எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, June 22, 2012

மதுரை, மதுரை, மதுரை, மதுரை!

மதுரைக்குச் சாலை வழி போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டன.  திருச்சி தாண்டியதும் விராலிமலை வந்ததும் மயில்கள் கூட்டம் கூட்டமாய்க் காணப்பட்டது இப்போது அறவே இல்லை;  ஏற்கெனவே இது குறித்துப்பதிவர் வெங்கட் நாகராஜ் கூறினார். கட்டிடங்கள் நிறைய வந்துவிட்டன.  மதுரையில் நுழைகையில் யானைமலையைப் பார்த்ததும், நல்லவேளையா, இதைத் தொட்டால் அவங்களோட பணம், பதவி, அந்தஸ்து போயிடும்னு ஒரு கூற்று இருக்கிறதாலே இது பிழைச்சதுனு நினைச்சுக் கொண்டேன். மலையைப் படம் எடுக்க நினைச்சு முடியலை.  திரும்பி வரச்சே எடுத்தேன்.  ஆனால் சரியா வரலை; 

யானை மலையிலிருந்து மாட்டுத் தாவணி போனதும், எஸ்.எஸ். காலனி போக வேண்டி இப்போப் பெரியார் பேருந்து நிலையம்னு அழைக்கப்படும் சென்ட்ரல் பஸ் ஸ்டான்டுக்குப் போகப் பேருந்தில் ஏறினோம்.  கே.கே.நகர் முகமே மாறிவிட்டது.  ஷெனாய் நகரும்.  எர்ஸ்கின் ஆஸ்பத்திரி எனப்பட்ட ராஜாஜி மருத்துவமனைப் பகுதி கொஞ்சம் பழைய சூழ்நிலைகளைப் பாதுகாக்கிறது. கோரிப்பாளையம் பக்கம்  திரும்பிப் பார்த்துக் கொண்டேன்.  சும்மாவே நெரிசலா இருக்கும்.  இப்போக் கேட்கணுமா!  மேல் பாலத்தில் ஏறினதும் வைகையை, வறண்ட வைகையைப் பார்த்ததும் எப்போவும் போல் மனம் கனத்தது.  இங்கே திருச்சி, ஶ்ரீரங்கத்தில் காவிரி கொஞ்சமாவது கெட்டுப் போகாமல் தூய்மை ஓரளவு பாதுகாக்கப் படுகிறது.  இதே மாயவரம், கும்பகோணம் என்றால் காவிரி இல்லை சாக்கடை என அடித்துச் சொல்லலாம்.  ஆனால் மதுரையில் எனக்கு நினைவு தெரிஞ்சு ஆக்கிரமிப்புகளைத் தான் பார்க்கிறேன்.  இப்போ இன்னும் அதிகம் ஆகிக் குறுகிக் கூனிப் போய் வறண்ட முகத்தோடும், வறண்ட பார்வையோடும் எனக்கு இந்த கதிதான் விதி என்ற தலை எழுத்தோடும் வெட்கத்தோடும் காணப்பட்டாள் வைகை.  

சிம்மக்கல் பகுதியில் பழைய வீடுகள் எல்லாம் ஓரளவு மாறாமல் இருந்தாலும், எங்கு பார்த்தாலும் கடைகள்; கடைகள்; கடைகள்,  அத்தனை கடைகளில் மக்கள் ஏதோ வாங்கிக் கொண்டும் இருந்தனர்.  வடக்கு வெளி வீதியும் அப்படியே.  சேதுபதி பள்ளி நுழைவாயிலில் பாரதி சிலை இருக்குமிடம் அப்படியே காணப்பட்டாலும், புதியதொரு கட்டிடமும் வந்திருக்கிறது.  என்னவாயிருக்கும்?  போஸ்ட் ஆபீஸ் கட்டிடம் மாறவே இல்லை.  அப்படியே இருக்கிறது.  மற்றக் கட்டிடங்கள் எல்லாம் மாற்றம் கண்டுள்ளது.  பெரியார் பஸ் ஸ்டான்டின் முகமே புதிதாக இருக்கிறது.  அன்று மாலை கோவில் செல்கையில் கிஷ்கிந்தாவில் இறக்கி விடவானு ஆட்டோக்காரர் கேட்டப்போ விழித்தேன்.  அவர் உடனே புரிந்து கொண்டிருக்கிறார்.  தெற்கு கோபுர வாசலில் இறக்கி விடறேனுட்டார்.  அங்கெல்லாம் பழையபடி கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறது.  ஆனால் சொக்கப்ப நாயக்கன் தெருவில் இருந்து தெற்கு கோபுரம் செல்லும் நுழைவாயிலை அடைத்திருக்கின்றனர்.  வண்டிகள் அங்கேயே நின்று விடும். 

