எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 19, 2016

குரு பூர்ணிமா பற்றிய சில தகவல்கள்!

இன்றைய தினம் குரு பூர்ணிமா எனப்படும் பௌர்ணமி தினம். இது வருடா வருடம் குருமாரை ஆராதித்துக் கொண்டாடப் படுகிறது.  இது முதன் முதல் வியாசரின் புதல்வரான சுகப்பிரம்ம ரிஷியால் செய்யப்பட்டுப் பின்னர் அவர் சீடர் ஶ்ரீசூத முனிவரால் செய்யப்பட்டுப் பின்னர் வழி வழியாக வருவதாகும்.  என்றாலும் ஆதிகுருவாக ஶ்ரீதக்ஷிணாமூர்த்தியும், ஶ்ரீமந்நாராயணனுமே (இருவருமே ஒருவர் தான் :) கருதப்படுவார்கள். இந்த குரு பூர்ணிமா ஒவ்வொரு வருடமும் ஆடி மாசப் பௌர்ணமியில் கொண்டாடப் படும். ஆஷாடப் பௌர்ணமி அன்றே குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது.  இதை ஒட்டி சந்நியாசிகள், பரிவ்ராஜகர்கள், பஹூதகர்கள் எனப்படும் துறவிகள் ஆகியோர் சாதுர்மாஸ்ய விரதம் அநுஷ்டிக்கத் தொடங்குவார்கள்.

சந்நியாசிகள் என்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துறவு வாழ்க்கையை மேற்கொண்டிருப்பார்கள். குடிசைகளில் தங்கி இருந்து சந்நியாச ஆசிரமத்தைக் கடைப்பிடிப்பவர்களைக் குடீசர்கள் என அழைப்பார்கள். நீர் அதிகம் உள்ள நதிக்கரைகளில் வாழும் துறவிகளை பஹூதகர்கள் என அழைப்பார்கள். இவர்கள் பிக்ஷை  எடுத்தே உண்ணுவார்கள். அடிப்படையில் சந்நியாச ஆசிரமத்தின் கட்டுப்பாடுகள் ஒன்றே என்றாலும் நுணுக்கமான வேறுபாடுகளும் உண்டு.  அடுத்துப் பரிவ்ராஜகர்கள்! இவர்கள் ஓரிடத்தில் தங்க மாட்டார்கள். பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் இவர்கள் பரிபூரணப் பக்குவ ஞானம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ஒரே ஊரில் தங்குவதும் அங்குள்ள மக்களுக்குப் போதிப்பதும் இவர்கள் வரை சரியானது அல்ல.  ஒரே இடத்தில் தங்கினால் அந்த மக்களிடம் பற்றோ, பாசமோ ஏற்பட்டு விடும் என்பதால் இடம் மாறிக் கொண்டே இருப்பார்கள். இவர்களும் குரு, சிஷ்ய பரம்பரையில் தான் வந்திருப்பார்கள்.

பொதுவாக சந்நியாசிகள் மூன்று நாட்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்கக் கூடாது என்பார்கள். என்றாலும் இந்தச் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்தால் மட்டும் ஒரே இடத்தில் தங்குவார்கள். ஏனெனில்இவர்கள் மழைக்காலங்களில் ஊர் ஊராகப் பயணம் செய்ய முடியாது.  மழைக்காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் புதிய செடிகள், துளிர்கள் முளைத்துவரும். புழுக்கள், பூச்சிகள் நிறையக் காணப்படும்.  இவற்றை மிதிக்காமல் நடக்க வேண்டி இருக்கும். சாலைகளின் பள்ளங்களில் நீர் தேங்கி இருக்கும் இடங்களில் கூடப் புழுக்கள், பூச்சிகள், பாம்புகள் போன்றவை மறைந்திருக்கலாம். எவ்வுயிர்க்கும் இல்லல் விளைவிக்காவண்ணம் அஹிம்சை என்பதைப் பரிபூரணமாகக் கடைப்பிடிப்பதே சந்நியாச யோகத்தில் முக்கியமானது. ஆகவே சந்நியாசிகளும், துறவிகளும், பரிவ்ராஜகர்களும் இந்த நான்கு மாதங்களில் ஒரே இடத்தில் தங்கித் தங்கள் விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.

