ராமர் வரப் போகும் செய்தி கேட்டு மகிழ்ந்த பரதன்,ராமரின் பாதுகைகளைத்தன் தலையில் தாங்கிய வண்ணம் பாதுகைகளுக்கு மேலே வெண்கொற்றக் குடையுடனேயே, மந்திரி, பிரதானிகளுடனும், சகலவிதமான மரியாதைகளுடனும் ராமரை எதிர்கொண்டழைக்கப் புறப்பட்டான். தாய்மார்கள் மூவரும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர். கெளசலையின் தலைமையில் மூவரும் பல்லக்கில் அமர, சத்ருக்கனனோ ராமர் வரும் வழியெல்லாம் அலங்காரம் செய்யவேண்டிய பொறுப்பை ஏற்று, அதற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யத் தொடங்கினான். அயோத்தி மக்கள் அனைவருக்கும் ராமர் திரும்பி வெற்றித் திருமகளுடனும், சீதையுடனும், லட்சுமணன் மற்றும் அனைத்து வீரர்களுடனும் வரும் செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்ததோடு அல்லாமல், அனைவருமே ராமரை எதிர்கொண்டு அழைக்க விரும்பி நந்திகிராமம் நோக்கிப் புறப்பட்டு வர ஆரம்பித்தனர். பொறுத்துப் பார்க்கக் கூடிய அளவு நேரம் கடந்தும் ராமரைக் காணாமல் பரதன் கலங்கி, ஒரு வானரத்தின் பொறுப்பற்ற பேச்சை நம்பினோமோ என எண்ணி, அனுமனை விசாரிக்கத் தொடங்கினான். அப்போது விண்ணில் பலத்த சப்தம் எழும்ப, புஷ்பகம் தோன்றியது. அதைப் பார்த்த அனுமன் அதோ அவர்கள் வருகின்றனர் என்று கூறிக் காட்ட பரதனும், மேலே பார்த்தான். ராமர், சீதை, லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன் மற்றும் பலரும் அமர்ந்திருந்த புஷ்பகம் கண்ணில் பட்டதும், பரதன் தன் இருகையும் கூப்பிக் கொண்டு ராம்ரை நோக்கித் தொழுதவண்ணம் கண்ணில் நீர் பெருக நின்றான். புஷ்பகம் தரையில் இறங்கியது.
பரதன் புஷ்பகத்தால் தூக்கப் பட்டு, அதனுள் நுழைய, ராமர் அவனைக் கண்டு மகிழ்வோடு கட்டி அணைத்துத் தன் பாசத்தைத் தெரிவித்தார். பின்னர் லட்சுமணனோடு அளவளாவிவிட்டு பரதன் சீதைக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்தான். அனைவரையும் பார்த்து ராமருக்கு உதவியதற்காகத் தன் நன்றியையும், ராமர் போலவே தானும், சத்ருக்கனனும் நட்போடு பழகுவோம் எனவும் தெரிவித்தான். சுக்ரீவனை நீ எங்கள் ஐந்தாவது சகோதரன் என்று கூறிய பரதன், விபீஷணனுக்கும் தன் நன்றியத் தெரிவித்தான். சத்ருக்கனனும் அவ்வாறே அனைவருக்கும் தன் மரியாதைகளையும், நன்றியையும் தெரிவிக்க, பதினான்கு வருஷம் கழித்துச் சந்திக்கும் தன் தாயை ராமர் வணங்கினார். பின்னர் சுமித்திரை, கைகேயி போன்றோருக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் வசிஷ்டரையும் வணங்கினார். பரதன் ராமரின் பாதுகைகளை அவர் காலடியில் வைத்துவிட்டு அவரை வணங்கி, அவரிடம் சொல்கின்றான்."நீங்கள் என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருந்த ராஜ்யத்தை நான் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கின்றேன். உங்கள் அருளினாலும், உதவியினாலும் தானியக் கிடங்கும், பொக்கிஷமும் நிரம்பி வழிகின்றது. படை வீரர்கள், அரண்மனை, கிடங்குகள் போன்றவற்றைச் சரிபார்த்துக் கொள்ளும்படி வேண்டுகின்றேன்."
பின்னர் அனைவரும் நந்திகிராம ஆசிரமத்தை அடைந்தனர். ராமர் புஷ்பகம் குபேரனையே போய் அடையவேண்டும் என விரும்ப அவ்வாறே அந்த விமானம் மீண்டும் குபேரனையே போய்ச் சேர்ந்தது. பரதன் ராஜ்ய பாரத்தை ராமரை ஏற்கும்படி வேண்டினான். அயோத்தியின் உண்மையான அரசர் ஆன ராமர் இருக்கும்போது தான் இந்தச் சுமையைத் தாங்கமுடியாது எனவும் தெரிவிக்கின்றான். ராமருக்குப் பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. ராமரின் சடைமுடி அவிழ்க்கப் பட்டு, ஒரு அரசனுக்குரிய அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் கூட இருந்து உதவ, ராமரின் அலங்காரங்கள் நடக்கின்றன. சீதைக்கு கெளசலையின் மேற்பார்வையில் அரண்மனைப் பெண்டிரும், சுமித்திரை, கைகேயியும் உதவ அலங்காரங்கள் செய்கின்றனர். சுமந்திரர் வழக்கம்போல் அரசனின் தேரை ஓட்டி வர, ராமரும், சீதையும் அதில் அமர்ந்தனர். அனைவரும் பின் தொடர, நந்திகிராமத்தில் இருந்து அயோத்தியை வந்தடைந்தனர்.
