ஒரு வழியாய் ஒருவாரமாய்ப் பெய்து வந்த மழை இன்னிக்கு இல்லை. காலையில் சூரியன் உதயம் ஆனதைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமா இருந்தது.
விடாமல் பெய்த மழையினால் வெள்ளமான தெருக்களைத் தவிர, எங்க அம்பத்தூர் நகராட்சியில் அம்பத்தூர் ஏரியையும், இன்னொரு ஏரியையும் உடைத்து வேறே விட்டுட்டாங்க. எந்தவிதப் பாரபட்சமும் காட்டாத நீர் வெள்ளம் அனைத்து வீடுகளிலும் புகுந்தது. வியாழன் அன்று இரவு படுக்கும்போது ஒண்ணும் இல்லை. காலை மூன்று மணி வரையில் கட்டுக்குள்ளேயே இருந்த வெள்ளம், நாலு மணிக்கு எழுந்து செல்லும்போது பார்த்தால் படுக்கை அறையில் கணுக்கால் வரை வந்து கணினி வைத்திருக்கும் டேபிளையும் தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனவே போன மழையில் சமையல் அறையில் மேலே இருந்து தாரையாகக் கொட்டியது, அப்படித் தான் இந்த அறையில் வந்திருக்குமோனு நினைச்சால் அப்படி இல்லை. கூரை சுத்தமாய் இருந்தது. மேலே இருந்து வரலைன்னா பின்னே எப்படினு யோசிச்சுட்டே சமையல் அறைக்குப் போனால் அங்கே வெள்ளம். நடைபாதையில் வெள்ளம். கொல்லைப் பக்கம் போய்க் கதவைத் திறந்தால் வராந்தாவெல்லாம் வெள்ளம் அடித்துக் கொண்டு உள்ளே வரும்போல இருந்தது. அங்கே இருந்தும் வந்திருக்கு. அதே போல் வாசலையும் திறந்து பார்த்தால் வாசல் வராந்தா, வெளியே உள்ள நடைபாதை தாண்டி தெருவெல்லாம் வெள்ளம் எதிர்வீடு வரை, தெருவில் அவர் மட்டும் போய் இறங்கிப் பார்த்தால் முழங்கால் தண்ணீர். பால் வரலை, மத்தவங்களுக்கெல்லாம், பாக்கெட் பால் வாங்கறதில்லை என்பதால் பால்காரர் எங்களுக்கு எடுத்து வந்துட்டார். மின்சாரம் இல்லாமல் தண்ணீர் எடுக்க மோட்டார் போடமுடியவில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர். ஆனால் குளிக்கவோ, குடிக்கவோ தண்ணீர் இல்லை. நல்லவேளையாகக் கிணற்றை நாங்கள் மூடவில்லை என்பதால் தண்ணீரும் கிடைச்சது. காய்களும் இருந்தன.
எந்த வண்டியும் இன்று வரையில் உள்ளே வரமுடியலை. சைகிள் கூட. அவ்வளவு தண்ணீர். கொட்டும் மழையில் எரிவாயுக் கசிவை ரிப்பேர் செய்யவந்தவர் என்ன உங்க ஏரியா இவ்வளவு மோசமா இருக்குனு, நாங்க தான் முனிசபல் அதாரிடி மாதிரி எங்களைக் கேட்டுட்டுப் போனார். நேரம்! பேப்பர்காரர் சைகிளில் வைத்துப் பேப்பரைத் தூக்க முடியாமல் தூக்கிட்டு வந்து இன்னிக்குக் கொடுத்துட்டுப் போனார். தலை எழுத்து! இந்த அவலங்களுக்கு என்ன காரணம்? யார் காரணம்?? இன்னிக்குச் செய்தித் தாளையும், இன்னும் தொலைக்காட்சியையும் பார்த்தப்போ எங்களுக்கு வந்த தண்ணீர் ஒண்ணுமே இல்லைனு தெரிஞ்சது. எங்க தெருவுக்குப் பக்கத்திலேயே ஒரு தெருவில் வீட்டுக்குள் கட்டில் போட்டு உட்கார்ந்து அந்தக் கட்டில் விளிம்பு வரையிலும் தண்ணீர் தொட்டுக் கொண்டு ஓடுது. குடிசைவாசிகள் நிலைமை சொல்லவும், எழுதவும் வேண்டாம். இன்னும் மோசம். அதிலும் பாதாளச் சாக்கடை இல்லாமல் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் குடி இருப்போர் அவங்க கழிவறைத் தண்ணீரை வெளியே விடறதாலே அந்தத் தண்ணீரும் சேர்ந்து ஒரே நாற்றமும், கொசுத் தொல்லையுமாய்த் தாங்க முடியாத துன்பம். இந்த அடிப்படை வசதிகளைச் செய்யாமல் ஒரு குடி இருப்பே வரமுடியாது மற்ற மாநிலங்களில் எல்லாம். ஆனால் நாம?
