எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 31, 2010

ஆண்டவன் அருளால் நலமே! நன்றி!

கவலையோடு விசாரித்த அனைவருக்கும் நன்றி. தற்சமயம் பிசியோதெரபி எடுத்துக்கொண்டு வருகிறார். ஓரளவு வலி குறைந்துள்ளது. என்றாலும் இன்னும் குறையவேண்டும். வெயிட் தூக்குவதற்கெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. அனைவரின் அன்பும், அக்கறையும் மனம் நெகிழ வைக்கிறது. ஆனாலும் இது பற்றி முதலில் எழுத வேண்டாம்னு நினைச்சுட்டு அப்புறமா எழுதக் காரணம் இருக்கிறது. அந்தக் காரணம் இதோ!
***************************************************************************************

நம் நாட்டின் மன்னர்கள் கோயிலைப் பிரம்மாண்டமாகக் கட்டியதோடு அல்லாமல் அவற்றின் தளங்களைக் கல்லில் அமைத்துள்ளனர். கற்களே கிடைக்காத அதுவும் மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டக் கோயில்கள் கூட கற்றளிகளாகவே மாற்றப் பட்டன பிற்காலச் சோழர் காலத்தில். இந்தக் கல் தரை நம் நாட்டு சீதோஷ்ணத்துக்கு உகந்தது என்பதோடு நடக்கவும் வசதியாக இருக்கும். கோயில் என்றால் பலரும் வருவார்கள். அந்நாட்களில் வெளியே தங்க இடமில்லாதவர்கள், தங்க முடியாதவர்கள் கோயிலில் கிடைக்கும் பிரசாதங்களை உண்டுவிட்டு அங்கேயே மண்டபங்களில் தங்குவார்கள். அதன் பொருட்டே விசாலமான மண்டபங்கள், சுற்றிலும் நடைமேடைகள், பெரிய பெரிய திண்ணைகள் எனக் கட்டப் பட்டது. நாளாவட்டத்தில் பெரிய கோயில்களில் சுற்றிலும் உள்ள மண்டபங்கள் வணிக வளாகங்களாக மாற, சிறிய கோயில்களில் வேறுவிதமான மாற்றங்கள். நல்லவேளையாக உள் பிராஹாரங்களுக்கு எதுவும் வரவில்லை.

ஆனால் திருப்பணி என்ற பெயரில் அந்த அழகான கல்தளங்களைப் பெயரத்து எடுத்துவிட்டு தற்காலங்களில், அதுவும் கடந்த பத்து வருடங்களாக வழவழவென்றிருக்கும் கிரானைட் பதிக்கின்றனர். இது எந்த அளவுக்குப் பாதுகாப்பு என்று தெரியவில்லை, புரியவில்லை. மேலும் அந்தக் கல் தளங்களில் பல புராதனமான கோயில்களிலும் பல்வேறு விதமான கல்வெட்டுக்கள், எழுத்துக்கள் காணப்படும். கோயில் கட்டிய காலத்தைச் சொல்வதோடு, அந்தக் கால மக்களின் திருப்பணிகள் பற்றிய விபரங்கள், பல்வேறு சரித்திரச் சான்றுகள் எனக் கிடைத்து வருகின்றன. மேலும் கோயிலுக்கு வரும் நபர்கள் அங்கே நடக்கும், நடத்தி வைக்கும் அபிஷேஹ ஆராதனைகள் மூலமும், விளக்குகள் போடுவதிலும் எண்ணெய் ஆங்காங்கே சிந்தி இருக்கும். அதில் இருந்தெல்லாம் வழுக்காமல் இருக்கவேண்டுமென்றால் கல் தளமே சரியாக இருக்கும்.

எட்டுக்குடி கோயிலில் உள்ளே மூலவரைப் பார்க்கப் போகும் இடத்திலேயே இரண்டு பக்கமும் கம்பிக்கிராதி கட்டித் தடுப்பு அமைத்துள்ள மேடையில் இரு பக்கங்களும் சறுக்கு மேடை மாதிரி சரிவாக அமைத்திருக்கின்றனர். மேடை ஒரு அடிக்கு மேல் உயரம். அந்த ஒரு அடிக்கும் சறுக்கு மேடை அமைத்திருப்பது, எல்லாருக்கும் சட்டெனத் தெரியறாப்போல் இல்லை. அதிலேயே என் கணவருக்கு முதலில் தடுக்கி விட்டது. என்றாலும் சமாளித்துக்கொண்டார். தரிசனம் முடித்துத் திரும்பி வருகையில் சனைசரருக்கு விளக்குப் போட என்று மேலே ஏறியதில் இந்த மாதிரி ஆகிவிட்டது. விழுந்த இடத்துக்கு எதிரே பீடம் வேறே. என்னை மாதிரி உயரம் குறைந்த ஆட்கள் என்றால் கட்டாயமாய் மண்டை உடைந்திருக்கும். அவர் உயரமாக இருந்தது ஒரு வசதியாகப் போய்விட்டது. சாய்ந்தாற்போல் விழுந்தாரோ பிழைத்தார். இல்லாட்டி கம்பிக்கிராதியில் மண்டை குத்தி இருக்கணும். தேவஸ்தானத்து அலுவலக ஊழியர் ஓடி வந்தார். அவரிடம் இப்படிச் செய்துட்டீங்களேனு சொல்லிட்டேன். அநேகமாய் இப்போது அனைத்துக்கோயில்களிலும் இம்மாதிரியான ஒரு ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. இது சற்றும் பாதுகாப்பானது அல்ல.

இதுவே ஒரு குழந்தையோ அல்லது கர்ப்பிணிப்பெண்ணோ விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? கோயில் பலதரப்பட்டவர்களும் வந்து போகவேண்டிய இடம். அதிலும் நவகிரஹ சந்நிதி, சனைசரர் சந்நிதி அனைவரும் செல்லக் கூடிய இடம். அங்கே இப்படி வழவழவென்ற கிரானைட் போட்டு வைத்திருந்தால் நிச்சயமாய் ஆபத்துத்தான். அறநிலையத் துறை உடனே விரைந்து கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் இது. கிரானைட் என்றால் பராமரிப்புக்கு வசதி என்ற காரணம் சொல்லப் படுகிறது. கல்தளம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பராமரிக்கப் பட்டுத் தானே வருகிறது? அதில் என்ன குறைந்துவிட்டது?? கட்டாயமாய் இது கண்டனத்துக்கு உள்ளாகும் ஒரு விஷயமே ஆகும். குறைந்த பட்சம் இனிமேல் திருப்பணிகள் நடக்கும், நடத்தப் போகும் கோயில்களிலாவது கல் தளங்களை மாற்றாமல் திருப்பணிகளைச் செய்து வரவேண்டும் என்பதே எங்கள் தாழ்மையான வேண்டுகோள். இதே போல் எங்கள் ஊரான கருவிலியிலும் உள்ள சிவன் கோயிலுக்குக் கல்தளத்திலிருந்து கிரானைட் தளம் மாற்றியதில் இந்த வருஷம் நவம்பரில் மழை பெய்யும்போது போய்விட்டு 86 வயதான என் மாமியாரைக் கூட்டிச் செல்ல மிகவும் சிரமப் பட்டுவிட்டோம்.

கிராமங்களின் கோயில்களுக்கு வெளி ஊர், வெளிநாடு என்றெல்லாம் அந்த அந்தக் கிராமத்து மக்கள் பல வயதில் உள்ளவர்களும் வந்து போவார்கள். அனைவருக்கும் கல் தளமே வசதி, பாதுகாப்பும். கோயிலின் பழைய தன்மையும் மாறாமல் இருக்கும். அல்லது பிடிவாதமாய் நாங்கள் கிரானைட் தான் போடுவோம் என்றால் கல் தளம் போன்றே கிரானைட்டிலும் வந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதுவானும் போடலாம். வழுக்கி விழுந்து ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகாமலாவது இருக்கும். :((((((((((((((

Saturday, January 30, 2010

என்னென்னமோ நடந்துடுச்சு!

உடம்பு இன்னும் சரியாகவே இல்லை எனக்கு. அதோடு குளிக்கும்போது வெந்நீர் பட்டு எரிச்சல் அதிகம். ஆனாலும் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டே கிளம்பினேன். போகும்போதே எண்கண் முருகனைத் தரிசனம் செய்து கொண்டு பின் திருவாரூர் போயிட்டு, அங்கே தரிசனம் முடிச்சுட்டுப் பின்னர் எட்டுக்குடியும், சிக்கலும் தரிசனம் முடிச்சுக்கணும்னு திட்டம். மதிய உணவுக்கும் சற்று ஓய்வுக்கும் பின்னர் திரும்பும் வழியில் திருக்கண்ண மங்கையும், திருச்சேறையும் பார்க்கவும் திட்டம். எல்லாம் முடிச்சுட்டுத் திரும்ப ஏழு மணி ஆயிடும். அதுக்கப்புறம் சாப்பிட்டு அறையைக் காலி செய்தால் மிஞ்சிப் போனால் இரண்டு மணி நேரம். ஓடியே போயிடும்னு நினைச்சோம். ஓடினது நேரமும் இல்லை எதுவும் இல்லை. மனதில் இருந்த உற்சாகமும், சந்தோஷமும் தான்.