சித்திரை வீதிகளில் வண்டிகள் போகத் தடை.  கோயில் மதில் சுவர் சுற்றிப் பராமரிப்பு சுத்தமாக நன்றாக இருந்தது என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.  மெல்லிய ஜப்பான் புல்லை வளர்த்திருந்தனர்.  வெல்வெட் போல் லான் பச்சைப் பசேர் என. பூச்செடிகளும் வைத்திருந்தனர்.  எதிரே உள்ள கடைகள் எல்லாம் பெயர் மாற்றம் கண்டிருக்கின்றன.  தெற்கு கோபுர வாயில் ஆஞ்சநேயர் மட்டும் மாறவில்லை. கோயில் அப்படியே பழையபடியே காணப்பட்டது.

26 comments:

  1. ஊர்கள் காலத்தே ஊர்ந்து சென்று தன்னை புனரமைத்துக் கொள்கிறதோ என்னவோ....?!

    நல்லதொரு ஞாபகப் பதிவு.

    ReplyDelete
  2. // கிஷ்கிந்தாவில் இறக்கி விடவானு ஆட்டோக்காரர் கேட்ட//
    துல அர்த்தம் இருக்கு! :P:P:P ;-)))))))

    ReplyDelete
  3. ஒரு போட்டோ கூட காணலை! என்ன பதிவு இது?

    ReplyDelete
  4. மதுரையை பற்றி தெரியாதவர்கள் கூட தெளிவாக புரிந்து கொள்ளும்படி சொல்லி இருக்கீங்க நல்லா இருக்கு

    ReplyDelete
  5. //ஒரு ஃபோட்டோ கூட காணலை.....// அதானே...?

    கோவிலைச் சுற்றி வாகனப் போக்குவரத்துத் தடை செய்யப் பட்டிருப்பதோடு பேட்டரிக் கார் அறிமுகப் படுத்தியிருந்தாங்களே என்ன ஆச்சு?

    யானை மலையிலிருந்து நானும் உங்களோடு பயணம் செய்தேன். ராஜாஜி ஹாஸ்பிடல் எதிரே ஒரு சுரங்க நடைபாதை உபயோகமில்லாமல் இருக்கும்!

    ஏன் 'எங்கள்' பக்கம் வருவதில்லை?!

    ReplyDelete
  6. கிருஷ்ணா ராயர் தெப்பக்குளத் தெருவில், தங்கச்சாமி (மளிகைக்) கடை இருக்கின்றதா? வியாழன் / ஞாயிறு சந்தை இப்பொழுதும் கூடுகின்றதா?

    ReplyDelete
  7. மருதைக்கு போய் ரொம்ப வருஷம் ஆச்சு

    ReplyDelete
  8. அனுபவித்து எழுதாமல், ஏதோ அவசர கதியில் எழுதிய மாதிரி இருந்தது. ஆங்.. என்னவென்றால், அப்பப்போ பழைய நினைவுகள் மிஸ்ஸிங்.. அதான்! போகட்டும், இன்னொரு தடவை எழுதினாப் போச்சு. நான் கூட அப்படி இன்னொரு தடவைக்காகக் காத்திண்டிருக்கிறேன்.

    சிம்மக்கல் பற்றிக் குறிப்பிட்ட
    பொழுது மனம் பழைய நினைவுகளில் தோய்ந்தது. இன்னொரு தடவை போகும் பொழுது எல்.என். (பார்வை ஞாபகம் வேறு)
    அக்ரஹாரம், காமாட்சிபுர அக்ரஹாரம், (ஹலோ, ராமச்சந்திரன்) ஆதிமூலம் பிள்ளைத் தெரு எல்லாம் பார்த்து விட்டு வாருங்கள்!

