகள். உனள் கையால் தேங்குழல் வாங்கிக் கொள்ள பகவானுக்கு ஆசை.
  இங்கேயும் மைசூர் பாகும் தேங்குழலும் தான்.
  இனிமேல்தான் மற்றவர்கள் ரெடியாகணும். அவரவருக்கு வேலையும்
  பள்ளியும் இருக்கிறதே.

  எப்பொழுதும் போல் சன்னிதி அழகு. மஞ்சள் வண்ணப் புடவை எடுப்பாகத் தெரிகிறது.
  வெற்றிலை பாக்குமஞ்சள் என்று சூப்பர்.
  அமாவாசையும் தீபாவளியும் சேர்ந்து வந்தால்
  கொஞ்சம் சங்கடம். நான் பிம்மாலையே குளித்து
  என் புடவையைக் கட்டிக் கொண்டு
  பூஜை ஏற்பாட்டில் இறங்கிவிட்டேன்.
  எல்லோரும் பத்திரமாக நோய் நொடியின்றி
  இருக்கவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. காடரிங்கில் இருந்து வருது வருதுனு காத்திருந்து கடைசியில் கொஞ்சம் பயமாகி விட்டது. அதான் எதுக்கும் இருக்கட்டும்னு கொஞ்சம்னா கொஞ்சம் போல் பண்ணினேன். இந்த மஞ்சளில் மைசூர் சில்க் கட்டிக்கொண்டிருக்கேன். புதுசாக் கட்டிக்காத கலர் வாங்கணும்னா அது என்னமோ அமையவே மாட்டேன் என்கிறது. இதான் நம்ம ராசினு வைச்சுட்டேன். :)))))

   Delete
  2. அன்பின் கீதாமா,
   எனக்கு எத்தனை வண்ணம் பார்த்தாலும் அரக்கும் பச்சையும் தான் அமையும்:)

   பழகி விட்டது.

   Delete
  3. ஆமாம், என் அப்பா எடுத்தால் அரக்குத் தான் எடுப்பார். ரங்க்ஸ் பச்சை, பிள்ளை மஞ்சள்! தம்பி மனைவி அவள் ஏற்கெனவே வைச்சுக் கொடுத்த புடைவையின் டூப்ளிகேட்டாக எடுப்பாள். வாங்கிக் கட்டிப்பா. எத்தனை தரம் சொன்னாலும் கேட்பதில்லை! :(

   Delete
 5. Glareக்கு 'வெளிச்சப் பிரதி' நல்ல மொழியாக்கம்.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க "பசி" பரமசிவம், மொழியாக்கத்தின் அறிமுகத்திற்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

   Delete
 6. தீபாவளி நல் வாழ்த்துக்கள். இறைவன் அருளால் நல்லபடியாக தீபாவளி சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி.
  தேன்குழல், பொட்டுகடலை உருண்டை செய்து வழிபட்டது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி வாழ்த்துகளுக்கு நன்றி. வீட்டில் எண்ணெய்ச் சட்டி வைக்கணும்னு என் அம்மா சொல்லுவா! அதனால் அப்படி நேர்ந்தது போலும்! எப்படியோ தீபாவளி நல்லபடியாகக் கழிந்தது.

   Delete
 7. கீதாக்கா தீபாவளி வாழ்த்துகள்.

  அட! நான் இங்கு உறவினர் வீட்டில் பொட்டுக் கடலை ஸ்வீட் அடுப்பில் வைக்காமல் செய்வது செய்துகொடுத்தேன்.

  எப்படியோ கொஞ்சமேனும் செய்து தீபாவளி நன்றாக நடந்ததே சூப்பர் கீதாக்கா. இதுவே ஏதேஷ்டம்! (என் பாட்டி சொல்லும் சொல்!!!!!)

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா. தீபாவளி நன்றாகவே நடந்தது. இறைவனுக்கு நன்றி.

   Delete
 8. எங்கள் வீட்டிலும் பாஸ் மாலாடு செய்திருக்கிறார்.  அற்புதமாக வந்திருக்கிறது.  அப்புறம் சாதாரண ஸ்டாண்டர்டில் ரவா லாடு, கொஞ்சம் கடுமையான முள்ளு முறுக்கு.  சற்றே கசப்பாக லேகியம்...!  அடுத்தமுறையாவது மருமகளுடன் கொண்டாடப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், மதுரை, திருநெல்வேலிக்காரங்களுக்கு மாலாடு முக்கியம். எல்லாத்துக்கும் அதான் முதல்லே வரும். ஆகவே பாஸ் பண்ணுவதில் வியப்பில்லை. அது ஏன் முறுக்குக் கடினமாகி விட்டது? லேகியம் ஏன் கசப்பு! நான் திப்பிலியைக் குறைத்தேன். மருந்து தித்திப்பாக இருக்கு!:)))))

   Delete
 9. ட்ரெஸ் கலர்லாம் சொல்லி இருக்கிறீர்கள்?  எங்கு போய் எடுத்தீர்கள்?  அலைய முடிந்ததா?  படத்தினுள் கலர்லாம் சரியாய்த் தெரியவில்லை.  என் கண் கோளாறு?!