எங்களோட திட்டம் ஓட்டுநருக்குச் சரியா வரலை. ஏழே முக்காலுக்கு எண்கண் போயிட்டோம். ஆனாலும் அவர் கோயில் திறந்திருக்குமானு சந்தேகப் பட்டுத் திருவாரூருக்கும் போகாமல் நேரே எட்டுக்குடி ஓட்டிட்டுப் போயிட்டார். இந்த இடத்தில் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி ஒண்ணும் இருக்கே. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வரை சாலை கொஞ்சம் மோசம் தான். சாக்கோட்டை அருகே ரொம்ப மோசமான சாலை. ஆனால் குடவாசலில் ஆரம்பிச்சு திருக்குவளை வரைக்கும் சாலை பாருங்க, சும்மா கண்ணாடி போல் பளபளப்பு, ஜொலி ஜொலிப்பு, சாலை விரிவாக்கமும் அழகாய்ச் செய்து, பளபளவென்ற சாலை! ஒரே ஓட்டம் தான் வண்டி. அலுங்காமல், குலுங்காமல் போனது. ஒரே தடங்கல் என்னன்னா, இந்தப் போர் அடிக்கிறவங்க சாலையிலேயே கொண்டு வந்து போரடிக்க கதிர்களைக் கொட்டுவது தான்.

ஒரு காலத்தில் ஆனை கட்டிப் போரடிச்சாங்க மதுரையிலேனு சொல்லுவாங்க. இங்கே ஆனைகட்டிப் போரடிக்காட்டியும், வயலுக்கு அருகே களம்னு ஒண்ணு போட்டு,அதைச் சாணியால் மெழுகி, அங்கே பிள்ளையார் பிடிச்சு வச்சு, கோலம் போட்டு, தேங்காய் உடைத்து, வெற்றிலை, பழம், பூ நிவேதனம் பண்ணி,இத்தனையும் போட்டுட்டு முதல்லே வீட்டுப் பெரியவங்க கையாலே கொட்டச் சொல்லுவாங்க. அப்புறமாக் களத்திலே அறுவடை எல்லாம் வந்து முடிச்சதும் தூத்துவாங்க. இப்படித் தான் வேலை நடக்கும். இப்போ எந்த வயலிலும் களம்னு ஒண்ணு இல்லவே இல்லை. எல்லா அறுவடையும் சாலைக்கு வருது போரடிக்க. மாடுகட்டிப் போரடிச்சது எல்லாம் கற்காலமோனு தோணுது. அதே போல் அறுக்கவும் ஆட்கள் அங்கே ஒண்ணு, இங்கே ஒண்ணுனு எண்ணினாப்போல் சில வயல்களில் தான் பார்க்கமுடிந்தது. எல்லாம் இயந்திரமயம். உடல் உழைப்பே இல்லை.

கூலி கொடுத்தால் கூட அறுக்க ஆட்கள் வருவதில்லையாம். இலவச அரிசி கிடைக்குது, இலவச சேலை கிடைக்குது, இலவச தொலைக்காட்சி கிடைக்குது. ஏன் கூலிக்கு மாரடிக்கணும்? இதுவே மக்கள் நினைப்பு என்று வயல் வைத்திருப்பவர்களின் கருத்து. விவசாயம் பண்ணவோ, நாற்று நடவோ, கதிர் அறுக்கவோ ஆட்கள் கிடைப்பதில்லை. அவ்வளவு ஏன் ஊரிலேயே தூர்ந்து போயிருக்கும் குளங்களைச் சுத்தம் செய்யவோ, அல்லது பாசன வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்றவோ மக்கள் முயல்வதில்லை. அதெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கும் என்று அவர்கள் எண்ணம். நாம் ஏன் செய்யணும்னு அவங்களுக்குச் செய்ய இஷ்டம் இல்லை. வெளிப்படையாகவே தெரியுது. காவிரியின் துணை நதிகளெல்லாம் பார்த்தீனியமும், ஆகாயத் தாமரையும் மண்டிக்கிடக்கு. அகற்ற யாருக்கும் மனமும் இல்லை, நேரமும் இல்லை. மானாட, மயிலாடிக் கொண்டு, சூப்பர் சிங்கரைப் பார்த்து மகிழவே நேரம் பத்தலை மக்களுக்கு. அதே போல் ஒரு காலத்தில் அரிசி மாவில் கோலம் போட்ட இடங்களில் இப்போது கல்மாவும் வந்துவிட்டது.

எல்லாக்கூத்தையும் பார்த்துக்கொண்டே போனோம். என்ன அருமையான சாலை?? நம்ம மாநில அரசால் போடப்பட்ட சாலைனு நம்பிக்கையே வரலை. நம்ம ரங்க்ஸும், ஓட்டுநரும் தேசீய நெடுஞ்சாலைனு சத்தியமே பண்ணினாங்க. ஆனால் நாம கண்டுபிடிச்சுட்டோமில்ல?? மாநில அரசுச் சாலைதான்னு. போர்டு பெரியதாய் இருந்ததைக் காட்டினோம். அவ்வளவு அருமையான சாலை வசதி தமிழ்நாட்டின் கிராமங்கள் பூராவுக்கும் இருந்தால் என்ற அல்பத் தனமான ஆசையோடு பயணித்தோம். வண்டி ஆட ஆரம்பிச்சது. என்னடா திருஷ்டியானு பார்த்தால், திருக்குவளை தாண்டி விட்டது. எட்டுக்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலை சுமாஆஆர் தான். என்ன செய்யமுடியும்?? போய்த் தான் ஆகணும்.

இந்த எட்டுக்குடி, சிக்கல், எண்கண் மூன்றிலும் இருக்கும் முருகன் சிலையைச் செய்தவர் ஒரே சிற்பி. இந்தச் சிற்பங்கள் பற்றிய கதை சென்ற வருஷம் எழுதி உள்ளேன். அப்போதிலிருந்து போயிட்டு வரணும்னு இப்போத் தான் கிடைச்சிருக்குனு நினைச்சுட்டு கோயிலுக்குப் போனோம். உள்ளே சந்நிதியில் முருகனுக்கு விபூதிக்காப்பு நடந்துட்டு இருந்தது. அர்ச்சகர் தன்னை மறந்து முருகன் அழகில் மயங்கி அலங்காரம் செய்தார். கோயில் பற்றிய விபரங்கள் ஆன்மீகப் பயணம் பக்கத்தில் தனியே வரும். அலங்காரம் முடிச்சு தீப ஆராதனை காட்டி முருகன் பற்றிய கதையைச் சொல்லி அனுப்பி வைச்சார். பிராஹாரம் சுத்திட்டு வெளியே வரும் போது நவகிரஹ சந்நிதி. ஆனால் அது என்ன மலைமேலே இருக்கிறாப்போல் இவ்வளவு உயரத்திலே இருக்கே?

நான் தயங்கினேன். அதுக்குள்ளே நம்ம ரங்க்ஸ் நீ மேலே ஏறமுடியாது. இந்த உடம்போட ஏறும் வேலை வச்சுக்காதேனு சொல்லிட்டார். அங்கே சனைசரனுக்கு எள் தீபம் போட தீபம் விற்றுக்கொண்டிருந்த பெண்ணோ, அதெல்லாம் ஏறலாம் சார், நல்லாப் பாருங்க மேலே சாக்குப் போட்டு வச்சிருக்கேன் என்றார். இரண்டு படிகள் தான் ஏற. ஆனாலும் ஒவ்வொரு படியும் இரண்டு அடிக்கு மேல் உயரம். மேலே சின்ன நடைபாதை போன்ற இடத்தில் சுற்றிக் கம்பிக்கிராதி போட்டு அதற்குள் ஒரு மூலையில் நவகிரஹங்களும், தனியே எதிரே சனைசரரும் குடி கொண்டிருந்தனர். நம்ம ரங்க்ஸுக்கு அன்று சனிக்கிழமை என்பதால் அவர் வழக்கமாய்ப் போடும் எள் தீபத்தை அங்கேயே போடலாமே என்ற எண்ணம். அதுவும் சனைசரர் தனியே இருக்காரே? அந்தப் பெண்மணியும் வாங்க சார், போணி பண்ணுங்கனு கூப்பிடவே ஒரு தீபத்தை வாங்கிக் கொண்டு மேலே ஏறினார்.

