எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 29, 2012

இருபத்தைந்து வருடங்கள் முன்னால் 6

பெருமூச்சு விட்டாள் ராதா. அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.  எல்லாம் கண்மூடித் திறக்கிறதுக்குள்ளாக மளமளவென நடந்துவிட்டது.  நடந்தவைகளை மனதுக்குள்ளேயே அசை போட்டாள். அவளை மாமியார் வீட்டிலேயே அரை மனதாகவே சந்துரு விட்டுச் சென்றான்.  அவன் நுண்ணிய பார்வைக்கு வீட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் புரியாமல் இல்லை.  அதுவும் ராதாவும் அவனும் சில நிமிடங்கள் சேர்ந்தாற்போல் பேசினாலோ, கோயிலுக்கோ அல்லது வேறெங்கேயோ சென்றுவரக் கிளம்பினாலோ அவர்களைத் தனியே விடக் கூடாது எனக் கங்கணம் கட்டிக் கொண்டவர்கள் போல இரு தங்கைகளும் கூடக் கிளம்புவார்கள்.  அம்மா வேறே அதுகளும் தான் என்ன செய்யும்? இப்படித் தானே போக முடியும்! எல்லாருமாப் போயிட்டு வாங்கனு முடிச்சுடுவாள்.  இந்த ஊருக்கு மாற்றிக் கொண்டு வந்தால் தனக்குக் குடும்ப வாழ்க்கை என்பது இருக்காதோ என்றே சந்துரு நினைத்தான்.  ஆகவே பம்பாய்க்குப் போனதுமே அவன் பங்களூர் அல்லது புனாவுக்கு மாற்றல் கேட்க நினைத்தான்.

அவனுடைய எண்ணத்திற்கேற்றாற்போலவே பங்களூரில் இருந்த பம்பாய்க்காரர் ஒருத்தர் அவன் இருக்கும் இடத்திற்கு வரவேண்டும் எனத்துடிக்க,சந்துருவும் அவரும் பேசிக் கொண்டு, பரஸ்பரம் இடம் மாறிக்கொள்வதாய் மேலதிகாரிகளுக்குத் தெரிவிக்க, பம்பாய் போன ஒரே மாதத்திலேயே பங்களூருக்கு வந்துவிட்டான் சந்துரு. ஒருவேளை ப்ரமோஷன் கிடைக்கவில்லை எனில் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.  அவன் இப்போது வகிக்கும் பதவியைத் தான் பங்களூர்க்காரரும் வகித்தார்.  ஆகவே எல்லாமே எளிதாகிவிட்டது.  பங்களூர் வந்ததுமே ராதாவுக்கும் வேலைக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான் சந்துரு.  ஒரு கம்பெனியில் தாற்காலிகமாய்க் கிடைக்கும் போல் இருந்தது.  தாற்காலிகம் என்றால் அனுப்புவது கடினம் என்பதால் அதைச் சொல்லாமலேயே ராதாவை அழைத்து வரவேண்டும் எனக் கிளம்பி ஊருக்கு வந்தான்.  வாசலிலேயே புதுப்புடைவை கட்டிக்கொண்டு அவன் தங்கைகள் இருவரும் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

சந்துருவைப் பார்த்ததும், "அண்ணா, அண்ணா!" என்று சந்தோஷக் கூச்சலிட்டனர்.  உள்ளிருந்து ஓடோடி வந்தாள் ராதா.  அவளை சந்தோஷத்துடன் பார்த்த சந்துரு அவள் இருக்கும் நிலையையும், உடல் நிலையையும் பார்த்துத் திகைத்துவிட்டான்.  தூக்கிச் செருகிய புடைவையோடும், கலைந்த கேசத்தோடும், அரைத்துக் கொண்டிருந்த மாவுக்கையோடும் வந்திருந்தாள் ராதா.  கல்யாணத்தின்போது பார்த்ததுக்குப் பின்னால் ஒரு மாதம் தானே ஆகி இருக்கிறது! ஆனால் இந்த ஒரு மாதத்தில் ராதா துரும்பாக இளைத்திருந்தாள். கண்களிலேயே ஒரு சோகமும் கூடத் தெரிந்தது.  கூட அழைத்துச் செல்லாமல் தப்புப் பண்ணிவிட்டோமோ என சந்துருவுக்குத் தவிப்பாக இருந்தது.  அதற்குள்ளாக, "என்ன அண்ணா,. மன்னியையே பார்த்துண்டு நிக்கிறே? அவளுக்கென்ன? மூணு வேளையும் சாப்பிட்டுக் கொண்டு சொஸ்தமாத் தான் இருக்கா.  என்ன கவலை! " என்றாள் பெரிய தங்கை.  லதாவும் உடனேயே, "எத்தனை புடைவை வைச்சிருக்கா, அவள் ஒருத்திக்கு இத்தனை புடைவையா?  எங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்துடுனு கேட்டு வாங்கிக் கொண்டு விட்டோம்.  கொஞ்சம் நீதான் சொல்லு அவ கிட்டே.  என்னமோ சொத்தையே தூக்கிக் கொடுத்திட்டாப்போல மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கறா!" என்று குற்றம் சாட்டினாள்.

