எல்லோரும் கபாலியைப் பத்தி எழுதியாச்சு! நாம மட்டும் விதிவிலக்கா என்ன? ஊரோடு ஒத்து வாழணும் இல்ல! அதான் இந்தப் பதிவு! ஒரே அமர்க்களம், ஆர்ப்பாட்டம்! சென்னையிலே இன்னிக்குப் பால் கிடைக்குமானு தாய்மார்கள் தவிப்பு! ஹோட்டல்காரங்க எல்லாம் அச்சம்! ஏன்னா எல்லாப் பாலையும் தலைவர் கட் அவுட்டுக்கு அபிஷேஹம் பண்ண வாங்கிடுவாங்களாம்.டிக்கெட் மூணு நாள் முன்னாடியே புக் ஆயாச்சாம். வெளிநாடுகளில் எல்லாம் நேத்திக்கே பார்த்துட்டு விமரிசனமும் போட்டாச்சாம். அவங்களுக்கு மட்டும் ஏன் ஒரு நாள் முன்னாடி? தெரியலை! ஒரே பட்டாசு சத்தம் காதைத் துளைக்குது! தினசரிகளிலே மக்கள் கூட்டமாக நின்று கொண்டு டிக்கெட் வாங்கக் காத்திருப்பது பத்திப் படங்கள் வந்திருக்கின்றன. இது கடலூரின் நிலவரமாம். மத்த இடங்களைப் பத்திக் கேட்கவே வேண்டாம்!
முண்டி அடிச்சுட்டுப் போய் டிக்கெட் வாங்கினவங்க முகம் ஏதோ அவார்டு வாங்கிட்டாப்போல் ஜொலிப்பு! டிக்கெட் விலை ஒரு உதாரணத்துக்கு மேலே போட்டிருக்கும் படத்தைப் பாருங்க! நம்மால் எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாத விலை ஏற்றம். ஆனாலும் நம்ம மக்கள் இதுக்கெல்லாம் கவலைப்படலை! அலுவலகத்துக்கே விடுமுறை விட வைச்சுட்டாங்க இல்ல! நாங்க யாரு! தமிழர்களாச்சே! இதுக்கெல்லாம் கவலைப்படாம டிக்கெட் வாங்கி அதோடு கூடக் கொடுக்கும் இலவசங்களை ஏதோ நிஜம்மாவே இலவசம் கொடுத்துட்டாப்போல் சந்தோஷமா அனுபவிச்சுட்டுத் தலைவர் படத்தையும் பார்த்துடுவோமுல்ல! விடுவோமா? ஜென்மம் அப்போத் தானே சாபல்யம் அடையும்!
ஆனால் பால் தொழிலாளர்கள் அதே விலைக்குப் பால் கொள்முதல் பண்ணாதீங்கனு விலை ஏத்திக் கொடுக்கச் சொல்லிக் கேட்டு அரசும் விலை ஏத்திக் கொடுத்துட்டு அந்த வித்தியாசத்தைச் சமன் செய்யப் பால் விலையை ஏற்றினால் மறியல் செய்வோம். அந்த விலை வித்தியாசத்தை அரசே ஏற்கணும்னு கட்டாயப்படுத்துவோம். மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் கொடி பிடிப்போம். இலவச மின்சாரம் வேணும்னு கேட்போம். அல்லது விலையைக் குறையுங்க அப்போத் தான் வாக்களிப்போம்னு சொல்லுவோம். இதெல்லாம் விலை ஏத்தினால் அந்தப் பணம் மின் வாரிய ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மின்வாரியத்தின் பராமரிப்பு உட்பட அந்தச் செலவுக்குத் தானே போகும் என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். எல்லாச் செலவையும் அரசே ஏற்கணும்.
பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தக் கூடாது! உயர்த்தினால் நாங்க எப்படிச் சமாளிப்போம்! ஏற்கெனவே பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வுனு இருக்கிறச்சே பேருந்துக் கட்டணம் மட்டும் உயரணுமா? கூடாது! கூடவே கூடாது! பேருந்துகளைப் பராமரிக்கப் பணம் இல்லையா? அரசு கடன் வாங்கிப் பராமரிக்கட்டும். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியலையா? அரசு கடன் வாங்கட்டும்! நமக்கு என்ன அதனால்? நம்மால் எல்லாம் பேருந்துக் கட்டண உயர்வைத் தாங்க முடியாது! நமக்குத் தேவை என்றென்றும் இலவசம் மட்டுமே!
இலவச அரிசி, இலவசப் பருப்பு, இலவச எண்ணெய், இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மிக்சி, கிரைண்டர்னு எது கொடுத்தாலும் அரசு இலவசமாகக் கொடுக்கட்டும். நாங்க எங்க பணத்திலே கபாலி மாதிரிப் படங்கள் பார்க்கச் செலவு செய்யணுமே! இந்த அத்தியாவசியப் பொருட்களை எல்லாம் மடையன் மாதிரி நாங்க காசு கொடுத்து வாங்கிச் சாப்பிடவா முடியும்? அதெல்லாம் நடக்காது! ஹஹஹஹா, எங்களை என்னனு நினைச்சீங்க! வேணும்னா மூடின டாஸ்மாக் கடைகளைத் திறந்து கொள்ளுங்கள்னு சொன்னாலும் சொல்வோமே தவிர நாங்க எங்களோட கடமைகளை எங்களால் சமாளித்துக் கொள்ள முடியும் என்று நினைக்கவே மாட்டோம். அரசே எல்லாம் பார்த்துக்கணும். எங்க கிராமத்தில் உள்ள குளம், நீர் நிலைகள் தூர் வாருவதென்றால் கூட அரசு தான் வரணும். நாங்க எதுவும் செய்ய மாட்டோம்! எங்களுக்கு என்ன வந்தது? இது கூடச் செய்யலைனா அது என்ன அரசு? அப்புறமா எதுக்கு ஓட்டுப் போட்டிருக்கோம்!
எங்களுக்குத் திரைப்படம் முக்கியம். அதுவும் தலைவர் படம் முக்கியம். இப்போப் பாருங்க உலகமே அதிருதுல்ல தலைவர் படத்தாலே! எல்லா நாடுகளிலும் வெளியிடறாங்க இல்ல! அந்தப் படத்தை முதல் காட்சி முதல்நாள் பார்ப்பதே எங்கள் தலையாய கடமை! அதுக்காக நாங்க வேலைக்குக் கூடப்போக மாட்டோம். அலுவலகத்துக்கு விடுமுறை கொடுத்துவிட்டு நாங்க படத்தைப் பார்க்கப்போவோம்! யார் கேட்பது? நம்ம ரசிகர்கள் இப்படினு தெரிஞ்சா தலைவருக்கு ஏற்படக் கூடிய சந்தோஷம் பெரிசா? நம்ம வேலை பெரிசா? லீவு எடுத்துட்டாவது பார்த்துட்டுத் தான் மறுவேலை. அதனால் எந்த வேலை எக்கேடு கெட்டால் நமக்கென்ன?
ஆனால் பெட்ரோல், டீசல் விலை ஏத்தினால் குறை சொல்வோம். அந்த விலை ஏற்றத்தை நம்மால் பொறுக்க முடியாது. பெட்ரோல், டீசல் எல்லாம் விலை எப்போவுமே குறைந்திருக்கணும் என்பதே நம் எண்ணம். அதனால் ஏற்படும் நஷ்டத்தை அரசு தான் தாங்கிக்கணும். வரி எல்லாம் போட்டால் எப்பூடி? மத்த நாடுகளிலே போட்டாங்கன்னா நாமளுமா போடறது! நல்ல தரமான சாலையை அமைக்க வேண்டியது மட்டுமே அரசின் கடமை! அதுக்காகச் சுங்க வரியெல்லாம் வசூலிச்சா எப்படி? அரசுக்கு வருமானம் வந்தா வரட்டும்; வராட்டாப் போகட்டும்! நமக்கு வரி விதிக்காமல் இருந்தால் போதும்! விலைவாசியை ஏத்தாமல் இருந்தால் போதும். அடுத்த தலைவர் படம் எப்போனு சொல்லுங்க! இப்போவே முன் பதிவு பண்ணிடுவோம்!