நான் கீழேயே நின்றுகொண்டிருந்தேன். திக் திக் னு இருந்தது. ஆனாலும் அவர் மேலே ஏறி அங்கே சனைசரருக்கு எதிரே போட்டிருந்த சாக்கில் காலைத் துடைத்துக்கொண்டு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, நவகிரஹம் சுற்றினார். அப்போவே வழுக்கி இருந்திருக்கிறது. எனக்குப் புரியலை. சமாளித்துக்கொண்டு சுற்றி இருக்கிறார். ஆனால் நல்லவேளையா நீ வரலை, இங்கே ஒரே வழுக்கல் என்றும் என்னிடம் கூறினார். சுற்றி முடிச்சுவிட்டுக் கீழே இறங்கணும். வேறே ஒருத்தர் உள்ளூர்க்காரர் மேலே ஏறி விளக்குப் போட்டுக் கொண்டிருந்தார். இவர் கீழே இறங்கக் கம்பிக்கிராதியைப் பிடித்துக் கொண்டு மேல் படியிலிருந்து முதல் படிக்கு இறங்கினார். அங்கே ஒரு விநாடி நிதானித்துக்கொண்டு இரண்டாம் படியில் காலை வைக்கக் காலைத் தூக்கினது தான் தெரியும். சடபுடவென்று சப்தத்தோடு என்ன நடக்கிறது என்பதே புரியாத வேகத்தோடு கீழே வந்து விழுந்தார். நான் கத்திய கத்தலில் கோயிலில் இருந்த அனைவரும் கூடிவிட்டார்கள்.

Friday, January 29, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

காலையில் கிளம்பும் முன்னரே பூசாரிக்குத் தொலைபேசி நாங்கள் வரப்போவதைத் தெரிவித்தோம். ஏற்கெனவே அவரிடம் இரண்டு முறை உறுதி செய்து கொண்டிருந்தோம். என்றாலும் பால் வர தாமதமாகும் என அவர் யோசித்தார். போய்ப் பார்த்துக்கலாமேனு நாங்கள் கிளம்பிச் சென்றோம். இங்கே அபிஷேஹம், மாவிளக்கு போன்றவற்றை முடித்துக்கொண்டு, அந்த ஊரிலேயே இருக்கும் பெருமாள் கோயிலின் திருப்பணிக்காக பாலாலயம் ஏற்படுத்தும் நிகழ்விலும் பங்கு கொள்ள வேண்டும்.பெருமாளையே காணோம் இந்தக் கோயில் பெருமாளைத் தான் தூக்கிக்கொண்டு போயிட்டு பின்னர் திலகவதி அவர்களிடம் நேரில் சென்று மனுக்கொடுத்து வேண்டுகோள் விடுத்துப் பின்னர் கண்டு பிடிக்கப் பட்டது.பெருமாள் கிடைத்துவிட்டார் இன்னும் உற்சவர் கைக்கு வரவில்லை. ஆனாலும் அறநிலையத் துறையின் அநுமதி வாங்கித் திருப்பணியைக் கார்த்திகை மாசமே ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதிலிருந்து அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். போகமுடியலை. இப்போ நாங்க நிச்சயம் வந்துவிட்டோம் என்பதை உறுதி செய்து கொண்டு பாலாலயம் அமைக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள். எங்களுக்கே கும்பகோணம் வந்துதான் தகவல் தெரிந்தது.

மாரியம்மன் கோயிலில் பூசாரி ஊரில் நடந்த சில அசம்பாவிதங்களினால் கோயிலின் புனிதம் பாதிக்கப் பட்டதைச் சொல்லி வருந்தினார். அதோடு இனி தான் பூசாரியாக இருக்கவே யோசிக்க வேண்டி இருக்கிறது என்றும் சொன்னார். மனதே வேதனையில் ஆழ்ந்து போக, எப்படியோ அபிஷேஹ ஆராதனைகள் முடிந்து மாவிளக்கையும் அவசரம், அவசரமாப் போட்டுவிட்டுக் கிளம்பினோம் பெருமாள் கோயிலுக்கு. இந்தப் பூசாரி மாரியம்மன் கோயிலின் பரம்பரை பூசாரி. அவங்க அப்பா, தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்திலிருந்தே பூசாரியாக இருந்து வந்திருக்கின்றனர். இதற்காக அவர் பெற்றுக்கொள்ளும் சம்பளமோ அந்தக் காலத்தில் என்ன கொடுத்தாங்களோ அதுதான் இப்போதும். என்றாலும் கோயிலை விடக்கூடாது என பக்தியோடு செய்து கொண்டிருக்கிறார். இனி எப்படியோ? மனது கவலையில் ஆழ்ந்தது.

பெருமாள் கோயிலில் பரம்பரை பட்டாசாரியார் வாரிசே வந்துவிட்டார் பாலாலயம் எடுக்க. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அவரும் நன்கு கற்றறிந்தவர் என்பதால் நியமங்கள் குறையாமல் நல்லபடியாக பாலாலயம் எடுத்து முடிந்தது. நாங்கள் அதன் பின்னர் கும்பகோணம் திரும்பும் போது மணி மூன்றாகிவிட்டது. திரும்பும் வழியிலேயே மறுநாள் சனிக்கிழமை இரவு பேருந்துக்கு முன்பதிவு செய்யவேண்டும் என்று செய்து கொண்டோம். இம்முறை நம்ம ம.பா.வுக்கு அரசுப் பேருந்து வேண்டாம்னு தோணிப்போய் ரதிமீனாவில் முன்பதிவு செய்துவிட்டார். இரவு பதினொன்றரைக்குத் தான் வண்டி. அறைக்குப் போய் ஓய்வு எடுத்துக்கலாம்னு படுத்தால், உடம்பில் ஒரே அரிப்பு. படுக்கையில்தான் ஏதோனு பார்த்தால் சின்னச் சின்னதாய் எறும்புகள் தான். அதைத் தட்டிட்டுப் படுத்தாலும் மீண்டும் மீண்டும் அரிப்புத் தாங்கலை.

கம்பளிப்பூச்சி கடிச்சாத் தடிக்குமே அது போலத் தடிச்சுப் போச்சு. கட்டி இருந்த புடவைக்கும் மேலே அரிப்புத் தாங்கலை. புடைவைக்கும் மேலே??? அட??? ஆமாம், ஒருவேளை இந்தப் புடைவை ஒத்துக்கலையோ??? ம்ம்ம்ம்ம்ம்?? எனக்குச் சில துணிகள் ஒத்துக்கவே ஒத்துக்காது. அதே போல் சில கடையில் வாங்கிய துணிகளும் ஒத்துக்கறதில்லை. இது எந்தக் கடையிலே வாங்கினதோ? ஓசி வந்த புடைவை, அண்ணா சஷ்டி அப்தபூர்த்திக்குக் கொடுத்தது. இதான் ஒத்துக்கலையா?? கடவுளே! காட்டன் புடவையோ, சிந்தடிக் புடவையோ, சில்க் காட்டன் புடைவையோ சில குறிப்பிட்ட ப்ராண்ட் புடவைகள் தான் ஒத்துக்குது. இது ஒத்துக்கலைனு முன் கூட்டியே எப்படிக்கண்டு பிடிக்கிறது?? ஒரு நாள் முழுக்க அல்லது பகல் பூராக் கட்டி இருக்கும்போது இப்படி அரிப்பு வந்தால் அப்போ அது புடைவையினால்தான் அப்படினு எனக்கே புரியும். (புத்திசாலியாக்கும்) தலை எழுத்தேனு நொந்து நூலாய்ப் போய்ப் புடைவையை மாத்தினேன். ஹிஹிஹி, அதான் அம்பிட்டே கேட்கிறதெல்லாம் வஸ்த்ரகலா, நேச்சுரல்ஸ், பரம்பரா, நகாசு, ரிவெர்சிபிள்னு கேட்டுடறது. ஒண்ணும் பண்ணாது பாருங்க! பிரச்னையே இருக்காதே! :P

என்னதான் மாத்தினாலும் 24 மணி நேரம் பிடுங்கல் தாங்காது. எண்ணெய்க்காப்புச் சார்த்தினால் தான் சரியாகும். அதுக்கு ஊருக்குப் போகணுமே. அதுவரை தாங்கிக்கணுமே! வேறே வழியே இல்லை. மாத்திரைகள் எதுவும் எடுத்துக்கவும் முடியாத நிலைமை. ரங்க்ஸ் கிட்டே சொல்லலை முதல்லே. அவரே பார்த்துட்டார் கை, முகம் எல்லாம் அதீதமாய்ச் சிவந்து தடித்திருப்பதை. தலையில் அடிச்சுண்டார். என்னதான் புடைவை ஒத்துக்குமோ னு அலுப்பு வேறே. நல்ல கைத்தறிக் காஞ்சீபுரம் பட்டு ஒத்துக்குமே , அதிலும் கோ ஆப்டெக்ஸ் என்றால் இன்னும் காரண்டியே, மினிமம் ஐந்தாயிரம் ரூபாய்தான், அதே வாங்கிக் கொடுங்கனு சொன்னேன். பதிலே இல்லை.