இதற்கு மேலும் ராதா அங்கிருப்பது சரியில்லை எனச் சந்துருவுக்குப் புரிந்தது.  வாய்விட்டுச் சொல்லாமல் மெளனமாய்க் காரியத்தைச் சாதிக்க வேண்டும் எனத் தெரிந்து கொண்டான்.  ஆகவே, ராதாவிடம், போய்க் காபி கொண்டு வா என அனுப்பி விட்டு மெல்லத் தாய் இருக்குமிடம் தேடிச் சென்றான்.  கொல்லையிலே இரண்டாங்கட்டிலே அக்கம்பக்கத்துப் பெண்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அகிலாண்டம்,  கூட சந்துருவின் இரு தம்பிமார்கள், சந்துருவின் அப்பா எல்லாருமே அங்கே கூட்டம் கூடி இருந்தனர்.  இந்தப் பசங்க ஏன் இங்கே இருக்காங்க? என்று சந்துரு நினைக்கையிலேயே சந்துருவின் அப்பா திடீரென இரும, அந்தச் சத்தம் கேட்டுத் திரும்பிய அவன் தம்பிமார்கள் சொல்லி வைத்தாற்போல  அருகே இருந்த புத்தகக் கட்டைப் பிரித்து வைத்துக்கொண்டார்கள்.  அனைத்தையுக் கண்டும் காணாதது போல் சென்ற சந்துரு சமையலறையிலேயே சாய்ந்தாற்போல் அமர, ராதா காபி கலந்தாள்.  கணவன் காட்டிய ஜாடையைப் புரிந்து கொண்ட அகிலாண்டம், "ஏ ராதா, பாதி அரைக்கறச்சே எங்கே எழுந்து போனே?  இங்கே வா, அரைச்சு முடி;  அங்கே யார் வந்திருக்கா?  சந்துருவா?  ஏன் , சந்துரு வந்தால் என்னைப்பார்க்க மாட்டானா?  இல்லாட்டி அவனுக்கு நான் தான் காப்பி கலந்து கொடுக்க மாட்டேனா? நீ தான் செய்யணுமா?  வந்து ஒருமாசம் கூட இல்லை;  அவனோடு எத்தனை நாள் குடித்தனம் பண்ணி இருக்கே? எல்லாம் தெரிஞ்சாப்போல எல்லாத்துக்கும் நீ முந்திக்கிறயே! நகரு அந்தப்பக்கம்.  என் பிள்ளைக்குச் செய்ய எனக்குத் தெரியும். " என்றாள் படபடவென.

ராதா வாய் திறக்காமல் அங்கிருந்து நகர்ந்தாள்.  அன்றிரவு இருவரும் தனிமையில் சந்தித்தபோது அவர்கள் இருவரும் பங்களூரில் குடித்தனம் வைக்கப் போகும் விஷயத்தையும், அவளுக்கு வேலை பார்த்து வைத்திருப்பதையும் சொன்னான் சந்துரு.  அவன் முகத்தில் சந்தோஷமே இல்லை.  அதிலிருந்து மிகப்போராடியே அகிலாண்டத்தின் சம்மதம் கிடைத்திருக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டாள் ராதா.

எப்படியோ, இதோ, ராதா, இங்கே வந்து மூன்று மாதமாகிறது.  குடித்தனம் வைக்கத் தான் எத்தனை பாடு படுத்திவிட்டாள் அவள் மாமியார். அவள் அப்பா, அம்மா இங்கே வந்து அவங்க எல்லாரையும் பங்களூருக்கு அவங்க செலவில் கூட்டிச் செல்ல வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தினாள்.  ஆனால் சந்துரு இந்த விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்பாகவே இருந்துவிட்டான்.  அவங்க நேரே பங்களூர் வரட்டும்.  பெண்ணுக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுக்கட்டும், இங்கே எல்லாம் வந்து கொண்டிருக்க வேண்டாம் என்று கூறிவிட்டான்.  ரொம்பவும் சொன்னால் சந்துரு திரும்பிக் கொண்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் அகிலாண்டமும் வாயே திறக்கவில்லை.  கிளம்புகையில் மாமனாரை நமஸ்கரிக்கையில் கடைசி மைத்துனன், "மன்னி, தனிக்குடித்தனம் போறே.  எங்க அண்ணாவை எங்க கிட்டே இருந்து பிரிச்சுடாதே.  அதோட அவசரப் பட்டுண்டு குழந்தை, குட்டினு பெத்துக்காதே.  நாங்கல்லாம் இருக்கோம்.  மறந்துடாதே." என்று சொல்ல, சின்னப்பையன் பேசும் பேச்சா இதுனு ராதா வியக்க அவள் மாமியார் அப்படியே சின்னைப் பையன் சொல்வதை ஆமோதித்தாள்.

