மேலே செல்வதற்கு முன்னர், சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் எடுத்து வந்தது பற்றிய கம்பரின் பாடல்கள் இடம் பெறும் இடம் பற்றிப் பார்க்கலாமா??? வால்மீகியின் கூற்றுப் படி முதற்போர்புரி படலம் எனக் கம்பர் எழுதி இருக்கும் முதல்போர் புரி படலத்திலேயே ராமன், போர்க்களத்துக்கு வந்து போர் புரிந்ததும், கருடன் வந்து இந்திரஜித்தின் நாராசங்கள் என்னும் அம்புகளில் இருந்து விடுவிப்பதையும் பார்த்தோம். கம்பர் தன் முதல்போர் புரிபடலத்தில் இது பற்றிக் குறிப்பிடவில்லை என்றும் பார்த்தோம். அதன் பின்னர் கும்பகர்ணன் வதைப் படலம், மாயா சனகப் படலம் என்றெல்லாம் கம்பர் குறிப்பிடுகின்றார். ராவணன் போர் தொடங்கும் முன்னரே சீதையை அசோகவனத்தில் கண்டு பேசி, ராமரின் தலையை மாயாரூபமாய் வெட்டுண்டதாய்ச் சித்திரித்துக் காட்டி சீதையை ஏமாற்றுவதாய் வால்மீகி கூறுகின்றார். இதற்கெல்லாம் பின்னரே, இலங்கை முற்றுகை தொடங்குகின்றது வால்மீகி ராமாயணத்தில். ஆனால் கம்பரோ கும்பகர்ணன் வதைக்குப் பின்னரே ராவணன் சீதையைக் கண்டு பேசுவதாயும், அப்போதும் ஜனக மகாராஜாவைக் கொண்டு வந்து சீதைக்கு முன்னர் துன்புறுத்துவதாயும் காட்டுகின்றார்.
மாயா சனகப் படலம்: பாடல் எண் 1604, 1605
"ஆயது ஓர் காலத்து ஆங்கண் மருத்தனைச் சனகன் ஆக்கி
வாய் திறந்து அரற்றப் பற்றி மகோதரன் கடிதின் வந்து
காய் எரி அனையான் முன்னர்க் காட்டினான் வணங்கக் கண்டாள்
தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு எனத் தரிக்கிளாதாள்."
" கைகளை நெரித்தாள் கண்ணில் மோதினாள் கமலக் கால்கள்
நெய் எரி மிதித்தாலென்ன நிலத்திடைப் பதைத்தாள் நெஞ்சம்
மெய் என எரிந்தாள் ஏங்கி விம்மினாள் நடுங்கி வீழ்ந்தாள்
பொய் என உணராள் அன்பால் புரண்டனள் பூசலிட்டாள்."
என்று ராவணன் சீதையிடம் ஜனகன் போல் தோற்றமளிக்கும் மாயையை உருவாக்கிக் காட்டியதாய்ச் சொல்கின்றார். மேலும் மாயா சனகனைக் காட்டி, சீதையைத் தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாயும், சீதை அதற்கு இணங்காமல், ராவணனைக் கடுமொழிகள் பல பேசியதாயும், கடைசியில் இவ்வாறு உரைத்ததாயும் சொல்கின்றார்.
பாடல் எண் 1632
"புன் மக, கேட்டி கேட்டற்கு இனியன புகுந்த போரின்
உன் மகன் உயிரை எம்மோய் சுமித்திரை உய்ய ஈன்ற
நன் மகன் வாளி நக்க நாய் அவன் உடலை நக்க
என் மகன் இறந்தான் என்ன நீ எடுத்து அரற்றல் என்றாள்"
என சீதை ராவணனைப் பார்த்து உன் மகன் இந்திரஜித்தை, லட்சுமணன் அழிப்பான், அப்போது நீ இவ்விதம் புலம்புவாய் எனக் கூறுவதாயும், அது சமயம் கோபம் கொண்டு சீதையைத் தாக்க முனைந்த ராவணனை மகோதரன் தடுத்து நிறுத்தி இவ்விதம் சொல்லுவதாயும் தெரிவிக்கின்றார் கம்பர்.
பாடல் எண்: 1633
"வெய்பவன் அனைய கேளா வெயில் உக விழித்து வீரக்
கை பல பிசைந்து பேழ் வாய் எயிறு புக்கு அழுந்தக் கவ்வி
தையல் மேல் ஓடலோடும் மகோதரன் தடுத்தான் ஈன்ற
மொய் கழக் தாதை வேண்ட இசையும் நீ முனியல் என்றான்.'
