எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 11, 2022

எத்தனை பேர் அறிவார்கள்?

e shram card 

https://eshram.gov.in/  அரசின் வலைத்தளம்

மேலே உள்ள சுட்டிக்குச் சென்று பார்க்கவும். ஈ ஷ்ரம் கார்ட் எனப்படும் கார்ட் ஒன்றின் நகல் பார்க்கலாம். இது மத்திய அரசு கீழ் நடுத்தர/அல்லது வேலை செய்யும் மக்களுக்குச் செய்து தந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம்.  e-Shram என்னும் போர்ட்டலுக்குச் சென்று அங்கே பதிவு செய்யச் சொல்லி இருக்கும் விஷயங்களையும் தற்சமயம் பார்க்கும் வேலையையும், அதன் உத்தேசமான மாதாந்திர வருமானம், ஆதார் கார்ட், வங்கிக் கணக்கு எண் போன்றவற்றைப் பதிய வேண்டும். இவை எல்லாவற்றையும் முறையாகப் பதிந்து எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு வாங்கிக் கொடுத்திருக்கேன். இன்னமும் அரசு மூலம் கார்ட் வந்து சேரவில்லை. ஆகவே கார்ட் இணையத்தில் வந்ததைப் பிரின்ட் அவுட் எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்திருக்கேன். சமீபத்தில் அவள் கணவரின் உடல்நலக் குறைவைப் பார்த்து விட்டும், அப்போப் பணத்துக்கு அவள் திண்டாடியதைப் பார்த்தும் இதைச் செய்து கொடுத்திருக்கேன். ஆனால் அவள் உறவினர் உதவியுடனும் மற்றும் நாங்களெல்லாம் கொடுத்த சிறு தொகை மூலமும் அதிகம் சிரமப்படவில்லை. 

இந்தக் கார்டை எப்படிப்பட்ட மக்கள் வாங்கலாம்?  எல்லோரும் வறுமைக்கோட்டில் இருக்கும் மக்களே! வீடு கட்டும் கொத்தனார், தையல்காரர், வீட்டு வேலை செய்யும் பெண்கள், சிறு வியாபாரிகள், எலக்ட்ரீஷியன், பெயின்டர், ப்ளம்பர் போன்ற சிறு வேலைகள் செய்து அன்றாடம் சம்பாதிக்கும் மக்கள் அனைவரும் இங்கே சென்று பதிந்து கொண்டால் அவர்கள் பெயரில் மேற்கண்ட கார்ட் கிடைக்கும். இந்தக் கார்டை வைத்து அவர்கள் தையல் மிஷின், சைகிள், கார் ரிப்பேர் செய்பவர் எனில் அதற்கான உபகரணங்கள், பெயின்டர் எனில் அதற்குத் தேவையானவை, எலக்ட்ரீஷியன் எனில் அதற்குத் தேவையானவை என வாங்கிக் கொள்ளலாம். அதைத் தவிரவும் ஐந்து லக்ஷம் ரூபாய்ச் செலவு வரைக்கும் வைத்தியப் பொறுப்புக்கும் மத்திய அரசே ஏற்கும். பிள்ளைகளின் படிப்புச் செலவு, மேற்படிப்புச் செலவு போன்றவற்றிற்கும் உதவி செய்யும் அரசு.  இரண்டு லக்ஷம் ரூபாய் வரைக்கும் மருத்துவ இன்ஷூரன்ஸும் கிடைக்கும். இது அனைவருக்கும் போய்ச் சேர்ந்தால் நல்லது என்னும் எண்ணத்தில் பதிவு போட்டிருக்கேன். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கோ அல்லது யாரானும் தெரிந்தவர்களுக்கோ இந்த வலைத்தளம் சென்று பதிவு செய்து கொள்ள உதவி செய்யலாம்.

.தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் ரேஷன் கார்டின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்வது மத்திய அரசே. மத்திய அரசின் உணவுத் தொகுப்பில் இருந்து எல்லா மாநிலங்களுக்கும் அவரவர் மக்கள் தொகை/தேவையின் படி விநியோகிக்கப்படும். இதில் எப்போவானும் அளவு குறைந்தால் "மத்திய அரசு வஞ்சித்துவிட்டது!" எனக் கூப்பாடு போடும் மாநில அரசு இந்தத் தொகுப்பு முழுமையுமே மத்திய அரசால் கொடுக்கப் படுகிறது என்பதைச் சொல்லவே சொல்லாது. எப்போவானும் ஏதேனும் பருப்பு, எண்ணெய், அரிசி எப்போதும் கொடுப்பதில் இருந்து கொஞ்சம் குறைந்தால் (இருப்புக் காரணமாக) அப்போ மத்திய அரசை, " தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றி விட்டது" என்பார்கள். அதே போல் 108 ஆம்புலன்ஸும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே மத்திய அரசால் கொண்டுவரப் பட்டு மாநிலங்களில் மக்களுக்குச் சேவை புரிகின்றன. மற்ற மாநிலங்களில் ஆம்புலன்ஸிலேயே இதைப் பெரிதாக எழுதி இருப்பார்கள். ஆனால் இங்கே எழுதவில்லை.  ஆகவே எல்லோரும் நினைப்பது இது மாநில அரசின் நடவடிக்கை என்றே. 

100 நாள் வேலைத் திட்டமும் காங்கிரஸ் அரசின் ஆட்சிக் காலத்திலேயே கொண்டு வரப் பட்டது. ஆனால் இதில் நிறைய ஊழல்கள் என்பதோடு மக்களைச் சோம்பேறியும் ஆக்கி விட்டது.  இந்த மக்களை வைத்துச் சாலை போடுதல், பாலங்கள் கட்டுதல் போன்ற வேலைகளை முடித்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலான மக்கள் 100 நாட்கள் கணக்குக் காட்டிவிட்டு அதற்கான ரேஷனும், பணமும் பெற்றுக் கொண்டு போய்விடுகின்றனர். பெரும்பாலும் இதிலும் கமிஷன்.  ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டமும் இப்போதைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுத் தமிழக மக்கள் பெரும்பாலோர் பயன் பெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.  அதே போல் இப்போதைய அரசு சிறு தொழிலதிபர்களுக்கான முத்ரா திட்டமும் பலர் பயன் பெறும்படி உள்ளது. வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஓட்டுநர்கள் இதன் மூலம் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டலாம். குறைந்த வட்டி விகிதத்திலேயே பணம் பிடிக்கப்படும். 

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளித் தொழிலில் மேம்படவும் உள்ளாடைகள் உற்பத்தி சிறக்கவும் வேண்டி இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் தங்குமிடம் மற்றும் ஸ்டைபன்டோடு பயிற்சி நிலையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி இருந்தாலும் அதில் பெரும்பாலும் வடநாட்டாரே பயிற்சி பெறுகின்றனர். தமிழக மக்கள் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. சிறு தொழில் போன்றவற்றைத் துவக்கவும் தமிழக மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று பெரும்பாலான கட்டுமானத் தொழிலில் வட இந்தியர்களே வேலை செய்கின்றனர். ஏனெனில் குறைந்த சம்பளம் என்பதோடு கடுமையாகவும் உழைக்கின்றனர்.  நம் மக்கள் அதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நூறுநாள் வேலைத்திட்டத்தையே எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு கிராம மக்களும் அவங்க அவங்க கிராமத்தின் சாலைகளையும், பாலங்களையும் நீர்வழிப்பாதையையும் செம்மைப் படுத்திக் கொண்டாலே போதும். மழை நீரும் வடியும். வெள்ளம் தங்காது. கிராமங்களும் மேம்படும். ஆனால் இதெல்லாம் சொன்னால் தப்பு! விரோதம்! சங்கிகள் எனப் பட்டம் கொடுப்பாங்க. மொத்தத்தில் தமிழக நிலைமை மிக மோசமாக இருந்தாலும் ஆங்காங்கே கிடைக்கும் இலவசங்கள் மக்கள் மனதை எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது. 

