எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 24, 2008

உஜாலா மீண்டும்! ராதா சமேதா கிருஷ்ணா!

கண்ணனை எப்போது நாம் நினைத்தாலும் மனதில் தோன்றும் பெயர் ராதா என்பதே ஆகும். இந்த ராதாவைப் பற்றிய பல்வேறு கதைகள் உலாவுகின்றன. கோபியர்களுள் ஒருத்தியே ராதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ராதா என்பவள் கண்ணனின் அத்தை என்றும் பல வருஷம் கண்ணனை விட வயதில் முத்தவள் எனவும், அவள் பேரில் காதல் என்றால் ஏற்பது எங்கனம் என்றும் பல பதிவுகள் வந்துவிட்டன. இதைக் குறித்துக் கேலியாகவும் சிலர் பேசுகின்றனர். ஆனால் ராதா என்ற பெயர் பாகவதத்தில் கிடையாது. மஹா பாரதத்திலும் கண்ணனின் அவதாரத்தைப் பற்றிய குறிப்புகளில் ராதையைப் பற்றிச் சொல்லவில்லை. நம் புராணங்களிலும் அதிகம் ராதையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லப் படவில்லை. கண்ணனைக் குறும்புக்காரக் குழந்தையாக ஏற்றுக் கொண்டிருக்கும் நாம், ராதையை ஒரு பிரச்னைகள் மிகுந்த, அல்லது பிரச்னைகளுக்கு ஆளான, அல்லது பிரச்னைகளைத் தோற்றுவிக்கும் ஒரு குழந்தையாக/பெண்ணாகவே ஏற்க வேண்டி உள்ளது. சிறந்த பக்திமான்களாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. என்றாலும் கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் மூழ்கியவர்களுக்கு ராதை இன்றிக் கிருஷ்ணன் தனித்துக் கிடையாது.. பழங்காலத் தமிழ் இலக்கியங்களில் ராதையைப் பற்றிய குறிப்பு எதில் சொல்லி இருக்கின்றது என்று பார்த்தோமானால் நம் தமிழ்க் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் என்று சொல்லலாம். அதில் நப்பின்னையாகக் குறிக்கப் படுபவள் இவள் தான் என்று சிலர் கூற்று. ஆண்டாளும் நப்பின்னையாகக் குறிப்பிடுவது இவளைத் தான் என்றே தோன்றுகின்றது.

ஆதாரபூர்வமாய் நோக்கினால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து இலக்கிய அன்பர்கள் ராதையப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம் என்ற பொதுவான கருத்து ஒன்று இருந்து வருகின்றது. ஆனாலும் பொதுவாய்க் கோபிகளைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே இருந்து வந்திருக்கின்றது. ராதாவைப் பற்றிய தனிப்பட்ட குறிப்போ, அல்லது ராதாவுக்கு முக்கியத்துவமோ கொடுக்கப் படவில்லை. இது கி.பி. 10- நூற்றாண்டு வரையில் இப்படி இருந்திருக்கின்றது. பின்னர் மால்வா அரசனின் காலத்தில் கிருஷ்ணரோடு சேர்ந்து ராதாவையும் குறித்துச் சில பாடல்கள் பாடப் பட்டிருக்கின்றன. ஆனாலும் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ஜய தேவர் எழுதிய கீத கோவிந்தம் என்ற கிருஷ்ணரின் ராசலீலா பற்றிய அஷ்டபதிகளில் ராதையை முக்கியத்துவம் வாய்ந்த ரசேஷ்வரி ஆக்கி, அவளை முக்கியப் பாத்திரம் ஆக்கிய பின்னரே ராதாவையும், அவளின் கண்ணன் மேல் கொண்ட காதலும் அனைவராலும் பெருமளவும் கொண்டாடப் பட்டது. இந்த ராசலீலாவின் முக்கியப் பாத்திரமே ராதா தான்.

