எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 20, 2016

மறைந்து வரும் உறவு முறைகள்/பெயர்கள்(?)!

என்னோட மன்னிக்கும் எனக்கும் 2 அல்லது 3 மாதங்கள் தான் வயதில் வித்தியாசம். என்னைவிட 2 மாதங்கள் அளவே மன்னி சிறியவர். ஆனாலும் நான் "மன்னி" என்றே அழைப்பேன். நான் கொஞ்சம் பெரியவள் என்பதால் மன்னி என்னை "அக்கா" என அழைக்கிறார். ஆரம்ப காலத்திலேயே பெயர் சொல்லிக் கூப்பிடச் சொல்லியும் அவங்க ஒத்துக்கலை! தம்பி மனைவிக்குத் தான் எந்த உறவுமுறைப் பெயரும் சொல்லத் தெரியலை. காரைக்குடிப் பக்கம் ஏதோ இருக்குனு நினைக்கிறேன்.  எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் இப்போதெல்லாம் மன்னியை அவங்க வயதில் பெரியவங்களா இருந்தாலும் கூட "மன்னி" என்று அழைக்கும் பழக்கம் இல்லை!

மன்னியைப் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கமே இப்போது இருந்து வருகிறது. நாத்தனாரும் வயதில் பெரியவரானால் மரியாதையாக அழைக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. இதெல்லாம் நம் நாட்டில் முன்னர் கிடையாது. இப்போது அமெரிக்கக் கலாசாரத்தின் தாக்கம் இந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது என்பது! அங்கே தான் எல்லோரும் எல்லோரையும் எந்த வயதானாலும் பெயர் சொல்லி அழைக்கிறார்கள். இந்த விஷயத்தில் நம் மக்கள் அமெரிக்காவை அப்படியே காப்பி அடிக்கின்றனர். இது தான் இன்றைய நாகரிகம்!

உறவு முறைகளை உறவு முறைப் பெயரைச் சொல்லி அழைக்கும் வழக்கமே மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. ஏற்கெனவே ஒவ்வொருத்தர் வீடுகளிலும் ஒரு குழந்தை தான்! வெகு சிலருக்கே 2 குழந்தைகள்! அதிலும் இரண்டும் பெண் எனில் அக்கா, தங்கை தான்! ஆண் எனில் அண்ணா, தம்பி! அண்ணா, தங்கையோ அக்கா, தம்பியோ வெகு அரிதாக இருக்கும். அப்படி இருந்தாலும் மாமா என்னும் உறவு முறைச் சொல் மறைந்து போய்விடும் போலிருக்கு! ஒரே ஒரு பெண் குழந்தையைப் பெற்றவர்கள் மாமாவுக்கு எங்கே போக? ஒரே ஒரு ஆண் குழந்தை எனில் அத்தைக்கு எங்கே போவது? இவை தான் இப்படி எனில் சித்தப்பா, சித்திகளும் மறைந்து குறைந்து வருகிறார்கள்.  ஒரே ஒரு பெண் குழந்தை எனில் சித்திக்கோ, பெரியம்மாவுக்கோ எங்கே போவது? ஆண் குழந்தை எனில் சித்தப்பாவோ, அத்தையோ, பெரியப்பாவுக்கோ எங்கே செல்வது?

அதோடு விட்டதா? அந்த ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணான குழந்தைகளையும் அதிகம் படிக்க வைச்சு அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ, லண்டனுக்கோ  நம்மோட பெருமைக்காக அனுப்பி வைச்சுடறோம். அவங்க அவங்க வாழ்க்கையை வாழறாங்கனு பெருமையாச் சொல்லிப்போம். நம்மாலே அங்கேயும் போய் நிம்மதியா இருக்க முடியாது! இங்கேயும் தனிமையிலே வசிக்க முடியாது! அங்கே எல்லாத்துக்கும் நாம் பிள்ளை அல்லது பெண் கையைத் தான் எதிர்பார்க்கணும். அவங்க வேலையை முடிச்சுண்டு அவங்க வந்தப்புறமாத் தான் நாம் நமக்கென அவங்களை ஏதானும் உதவச் சொல்லிக் கேட்க முடியும். எங்கானும் கோயில் போவதென்றாலும் அந்தச் சனி, ஞாயிறுகளில் தான்.  அதுவும் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறையில் தான். ஆனால் அங்கே வாழும் அவங்களுக்கு அந்த இரண்டு நாட்களில் தான் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுத் துவைப்பது, வீடு சுத்தம் செய்வது, ஒரு வாரத்துக்கான சாப்பாடு தயார் செய்வது என்று அதிகம் வேலை இருக்கும்.  நமக்கோ இங்கே தினசரிகள் தினமும் வரும்! அதோடு வார, மாதாந்தரிகள், எனப் புத்தகங்கள் வரும். படித்துப் பொழுது போகும். அங்கே புத்தகங்கள் நாம் இருக்கப் போகும் சொல்ப காலத்திற்கெனச் சந்தாக் கட்டி வாங்க முடியாது! தொலைக்காட்சி சானல்கள் இப்போதெல்லாம் அங்கேயும் தெரிவதால் கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான்.