ரிஷிகள் வேதம் ஓதினர். தேவகீதம் முழங்கப் பட்டது. வாத்தியங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினார்கள். பரதன் தேரோட்டியாகப் பொறுப்பு ஏற்க, சத்ருக்கனன் வெண்கொற்றக் குடை பிடிக்க, லட்சுமணன் சாமரம் வீச, விபீஷணன் இன்னொரு பக்கம் சாமரம் வீச பவனி வருகின்றார் ராமர். மறுநாள் விடியும் முன்னர் நான்கு பொற்குடங்களில் நான்கு பக்கத்து சமுத்திரத்திலிருந்தும் நீர் கொண்டுவரச் சொல்லி ஜாம்பவான், அனுமன், கவயன், ரிஷபன் ஆகிய வானர வீரர்களுக்குப் பரதன் வேண்டுகோள் விடுக்க அவ்வாறே கொண்டுவரப் பட்டது. பல நதிகளில் இருந்தும் புனித நீர் சேகரிக்கப் பட்டது. விலை உயர்ந்த ரத்தின சிம்மாசனத்தில் ராமரையும் சீதையையும் அமர்த்தினார்கள். பின்னர் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயனர், கெளதமர், விஜயர் போன்ற ரிஷிகள் வேத மந்திரங்களை முறைப்படி ஓதி, புனித நீரினால் ராமருக்கும், சீதைக்கும் பட்டாபிஷேகம் செய்தனர். மனுவின் வம்சத்தில் வந்த பிரசித்தி பெற்ற மன்னர்களினால் அணியப் பட்ட சிறப்பு வாய்ந்த கிரீடம் வசிஷ்டரால் ராமருக்கு அணிவிக்கப் பட்டது. சத்ருக்கனன் வெண்கொற்றக் குடை ஏந்த, சுக்ரீவனும், விபீஷணனும் சாமரம் வீச, வாய்தேவன் பொன்னும், மணியும் கலந்த நூறுதாமரைகளைக் கொண்ட மாலையைப் பரிசாய்க் கொடுக்க கந்தர்வர்கள் தேவ கானம் இசைக்க ராமர் மணி முடி சூடினார்.
ராமரின் பட்டாபிஷேகம் இனிதாய் முடிந்தது. ராமர் அனைவருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். தான, தருமங்களை அரச முறைப்படி செய்தார். எனினும் நம் ராமாயணக் கதையின் இன்னும் உத்தரகாண்டம் இருக்கின்றது. அதுவும் வரும். உத்தரகாண்டம் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கின்றது. சீதைக்கு மீண்டும், மீண்டும் நேரும் துக்கம், அதனால் அவள் பட்ட துன்பங்கள். ராமரின் நிலை! ராமரின் மறைவு! அனைத்தையும் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னர் சற்றே கம்பராமாயணத்தில் ராமர் அயோத்தி திரும்பும் முன்னர் பரதனின் நிலை பற்றியும், ராம பட்டாபிஷேகம் பற்றியும் பார்க்கலாம். கம்பர் தன் ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு முடித்திருக்கின்றார்.
துளசி ராமாயணத்தில் சீதை அக்னிப்ரவேசத்தில் அக்னியில் இறங்குவது மாயசீதை என்றும், மாயசீதை அக்னியில் இறங்கி மாயமாகிவிட்டதாயும், பின்னர் உண்மையான சீதை வெளியே வருவதாயும் சொல்லி இருக்கின்றார். அதே போல் உத்தர காண்டம் துளசிதாஸ் எழுதி இருப்பது வால்மீகியில் இருந்து மாறுபட்டே இருக்கின்றது. பொதுவாக ராமாயணத்தைப் பட்டாபிஷேகத்தோடு தான் முடிப்பார்கள். ராமருக்கு நேரிடும் துக்கத்தைத் தாங்கும் சக்தி இல்லை என்றோ என்னவோ தெரியவில்லை. ஆனால் நாம் முதலில் இருந்தே ஒரு மனிதனின் கதையாகவே பார்த்து வந்திருப்பதால், அந்த மனிதனுக்கு நேரிடும் அனைத்துத் துன்பங்களையும் பார்த்துவிடுவோமே!!
No comments:
Post a Comment