எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 15, 2016

புத்தகக் கண்காட்சி பற்றி நானும் எழுதிட்டேனே!

எல்லோரும் புத்தகக் கண்காட்சி பத்திப் பேசறாங்க. நாம மட்டும் பேசலைனா எப்பூடி? எனக்குத் தெரிஞ்சு புத்தகங்களை லைப்ரரியில் அடுக்கி வைச்சிருந்தாப் போல் பார்த்தது முதல் முதல் சித்தப்பா வீட்டில் தான். மதுரையிலே என்னோட பெரியப்பா வீட்டிலும், அம்மாவழித் தாத்தா வீட்டிலும் புத்தகங்கள் இருந்தாலும் இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு இருந்ததில்லை. :) அந்த மாடிக் கூடத்தில் இருந்த ஷெல்ஃபில் எல்லாம் புத்தகங்கள் வழிந்தன. எதை எடுப்பது, எதைப் படிப்பது? ஒண்ணுமே புரியலை, உலகத்திலே! அதைத் தவிரவும் அந்தக்காலத்து விகடன்கள், கல்கிகள்! தீபாவளி மலர்கள்! போதாக் குறைக்குச் சித்தப்பாவுக்கு மாசா மாசம் எல்லாப் பத்திரிகைகளும் அனுப்பும் புத்தகங்கள்! மதிப்புரைக்காக வரும் புத்தகங்கள்!  எல்லாவற்றையும் பார்த்துட்டு மயக்கமே வந்துடுச்சு.

ஏற்கெனவே தாத்தா வீட்டில் விவேக சிந்தாமணியிலிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை டைரி வரை படிச்சுப் பொது அறிவை வளர்த்திருந்தாலும் கதைகள் மேலுள்ள மோகம் குறைந்ததில்லை. வளரவே செய்திருக்கிறது. ஆகவே அதில் எந்தக் கதைப்புத்தகத்தை முதலில் படிப்பதுனு ஒரு பட்டி மன்றமே நடத்திட்டு ஆனந்த விகடன் பைன்டிங்கைத் தேர்ந்தெடுத்தேன். முதலில் கிடைச்சது சிஐடி சந்துரு நாவலோட பைன்டிங்! அப்புறமா தேவனின் லக்ஷ்மி கடாட்சம்!  லக்ஷ்மி கடாட்சம் கிடைச்சப்புறமா ஜஸ்டிஸ் ஜகந்நாதன் என்று வரிசையா தேவனின் நாவல்கள். பின்னர் கல்கியின் நாவல்கள் என்று விழித்திருக்கும் நேரத்தில் புத்தகங்களும் கையுமாகவே இருந்தேன்.  ஆனால் அப்போது புத்தகக் கண்காட்சி எல்லாம் நடந்ததில்லை. சித்தப்பா வாசகர் வட்டத்துக்கு நெருங்கியவராக இருந்ததால் வாசகர் வட்ட வெளியீடுகள் அனைத்துமே வந்துவிடும்.

இப்படிப் போய்க் கொண்டிருந்தப்போ கல்கி பத்திரிகையில் அறுபதாம் ஆண்டுகளில் பொன்னியின் செல்வனை இரண்டாம் முறையாகப் போடுவதாக அறிவிப்பு வந்தது.  எங்க வீட்டில் அப்பா வாங்கிக் கொண்டிருந்த ஆனந்த விகடனை முன் அறிவிப்புச் செய்யாமல் நிறுத்திவிட்டார். ஆகவே அப்போல்லாம் புத்தகம் படிக்கிறதுன்னா அக்கம்பக்கம் தயவு தான். இதற்காகக் கால் ஒடிய அவங்க வீட்டுக்கு நடையா நடந்து புத்தகத்தை வாங்கிப் படிப்பேன். கேட்டவுடன் புத்தகம் கொடுப்பது ஒரு சிலர் தான். எல்லோரும் புத்தகம் சும்மாவே கிடந்தால் கூடக் கேட்டவுடன் கொடுக்க மாட்டாங்க. பத்துத் தரமாவது வரச் சொல்லி ஆயிரம் கேள்விகள் கேட்டு எப்போத் திருப்பிக் கொடுப்பே? கசக்கக் கூடாது, மடிக்கக் கூடாது ஆயிரம் நிபந்தனைகளுடன் கொடுப்பாங்க. இப்படி இருந்தப்போவே நிறையப் புத்தகம் தேடித் தேடிப் படித்திருக்கேன்.

