படத்துக்கு நன்றி விக்கிபீடியா!
நேத்து மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றபோது சிட்டுக்குருவிச் சப்தம் கேட்கச் சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு அழகான சிட்டுக்குருவி, தன் இணையைத் தேடியது அல்லது குஞ்சுகளைத் தேடியது! செல்ஃபோன் டவர்களினால் சிட்டுக்குருவிகள் காணாமல் போயின என்று சொல்பவர்கள் வந்து பார்த்திருக்கணும். அது காணாமல் எல்லாம் போகலை. தனக்கு வசதியான இடமா என்றறிந்து கொண்டு அங்கே சென்று வசிக்கிறது. பழமையான வீடுகள், அந்தக்காலத்துக் கட்டிடங்கள், ஒரு சில பழைய கோயில் வளாகங்கள் ஆகிய இடங்களில் சிட்டுக்குருவிகளைப் பார்க்க முடிகிறது.
இப்போதைய நவீனமயமாக்கலில் சிட்டுக்குருவிகள் தாராளமாக வீட்டுக்குள்ளே வந்து போகும் அளவுக்கு வழி உண்டாக்கிக் கட்டுவதில்லை என்பதே அவை வராமல் இருப்பதற்குக் காரணம். உண்மையில் அவை வீடுகளிலே தான் பெரும்பாலும் வசிக்கின்றன. ஆகவே கிராமத்து வீடுகள் பழமை மாறாமல் இருந்தால் அங்கே வசிக்கின்றன. தங்களுக்கேற்ற சுற்றுப்புறச் சூழலை முழுதும் மாற்றி மனிதன் ஏற்படுத்தி வரும் கான்க்ரீட் காடுகளில் வசிக்க விருப்பமில்லாமலேயே சென்னை போன்ற நகரங்களில் காண முடிவதில்லை. அப்படியும் பெரம்பூர், பழைய மதராஸ் ஆகிய பகுதிகளின் பழைய கட்டிடங்களில் வசிக்கின்றன. இதைப் பெரம்பூர்ப் பகுதிக்குச் சென்றிருந்த போதும், பழைய மதராஸ் பகுதியிலும் பார்த்தேன். குருவிகளை வீட்டுக்குள் வந்து கூடு கட்டும்படி வழி உண்டாக்கி வீடு கட்டினால் இருக்கும் சில சிட்டுக்குருவிகள் பல்கிப்பெருக வழி உண்டு!
சிட்டுக்குருவிக்கு மட்டுமா செல்ஃபோன் டவரின் தாக்கம்? மற்றப் பறவைகளுக்குக் கிடையாதா? அவை செல்ஃபோன் டவரிலேயே ஏறிக் குடித்தனம் நடத்துகின்றனவே! அவற்றுக்குப் பாதிப்பு ஏதும் உண்டாவதில்லையே! அது ஏன்? யோசித்துப் பார்த்தோமா? அதோடு சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவான அவை உயிர்வாழக் கிடைக்கும் தானியங்கள் எல்லாம் இப்போது கிடைப்பதில்லை. முன்னெல்லாம் முற்றத்தில் உட்கார்ந்து அரிசி பொறுக்கினால் நம்மைச் சுற்றிச் சிட்டுக்குருவிகள் வந்து அமர்ந்து நாம் பொறுக்கிப் போடும் நெல்மணிகளைத் தின்னும். மேலும் அவை பார்க்காதபடிக்கு நாம் அரிசியையும் கொஞ்சம் போடுவோம். அவை நிதானமாகத் தின்றுவிட்டுப் போகும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி உணவு சிட்டுக்குருவிகளுக்குக் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வீடுகளில் கிடைக்கும் தானியங்களையே உண்டு வந்த சிட்டுக்குருவிக்கு இப்போது புழுவும், பூச்சியும் மட்டும் போதவில்லைனு நினைக்கிறேன். இப்போதெல்லாம் யாருக்கு நிதானமாக அமர்ந்து அரிசி பொறுக்கும் அளவுக்கு நேரம் இருக்கிறது! ஒரே ஓட்டம் தான்!