அதற்குள் மறுநாள் எட்டுக்குடி, சிக்கல், எண்கண், திருவாரூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை செல்லத் திட்டம் போட்டு, (ராத்திரி பதினொன்றரை வரை பொழுது போகணுமே) டாக்சிக்காரரை வரச் சொல்லி இருந்தோம். அவரிடம் பேசி முடிவு செய்துவிட்டு காலை ஆறரைக்கெல்லாம் கிளம்ப நேரம் குறித்துவிட்டுப் படுத்தோம். மறுநாள் விடிந்தது, அன்று நடக்கப் போவதை அறியாமல் நாங்களும் ஏற்கெனவே செய்த முடிவின் படி எண்கண் வழியே திருவாரூர், எட்டுக்குடி, சிக்கல் செல்ல ஆயத்தமானோம்.

பாலாலயம் படங்கள்

எல்கே, படங்களைஇப்போத் தான் சேர்த்தேன், தனியாகக் கொண்டுவர முயன்று முடியலை, ராமசாமி கோயில் படங்களோட சேர்ந்து தான் வருவேன்னு அடம், என்ன பண்ணறதுனு புரியலை. அதன் கீழேயே பாருங்க. முடிஞ்சா விளக்கம் சேர்க்கிறேன். நன்றி. :D

Thursday, January 28, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், இரண்டாம் பாகம்!

ஜராசந்தன் யார்????

சில நாட்கள் முன்னர் தேவகியைப் பத்திப் பார்த்தோம், அவள் ஏன் துன்பம் அனுபவிக்கிறாள் என.இங்கே அது போலவே ஜராசந்தன் பற்றியும் கொஞ்சம் அறிந்து கொண்டோமானால் பின்னால் ஜராசந்தனின் வதம் வரும்போது புரிய வசதியாக இருக்கும். மகத நாட்டு மன்னன் ஆன பிருஹத்ரதன் காசி தேசத்து இளவரசிகளை மணம் புரிந்தான். சகோதரிகள் இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என மன்னனிடம் வாக்குக் கொடுத்திருந்தனர். அதன்படியே இருவருக்குமிடையே எந்தவிதமான சண்டை, சச்சரவும் இல்லாமல் இருந்ததைப் போல் இருவருக்கும் ஒருசேர புத்திரப் பேறும் இல்லாமல் இருந்தது. மனம் வருந்திய மன்னன் கக்ஷீவான் என்னும் முனிவரின் புதல்வன் ஆன சண்ட கெளசிகன் என்ற ரிஷியிடம் சென்று இதற்கான பரிகாரம் கேட்டான். முனிவர் மனம் மகிழும்படியாகப் பணிவிடைகளையும் செய்துவந்தான். அவன் சேவைகளால் மனம் மகிழ்ந்த முனிவரும் அவனுக்குக் குழந்தைப் பேறு அளிக்கும்படியாக ஈசனை வேண்டிக் கொண்டு மந்திர உச்சாடனங்கள் பலவும் செய்து ஒரு மாம்பழத்தில் அந்த மந்திரங்களை உருவேற்றி மன்னனிடம் கொடுத்தார்.

மன்னனும் அரண்மனைக்கு வந்தவன் அதை இரு மனைவியருக்கும் பகிர்ந்து அளித்தான். இருவரும் சரிபாதி மாம்பழத்தைச் சாப்பிட்டனர். பின்னர் கருவுற்றனர். மனம்மகிழ்ந்த மன்னனும், அரசியரும் குழந்தைப் பேறை எதிர்பார்த்திருக்கப் பிறந்ததோ ஒரு குழந்தையின் சரிபாதி. ஒரு பாதி முகம், ஒரு கை, உடலின் ஒரு பாதி, ஒரு கால் என ஒரு மனனவிக்கும், மற்ற பாதி இன்னொரு மனைவிக்குமாய்க் குழந்தை பிறந்திருந்தது. கலங்கிய சகோதரிகள் அந்தக் குழந்தையைப் பிண்டங்கள் என எண்ணிக் கொண்டு பணிப்பெண்ணிடம் கொடுத்துக் காட்டிலோ அல்லது வேறெங்காவதோ வீசி எறியச் சொன்னார்கள். பணிப்பெண்ணும் துணியில் சுற்றிக் காட்டில் வீசி எறிந்தாள். அங்கே ஜரா என்னும் அரக்கி ஒருத்தி இருந்தாள். அவள் அரச உடையுடன் ஒரு மூட்டை கிடந்ததைக் கண்டு அதைப் பொறுக்கி எடுத்து இரு கூறுகளாய்க் கிடந்த குழந்தையின் பாகங்களை ஒன்று சேர்க்கக் குழந்தைக்கு உயிர் வந்தது. குழந்தை அரசனுடையது என்பதையும் புரிந்து கொண்டு அவள் குழந்தையை அரசனிடமே ஒப்படைத்தாள். அரக்கியால் குழந்தை முழுமை பெற்றதால் அவள் பெயரை வைத்தே குழந்தைக்கு ஜராசந்தன் என்று பெயரிட்டான் மகத நாட்டு மன்னன்.

ஜராசந்தன் பல்வேறு தவங்களையும் புரிந்தான். அதன் மூலம் பல வரங்களைப் பெற்றான். தனக்கு நிகர் யாருமில்லை என்று மகத நாட்டுச் சக்கரவர்த்தியாக ஆட்சி புரிந்து வந்தான். எவராலும் வெல்லமுடியாத வரத்தையும் பெற்றான். அஸ்தி, ப்ராப்தி என்ற தனது இரு மகள்களையும் அண்டை நாட்டு யாதவகுலத் தலைவன் உக்ரசேனனின் மகன் ஆன கம்சனுக்கு மணம் புரிவித்து வைத்திருந்தான். திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு வந்த கம்சனுக்கு அவன் போட்ட ஒரே நிபந்தனை திருமணம் செய்து கொண்டு கம்சனே அரசன் ஆக முடிசூட வேண்டும் என்று. அதன்படியே தன் தந்தையான உக்ரசேனரைச் சிறையில் அடைத்துவிட்ட கம்சன் தான் அரியணை ஏறித் தன்னைத் தானே சக்கரவர்த்தி எனப் பிரகடனம் செய்து கொண்டிருந்தான். கொடுங்கோல் ஆட்சியும் புரிந்தான் கம்சன். இந்தக் கம்சனைத் தான் கண்ணன் வதம் செய்தார். ஆனாலும் ஜராசந்தன் அப்போதும் அழியாமல் கண்ணனைத் துரத்தித் துரத்தி யுத்தம் செய்வான். தன் மருமகன் இறந்ததற்குப் பழி வாங்குவான். கிட்டத் தட்டப் பதினாறு முறைகள் போர் நடந்தும் வெல்ல முடியாத ஜராசந்தனைக் கடைசியில் தந்திரமாய்க் கண்ணன் பீமனை விட்டுக் கொல்லச் செய்வார். அது பின்னர் வரும்.
*************************************************************************************

கர்ணன் யார்??

அடுத்துப் பஞ்ச பாண்டவர்களைப் பற்றிப் பார்க்கும் முன்பாக அவர்களில் மூத்தவன் ஆன குந்தியின் பிள்ளை கர்ணனின் பிறப்பு பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். இவை எல்லாம் நம் கதை தொடரும்போது புரிதலுக்கு வசதியாக இருக்கும். பலரும் ஆழ்ந்து படிக்கவில்லையோ என்றும் தோன்றுகிறது. சில விஷயங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கணும். அப்படிப்பட்ட ஒரு விஷயம் இது. அனைவரையும் சிரமப் படுத்துவதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
கர்ணன் யார் என்று சில நாட்கள் முன்னர் துளசிதளத்தில் சூடு பறக்கப் பதிவுகளும், பின்னூட்டங்களும் போய்க் கொண்டிருந்தது. கர்ணனுக்கும் ஒரு முன் பிறவிக் கதை உண்டு. அதன்படியே தான் அவன் கர்ணனாய்ப் பிறந்து நடந்தவை எல்லாம். சஹஸ்ர கவசன் என்றொரு அசுரன் வழக்கம்போல் தவங்கள் செய்து தன் உடலை ஆயிரம் கவசங்கள் காக்கவேண்டும் எனக் கேட்க அவ்வாறே அவன் உடலுக்கு ஆயிரம் கவசங்கள் ஏற்பட்டன. அதனாலேயே அவனுடைய உண்மையான பெயர் நமக்கு இன்னும் தெரியவில்லை. சஹஸ்ர கவசன் என்ற பெயராலேயே தெரிந்து கொள்கின்றோம். ஆயிரம் கவசங்களைப் பெற்றது மட்டுமில்லாமல், தன்னை எவராலும் கொல்லவோ, வெல்லவோ முடியாது. கடுந்தவம் இயற்றிக் கொண்டு போர் புரிபவர் யாரோ அவர்கள் மட்டுமே கொல்ல முடியும், வெல்ல முடியும் என்றும் வரம் வாங்கிக் கொண்டு விட்டான். யாரானாலும் ஒன்று தவம் செய்யமுடியும், அல்லது போர் புரிய முடியும். இரண்டும் ஒருசேர யாரால் செய்ய இயலும்? அதுவும் ஒரே நபரிடத்தில்? இனி நம்மை வெல்ல இப்பூவுலகில் மட்டுமில்லை, ஈரேழு பதிநாலு லோகங்களிலும் யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தான் சஹஸ்ர கவசன்.