 வெளிநாடுகளில் இருக்கும் சுத்தமும் சுகாதாரமும் ஆரம்பத்தில் மனதைக் கவரும்!  சுத்தம் பார்க்கிறதும் சாலைக் கட்டுப்பாடு போன்றவையுமே பிரதானமாகத் தெரியுமே அன்றி இங்கே மாதிரி எளிமை இருக்காது! வெளியில் எங்காவது போனால் கூட இங்கே எனில் அக்கம்பக்கம் உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சகஜமாப் பேசலாம். ஆனால் அங்கே அப்படி முடியாது. முக்கியமா  உடம்பு சரியில்லைனா இங்கே வீட்டிலேயே கஷாயம் போட்டுச் சாப்பிட்டுப் பார்த்துட்டு அப்புறமா மருத்துவர் கிட்டேப் போவோம். அங்கேயும் கஷாயம் போட்டுக்கலாம் தான்! சுக்கு, மிளகு கிடைக்குமே! ஆனாலும் மருத்துவரை உடனே எல்லாம் போய்ப் பார்க்க முடியாது! காத்திருக்கணும்! காத்திருந்து பார்த்தாலும் மருத்துவருக்கான கட்டணங்களைக் கட்ட நாம் இன்ஷூரன்ஸ் செய்திருந்தால் தான் கட்டுப்படி ஆகும்! இல்லைனா கஷ்டம் தான்! ரெண்டுங்கெட்டான் நிலை! அல்லது திரிசங்கு சொர்க்கம்னு சொல்லலாம்!

அங்கே இருக்கும் நதிகளில் நீர் எத்தனை நிறைய ஓடினாலும் அதில் நாம் குளிக்க முடியாது! அருவிகளில் நீர் கொட்டினாலும் அங்கேயும் குளிக்கவோ ஆயில் மசாஜோ செய்து கொள்ள முடியாது! இங்கே இருக்கும் இந்த சுதந்திரம் தான் உண்மையான சுதந்திரம்!  அங்கே நாம் காரைப் பார்க்கிங் இடத்தில் நிறுத்தும்போது அங்கிருக்கும் மரம் எதிலாவது கவனக்குறைவாக இடித்துவிட்டோமெனில் அபராதம் கட்டவேண்டும். அதே போன்றதொரு மரக்கன்றை நட்டுப் பராமரிக்க வேண்டும். வீட்டை அது நம் சொந்த வீடாகவே இருந்தாலும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். தோட்டங்களில் பனிக்காலத்தில் பனி சேர விடக்கூடாது. புற்களை ஒழுங்காக வெட்டவில்லை எனில் அங்கே நகராட்சியிடமிருந்து அபராதம் கட்டச் சொல்வாங்க. வீடு வாடகைக்கு இருந்தோமெனில் காலி செய்து வேறு வீடு போகையில் இத்தனை நாட்கள் இருந்த வீட்டை முற்றிலும் நம் செலவில் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். அங்கே போட்டிருக்கும் கார்ப்பெட்டுகள் பழுதடைந்தால் புதுசாக வாங்கித் தரணும். இங்கே வாடகையே கொடுக்காமல் ஏமாற்றும் குடித்தனக்காரர்களும் உண்டு. குடித்தனக்காரர்களிடம் அடாவடியாக நடந்து கொள்ளும் வீட்டுக்காரர்களும் உண்டு. இதை எல்லாம் பார்த்துத் தான் பெரும்பாலான பெற்றோர்கள் இங்கேயே தனியா இருக்காங்க. அவங்களாலே முடிஞ்சவரை பார்த்துக்கறாங்க, இல்லைனா முதியோர் இல்லத்திலே சேர்ந்துடறாங்க. ஏனெனில் அக்கம்பக்கம் ஒத்தாசைக்கு யாரும் இப்போல்லாம் முன்னைப் போல் வர முடியறதில்லை. அவங்கவங்க வேலை அவங்க அவங்களுக்கு! ஆக மொத்தம் முதியோர் இல்லம் தான் கதி இங்கே இருக்கும் பெற்றோருக்கு!

ஏனெனில் இருக்கும் உறவினரே மிகக் குறைவாக இருக்கும்.  பெற்றோருக்கு இன்னொரு பெண்ணோ, பிள்ளையோ இருக்கா! அதுவும் இல்லை! இருக்கும் ஒன்றிரண்டு உறவினருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கும். உடல்நலக் கேடு இருக்கும். இந்த அழகில் நாமளும் அவங்க கிட்டேப் போக முடியாது! அவங்களும் நம்மை வந்து பார்க்க முடியாது!  உறவுகள் பெயரளவில் மட்டுமல்லாமல் மனதளவில் கூடச் சுருங்கிப் போய் எத்தனையோ ஆண்டுகள் ஆகின்றன.