    ReplyDelete
  9. மருத, மருத..... :)

    //இப்போ இன்னும் அதிகம் ஆகிக் குறுகிக் கூனிப் போய் வறண்ட முகத்தோடும், வறண்ட பார்வையோடும் எனக்கு இந்த கதிதான் விதி என்ற தலை எழுத்தோடும் வெட்கத்தோடும் காணப்பட்டாள் வைகை. //

    நதிகள் அனைத்திற்கும் இதே நிலை..... யமுனை நதி என்பதை விட சாக்கடை நிலை அடைந்து விட்டது.... இப்போது நதிகளைப் பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சுகிறது.

    ReplyDelete
  10. சிம்மக்கல் பகுதிகள் அதிகம் மாறவில்லை என்கிறீர்கள்.சற்று உள்ளே
    அக்ரகாரங்களில் வந்து பார்த்தால்
    பிரமித்துவிடுவீர்கள்.எப்போது பார்த்தாலும் கட்ட்டங்கள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்,இரண்டு, மூன்று மாடிகளுக்குக் குறைவில்லை,
    எப்படித்தான் பணம் கிடைக்கிறதோ?சர்க்கார் ஆதரவில்தீப்பெட்டிபோல் உயரேஎழும் ஒற்றை அறை மூன்றுமாடிகள்பெருகுகின்றன்.பழைய
    நாட்களிலிருந்து தொடர்ந்து வசித்துவரும்மதுரைவாசிகள் அழகை இழந்துவரும் நகரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிடவேண்டியதுதான்

    ReplyDelete
  11. கௌதமனசார்,
    அந்தவயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள்? அருமையான வாரமிருமுறை கூடும் காய்கறிச்சந்தையை பழைய இரும்புகடை
    களாக எந்தப் புண்ணியவான்களோ(வேறுயார், இந்த அரசியல்வியாதிகள்தான்)மாற்றிவிட்டார்கள்.நகரின் நடுவில் நல்ல காய்கறிகள் வாங்க இடம் இல்லை, மேலும் இந்த இடத்தின் பெயர் திலகர் திடல். மாலையில் அரசியல் கூட்டங்களும்
    நடக்கும்.சுத்தமாக மாமதுரையைக் கெடுத்துவிட்டார்கள்எதற்கும் துணிந்த அரசியல்வாதிகள்

    ReplyDelete
  12. ஜீவி சார்,
    காமாட்சிபுர அக்ரகாரத்தில் ராதாகிருஷ்ணனை மறந்துவிட்டீர்களே?ஆமாம், ராமச்சந்திரன் யார்? தெரியலியே?
    நீங்கள் எப்போது இந்தப்பக்கம் வரப்போபிறீர்கள்?ஆவலுடன் காத்திருக்கிறேன் சந்திக்க.

    ReplyDelete
  13. படிக்கிறப்போ எனக்கு என்ன தோணிச்சோ அதை ஜீவி அப்படியே கமெந்டியிருக்கார். இத்தோட எத்தனையாவது தடவையென்று தெரியவில்லை.

    ReplyDelete
  14. வாங்க தோழன், முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  15. வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதான் சொன்னேன் இல்லை, கிஷ்கிந்தான்னா என்னனு! :))))))

    ஃபோட்டோ எடுக்க முடியலை. பஸ்ஸில் ஒரே கூட்டம்,காமிரா ஜன்னல் வழியா வெளியே விழுந்துடுமோனு பயம் ரெண்டு பேருக்கும். கல்யாணத்தில் எடுத்த படங்கள் கூட என்னமோ சரியா இல்லை. :( ஜானவாஸக் காரின் முன்பக்க அலங்காரம் மட்டும் வந்திருக்கு. :))))

    ReplyDelete
  16. வாங்க லக்ஷ்மி, மதுரையை இப்போப் பார்த்தால் ஜீன்ஸ் போட்ட பாட்டி/அம்மா மாதிரி இருக்கு. :(