அனைவரும் காக்கும் கடவுள் ஆன மஹாவிஷ்ணு தான் இதற்கு உதவவேண்டும் என அவரை வேண்ட அவரும் தன்னை இருவேறு வடிவங்களாக மாற்றிக் கொண்டார். ஒரு வடிவம் நரன், மற்றொரு வடிவம் நாராயணன். நாராயணன் தவத்தில் ஆழ்ந்திருக்க, நர வடிவில் இருந்த விஷ்ணு சஹஸ்ர கவசனோடு சண்டை போடுவார். பின்னர் நரன் தவம் செய்ய ஆரம்பிக்கும்போது நாராயணன் சண்டை போடுவார். இப்படியே தவமும், போரும் மாறி மாறி நடந்து 999 கவசங்கள் எடுக்கப் பட்டுவிட்டன. கடைசியாய் ஒரு கவசமும், காது குண்டலங்களும் இருந்தன. அப்போது நரன் போருக்கு வர, சஹஸ்ர கவசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி சூரியனிடம் தஞ்சம் அடைந்தான். இவன் ஒரு அரக்கன், வாங்கிய வரங்களை முறை தவறிப் போர் செய்யப் பயன்படுத்துகிறான் என்பதை அறியாத சூரியனும் அவனைக் காத்ததோடு அல்லாமல், தக்க சமயத்தில் பூவுலகில் பிறக்க வைப்பதாகவும் உறுதி அளித்தார்.அவனைப் பாதுகாத்து வந்தார். விஷயம் தெரிந்த மஹாவிஷ்ணு இவனுக்கு மரணம் தன்னாலோ அல்லது தன்னில் ஒரு பாதியான நரனாலோ தான் ஏற்படும் என்று சொல்லி விட்டார். அவன் உடலைத் துளைத்து எடுத்தார். அப்போது அவனின் சக்தியைத் தன்னுள் பாதுகாத்து வைத்துக் கொண்ட சூரியன் குந்தி துர்வாசரின் வரத்தைப் பற்றிப் பரிசோதிக்கும்போது சஹஸ்ர கவசனின் சக்தியோடு தன் சக்தியையும் சேர்த்து ஒரு குழந்தையாக குந்திக்கு அளித்தான். சஹஸ்ர கவசனின் மிச்சம் இருந்த ஒரு கவசத்தோடும், குண்டலங்களோடும் குழந்தையாய்ப் பிறந்தவனே கர்ணன் ஆவான். நரன் அர்ஜுனன் ஆகவும், நாராயணன் கண்ணனாகவும் பிறந்தனர். இவர்கள் இருவருமே கர்ணனின் மரணத்திற்கும் காரணமாக ஆயினர். இதுவே கர்ணன் கவச, குண்டலங்களோடு சூரியனின் மகனாய்ப் பிறந்ததின் கதை ஆகும்.

Tuesday, January 26, 2010

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்......

மறுநாள் வியாழனன்று காலை கும்பகோணத்திற்கு அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டும். முதல்நாளே ராமசாமி கோயிலில் இருந்து வந்ததுமே மாயவரத்திற்கு அபி அப்பாவுக்குத் தொலைபேசி, மறுநாள் ஒப்பிலியப்பன் கோயிலில் இருந்து மாயவரம் வருகிறோம் என்பதை உறுதி செய்தேன். நட்ராஜ் பிறந்ததில் இருந்து அபி அப்பா கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நாங்களும் இரண்டு மாசத்துக்கு ஒருதரம் மாயவரம் வழியாப் போயிட்டிருக்கோம். இம்முறை எட்டிப் பார்த்துவிடுவது என முடிவு செய்தாச்சு. வியாழனன்று காலை ஒப்பிலியப்பன் கோயிலில் திருமண மண்டபத்திற்குச் சென்றோம். திருமணப்பத்திரிகையை அவர் எடுத்து வச்சுப்பார்னு நான் அது பத்திக் கேட்டுக்கவே இல்லை. எந்தச் சத்திரம்னு தெரியலை. நம்ம ரங்க்ஸ் ரொம்பவே ஜாலியா கோயிலைச் சேர்ந்த மண்டபம்னு ஆட்டோக்காரர்ட்டே சொல்லிட்டார். அவரும் அழகாய்க் கோயிலைச் சேர்ந்த மண்டபத்தின் வாயிலில் கொண்டு நிறுத்திட்டார். என்னை முன்னால் போகச் சொல்லிட்டு ஆட்டோவுக்கு செட்டில் பண்ணிட்டு வரேன்னு சொன்னாரா, நானும் உள்ளே போனால், வரவேற்பில் ஆட்களே புதுசா இருந்தாங்க. ஹிஹிஹி.. கல்யாணம் செய்துக்கும் பையரை மூணு வயசிலே இருந்து தெரியும். அவங்க குடும்பமே பழக்கம். இங்கே பார்த்தால் வேறே யாரோ இல்லை இருக்காங்க. பெண் வீட்டுக்காரங்களானால் அதுவும் இல்லைனு புரிஞ்சது. ஆனாலும் அவங்க வரவேற்று(நாங்க பெண்ணுக்குச் சொந்தம்னு நினைச்சிருப்பாங்க போல! :D) உடனே போய் டிபன் சாப்பிடுங்கனு உபசாரம் வேறே பண்ணினாங்க. போயிருப்பேன். ஆனால் நம்ம மண்டைக்குள்ளே தான் குடையுமே! குடைச்சல் தாங்காமல், கல்யாண மாப்பிள்ளை பெயரைச் சொல்லி அவர் கல்யாணம்தானேனு கேட்டால், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., பையர் அவர் இல்லை. அந்தப் பையர் வீட்டு ஆளுங்க எல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவுங்க போல. கல்யாணப்பையர் பெயரை நான் சொன்னதை வைச்சு அந்தப் பெயர் உள்ள பையர் கல்யாணம் நடக்கும் சத்திரத்துக்கு இப்படிப் போங்கனு வழியும் சொல்லி அனுப்பி வச்சாங்க.தேங்காய், பழம், வெத்திலை, பாக்குப் பை மட்டும் கொடுக்கலை. கொஞ்ச நேரம் இருந்தா கொடுத்திருப்பாங்க போல!

ரங்கனார் ஆட்டோவிலிருந்து இறங்கறதுக்குள்ளே ஓடிப் போய் ஆட்டோவிலே உட்கார்ந்து ஓட்டுநரிடம் சத்திரத்தின் பெயரைச் சொல்லி அங்கே போங்கனு சொன்னேன். அப்ப்பபாடா! வாசல்லேயே கல்யாணப் பையரின் அப்பாவான எங்க சிநேகிதர் நின்னுட்டு இருந்தார். நிம்மதினா என்னனு அப்போப் புரிஞ்சது. நல்லவேளையா மொய் மாறிப் போகறதுக்கு இருந்தது, உங்க பையரோட அதிர்ஷ்டம் இங்கே வந்துட்டோம்னு அவர் கிட்டே சொல்லிட்டு, டிபன் சாப்பிடப் போனா, அவரோ, “அங்கே நுழைஞ்சுட்டு டிபன் என்னனு பார்த்துட்டுச் சாப்பிட்டு வந்திருக்கக் கூடாதோ?”ங்கறார். என்னத்தைச் சொல்ல??? டிபன் முடிஞ்சு மாடிக்குப் போய் பையரின் அம்மாவைப் பார்த்துப் பேசிட்டுக் கீழே வந்து கல்யாணம் பார்க்க உட்கார்ந்தால் பெண் வீட்டுக்காரர்களில் சிலர் எங்களையே முறைச்சுப் பார்த்துட்டு இருந்தாங்க. சரினு நாங்களும் முறைச்சோம். அதுக்குள்ளே காசியாத்திரை போயிட்டு, மாலை மாத்தி, ஊஞ்சல் முடிச்சு, பெண்ணும் பையனும் மணவறைக்கு வந்தாங்க. முறைப்பு தொடர்ந்தது.