இப்போ இந்தப் பதிவுக்கு வரும் கருத்துகளும் நான் என்னமோ மோதிக்கு அடி பணிந்து நடப்பதாயும், கட்சி சார்புள்ளவள் என்றும் வரும்.  அது என்னமோ தெரியலை, மற்றப் பிரதமர்களை விட அதிகம் கவனிக்கப்படுவதும், குற்றம் சொல்லுவதும் மோதியைத்தான்.  என்ன வேணா சொல்லட்டுமே!  உண்மை என்றும் உண்மைதானே! விவசாயிகள் பெரும்பாலும் பயன் அடைவதும் உண்மை.  நேரடியாக அவங்க வங்கிக் கணக்கிலேயே பணம் செலுத்தப்படுகிறது. அப்படியும் ஆங்காங்கே கஷ்டப்படுகிறவங்க இருக்கத் தான் செய்யறாங்க. நாம் தான் அனைவருக்கும் இந்த விஷயங்களெல்லாம் போய்ச் சேரும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

25 comments:

  1. இந்த விஷயங்கள் அத்ரி இதுவரை நான் அறிந்ததில்லை.  இப்படி ஒன்று இருபப்தை இப்போதுதான் அறிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இவை மிகக் குறைவே ஶ்ரீராம். இன்னும் எத்தனையோ நடந்து வருகின்றன. விவசாயிகளுக்கான திட்டத்தின் என் தம்பி (பெரியம்மா பிள்ளை) குன்னியூரில் நிலம் வைத்து விவசாயம் செய்கிறார். அவர் நேரடியாகப் பலன்களைப் பெறுவதோடு அவற்றைப் பற்றி விளக்கமும் சொல்லுகிறார். ஆனால் இங்கே அவற்றைப் பற்றிச் சொல்லுவதில்லை. ம.அரசும் விளம்பரம் செய்வதில்லை.

      Delete
  2. மிக நல்ல செய்திகள் அன்பின் கீதாமா.
    இலவசத்தையே நம்பி கனவுலகில் நிஜத்தைக் கோட்டை விடுபவர்கள்.
    ப்ன்னால் கஷ்டப்படுகிறவர்களைப்
    பார்க்கிறோம்.
    எங்கள் வீட்டு ராணி ,இந்த விஷயத்தில் மஹா ஜரூராக
    இருப்பாள்.

    மிக அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.
    பலருக்கும் போய் சேர்ந்தால் நன்மை. மிக நன்றி மா.

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு இந்தக் கார்டு வாங்கிக் கொடுக்க உதவி செய்திருக்கேன் ரேவதி. பலரும் இப்படி அவங்களுக்குத் தெரிஞ்ச சிறு வேலை செய்பவர்கள், தொழிலாளர்களுக்கு இதைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி உதவி செய்யலாம். இதுவரை 28 லக்ஷம் சிறு தொழிலாளர்கள் இதன் மூலம் பயன் அடைந்து வருவதாகப் புள்ளி விபரம் சொல்கிறது.

      Delete
  3. திரு. மோடி அவர்களைப் பற்றி வசை பாடி புழுதி வாரித் தூற்ற வில்லை என்றால் சிலருக்கு பொழுது போகாது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கொரோனா வந்ததற்கும் சரி, அதன் பின்னர் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளச் சொன்னதற்கும் சரி, மோதி தான் காரணம் எனக் கண்ணை மூடிக் கொண்டு சொல்கிறார்களே. இது உலக சுகாதார மையத்தின் கோரிக்கை என்பதையும் உலக நாடுகள் அனைத்துமே இதை நிறைவேற்றி வருவதையும் பற்றி யாருமே கவனிப்பதில்லை. அதோடு நம் நாட்டில் மட்டுமில்லாமல் கனடா நாட்டிலும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள எதிர்ப்பு/போராட்டம் செயபவர்கள் உண்டு. அதுவும் இங்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

      Delete
    2. ஹாஹாஹா கீதாக்கா அமெரிக்காவிலும் இருக்கிறார்கள்!!!! என் மகன் சொல்கிறான். அதனாலேயே மிச்சிகனில் ஜனுவரி முடியும் முன் எல்லோரும் பூஸ்டரும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ரூல் போட்டார்களாம். உலகம் முழுக்கவும் ஒவ்வொரு நாட்டிலும் ரூல் போட்டுத்தான் போட வைக்கிறார்கள்.

      கீதா

      Delete
  4. நானும் அந்த வலைத் தளத்தில் சென்று பார்க்கின்றேன்..

    பயனுள்ள தகவலைத் தந்திருக்கின்றீர்கள்..