பொன்னியின் செல்வன் கல்கியில் மீண்டும் வரப்போவது தெரிஞ்சதும் மணியத்தின் படங்களுக்காகவே அதை வாங்க வேண்டும்னு நினைச்சு முடிவு செய்து கல்கி பத்திரிகை வாங்கலாம்னு முடிவு செய்தேன். அப்போ தையல் வேலை பார்த்துட்டு இருந்தோமுல்ல! அதனால் அப்பாவுக்குக் கொடுத்தது போகக் கையில் காசு புழங்கும். மேலும் பத்திரிகை மிஞ்சிப் போனால் எட்டணாத்தான் விற்றதுனு நினைக்கிறேன்.  அப்புறமா வாசலில் ஒரு பழைய பேப்பர் காரர் பழக்கம் ஆனார்! அவரிடம் எடைக்குப் பத்திரிகைகள், பழைய பேப்பர்கள் போடும்போது ஒருமுறை கல்கி பைன்டிங் அமரதாரா கிடைச்சது. அதிலிருந்து அவரிடம் இப்படிப் புத்தகங்கள் கிடைச்சால் என்னிடம் கொண்டு வந்து  கொடுக்கணும்னு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். இப்படியும் நிறையப் புத்தகங்கள் பழைய கல்கி, விகடன் பைன்டிங்கில் படிச்சிருக்கேன். ஆனால் எதுவும் சொந்தமாக்கிக் கொள்ள முடியலை.

பழைய பேப்பர் கடையில் நாலணாக் கொடுத்தால் வேண்டும் என்கிற புத்தகத்தை எடுத்து வந்து படிக்கலாம். தெற்காவணி மூலவீதியிலிருந்து நியூ சினிமா வழியாகத் தெற்குச் சித்திரை வீதி போனால் அங்கே முழுக்க முழுக்கப் பழைய பேப்பர் கடையாக இருக்கும். காலை பத்தரை மணிக்குப் போய்த் தேவையான புத்தகங்களைக் கொண்டு வந்துடுவேன். நாலணாக் கொடுத்துத் தான். ஆனாலும் அப்போவும் புத்தகக் கண்காட்சி எல்லாம் பேச்சுக் கூடக் கிடையாது.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் எப்போவானும் சோவியத் பொருட்காட்சி போடும்போது அதில் சோவியத் நாடு புத்தகங்களோடு ஒரு சில புத்தகங்கள் உள்ளூர்ப் பதிப்பும் விற்பாங்க. கடைசியில் 1977 ஆம் ஆண்டில் தான் சென்னையில் புத்தகக் கண்காட்சி முதல் முதலில் தொடங்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அப்போ ராஜஸ்தானில் இருந்தோம். சென்னையில் இருந்திருந்தாலும் புத்தகக் கண்காட்சிக்கெல்லாம் நம்ம ரங்க்ஸ் அனுப்பியும் வைக்க மாட்டார்; கூட்டியும் போக மாட்டார். :)

