எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, July 04, 2008

கம்பர் காட்டும் காட்சிகள் - தொடர்ச்சி!!

மாயா சனகன் வால்மீகியில் வருவதில்லை. அப்படி ஒரு காட்சியே வால்மீகி சொல்லவில்லை. அதிகாயனைக் கொன்ற லட்சுமணனைப் பழி தீர்க்க ராவணனே இந்திரஜித்திடம் சொல்லி லட்சுமணனை நாகபாசத்தால் பிணிக்குமாறு சொல்லுவதாயும் கம்பர் கூறுகின்றார். அது குறித்த பாடல்:
நாகபாசப் படலம்: பாடல் எண் 1957
"ஏகா இது செய்து எனது இன்னலை நீக்கிடு எந்தைக்கு
ஆகாதனவும் உளதோ எனக்கு ஆற்றலார் மேல்
மா கால் வரி வெஞ்சிலையோடும் மதித்த போதே
சேகு ஆகும் என்று எண்ணி இவ் இன்னலில் சிந்தை செய்தேன்"
என்று சொல்கின்றார் கம்பர். இதன் பின்னரே நடக்கும் கடும்போரில் வானர சேனைகளை இந்திரஜித் சிதற அடிப்பதைக் கண்ட இலட்சுமணன் விபீஷணனுடன், இந்திரஜித்தைத் தான் தனியாக எதிர்க்கக் கலந்தாசிப்பதாயும் சொல்கின்றார். இதன் பின்னரும் நடந்த கடும்போருக்குப் பின்னர் இந்திரஜித் தன் மாயாசக்தியால் மறைந்திருந்து நாகாஸ்திரத்தை ஏவ மறைய, அப்போது இந்திரஜித் தோற்று ஓடிவிட்டான் என்று போரை வானரப் படை நிறுத்தி இருந்த சமயம் நாகபாசத்தால் கட்டுகின்றான் இந்திரஜித். அந்தப் பாடல்: பாடல் எண் 2132
"விட்டனன் அரக்கன் வெய்ய படையினை விடுத்தலோடும்
எட்டினோடு இரண்டு திக்கும் இருள் திரிந்து இரிய ஓடி
கட்டினது என்ப மன்னோ காகுத்தர்கு இளைய காளை
வட்ட வான் வயிரத் திண் தோள் மலைகளை உளைய வாங்கி." என்று கம்பர் நாகபாசங்களாலும், லட்சுமணன் மட்டுமே கட்டுண்டு கிடப்பதாயும், அதன் பின்னர் அனுமன் முதலானவர்களையும் நாகபாசம் மெல்லப் பிணித்ததாயும் சொல்கின்றார்.

பாடல் எண் 2134
"மற்றையோர் தமையும் எல்லாம் வாள் எயிற்று அரவம் வந்து
சுற்றிய வயிரத் தூணின் மலையின் பெரிய தோள்கள்
இற்றன இற்ற என்ன இறுக்கின இளகா உள்ளம்
தெற்றென உடைய வீரர் இருந்தனர் செய்வது ஓரார்."
என்று சொல்கின்றார் கம்பர். இதன் பின்னர் விபீஷணன் லட்சுமணன் நிலைகண்டு கலங்கிப் புலம்பியதாயும், அவனுடன் வந்த அவன் உற்ற தோழர்களில் ஒருவன் ஆன அனலன் என்பவன் ராமனிடம் போய் லட்சுமணனுக்கு நேர்ந்த கதியைச் சொல்லிப் போர்க்களம் அழைத்ததாயும் சொல்கின்றார் கம்பர். இந்தப் படலத்தில் அதுவரை ராமன் போர்க்களம் வந்ததாய்ச் சொல்லவில்லை. பின்னர் ராமர் விபீஷணனிடம் தம்பியின் நிலை குறித்து ஆலோசித்துப் புலம்புவதாயும், அது கண்டு விண்ணில் தேவர்களும் மனம் கலங்குவதாயும், இவை எல்லாவற்றையும் பார்த்த கருடன், நாகபாசத்தில் இருந்து லட்சுமணனை விடுவிக்கப் புறப்பட்டு வந்ததாயும் சொல்கின்றார்.
பாடல் எண்: 2186, 87
"இத்தன்மை எய்தும் அளவின் கண் நின்ற
இமையோர்கள் அஞ்சி இது போய்
எத்தன்மை எய்தி முடியும்கொல் என்று
குலைகின்ற எல்லை இதன்வாய்
அத்தன்மை கண்டு புடை நின்ற அண்ணல்
கலுழன் தன் அன்பின் மிகையால்
சித்தம் கலங்கும் இது தீர மெள்ள
இருளூடு வந்து தெரிவான்.

"அசையாத சிந்தை அரவால் அனுங்க
அழியாத உள்ளம் அழிவான்
இசையா இலங்கை அரசோடும் அண்ணல்
அருள் இன்மை கண்டு நயவான்
விசையால் அனுங்க வடமேரு வையம்
ஒளியால் விளங்க இமையாத்
திசையானை கண்கள் முகிழா ஒடுங்க
நிறை கால் வழங்கு சிறையான்."

நாகபாசத்தில் இருந்து லட்சுமணனை விடுவிக்கும் கருடனுக்கு, ராமன் விஷ்ணுவின் அவதாரம் எனத் தெரிந்து அதை ராமனிடமே சொல்லுவதாயும் கம்பர் தெரிவிக்கின்றார். ராமனைக் கருடன் தேற்றுதல் என்னும் அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கின்றார் கம்பர்:
பாடல் எண் 2200
"சொல் ஒன்று உரைத்தி பொருள் ஆதி தூய
மறையும் துறந்து திரிவாய்
வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி
மிளிர் சங்கம் அங்கை உடையாய்
சொல் என்று உரைத்தி கொலையுண்டு நிற்றி
கொடியாய் உன் மாயை அறியேன்
அல் என்று நிற்றி பகல் ஆதி ஆர் இல்
அதிரேக மாயை அறிவார்."

"மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி
மயல் ஆரும் யானும் அறியேம்
துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி
ஒரு த்னமை சொல்ல அரியாய்
பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி
பிறவாமல் நல்கி பெரியோய்
அறம்தான் நிறுத்தல் அரிது ஆக ஆர் இவ்
அதிரேக மாயை அறிவார்."


அடுத்து வருவதே மருத்துமலைப் படலம் என்னும் சஞ்சீவி மலையைக் கொண்டு வருவது. சிலருக்கு ரொம்பப் பெரிசாய்த் தோணுதாய்க் கேள்விப் பட்டேன். ராமாயணமே பெரியது தானே. கூடியவரையில் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்லியும் இப்படிப் பெரிசா வந்தால் என்ன செய்யறது??

3 comments:

  1. இதுலயும் படங்கள் இணைக்கலை:(

    ReplyDelete
  2. //வந்துட்டு இருங்க, ஒரு நாளைக்குத் திடீர்னு புரிய ஆரம்பிச்சுடும்//

    :-)

    ReplyDelete
  3. @ரசிகன், இதிலே படம் காரணமாத் தான் போடறதில்லை, இதெல்லாம் கம்பரையும், வால்மீகியையும் ஒப்பிட்டு எழுதறது, எங்கே, படிச்சால்தானே புரியும்?? சும்மா படம் காட்டினால்?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்

    @ச்யாம், வாங்க, மீள்வரவுக்கும் நன்றி, வாங்க, திடீர்னு ஒருநாள் இதிலே நீங்க திறமைசாலியா ஆயிடப் போறீங்க, பயமாத் தான் இருக்கு! :P :P

    ReplyDelete