நான்கு மாதங்கள் என்பது ஆடி மாதப் பௌர்ணமியில் தொடங்கிக் கார்த்திகை மாதப் பௌர்ணமி வரை அனுஷ்டிப்பார்கள். தக்ஷிணாயனம் என்பது தேவர்களின் இரவுக்காலம் என்பதால் இந்த ஆஷாட மாதத்தில் வரும் சுக்லபக்ஷ ஏகாதசியை சயன ஏகாதசி என்பார்கள். இந்த ஏகாதசி அன்று தான் எம்பெருமான் அறிதுயில் கொள்கிறாராம். ஆகவே இந்த ஏகாதசியை ஒட்டியும் சாதுர்மாஸ்யம் ஆரம்பித்துச் செய்வது உண்டு. முன்னெல்லாம் நான்கு மாதங்கள் இருந்த இந்த விரதம் இப்போது நான்கு பக்ஷங்கள் ஆகி விட்டது. ஆகவே ஆஷாடப் பௌர்ணமி அன்று ஆரம்பிக்கும் சாதுர்மாஸ்ய விரதம் புரட்டாசிப் பௌர்ணமி அன்று முடிவடையும். ஒவ்வொரு பக்ஷத்துக்கும் பதினைந்து நாட்கள் கணக்கு என்பதால் இது இரண்டு மாதம். இதற்கு இன்னொரு காரணமும் கூறுகின்றனர்.

சந்நியாசிகளையும், துறவிகளையும், பரிவ்ராஜகர்களையும் அவர்களுக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்து நித்திய கர்மானுஷ்டானங்கள், வழிபாடுகள், பிக்ஷை ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளை எந்த ஊரில் தங்கப் போகிறார்களோ அந்த ஊர்க்காரர்கள் தான் செய்வார்கள்.  முதலில் குறிப்பிட்ட துறவியானவர் தான் சாதுர்மாஸ்யத்தை இந்த ஊரில் தான் அனுசரிக்கப் போகிறேன் என அறிவித்ததும் சீடர்கள் மகிழ்ச்சியோடு அவரை வரவேற்று வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பார்கள். ஆதலால் தொடர்ந்து நான்கு மாதங்கள் துறவிகள் தங்குவதில் ஒரு சில இடைஞ்சல்கள், இடையூறுகள் இல்லறத்தாருக்கோ, துறவிகளுக்கோ ஏற்பட்டு விடலாம் என்பதால் இதை இரண்டு மாதமாகக் குறைத்ததாகவும் ஒரு கூற்று.

இந்த விரதம் இருக்கும்போது முதல் பக்ஷத்தில் காய்கள், பழங்கள், கிழங்கு வகைகள் ஆகியவற்றை உணவில் மட்டுமல்லாமல் நிவேதனமும் செய்யாமல் தவிர்த்து அதற்கேற்ப உணவு சமைத்து உண்ண வேண்டும்.  இந்தச் சமயம் தானியங்கள், எண்ணெய், நெய், பால், தயிர், சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்க்கலாம். அடுத்த மாதத்தில் தயிர், தயிர் சார்ந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். முதல் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதம் சாக விரதம் என்றும் இரண்டாவது மாதம் ததி விரதம் என்றும் சொல்வார்கள். மூன்றாவது மாதம் க்ஷீர விரதம். பால், பால் பொருட்கள் தவிர்ப்பார்கள். நான்காவது மாதம் த்விதள விரதம். உதாரணமாகக் கொண்டைக்கடலை, நிலக்கடலை போன்றவை இரண்டு பக்கமும் பருப்பு உள்ள பொருட்கள். அப்படிப் பட்ட பருப்பு வகைகளைத் தவிர்த்தலே த்விதள விரதம். பலரும் மொத்தப் பருப்பு வகைகளையுமே தவிர்ப்பார்கள்.
தக்ஷிணாமூர்த்தி க்கான பட முடிவு


இந்த விரதம் இல்லறத்தாரும் ஏற்பது உண்டு. குஜராத்தில் ஒவ்வொரு வருடமும் இந்த விரதம் இருப்போர் பலரைப் பார்த்திருக்கிறேன்.  நம்மால் எல்லாம் முடியாது என்பதால் இந்த விரதம் எல்லாம் இருந்ததில்லை. ஆனால் குரு பூர்ணிமா என்பது மிகவும் சிறப்பான தினம். அனைவரும் அவரவர் குருமாரை வழிபட வேண்டும்.

நாராயணன் க்கான பட முடிவு

ஆதி குருவான தக்ஷிணாமூர்த்திக்கும், ஶ்ரீமந்நாராயணனுக்கும் பின்னர் வியாசரையே முதல் குருவாகக் கொண்டு துறவிகள், சந்நியாசிகள் ஆராதிக்கின்றனர். எல்லா மடங்களிலும் இன்று வியாச பூஜை நடைபெறும். வியாசர் ஆஷாடப் பூர்ணிமா அன்று தான் பிறந்தார். ஆகவே இன்றைய தினம் வியாசருக்கு மகத்துவம் அதிகம். வியாசர் என்ற பெயரில் பலர் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும் நமக்கெல்லாம் வேதங்களைத் தொகுத்தளித்த க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரே முக்கியமானவர். அவரே நம் குரு!

