எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 28, 2016

இன்னிக்குப் பொழுதுக்கு ஒரு மொக்கை!

முகநூலில் நண்பர் ஜெயராமன் ரகுநாதன் என்பவர் அடிக்கடி டாக்டர் வைகுண்டம் என்பவரைப் பற்றி எழுதுகிறார். அதைப் படிக்கையில் எல்லாம் என்னோட சின்னமனூர் சித்தப்பாவின் நினைவு வருது! அவரும் இப்படித் தான் ஏழைப்பங்காளர்! இவரைப் பற்றி ஒவ்வொரு வருடமும் அவரோட நினைவு நாளன்று நந்தன் ஶ்ரீதரன் என்பவர் எழுதிக் கொண்டு இருக்கிறார். அவரும் சின்னமனூர் போலிருக்கு. எனக்குப் பல வருடங்கள் வரை அதாவது ஏழு, எட்டு வயசு வரைக்கும் ஆயுர்வேத வைத்தியம் தான்! மேலமாசி வீதியில் மேலக் கோபுர வாசலில் இருந்து திரும்பியதும் வரும் அவர் இருந்த அந்த வீடு. பக்கத்திலேயே ஒரு சீன பல் மருத்துவரும் இருந்தார். அவர் பையர் எங்க அப்பா வேலை பார்த்த சேதுபதி பள்ளியில் தான் படித்தார். சீனப் போர் வந்த சமயம் அவங்க வீட்டு வாசலில் சின்னச் சின்னப் பசங்க ஒரே கூட்டமாகக் கூடிக் கொண்டு சீனாக்காரன் ஒழிக என்பார்கள். அந்தப் பையருக்கும் அந்த மருத்துவருக்கும் சிரிப்பு வரும். ஆனாலும் யாரையும் கடிந்து எதுவும் சொன்னது இல்லை. எங்கேயோ போயிட்டேனே! எனக்கு உடம்பு சரியில்லைனா  அந்த மலையாளி மருத்துவர் சூரணம், பொடி, லேகியம், கஷாயம் எனக் கொடுப்பார். சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லுவார். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். மறுப்பே இல்லாமல் சாப்பிட்டுடுவேன்.

அந்தச் சூரணம் சாப்பிடவென்று எங்க வீட்டில் ஓர் வெண்கலப் பாலாடை உண்டு. ராசியான பாலாடை! கஷாயமும் அதில் ஊற்றித் தான் குடிப்போம். சூரணங்களையும் அதில் போட்டுத் தான் தேன் ஊற்றிக் குழைத்துக் கொண்டு சாப்பிடுவோம். இதை எல்லாம் நக்கிச் சாப்பிட வேண்டும் என்பார்கள். கடைசியில் பாலாடையில் கொஞ்சம் மருந்து இருக்குனு  பெயர் பண்ணிக் கொண்டு மேலும் தேன் ஊற்றிக் கொண்டு தேனை நக்குவதும் உண்டு. உடம்பு சரியில்லைனால் அப்போத் தான் பன் வாங்கித் தருவாங்க. இந்த ப்ரெட் எல்லாம் அப்போத் தெரியாது. பன் தான் தெரியும். பன்னை வாங்கிக் கொண்டு பாலில் தோய்த்துக் கொண்டு சாப்பிடுவோம். உடம்பு சரியானதும் மலையாளி மருத்துவர் ரெண்டு இட்லி! என்பார். கோபமாக வரும். ரெண்டு இட்லியெல்லாம் எப்படிப் போதும்! தயிர் சேர்க்கலாமா என்று கேட்டுப்பேன். ம்ஹூம், சர்க்கரையோடு சாப்பிடணும் என்பார். எங்க வீட்டில் சர்க்கரை எல்லாம் கட்டுப்பாடுடன் பயன்படுத்தி வந்ததால் இட்லிக்குச் சர்க்கரை என்றதும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். பாதி இட்லிக்கே போட்ட சர்க்கரை போதலைனு திரும்பவும் கேட்கலாமே!