ஹா.... ஹா.... ஹா....
ReplyDeleteஅடுத்த படமும் தாணு தயாரிப்பில் இருந்தால்தான் இப்படி வெறுப்பேற்றும் அளவு விளம்பரம் இருக்கும்!
hihihi முந்தைய பதிவுக்குப் பார்வையாளர்கள் இருந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இதுக்குக் கொஞ்சம் பரவாயில்லை ரகம். ஆனாலும் நாங்க விடுவோமா என்ன? :) ஒரு வழி பண்ணிட மாட்டோமா!!!! :)
Deleteஎன்னங்க நீங்க வேற........... இந்தப் படத்துக்கு வரிவிலக்குகூட கொடுத்துருச்சே அரசு! அதை கவனிக்கலையா!!!!
ReplyDeleteஹூம், தெரியலை! தெரிஞ்சிருந்தாச் சொல்லி இருப்பேன்!
Deleteநேற்று எனது அறையில் அனைத்து நண்பர்களும் போய் பார்த்து விட்டு வந்து விட்டார்கள் நான் மட்டுமே அறையில் இருந்தேன்
ReplyDeleteஅவர்களது பார்வையில் நான் அரை கிறுக்கன் இதுதான் தமிழன்.
அதனால் என்ன பரவாயில்லை! :)
Deleteநானும் இங்கே போலாம்னு நினைச்சு முடிவு பண்ணிட்டு(25$ பொதுவா 10-15$) அப்புறம் சாயி பஜன் போய்ட்டேன்.. :)
ReplyDeleteஅட!!!!! நிஜம்மாவா?
Deleteஇந்த கட்டுரையில் வினாக்களுக்கு விடை உள்ளது. கொஞ்சம் பொறுமை தேவை.
ReplyDeletehttp://www.jeyamohan.in/89127
--
Jayakumar
ஜெயமோகனா? பொறுமையாப் படிக்கணும். சாப்பாட்டுக்கடை முடிஞ்சதும் படிக்கிறேன். :)
Deleteபடிச்சேன். அவர் பார்வையில் அவர் சொல்வது சரியாக இருக்கலாம். :)
Deleteமுகநூலில் கூட நண்பர் ஒருவர் இதே மாதிரியான பதிலைத் தான் சொல்கிறார். ஆகவே இதைக் குறித்துச் சொல்வதற்கு ஏதும் இல்லை! மக்கள் மனோபாவம் முக்கியமான விஷயங்களில் செல்வதில்லை! கேளிக்கைகளிலேயே ஈடுபடுகிறது! அதிலாவது தங்கள் பிரச்னைகளை மறக்கப் பார்க்கிறார்களோ என்னமோ! :(
Deleteஉங்களிடம் ஒரு சின்ன கேள்வி.
ReplyDeleteசமையல் காஸ் மானியத்தை நீங்கள் வீட்டுக் கொடுத்து விட்டீர்களா?
