எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 02, 2016

காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்?

காதல் என்றால் என்ன? ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையில் ஏற்படும் விவரித்துச் சொல்ல முடியாத ஓர் உணர்வா? அந்தப் பெண் கிடைத்தால் தான் தன் வாழ்க்கையில் திருப்தி ஏற்படும் என்று ஓர் ஆண் மட்டும் உணரும் உணர்வா? ஆணின் மனதில் இத்தகைய ஓர் உணர்வு ஏற்பட்டால் அதன் பிரதிபலிப்புப் பெண்ணின் மனதிலும் ஏற்பட வேண்டாமா? அப்படிப் பெண்ணுக்கு ஏற்படவில்லை என்றாலும் அந்தப் பெண் தன்னை ஒரு தலையாகக் காதலிப்பவனை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமா?

இப்போதெல்லாம் அப்படித் தான் நினைக்கிறார்களோ என்று  தோன்றுகிறது. கரூரில், தூத்துக்குடியில், பாண்டிச்சேரியில், சென்னை நுங்கம்பாக்கத்தில், சேலம் சின்னப் பிள்ளையில் எனப் பல ஊர்களிலும் இதனால் தாக்கப்பட்ட பெண்களை நினைக்கையில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்ன? பெண்ணின் மனது தெரியாமல், புரியாமல் காதலை வளர்த்துக் கொண்டு பெண் மறுத்தால் உடனே அவளைக் கொல்வது தான் காதலா? அதனால் அந்த வாலிபனுக்குக் கிடைக்கப் போவது என்ன? 

தடுக்க வந்தவர்களையும் தாக்கியதன் மூலம் அவன் எப்படிப்பட்ட வெறியில் இருந்திருக்கிறான்! :( பள்ளியில், கல்லூரியில், தேவாலயத்தில் என்று பெண்கள் அவரவர் வேலையில் மூழ்கி இருக்கையில் எதிர்பாராமல் வந்து தாக்கிக் கொன்று விடுகின்றனர். இதற்குத் திரைப்படங்களும், சின்னத்திரைத் தொடர்களுமே முக்கியக் காரணம். இதைக் குறித்துப் பலமுறை சொல்லி ஆகிவிட்டது. எழுதியும் ஆயிற்று. பெற்றோரின் வளர்ப்புச் சரியாக இல்லை. அவர்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதை ஏதோ அவர்களுக்குச் செய்யும் அநீதியாக நினைக்கிறார்கள். இதனால் பாழாவது இரு குடும்பங்களின் எதிர்காலமே! சம்பந்தப் பட்ட பெண்ணின் குடும்பமும், பையரின் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சமூகத்தில் அவர்களால் வழக்கம் போல் இயங்க முடிவதில்லை.

ஒரு தலைமுறையே இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நேரம்! செய்தே ஆகவேண்டும். முக்கியமாய்ப் பெற்றோருக்கு! 

43 comments:

  1. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. தற்போதைய சீரியல்கள் இளம் பெண்கள் ஆண்கள் மனதை மட்டும் அல்ல, பெற்றோர்கள் மனதையும் கெடுத்து இருக்கிறது என்பது உண்மை.

    மாலை 6 முதல் 12 வரை வரும் சீரியல்களில் நாம் பார்ப்பது எல்லாம் மாறி மாறி அந்த சீரியல்களில் வரும் பாத்திரங்கள்
    ஒன்று குடிக்கிறார்கள், அதி போதையில் உளறுகிறார் .
    விபத்தில் மாட்டி ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்.
    ஒருவரை ஒருவர் காரணம் இல்லாது அல்லது பொய் காரணங்களுக்காக,
    ஏமாற்றுகிறார்கள். ஏமாந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

    ஒரு சீரியலில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தலைப்பு.

    நடப்பது எல்லாமே அபத்தமாக தோன்றுகிறது. கதையில் எந்த விதமான லாஜிக் இல்லை. மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவதும் சண்டை போடுவதும் விரக்தி யாக குடிப்பதும் ஆஸ்பத்திரியில் ஐ சி யூவில் கிடப்பதும் மாறி மாறி வருகிறது.

    அது மட்டுமல்ல, சொல்வதெல்லாம் உண்மை என்று ஒரு ரியாலிட்டி ஷோ . அதில் நடப்பது போல் தான் உலகமே நடக்கிறது என்ற ஒரு பிரமையை ஏற்படுத்து கிறது.
    உலகத்தில் நல்லவர்களே இல்லையா என்ற எண்ணத்தை உண்டு பண்ணுகிறது.
    இந்த மாதிரி சீரியல்களுக்கு தடை போடவேண்டும்

    அது இருக்கக்கட்டும்.
    //பெற்றோரின் வளர்ப்புச் சரியாக இல்லை. //

    ச் " ஒற்றுப்பிழை.