பெருமையுடன் அவளிடம், "குழந்தை எவ்வளவு பொறுப்பா யோசித்துச் சொல்றான் பாரு! இப்போதைக்கு உனக்கு இரண்டு பெண்ணும், இரண்டு பிள்ளைகளும் இருக்காங்க, நினைவு வைச்சுக்கோ!" என்றாள்.  அதோடு அங்கிருந்து கிளம்பி பங்களூருக்கு வந்தாயிற்று.

மூன்று மாதம் ஆகிறது; ராதாவுக்கே சந்தேகம் தான்.     அன்று சந்துரு வந்ததும் மருத்துவரிடம் சென்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டும். மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.  அம்மாவுக்குக் கடிதம் எழுத வேண்டும்.  கடிதமும் எழுதினாள்.  அதற்குள்ளாகச் சந்துரு வந்தான் அலுவலகத்தில் இருந்து.    சற்று ஆசுவாசம் செய்து கொண்ட பின்னர் சந்துரு அவளிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான். பிரித்துப் பார்த்த அவள், " என்ன உங்க அம்மா வரப் போறாங்களாமா?  என்ன விசேஷம்?" என்று கேட்டாள்.  "தெரியலை, வித்யாவைப் பெண் பார்த்துட்டுப் போயிருக்காங்க இல்லை; அது பற்றி இருக்கும். "என்றான் அசுவாரசியமாக.

"ஓஹோ" என்றாள் ராதா யோசனையுடன்.  தன் நிலைமையை மாமியாரிடம் தெரிவிப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.  அகிலாண்டமும் வந்தாள். வந்ததுமே ராதாவிடம் தனிமையில் பேசிக் கொண்டிருக்கையில் குண்டைத் தூக்கிப்போட்டாள்.  ராதா திக்குமுக்காடிப் போனாள்.

6 comments:

  1. சந்துரு விழித்துக் கொண்டது ஆறுதல். மாமியார் இந்த சமயம் ஊர் வந்திருப்பதால் ராதாவுக்கு சங்கடம் வருமோ? கதாசிரியருக்கே வெளிச்சம்! நாத்தனார்களுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைப்பது இவர்கள் தொல்லையைக் குறைக்கும், இல்லை?!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, ஶ்ரீராம், ரொம்பவே இன்வால்வ் ஆகாதீங்க. அப்புறமா கவலைப்பட்டுக் கவலைப்பட்டு உடம்பு இளைக்கும், உங்க மனைவி(பாஸ்??) கதையெல்லாம் படிச்சு உடம்பைக் கெடுத்துக்கிறீங்கனு சொல்லப் போறாங்க. ஆனாலும் உங்க பின்னூட்டங்கள் மட்டுமில்லாமல் எல்லாருடையதும், அவரவர் யோசனைகள், ஹேஷ்யங்கள் எல்லாமே ரசனையாத் தான் இருக்கு.

    ReplyDelete
  3. முன்னேல்லாம் குடும்பத்தில் இப்படித்தான் நடை முறை இருந்திருக்கு. அதை சுவாரசியமாகசொல்லி செல்லும் விதம் நல்லா இருக்கு. அடுத்து என்னன்னு எதிர்பார்ப்பு எகிருது.

    ReplyDelete
  4. ஒரு வழியாக ரம்யாவின் தாய் யார் என்று தெரிந்து விட்டது. ஆக, மலையைக் கெல்லி எலியைப் பிடிச்சாச்சு. வேணும்ன்னா 'க'னா பாஷைலே சொல்லலாம்ன்னா..
    இப்போ வேண்டாம்.

    ReplyDelete
  5. வாங்க லக்ஷ்மி, அது ஒரு காலம்; இப்போ அப்படியே உல்டா. :))))

    ReplyDelete
  6. ஜீவி சார், "க" பாஷையில் வேண்டாம். அதெல்லாம் எல்லாருக்குமே புரிஞ்சிருக்கும். எல்லாரும் ஜாம்பாவான்களும், ஜாம்பவதிகளுமா இருக்கிறச்சே, நான் என்ன! தூசு மாத்திரம்! :))))

    நீங்கல்லாம் வந்து படிக்கிறதே எனக்கு சந்தோஷமா இருக்கு.

    ReplyDelete