ஏற்கெனவே இருக்கும் புத்தகங்களையே என்ன செய்வது என்று அவருக்குக் கவலை பிச்சுக்கும்! இதிலே மேலே மேலே எங்கே புத்தகங்களை வாங்கிச் சேர்க்கிறது! 77 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி வருடா வருடம் பொங்கலுக்கு முன்னாலோ அல்லது பொங்கலை ஒட்டியோ புத்தகக்கண்காட்சி வருடா வருடம் நடைபெற்று வருகிறது.  முதல்லே நடந்தது மதரசா-இ--ஆசம் பள்ளினு சொல்றாங்க. இங்கே நடந்த கண்காட்சிகள் எல்லாம் நல்ல வெற்றி என்றும் சொல்கிறார்கள். அதன் பின்னர் ஒய்.எம்.சி.ஏ. மைதானம், ட்ரைவ்- இன் ஹோட்டல்(பழைய இடம், இப்போ அங்கே வேறே ஏதோ வந்திருக்கு) அப்படினு மாறிப் பின்னர் ஒவ்வொரு இடமாக அரங்கங்களைப் பொறுத்தும் அவற்றுக்கான இடங்களைப் பொறுத்தும் மாறி மாறி நடைபெற்று வந்திருக்கின்றது. ஒரு முறை 2010 ஆம் ஆண்டுனு நினைக்கிறேன். புத்தகக் கண்காட்சிக்கு என் அண்ணாவோடு போகலாம்னு நினைச்சப்போக் கூட்டம் தாங்கலைனும் மூச்சு விடச் சிரமப் படும்னும் தகவல் வந்தது. அண்ணா பயந்து கொண்டு கூட்டிச் செல்லவில்லை. அவரும் போய்விட்டு நுழைவதற்கே சிரமப் பட்டதாகச் சொன்னார். அந்த வருஷம் பச்சையப்பாவில் நடந்ததுனு நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் புத்தகங்கள் வாங்குவதே இல்லை. நண்பர்களிடமிருந்து பரிசாக வருபவை தான்! நான் வாங்கியதுனு சொல்லப் போனால் சென்னையில் ஆன்மிகக் கண்காட்சி நடந்தப்போ தெய்வத்தின் குரல் புத்தகங்களும், விவேகானந்தர் பற்றிய அறிவுக்கனலே, அருட்புனலே புத்தகமும் வாங்கினேன். வள்ளலார் குறித்த ஒரு புத்தகம் வாங்கினேன்.  அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டில் யு.எஸ். போகும்போது ஶ்ரீவேணுகோபாலனின் திருவரங்கன் உலா வாங்கினேன். எனக்குனு நான் வாங்கிக் கொண்ட புத்தகங்கள் மொத்தம் பத்து இருந்தால் அதிகம். மேலும் இப்போது வைத்திருக்கும் புத்தகங்களையே படிச்சுட்டு ரசிக்கவோ அவற்றைப் பாதுகாக்கவோ யாருமே இல்லை. எங்க குழந்தைங்களுக்குத் தமிழ் எழுதப் படிக்க வராது. மற்றபடி புத்தகங்கள் நிறையப் படிப்பார்கள். வாங்குவார்கள். எல்லாம் ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம்!  இந்தப் புத்தகங்களே எனக்கு அப்புறம் என்னவாகப் போகிறதோ என்று கவலை!

இது போதாது என்று சித்தப்பா வேறே நிறையப் புத்தகங்கள் கொடுத்திருந்தார். சென்னையிலிருந்து ஶ்ரீரங்கம் வரச்சே என் தம்பி  கேட்டார்னு எல்லாத்தையும் என் தம்பிக்குக் கொடுத்துட்டேன்.  அவர் என்ன செய்தார்னு தெரியலை! ஆகப் புத்தகங்கள் வாங்குவது மட்டுமின்றிப் படித்து ரசித்து அவற்றை நம் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப விமரிசித்துப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கேற்ற ரசிகர்கள் கிடைக்கவேண்டும். இது எல்லாம் முடியாது என்பதால் நோ புத்தகக் கண்காட்சி. நோ புத்தகம் வாங்குதல்! யாரேனும் கொடுத்தால் படிப்பது தான்! இல்லைனா இல்லை.  பொதுவா எல்லோரும் வீடு என்ன ஆகுமோ, பாத்திரம், பண்டங்கள், நகை நட்டு என்ன ஆகுமோனு கவலைப்படுவாங்க. என்னைப் பொறுத்தவரை என் புத்தகங்கள் என்ன ஆகுமோ! 

45 comments:

 1. உண்மை. புத்தகங்களை வாங்குவது பெரிதில்லை. வாங்கி பாதுகாக்க வேண்டும். கஷ்டம். அதற்காக நமக்குப் பிடித்தவற்றை யாருக்கும் கொடுக்கவும் மனம் வராது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நான் என் மாமியார் மும்பை சென்றபோது "பொன்னியின் செல்வனை" எடுத்துட்டுப் போறேன்னு கேட்டப்போக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டேன். முன்னே இப்படித் தான் "வேங்கையின் மைந்தன்"புத்தகம் கொடுத்தது வரவே இல்லை! அதனால் மாட்டேனு சொல்லிட்டேன்! :) இப்போத் தூள் தூளாகக் கிடக்கிறது! :(

   Delete
  2. ஒரு மாதிரியாக் கட்டி வைச்சிருக்கேன்.

   Delete
 2. அப்பா அவர் விருப்பத்தில் சில புத்தகங்கள் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுப்பார். அதை அவர்கள் படிக்காமல் ஓரத்தில் வைத்ருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி! லோகோ பின்ன ருசி! :)

   Delete
 3. எவ்வளவு புத்தகங்கள் ?
  புத்தகங்களை வாங்கிபடித்துத்தான் பழக்கம் !
  அதனால் வீடுபூரா
  புத்தகங்களாத்தான் இருக்கும் !
  எனக்கு விபரம் தெரிந்தநாளில் இருந்து ,அதாவது கண்ணன் , கல்கண்டு,குமுதம் , கரும்பு ! அணில் , எத்தனை வார இதழ்கள் ! சுமார் 1958 லிருந்து புத்தகம் வாங்கும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது !அவற்றை பாதுகாப்பாக வைக்கத்தான் இடம் போதமாட்டேன் என்கிறது ! எனினும் ஆசை விடுவதில்லை !