கீத கோவிந்தம் எழுதிய இரு நூற்றாண்டுகளுக்குள் பெரும் பிரசித்தி அடைந்ததோடு அல்லாமல், அது வெளிவந்த கால கட்டத்தில் இருந்த மற்ற நூல்களோடு ஒப்பிடமுடியாத அளவுக்கு, முக்கியத்துவமும் , பெற்று விட்டது. இதை ஒரு பக்தித் தத்துவங்கள் நிறைந்த பாடல் தொகுப்பாகவும் அங்கீகாரம் செய்தனர் மன்னர்களும், அரசர்களும். இதற்குப் பின்னர் எழுதப் பட்ட புராணங்களிலேயே கிருஷ்ணனையும், ராதையையும் இணைத்து எழுத ஆரம்பித்தனர். ராதை கிருஷ்ணன் மேல் கொண்ட காதலின் புனிதமும் எடுத்து உரைக்கப் பட்டது. பல்வேறு எழுத்தாளர்களும் பல்வேறு மொழிகளில் பல்வேறு விதமாய் ராதையின் கதையை எடுத்து உரைத்தாலும், அதன் நோக்கம் மட்டும் ஒன்றே. ராதை கிருஷ்ணனிடம் கொண்ட அளப்பரிய பக்தி நிறைந்த காதல் மட்டுமே சொல்லப் படுகின்றது. மஹாபாரதமும், பாகவதமும் எழுதிய வேத வியாசரால் கூடச் சொல்லப் படாத ஒருத்தி, கிருஷ்ணரின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாதவளாய், கிருஷ்ணரை நினைத்தாலே அவளையும் சேர்த்துத் தான் சொல்ல வேண்டும் என்பதாய், ஒரு தேவதையாய், அம்பிகையாய் மாறிப் போனாள். கிருஷ்ணரின் சிறு வயதுத் தோழியாய் சில புராணங்களில் இவளைச் சொல்லப் பட்டிருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாப் பிரபுவோ, ராதையைக் கிருஷ்ணனின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகவே நினைத்தார். ராதையை விட்டுக் கிருஷ்ணனைப் பிரிக்க முடியாது என்பதால் ராதா கிருஷ்ணன் என்றே சொல்லலானார். அதே மாதிரி தான் ராதாபந்திஸ், விஷ்ணுஸ்வாமின்கள், நிம்பர்க்கர்கள் என்னும் கிருஷ்ண பக்தி மார்க்கத்தில் திளைப்பவர்களும் ராதையும், கிருஷ்ணனும் பிரிக்க முடியாதவர்கள் என நம்பினார்கள். நிம்பர்க்கர்கள் ராதையைத் தவிர, வேறொருத்தியைக் கிருஷ்ணனின் மனைவியாக நினைக்கக் கூட இல்லை. தெய்வீக வடிவு கொண்ட ராதை தான் கிருஷ்ணனின் மனைவி எனப் பரிபூரணமாய் நம்பினார்கள். இன்னும் வங்காளம் போன்ற கிழக்கு மாநிலங்களில் ராதையும் ஒரு கோபிகா ஸ்திரீ எனவும், கிருஷ்ணன் மேல் மாறாத அபிமானம் கொண்டவள் எனவும், ஆனால் அவள் கணவன் வேறொருவன் எனவும் அவன் பெயர் ஐயன் என்றும், அந்த ஐயன் கம்சனின் படைவீரன் எனவும் சொல்லிக் கொண்டனர். எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டிலும் ராதையின் கிருஷ்ண பக்தி பரவவே செய்தது.



ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்களில் ராதையுடன் கூடிய கிருஷ்ணனையோ, ராதைக்கு எனத் தனி சந்நிதியோ காண முடியாது. ஆனால் வடநாட்டில் ராதை இல்லாத கிருஷ்ணர் கோயில்களைப் பார்க்கவே முடியாது. கண்ணன் விளையாடிய பிருந்தாவனத்தில் ராதைக்கென்ற தனிக் கோயில் உள்ளது. கண்ணனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அங்கே தான் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த ஜன்மாஷ்டமி அன்றே அவதரித்த யோகமாயாவுக்கும், ஸ்ரீ வித்யா உபாசகர்கள் துர்க்காஷ்டமி எனக் கொண்டாடுவார்கள். இதற்கு அடுத்து வரும் சுக்ல பட்ச அஷ்டமியையே ராதாஷ்டமி எனச் சொல்லுகின்றார்கள். ப்ருந்தாவனம் அருகே உள்ள பர்சானா என்னும் ஊரில் வ்ருஷபானுவுக்கும், கீர்த்திதாவுக்கும் விசாக நட்சத்திரத்தில் மகளாய்ப் பிறந்தாள் ராதா என்று சொல்வதுண்டு. விசாக நட்சத்திரத்துக்கு வேதத்தில் ராதா என்ற பெயர் உண்டு என்றும் சொல்கின்றார்கள். (யாருப்பா அங்கே, இதைச் சரியானு சொல்லுங்க!) ஓம் நமோ நாராயணாய, என்னும் அஷ்டாட்சரத்தின் உள்ள” ரா” வும், “ஆதாரம்” என்ற ப்ரபத்தி மார்க்க மந்திரத்தில் உள்ள “தா” வும் சேர்ந்தே ராதா என்ற பெயர் வந்ததாய்க் கூறுகின்றனர். கண்ணனின் இதய சக்தி, பிராண சக்தி ராதாவே ஆவாள்.

