வானரப் படைகளும், ராம, லட்சுமணர்களும், விபீஷணனோடு இந்திரஜித் யாகம் செய்யும் இடத்துக்குப் போயிருக்காங்க. இந்திரஜித் யாகம் செய்ய நேரம் ஆகாதா? அதுக்குள்ளே நாம இதையெல்லாம் ஒரு கண்ணோட்டம் விடலாமேனு ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே நேயர் ஒருத்தர் விருப்பம் இல்லாமலேயே, எப்போ மீண்டும் , வால்மீகியை ஆரம்பிக்கப் போறீங்கனு கேட்கிறார்! :P இன்னிக்கு இதோட முடிச்சுட்டு, நாளைக்கு வால்மீகி தான் ஆரம்பிக்கப் போறேன். இன்னிக்கு ஒருநாள் பொறுத்துக்கணும். உத்தர காண்டம் வந்தால் கம்பர் வரவே மாட்டார்! கம்பர் அதை எழுதவே இல்லையே? :P அதுவரை கம்பர் தொடருவார்.
*************************************************************************************
பல அரக்கர்கள் இறந்தபின்னரும், ராமன் போர்க்களத்திலேயே இருந்ததாய்க் கம்பர் கூறவில்லை. வானரப் படைகளும், வானரத் தளபதிகளும், லட்சுமணனுமே எதிர்கொண்டதாய்ச் சொல்லும் கம்பர், இந்திரஜித்துடன் சண்டை போடும் லட்சுமணன் பிரம்மாஸ்திரத்தை ஏவி அவனை அழிக்க எண்ணியதாயும், அதை ராமர் தடுத்ததாயும் சொல்கின்றார். பின்னர் இந்திரஜித் மறைந்திருந்து லட்சுமணனைத் தாக்க வேள்விகள் பல புரிந்துவிட்டு, பிரம்மாஸ்திரத்தை ஏவும் எண்ணத்தோடு வந்ததாயும் அப்போது ராமன் அங்கே போர்க்களத்தில் இல்லை என்பதாயும் கூறுகின்றார்.
பிரம்மாத்திரப் படலம்: பாடல் எண் 2543
"வந்திலன் இராமன் வேறு ஓர் மலை உளான் உந்தை மாயத்
தந்திரம் தெரிவான் போனான் உண்பன தாழ்க்கத் தாழா
எந்தை ஈது இயன்றது என்றார் மகோதரன் யாண்டை என்னை
அந்தரத்திடையன் என்றார் இராவணி அழகிற்று என்றான்"
என்று இந்திரஜித் போர்க்களத்தின் நிகழ்ச்சிகளைக் கேட்டு அறிந்த பின்னர் வேள்விகள் செய்து பிரம்மாஸ்திரத்தை ஏவத் தயார் ஆனதாயும் கூறுகின்றார்.
பாடல் எண் 2544, 45
"காலம் ஈது எனக் கருதிய இராவணன் காதல்
ஆல மாம மரம் ஒன்றினை விரைவினில் அடைந்தான்
மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால்
கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார்."
"அம்பினால் பெருஞ்சமிதைகள் அமைத்தனன் அனலில்
தும்பை மாம் மலர் தூவினன் காரி என் சொரிந்தான்
கொம்பு பல்லோடு கரிய வெள்லாட்டு இருங்குருதி
வெம்பு வெந்தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான்"
என்று வேள்விகளைச் செய்து முறையாகப் பிரமாஸ்திரத்தை இந்திரஜித் ஏவியதாய்க் குறிப்பிடுகின்றார். மேலும் அரக்கர்களில் பலரும் மகோதரனும் மாயைகள் பல புரிந்து தேவேந்திரன் போலும், தேவர்கள் போலும், ரிஷி, முனிவர்கள் போலும் உருமாறி வானரர்களுடன் போரிட்டதாயும் சொல்கின்றார் கம்பர்.