    இதே போல் பெற்றோருக்கும் குழநதைக்கும் ஒற்றுமை இல்லை.

    நடுவில் பிழை வந்துவிட்டது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. //ச் " ஒற்றுப்பிழை. //

      ம்ம்ம்ம்ம்? தெரியலை. ஆனால் நான் "ச" என்பதை தஞ்சைப் பக்கம் "ஸ" என்று உச்சரிக்கிறாற்போல் சொல்ல மாட்டேன். சொன்னார்கள் என்பதை என் புக்ககத்தில் "ஸொன்னார்கள்" என்று உச்சரிப்பாங்க. நான் (ச்)சொன்னார்கள், சரி இல்லை என்றே சொல்வேன். "ஸரியாக" இல்லை என்று உச்சரித்தால் ஒருவேளை ஒற்றுப் பிழையாக இருக்கலாமோ! தெரியலை சு.தா. இலக்கண அறிஞர்கள் தான் சொல்லணும். :)

      Delete
    2. பெற்றோரின் வளர்ப்புச் சரியாக இல்லை. //

      பெற்றோரின் வளர்ப்பு == subject.
      சரியாக இல்லை = predicate.

      "ச்" வராது.

      அதைத்தான் ஒற்றுப்பிழை என்று சொன்னேன்.

      தமிழ் இலக்கண வல்லுநர் பெருமக்களிடம் தான் கேட்கவேண்டும் என்று இல்லை.

      9ம் வகுப்பிலே எனக்கு சொல்லிக்கொடுத்த நன்னூல் எழுத்து அதிகாரத்தில் மேல் விளக்கம் காணலாம்.

      சுப்பு தாத்தா.

      Delete
    3. ஹிஹிஹி, சு.தா. எனக்குத் தமிழ் மட்டுமில்லை எந்த மொழியிலும் இலக்கணமே தெரியாது! நன்னூல் எழுத்து அதிகாரமெல்லாம் ஒன்பதாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்தாங்களா? எங்கே? எனக்குச் சாதாரணமான வழக்கமாய்ப் பேசும்போது வரும் இலக்கணங்கள் தவிர மற்றது படிக்கக் கொடுத்து வைக்கலை! தமிழை வெறும் மொழியாக மட்டுமே படிச்சது தான் காரணம். தமிழ் prose மட்டும் தான் பாடப் புத்தகம்! :( தமிழ் இரண்டாம் தாள் நான் படிச்ச கோர்ஸிலே கிடையாது! :( ஆகவே நான் இலக்கணத்தில் ரொம்பவே மோசம்! :(

      Delete
    4. நான் (ச்)சொன்னார்கள், சரி இல்லை என்றே சொல்வேன்./ அதான் வளர்ப்பு சரி இல்லை!

      Delete
    5. ஓகே, ஓகே, தம்பி, எனக்கு இலக்கணம் தெரியாதுனு சொல்லிட்டேனே! :)

      Delete
  3. ஒவ்வொரு செய்தியும் படிக்கும்போது மனதில் வலி.... விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை.

    ReplyDelete
    Replies
    1. முக்கியமாய் ஆண் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆண் என்பதால் கொடுக்கும் அதீத சுதந்திரம். அது கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதுவும் ஒற்றை ஆண் பிள்ளை எனில் கேட்கவே வேண்டாம். :(

      Delete
  4. நல்ல பதிவு.
    தினம் செய்திகளை படிக்கும் போது மனம் வேதனைபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இன்னிக்குச் சிறப்புச் செய்தியாகக் காதலிக்க மறுத்த பெண்ணை ஆசிட் ஊற்றிக் கோரமாக மாற்றிடுவேன் என்று மிரட்டியவனுக்குப் பயந்து அந்தப் பெண் விஷம் குடித்து உயிருக்குப் போராடுவதும், இரண்டாம் குழந்தையும் பெண் குழந்தை என்று ஜோசியர் சொன்னதால் மருமகளின் வயிற்றில் ஆசிடை ஊற்றிய அருமையான மாமியாரும் பற்றிய செய்திகள்! என்ன தவம் செய்தோமோ இதை எல்லாம் பார்க்கவும், கேட்கவும்! :(

      Delete
  5. கீதா மேடம்.. நீங்கள் சொல்லியிருக்கும் எந்த உதாரணமும் காதல் கேடகரியில் வருவதாகத் தெரியவில்லையே. ஆசைக்கும் காதலுக்கும் வித்யாசம் உண்டல்லவா? ஆசையில்தான் நியாயமான ஆசை, நியாயமில்லாத ஆசை, ஏற்றுக்கொள்ள இயலாத, அதாவது அநீதியான ஆசை என்றெல்லாம் உண்டு. காதலில் மானுட தெய்வீக்க் காதல் என்றுதான் உண்டு.