    ReplyDelete
    Replies
    1. பதிவு முழுக்க முழுக்க இலவசம். பதிவு செய்த பின்னர் இம்மாதிரிக் கார்ட் இணையத்திலே கடைசியில் வரும். அதை டவுன்லோட் செய்து பிரின்ட் அவுட் எடுத்துக்கலாம். அரசாங்கமும் பதிவு செய்த ஒரு மாதத்துக்குள்ளாகக் கார்டை வீட்டு விலாசத்துக்கு அனுப்பி வைக்கும்.

      Delete
  5. Dear Geethamma, how are you? we are fine. This information is new and hope this is going to help the people in need. Here in our state, the ruling party and their members are ready to blame the central govt for anything and everything.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி, நல்லா இருக்கேன்/நல்லா இல்லை. கொஞ்சம் உடம்புப் படுத்தலும் இருமலும் அவ்வப்போது இருக்கு. அதனாலோ என்னமோ அசதி ஜாஸ்தியா இருக்கு.உங்க மாநிலம் எதுனு தெரியலை. ஆனால் இங்கேயும் எதுக்கெடுத்தாலும் மத்திய அரசையும், மோதியையும் தான் குறை கூறுகின்றனர்.

      Delete
  6. பயனுள்ள தகவல்கள் இதுவரை எனக்கு தெரியாது.

    நூறுநாள் வேலைகள் அர்த்தமற்றதாக இருக்கிறது அதை தாங்கள் சொல்லியுள்ளவைகளை செயல் படுத்தினால் நல்லதே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இந்த நூறுநாள் வேலைத்திட்டம் பற்றிப் பல முறை சொல்லியாச்சு. ஆனால் அரசோ அதைக் காதில் போட்டுக்கொள்வதே இல்லை. நிதி என்னமோ மத்திய அரசிடம் இருந்து வந்தாலும் இவங்க தான்கையிலிருந்து கொடுப்பது போல் நடந்துக்கறாங்க.

      Delete
  7. நல்ல செய்தி வேண்டியவர்களுக்கு கிடைத்தால் நன்மை.

    ReplyDelete
  8. மோடியை பிடிக்காதவர்கள் மோடியை எதிர்க்லாம் எதிர் கட்சிகள் எதிர்க்கலாம் இது இயல்பு ஆனால் மோடி சார்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் ஏன் இந்த திட்டத்தை பொது மக்களுக்கு சேரும் படி எடுத்து சொல்லவில்லை. உங்களது அடுத்த பதிவில் பாஜகவில் இருக்கும் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் மற்ரவர்கள் இந்த திட்டத்தை மற்றவர்களுக்கு எப்படி எடுத்து சொல்லி இருக்கிறார்கள் என்று தொகுத்து சொன்னால் நன்றாக இருக்கும் நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழக இந்திய செய்திகள் பார்க்கின்ரேன்.. ஆனால் இப்படி ஒரு திட்டத்தை நான் முதன் முத்லில் உங்கள் தளத்தில்தான் பார்க்கின்றேன்..


    இந்த சிறப்பான திட்டத்தை பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களே மக்க்ளுக்கு சென்று சேரும்படி எடுத்து சொல்லவில்லை என்றால் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் எப்படி அதை பாராட்டுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழரே, எந்த பாஜக தலைவரோடும் கட்சி உறுப்பினர்களோடும் எனக்கு/எங்களுக்குப் பழக்கம் இல்லை. இந்தத் திட்டம் பற்றி அரைகுறையாகப் படிச்சிருந்த எனக்கு இது பற்றி மேல் அதிக விளக்கம் கொடுத்தது என் தம்பி (பெரியம்மா பிள்ளை) திரு வெங்கட்ராமன் அவர்கள். அவருக்குப் பரந்து பட்ட தொடர்புகள். அதோடு குன்னியூரில் சொந்த விவசாயம். ஆகவே விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றியும் விவரித்து எழுதினார்/2 ஆண்டுகள் முன்னர். அவருக்கே நிவாரணத் தொகை எல்லாம் கிடைத்திருப்பதையும் ஆதாரங்களோடு காட்டி இருக்கார். அவர் தான் தங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, கார் ஓட்டுநர் இன்னும் சிலருக்கு இதன் மூலம் பலன் பெறும்படி உதவி இருப்பதை எங்கள் குடும்ப வாட்சப் குழுவில் பகிர்ந்திருந்தார். அதன் மூலம் தான் எனக்குத் தெரியும். மற்றபடீ இதை விளம்பரம் செய்ய வேண்டியது அரசின் விளம்பரத் துறை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது ஊடகங்கள்.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நல்ல தெளிவான விபரங்களுடன் எளியவர்களுக்கு பயனுள்ள நல்ல செய்தி. இதுவரை இதைப்பற்றி ஏதும் அறிந்திலேன். தாங்கள் அறிந்து கொண்டதுடன் நிற்காமல், தங்கள் வீட்டில் பணிபுரியும் நபருக்கும் அத்திட்டத்தின் பலன்கள் பெற உதவியாய் இருந்து செயலாற்றி இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. இது அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே என் கருத்தும் கூட!