    ReplyDelete
  17. வாங்க ஸ்ரீராம், பாட்டரி கார் இங்கே ஸ்ரீரங்கத்தில் தான் தாயார் சந்நிதிக்குப் போக ஓட்டிட்டு இருக்காங்க. மதுரையில் பார்த்ததில்லை. மேல கோபுரத்திலே இருக்கோ என்னமோ! நாங்க தெற்கு கோபுரம் வழியாப் போயிட்டோம். எர்ஸ்கின் ஆஸ்பத்திரிச் சுரங்கப்பாதையைப் பார்க்க முடியலை. இருக்கா என்னனு தெரியலை.


    ஏன் 'எங்கள்' பக்கம் வருவதில்லை?!//

    ஹிஹிஹி, கடந்த ஐந்து நாட்களாக சுற்றுப்பயணம். ஆங்காங்கே குடிமக்களை நேரில் கண்டு குறை தீர்க்க மனுக்களை வாங்கி வாங்கிக் கை சோர்ந்து விட்டது. அதான் வரலை. :)))))) இனிமே இப்போதைக்கு எங்கும் இல்லை.

    ReplyDelete
  18. வாங்க கெளதமன் சார், சந்தை இப்போ இல்லைனு எப்போவோ சொல்லிக் கேள்விப் பட்டேன். கிருஷ்ணாராயர் தெப்பக்குளத் தெரு வழியாப் போக வாய்ப்புக் கிடைக்கலை இம்முறை. :))) என்னோட சின்ன வயசிலே எங்க (அம்மாவின் அப்பா) தாத்தா அங்கே தான் இருந்தார். பக்கத்திலே இருக்கும் மணி ஆஸ்பத்திரியில் தான் என் தம்பி பிறந்ததாய்ச் சொல்வாங்க. ஆனால் கிருஷ்ணாராயர் தெப்பக்குளத்தெரு வீட்டில் தாத்தா, பாட்டி இருந்ததும், விளையாடியதும் நினைவில் இருக்கு. :))))))

    ReplyDelete
  19. வாங்க எல்கே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  20. ஜீவி சார்,
    ஆன்லைனில் எழுதியது ஒரு காரணம்; அதோடு அனுபவங்களையும் பகிர்ந்தால் பதிவு ரொம்பப் பெரிசாப் போயிடுது. அதனால் என்னோட நினைவுகளைக் குறைத்துக் கொண்டு ஊரைக் குறித்து மட்டுமே சொன்னேன். :)))))

    லக்ஷ்மி நாராயணபுர அக்ரஹாரமும், என் பெரியம்மா இருந்த ஸ்டோரும் நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த ஸ்டோரில் வருஷா வருஷம் நடக்கும் வைக்கத்து அஷ்டமி சமாராதனையும், பெரியம்மா பண்ணும் வெங்கடாசலபதி சமாராதனையும் மறக்க முடியுமா?

    அந்த ஸ்டோர்காரங்க எல்லாருமே என்னை ஒரு ராணி மாதிரி உபசரிப்பாங்க; அவங்க காட்டிய அன்பையும் மறக்க முடியாது. அதோடு பெரியம்மா விசேஷங்கள் முடிஞ்சதும், அப்பா கிட்டே என்னை மட்டும் மறுநாள் அண்ணாவோடு அனுப்பி வைக்கிறதாவோ இல்லாட்டித் தானே கொண்டு விடறதாவோ சொல்லிட்டு என்னைத் தங்க வைச்சுட்டு கல்பனா தியேட்டரில் நடக்கும் சினிமாக்கு அனுப்பி வைச்சிருக்கிறதை னு எதை மறக்க முடியும்? அங்கே தான் "பாமா விஜயம்" படம் வெளிவந்த ஒரே வாரத்தில் பார்த்தேன். அதுக்கப்புறமா அப்பாவுக்குத் தெரிஞ்சு பார்த்தது தனிக்கதை. :)))))

    ReplyDelete
  21. வாங்க வெங்கட்,

    யமுனை மட்டுமில்லாமல் இந்தியாவின் பல நதிகளுக்கும் அதோகதிதான். இந்த அழகில் நாம் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது குறித்துச் சிந்திப்பதே இல்லை என்பதும் வருந்தத் தக்க செய்தி. :(((((