    வலைபோட்டுப் பிடித்துவா என்று encourage பண்ணும் குடும்பங்களை விட்டுவிடலாம். ஆணுக்கு நண்பர்களோடு பேசும் சுதந்திரமும் ஆறு ஆறரைக்கு வந்தால் பழுதில்லை என்ற சுதந்திரமும் மட்டும்தான் பெண்களை விட பெற்றோர் கொடுக்கும் சுதந்திரம்.

    இலக்கண அறிஞன் இல்லை. வளர்ப்பு சரியில்லை என்பதே சரி.

    சுப்ப தாத்தா - நான் வெறுப்பது சீரியல் பார்ப்பதை. இதுக்கு சிரிப்பொலியோ ஆதித்யாவோ மொக்கைப் படங்களோ பார்க்கலாம். மற்றவர்களை observe செய்தத்திலிருந்து, சீரியல்கள் addiction create பண்ணுகின்றன, எதிர்மறை எண்ணங்களைக் குடும்ப உறுப்பினர்களுக்குத் தோற்றுவிக்கின்றன. காசு செலவழித்து, நேரம் செலவழித்து கருமத்தை விலைக்கு வாங்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. காதல் கேடகரியில் வருது என்று நான் சொல்லலை. அந்தப் பையர்கள் அப்படித் தானே நினைச்சுக்கிறாங்க. அதைத் தான் சொல்லி இருக்கேன். இவங்களுக்கு வெறும் உடல் மீது தான் ஆசை! அந்த ஆசை தீர்ந்தது எனில் அப்புறம் வேறே மாதிரி மாறுவாங்க! ஆனால் எனக்குக் காதல் என்பதன் பொருளே புரியலை! மானுடக் காதலுக்கும், தெய்விகக் காதலுக்கும் என்ன வித்தியாசம்?

      திருஞானசம்பந்தர் கூடக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கினார். இதானே தெய்விகக் காதல்?

      Delete
    2. சரியா பாய்ண்டைப் பிடித்துவிட்டீர்கள். நாயகன் நாயகி பாவத்தில் இறைவனை நினைத்து மனம் உருகுவதோ, காதலில் மிக உயர்ந்த குறிக்கோளைக் கொண்டிருப்பதோ தெய்வீகக் காதல். 'காதலாகிக் கண்ணீர் மல்கி' என்று படித்த உடனேயே, திருஞானசம்பந்தர் பாடுவது ஒலிக்கிறது. உண்மையான காதல், காத்திருக்கத் தயங்காது. காத்திருக்க இயலாதது உண்மையான காதல் அல்ல.

      Delete
    3. அந்த வகையில் உருகி உருகிக் காதலித்தவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். :(

      Delete
  6. பெண்ணின் குடும்பமும், பையரின்//
    பெண்... பையர்...... அநியாயம்! ஆண்களுக்கு மட்டும் மரியாதையா? கற்ற்ற்ற்ற்ற்ற்ற்!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, மரியாதை இல்லைனு சொல்லக் கூடாதுல்ல!

      Delete
  7. சினிமா பாக்காதீங்கன்னு ஒரு காலத்துல சொல்லிண்டு இருந்தேன். இப்ப சீரியல் வந்து சினிமாவேதேவலாம்ன்னு ஆயிடுத்து. சினிமாவாவது 2 - 2 1/2 மணி நேர தாக்கம். சீரியல் தினசரி தாக்கம் நாள் கணக்கா!

    ReplyDelete
    Replies
    1. சீரியலின் தாக்கம் பெண்களிடமே அதிகம் என்று தோன்றுகிறது. இந்த ஆண் பிள்ளைகளிடம் திரைப்படங்களின் ஹீரோக்களின் தாக்கம் அதிகம்! அதிலும் இப்போதெல்லாம் கதாநாயகன் நல்லவனாக இருக்கக் கூடாது என்று சட்டமே போட்டிருக்காங்க போல! துரத்தித் துரத்திப் படிக்காத கதாநாயகன் படித்துக் கொண்டிருக்கும் பெண்ணைக் காதலிப்பான்! சவால் விடுவான்! வகுப்பறையில் புகுந்து காதல் கடிதம் கொடுப்பான். முத்தமிட்டுச் செல்வான்! இப்படி எத்தனையோ! இதை எல்லாம் பார்த்துத் தான் இளைஞர்கள் மனம் தனக்கும் இப்படி நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

      Delete
  8. எங்கே போய் இந்தக் கொடுமையைத் தள்ளுவது.