பாடல் எண் 2550
கோடு நான்குடைப் பால் நிறக் களிற்றின் மேல் கொண்டான்
ஆடல் இந்திரன் அல்லவர் யாவரும் அமரர்
சேடர் சிந்தனை முனிவர்கல் அமர் பொரச் சீறி
ஊடு வந்து உற்றது என்கொலோ நிபம் என உலைந்தார்."என்று வானரர்கள் வருந்தியதாயும், அந்த வேளையில் இந்திரஜித் தன்னுடைய பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகம் செய்ததாயும், லட்சுமணனும், வானரர்களும் அதனால் செயலற்று விழுந்ததாயும் சொல்கின்றார். அனுமனும் கூட பிரமாஸ்திரத்தில் கட்டுண்டதாகத் தெரிவிக்கின்றார் கம்பர். அப்போது ராமன் வேறிடத்தில் இருந்ததாயும், பின்னர் போருக்கு முறையான ஏற்பாடுகள் செய்துகொண்டு ஏதும் அறியாமலேயே புறப்பட்டு வந்ததாகவுமே கம்பர் சொல்கின்றார். பிரமாஸ்திரத்தில் ராமனும் கட்டுண்டது பற்றிய செய்தி கம்பனில் இல்லை.
பாடல் எண்:2570
செய்ய தாமரை நாள் மலர்க்கைத்தலம் சேப்ப
துய்ய தெய்வ வான் படைக்கு எலாம் வரன் முறை துரக்கும்
மெய்கொள் பூசனை விதிமுறை இயற்றி மேல் வீரன்
மொய் கொள் போர்க்களத்து எய்துவாம் இனி என முயன்றான்."
போர்க்களம் வந்த ராமன், வானர வீரர்கள் மட்டுமின்றி, சுக்ரீவன், அனுமன், லட்சுமணன் அனைவரையும் இழந்துவிட்டோமே எனக் கதறுவதாயும் சொல்கின்றார். லட்சுமணனை நினைத்து ராமன் புலம்புவதாயும் கம்பர் கூறுகின்றார்.
"மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர் வாழேன்
ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன் தான்
பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பப் பொறையாற்றுவர்
வேண்டாவோ நான் நல் அறம் அஞ்சி மெலிவுற்றான்"
என்று சொல்லும் கம்பர், துக்கம் தாங்காமல் லட்சுமணனை அணைத்த வண்ணமே ராமன் துயிலுற்றதாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 2602
என்று என்று ஏங்கும் விம்மும் உயிர்க்கும் இடை அஃகி
சென்று ஒன்ரு ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த
பொன்றும் என்னும் நம்பியை ஆர்வத்தோடு புல்லி
ஒன்றும் பேசான் தன்னை மறந்தான் துயில்வுற்றான்." என்று ராமன் தன்னை மறந்து உறங்கியதாய்ச் சொல்லும் கம்பர் ராமனை தேவர்கள் உண்மையை உணர்த்தி எழுப்புவதாயும் கூறுகின்றார். ஆனால் வால்மீகியில் இதெல்லாம் கிடையாது. இதற்கெல்லாம் பின்னரே, ராமனும் இறந்துவிட்டான், என நினைத்த அரக்கர்கள் ராவணனிடம் சென்று நீ ஜெயித்தாய், உன் பகைவன் ஒழிந்தான் எனக் கூறுவதாயும், சீதையை ராவணன் போர்க்களம் காண அப்போது அழைத்து வந்ததாயும் சொல்கின்றார் கம்பர்.
பாடல் எண் 2612
என் வந்தது நீர் என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப எறி செருவில்
நின் மைந்தந்தன் நெடுஞ் சரத்தால் துணைவர் எல்லாம் நிலம் சேர
பின் வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கிப் பெருந்துயரால்
முன் வந்தவனும் முடிந்தான் உன் பகை போய் முடிந்தது என மொழிந்தார்." என்று சொல்கின்றார்.
இதன் பின்னர் சீதை களம் கண்டு திரும்பிய பின்னரே மருத்து மலைப் படலம். நாளைக்கும் கம்பர் தானோ??? சில முக்கியமான இடங்களில் ஒப்பு நோக்குவதைத் தவிர்க்க முடியவில்லை.
No comments:
Post a Comment