"ஒளி பொருந்திய கலை மற்றும் தத்துவத்தின் பிறப்பிடமான தொன்மையான இந்தியாவுக்கு நான் எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன்.  இந்தியாவைக் கண்டு நான் வியப்படைகிறேன்.  இழிந்த, சீர்கேடுற்ற, நலிவடைந்த, நாடுகளை அடிமைப்படுத்திய, கடவுள்களை இழிவு செய்த,ஆன்மாக்களை நம்பாத மேற்கத்தியர்களாகிய நாங்கள் உன்னை வணங்குகிறோம்.  உன்னுடைய வியத்தகு கொள்கைகள் மற்றும் கருத்துகளுக்காக இன்னும் தலை குனிந்து வணங்குகிறோம்.
சொன்னது பியரே லோடி (1850-1923) என்னும் புகழ் பெற்ற ப்ரெஞ்ச் நாவலாசிரியர்.
*************************************************************************************
எப்படி இவ்வளவு சோம்பேறி ஆனார்கள் நம் மக்கள்?? அடுத்தடுத்து வரும் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்களாலேயே என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத ஒன்று.  மரங்களும், காடுகளும் தொடர்ந்து அழிக்கப் பட்டு வரும் நிலையில் நம் தமிழகத்தில் மழையின் அளவு குறைந்தே வருகிறது.  இதற்கு முன்னால் மழை, வெள்ளம் வந்ததில்லையா? ஊருக்குள்ளேயோ, வீடுகளுக்குள்ளேயோ நீர் புகுந்ததில்லையா?  அப்போதெல்லாம் மக்கள் தங்கள் வேலைகளைத் தாங்களே பார்த்துக்கொண்டனர்.  இப்போவோ, எல்லாத்துக்கும் அரசாங்கம் வரணும்.  சரி, அப்படியானும் அரசாங்கம் வந்து இதை எல்லாம் நல்ல முறையில் நிறைவேற்றுகிறதா? நிறைவேற்றப் பட்டு இருக்கிறதா? அரசும் என்ன ஆட்களே இல்லாமல் இறக்குமதியா பண்ணும்?? அந்த அந்தக் கிராமத்திலேயே ஆட்களைத் தேர்ந்தெடுக்கணும்.  அவங்களை விட்டே செய்யச் சொல்லணும்.  ஒரு சில கிராமங்களில் இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு செயல்படுத்தப் படுகிறதுனு சொல்றாங்க.  போய்ப் பார்த்தால் செயல் படுத்தப் பட்டது ஆட்களின் பெயர்களைச் சேர்த்தலும், அவங்களுக்குக் கொடுத்த சம்பளமும், அரிசியும் தான்.  எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு வேலைக்கு வருவதில்லை.  சிலர் இங்கே ஊரில் பெயரைக் கொடுத்துவிட்டுச் சம்பளமும், அரிசியும் வாங்கிக்கொண்டு வெளியே வேலைக்குச் செல்கின்றனர் அல்லது வேலைக்கே செல்லாமல் பேசிக்கொண்டு பொழுதைக் கழிக்கின்றனர்.  அந்தக் கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவருக்கோ இதை எல்லாம் தட்டிக் கேட்க முடியாது.  ஏனென்றால் அடுத்த தேர்தலில் அப்புறம் அவரைத் தேர்ந்தெடுக்க மாட்டாங்க.  முன் காலத்தில் நம் தேர்தல் முறை இப்படியா இருந்தது?? எப்படி இருந்தது என ஒரு பார்வை பார்ப்போமா?