ஜெயகுமார்
பதில் கொஞ்சம் பெரிசா இருக்குமே, பரவாயில்லையா? எங்களோட மொத்த வருமானமே பென்ஷன் மற்றும்சேமிப்பிலிருந்து வரும் வட்டி உள்பட ஐந்து லக்ஷத்துக்கும் குறைவு தான்! எங்களோட செலவும் அத்தியாவசியச் செலவுகள் மட்டுமே! செல்ஃபோன் எல்லாம் அவசரத் தேவைக்குத் தான்! கணினியும் கணக்காகத் தான் பயன்பாட்டில் இருக்கும்! மருத்துவச் செலவு மட்டும் அதிகம்! தவிர்க்க முடியலை. மற்றபடி சாப்பாடுச் செலவு, இன்ன பிற செலவுகள் எல்லாம் கட்டுக்குள்ளேயே வைத்திருப்போம். எதிர்பாராமல் வரும் செலவுகளை இப்படி இருப்பதால் தான் சமாளிக்க முடியும்! முடிகிறது! சினிமாவுக்கெல்லாம் செலவழித்ததே இல்லை! ராஜஸ்தானில் இருந்தவரைக்கும் அங்கே திறந்த வெளி அரங்குகளில் போடும் படங்களைப் பார்த்தது உண்டு. ராணுவத் தணிக்கையில் இருந்ததால் டிக்கெட்டில் கன்செஷன் உண்டு. ராணுவ வீரர்களுக்கு டிக்கெட்டெல்லாம் கிடையாது. உயர் அதிகாரிகள் மட்டத்தில் தான் டிக்கெட் பணம் கொடுத்து வாங்குவோம். அதன் பின்னர் குஜராத்திலும் ராணுவச் சலுகையில் ஓரிரு திரைப்படங்கள் நகரத்துக்குள் அமைந்த தியேட்டர்களில் பார்த்தது உண்டு. அதன் பின்னர் சினிமாவுக்கென நாங்க செலவு செய்ததே இல்லை. வீட்டில் கேபிள் வந்தப்புறமா அதில் வரும் சினிமாக்களையும் தேர்ந்தெடுத்துப் பார்ப்போம். யு.எஸ். போனால் பொழுது போகாமல் அங்கே கனடாவிலிருந்து வரும் ஒரு சானலில் தமிழ்ப் படங்களோ ஹிந்திப் படங்களோ பார்ப்பதுண்டு! தியேட்டரில் போய்ப் பார்த்தது கடைசியில் யு.எஸ்ஸில் சிவாஜி படத்துக்கு! பெண்ணும் மாப்பிள்ளையும் போகவென முன்பதிவு செய்தது. குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவங்க போகலை. டிக்கெட் வீணாகிறதுனு எங்களை வற்புறுத்தி அனுப்பி வைச்சாங்க! அதுவும் ரஜினி படம் தான். இதே போல் அமர்க்களம் எல்லாமும் நடந்தது. படமும் சொதப்பல் தான்! :)
Deleteஅரிசி உந்தா? பப்பு உந்தி!
DeleteClap! Clap! Clap!
ReplyDeleteநன்றி! நன்றி! நன்றி! :)
Deleteம்ம்ம்.... ஆதங்கம்....
ReplyDeleteஒரு சினிமாவுக்கு இத்தனை ஹைப் - வரலாறு காணாத ஹைப்!
ஆமாம், வருத்தமாகவும் இருக்கு. கோபமும் வருது! ஜனங்களின் முட்டாள் தனத்தை நினைத்து! :)
Deleteஉங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானதே. ரொம்பவே ஹைப்...ஜுரம்...ஆனால் அது போல் படத்தில் அவ்வளவு இல்லை..அவரது பழையபடங்களைப் போல் இல்லை..
ReplyDeleteகீதா: நோ craze பார்க்கவில்லை.
புரிதலுக்கு நன்றி! :) நானெல்லாம் பாட்ஷா படமே இன்னும் பார்க்கலைங்கற வர்க்கம்! :) படையப்பா பார்க்கலையானு எல்லோரும் அதிசயமாக் கேட்டாங்க. அதே போல் ஜிவாஜியின் வியட்நாம் வீடு! பார்த்ததில்லைனதும் எல்லோரும் என்னை ம்யூசியத்தில் இருந்து வந்தாற்போல் பார்த்தாங்க! :) இன்று வரை பார்த்ததில்லை. ஆர்வமும் இல்லை!
Deleteஸ்ரீரங்கத்தில் விச் தியேட்டர் மேன் திஸ் கபாலி இஸ் ரன்னிங் .?
ReplyDeleteதிஸ் ஓல்ட் மேன் வான்டஸ் டு ஸீ போத ரங்கநாதா அண்ட் கபாலி.
சுப்பு தாத்தா.