ராதைக்கும், கிருஷ்ணனுக்கும் உடல் ஒன்றே. லீலா விநோதங்கள் புரிந்து மக்களுக்குப் போதிக்கவென்றே உடல் இரண்டைக் கொண்டார்கள். நம் உடலில் இருந்து வரும் நிழல் எப்படியோ அப்படியே கண்ணனின் நிழல் போன்றவள் ராதா. ஸ்ரீ கிருஷ்ணன் ராதையை வணங்கினால் , ராதையோ கிருஷ்ணனையே ஆராதனை செய்கின்றாள். ராதையைப் பற்றிய சஹஸ்ரநாமம் கூட இருப்பதாய்ச் சொல்லுகின்றார்கள். இது ராதையால் கண்ணனுக்குச் சொல்லப் பட்டுப் பின் நாரதருக்கும், சிவனுக்கும் கூறப்பட்டது என்று சொல்கின்றார்கள். ராதையின் ஷடாக்ஷர மந்திரம், “ ஓம் ராதாயை ஸ்வாஹா” என்பதாகும். ராதா என்றால் அன்பு, நிறைவு, வெற்றி, மின்னல், விசாக நட்சத்திரம் எனப் பல அர்த்தங்கள் உண்டு. கண்ணனையே நினைத்தால் ராதை கிடைப்பாள். அதாவது மனதில் நிறைவு உண்டாகும், முக்தி கிடைக்கும். ராதாகிருஷ்ணன் என்று சொல்லும் ஒரு வார்த்தையால் மனம் கிருஷ்ணனிடம் ஈர்க்கப் படுவதோடு அல்லாமல் ராதையால் முக்தியும் கிடைக்கும். ராதை ஜீவாத்மா, கண்ணன் பரமாத்மா.

நாதமும், லயமும் சேர்ந்த விரஸமில்லாத ரஸம் மட்டுமே உள்ள ஒரு ஆட்டத்துக்கே ராஸலீலா எனப் பெயரிட்டனர். கோபிகை தான் ராதை, ராஸேஸ்வரி, ரஸிகேஸ்வரி, ராஸலீலா ப்ரதான பாத்திரம். இதில் ராதைக்குக் கண்ணன் தன்னிடம் காட்டும் அன்பினால் கர்வம் வந்துவிட அவள் கர்வத்தைப் பங்கம் செய்யும் வண்ணம் அவளைத் தவிக்க விட்டுக் கண்ணன் மறைவான். கோபிகைகள் ஏற்கெனவே கண்ணனைக் காணாது தேடியவர்கள், தனியே இருக்கும் ராதையையும் கண்டதும், கண்ணனைத் தேடி அலைவார்கள். அவர்கள் கர்வம் பங்கம் அடையும் வண்ணம் பாடப் படும் அந்த கீதம் “கோபிகா கீதம்” எனச் சொல்லப் பட்டு, இன்றளவும் ஏதேனும் பொருள் தொலைந்தால் ராதா கிருஷ்ண பக்தர்களால் கோபிகா கீதம் பாடினால் பொருள் கிடைத்துவிடும் என நம்பிக்கையில் பாடப் படுவதாய் இருந்து வருகின்றது. கோபிகா கீதம் பாடினால் தொலைந்த பொருளோ, எதுவாய் இருந்தாலும் கிடைத்துவிடும் என்பது ராதா கிருஷ்ணர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.