சிட்டுக்குருவியை விடச் சின்னதான தேன் சிட்டு சுண்டு விரல் நீளமே உள்ளது! அவை உயிர்ப்புடன் இருக்கையில் சிட்டுக்குருவி இனம் மட்டும் செல்ஃபோன் டவர் பாதிப்பால் அழிந்தது என்று சொல்வது முட்டாள்தனமாக இல்லையோ! இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். சிட்டுக்குருவி லேகியத்துக்காக வேட்டையாடப் படுவதாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்ததாகச் சொல்கின்றனர். இது உண்மையாகவும் இருக்கலாம். எனினும் கடந்த சில நாட்களில் ஆங்காங்கே சிட்டுக்குருவிகளைப் பார்த்ததில் மிக்க சந்தோஷமாகவே இருக்கிறது.
மாறுபட்ட அலசல் நன்று சகோ கிராமங்களில் நீங்கள் சொல்வதுபோல் இருக்கத்தான் செய்கின்றது அபுதாபியில்கூட பலநேரங்களில் நான் பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteஆமாம், சிட்டுக்குருவிகள் இனம் முற்றிலும் அழியவில்லை! :)
Deleteஉண்மைதான் கிராமங்களில் சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன! நல்லதொரு அலசல்!
ReplyDeleteநன்றி சுரேஷ்!
Deleteசிட்டுக்குருவி அழிவுக்கு செல்போன் டவர்கள் காரணமில்லை. அவைகள் வாழ வசதி ஏற்படுத்தித் தராத நமது வீடுகளே காரணம். மரங்களும் மற்றொரு காரணம் என்று நினைக்கிறேன். முதலில் எங்கள் பகுதியில் ஒரு சிட்டுக்குருவியைக் கூட பார்க்க முடியாது. இப்போது மரங்கள் அதிகமாகிவிட்டதால், சிட்டுக்குருவி முதல் பலவித பறவைகள் வருகின்றன. இயற்கைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்பதை சிட்டுக்குருவிகள் எங்களுக்கு நிருபித்துக் காட்டியிருக்கிறது.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் பதிவு.
உண்மை தான் செந்தில்குமார். சிட்டுக்குருவிகள் மனிதனோடு கலந்து பழகும் தன்மை உள்ளது அல்ல என்றாலும் மனிதர் இருக்கும் இடங்களிலேயே அதிகம் வசிக்கும். ஆகவே அவை வாழ வசதி ஏற்படுத்திக் கொடுத்தாலே போதுமானது.
Deleteநல்ல தகவல். வீடுகளில் ஒரு அட்டைப் பெட்டியை சிறிய துளையிட்டு வைத்து, அதைக் கயிற்றில் கட்டி தொங்க விட்டால், அதில் சிட்டுக் குருவிகள் வந்து குடியேறும் என்று சொல்கிறார்கள். உள்ளே அதற்கான ஆகாரமும் வைக்க வேண்டும். இடமும் இல்லை. பொறுமையும் இல்லை!
ReplyDeleteஆமாம், கூண்டைப் போல் இருக்கும் ப்ளாஸ்டிக் கூடைகளையும் வைக்கலாம். தொடர்ந்து கொஞ்ச நாட்கள் வைத்துப் பார்த்த பின்னரே அவை வர ஆரம்பிக்கும். வைத்த உடனே வந்துவிடாது!
Deleteதூத்துக்குடி போய் இருந்த போது நிறைய சிட்டுக்குருவிகள் பறந்து கொண்டு இருந்தது. வடநாட்டிலும், வெளிநாட்டிலும் நிறையசிட்டுக்குருவிகளை பார்த்து இருக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல்தான் நானும் நினைத்தேன். அவைகளுக்கு எங்கு வசதியோ அங்கு குடி இருக்கிறது.
ஆமாம், முக்கியமாய் வசதிக் குறைச்சல் தான் காரணம். அப்போதுள்ள வீடுகளுக்குள் நுழைந்து அவற்றால் கூடுகள் கட்ட முடிந்தது. இப்போதுள்ள வீடுகளுக்குள் நுழைவதே முடியவில்லை! :(
Deleteஇப்போதும் இங்கொன்றாஉம் அங்கொன்றுமாகச் சிட்டுக் குருவிகளையும் தேன் சிட்டுக்களையும் பார்க்கிறேன் ஒரு குருவிக் கூடு மாதிரி ஒன்றை வாங்கி எங்கள் வீட்டு மாமரத்தில் கட்டித் தொங்க விட்டேன் குருவிகள் வரௌகிற மாதிரி இல்லை.
ReplyDeleteகுருவிகள் வராவிட்டாலும் மற்றப்பறவைகள் ஏதேனும் வரலாம் ஐயா. பொறுத்திருங்கள்!