தலைப்பை விட்டுட்டு எங்கேயோ போறேனோ! இப்படி மறைந்து கொண்டிருக்கும் பெயர்களில் தாத்தா, பாட்டி, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, மாமா, மாமி, அத்தை, அத்திம்பேர், அம்மான் சேய், அம்மங்கா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா! மச்சான், மச்சினி, மைத்துனர், மைத்துனி, நாத்தனார் போன்ற எத்தனையோ உறவுப் பெயர்கள் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. வெளிநாட்டு மோகம் நம்மைப் பிடித்து ஆட்டுகிறது! வாழ்க்கை முறை மட்டுமல்லாமல் சாப்பாடு கூட மாறி வருகிறது. இப்போது கே எஃப்சி பதார்த்தங்களும், பிட்சா, பர்கர் வாங்காத மனிதர்களும் மனிதர்களே அல்ல. நம் இட்லி, தோசையைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு இவை முன்னணியில் நிற்கின்றன. நம் கலாசாரம் அவர்களைக் கவர்ந்தது போக அவர்கள் கலாசாரத்தில் நாம் மூழ்கியே விட்டோம். வெளிவரவே இல்லை.

ஆறுதல் தரக் கூடிய ஒரே விஷயம் கோயில்களில் கூட்டம், பிரதோஷம் என்றால் எக்கச்சக்கமான கூட்டம்! பக்தியோ, இல்லை பயமோ அல்லது பயம் கலந்த பக்தியோ ஏதோ ஒண்ணு தான் இன்னும் கொஞ்சம் நஞ்சமாக மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தைத் தூக்கிப் பிடித்து வருகிறது. இது மட்டும் இல்லைனா இன்னும் மோசமாக இருக்கும்! :(  இதிலே அண்ணாவை அண்ணா என்றோ தம்பியைத் தம்பி என்றோ கூப்பிடுபவர்கள் அரிது. என் மைத்துனரை எங்க மாமியார் வீட்டில் எல்லோருமே "தம்பி அல்லது அம்பி" என்றே அழைத்து வந்தனர். இதை அவர் ஒரு பெரிய விஷயமாகக் கருதியதில்லை. இத்தனைக்கும் அவர் 60 வயது ஆனவர் தான். கடைசி மைத்துனர் தன் அண்ணாவான இந்த மைத்துனரை "அம்பி" என்றே அழைப்பார். இதெல்லாம் ஒரு நெருக்கத்தைத் தான் காட்டுமே தவிர நாம் அவர்களை விட உயர்வானவர்கள் என்ற பொருளில் எல்லாம் வராது! உறவு முறைப் பெயரைச் சொல்லி அழைக்கும்போது மனதில் ஏற்படும் நெருக்கம் அவங்களோட பெயரைச் சொல்லி அழைக்கையில் ஏற்படுமா? சந்தேகமே!

இது ஒருவேளை என் தலைமுறைக்காரங்களுக்கு இப்படித் தோன்றலாம்! அதுவும் தெரியவில்லை! அல்லது எனக்குப் புரியவில்லை. நான் இணையத்தில் என் அருமைத் தம்பிகள் அனைவரையும் "தம்பி" என்றே அழைத்து வருகிறேன். ஒருத்தரும் ஆக்ஷேபம் தெரிவிக்கவில்லை! பிழைச்சேன்! அவங்களும் என்னை அன்பாக அக்கா என்றே சொல்கின்றனர். சந்தோஷமாகவே இருக்கு! 

42 comments:

 1. ஏதேதோ உறவு முறைக்குப் போயிட்டீங்க... அதற்கெல்லாம் முதலில் கல்யாணம் ஆகணும். பொண்ணே கிடைக்க மாட்டேங்குது.. அப்புறம் இல்லை ஒரு குழந்தை ரெண்டு குழந்தை பிரச்னை எல்லாம்...

  திருப்பி பழைய பதிவு விஷயத்துக்கே போறேனா...!