யாரு இவங்க??? எங்க சந்தேகம் தீரலை. கல்யாணம் ஆரம்பிச்சது. தாலி கட்டும்போது வழக்கம்போல கை குலுக்க வேண்டாம் என்ற அன்பான வேண்டுகோள், (இப்போ எல்லாக் கல்யாணங்களிலேயும் இதைச் சொல்லவேண்டிய கட்டாயமாயிடுச்சு! ) சப்தபதி முடிஞ்சதும், சிறிது நேரம் ஓய்வு கொடுத்து புரோகிதர்கள் இப்போதைய வழக்கப்படி பையரையும்,, பெண்ணையும் பெரியவங்களை நமஸ்கரிக்க அனுப்பினாங்க. அப்போ நாங்க அட்சதை போடும்போது பெண்ணோடு வந்த பெண்களில் ஒருத்தி, நம்ம ரங்க்ஸ் கிட்டே எங்க ஜாதகத்தைக் கேட்க அவரும் விலாவாரியாகச் சொல்ல! அட??? இவங்க ஜாம்நகரிலே நம்மளோட இருந்தவங்களா? இப்போவும் அங்கேதான் இருக்காங்களாம், பெண்ணுக்கு மித்தாபூரில் வேலைங்கறதாலே அங்கே போயிருக்காங்களாம். மித்தாப்பூர்னதும் யாரோனு நினைச்சோமே. அதுக்குள்ளே பெண்ணின் அம்மாவுக்குத் தகவல் போக அவங்க வந்து, “நிச்சயதார்த்தம் போதே உங்களைப் பார்த்தேன், நினைச்சேன் நீங்கதானோனு. ஆனால் சந்தேகமா இருந்தது”னு சொல்ல இரு தரப்பிலும் சற்று நேரம் பதினைந்து வருஷத்திய மலரும் நினைவுகள் ஓடின.

அப்புறமா அங்கே சாப்பாடு முடிச்சு கும்பகோணம் வந்து மாயவரம் பேருந்தில் ஏறி அபி அப்பாவுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் அவர் காலையே மிஸ் பண்ணி இருக்கார்னு அப்புறமாத் தெரிஞ்சது. ஒருவழியா மாயவரம் வந்து, அபி அப்பாவை மறுபடி கூப்பிட்டு, எப்படி வரணும்னு கேட்டு, ஆட்டோக்காரர் கிட்டே வழி சொல்லிப் போனால் அது பாட்டுக்குப் போகுது. நம்ம ரோடு மாதிரியே அங்கேயும் ரோடு போட்டிருக்காங்கப்பா. ஒருவேளை வலை உலகப் பதிவர்கள் குடியிருக்கும் வீடுகளில் இதுதான் அங்கீகரிக்கப் பட்ட சாலை அமைப்போனும் நினைச்சேனே. அபி அப்பா என் கிட்டே அவங்க வீடு ரொம்பக் கிட்ட பேருந்து நிலையத்திலே இருந்துனு சொன்னார். ஆனால் அது பாட்டுக்கு தூரக்கத் தான் இருக்கு. வீட்டுக்குப் போனோம். நட்ராஜைப் பார்த்தோம். ஆஹா, அவன் என்னை அழைத்த அழைப்பு இருக்கே! நட்ராஜுக்கு அபி அப்பா என்னை அறிமுகம் செய்து வைத்தார். என்ன வழக்கம்போல் பாட்டினு சொல்லித் தான். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனால் நட்ராஜா அதெல்லாம் கேட்பான்? அவன் யாரு?? நாம பேரு வச்சு ஆளாச்சே? அதெல்லாம் காதிலேயே போட்டுக்கலை. அவன் பாட்டுக்கு ஆண்ட்டினு கூப்பிட்டுட்டான். (புதுகைத் தென்றல், என்னமோ என்னோட படத்தைப் பார்த்துட்டேன், அப்படி, இப்படினு பெருமை அடிச்சீங்க இல்லை??, பதிவர் மீட்டிங்கைப் பத்தி எழுதுங்கனு சொன்னீங்கல்ல?? இதான் விஷயமே! ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா, குளிர்ச்சியா இருக்கு, அம்பி நோட் திஸ் பாயிண்ட்! நட்ராஜே சொல்லிட்டான்! இனிமே என்னைப் பாட்டினு எழுதினீங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே!(என்னங்க?? அதெல்லாம் கட்டெறும்பு போகலை காதுக்குள்ளே) இதனால் வலை உலகத்தினர் சகலருக்கும் தெரியப் படுத்துவது என்னவென்றால் நான் சின்னப் பொண்ணுதான் என்பதை நட்ராஜே உறுதி செய்துவிட்டான். எப்படிக் கூப்பிட்டாங்கறீங்க?? “அந்த ஆண்ட்டி எங்கே?” னு கேட்டான். ஆண்ட்டினு கூப்பிட்டானே! அபி அப்பா முகத்திலே டன் டன்னாக அசடு வழிய, வேறு வழியில்லாமல் முழிச்சார். கவனிக்காதது போல் காட்டிக் கொண்டார். உடம்பு அலுப்பு மட்டும் இல்லைனா டான்ஸே ஆடியிருப்பேன். அபி பள்ளிக்குப் போயிருந்தா. பேசிட்டு இருந்தோம். அபி அம்மா நாங்க போனதிலே இருந்து சமைச்சாங்க. பாவம். அவங்க சமைச்ச நேரத்திலே ஆயிரத்திலே ஒரு பங்கு நேரம் கூட நாங்க சாப்பிட எடுத்துக்கலை. வேண்டாம், நாங்க கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டாச்சுனு சொன்னாக் கேட்டாத்தானே! நினைச்சு, நினைச்சு ஏதேதோ பண்ணிட்டு இருந்தாங்க. ஆயில்யன், குசும்பன், சீமாச்சு, ராமலக்ஷ்மி, கண்மணி டீச்சர், கயல்விழி முத்துலக்ஷ்மி, வல்லி சிம்ஹன், துளசி கோபால்னு எல்லாரையும் பத்தி நினைவு கூர்ந்தோம்.விட்டுப் போனவங்க எல்லாம் உங்களையும் நினைச்சோம்பா. கோபி, முக்கியமா உங்களை! வீட்டையும் சுத்திப் பார்த்தோம். எங்களைப் போல அபி அப்பாவும் சுப்புக்குட்டிகளைச் செல்லமாக வைத்திருப்பது தெரிய வந்தது. அவை வந்து போகும் வழியையும் காட்டினார். அபி அப்பா எங்களை அழைத்துச் செல்லவேண்டிய இடங்கள்னு பெரிய ப்ளானெல்லாம் வச்சிருந்தார் எங்களை அழைத்துச் செல்லவேண்டிய கோயில்கள்னு ஒரு லிஸ்டே கொடுத்தார். ஆனால் எங்கள் உடல்நிலையும் இடம் கொடுக்கலை, நேரமும் பற்றாக்குறை, மேலும் அவர் சொன்ன கோயில்கள் அனைத்தும் நாங்க இரண்டு, மூன்று முறை போய்வந்தவையே. அலையவேண்டாம் மறுநாள் பெருமாள் கோயிலில் நிறைய வேலை இருக்குனு சொல்லிட்டோம். பேச்சு வாக்கில் அவரோட நெருங்கிய சிநேகிதர் குரங்கு ராதா என் மாமியாரோட சொந்தம்னு புரிஞ்சது. அபி பள்ளியிலிருந்து வந்ததும் அங்கே இருந்து மாயூரநாதர் கோயிலுக்குப் போனோம். நட்ராஜ் கொஞ்சம் கூடக் கவலையே இல்லாமல் எங்களோட தனியா ஆட்டோவிலே வந்துட்டான். அவங்க அப்பாவையோ, அம்மாவையோ தேடவே இல்லை. ரொம்பச் சமர்த்தாக இருந்தான். நாங்க முன்னாலே போய் கோயில் மண்டபத்தில் நின்னுட்டு இருந்தோம். உள்ளே திரை போட்டிருந்தது. சாயரட்சை வழிபாட்டிற்காக. அபி அப்பா வந்ததும் உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்துட்டு அங்கே இருந்தே பேருந்து நிலையம் வந்து கும்பகோணம் வந்து, மறுநாள் குலதெய்வம் கோயிலில் செய்யவேண்டிய அபிஷேஹத்திற்கான பொருட்கள், மலர்மாலைகள், பெருமாள் கோயிலின் பாலாலயம் எடுக்க வேண்டியதற்காக பெருமாளுக்குத் துளசி மாலைகள் என வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். மறுநாள் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எங்க ஊரான பரவாக்கரைக்குச் சென்றோம். மாயூரநாதர் கோயில் பற்றிய கட்டுரை ஆன்மீகப் பயணம் பக்கத்திலே வரும்.