அதுக்கப்புறமா எனக்கு ஒரு முறை ஜன்னி வந்து ஆட்டம், பாட்டம், ஓட்டம்னு இருந்தப்போ மலையாளி மருத்துவர் வீட்டுக்கே வந்து பார்த்துட்டுக் கை விரிச்சுட்டுப் போயிட்டாராம். அப்போத் தான் எங்க பெரியப்பா பையர் அவங்க வீட்டு மருத்துவரைச் சின்னச் சொக்கிகுளம் சென்று அழைத்து வந்தார். அப்போதிருந்து எனக்கும் ஆங்கில மருத்துவம் அறிமுகம் ஆனது. அடிக்கடி உடம்பு வருமா! அந்த மருத்துவர் மாத்திரை சாப்பிடச் சாக்லேட் கொடுப்பார். சாக்லேட் என்றால் அப்போல்லாம் முக்கால்வாசி ஆரஞ்சு மிட்டாய் தான். எப்போவானும் பேப்பரில் சுற்றிய சாக்லேட் கிடைக்கும். அதுவே பெரிய பரிசை வென்று விட்டாற்போல் இருக்கும். இப்படியாகத் தானே என்னுடைய உடல் மெல்ல மெல்ல ஆங்கில மருத்துவத்தை ஏற்கத் தொடங்கியது.

 இரண்டு மூன்று நாட்களாக இணையம் பக்கமே வர முடியலை. நேத்திக்கு மாமனாரின் சிராத்தம். முந்தாநாள் அதற்கான பூர்வாங்க வேலைகளும், நேற்று சிராத்த வேலைகளும் இருந்தன. இன்று உறவினர் வருகை. இப்போத் தான் நான்கு மணிக்குப் போனாங்க. இதுக்கு நடுவில் ஒரு கதை ஒண்ணு மனசில் முகிழ்த்திருக்கிறது. ஒரு நிஜ சம்பவம்! அந்த சம்பவத்தின் நிகழ்வைக் குறித்த ஒரு உறவினரின் விமரிசனம்!  அதை ஒட்டித் தோன்றியது! யார் கண்டா! உங்களை எல்லாம் பயமுறுத்தினாலும் பயமுறுத்தலாம். நான் மூணு நாளா வரலைனாலும் இந்த வலைப்பக்கம் பார்வையாளர்கள் நிறையவே வந்துட்டுப் போயிருக்காங்க. புது மொக்கை இருக்கானு பார்த்திருப்பாங்க போல!  அப்புறமா சாவகாசமா வரேன். :)

17 comments:

 1. naanum attendee listla :)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, ஆஜர் போட்டாச்சு! :)

   Delete
 2. எங்கள் ஊரில் ஒரு வைத்தியர் இருந்தார் கைராசியானவர் அவர் நினைவை கொண்டு வந்தது தங்களது பதிவு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஊருக்கு ஊர் இப்படி யாரானும் இருந்திருக்காங்க!

   Delete
 3. எனக்கும் என்னுடைய கூடப் பிறந்தவர்களுக்கும் எங்கள் அம்மா கை/சித்த வைத்தியம் தான். இந்த வைத்திய முறை நான் 10 ஆவது படிக்கும் வரை இருந்தது.தலைவலி என்றால் வெற்றிலையில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் மென்தால் கொஞ்சம் கற்பூரம் கொஞ்சம் யூகலிப்டஸ் எண்ணெய் கொஞ்சம் எடுத்து எறியும் விளக்கில் வாட்டி தடவினால் போய் விடும். வாந்தி என்றால் மயிலிறகு எடுத்து அதன் வெள்ளை பாகம் மட்டும் விளக்கில் சுட்டு எரித்து தேனில் குழைத்து சாப்பிட வாந்தி நிற்கும். ஒற்றைத் தலைவலிக்கு மான்கொம்பு இழைத்து பற்றுப் போடுவார்கள். வயிற்றுக்கு கடுப்பு அல்லது சீதபேதி என்றால் வெந்தயக்களி கிண்டி கொடுப்பார்கள் அல்லது மாங்கொட்டைப் பருப்பு எடுத்து பொடி ​​செய்து தேனில் குழைத்துக் கொடுப்பார்கள். காய்ச்சல் என்றால் லிங்க கட்டு பூர கட்டு என்ற இரு கட்டிகளை ஒரே ஒரு இழை இழைத்து தேனில் குழைத்து நாக்கில் தடவி விடுவார்கள். வயற்றால் போடுறது என்றால் சுடுகஞ்சியில் உப்புடன் நெய் விட்டு கொடுப்பார்கள் அல்லது கயோலின் என்ற களிமண் தண்ணீரில் கலந்து சாப்பிடுவதும் உண்டு. வயறு வலிக்கு ஆப்ப சோடா ஒரு சிட்டிகை தண்ணீரில் கரைத்து குடித்து விடுவோம். இன்னும் நிறைய வைத்திய முறை உண்டு. எல்லாம் எழுத முடியவில்லை.