  ReplyDelete
  Replies
  1. புடைவையைக் கவரில் இருந்து எடுத்து வெளியே வைக்கலை ஶ்ரீராம். அலையத்தான் முடியாதே! உட்கார்ந்த இடத்தில் இருந்தே எடுத்தேன். தெரிந்த ஒரு இளைஞர் புடைவை, துணிகள் வியாபாரம் செய்கிறார். நேரடியாக மொத்தமாக அடக்க விலைக்குள் வாங்கி 100/200 லாபம் வைத்துவிற்கிறார். இங்கே கீழே கார் பார்க்கில் போன வருஷம் ஸ்டால் போட்டிருந்தார். அப்போவே பார்த்தேன் புடைவைகள் தரமானதாக இருப்பதை. அவர் வேறே வீட்டுக்கே கொண்டு வந்தும்கொடுப்பேன் என்று சொல்லிக்கார்ட் எல்லாம் கொடுத்திருந்தார். அவர் மூலம் தான் பருத்திச் சேலைகள் 2,3 ம் இந்த சில்க் காட்டன் சேலை ஒன்றும் வாங்கிக் கொண்டேன்.

   Delete
 10. இரண்டு முறை குளிப்பது கட்டாயம் என்றார்கள்.  அவரவர் சொல்வதைக் கேட்கும்போது செய்யாமல் விட்டால் மனதில் குறையாகிப் போகிறது.  எனவே இருமல், ஜுரம் பொருட்படுத்தாமல் இரண்டு முறை குளியல் நேற்று.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஶ்ரீராம். காலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டதோடு தர்ப்பணம் பண்ணக் கூடாதே! ஆகவே திரும்பக் குளிக்கணும். இரண்டு முறை தலையில் ஜலம் விட்டுக் கொண்டால் ஒத்துக்கொள்வதில்லை. ஆகவே ஒரே ஸ்நானம் தான்.

   Delete
 11. glare அடிக்காமல் படம் எடுக்க ஒரு 9 வாட் LED பல்பு போட்டு லாம்ப் shade போல் துணியையோ வெள்ளை tissue பேப்பரோ ஒட்டி படம் எடுத்து பாருங்கள். flash off இல் இருக்கவேண்டும்.

   Jayakumar

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா. மறு வரவுக்கு நன்றி. ஸ்வாமி அலமாரியில் எல் ஈ டி பல்ப் தான் போட்டிருக்காங்கனு நினைக்கிறேன். அதோடு நான் ஃப்ளாஷ் எல்லாம் உபயோகித்துப் படம் எடுப்பதும் இல்லை.

   Delete
 12. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. உங்களுக்கு என் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள். எ. பியில் ஒட்டு மொத்தமாக நம் குடும்பங்களுக்கு வாழ்த்துகள் கூறியிருந்தாலும், உங்கள் வீடு தேடி வந்து நான் தாமதமான வாழ்த்துகள் கூறுவதற்கு மன்னிக்கவும். இங்கு அன்பு உறவுகளின் வருகையால் அன்றைய தினம் பதிவுகளுக்கு அடுத்தடுத்து வந்து கருத்திட இயலவில்லை. இரண்டு தினங்களாக நேரம் வேலைகளுடன் சரியாக இருந்தது. கைப்பேசியை கையில் எடுத்து பார்க்க கூட முடியவில்லை.

  நீங்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஸ்வாமி படமும், துணிமணிகள், பட்சணங்களுடன் கூடிய படமும் அழகாக உள்ளது. அழகிய ராமரை நானும் மனதாற வணங்கி கொண்டேன். உங்களின் அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி. நான் தாமதமாக வந்து கருத்துரை தருவதற்குள் மற்றொரு புதுப்பதிவும் தந்துள்ளீர்கள். அதையும் படித்து விட்டு பின்னர் வருகிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 13. உடம்பு முடிகிறதோ இல்லையா, அதை பொருட்படுத்தாமல் பட்சணங்கள் செய்திருக்கும் உங்கள் வில் பவருக்கு ஒரு சல்யூட்! புது புடவை உடுத்திக் கொண்டு செல்ஃபி எடுத்து போட்டிருக்கலாம்.

  ReplyDelete