  ReplyDelete
  Replies
  1. என் அண்ணா வீட்டில் அப்படித் தான் இருக்கும். ஆனால் விபரம் தெரிஞ்சு வாங்கினதெல்லாம் இல்லை. அண்ணா வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் வாங்கினது தான். ஆனால் தேடித் தேடி சேகரம் செய்திருக்கார்.

   Delete
 4. பாராவுக்கு ஒரு தரம் புத்தக க்ண்காட்சின்னு எழுதி ஒரு பதிவை ஒப்பேத்தர சாமர்த்தியம் வேற யாருக்கு வரும்!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நாங்க யாரு? உங்க அக்காவாச்சே! :)

   Delete
 5. even I used to think like that but still I visit bookfair every year but buy just one or two since I don't know to whom shall I pass those books. this year I bought very selected books. one of akilan, one of janakiraman.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், நான் இன்னமும் ஒரு புத்தகக் கண்காட்சி கூடப் பார்த்ததில்லை! :(

   Delete
 6. உங்களை மாதிரியே தான் நானும் நினைப்பேன். புத்தகங்களை வாங்கிவிட்டு நமக்குப் பிறகு அவை என்ன ஆகும் என்று கவலைப்பட வேண்டும். என் அக்காவிடமும் இருந்த புத்தகங்கள் கணக்கில் அடங்காதவை. இனி அவற்றை யார் படிக்கப் போகிறார்கள். அக்கா பேத்திகளுக்கும் தமிழ் படிக்கத் தெரியாது. அவர்களும் இப்போ அமெரிக்கா போயாச்சு. அக்காவின் புத்தகங்களின் கதி என்ன? என்னாலும் எல்லாவற்றையும் கொண்டுவர முடியாது. நமது அடுத்த தலைமுறைக்கும் படிக்கும் ஆர்வம், தமிழ் படிக்கும் திறன் இருக்க வேண்டும். என் பெண், பிள்ளை இருவரும் தமிழ் படிப்பார்கள். ஆனால் நம்மைப் போல இத்தனை நாவல்கள், கதைகள் படிப்பார்களா தெரியாது.
  புத்தகங்களைப் பார்த்தால் வாங்கவேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. இனி e-books படிக்க ஆரம்பிக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. அக்கா வீடு எங்கே இருக்கு? ஒரு சில நல்ல புத்தகங்களை இப்படித் தள்ளி விடுங்க! :) என்னதான் இணையத்தில் படிச்சாலும் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு அந்தப் புத்தக வாசனையை நுகர்ந்தவாறு படங்களோடு படிப்பது தனி சுகம்!

   Delete
 7. நானும் இப்படித்தான் புத்தகத்தை கிழிக்ககூடாது மடிக்கக் கூடாது ஆயிரம் நிபந்தனைகளுடன் கொடுப்பேன் இதனால்கூட சிலரிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு இருக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நானும் சொல்லி இருக்கேன்! ஹிஹிஹி! அப்படியும் பல புத்தகங்கள் தொலைந்துவிட்டன. சிலவற்றை அண்ணா, தம்பியிடம் கொடுத்தேன். சில குமுதம், குங்குமம் சேகரங்களை எடைக்குப் போட்டிருக்கோம். :( சில நூலகங்களுக்குக் கொடுத்திருக்கேன்.