  ஞாயிறு அன்று விளக்கெண்ணெய் பேதி வைத்தியமும் உண்டு.

  --
  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டிலும் இந்த வைத்திய முறைகள் எல்லாம் 88 ஆம் வருடம் வரை கடைப்பிடிக்கப்பட்டன. அதுக்கப்புறமா மெல்ல மெல்ல மறைந்தே போனது. எனினும் இன்னமும் சுக்குக் கஷாயம், சீரகக் கஷாயம், வெந்தயக் களி, விளக்கெண்ணெய் சாப்பிடுதல் போன்றவை உண்டு. மாங்கொட்டைப் பருப்புப் போட்டு அரைத்துக் குழம்பு வைக்கிறோம் இப்போவும்!

   Delete
 4. சின்னச் சொக்கிக்குளம் என்றால் வடமலையான் ஆஸ்பத்திரி! மலரும் நினைவுகள் என்றுமே மனதுக்கு இனியவை!

  ReplyDelete
  Replies
  1. இந்த வடமலையான் எல்லாம் அப்போத் தெரியாது! :)

   Delete
 5. இத்தனை ஸ்வாரஸ்யமாக மொக்கை போட முடியுமா

  ReplyDelete
  Replies
  1. அப்படீங்கறீங்க? நன்றி. இன்னும் எழுதி இருந்தேன். அப்புறமா பப்ளிஷ் பண்ணறச்சே நீக்கிட்டேன். :)

   Delete
 6. எப்படி தலைப்பும் விஷயமும் இல்லாமல் பதிவெழுதுவது என்பதை உங்களிடம் கற்றுக் கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தலைப்புக் கொடுத்திருக்கேனே! விஷயமும் இருக்கிறது என்பதைப் பின்னூட்டங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாமே! :)

   Delete
 7. அந்த பன் உச்சியில் ஒரு உலர்ந்த திராட்சை அமுக்கி வைத்திருப்பார்கள்.சரி தானே?
  இப்போது அந்த பாலாடை எங்கே அக்கா?

  ReplyDelete
  Replies
  1. அதே, அதே! அதை மறந்திருக்கேன்! அந்த திராக்ஷையைப் பிச்சுத் தின்னுட்டு வருவான் சிலசமயம் என் தம்பி! :) அதுக்காக ஒரு குருக்ஷேத்திர யுத்தமே நடந்திருக்கே! ஹிஹிஹி!

   பாலாடை என்ன ஆச்சுனு தெரியலை. அப்பா அதிலே தான் மருந்து சாப்பிட்டுட்டு இருந்தார். அப்பா போனப்புறமா அதுவும் காணாமல் போயிடுச்சு! :( அண்ணா வீட்டை இடிச்சுக் கட்டினதிலே பல பொருட்கள் காணாமல் போனதிலே இதுவும் ஒண்ணா இருக்கலாம். :)

   Delete
 8. திரு ஜயக்குமார் சொல்லி இருக்கும் அத்தனை வைத்தியமும் அம்மாவும் செய்வார்.
  இப்படி ஒரு மதுரைப் பரனம்பரையே இருந்ததோ. விளக்கெண்ணெயும் மாதத்தில் ஒரு ஞாயிறு உண்டு. கதி கலங்க வைக்கும்.
  பிரகாசமான மொக்கை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், எங்க வீட்டிலும் இம்மாதிரி வைத்தியங்கள் இருந்தது. என் தம்பிக்கு மாந்தம் வந்தபோது வேப்பெண்ணெய் கொடுத்துத் தான் ஒரு கிழவி காப்பாற்றினாள். அதன் பின்னர் தான் மருத்துவரே அழைத்து வரப் பட்டார்.

   Delete
 9. இந்த மாதிரி வைத்தியங்கள் பலவும் அம்மா, அத்தைப்பாட்டி, பெரியம்மா கைகளால் செய்து தர சாப்பிட்டிருக்கிறேன்..... அந்த நினைவுகள் இப்போது மனதில்!

  ReplyDelete