      Delete
  10. கீதாக்கா நல்ல விஷயம் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    இத்திட்டம் பற்றி சமீபத்தில்தான் நான் அறிந்தேன். நல்ல விஷயம். உடனே இங்கு எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டு வேலைகள் செய்யும் பெண்மணியிடம் சொல்லி பதியச் சொன்னேன். இத்தனைக்கும் நான் இதற்கு முன் இருந்த அந்தத் தெருவில் அடுத்த வீட்டில் இருக்கும் பெண்மணி, பிஜேபி கட்சியைச் சேர்ந்த பெண்மணி. நான் இருந்த வீட்டின் இப்புறம் தான் இந்த வீட்டு வேலை செய்யும் பெண்மணி. எனவெ கட்சியைச் சேர்ந்தவரிடம் கேட்கவும் செய்தேன் ஏன் நீங்கள் இதெல்லாம் மக்களுக்கு இங்கு எடுத்துச் சொல்லியிருக்கலாமே இதுதானே உங்கள் பணியாக இருக்க வேண்டும் என்றும் கேட்டேன். அவர் அசட்டுச் சிரிப்பு சிரித்தார். என்ன சொல்ல?

    இப்போது தன் வீட்டு மாடியில் சாதாரண நிலையில் இருக்கும் பெண்களுக்குத் தையல் கற்றுக் கொடுப்பதாக மெஷின் வாங்கிப் போட்டிருக்கிறார்...அவர் செய்வது எல்லாமே தன் விளம்பரத்திற்காக சுயலாபத்திற்காக என்று கண்கூடாகத் தெரியும்....என்ன சொல்ல? கட்சியின் பெயரில்!!! இவர்கள் இப்படிச் செய்வதால்தான் மக்களுக்கு அரசின் நல்ல விஷயங்கள் சென்று சேர்வதுமில்லை.....தவறாகவும் நினைக்க வைக்கிறது.

    அரசின் நல்ல விஷயங்கள் அது மத்திய அரசோ மாநில அரசோ அதைக் கட்சியில் இருப்பவர்கள் செய்ய வேண்டாமோ? என்னவோ போங்க....நல்ல விஷயங்கள் சென்று சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கட்சிக்காரங்களுக்கு இதற்கெல்லாம் எங்கே நேரம்? :( அவங்களை அவங்களே தாழ்த்திக்கிறாங்க! ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. இன்னும் பல திட்டங்கள் மக்களுக்கு அதுவும் சாமானிய மக்களுக்குப் பயன்படும் விதத்தில் இருக்கின்றன.

      Delete
  11. இதுவரை தெரியாத போர்ட்டல். திட்டம். நல்ல திட்டமாகத் தெரிகிறது. மிக்க நன்றி. இங்கு கஷ்டப்படுபவர்களுக்குச் சொல்கிறேன்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. செய்ங்க துளசிதரன். ஏழை, எளியவர்களுக்கு இப்படி ஒரு நல்ல திட்டம் இருப்பது கட்டாயமாய்த் தெரியணும்.

      Delete
  12. மிக மிக உபயோகமான செய்தி. இதை நீங்கள் மத்யமர் அரசியல் குழுவில் பகிர்ந்தால் பலருக்கும் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்ம், மத்யமரிலா? பார்க்கிறேன். அங்கே போட்டுக் கருத்துரைகள் நிறைய வந்துட்டால் எனக்கெல்லாம் நின்று பதில் சொல்ல முடியாது. அதிகம் மத்யமரில் பார்ப்பதோ/படிப்பதோ இல்லை. அவ்வப்போது டைம்லைனில் வருவனவற்றில் சுவாரசியமான பதிவுகளை மட்டும் பார்ப்பேன்.

      Delete