Deleteசிட்டுக்குருவிகள் செல்போன் டவரினால் அழியவில்லை. கிராமத்துல, வீடு என்பது, ஒரு தெருவில் ஆரம்பித்து பின் தெருவில் முடியும். அங்கெல்லாம் சிட்டுக்குருவி வீட்டுக்குள்ளேயே பறந்து செல்லும். அதுகளுக்கு உள்ளே வர வழி இருக்கிறமாதிரி எங்க இப்போல்லாம் வீடு இருக்கு? அடுக்ககத்துல, நாம வீட்டுக்குள் நுழைந்தவுடன், எதுத்த வீடு இடிந்துபோவதுபோல் கதவைத் தாளிட்டுக்கொள்கிறோம். சிட்டுக்குருவிகளுக்கு என்ன வேண்டுதலா? வீட்டுச் சிறையில் அடைபடுவதற்கு? கடையில், 1 கிலோ முழு கோதுமையோ அல்லது பறவைகளுக்குண்டான தானியமோ வாங்கி, ஒரு இடத்தில் தூவி விட்டோமென்றால், அவைகளே வந்து உண்டுவிட்டுச் செல்லும். அந்த இடங்களில் பூனை இல்லாமல் பார்த்துக்கொண்டால் நல்லது. லேகியத்துக்கெல்லாம் யாரும் சிட்டுக்குருவிகளைக் கொன்றுவிடவில்லை. "சிட்டு மாதிரிப் பறக்கிறான்" என்பதெல்லாம் இப்போது வழக்கொழிந்ததற்குக் காரணம், சிட்டுக்குரிவிகளே குறைந்துவிட்டதுதான். தேன் சிட்டு என்பதெல்லாம் செடிகள் (பூச்) அடர்ந்து இருக்கின்ற இடங்களில்தான் இருக்கும். பழைய வீடுகளில் (கிராமத்தில்) சிட்டுக்குருவி வீட்டிற்குள்ளேயே கூடு கட்டும். யாராகிலும் மாதமாக இருந்தால், வீட்டுக்கு வெள்ளைகூட அடிக்க மாட்டார்கள் (குருவிக் கூடுகளுக்கு பங்கம் வந்துவிடும் என்று). காலையில் சிட்டுக்குருவிகளின் சப்தமே கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
ReplyDeleteஇருக்கும் சிட்டுக்குருவிகளை அழியாமல் பாதுகாத்தாலே போதும். திருக்கோஷ்டியூரில் கோபுர வாசலுக்கு அருகே இருந்த ஒரு கடையில் ஏராளமான சிட்டுக்குருவிகளைப் பார்த்தேன். அவற்றுக்கு அங்கே பாந்தமாக இருக்கு போல!
Deleteஇன்னமும் கிராமங்களிலும் சிறு நகரங்களில் சிட்டுக்குருவிகள் இருக்கின்றன. நகரங்களில் மனிதர்களுக்கு நேரமும் இல்லை தீப்பெட்டி அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் இடமுமில்லை!
ReplyDeleteஆமாம், ஆனால் இன்னமும் எங்கள் வீட்டுப் பக்கம் பார்க்க முடியலை! :(
Deleteசிட்டு குருவி .....ஆஹா ..புதுமையான பகிர்வு .....
ReplyDeleteசென்ரியூவிற்கு விளக்கம் சென்ரியு கவிதைகள் பதிவில் சொல்லிவிட்டேன்! பதிலே சொல்லவில்லை என்று ரொம்பவே கோபித்துக் கொண்டீர்கள். முதலில் நானும் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்த இப்படி நன்றி! தேங்க்ஸ் என்று பதில் போடுகிறாயா என்று நக்கலடித்தார். அது முதல் பதில் கொடுப்பதை கொஞ்சம் தவிர்த்து வந்தேன். ஆனால் இது போன்ற சந்தேகத்திற்கு பதில் சொல்லிவிடுவேன்.. கொஞ்சம் விரிவாக தர முயற்சித்தமையால் தாமதம் ஆகிவிட்டது. தளத்திற்கு வந்து ஒரு வார பதிவுகளை வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteகோபமெல்லாம் இல்லை சுரேஷ்! அர்த்தம் புரியாமல் மண்டை காய்ந்து கொண்டிருந்தது. உங்களுக்குக் கோபம் போல் தொனித்தது போலும். நமக்குக் கருத்திடுபவர்களுக்குக் குறைந்த பட்சம் நன்றியாவது தெரிவிக்கலாம். சொல்பவர்கள் சொல்லி விட்டுப் போகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இரண்டு, மூன்று கருத்து வந்தாலும் சரி, கருத்தே வரவில்லை என்றாலும் சரி அதைக் குறித்து நினைப்பதே இல்லை. நான் கொஞ்சம் தாமதமாகத் தான் வர இயலும். நிலைமை அப்படி. ஆனால் எப்படியும் படித்துவிடுவேன். :)
Deleteதங்களது தளம் கண்டு மகிழ்ச்சி. சிட்டுக்கருவி மட்டுமல்ல, இதுபோன்ற பல அரியனவற்றை நாம் சிறிது சிறிதாக இழந்துகொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இயற்கைக்கு எதிராக நாம் நடப்பதன் விளைவே இது.