  ReplyDelete
  Replies
  1. கல்யாணம் ஆகிக் குழந்தை பெத்தவங்களோட நடத்தையைக் குறித்துத் தான் பேச்சு. இன்னும் கல்யாணம் ஆகாதவங்க பத்தித் தனிப் பதிவு போடணும். :)

   Delete
  2. எனக்கு நன்கு அறிமுகம் ஆன இரண்டு, மூன்று உறவினரிடம் இரண்டாவது குழந்தை பெத்துக்கச் சொன்னால் என்னைப் "பைத்தியம்" என்னும் நோக்கில் பார்க்கிறார்கள்! :)

   Delete
 2. காலத்தின் கோலம், நாட்டு நிலைமை ரெண்டு குழந்தை போதும் என்றும் ரெண்டெதற்கு ஒன்றே போதுமே தத்துவமும் வந்தாச்சு. அவசர உணவுப் பழக்கங்களாலும் சொந்த விருப்பங்கள் காரணமாக குழந்தை பெறுவதை ஒத்திப்போட்டு பின்னர் அதன் காரணமாகவேயும் குழந்தையே பிறக்காத நிலை வேறு...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சொந்த விருப்பங்கள் காரணமாகக் குழந்தைப் பிறப்பைப் பலரும் தள்ளிப் போடுகின்றனர்! :(

   Delete
 3. பதிவை விட்டு விலகி வெளிநாட்டு வாழ்க்கை பற்றி விவாதம் வந்திருந்தாலும் அதுவும் பேசப்பட வேண்டிய விஷயமேக்கா.. தனிப்பதிவாகவே போடலாம்.

  ReplyDelete
  Replies
  1. குழந்தை பிறப்பு எப்படி உறவுப் பெயர்களோடு சம்பந்தப்பட்டதோ அதைப் போல இதுவும் பதிவின் நோக்கத்தோடு சம்பந்தப்பட்டதே! அந்தக்காலங்களில் வீட்டில் மூத்தவங்க என்னும் பெயரில் ஒரு தாத்தாவோ, பெரியப்பாவோ, மாமாவோ இருப்பார்! அதே போல் சமையலறை ராணியாகவும் ஒரு பாட்டி, பெரியம்மா, அத்தை, மாமி, என்று இருப்பார்கள். வீட்டில் அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். இத்தனைக்கும் அவர் பொருளாதார சுதந்திரம் படைத்திருக்கவே மாட்டார்! ஆனாலும் மத்தவங்க மனசில் ஓர் கட்டுப்பாடு இருந்தது! அது இப்போது எங்கே போச்சு?

   Delete
  2. கணவனையே பெயர் சொல்லி அழைக்கும் பரவலாக வந்தாச்சு. அப்புறம் எதற்கெல்லாமோ போகிறீர்களே?..

   மொழி என்பதை இழந்து விட்டோமென்றால் அந்த மொழி சார்ந்த கலாச்சாரம் அத்தனையையும் கொஞ்சம் கொஞ்சமாக பறி கொடுத்து விட வேண்டியது தான்!

   Delete
  3. மொழியை இழந்தோம்னு சொல்ல முடியலை! மேலும் நம் கலாசாரம் மொழி சார்ந்ததும் அல்ல என்பது என் தாழ்மையான கருத்து! இது "இந்திய"க் கலாசாரம்! வெறும் தமிழ்க் கலாசாரம் மட்டுமே என்று சொல்ல முடியாது. வட மாநிலங்களில் கல்யாணம் ஆகும் முன்னர் கணவனாகப் போகும் நபரை "ஆப்" என்று சொல்வார்கள். அதுவே கணவன் ஆனதும் உரிமையோடு, "தும்" என்று ஆகும். :)

   Delete
  4. பழக்கவழக்கங்கள் கலாச்சாரம் அல்ல. கலாச்சாரம் என்பது வேர்.

   நீங்கள் சொல்வது அந்த மொழி சார்ந்த பழக்க வழக்கம். பழக்க வழங்கங்களோ மாறுதல்களுக்கு உட்பட்டது.. குடும்ப பழக்க வழக்கங்கள் தலைமுறைக்கு தலைமுறை மாறலாம். தாத்தா காலத்து பழக்க வழக்கத்தை பேரன் காலத்தில் கைகழுவுவது போல.
   ஒரே மொழி சார்ந்த பழக்க வழக்கங்கள் கூட இடத்திற்கு இடம் மாறுபடலாம்.

   பல இனக் கலாச்சாரங்களை உள்ளடக்கியது இந்தியக் கலாச்சாரம். வேற்றுமையில் ஒற்றுமை தன்மை கொண்டது. மொழி என்பது வெறும் கருத்து பரிவர்தனைகளுக்கு மட்டும் உதவும் சமாச்சாரம் அல்ல். அதைத் தாண்டி மொழியின் ஆளுகை நிறைய விஷயங்களில் இருக்கிறது.

   Delete
 4. நிறைய உறவுகளை அதன் அசல் பெயரில் அழைக்கும் வழக்கம் எங்கள் வீட்டிலும் மறைந்து விட்டது. என் பாஸின் தம்பிகளை ( ஒன்றுவிட்ட) என் மகன்கள் அவர்கள் பெயரோடு 'அண்ணா' ணேர்த்து ( இன்னும் சரியாகச் சொல்லப்போனால் 'ண்ணா' சேர்த்து) அழைக்கிறார்கள்.