வேத வியாசர் க்கான பட முடிவு


கீழே காணப்படும் குரு பரம்பரை ஸ்லோகங்களைச் சொல்லி நம் குருமார்களை வழிபடுவோம். கீழுள்ளவற்றில் முதல் இரண்டும் அத்வைதிகளால் சொல்லப்படுவது! கடைசியில் உள்ளது ஶ்ரீவைஷ்ணவர்களால் சொல்லப்படுவது!

நாராயணம் பத்மபுவம் வசிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம் ச
வ்யாஸம் சுகம் கௌடபாதம் மஹாந்தம் கோவிந்த யோகீந்ரம் அதாஸ்ய சிஷ்யம்
ச்ரி சங்கராசார்யம் அதாஸ்ய பத்மபாதம் ச ஹஸ்தாமலகம் ச சிஷ்யம்
தம் தோடகம் வார்த்திககாரமன்யான் அஸ்மத் குரூன் சந்ததமானதோஸ்மி

முதலில் நாராயணன், பின்னர் அவர் பிள்ளையான பிரம்மா, பின் பிரம்மாவின் பிள்ளையான வசிஷ்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர், சுகருக்குப் பிள்ளை இல்லாத காரணத்தால் அவர் சீடரில் போய் விடுகிறது. கௌடபாதர், கோவிந்த பாதர் என்று போகிறது குருபரம்பரை. அதன் பின்னர் ஆதிசங்கரர் அவர் சீடர்கள் என்று வருகிறது.


சதாசிவ சமாரம்பாம்
சங்கராசார்ய மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"

இதுவும் அத்வைதிகளால் சொல்லப்படுவதே! சதாசிவ பெருமான் முதற்கொண்டு ஆதி - சங்கராச்சார்யர்  வரை நடுவில் வர வழி வழியாக வந்த
அத்தனை ஆசார்யர்களுக்கும் நமஸ்காரங்கள்!


லக்ஷ்மிநாத சமாரம்பாம்
நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் "ஆசார்ய" பர்யந்தாம்
வந்தே "குரு பரம்பராம்"

இங்கே லக்ஷ்மிநாதன் என்றும் ஆரம்பிக்கலாம். அல்லது லக்ஷ்மியும் அவள் நாதனுமான திருமால் என்றும் சொல்லலாம். அதன் பின்னர் நாதமுனிகள்,  ஆளவந்தார் என்று இடையில் வந்து வழி வழியாக வந்த அனைத்து குருமார்களுக்கும் ஆசாரியர்களுக்கும் நமஸ்காரங்கள்.

எங்களுக்கும் ஒரு மானசிக குரு உண்டு. ஏன் மானசிகம் என்று சொல்கிறேன் என்றால் நாங்கள் தான் அவரை குருவாக எண்ணிக் கொண்டு வருகிறோம். ஆனால் அவர் எங்களை விடச் சிறியவர் என்பதால் எங்கள் வயதை முன்னிட்டு எங்களைக் கீழே விழுந்து வணங்குவார். ரொம்பக் கஷ்டமாகத் தான் இருக்கும். ஆனால் தவிர்க்க முடியலை! என்றாலும் அவரைத் தான் நாங்கள் குருவாக நினைத்து வருகிறோம். கடைசியாகப் போன வருடம் பெப்ரவரி மாதம் வந்தது. அதன் பின்னர் இருமுறை தொலைபேசியில் அழைத்தார். இரு சமயங்களிலும் நான் பயணத்தில் இருந்தேன். அப்புறம் இன்று வரை தகவல் இல்லை. நண்பர் ஒருவருக்கு அழைப்பு வந்ததாகத் தெரிவித்திருக்கிறார். குரு பூர்ணிமாவில் அவருக்குக் கிடைத்த பரிசும், ஆசிகளும் இந்த அழைப்புத் தான் என எண்ணிக் கொண்டோம்.

பி.கு. குரு பூர்ணிமா குறித்த தகவல்கள் எல்லாம் பல்வேறு புத்தகங்களைப் படித்து எழுதிய தொகுப்பு!20 comments:

 1. அற்புதமான கட்டுரை கீதா. காலையிலிருந்து நம் குருவின் நினைப்புதான்.
  எத்தனை உத்தமமான ஆத்மா. அவரது வழிகட்டுதல் இருந்தால் போதுமே. இனிய வார்த்தைகள் அன்பு தவம் முகமும் கண்ணிலேயே நிற்கின்றன. குருவருள் எல்லொருக்கும்
  கிடைக்க அவரே வழி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி, வல்லி. அவரைப் பார்க்க முடியுமானு நானும் காத்துட்டுத் தான் இருக்கேன்.