சரவணா ஸ்டோர்ஸ் எரியற வரைக்கும் வேடிக்கை தான் பார்த்துட்டு இருந்தோம்? இப்போ அதுவே மறந்துடலையா மீண்டும் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்கள் எல்லாம் நல்லாத் தானே வந்துட்டு இருக்கு? அடுத்த தீபாவளிக்கு அங்கே போய்த் துணி எடுக்கிறவங்க என்ன செய்வாங்க? இந்த மாதிரி யாரோ செத்தால் எல்லாம் கடையை மூடமுடியுமா என்ன? அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இது. அப்படித் தானே இந்த மழைத் தண்ணீரும் ஒவ்வொரு வருஷமும் இது பத்திப் பேசுவோம். ஆக்கிரமிப்பு, ஏரிக்குத் தண்ணீர் போகும் கால்வாயை மூடிட்டாங்கனு யாரானும் ஏதானும் சொல்லிட்டுத் தான் இருப்பாங்க, அதுக்காக நாம் அங்கே குடி வராமல் இருக்க முடியுமா என்ன? பார்க்கிறவங்களைப் பார்த்துக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால் தீர்ந்தது வேலை, முடிந்தது பிரச்னை. மழை வரச்சே பார்த்துக்கலாம்.
வீட்டுவேலை செய்யும் அம்மா இரண்டு நாட்களாய் வரலை. அவங்களுக்கும் மழைதானே? தண்ணீர் அங்கேயும் தானே போகுது? இப்போப் பேச ஆரம்பிச்சிருக்காங்க பத்திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும். ஆக்கிரமிப்புகள் தான் காரணம் இத்தனை தண்ணீர்த் தேக்கத்துக்குனு. மழை நிற்கலைனால் இன்னும் மோசமாய் ஆகுமெனவும், நின்றாலும் ஒரு வாரம் ஆகும் நீர் வடியனும் சொல்றாங்க. கூவம் நதியைச் சாக்கடை ஆக்கின பெருமை மட்டுமில்லாமல் சரியானபடித் தூர்வாராததால் தண்ணீரை வாங்கிக் கொள்ளும் சக்தி இல்லை. அடையாறும் அப்படியே. தண்ணீர் திரும்பித் தானே வரும்? முகத்துவாரத்திலும் அடைப்பு. இதெல்லாம் மழைக்கு முன்னே செய்யவேண்டிய வேலைகள். வேலை இல்லைனு தவிக்கிறவங்களைக் கூப்பிட்டு இந்த வேலையை எல்லாம் செய்யச் சொல்லிக் கூலி கொடுத்து வயிறாறச் சாப்பிடச் சொல்லலாம்.
தினசரி ஒரு ஏரியானு வச்சுட்டு இதைச் செய்ய ஆரம்பித்தாலே வருஷம் பூராவும் செய்யவேண்டி இருக்கும். காவிரி ஆற்றில் எவ்வளவு மேடிட்டிருக்கிறது? அதுவும் அரசலாற்றின் அழகே போய், ஒரே ஆகாயத் தாமரையும், மற்ற விஷக் காளான்களும் முளைத்துத் தண்ணீரை உள்வாங்கும் சக்தியை இழந்து நிற்கின்றது. கிராமத்தில் கோடை காலத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு அந்த, அந்தப் பஞ்சாயத்தின் மூலம் இதை எல்லாம் செய்ய வைத்துக் கூலி கொடுக்கலாமே? வெறும் இலவசத்தால் வயிற்றை நிரப்பினால் போதுமா? இலவசம் கொடுக்க ஆரம்பித்ததும் மக்களுக்கு உழைக்கணும், உழைத்துச் சாப்பிடணும்னே தோணாமல் போயிடுமே? இதுக்கு என்ன வழி? கோடை காலம் வரை இது பற்றிப் பேசுவோம். அடுத்த மழைக்குள்ளாக இதை மறந்துட்டு, அடுத்த மழைக்கு மறுபடி ஆரம்பிப்போம்.



























