திரும்பத் திரும்ப அருமைத் தம்பி லட்சுமணன் தாக்கப் படுவதை நினைந்து ராமர் மனம் வேதனையில் ஆழ்ந்தது. லட்சுமணன் மார்பில் பதிந்த வேலை எடுக்க முனைந்தனர். ஆனால் வேலோ மார்பைத் துளைத்துக் கொண்டு சென்று பூமியில் பதிந்து விட்டிருந்தது. ராமர் தன் கையினால் வேலைப் பிடுங்க முனைந்தார். ஆனால் அவராலும் முடியவில்லை. அதற்குள் ராவணனோ ராமரைத் தன் அம்புகளால் துளைத்தெடுக்க ஆரம்பித்தான். ராவணனின் தாக்குதலையும் தாங்கிக் கொண்டு ராமர் லட்சுமணனை எப்படியாவது காப்பாற்றத் துடித்தார். பின்னர் அனுமனையும், சுக்ரீவனையும் பார்த்து, லட்சுமணனைச் சற்று நேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, ராவணனுக்குத் தான் பதில் தாக்குதல் கொடுக்கவேண்டும் என்று சொல்கின்றார். நான் யார், எப்படிப் பட்ட வீரன் என்பதை ராவணனுக்குக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், தன் வீரத்தைக் கண்டு தேவாதிதேவர்களும், ரிஷி, முனிவர்களும் கண்டு பிரமிக்கப் போகின்றார்கள் என்றும், தான் கற்ற போர்த்தொழில் வித்தை அனைத்தையும் இந்தப் போர்க்களத்தில் தான் காட்டப் போவதாயும் தெரிவிக்கின்றார். ராவணனை நோக்கி முன்னேறுகின்றார் ராமர். இருவருக்கும் கடும்போர் மூண்டது. ராமரின் அம்புகளின் வேகத்தைத் தாங்க முடியவில்லை ராவணனால். அவனால் முடிந்தவரையில் முயன்று பார்த்துவிட்டுப் பின்னர் சற்று மறைந்திருந்துவிட்டு வரலாம் என போர்க்களத்தில் இருந்து ஓடி மறைந்தான் ராவணன்.இதனிடையில் லட்சுமணனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதா எனப் பார்க்கச் சென்றார் ராமர். ரத்தவெள்ளத்தில் மயங்கிக் கிடந்த இளவலைப் பார்த்த ராமரின் மனம் பதறியது. சுஷேணன் என்னும் வானரத்திடம் தன் கவலையைத் தெரிவிக்கின்றார் ராமர். என் பலத்தையே நான் இழந்துவிட்டேனோ என்று புலம்புகின்றார். லட்சுமணனுக்கு ஏதானும் நடந்துவிட்டால் எவ்வாறு உயிர் தரிப்பேன் என்று கண்ணில் கண்ணீர் பெருகச் சொல்கின்றார். லட்சுமணனின் முனகலையும், வேதனையையும் பார்க்கும்போது செய்வதறியாது தவிக்கின்றேனே, என்று கலக்கம் உற்ற ராமர், தன் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் தன் பார்வையை மறைப்பதையும், தன் அங்கங்கள் பதறுவதையும், உணர்ந்தவராய், லட்சுமணன் இல்லாமல் இனித் தான் வெற்றி பெற்றும் என்ன பயன் என்று கேட்கின்றார். "என் மனைவியான சீதையைத் திரும்பப் பெறுவதற்காக இந்த யுத்தம் செய்யும் எனக்கு உதவியாக வந்த என் தம்பி இனி எனக்குத் திரும்பக் கிடைப்பானா?" என்று கவலை மேலிடுகின்றது ராமருக்கு. மனைவியோ, மற்ற உறவின்முறைகளோ கிடைப்பது கடினம் அல்ல.. ஆனால் லட்சுமணன் போன்ற அறிவிலும், அன்பிலும், முன்யோசனையிலும், துக்கத்திலும், சந்தோஷத்திலும் பங்கெடுப்பவனும், தன்னைப் பற்றி நினையாமல் அண்ணனின் செளகரியத்தையே நினைப்பவனும் ஆன தம்பி எங்கே கிடைப்பான்? என