Monday, January 25, 2010

ரயிலோ, பேருந்தோ, பயணம்னாலே பயமா இருக்கு!

எப்போவுமே முதல்வகுப்பு அல்லது ஏ.சி. இரண்டாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்வதாலும், பேருந்துகளிலும் ஏ.சி.யிலேயே போவதாலும்/அல்லது வண்டி ஏற்பாடு செய்து கொண்டு போவதாலும் நமக்குத் தான் இப்படி எல்லாம் தெரிகிறதோ என்று நினைக்கவும் இடம் இல்லை. ஏனெனில் அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்குப் போவது என்று முடிவானபின்னால் திடீர் திடீர்னு கிளம்புவதால் எந்த வகுப்பில் முன்பதிவு கிடைத்தாலும் போயிட்டுத் தான் இருந்தோம். மேலும் அடிக்கடி மாற்றல் வரும் கணவரின் அலுவல் வேலையில் மாற்றலாய்ப் போகும் சமயங்களில் பலமுறைகள் தொடர்ந்து செல்லவேண்டிய ரயில்களைப் பிடிக்கமுடியாமல்,முதல் வகுப்புக்கோ அல்லது ஏசிக்கோ முன்பதிவுப் பயணச் சீட்டு இருந்தும், மாற்று வண்டியில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஒண்டிக்கொண்டு சென்ற அநுபவங்களும் நிறைய. ஆகவே இது இப்போது தோன்றி இருக்கும் ஒரு மோசமான கலாசாரம் என்பதில் சந்தேகமே இல்லை. இதுக்கு முடிவோ, விடிவோ வரும் என்ற நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் முன்பதிவு செய்துட்டுப் போகும் நம்மைவிட பதிவு செய்யாமலே போகிறவர்களுக்கே அங்கே இருந்த மக்கள் பெரும்பாலோர் மறைமுகமாக உதவினார்கள், யாருமே அவர்களை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. இந்த அலட்சிய மநோபாவம் இருக்கும் மக்கள் எப்படித் திருந்துவார்கள்.??? எப்படியோ திருச்சி வரை போய்ச் சேர்ந்தோம். அங்கே திரும்ப முன்பதிவு செய்யலாம்னு நினைச்சா மாயவரம் போகும் வண்டி தயார் நிலையில் நின்னுட்டு இருந்தது. சரினு கிளம்பி அந்த வண்டியில் ஏறிடலாம்னு நினைச்சா, எங்க வண்டியிலே இருந்து நாங்க இறங்கி அது நிற்கும் நடைமேடைக்குப்போறதுக்குள்ளே வண்டி கிளம்பிவிட்டது.

முன்பதிவும் கிடைக்கவில்லை. ஆகையால் கும்பகோணம் செல்லும் பேருந்தைப் பிடிச்சோம். தேசீய நெடுஞ்சாலையான இந்தச் சாலை எனக்குத் தெரிஞ்சு பத்தாண்டுகளாய்,சீரமைப்பு நடந்தும் முடிவடையாமல் அப்படியே இருக்கிறது. விரிவாக்கம் முடிந்து சாலையை உடைத்து சமன் செய்து, கற்களும், ஜல்லிகளும், கிராவலும் அடித்த நிலையிலேயே இந்தச் சாலையைத் தொடர்ந்து சில ஆண்டுகளாய்ப் பார்க்கிறேன். இன்னும் சாலைப் பணி முடிந்தபாடில்லை. எப்போது முடியும் என்று நிச்சயமாயும் யாராலும் சொல்லமுடியவில்லை. பேருந்து சில சமயம் அப்படியே ஒருபக்கமாய்ச் சாயும்போது அடி வயித்தைக் கலக்கும். சாலை போடுவதில் நம் நாட்டினருக்கு என்ன சுறுசுறுப்பு என்று தோன்றியதோடல்லாமல், வேந்தரை இந்தச் சாலையில் பயணிக்கச் சொல்லவேண்டும் என்ற விபரீத ஆசையும் தோன்றியது. இல்லாட்டி, கும்பகோணம்-சென்னை பேருந்துப் பாதையில் பயணிக்கச் செய்துவிட்டு, சேத்தியாத் தோப்பில் அணைக்கரைப்பாலத்துக்கருகே இறங்கி நடக்க வைக்கிறாங்களே? அது மாதிரி ஒருமுறையாவது நடந்து வரவேண்டும் வேந்தர். மூட்டை, முடிச்சைத் தூக்கிண்டு பயணிகள் நடப்பதைப் பார்த்தாலே கஷ்டமாய் இருக்கும். ஆனாலும் அந்தப் பாலத்துக்கும் எங்க தெரு மாதிரியான ஜாதகம் போல. இன்னும் விடிவு வரவில்லை. அந்தப் பாலத்திலும் வேந்தர் ஒருமுறையாவது பெட்டி, படுக்கைகளைத் தூக்கிக் கொண்டு இறங்கி நடந்து பாலத்துக்கு இந்தண்டை வரவேண்டும் என்ற ஆசையும் தோன்றியது. தமிழ்நாட்டைப் போல முன்னேறிய மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என்று சொல்றவங்க எல்லாருமே வந்து ஒருமுறையாவது இந்த அவதியைப் படவேண்டும். நல்லவேளையா அந்தப் பக்கமாய்ப் போக நேர்ந்தப்போ எல்லாம் காரிலேயே பயணித்ததால் கஷ்டப்படவில்லை. ஆனாலும் வரிசையாய்க் கார்கள் நின்றிருப்பதைப் பார்த்தால் அந்த இடுக்கான பாலத்தில் எப்படிக் கடக்கப் போகிறது என்று திக் திக்கென்றிருக்கும். பாலம் உடைந்திருக்கும் இடத்தினருகே வந்ததும் சொல்லி வைச்சாப்போல் இரண்டு பக்கமும் வண்டிகள் சற்று நேரம் நின்றுவிடும். கனம் தாங்காமல் கீழே விழுந்துவிடப் போகிறோம் எனக் கலவரமாய் இருக்கும். அந்தச் சில நிமிடங்கள்! வண்டி அந்த இடத்தைக் கடந்து பாலத்துக்கு அந்தப் பக்கம் போனதும் தான் அப்பாடா! நிம்மதியாய் மூச்சு வரும்.

ஒருமாதிரியாத் திருச்சியிலே இருந்து கும்பகோணத்துக்கு மூன்று மணி நேரம் பயணம் செய்து வெகு சீக்கிரமாய் :P கும்பகோணத்தை அடைந்தோம். அங்கே அறை ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்ததால் பிரச்னை இல்லை. அறைக்குப் போய் சாமான்களை வைத்துவிட்டு, சுத்தம் செய்துகொண்டு கும்பகோணம் ராமசாமி கோயிலுக்குப் போனோம். ராமசாமி கோயில் பற்றிய விபரங்களை ஆன்மீகப் பயணம் பக்கத்தில் காணலாம். இங்கே பிரயாண அனுபவங்கள் மட்டுமே.

Sunday, January 24, 2010

ரயில் பயணமா??? வேண்டவே வேண்டாம்!