    ReplyDelete
  22. ராதாகிருஷ்ணன், வருகைக்கு நன்றி. நடந்து போயிருந்தால் ஒரு வேளை தெரிந்திருக்கும். பார்த்த அளவில் சில பழைய வீடுகள் அடையாளம் காண முடிந்தது. ஆகையால் ஓரளவுக்கு மாறவில்லை என்று தோன்றியது. மற்றபடி மதுரை என்றோ அரிதாரம் பூசிக் கொண்டாகிவிட்டது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை. :((((((

    ReplyDelete
  23. ஆமாம், திலகர் திடல் என்றழைக்கப்பட்ட சந்தை மைதானத்தில் தான் விநோபாபா வே வந்தப்போ அப்பா அழைத்துச் சென்றார். லேசாக நினைவில் இருக்கு. அதன் பின்னர் ஒரு முறை ஜனசங்கம் கட்சி (இப்போதைய பாரதிய ஜனதாவின் தாய்க்கட்சி) வாஜ்பேய் அவர்களைப் பேச்சாளராக அழைத்திருந்தது. அப்போ ஜனசங்கக் கட்சியின் சின்னம் தீபம். தீபச் சின்னத்திற்காக வாஜ்பேய் பேசினதைக் கேட்க அப்பா போனார். ஹிந்தியில் தான் பேசி இருக்கார். அப்பா ஹிந்தியில் பண்டிட் என்பதால் அவருக்குப் புரியும். போயிட்டு வந்து அவரது பேச்சாற்றலையும் அவர் பிட்டுப் பிட்டு வைத்த செய்திகளையும் குறித்து எங்களுக்குக் கதை போலச் சொல்லி இருக்கார். மெல்ல மெல்லக் காங்கிரஸின் பக்கமிருந்து நாங்கள் எல்லாம் விலக ஆரம்பித்தது அப்போதிருந்து தானோ? :)))))))))))

    ReplyDelete
  24. வாங்க அப்பாதுரை, பொதுவாகவே என் பதிவுகள் பெரிசா இருக்குனு எல்லாரும் சொல்வதாலேயே அதிகம் எழுதலை என்பதோடு ஆன்லைனிலே அப்படியே அவசரமா(ஜீவி சார் சொன்னது போல்) எழுதினதும் காரண்மாய் இருக்கலாம். :)))))

    ReplyDelete
  25. //காமாட்சிபுர அக்ரகாரத்தில் ராதாகிருஷ்ணனை மறந்துவிட்டீர்களே?ஆமாம், ராமச்சந்திரன் யார்? தெரியலியே?//

    ராதாகிருஷ்ணன் சார்! மறக்கலை! மறக்கலை!

    உங்கள் ஞாபகத்தில் தான் அந்த ஹலோ வந்தது! ('வலைச்சரம்' சீனா சாருக்குக் கூட உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்) பெயர் தான் தான் மாறிவிட்டது! அதனால் என்ன? அது நீங்களாகவே எனக்கிருக்கும் பொழுது ராதாகிருஷ்ணன் ராமச்சந்திரனாய் எழுத்தில் வந்து விட்டார்! அவ்வளவு தானே?.. போதாக்குறைக்கு இந்தப் பெயர் மாற்றம் ஒரு அழகான, பிரச்சித்திபெற்ற நகுலன் சாரின் கவிதை ஒன்றையும் நினைவு படுத்தி விட்டது! உங்களுக்காக அது:

    "ராமச்சந்திரனா என்று கேட்டேன் .
    ராமச்சந்திரன் தான் என்றார் .
    எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை .
    அவரும் சொல்லவில்லை ."

    அப்பாஜி சார்! என் எழுத்தாளர் பகுதியில் நகுலனைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும். அங்கே வாருங்கள், நிறைய பேசலாம்.

    ReplyDelete
  26. 'சந்தைப்பேட்டை' என்ற நாவல் படித்திருக்கிறீர்களா? அது எழுதியது பி எஸ் ராமையா தானே?

    ReplyDelete