   Delete
 8. புத்தகங்கள் படிப்பது சேகரிப்பது என்னுடைய பன்னிரண்டாவது வயதில் தொடங்கியது. என் அப்பாவும் சில சாண்டில்யன் நாவல்களை சேகரித்து வைத்து இருந்தார். பன்னிரண்டாவது படிக்கையில் ஒரு சிறு லைப்ரரியே நடத்தி இருக்கிறேன். இடையில் ஆர்வம் குன்றி இருந்த புத்தகங்கள் பலவற்றை எடைக்கு போட்டுவிட்டேன். எல்லாம் குமுதம், விகடன், மாலைமதி நாவல் பைண்டிங்க்ஸ்கள். ஏறக்குறைய நூறு க்ரைம் நாவல்களை என் சித்தப்பா பையனிடம் தந்து திரும்ப வாங்க முடியவில்லை! அதே போல ராணி காமிக்ஸ்களும். சில செல்லரித்து பராமரிக்க முடியாமல் போனது. தற்போது மூன்று வருடங்களாய் மீண்டும் புத்தகங்கள் வாங்க ஆரம்பித்து இருக்கிறேன். இந்த வருடமும் சில புத்தகங்கள் வாங்கி உள்ளேன். தொடரும் என நம்புகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கப்புறமாப் பாதுகாக்க ஆள் இருந்தால் கவலை இல்லை! வாங்கிச் சேகரம் செய்யுங்க!

   Delete
 9. வீட்டை சுத்தம் செய்யும்போது வீட்டு நூலகத்தைச் சுத்தம் செய்யும் பணி அதிகமாகிவிடுகிறது. அந்த சூழலை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம். தமிழ்ப்பல்கலைக்கழகம் அறிவித்த நூற்கொடை இயக்கத்திற்கு 300 நூல்கள் எங்கள் இல்ல நூலகத்திலிருந்து அன்பளிப்பாக வழஙகியுள்ளோம். அவ்வப்போது சீர்செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். அருகிலுள்ள நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தரலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். நானும் சில, பல ஜெயமோகன் புத்தகங்களை நூலகத்திற்கு அன்பளிப்பாய்க் கொடுத்திருக்கிறேன். ஒரு சில தீபாவளி மலர்களையும் அப்படிக் கொடுத்திருக்கேன். என்றாலும் சில புத்தகங்களைக் கொடுக்க மனம் வராதே! :)

   Delete
 10. இப்படியெல்லாம் கூட பதிவு எழுத சாமர்த்தியம் வேண்டும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, இதிலேயும் விஷயம் இருக்குல்ல!

   Delete
 11. //தேவனின் லக்ஷ்மி கடாட்சம்! லக்ஷ்மி கடாட்சம் கிடைச்சப்புறமா ஜஸ்டிஸ் ஜகந்நாதன் என்று வரிசையா தேவனின் நாவல்கள்//

  தேவனின் ஜஸ்டிஸ் ஜகந்நாதன் எல்லாம் நாவலே இல்லை என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?.. அப்படித்தான் தற்காலத்தில் ஒரு வாதம் வந்திருக்கிறது. இந்தக் கூற்றை மறுத்து எழுத ஆரம்பித்தது தான், 'அழகிய தமிழ் மொழி இது' என்று போய்க்கொண்டிருக்கிறது.

  தமிழின் முதல் நாவல் 'சிலப்பதிகாரம்.' நாம் காப்பியம் என்று அழைத்தது தான் இந்நாளைய நாவல்.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார், ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி! எனக்கு தேவனின் புத்தகங்களுக்கு அடுத்துத் தான் மற்ற எழுத்தாளர்கள்! ஆகவே மற்றவங்க அவங்க ருசிக்கு ஏற்றாற்போல் எதுவேணா சொல்லிக்கட்டுமே!

   Delete
 12. எல்லா புத்தக பிதர்களைப் போல நானும் புத்தகங்களில் மிகவும் பொசசிவ்வாக இருந்தேன், குமுதா என்னும் அருமையான மனுஷியை சந்திக்கும் வரை. அவர் வீட்டில் புத்தகங்கள் நிறைந்து வழியும். நாம் படிக்க விரும்பும் புத்தகங்களை உடனே நமக்கு தந்து விடுவார். திருப்பியும் வாங்கிக் கொள்ள மாட்டார். உங்களுக்கு தெரிந்தவர் யாராவது இருந்தால் கொடுத்து விடுங்கள் என்பார். அவரை பின்பற்றி நானும் இப்போதெல்லாம் படித்து முடித்த புத்தகங்களை தகுதியானவர் என்று தெரிந்தால் கொடுத்து விடுகிறேன். எனக்குப் பிறகு என் புத்தகங்கள் என்னவாகுமோ என்னும் அச்சம் எனக்கும் உண்டு. கிண்டல் தமிழ் வர்ஷன் கிடைத்தால் வாங்கி விடலாம் என்றிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. எங்கே இருக்காங்க உங்க சிநேகிதி குமுதா? நான் படிக்க விரும்பிய ஆனால் படிக்கக் கிடைக்காத புத்தகங்கள் இருந்தால் அவங்க கிட்டே இருந்து வாங்கிக்கலாம். கின்டிலில் எல்லாம் படிப்பது இல்லை! எப்போவாவது தரவிறக்கிய சுஜாதா, லக்ஷ்மி, சாண்டில்யன் நாவல்களைப் படிப்பேன். :)