தெரியாதே சு.தா. பொதுவாக இணையம் மூலமாகவே சினிமா விஷயங்கள், சினிமா விமரிசனங்கள் படிக்கிறேன், பார்க்கிறேன். இங்கே எந்த தியேட்டர்னு தெரியாது. குழந்தைகள் இருந்திருந்தால் ஒருவேளை தெரிந்திருக்கலாம். ரங்குவை இப்போது கொஞ்சம் சுலபமாகப் பார்க்கலாம். அநேகமாய்ப் பதினெட்டாம் பெருக்குக்கு இங்கே அம்மாமண்டபத்துக்கு நம்பெருமாள் வருவார். தண்ணீர் விடலை என்பதால் ஒருவேளை ஆடி 28 ஆம் தேதியும் மாறலாம்.
Deleteஇது ஒரு வித்தியாசமான கபாலி விமரிசனம் ஒரு திருப்தி உங்களுக்கு சரியா
ReplyDeleteஇதிலெல்லாம் திருப்தி கிடைக்கும் என்பது உங்கள் அனுமானமாக இருந்தால் அப்படியே இருக்கட்டுமே! நான் எழுதியதன் நோக்கம் புரிந்தவர்களும் இருக்காங்க என்பதே எனக்குப் போதுமானது!
Deleteஅழகான விளம்பர உத்தியைக்கொண்டு பணம் பண்ணுவோர் கூட்டம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.
ReplyDeleteஆமாம், அதிலும் படம் நன்றாக இல்லை என்று சென்னை ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுவதாகத் தொலைக்காட்சிச் செய்தி தெரிவிக்கிறது. :)
Delete"சமையல் காஸ் மானியத்தை நீங்கள் வீட்டுக் கொடுத்து விட்டீர்களா?
ReplyDeleteஜெயகுமார்"--
So long as our ministers are corrupt, I feel it is foolish on the part of honest
citizens, to forego any part of govt subsidy....?
மாலி
இன்று வரை எந்த எம்பியும் அல்லது எந்த மந்திரியும் விட்டுக் கொடுத்ததாக அறிவிப்பு ஏதும் வரவில்லை. வருமான வரிக்கு எப்படிச் சாமானிய மனிதர்களைப் பிடிக்கிறாங்களோ அது போல் இதுக்கும் சாமானியர்கள் தான் அகப்பட்டிருக்கின்றனர். என்ன ஒண்ணு வருமான வரம்பைப் பத்து லக்ஷமாக உயர்த்தி இருப்பது ஒரு ஆறுதல். எங்களைப் போன்றவர்களுக்குப் பிரச்னை இல்லை! :)))))
Deleteசினிமா டிக்கெட்டும் விலை அதிகம் அங்கு விற்கும் பண்டங்களும் விலை அதிகம்! உங்கள் ஆதங்கம் நியாயமானது. மாமனார் இறப்பிற்கும் மற்றைய சடங்குகளுக்கும் கரூர் வந்திருந்தேன். அதனால் இணையம் பக்கம் வர முடியவில்லை! துக்க நிகழ்வுக்கு வந்திருந்தமையால் வரும் தகவலை முன் கூட்டி சொல்லவில்லை! சந்திக்கவும் இயலவில்லை! ஊரில் இருந்து வந்ததும் இணையம் சரிவர வேலை செய்யவில்லை! நிறைய பதிவுகள் வாசிக்க காத்திருக்கிறது! நேரம்தான் போதவில்லை! நன்றி!
ReplyDeleteஇத்தனை ஹைப் தேவையில்லை என்பதுடன் ரஜினி படத்திற்கு பால் அபிஷேகம் பண்ணுவது இன்னும் அசிங்கமாக இருந்தது. உங்களைப் போலத்தான் நானும். சினிமா மோகம் எப்போதுமே கிடையாது. அதனால் இது போன்ற அமளிகளால் பாதிக்கப்படுவதில்லை. எல்லோரும் விழுந்து அடித்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு வருவதை வேடிக்கைப் பார்ப்பேன்.
ReplyDeleteஉங்களின் ஆதங்கம் எனக்கும் உண்டு.
சராசரி தமிழனின் எண்ண ஓட்டத்தை இப்படியா போட்டு உடைப்பது!
ReplyDelete