   Delete
 2. நல்லதொரு விளக்கமான பகிர்வு. நீங்கள் சொல்லும் குருவை வல்லிம்மாவும் அறிவாரா?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எங்களைப் போல் இன்னும் சிலருக்கும் அவர் குரு! :) பார்த்து ஒன்றரை வருடம் ஆகிறது. இதுக்குள்ளே இரண்டு தரமாவது வந்திருக்கணும். என்னமோ தெரியலை! தொடர்பிலேயே இல்லை! நாமாக அவரைத் தொடர்பு கொள்ள முடியாது. பெரிய யோகி அவர்!

   Delete
 3. சந்நியாசிகளைப் பற்றியும் சதுர் மாஸ்ய விரதம் பற்றியும் பல விவரங்களை அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர்கள். பல விவரங்கள் எனக்குப் புதிது. நன்றி.
  தங்கள் குரு முரளீதர ஸ்வாமிகள் என்று ஊகம்.
  பதிவு ஆற்றொழுக்கு போன்று சிறப்பாக உள்ளது.

  --
  Jayakumar​​

  ReplyDelete
  Replies
  1. முரளீதர ஸ்வாமிகள்? மஹாரண்யம்? ம்ஹூம், உங்கள் ஊகம் முழுத் தப்பு!நாங்க மஹாரண்யத்துக்குச் சுத்திப் பார்க்கப் போனதோடு சரி! முரளீதர சுவாமிகளை இன்று வரை பார்த்தது இல்லை. தொலைக்காட்சி தவிர! எங்க குருநாதர் விளம்பரமே செய்து கொள்வதில்லை. அவரைப் பார்த்தாலும் துறவினு தெரியாது! ஒரு காலத்தில் புத்தகங்களில் அவர் எழுதியவை எல்லாம் வந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். என்ன பெயர் என்பது தான் சரியாகத் தெரியவில்லை.

   Delete
  2. இணையம் மூலமே பழக்கம் ஆனார்! :) பத்துவருடப் பழக்கம் அவருடனும்!

   Delete
  3. ராமானந்த குரு உஜிலா தேவி

   http://ujiladevi.in/
   --
   Jayakumar

   Delete
  4. கேள்விப் பட்டதில்லை! உஜிலா தேவி? யாரு அது? ராமானந்த குரு என்னும் பெயரில் பலர் இருக்காங்கனு நினைக்கிறேன். எங்க குரு தமிழர் தான்! சீர்காழிப் பக்கம் ஊர்! உங்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை.

   Delete
 4. i am sharing this post with my friends madam. Good collection of information. thanks

  ReplyDelete
  Replies
  1. நல்வரவு நன்மனம்! செய்ங்க!

   Delete
 5. குரு பூர்ணிமா பற்றிய அரிய பல விடயங்கள் அறிந்தேன் நன்றி இப்பொழுதுதான் எனது டேஷ்போர்டில் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி

   Delete
 6. என்னிடம் என்ன கோபமோ - 2-3 வருஷமாக தொடர்பு எதுமில்லை - அருமையான சமையல் சமைத்து எனக்களித்தார் அந்த சுவை இப்போதும் நினைவிருக்கிறது. உங்களிடம் தொடர்பு கொண்டால் எனது நமஸ்காரங்களைச் சொல்லுங்கோ.

  ReplyDelete
  Replies
  1. அவர் கையாலே சாப்பிடக் கொடுத்து வைச்சிருந்திருக்கிறீங்க. புடலைப் பால் கூட்டு என்றும் சொன்னார். பார்க்கலாம். மனதெல்லாம் தினம் அவரிடமிருந்து அழைப்பு வராதானே ஏங்கிட்டு இருக்கு! :(

   Delete
 7. நல்ல விஷயங்களை எளிமையாகவும்,தெளிவாகவும் கூறியிருக்கிறீர்கள். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி. இந்த எளிமையும், தெளிவும் தான் என் குறிக்கோள். அனாவசிய அலங்காரச் சொற்கள் இல்லாமல் எழுதணும்னு ஒரு எண்ணம். உங்கள் கருத்தால் மகிழ்ச்சி!

   Delete
 8. நல்ல தகவல்கள்..... நன்றி.

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு...

  ReplyDelete