பாகவதத்திலோ, பாரதத்திலோ ராதையைப் பற்றிய குறிப்பு வரவில்லை என்பதற்கு கீழ்க்கண்டவாறு காரணம் கூறப் படுகின்றது. பரிட்சித் மஹாராஜாவுக்கு ஏழு நாட்களுக்குள் மரணம் என்பது தெரிந்து நற்கதி கிடைக்கவேண்டும் என்பதற்காக சுக முனிவரை அழைத்து வந்து பாரதக் கதைகளைச் சொல்லச் செய்கின்றான் பரிட்சித்து. ஆனால் சுக முனிவரால் சொல்லப் பட்ட அந்தப் பாரதக் கதையில் ராதா என்ற வாக்கியமே வராது. ஏனெனில் சுக முனிவர் ஒரு முறை ராதா என்ற பெயரைச் சொல்லிவிட்டால் ஆறு மாதங்கள் போல, ஆழ்ந்த சமாதி நிலைக்குப் போய்விடுவாராம். பரிட்சித்தோ ஏழு நாட்களுக்குள் மரணம் அடைந்து விடுவான். அவர் சமாதி நிலைக்குப் போனாரென்றால் பரிட்சித்துக்கு நற்கதி கிடைப்பதெப்படி?? சுகரால் சொல்லப் பட்டு வந்த பாரதம் முடிவடைவதும் எப்படி?? ஆகவே தான் பாரதத்தில் ராதா என்ற பெயர் சொல்லப் படாமல், அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எழுதவும், சொல்லவும் பட்டது என்று ஆன்றோர் சொல்கின்றனர். இந்த ராதையின் ஒரு சொல்லுக்கு இத்தனை மகிமை என்பது பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வில் நடந்த சம்பவத்தில் இருந்தே தெரியவரும். ராதையின் பிரேம பாவத்தை உணர வேண்டி ஒரு பெண் போல் புடவை தரித்து ராமகிருஷ்ணர் ராசலீலை பாடப் பட்ட இடத்தில் நடமாடிக் கொண்டிருந்தபோது அவரை ஒரு ஆண் எனவும், ராமகிருஷ்ணர் எனவும் யாராலும் நம்பமுடியாமல் முற்றிலும் பெண் போலவே இருந்தார் என்றும், பின்னர் தன் உணர்வை அவர் சொல்லும்போது ராதை தனக்குள் புகுந்துவிட்டதாகவே தான் உணர்ந்ததாயும் அவர் சொல்லி இருக்கின்றார் என்பதையும் பார்க்கும்போது இந்த அற்புத தத்துவம் நன்கு புரிந்த ஞானிகளுக்கே எட்டும் என்றும், நம் போன்ற சாமானியர்களுக்கெல்லாம் வார்த்தைகளுக்கு எட்டாத ஒன்று என்றும் புரிய வருகின்றது அல்லவா?? கற்பனையோ, காவியமோ, ராதை என்பவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிக்க முடியாதவள் ஆகிவிட்டாள்.

ஜெய் ஸ்ரீராதாகிருஷ்ண!

6 comments:

  1. நல்ல பதிவு...இது பற்றி தீபாவளி மலர்ல கூட படித்த நினைவிருக்கிறது.

    ReplyDelete
  2. அருமை கீதாம்மா.
    இந்திய இசை வரலாற்றில், கீத கோவிந்தம் ஒரு திருப்புமுனையாகவே அமைந்துவிட்டது!. அதற்கப்புறம், பல நூற்றாண்டுகளுக்கு, பாடல் என்றால் - அது பதமாக இருக்க வேண்டும் என்ற அளவிற்கு சிருங்கார ரசம் ததும்பும் பாடல்களை இயற்றிடச் செய்தது!. கிருஷ்ணனைப் பாடிய பல கவிஞர்களின் பாடல்களில், இன்றளவும், ஜெயதேவரின் சொல்லாடல்களில் தாக்கத்தினைக் காணலாம்!

    ReplyDelete
  3. @மெளலி, எந்த வருஷத்து தீபாவளி மலர் என்பதோடு, எந்தப் புத்தகம்னும் தகவல் தெரிவிச்சிருக்கலாமே?? :P

    @ஜீவா, வாங்க, பல நாட்களுக்குப் பின் வந்திருக்கீங்க, பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. நல்ல பதிவு கீதாம்மா.

    //கற்பனையோ, காவியமோ, ராதை என்பவள் கிருஷ்ணனை விட்டுப் பிரிக்க முடியாதவள் ஆகிவிட்டாள்.//

    ரொம்ப உண்மை.

    (ரெண்டு நாள் லீவு போட்டா, ஹோம்வொர்க் எக்கச்சக்கமா சேர்ந்து போச்சு. மெதுவா வரென்...)

    ReplyDelete
  5. வாங்க கவிநயா, லாஆஆஆஆஆஆஆஆங்க்க் வீக் எண்ட் ஆச்சே, அதான் வரலைனு நினைச்சேன். மெதுவா வாங்க, ஒண்ணும் அவசரமே இல்லை.

    ReplyDelete
  6. இராதையின் மகத்துவத்தை மிக அழகாகச் சொன்னீர்கள் கீதாம்மா. இராதையும் நப்பின்னையும் வெவ்வேறு. இருவரும் ஒருவரில்லை என்பது மிகவும் தெளிவு. ஆனால் அப்படி நினைப்பவர்களும் சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

    தமிழ்நாட்டுக் கோவில்களிலும் இப்போதெல்லாம் இராதாகிருஷ்ணன் சன்னிதிகளைப் பார்க்க இயலுகின்றது. அண்மைக்கால சேர்க்கைகள்.

    ReplyDelete