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. காக்கைகள் கூட இப்போதெல்லாம் சோறு வைத்தால் எடுப்பதில்லை!:(
Deleteசிட்டுக்குருவிகளைப்பற்றி நல்ல செய்தி சொன்னீர்கள். மனிதன் தனது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள என்று மற்ற உயிரனங்களின் வாழ்வாதாரத்தை நசுக்கி வருகிறான். அவைகள் இருக்க இடமின்றி விலகி ஓடியபின், மறைந்தபின் அவைகளைப்பற்றிப் படம் எடுப்பான். கவிதை எழுதுவான். ச்சு..ச்சு .. கொட்டுவான். அவனும் என்ன செய்வான் பாவம், அவனது வாழ்வியல் தர்மம் அப்படி!
ReplyDeleteசிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடங்கள் பழகின இடமாக இருத்தல் வேண்டும். அவை மெல்ல மெல்ல ந"ர"கமயம் ஆக்கலில் அழிந்து வருகின்றன. ஆகவே அவை வேறிடம் நோக்கிப் போய் விட்டன. முற்றிலும் அழியவில்லை என்பது சந்தோஷமான செய்தியே!
Deleteஇங்கேயும் அமெரிக்காவிலும் நிறைய சிட்டுக குருவிகளைப் பார்க்கிறேன்மரங்கள் இருந்தால் பறவைகள் இருக்கும்.
ReplyDeleteமிக அருமையான பதிவு. எங்கள் ஊர்களில் நிறையவே இருக்கின்றன. மலையும் மரங்களும் இல்லையா நான் இருக்கும் ஊர்...இங்கு அவ்வளவாக இன்னும் டெக்னாலஜி வரவில்லை நகரங்கள் அளவிற்கு.
ReplyDeleteகீதா: இப்போதும் சிட்டுக் குருவிகள் இருக்கின்றனதான் கிராமங்களில். ஆனால் அதன் இனம் அதன் இனம் மட்டுமில்லை, பல பறவைகளின் இனம் கொஞ்சம் காணாமல் போவது உண்மைதான். அதாவது பறவைகளின் கம்யூனிக்கேஷன் குறிப்பாகப் புறாக்கள் காக்கைகள், குருவிகள்..பற்றப்பவை. எப்படிக் காட்டு விலங்குகளின் இடங்களை நாம் ஆக்ரமித்து அவற்றின் வழிப்பாதையை ஆக்ரமித்திருப்பதால் அவை தடுமாறி நம்மிடம் வந்து மாட்டியோ இல்லை மனிதர்களை அடித்தோ போன்ற நிகழ்வுகள் நடக்கின்றதோ அது போன்று பறவைகளும். எனவே அவை வேறு இடங்களுக்குச் செல்கின்றனதான். ஆனால் அவற்றின் வாழ்க்கை முறையும் மாறி வருகின்றது என்றுதான் அதாவது சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் அடிப்படையில் சமீபத்திய ஆய்வு என் மகனின் தோழர் கால் நடை மருத்துவரின் ஆய்வுப் பேப்பரின் ஒரு சிறு பகுதி அதுதான்.
மரங்கள் வெட்டப்பட்டால் அவை எங்கு போகும்? பழைய வீடுகளில் அவற்றிற்கு வாழ வழி இருந்தது. இப்போதும் எங்கள் வீடுகளில் அவற்றிற்கு என்று தனி இடம் எல்லாம் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். கூடுவான் சேரியிலும், என் மாமியார் வீட்டிலும்.
நல்ல பதிவு அக்கா...