  என் பாஸின் சித்திகளையோ மாமாக்களையோ நானும், என் சித்தி, மாமாக்களை என் பாஸும் சித்தி, மாமா என்றே விளிக்கிறோம்.

  வயதில் மூத்த பெண் உறவுகளை சௌகர்யத்துக்குத் தகுந்தவாறு அக்கா என்றோ, மன்னி என்றோ, அத்தை என்றோ அழைத்து விடுகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவை எப்போவோ எழுதி இருக்கணும். ஏன்னா என் அண்ணா பெண்ணே அவள் மன்னியை கிட்டத்தட்டப் பத்து வயசு பெரியவரான மன்னியைப் பெயர் சொல்லித் தான் அழைக்கிறாள்! :( மன்னி என்னும் உறவுப் பெயரே மறையும் சூழ்நிலை உருவாகி வருகிறது! :( என் மாமா பிள்ளைகள், பெண்கள் எங்களை எல்லாம் "அக்கா" என்றே அழைக்கின்றனர். அத்தங்கா என்னும் பெயர் எப்போதோ காணாமல் போய்விட்டது!

   Delete
  2. என் பாட்டியின் பெயர் ராஜி (ராஜலக்ஷ்மி) அவரைஇளையவர்கள் அனைவரும் ராஜி என்றே அழைக்கத் தொடங்கி அது ரஜ்ஜி ஆகி, பின்னர் அஜ்ஜி ஆனது. அஜ்ஜி என்பதற்கு கன்னடத்தில் பாட்டி என்று பொருளாம்.திருநெல்வேலி பக்கங்களில் அம்மாவை பெண்கள் பெயர் சொல்லி அழைப்பதுவும், வாடி, போடி என்று அழைப்பதுவும் வழக்கம் உண்டு!

   Delete
  3. திருநெல்வேலிப் பக்கம் என்ன, எங்க வீட்டிலேயே என் பெரியப்பா பெண்கள் இருவரும் அவங்க அம்மாவைப் பெயர் சொல்லி அழைப்பார்கள். "டீ" போட்டுப் பேசுவார்கள். இதற்குக் காரணம் ஒரு நூறு வருஷங்கள் முன்னர் தாய் மிகச் சிறியவளாகப் பதினைந்து வயதுக்கு உள்ளாக இருந்தது என்று எங்கள் தாத்தா சொல்லுவார். ஆனால் இப்போதெல்லாம் நேர்மாறாகப் பெண்ணின் திருமண வயது முப்பது ஆகி விட்டது. என் அம்மாவின் வீட்டிலேயோ அம்மா, அப்பா இருவரையுமே மிக மரியாதையாக வாங்கோ, போங்கோ என்று சொல்வார்கள்.

   Delete
  4. ஆமாம் ஸ்ரீராம் எங்கள் குடும்பத்தில் (திருநெல்வேலிதானே பேஸ்) அப்படித்தான் பேர் சொல்லி வாடி போடி என்று அழைப்பதுண்டு. அதுவும் எங்கள் அம்மாவின் அம்மா/பாட்டியின் கடைசித் தங்கை என் தாய் மாமாவிற்குச் சித்தி முறைதானே ஆகணும். ஆனால் அந்தச் சித்தி என் மாமாவை விட வயது சற்றுக் குறைந்தவர் ஆனதால் பேர் சொல்லித்தான் அழைப்பார். இதெல்லாம் அந்தக்க்காலத்தில் சகஜமப்பா....அம்மா/மாமியார் பிள்ளை பெறுவாள், பெண்ணும்/மருமகளும் பிள்ளை பெறுவாள், பாலச்சந்தர் படம் பார்ப்பது போல் ஆகும் சில சமயம்...ஹிஹிஹி

   கீதா

   Delete
 5. //நம் கலாசாரம் அவர்களைக் கவர்ந்தது போக அவர்கள் கலாசாரத்தில் நாம் மூழ்கியே விட்டோம். வெளிவரவே இல்லை//

  அருமையான உண்மையை சொல்லி விட்டீர்கள் இந்த வரிகளில் அனைத்தும் அடங்கி விட்டது
  இனிவரும் சந்ததிகளுக்கு உறவுமுறைகள் இன்னும் சுறுங்கும்.

  இந்தப்பதிவு எனக்கு வரவில்லையே ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி! உறவுமுறைகள் சுருங்காது. காணாமலே போய்விடும்! :( இந்தப் பதிவு எழுதிக்கொஞ்ச நேரமே ஆகிறது. ஆகையால் உங்கள் டாஷ்போர்டிற்கு வந்திருக்காது!

   Delete
 6. யதார்த்தம் கீதாம்மா ... அருமையா சொல்லிருக்கீங்க ... என்ன சொல்லன்னே தெரியலை .... :) :(

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாஞ்சில் கண்ணன். தொடர்ந்து வருவதற்கு நன்றிப்பா.