இம்முறை குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும்போதும் சரி, சென்று அங்கே இருந்த நாலு நாட்களிலும் சரி பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது. கிளம்பற அன்னிக்கே கொஞ்சம் மனம் யோசனைதான் செய்தது. ஏதோ ஒரு இனம்புரியாத கவலை. என்னதான் தை மாசம் கிளம்பவேண்டும் என்ற திட்டம் முன் கூட்டியே போட்டாலும், மூணு மாசம் முன்னாலேயே பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. திடீர்னு எடுத்துட்டுத் தான் போக முடியுது. முன்பெல்லாம் ஒரு மாசம் முன்னாலேயே பயணச்சீட்டு தாராளமாக் கிடைச்சு வந்தது. இப்போ தத்காலில் கூட முன் பதிவே கிடைக்கிறதில்லை. அதுவும் கும்பகோணம் போக ரயில் வசதியும் இப்போ இல்லை. ராத்திரி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்ப்ரஸ் ஒண்ணுதான். அதுக்கு சென்னை கல்யாண மண்டபங்களைப் பதிவு செய்யறாப்போல் எல்லாரும் ஒரு வருஷம், இரண்டு வருஷம் முன்னாடியே பண்ணிடுவாங்க போல. நாங்க முன்பதிவுக்குப் பார்த்தப்போ இடமே இல்லை. திருச்சி போய் அங்கிருந்து போகலாம்னு முடிவு பண்ணினா பல்லவன் பல்லை இளிக்குது, மதுரை செல்லும் வைகையோ மாயமாய் மறைஞ்சு போச்சு! வேறே வண்டிகள் கிளம்பும் நேரம் செளகரியமாய் இல்லை. குருவாயூர் எக்ஸ்ப்ரஸில் சென்றமுறை போனப்போ குளிரூட்டப் பட்ட பெட்டியில் முன்பதிவு செய்யப் பட்ட பயணச்சீட்டு அமர்ந்து செல்லும் வசதியில் கிடைச்சது. இப்போ அந்த வசதியையே எடுத்துட்டாங்களாம். குளிரூட்டப் பட்ட பெட்டிகளில் எல்லாம் படுக்கை வசதிதான். அதிலே திருச்சி வரை அமர்ந்து செல்லும் வசதியில் கிடையாது. சரினு சேர் கார் என அழைக்கப் படும் பெட்டியில் கிடைச்ச வசதியில் சீட்டு எடுத்தாச்சு. வீட்டை விட்டுக் கிளம்பும்போதே சில பிரச்னைகள். என்றாலும் மனசைத் தேத்திக்கொண்டு கிளம்பினோம்.

அங்கே போய் எங்க இடத்தைக் கண்டுபிடிச்சு உட்கார்ந்தும் ஆச்சு. அப்புறமாப் பார்த்தா கூட்டமோ கூட்டம் திபு,திபுனு. எங்கே இருந்து வந்தாங்க?? மூணு பேர் உட்காருமிடத்தில் நெருக்கி அடித்துக் கொண்டு, 4,5 பேரா?? இது என்ன முன்பதிவு செய்யப் பட்ட பெட்டியா? இல்லைனா எல்லாரும் ஏறும் பொதுப் பெட்டியானு திகைச்சுப் போயிட்டோம். அதிலே எல்லாரும் எங்க கிட்டே சண்டை வேறே. நாங்க இரண்டு பேரும் எங்களுக்கு அனுமதிக்கப் பட்ட இடத்திலே உட்கார்ந்துட்டு இருந்தும், அவங்களுக்கும் இடம் விடணும், விட்டுட்டு உட்காரணும், நீங்க என்ன ரயிலையே விலைக்கா வாங்கி இருக்கீங்க?? இந்த சீட் என்ன உங்களுக்குச் சொந்தமானதா?? யார் வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் உட்காரலாம். அப்படினு ஒரே சத்தம், சண்டை. கூச்சல். நாராசமா இருந்தது. திருச்சி வரைக்கும் இந்த இடத்தை 35ரூ கொடுத்து நாங்க விலைக்குத் தான் வாங்கி இருக்கோம்னு சொல்லலாம்னு வாயெடுத்தால், நம்ம ம.பா. என்னிடம் கடுமையான ஆக்ஷேபணை பண்ணிட்டு, சீட்டிலிருந்து எழுந்துட்டு, நாங்க நின்னுட்டு வரோம், நீங்க உட்காருங்கனு சொல்லி வெள்ளைக்கொடி ஏத்திட்டார். என்னத்தைச் சொல்றது? அப்போ பார்த்து டிக்கெட் பரிசோதகர் வந்தாரோ, அவங்க கப் சிப்னு அடங்கிப் போனாங்களோ! ஆனாலும் அதிலும் ஒரு அநியாயம், கொடுமை என்னவென்றால், எங்களைப் போல் முன்பதிவு செய்துட்டு அவங்க அவங்களுக்குனு ஒதுக்கப்பட்ட இடத்திலே அமர்ந்திருக்கிறவங்க பயணச் சீட்டை மாத்திரம் பரிசோதகர் வாங்கி அவரோட அட்டவணையோட சரிபார்த்துட்டுத் திருப்பிக் கொடுத்தார். ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டு கொள்ளவும் இல்லை, அவங்க கிட்டே இருந்து பயணச் சீட்டை வாங்கிக் கூடப் பார்க்கவில்லை.

பயணச்சீட்டு இல்லாமலேயே பிரயாணம் செய்யலாம்போல. இப்போ புதுசா மக்களுக்கு இந்த வசதியை அறிமுகம் செய்திருப்பாங்கபோல! முன்பெல்லாம் ஐம்பது காசுகள் கொடுத்து முன்பதிவு செய்த இடத்திலே ஒரு நாய்க்குட்டி வந்தால் கூட அப்போதைய பரிசோதகர்கள் விரட்டி அடிப்பாங்க. இப்போ??? நாடு முன்னேறி இருக்கே? எவ்வளவு முன்னேற்றம்??? முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் யார்வேண்டுமானாலும் ஏறி ஏற்கெனவே வசதியாய்ப் பிரயாணம் செய்யனு பதிவு செய்துட்டுப் போறவங்களோட சண்டை போட்டுட்டுப் போகலாம்னு ரயில்வே அனுமதி கொடுத்திருப்பது கடந்து நாலு ஆண்டுகளில் கொடுத்திருக்கும் மாபெரும் வசதி. உண்மையில் இந்த வசதியைப் பிரயாணிகளுக்கு எந்த நாட்டிலும் கொடுக்கவே மாட்டாங்க! நாளை கழிச்சு மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப் போறோமே? இந்த ஒரு காரணத்துக்காகவே நம் ரயில்வே துறைக்குப் பாராட்டு விழா எடுக்கலாம், பட்டங்கள், விருதுகள் கொடுக்கலாமே! பரிசோதகர் திரும்பினாரோ இல்லையோ, ஆக்கிரமிப்பாளர்கள் எங்க இடத்தில் வந்து உட்கார்ந்துட்டு வெற்றிப்புன்னகை செய்தாங்க. வேறே வழி?? கிடைச்ச இடத்தில் ஒண்டிக்கொண்டோம். இந்த மட்டும் எங்களை எழுந்து போங்கனு சொல்லலையே? ஒரே ஆச்சரியம் என்னன்னா அந்தப் பெட்டியில் இருந்த மற்ற முன்பதிவு செய்து பிரயாணம் செய்யும் பயணிகளில் யாருமே எங்களுக்கு உதவிக்கு வரவில்லை என்பதே! நம்ம இடத்துக்கு வரலையே? நமக்கு என்ன என்று பேசாமலே இருந்துவிட்டனர். ஒரு சிலர் எங்களோட சண்டை போட்டவங்களுக்கு மறைமுக ஆதரவும் தெரிவித்தனர். அவங்க சாமான்களை நாங்க கால் வைக்கும் இடத்தில் வைக்கலாமே என்ற ஆலோசனைகளையும் தாராளமாய் வழங்கினார்கள். நம்ம ம.பா. உடனே இதுக்குத் தான் பேருந்திலே போகலாம்னு சொன்னேன். அங்கே இந்த மாதிரி சீட்டுக்குப் போட்டி போடமாட்டாங்க பாருனு என்னைப் பார்த்துக் கிண்டலடிச்சார். சரிதானோனு தோணியது எனக்கும்.

ஏனெனில் குளிரூட்டப் பட்ட பெட்டிகளிலே பயணம் செய்யும்போதுமே இம்மாதிரியான ஆக்கிரமிப்புகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து தான் வருகிறது. அதுவும் மும்பை, புது தில்லி போனால் கேட்கவே வேண்டாம். நீங்க காலைக்கீழேயே வைக்கமுடியாது. கீழே இரண்டு பேராவது படுத்திருப்பார்கள். அவங்க மேலே தான் வைக்கணும். பரிசோதகர் கிட்டே சொன்னால் காலம்பர எழுந்து போயிடுவாங்க, கொஞ்சம் பொறுத்துண்டுதான் போகணும்னு சொல்லிடுவார். ஆஹா, நம்ம ரயில்வே ஒரு காலத்தில் எவ்வளவு உன்னதமாய் இருந்தது? இந்தத் தலைமுறை அது பற்றி அறிந்திருக்குமா?? சந்தேகமே! இந்தப் பதிவை இங்கே போடுவதின் முக்கிய காரணமே அனைத்துத் தரப்பிற்கும் இந்தச் செய்தி போகவேண்டும் என்பதே. இந்திய அரசின் grievanaces தளத்தில் இது பற்றிச் சொல்லப் போகிறேன் என்றாலும் இதன் மூலம் ரயில்வே அதிகாரிகள் எவருக்கானும் தெரிந்தால் இன்னும் நல்லது என்பது என் நம்பிக்கை! ஏனெனில் இது முதல்முறை அனுபவம் இல்லை.