வேதனைப் படுகின்றார் ராமர்.. என்ன பாவம் செய்தேனோ, இப்படிப்பட்ட தம்பி அடிபட்டுக் கீழே வீழ்ந்து கிடந்து வேதனையில் துடிப்பதைக் காண, தம்பி, என்னை மன்னித்துவிடு, என்று கதறுகின்றார் ராமர். அவரைத் தேற்றிய சுஷேணன், அனுமனைப் பார்த்து, நீ மீண்டும் இமயமலைச் சாரல் சென்று சஞ்சீவி மலையில் இருந்து விசால்யகரணி, சாவர்ண்ய கரணி, சஞ்சீவகரணி , ஸம்தானி, ஆகிய மூன்று முக்கிய மூலிகைகளைக் கொண்டுவா, லட்சுமணனை உயிர் பிழைக்க வைத்துவிடலாம் என்றும் சொல்கின்றான் சுஷேணன், அனுமனிடம்.மீண்டும் சென்ற அனுமன் மீண்டும் மூலிகைகளை இனம் காணமுடியாமல் தவித்ததால் மீண்டும் சிகரத்தை மட்டும் கொண்டு போவதால் காலதாமதமும், மீண்டும், மீண்டும் வரவேண்டியும் இருக்கும் என நினைத்தவராய், இம்முறை மலையையே பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்கின்றார். மூலிகை மருந்துகள் உள்ள மலையே வந்ததும், லட்சுமணனுக்கு அதன் சாறு பிழிந்து மூக்கின்வழியே செலுத்தப் பட்டதும், லட்சுமணன் மூச்சுவிட ஆரம்பித்து மெல்ல, மெல்ல எழுந்தும் அமர்ந்தான். தம்பியை உயிருடன் கண்ட மகிழ்ச்சியில் ராமரும் மனம் மகிழ்ந்தார். மேலும் சொல்கின்றார்:”நீ இல்லாமல் நான் இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தால் அதனால் என்ன பயன்?? நல்லவேளையாக மரணத்தின் பிடியிலிருந்து நீ தப்பி வந்தாயே?” என்று கூறவும், லட்சுமணன் அவரை எடுத்த காரியத்தை முடிக்கவேண்டுகின்றான். ராவணன் சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாகவே மரணம் அடையவேண்டுமென்றும், செய்த சபதத்தையும், கொடுத்த வாக்கையும் ராமர் நிறைவேற்ற வேண்டுமென்றும் சொல்கின்றார். ராமரும் உடன்பட்டு மீண்டும் ராவணனுடன் போருக்குத் தயார் ஆகின்றார். ராவணனும் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றவனாய்ப் போர்க்களம் வந்து சேருகின்றான். ராமருக்கும், ராவணனுக்கும் மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கின்றது. கடுமையாக இரு வரும் போரிட்டனர். ராவணனோ அதி அற்புதமான ரதத்தில் அமர்ந்திருக்க, ராமரோ தரையில் நின்று கொண்டே போரிட நேர்ந்தது. யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் இந்த வித்தியாசம் புரிந்ததோடல்லாமல், தரையில் நின்று கொண்டே போரிட்டாலும் ராமரின் வீரம், ராவணனைச் செயலிழக்கச் செய்தது என்பதையும் கண்டு கொண்டார்கள்.. அப்போது அவர்களிடையே ராமருக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணமும் உண்டாகியது. உடனேயே தேவேந்திரனின் ரதத்தை அனுப்ப முடிவு செய்து, தேவேந்திரன் தன்னுடைய ரதசாரதியாகிய மாதலியை அழைத்து, ரதத்துடன் உடனே பூமிக்குச் சென்று ராமருக்கு உதவி செய்யுமாறு கூற அவனும் அவ்வாறே புறப்பட்டுச் சென்று ராமரை வணங்கி இந்திரனுடைய தேரையும், ஆயுதங்களையும் காட்டி இதன் மீது அமர்ந்துகொண்டு ராவணனுடன் போரிட்டு அவனை வெல்லுமாறு கூறுகின்றான்.