   Delete
 13. என் அப்பாவின் புத்தகங்கள், என் அம்மாவின் புத்தகங்கள், என் மாமானார் அவர்களின் புத்தகங்கள், என் கணவரின் அத்தை வீட்டு புத்தகம், என் ஒர்ப்படியின் தாத்தா சேமித்து வைத்த புத்தகங்கள் ., என் கணவர் சேமிப்பு, என் சேமிப்பு என்று நிரம்பி வழிகிறது எங்கள் புத்தக அலமாரிகள்.
  இனி வாங்க யோசனை , மாயவரத்தில் கோவிலை சேர்ந்த நூலகத்திற்கு கொஞ்சம் புத்தகம் கொடுத்தோம். குழந்தைகள் கதைகளை பேரன் பேத்திகள் எடுத்து சென்றார்கள் தமிழ் படிக்கிறார்கள்.
  நீங்கள் சொல்வது நமக்கு பின் ? நம் குழந்தைகளிடம் உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு மீதியை உள்ளூர் நூலகத்திற்கு கொடுத்து விடுங்கள் என்று சொல்லவேண்டும். (எழுதி வைக்க வேண்டும்.)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புத்தக அலமாரி நிரம்பி வழிந்தாலும் அது வெளியே தெரியவில்லை. அழகாகப் பாதுகாக்கிறீர்கள். என் பேத்திகள் இருவரும் தமிழ் பேசினால் புரிஞ்சுப்பாங்க. பேச வரலை. :) சின்னவளாவது கொஞ்சம் முயல்கிறாள். என்றாலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்குத் தமிழ் வருமா அவளுக்கு என்பது தெரியவில்லை! இப்போத் தானே எட்டு வயசு ஆகி இருக்கு! இனிமேல் தான் போகப் போகத் தெரியும். அதுக்குள்ளே எவ்வளவு மாற்றங்களோ, இதை எல்லாம் தெரிஞ்சுக்க நான் இருக்கப் போவதில்லை! :)

   Delete
 14. கடைசீல கண்காட்சி போனீங்களா இல்லியா?

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, புத்தகக் கண்காட்சி ஆரம்பிச்சப்போ ராஜஸ்தான் வாசம் தம்பி. ஆகக் கூடி ஆரம்பத்திலே இருந்தே போகலை! :) கடைசியிலே எங்கேருந்து போறது! :)

   Delete
 15. எரும் சொல்லி முடிச்சப்புறம் என்னதைச் சொல்வது. மஹாபாரதம் புதுக்கருக்கு அழியாமலிருக்கு. ஜெனிவாவில் கொஞ்சம்,தில்லியில் கொஞ்சம்.படித்துவிட்டுப் போட்டு விடுங்களேன் என்கிராள். மனது வருமா.
  பகவத் கீதை உண்மை உருவில் படித்து விட்டேன். 15 கிலோக்குமேல் பிளைட்டில் அனுமதி இல்லை.முடிந்தபோது சென்னைக்கு பெண்ணிடம் அனுப்பி விடுவேன் . அவளும் அமெரிக்கா போய் விட்டாள்.
  இங்கே கிரி ட்ரேடிங் போனால் என்ன புத்தகம் என்று எடுத்து பார்க்க முடிவதில்லை. நல்ல வேளை தமிழ் நாட்டிலிருந்தால் புத்தக ஆசை மாளாது. அதுக்கெல்லாம் வழி இல்லை. எல்லாரும் ஆங்கிலவழிக் கல்வி பயின்றவர்கள் பெண் மட்டும் விதி விலக்கு. என் கதை யாருக்கு வேண்டும்? உங்கள் கதை ஸ்வாரஸ்யம். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அம்மா. ஒரு புத்தகம் படித்தால் அதைக் குறித்துப் பேசக் கூட யாரும் இல்லை என்பதே எனக்கு மிகப் பெரிய சோகம்! சில சமயம் வலுக்கட்டாயமாக என் கணவரிடம் சொல்வேன் தான்! ஆனால் அதுக்கு அவரும் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்கணும்! :)

   Delete
 16. புத்தகங்களை பாதுகாத்து வைப்பதும், நமக்குப் பின் என்ன ஆகும் என்ற கவலையும் பலருக்கும் இருக்கும் பிரச்சனையாகத் தெரிகிறது. என்னிடமும் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன - நண்பர்களுக்கு படிக்கக் கொடுத்து திருப்பி வராதவை தவிர! கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுக்குக் கொடுத்து விடலாம் எனும் எண்ணமும் அவ்வப்போது வருவதுண்டு....

