காளி தன் இன்னொரு கையில் வாளை ஏந்தி இருக்கிறாள். தீமைகள் எங்கு நேர்ந்தாலும் தீயவர்களை வெட்டிச் சாய்த்து விடுவாள் காளி. இன்னொரு கையில் வெட்டிய தலையை மட்டும் பிடித்திருக்கிறாள். ஒரு சில காளி சிலைகளில் பாம்பு காணப்படும். வெட்டிய தலை இருப்பதும் சரி, பாம்பு காணப்படுவதும் சரி யோக மார்க்கத்தில், சக்தி வழிபாட்டில் தத்துவ ரீதியான பொருள் சொல்லப்பட்டாலும் நாம் அதைக் கண்டு பயப்படாமல் காளி தீயவர்களைத் தண்டித்து அவர்கள் தலையைத் தன் கையில் வைத்திருப்பதாக எளிமையான பொருளிலேயே காண்போம். குண்டலினி சக்தி மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்குவதாக ஐதீகம். அந்தக் குண்டலினியை எழுப்பும் சக்தி கொண்டவள் காளி என்பதைக் குறிக்கவும் பாம்பைத் தன் கையில் காளி வைத்திருக்கலாம்.
காளிக்கு மூன்று கண்கள் உண்டு ஈசனைப் போல! அவை முறையே சூரியன், சந்திரன் ஆகியன முதலிரண்டு கண்களாகவும் நெற்றிக்கண் அக்னியாகவும் சொல்லப்படுகிறது. விரிந்த செஞ்சடை கொண்ட ஈசனையே காளியின் கணவராகச் சொல்லப்பட்டாலும் சிவாம்சம் பொருந்திய வீரபத்திரருக்குக் காளி துணைவி என்றும் சொல்லுவதுண்டு. எங்கெல்லாம் வீர பத்திரர் இருக்கிறாரோ அங்கெல்லாம் காளி காணப்படுவதுண்டு. வீரபத்திரரைத் தோற்றுவித்த ஈசன் அவரின் சக்தியாகக் காளியையும் தோற்றுவிக்கச் செய்தார் எனச் சில புராணங்கள் கூறும். ஈசனைப் போலக் காளிக்கும் விரிந்த கூந்தல் காணப்படும். இது அவளது எல்லை காணா வியாபகத் தன்மையைச் சுட்டிக்காட்டுவதாகப் பொருள் கொள்கின்றனர்.
பகவான் ஶ்ரீராமகிருஷ்ணரின் கூற்றுப்படி, சக்தி வேறு சிவம் வேறல்ல. நெருப்பில் எவ்வாறு உஷ்ணம் உள்ளூர உறைந்துள்ளதோ , பால் எப்படி இயல்பாகவே வெண்மை நிறத்தில் காணப்படுகிறதோ, நவரத்தினங்கள் எப்படி சுயம்புவாக ஒளிர்கின்றனவோ அவ்வாறே காளியும், ஈசனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாதவர்கள். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இரண்டும் வேறு வேறு அல்ல. என்று கூறி உள்ளார். காளிக்கு பலியிடும் வழக்கம் முன் காலத்தில் இருந்தது. இப்போதெல்லாம் பலியிடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் பழங்குடி மக்கள் சிலரும் சில குறிப்பிட்ட இனத்தவர்களும் பலியிடுவதாகக் கேள்விப் படுகிறோம். நேபாளத்து கூர்கா இனத்தவர் எருமை மாட்டைப் பலி கொடுப்பார்கள் என்றும் கேள்விப் படுகிறோம். இந்த பலி கொடுப்பது என்பதன் உண்மையான தத்துவம் நம்மிடையே காம குரோத, லோபம், மோகம், மத மாற்சரியங்களை நாம் காளியிடம் தியாகம் செய்துவிடுகிறோம் என்பதே ஆகும்.
வெள்ளாட்டைப் பலி கொடுப்பது என்பது காமத்தைத் தியாகம் செய்வதாகவும், எருமை (கோபம்) குரோதத்தையும், பூனை லோபத்தையும், செம்மறியாடு மோகத்தையும் (இங்கே பெண்ணாசையைக் குறித்தாலும் அனைத்து ஆசைகளும் மோகத்தில் அடங்கும்.) நரனாகிய மனிதன் ஆணவமாகிய மதத்தையும், ஒட்டகம் பொறாமையாகிய மாற்சரியத்தையும் குறிக்கும் என்பார்கள். இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவெனில் இத்தகைய அடையாளச் சொற்களின் பொருளுள்ள குணங்களைத் தான் அம்பிகையிடம் பலியிடவேண்டுமேயன்றி உண்மையில் அந்த மிருகங்களை அல்ல. நம்மிடையே உள்ள மிருக குணங்களைத் தான் நாம் தொலைக்க வேண்டும். சிவன் மார்பின் மீது காளி நின்று நடனம் ஆடுவது போல் பார்த்திருக்கிறோம். செயலற்றுக் கிடக்கும் நிர்க்குண பிரம்மம் சிவன் எனில் அவன் மேல் ஆடும் காளி செயல் உள்ள சகுணப் பிரம்மம் ஆவாள்.
எப்படி எனில் விளக்கை ஏற்றும்போது விளக்கின் எண்ணெய் ஊற்றும் அடிப்பாகமும் எண்ணெயும் சிவன் எனில் எரியும் சுடராகச் சக்தி திகழ்கிறாள். சிவனும் சக்தியும் சேர்ந்தே இருக்கும் சிவசக்தி ஆகும். சக்தி இயங்கினால் தான் நாம் சிவனை அறியவே முடியும். பாம்பு அசையாமல் படுத்திருந்தால் அதைச் சிவன் எனலாம். அதே பாம்பு ஓடும்போது சக்தி ஆகிறாள். சக்தி இல்லையேல் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தியும் இல்லை! தன்னை வணங்கியவர்களைக் காளி கைவிட மாட்டாள்.
பி.கு. ஏற்கெனவே ஆருக்கும் அடங்காத நீலி என்னும் பதிவில் காளி குறித்து எழுதி இருக்கேன். கிட்டத்தட்ட இந்தப் பதிவைப்போல் தான் இருக்கும். :)
படித்துக் கொண்டேன்.
ReplyDeleteசில விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteநன்றி கீதா.சிவசக்தி ஸ்வரூபம் காளியை வணங்கிக் கொள்கிறேன்.
ReplyDeleteகாளி பற்றிய விவரங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteதன்னை வணங்கியவர்களைக் காளி கைவிட மாட்டாள்.//
ReplyDeleteஅருமை.