என மாய சனகனைக் காட்டி சனகன் சொன்னால் சீதை உனக்கு இணங்குவாள் என்று மகோதரன் தடுப்பதாய்ச் சுட்டிக் காட்டும் கம்பர் அடுத்து எழுதி இருப்பது:
பாடல் எண்: 1634 1635, 1636
"என்று அவன் விலக்க மீண்டான் ஆசனத்து இருக்க ஆவி
பொன்றினன் ஆகும் என்னத் தரையிடைக் கிடந்த பொய்யோன்
இன்று இது நேராய் என்னின் என்னை என் குலத்தினோடும்
கொன்றனை ஆதி என்னா இனையன கூறலுற்றான்."
"பூவின் மேல் இருந்த தெய்வத் தையலும் பொதுமை உற்றாள்
பாவி யான் பயந்த நங்கை நின் பொருட்டாகப் பட்டேன்
ஆவி போய் அழிதல் நன்றோ அமரருக்கும் அரசன் ஆவான்
தேவியாய் இருத்தல் தீதோ சிறையிடைத் தேம்புகின்றாய்?"
"என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி ஈண்டு
நல் நெடுஞ்செல்வம் துப்பேன் ஆக்கினை நல்கி நாளும்
உன்னை வெஞ்சிறையின் நீக்கி இன்பத்துள் உய்ப்பாய் என்னா
பொன் அடி மருங்கு வீழ்ந்தான் உயிர் உகப் பொருமுகின்றான்."
என்று இவ்வாறு மாயா சனகன் சீதையை ராவணனுக்கு இணங்குமாறு கேட்டதாயும், அதற்கு சீதை கடிந்து கொண்டதாயும் தெரிவிக்கின்றார்.
பாடல் எண் 1640
"நீயும் நின் கிளையும் மற்று இந்நெடு நில வரைப்படம் நேரே
மாயினும் முறைமை குன்ற வாழ்வெனோ வயிரத்தின் தோள்
ஆயிர நாமத்து ஆழி அரியினக்கு அடிமை செய்வேன்
நாயினை நோக்குவேனோ நாண் துறந்து ஆவி நச்சி"
என்று சீதை ஜனகனின் குலமே அழிந்து பட்டாலும் ராவணனுக்குத் தான் இணங்க மாட்டேன் எனச் சொன்னதாயும், உடனேயே கோபம் கொண்ட ராவணன் மாயா சனகனைக் கொல்லத் துணிந்ததாயும், அதை மகோதரன் தடுத்ததாயும், அந்நேரமே கும்பகர்ணன் இறந்து பட்டதும் வானர வீரர்களின் ஆரவார ஒலி விண்ணைத் தொடும் அளவுக்கு எழுந்ததாயும், அதைக் கேட்டுக் கும்பகர்ணன் இறந்த விஷயத்தை ராவணன் தெரிந்து கொண்டதாயும் கம்பர் சொல்கின்றார். மேலும் மாயா சனகனைச் சிறையில் அடைக்குமாறு மகோதரன் சொன்னதாகவும் சொல்கின்றார்.
பின்னர் சீதை அதைக் கேட்டு மகிழ்ந்ததாயும், அப்போது திரிஜடை என்னும் அரக்கி, இந்த மாயா சனகன் உண்மையில் மாயையில் வல்லவன் ஆன மருத்தன் என்னும் பெயரைப் பெற்ற அரக்கன் ஆவான் என்று உண்மையைச் சீதையிடம் சொல்லி அவளைத் தேற்றியதாகவும் சொல்கின்றார். இவ்வாறு கும்பகர்ணன் வதை, பின்னர் அதிகாயன் வதை, அதிகாயன் வதைக்குப் பின்னரே இந்திரஜித் கோபம் மிகக் கொண்டு, நாக பாசங்களை ஏவி லட்சுமணனைக் கட்டியதாயும், லட்சுமணனை மீட்கவே கருடன் வந்ததாயும் தெரிவிக்கின்றார். அது பற்றி நாளை பார்ப்போம்.
தலைவி ஒரு அட்டண்டன்ஸ்...மத்தபடி எனக்கு புரியற மாதிரி இந்த போஸ்ட்ல ஒன்னும் லேது... :-)
ReplyDeleteஅக்கா இதுல போட்டோவே இல்லையே, ராமாயண பதிவுல படம் பாக்கறதுக்காகவே வர்ர எங்களை இப்டில்லாம் எமாத்தப்டாது:P
ReplyDeleteவாங்க, ச்யாம், கிட்டத் தட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறமா வரீங்க, நினைவு வச்சுட்டு, வருகைக்கு நன்றி. வந்துட்டு இருங்க, ஒரு நாளைக்குத் திடீர்னு புரிய ஆரம்பிச்சுடும். :P
ReplyDelete