பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு.
வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2) 1.
14:
ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்
நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
ஆய்ப்பாடிக்கொண்டாட்டம்
மேற்கண்ட சுட்டியில் ஆய்ப்பாடியில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றிய விபரங்களை விரும்பியவர் படிக்கலாம்.
இன்று நம்ம கிச்சாப்பயல், கண்ணனின் பிறந்த நாள். ஒரே நாளைக்கு பக்ஷணங்கள் பண்ண முடியாதுனு நேத்திக்குக் கொஞ்சம் இன்னிக்குக் கொஞ்சம்னு பண்ண நினைச்சுக் காலையிலேயே அரிசியை ஊற வைச்சு எட்டு மணி அளவில் நீரை வடித்து அரிசியை உலர வைத்து இருந்தேன். ஆனால் நேத்திக்குனு பார்த்து இங்கே மின்வெட்டு! ஶ்ரீரங்கம் முழுவதும் மின்வெட்டாம். நல்லவேளையா நம்ம பகுதி வேறே இணைப்பு என்பதால் நம்ம வீட்டிலே மின்சாரம் இருந்தது. நாளை திங்களன்று மின் வெட்டாம் நம்ம பகுதிக்கு! அதை நாளைக்குப் பார்த்துக்கலாம்.
மின்வெட்டு இருந்த பகுதியில் தான் எல்லா மாவு அரைக்கும் மிஷின்களும் உள்ளன. அங்கே போனால் மிஷினே திறக்கலை! அங்கே இருந்து ரங்க்ஸ் தொலைபேசிக் கேட்டார், என்ன செய்யலாம்னு. ஊறிய அரிசியைத் தூக்கிண்டு எங்கே போறது! திரும்ப எடுத்துட்டு வாங்கனு சொல்லிட்டேன். சரி, இந்த வருஷம் கிச்சாப்பயல் தன்னோட வேலையைக் காட்டறான். நீ இங்கே வந்தப்புறமா ஒவ்வொரு வருஷமும் மிஷினில் மாவு அரைச்சுத் தானே பண்ணறே! இந்த வருஷம் பழைய மாதிரி மிக்சியில் அரைச்சே பண்ணுனு சொல்லாம சொல்லிட்டான். நல்லவேளையா நம்ம குடியிருப்பிலேயானும் மின்சாரம் இருக்கேனு நினைச்சேன். சமையலை முடிச்சுட்டு மிக்சியில் பெரிய ஜாரில் போட்டு அரிசியைப் பொடித்துச் சல்லடையில் சலிச்சு மாவாக்கி எடுத்தேன். ஒரு கிலோ அரிசியும் அரைச்சாச்சு. மிக்சி சூடு தணிய நடு நடுவே பத்து நிமிஷம் இடைவெளி! பின்னர் வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டு மதியம் ஒன்றரை மணிக்கு முன்னேயே ஆரம்பிச்சுட்டேன்.
முதல்லே முறுக்கு! பிள்ளையார் பிடிச்சு வைச்சுட்டு ஆரம்பிச்சேன். முறுக்கு சுத்திட்டுப் பின்னர் தட்டை பண்ணி முடிச்சுட்டு எல்லாத்தையும் சுத்தம் செய்துட்டு சமையலறையை விட்டு வரச்சே நாலரை ஆயிடுச்சு! மிச்சம் நாளைக்குப் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். இன்னிக்கு மத்தியானம் சரியா ஒன்றரைக்கு ஆரம்பிச்சேன். வெல்லச்சீடைக்குப் பாகு வைச்சு மாவில் கலந்து வைச்சுட்டு, வெண்ணைச் சீடை, சீப்பி, கோளோடை, உப்புச் சீடை போன்றவை முடிச்சுக் கொண்டு கடைசியில் வெல்லச் சீடையைப் போட்டேன். முதல்லே வெல்லச்சீடை கொஞ்சம் முகத்தைச் சுணுக்கிக் கொண்டாலும் பின்னர் வந்து விட்டது. அப்புறமாக் கோலத்தைப் போட்டு முடிச்சுட்டுத் திரும்ப வந்து பாயசத்தை முடிச்சேன். வடைக்கு அரைச்சு வைச்சேன். பின்னர் வடையை சூடாப் போட்டுக்கலாம்னு மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு கணினிக்கு வந்து உட்கார்ந்தேன். சாயங்காலமா ஏழு மணி போல் நிவேதனம் செய்யணும். படம் எடுத்துப் போடறேன்.

நம்ம வீட்டு ராமர் எல்லாத்தையும் பார்த்துட்டு என்னோட பிறந்த நாள் வந்தால் நீர் மோர், பானகம், வடைப்பருப்பு, பாயசம் தான்! வடை கூட எல்லோரும் பண்ணறதில்லை. இது என்ன அநியாயம்! னு நினைச்சுண்டு இருந்தார்.
கீழ்த்தட்டு உம்மாச்சிங்களும் பார்த்துண்டு இருக்காங்க! எங்களுக்கு எதுவும் இல்லையானு!
கிச்சாப்பயலுக்குப் பசும்பால், பசு வெண்ணெய், பசுந்தயிர், அவல், வெல்லம், முறுக்கு, தட்டை, உப்புச் சீடை, வெண்ணைச் சீடை, சீப்பி, கோளோடை, வெல்லச் சீடை, வடை, பாயசம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நாவல் பழம்! (ஒரு நாவல் பழம் ஒரு ரூபாயாம்! நாங்க சாப்பிட முடியாது!)கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி!
பலகாயிலே கிச்சாப்பயல்! இன்னிக்குக் குளிச்சான். மல்லிகைப்பூ நான் உதிரி வாங்கித் தொடுத்தேன். துளசி எல்லாம் நேத்தே வாங்கி வைச்சாச்சு. இன்னிக்குக் கிச்சாவுக்குச் சார்த்தியாச்சு. பெரிய கிச்சா பக்கத்திலே புஷ்கரிலே வாங்கின தொட்டில் கிச்சா. சின்னக் கிச்சாவும் உண்டு. இந்தப் பெரிய கிச்சாவுக்கு நடுவிலே இருக்கிறதாலே உத்துப் பார்த்தாத் தான் தெரியும். எல்லா பக்ஷணங்களுமே நல்லா வந்திருக்கு! முறுக்கு தான் சுத்தும்போது முடியாமக் கொஞ்சம் கோணல்! பரவாயில்லைனு விட்டுட்டேன்.