தேரை மும்முறை வலம் வந்து வணங்கிவிட்டு, ராமர் அதில் ஏறி அமர்ந்தார். மீண்டும் சண்டை ஆரம்பம் ஆனது. ஆனால் இம்முறை ராவணனின் கையே ஓங்கி நின்றது. தன் அம்புகளாலும், பாணங்களாலும் ராமரைத் திணற அடித்துக் கொண்டிருந்தான் ராவணன். இலங்கேசுவரனின் இடைவிடாத தாக்குதல்கள் ராமரை நிலைகுலையச் செய்ததோடு அல்லாமல், தன்னுடைய வில்லில் அம்புகளைப் பூட்டி, நாண் ஏற்றவும் முடியாமல் தவிக்கவும் நேரிட்டது அவருக்கு. கோபம் கொண்ட ராமர் விட்ட பெருமூச்சு, பெரும் புயற்காற்றைப் போல் வேகத்தோடு வந்தது. அவர் பார்வையை நான்கு புறமும் செலுத்தியபோது சக்தி வாய்ந்த மின்னல் ஒன்று விண்ணை வெட்டுவது போல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அந்தப் பார்வையில் பொசுங்கிவிடுவோமோ என சகல ஜீவராசிகளும் நடுங்கின. மூச்சின் வேகத்தில் விண்ணில் வட்டமிடும் மேகங்கள் சுழன்றன. கடலானது பொங்கிக் கரைக்கு வரத் தொடங்கியது. சூரியனின் ஒளி குன்றியது. ராவணன் மிக மிகச் சக்தி வாய்ந்த ஒரு ஆயுதத்தைக் கையில் எடுத்தான். ராமரின் கோபத்தைக் கண்டு அஞ்சியவண்ணமே அவன் அந்த ஆயுதத்தைப் பிரயோகிக்க ஆரம்பித்தான். போரில் இறந்த அனைத்து அரக்கர்கள் சார்பிலும் இந்த ஆயுதத்தைச் செலுத்தி ராமரையும், லட்சுமணனையும் , வானரப் படைகளையும் அடியோடு அழிக்கும்படியான வல்லமை பொருந்தியது இந்த ஆயுதம் என்று கூவிக் கொண்டே அதைச் செலுத்தினான் இலங்கேசுவரன்.
ராமர் அந்த ஆயுதத்தைத் தடுக்க முயன்றபோது முதலில் அவரால் முடியவில்லை. பின்னர் இந்திரனின் சிறப்பு வாய்ந்த சூலத்தினால் அந்த ஆயுதத்தைப் பொடிப் பொடியாக்கினார். ராவணனின் குதிரைகளை வெட்டி வீழ்த்திவிட்டு அவன் மார்பில் பாணங்களைச் செலுத்த ஆரம்பித்தார். ராவணன் உடலில் இருந்து செந்நிறக் குருதிப் பூக்கள் தோன்றின. எனினும் ராவணன் தீரத்துடனும், மன உறுதியுடனும் போரிட்டான். அதைக் கண்ட ராமர் அவனைப் பார்த்துக் கோபத்துடன் சொல்கின்றார்:” ஏ, இலங்கேசுவரா! அபலலயான சீதையை, அவள் சம்மதம் இல்லாமலும், தன்னந்தனியாக இருக்கும் வேளையிலும் பார்த்து நீ அபகரித்துக் கொண்டு வந்தாயே? என் பலத்தை நீ அறியவில்லை, அறியாமல் அபகரணம் செய்துவந்த நீயும் ஒரு வீரனா? மாற்றான் மனைவியைக் கோழைத்தனமாய் ஒருவரும் இல்லாத சமயம் கொண்டு வந்து வைத்துள்ள நீயும் ஒரு வீரனா? உனக்கு வெட்கமாய் இல்லையா? மனசாட்சி உள்ளவர்களுக்கே ஏற்படும் தயக்கமும், வெட்கமும் உனக்கு அப்போது ஏற்படவில்லையா? நீ இந்தக் காரியம் செய்ததினால் உன்னை, வீராதி வீரன், என்றும் சூராதி சூரன் என்றும் நினைத்துக் கொண்டுள்ளாய் அல்லவா? அது தவறு என உனக்குத் தெரியாமல் போனதும், உனக்கு வெட்கமும், அவமானமும் ஏற்படாததும் விந்தை தான். என் முன்னே நீ அப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்க முடியுமா? அது முடியாதென்பதால் தானே, என்னை அப்புறப்படுத்திவிட்டு, நான் இல்லாதபோது என் மனைவியை அபகரித்து வந்திருக்கின்றாய்? உன்னை நான் இன்றே கொல்லுவேன். உன் தலையை அறுத்துத் தள்ளப் போகின்றேன். என் அம்பினால் உன் மார்பு பிளக்கப் பட்டு குருதி பெருகும். அந்தக் குருதியைக் கழுகுகளும், பறவைகளும் வந்து பருகட்டும். “ என்று ராமர் கூறிவிட்டு ராவணன் மீது மீண்டும் அம்பு மழை பொழியத் தொடங்கினார். கூடவே வானரர்களும் சேர்ந்து ராவணனைத் தாக்கத் தொடங்கினார்கள். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ராவணன் பிரமித்து நிற்கவே, செய்வதறியாது திகைத்த அவனைக் காக்க வேண்டி, ராவணனின் தேரோட்டி, தேரை யுத்த களத்தில் இருந்து திருப்பி வேறுபக்கம் ஓட்டிச் சென்றான். ராவணனுக்குக் கோபம் பெருகியது. மிக்க கோபத்துடன் அவன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளத் தொடங்கினான்.
No comments:
Post a Comment