தேர்தல் முறை குடவோலையின் மூலம் நடந்திருக்கிறது.  தலைவர் பதவிக்கு வர விரும்பும் நபர்களின் பெயர்கள் ஓலையில் எழுதப்பட்டு குடத்தில் இடப்பட்டு ஒரு குழந்தையை விட்டு எடுக்கச் சொல்வார்கள்.  தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கும் கடுமையான நிபந்தனைகள் உண்டு.  இந்தக் குடவோலை முறையில் தான் அந்தக் காலங்களில்    பாடங்களின் தேர்வும் கூட நடந்திருக்கிறது.  குடத்தில் ஓலைகளை இட்டு மாணவன் அதை எடுத்துப் பாடங்களின் சங்கேத எண்களைப் பார்த்து அதன் மூலம் ஆசிரியரிடம் பாடத்தைச் சொல்லுவதே தேர்வு முறையும் கூட.  மேலும் வெறும் மனப்பாட முறையாக இல்லாமல் ஒவ்வொன்றையும் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான் மாணவன்.  வித்யாசாலைகள், கடிகைகள் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கின்றன.  ரொம்ப முன் காலத்துக்குப் போகவே வேண்டாம்.  ஆங்கிலேயர் வந்த பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் உள்ள நிலைமையை திரு தரம்பால் அவர்கள் தன்னுடைய The Beautiful Tree என்னும் புத்தக முன்னுரையிலும், உள்ளடக்கத்திலும் கூறி இருப்பதைப் பாருங்கள்.
The Beautiful Tree
குடவோலை முறையில் தேர்தல் நடத்தி நிர்வாகத்திற்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றிப் படிப்புக்கான தேர்வும் குடவோலை முறையிலேயே இருந்துள்ளது.  குறிப்பாக ரிக்வேதத்தில் மட்டுமே பதினைந்தாயிரம் ஸ்லோகங்களுக்கும் மேல் உள்ளதால் குறிப்பிட்ட ஸ்லோகத்தைச் சொல்லு என மாணாக்கனைச் சொல்லுவது கடினம். ஆகவே ஒவ்வொரு வேதமும் பல பகுதிகளாய்ப்பிரிக்கப் பட்டிருக்கும்.  முக்கியமாய் ரிக்வேதம் மண்டலம், அநுவாஹம், சூக்தம் எனப்பிரிக்கப் பட்டிருக்கும். 2-4-5-3 என்று ஓலையில் எழுதிக் கடத்தில் போட்டுவிடுவார்கள்.  அதை எடுக்கும் மாணவன் இரண்டாவது மண்டலத்தில் நான்காம் அநுவாஹத்தில் ஐந்தாம் ஸூக்தத்தில் மூன்றாம் ஸ்லோகம் எனப் புரிந்து கொண்டு பாடத்தைச் சொல்லுவானாம்.  இம்முறையில் நடந்த வித்யாசாலைகளே கடிகைகள் என அழைக்கப்பட்டதாய் நம் பரமாசாரியாள் அவர்கள் கூறுகின்றார்.  மேலும் இத்தகைய கடிகைகள் பல இருந்திருக்கின்றன என்பதோடு இவற்றுக்காக நிவந்தம் விடும் மன்னர்களும், சேநாதிபதிகளும், மற்ற ஊர்ப் பெருந்தனக்காரர்களும், இங்கு கல்வி தவிர வேறு எதுவும் கற்பித்தல் கூடாது என்ற முக்கிய நிபந்தனை விதித்துவிட்டே கொடுத்திருக்கிறார்கள்.
இத்தகைய கல்வி நிலையங்கள் பெரும்பாலும் கோயில்களிலும், அல்லது கோயிலைச் சார்ந்துள்ள இடங்களிலுமே இருந்து வந்துள்ளது.  ஆசிரியர்களிலும் பெரும்பாலோர் கோயிலைச் சுற்றியே வசித்திருக்கின்றனர்.  கோயில் கல்வி, கலாசாரம் பேணுவதில் முக்கியப் பங்கு வகித்து வந்திருக்கிறது.  வெறும் சமயப் படிப்பு மட்டுமல்லாமல் ஆயுதப் பயிற்சி, நடனம், மருத்துவம், சங்கீதம், இலக்கியம், இலக்கணம், தர்க்க சாஸ்திரம், சிற்பங்கள் செதுக்குதல், ஓவியம் வரைதல் போன்ற கலைகளும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்களே என்றாலும் பிராமணர்களிலும் வெறும் வேதக் கல்வி மட்டும் கற்பித்தவர்களை வைதீகர்கள் எனவும், ஆகமம் கற்பித்தவர்களை சிவயோகிகள், வைணவ யோகிகள் எனவும், மருத்துவம் கற்பித்தவர்கள், ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் ஆகியோர் அமாத்தியப் பிராமணர்கள் எனவும் பிரிக்கப் பட்டிருக்கின்றனர்.  அத்தகைய பிரிவு இருந்ததும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.  என்றாலும் இவை அனைத்தும் கற்பிப்பவர் எவரானாலும் அனைவருக்கும் வேதப் பயிற்சி முக்கியம் என்பதோடு குறைந்தது பனிரண்டு வருஷம் குருகுல வாசம் செய்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் இருந்திருக்கின்றன.