  ReplyDelete
  Replies
  1. எதைக் கொடுக்கப் போறீங்க? சொல்லுங்க! நான் விண்ணப்பம் போடறேன். :)

   Delete
 17. புத்தகங்கள் வாங்கக்கூடாது என்று கண்காட்சி போகாமல் இருந்தேன். அங்க வேற போய்த்தடுக்கி விழணுமா என்ன......அப்படியும் ஊரை விட்டுக் கிளம்பும் போது காலச்சக்கரம் நரசிம்மா புத்தகங்கள் வாங்கித்தான் வந்தேன். உண்மைதான் புத்தகங்களுக்கு என்ன கதியோ.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம்ம், காலச்சக்கரம் நரசிம்மாவின் அனைத்து வெளியீடுகளும், வெங்கட்--ஆதி தயவில் படிச்சேன். கடைசிப் பஞ்ச நாராயணக் கோட்டம் மட்டும் என் தம்பி நூலகத்திலிருந்து எடுத்து வந்து தந்தார். இப்போதைய வெளியீடான "கர்ண பரம்பரை" படிக்கக் காத்துட்டு இருக்கேன். :) யார் கொடுக்கப் போறாங்கனு தெரியலை! ஹிஹிஹி! ஓ.சி. மாஸ்டர் நான் தான்!

   Delete
 18. எண்ண கலவைகளை (ஆதங்கம் , ஆச்சரியம் , கவலை ) எழுத்தோடு எழுத்தா போட்டுடீங்க .. அருமை கீதா அம்மா /அக்கா .. கவல படாதீங்க .. மஹா சரசுவதி ரொம்ப கெட்டிகாரி ஒரு வழி வச்சிருப்பா உங்கள் புதையல்களுக்கு :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாஞ்சில் கண்ணன், உங்க வயசு 30 க்குள் தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆகவே தாராளமா கீதா அம்மானே சொல்லலாம். செரியா?

   Delete
 19. அருமையான பதிவு

  இதோ மின்நூல் களஞ்சியம்
  http://ypvn.myartsonline.com/

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி காசிராஜலிங்கம். உங்களைப் போல் இன்னும் சில நண்பர்களும் அனுப்பி உள்ளார்கள்.

   Delete
 20. நானும் புத்தகத்திருவிழாவுக்கு முதல்முறை போனது 2007 இல்தான். அதுக்குப்பின் மூணு முறை அடுத்து வந்த பயணங்களில்.

  எனக்கும், எனக்குப்பிறகு வீட்டு நூலகத்தில் இருக்கும் தமிழ்ப்புத்தகங்கள் என்ன ஆகும் என்ற கவலை இருக்கு. நம்ம ஊர் தமிழ்ச்சங்கத்துக்குக் கொடுத்துடலாமுன்னு இப்போ ஒரு யோசனை.

  ReplyDelete
  Replies
  1. நான் ஒரு முறை கூடப்போனதில்லை! :)

   Delete
 21. புத்தகங்கள் வாங்குவதை விட பாதுகாப்பதுதான் பிரச்சனை நீங்கள் சொல்லுவது போல். எங்கள் வீட்டிலும் நிறைய புத்தகங்கள். ஆனால், என்னுடையது என்பவை மிகவும் குறைவு. முன்பும் கல்யாணத்திற்கு முன்பும் வீட்டில் பாடம் தவிர வேறு புத்தகங்களுக்கு அனுமதி கிடையாது எனவே நான் நூலகங்களில் தான் வாசித்ததுண்டு. அதுவும் கல்லூரி நூலகத்தில். கல்யாணத்திற்குப் பிறகும்.....எனவே இப்போதுதான் வலையில் வாசிப்பதுதான்.