   Delete
 7. அக்கா! அந்நாட்களில் அக்கம்பக்கத்தாரும் வீதியில் ஏதும் விற்பவர்களும் கூட உறவுமுறை சொல்லி அழைத்து கொள்வதை பார்த்திருக்கிறோம். இப்போது பல
  மாமியார்கள் பெண்ணை கல்யாணம் செய்தவனை மாப்பிள்ளை என்று அழைப்பதில்லை. பேர் சொல்லித்தானே மண்டையில் அடிப்பது போல் அழைக்கிறார்கள் ? மரு'மகன்' என்றோ?? மனுஷனுக்கு ஒரேஒரு இடத்துல இருந்துவந்த மரியாதையும் போயே போச்!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், எங்கள் மாப்பிள்ளை என்னிடம் பெயர் சொல்லிக் கூப்பிடுங்கனு பலமுறை சொல்லியும் எனக்கு அது பழக்கம் ஆகவே இல்லை! :) பொதுவாகப் பேசுவேன். மற்றவர்களிடம் சொல்கையில் மாப்பிள்ளை என்பது வழக்கம். அவ்வளவு ஏன்? என் கடைசி நாத்தனார் என்னை விட 3 வயது சிறியவர். ஆனாலும் என் மாமனாருக்கு நான் அவங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவதே பிடிக்காது! நாத்தனாரிடம் மரியாதை இல்லை என்று சொல்லுவார். ஆனாலும் "அக்கா"னு கூப்பிட முடியாது என்பதால் நான் பெயர் சொல்லி அழைத்து, வாங்க, போங்க, நீங்க என்று சொல்லிவிடுவேன். :)

   Delete
 8. உறவு முறைகளின் பெயர்களா?. கட்டின கணவனையே பெயர் சொல்லி ‘டா’ போட்டு கூப்பிடும் பழக்கம் பிரபலமாகி வரும் போது மற்ற யாவரும் அங்கிள் ஆன்டி தான் !!!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நீங்கள் சொல்வது உண்மையே! நீண்ட நாட்கள் இல்லை. இல்லை, வருடங்களுக்குப் பின்னர் வருகை தந்தமைக்கு நன்றி.

   Delete
 9. பொதுவே ஒரு ஊரில் இருந்தவர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் உறவு என்ற முறை போன தலைமுறையில் இருந்தது. ஆகவே உறவுப் பெயர்களும் நிலைத்தன. தற்போது எல்லோரும் பல ஊர்களுக்கும் பிரிந்து சென்று விட்டதால் உறவினர் எல்லோரையும் காண்பது மிக அரிது. ஆகவே உறவுப் பெயர்களும் மறைந்து போய் விட்டன.

  இரண்டாவதாக உறவுப் பெயர்களை சொல்லிக்கொடுக்கும் தாத்தா பாட்டிமார்கள் புதிய தலைமுறையால் ஒதுக்கப் பட்டுள்ளனர்.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் சரியே! மதுரைக்கு அருகே சின்னமனூரில் அக்ரஹாரம் முழுவதும் தாயாதிகளும் உறவுமுறைக்காரங்களுமாகவே இருப்பார்கள். அதே போல் தஞ்சை ஜில்லா மெலட்டூரிலும் இருந்தனர். இப்போது குறைந்து விட்டது!

   Delete
 10. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நல்ல அலசல். நம்மூர் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்லது,கெட்டது என்று போகும் வழக்கமாவது இன்னும் கொஞ்ஜம் வழக்கத்தில் இருக்கிறது, வெளிநாடு பெய்விட்டவர்களுக்கு உறவு முறையே தெரியாது. விருப்பப் படுவதும் இல்லை. பங்காளி தாயாதி என்பதற்கு அண்ணன் தம்பியே அளவாகி விட்டது. தாயாதி உறவே டிஸ்மிஸ் ஆகிவிட்டது. வெளியூர் என்ன உள் நாட்டிலேயே அப்பா,அம்மா உறவே கேள்விக் குறியாக ஆகிக் கொண்டிருக்கிறது. யாவரும் ஃபாரின் ஸெட்டிலாகி விடுவதில் இருக்கிரார்கள். காணப்போவது ஏராளமாக இருக்கிறது. எங்கள் வளவனூர் அக்கிரஹாரமும் எப்படிப்பட்ட உறவு முறையில் பின்னப் பட்டிருந்தது. சென்னை குட்டி வளவனூராக மாறியது. இப்போது கிளைகள் யாவும் வெளிநாட்டில். யாருக்குயாரோ? என்னென்ன பேரோ. புருஷனை டாபோட்டு போடுவதில் ஸீரியல்கள் முன்நிற்கிறது. நிறைய எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பதிவு. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஆம் அம்மா, தாயாதி என்றால் இப்போதெல்லாம் யாருக்கும் புரிவதில்லை! :( என்றாலும் இன்னமும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கிறது!