தூர தேசங்களில் இருந்தெல்லாம் இத்தகைய கடிகைகளில் மாணாக்கர்கள் பயின்று வந்திருக்கின்றனர்.  போக்குவரத்து சரியாக இல்லாத அந்தக் காலகட்டங்களிலேயே காஷ்மீரத்தில் இருந்தெல்லாம் காஞ்சிக்கு வந்து பயின்றிருக்கின்றனர்.  வெறும் கல்வி மட்டுமில்லாமல் ஆகமங்களும், ஆகம சாஸ்திரங்களும், இலக்கணங்களும் கற்பிக்கப் பட்டிருக்கின்றன.  வைணவக் கோயில்களில் சைவ ஆகமமும், சைவக் கோயில்களில் வைணவ ஆகமம் ஆன பாஞ்சராத்திரம், வைகாநசம் போன்றவையும் கற்பிக்கப் பட்டிருக்கிறது.  பேதங்கள் இல்லை.  அதே போல் புத்த மடாலயங்கள், சமணப்பள்ளிகள் போன்றவையும் சிற்பம், சித்திரம், சங்கீதம், ஓவியம் போன்றவையோடு இலக்கியங்களும் கற்பித்து வந்திருக்கின்றன.  இத்தகையதொரு அருமையான கல்வி முறை பதினேழாம் நூற்றாண்டு வரையில் நம் நாட்டில் இருந்து வந்திருக்கிறது. 
கோயில்கள் முக்கிய இடம் வகித்ததையும் கோயில்களின் பூசாரிகள், மற்றும் சிவாசாரியார்கள், ஆசாரியர்கள் போன்றவர்களுக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவமும், மாநிலம் போற்றும் மன்னனாய் இருந்தாலும் ஏழை ஆசாரியருக்குக் கொடுக்கும் மதிப்பையும், அவருடைய கல்வி அறிவையும், மன்னனுக்குச் செய்யும் சரியான ஆலோசனைகளையும் அவற்றால் மன்னனையே வழி நடத்துவதையும் கண்ட ஆங்கிலேயர் கொண்டு வந்த வேறுபாட்டுத் தத்துவமே ஆரிய, திராவிடக் கோட்பாடு. அதில் ஆரம்பித்தது வினை!  முதலில் விவசாயத்தில் கை வைத்த ஆங்கிலேயர்கள் அடுத்து நம் கல்வி முறையில் கை வைத்தனர்.  வந்தது மெக்காலே கல்வி முறை. ஒழிந்தது இந்தியப் பாரம்பரியக் கல்வி முறை! அழிய ஆரம்பித்தது இந்தியக் கலாசாரம் மெல்ல மெல்ல மெல்ல! :((((((((
 
 
உங்க பதிவில் சொன்ன பழங்கால செய்திகள் இந்தியனை தலைநிமிர வைக்குமென்றால்....நிகழ்கால சங்கதிகள் அவனை தலை குனிய வைக்கும்.
ReplyDeleteஅருமையான பதிவு, நல்ல நல்ல தகவல்களுடன்.
வாங்க நானானி, படிச்சதுக்கு முதலில் நன்றி. நான் குறிப்பிட்டிருக்கும் சுட்டியில் கிடைக்கும் புத்தக வரிசையில் இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைப் படியுங்கள். ஆச்சரியமா இருக்கும். பாராட்டுக்கு நன்றிங்க.
ReplyDelete