  வீட்டிலுள்ளவற்றைப் பாதுகாப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. இடமும் இல்லை. கிழியாமல்...மடியாமல் .எனவே வலை வாசிப்பே போதும் என்றாக்கிக் கொண்டேன். நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் சரிதான் கீதாக்கா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பழைய புத்தகங்களை வேண்டாதவற்றைக் கழித்து விட என எடுத்துப் போட்டு மூன்று நாட்கள் ஆகியும் இன்னமும் உட்கார முடியவில்லை. உட்கார்ந்தால் மணிக்கணக்காக ஆகிடும்ங்கற பயம் தான்! :)

   Delete
 22. காலத்திற்கு ஏற்ற பதிவு. பதிவையும் அன்பர்களின் கருத்துரைகளையும் படித்து முடித்தவுடன், பதிவின் தலைப்பில் புத்தகக் கண்காட்சி என்று இருந்தாலும், பதிவு முழுக்க வீட்டுநூலகத்தில் உள்ள புத்தகங்கள் குறித்துதான்.

  // புத்தகம் கொடுப்பது ஒரு சிலர் தான். எல்லோரும் புத்தகம் சும்மாவே கிடந்தால் கூடக் கேட்டவுடன் கொடுக்க மாட்டாங்க. பத்துத் தரமாவது வரச் சொல்லி ஆயிரம் கேள்விகள் கேட்டு எப்போத் திருப்பிக் கொடுப்பே? கசக்கக் கூடாது, மடிக்கக் கூடாது ஆயிரம் நிபந்தனைகளுடன் கொடுப்பாங்க.//

  சரியாகவே சொன்னீர்கள். புத்தகத்தின் அருமை புத்தகப் பிரியர்களுக்கு மட்டுமே தெரியும்.

  // …. ஆகப் புத்தகங்கள் வாங்குவது மட்டுமின்றிப் படித்து ரசித்து அவற்றை நம் எண்ணவோட்டத்திற்கு ஏற்ப விமரிசித்துப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கேற்ற ரசிகர்கள் கிடைக்கவேண்டும். இது எல்லாம் முடியாது என்பதால் நோ புத்தகக் கண்காட்சி. நோ புத்தகம் வாங்குதல்! யாரேனும் கொடுத்தால் படிப்பது தான்! இல்லைனா இல்லை. //

  வீட்டு நூலகம் வைத்து இருக்கும் அனைவரது கவலையும் இதுதான். நாம் நமது தாத்தா - அப்பா காலத்து புத்தகங்களை கட்டிக் காப்பது போல் நமது பிள்ளைகள், இவற்றை வைத்துக் காப்பாற்றுவார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் இந்தக்கால புதியதலைமுறையின் படிப்பும், ரசனையும் இவற்றில் இல்லை; வேறாக இருக்கின்றன. நாம் பக்கதிற்கு பக்கம் ரசித்துப் படித்த புத்தகங்களை, அவர்கள் போகிற போக்கில், அவற்றை எடைக்கு போடாமல் இருக்க வேண்டுமே என்றுதான் மனம் பதைக்கின்றது.

  // பொதுவா எல்லோரும் வீடு என்ன ஆகுமோ, பாத்திரம், பண்டங்கள், நகை நட்டு என்ன ஆகுமோனு கவலைப்படுவாங்க. என்னைப் பொறுத்தவரை என் புத்தகங்கள் என்ன ஆகுமோ! //

  உங்களுக்கு மட்டுமல்ல. இங்கு பின்னூட்டம் எழுதிய பலருக்கும் இந்தக் கவலை இருப்பது அவர்கள் சொன்ன கருத்துக்கள் மூலம் தெரிய வருகிறது. அசையா சொத்துகளுக்கு உயில் எழுதி வைப்பது போல இந்த புத்தகங்களையும், நமக்குப் பிறகு இன்ன நூலகத்திற்கு ’புத்தக தானம்’ கொடுத்து விடுங்கள் என்று உயில் எழுதி வைத்து விடலாம். எனது பதிவு ஒன்றுக்கு பீன்னூட்டம் எழுதிய நண்பர் ஒருவர் இதே யோசனையைத்தான் சொல்லி உள்ளார்.
  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் சொன்னது இது

  // புத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது,//

  புத்தகங்களை என்ன செய்வது http://www.sramakrishnan.com/?p=2233

  ReplyDelete
  Replies
  1. இங்கேயும் புத்தகங்களைக் கழிக்கச் சொல்லித் தான் சண்டை வருகிறது! என்ன செய்யறது! புத்தகக் கண்காட்சிக்குப் போனால் அல்லவோ அதைப் பற்றி எழுத முடியும்! :) அதனால் வீட்டில் உள்ள புத்தகங்கள் பற்றிய என் கவலையைப் பகிர்ந்திருக்கிறேன்.

   Delete