   Delete
 11. நான் வேற்றூரில் பள்ளியில் சேர்ந்த போது உனக்கு எத்தனை அக்கா அண்ணன் தம்பி தங்கை எனக் கேட்ட போது பெரியப்பா சித்தப்பா குழந்தைகளையும் சேர்த்துச் சொன்னது நினைவுக்கு வருகிறது!! வெளிநாட்டில் இருக்கும் என் சகோதரியின் மகள்களுக்கு என் மகன்களை 'கஸின்ஸ்' என்று அவர்தம் பெற்றோர் அறிமுகப்படுத்திய போது மனதில் ஆறாத வடு!!

  ReplyDelete
  Replies
  1. "கஸின்" என்னும் இந்த வார்த்தையைக் கேட்டப்புறம் தான் இந்தப் பதிவே நான் எழுத நேர்ந்தது! தம்பியைத் தம்பி என்று சொல்வது கூடத் தப்பாகப் பார்க்கப் படுகிறது! என்னத்தைச் சொல்றது! :(

   Delete
 12. என் மனைவியின் சித்தி அவளை விடப் பல ஆண்டுகள் சிறியவள் சித்தி இவளை அக்கா என்றே கூப்பிடுவாள் என் மனைவி பெயர் சொல்லிக் கூப்பிடுவாள் என் பேரக் குழந்தைகள் என்னை அப்பா என்றே அழைப்பார்கள் என்மகன்கள் கூப்பிடுவது கேட்டு. ஆனால் என் தாய் மாமன் வீட்டு உறவுகள் எல்லோரும் என்னை உறவுமுறை கூறியே அழைப்பார்கள் ஒருவருக்கு ஒருவர் என்ன உறவு முறை என்றே தெரியாமல் இருக்கும் காலம் இது. அன்பும் மரியாதையும் மனதிலும் செயலிலும் இருந்தால் போதாதா.?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றாப்போல் உறவுகள் என் புக்ககத்தில் உண்டு. என் ஓரகத்தின் சித்தி அவளை விட நான்கைந்து வயது சிறியவள்! :) அன்பும், மரியாதையும் யாரும் எப்போதும் காட்டலாம். ஆனால் உறவுமுறைப் பெயர்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதைப் பற்றித் தான் இங்கே சொல்கிறேன்.

   Delete
 13. தமிழன் திரட்டி www.tamiln.in

  ReplyDelete
 14. நல்ல கருத்துக்கள்! எதிர் காலத்தில் மாமா, அத்தை சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகளே இருக்காதோ என்னும் அச்சம் எனக்கும் பல முறை வரும்.

  மன்னி என்று அழைக்கப்படுவதை பெண்கள் விரும்பாததைப் போல அத்திம்பேர் என்று அழைக்கப்படுவதை ஆண்கள் விரும்புவுது இல்லை.

  எங்கள் அம்மாவுக்கு பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒரே ஊராகிப் போனதால் எங்களுக்கு அங்கு இருப்பவர்கள் ஒன்று அம்மா வழி உறவினர்கள், அல்லது அப்பா வழி உறவினர்களாக இருப்பார்கள். அப்பா வழி உறவினர்கள் ராமயன் (ராம ஐயர்) கூட்டம் என்றும், அம்மா வழியினர் சுப்பையன்(சுப்பு ஐயர்) கூட்டம் என்றும் அழைக்கப் படுவர்.

  மெலட்டூர் பற்றி எழுதி இருக்கிறீர்களே, எப்படி? என் பாட்டியின் ஊர் அது. இன்றும் என் அம்மாவின் மாமாக்கள் குடும்பத்தார் அங்கு உள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. என் நாத்தனாரின் புக்ககம் மெலட்டூர். அதோடு இல்லாமல் அவங்க அத்தை பிள்ளையையே கல்யாணம் செய்து கொண்டதால் இங்கே எங்க மாமனார் வீட்டில் அனைவருக்கும் அங்கே சொந்தங்கள் இருக்கின்றன. அடிக்கடி போயிருக்கோம். இன்னும் அத்தையின் பேரன் ஒருவர் அங்கே தான் வசித்து வருகிறார். மெலட்டூர் பாகவத மேளா பார்க்கக் கூட ஒரு முறை சென்றிருக்கிறேன். புக்ககத்து அத்தை வீட்டிலும் அனைவரும் பாகவத மேளாவில் பங்கெடுப்பார்கள். இன்னொரு பேரனின் மகன் நான்கு வருடமாக பிரஹலாதன் வேடம் தரிக்கிறான்.

   Delete
  2. என் மாமனார் ஊரான பரவாக்கரையிலும் கூட தாயாதிகளே அக்கம்பக்கம் வசித்து வந்தனர். இப்போது அக்ரஹாரத்தில் ஒரே ஒரு தாயாதி மட்டும் வசிக்கிறார். :)

   Delete
 15. உறவுமுறையைச் சொல்லி அழைக்கும்போது கிடைக்கும் இன்பம் அளவிடமுடியாதது. அதனை நான் பல முறை உணர்ந்துள்ளேன்.

  ReplyDelete
 16. உறவு முறைகள் பலவும் அழிந்து வருவது உண்மை தான். நல்லதோர் அலசல். பதிவும் பதிவுகளுக்கு வந்திருந்த கருத்துகளும் பல எண்ணங்களை உண்டாக்கியது....

  ReplyDelete
 17. எனக்கு இணையத்தில் ஒரு அத்திம்பேர் கூடக் கிடைச்சாச்சு, தெரியுமோல்லியோ? :-)

  தங்கைகளுக்கும் தம்பிகளுக்கும் குறைவே இல்லை. எங்க வீட்டில் நாந்தான் கடைசி என்பதாலெனக்கு இதுலே ரொம்பவே மகிழ்ச்சியாக்கும்!

  ReplyDelete
 18. கீதாக்கா, உறவு முறைகள் குறைந்து வருவது உண்மைதான். என்னை என் கசின்களின் குழந்தைகள் பேர் சொல்லித்தான் கூப்பிடுவார்கள். மடியில் படுத்துக் கொண்டு அன்பைப் பொழிவார்கள் என் மகனின் வயதுதான் எல்லோருக்கும். என்றாலும் சிறு வயதிலிருந்தே அவர்கள் அவர்கள் பெற்றோர் என்னை அழைப்பதைப் பார்த்து அப்படியே பழகிவிட்டார்கள். ஆனால் அன்போ அன்பு அத்தனை அன்பு. செல்லமாக வேறு அழைப்பார்கள் கீத்து கீது, கீத்ஸ், கீ இப்படி. அவர்களின் அன்பில் நனைந்து மூழ்கி விடுவதால் வேறு எதுவும் தோன்றாது....

  ஆனால் பக்கத்தில் இருப்பவர்கள், என் கிராமத்துத் தோழிகள் தோழர்களின் குழந்தைகளுக்கு நான் அத்தை, பெரியம்மா.....அது போன்று என் கிராமத்துப் பெரியவர்களை அவர்கள் குழந்தைகள் எங்களுக்குத் தோழர்கள், தோழிகளாக இருப்பதால் அவர்கள் எப்படி அழைப்பார்களோ அப்படியே நாங்களும் அழைப்போம். அது போன்று நான் என் கசின்கள் அவர்கள் அப்பா வழி அம்மா வழி உறவுகளை எப்படி அழைப்பார்களோ அப்படியே அழைப்பேன்...இங்கு வலையில் அக்கா, அன்ணா, தம்பி என்று உறவுகள்

  கீதா

  ReplyDelete
 19. அத்தங்கா வை விட்டுவிட்டீர்கள் (அத்தை பெண்). நேரடியாகக் கூப்பிடமுடியாத உறவு முறை, மைத்துனர், மச்சினி போன்றவை.மற்றவர்களிடம் பேசும்போது, என் மைத்துனர், மச்சினி என்று சொல்லலாம். நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற உறவுமுறைகளை உபயோகப்படுத்தலாம். அண்ணனை 'முத்தா' என்று அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அது 'மூத்தார்' என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம் (அகம் எப்படி ஆம் என்று மாறியதோ அது போல).

  ReplyDelete
 20. இந்தப் பதிவை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் 30 வருடங்களில் நாம் எல்லோரும் இழந்ததை நினைவுக்குக்கொண்டுவருகிறது. அப்பாவை, 'அண்ணா' என்றுதான் என் தந்தையின் தலைமுறையும் அதற்கு மேலுள்ளவர்களும் அழைத்துவந்தார்கள். (தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பதிலிருந்து இந்த முறை வந்திருக்குமா? ஆனால், மற்ற சமூகத்தில் அழைப்பதுபோல், பையனை 'தம்பி' என்று அழைப்பதில்லை. அப்பாவை மட்டும் அண்ணா என்று அழைப்பார்கள்). என் குழந்தைகள் என்னை dad என்று கூப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஒரு சமயம் என் பையன் (8வது படிக்கும் வயதில்) 'ஏய் அப்பா' என்று கூப்பிட்டான். என் மாமனாரும், ஒரு பேரன் 'நீ' என்று சொன்னபோது கொஞ்சம் ஜீரணிக்கக் கஷ்டமாயிருந்தது என்று சொன்னார். என் குழந்தைகள் அம்மாவைத் தவிர எல்லோரையும் 'நீங்க' என்றுதான் அழைக்கவேண்டும் என்று பழக்கப்படுத்தியிருக்கேன்.

  ReplyDelete