    ReplyDelete
    Replies
    1. இறந்த பெண்களின் குடும்பங்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது. :( டாஸ்மாக்கும் ஒரு முக்கியக் காரணம்!

      Delete
  9. வளர்ப்பு சரியில்லை என்கிறீர்கள். வார்த்தையே சரியில்லை என்கிறார் தாத்தா!

    இதெல்லாம் காதல் இல்லை. காமம். ஆண்களின் மனதில் வக்கிரம் குடியேறி விட்டது. சினிமாவும், சீரியல்களும், சரியில்லாத வளர்ப்பும், குணக்கேடான நட்பும் எல்லாமே... எல்லாமே காரணம்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, சு.தாவுக்குக் கூரிய பார்வை! :) ம்ம்ம்ம் இந்த ஆண் குழந்தைங்களுக்குப் பெற்றோர் ஏன் இத்தனை அதிக சுதந்திரம் கொடுக்கிறாங்கனு புரியலை! :( ஆறு ஆறரைக்கு வீட்டுக்கு வந்துடும்னு சொல்வதும் நண்பர்களோடு கலந்து பழகுவதும் தான் ஆண்களுக்குக் கிடைக்கும் அதிகப்படி சுதந்திரம்னு நெல்லைத் தமிழன் சொல்றார். ஆனால் இல்லைனு எனக்குத் தோணுது! பெற்றோர் இதுக்கும் மேல் சுதந்திரம் கொடுக்கிறாங்க என்பதோடு அவங்களைக் கண்காணிக்கிறதும் இல்லை.

      Delete
  10. இப்போது பிள்ளைகளிடம் மலர்வது காதல் அல்ல! காமம் சார்ந்த இனக்கவர்ச்சி! அது விபரீதத்தில் முடிகின்றது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வெறும் உடல் சார்ந்த கவர்ச்சியைக் காதல் என்று எண்ணிக் கொள்கின்றனர்.

      Delete
  11. நேற்று எனது வலைதளத்திற்கு வந்து ஒரேமூச்சில் பல பதிவுகளை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஓ, நேரம் கிடைச்சது, வந்தேன். தினம் தினம் மெயிலில் வரும் பதிவுகளுக்கே போக முடியறதில்லை! :(

      Delete
  12. விநாயக சதுர்த்தி பிஸி! ஒரு ரெண்டு மூணு நாள் நானும் மத்தவங்க வலை பக்கம் வருவது கஷ்டமா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வேலை ஆயிடுச்சுன்னா நான் நாளைக்கும் வருவேன். உங்களுக்குக் கோயில் வேலை இருக்குமே!

      Delete
  13. முன்பெல்லாம் பெண்களை சீண்டும் ஆண்களைப் பார்த்து,"நீங்கள் எல்லாம் அக்கா, தங்கச்சிகளோடு பிறக்கலையா"? என்று கேட்பார்கள். இப்போது அப்படியெல்லாம் கேட்க முடியாது. காரணம், பெரும்பாலும் ஒரே பெண் அல்லது ஒரே பையன் என்று சுருங்கி விட்ட குடும்பங்கள். அங்கே தொடங்கும் கோளாறு, தான், தன் சுகம் என்று வளரும் குழந்தைகளுக்கு தான் விரும்புவது தனக்கு கிடைத்தே ஆக வேண்டும் என்னும் பிடிவாதம், ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவனால் அடையப் பட வேண்டிய பொருள் பெண் என்று கற்பிக்கும் சினிமாக்கள், பெண்களுக்கு கொடுக்கப்படும் அளவிற்கு மீறிய சுதந்திரம், கெடுத்து குட்டிச் சுவராக்க செல்போன், பாய் பிரெண்ட் அல்லது கேர்ள் பிரெண்ட் இல்லாமல் இருப்பது அவமானகரமான விஷயம் என்ற நினைப்பை தோற்றுவிக்கும் பியர் பிரஷர், இவைகளும், நம் கலாசாரத்திலும், பழக்கங்களிலும் பெற்றோர்களுக்கே ஈடுபாடு குறைவது இவை எல்லாமே பெண்களுக்கு எதிரான வான் கொடுமைகளுக்கு காரணங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்போதெல்லாம் ஒரே குழந்தை, அது ஆணோ, பெண்ணோ! இதனாலேயே பிரச்னைகள்! படிக்கும்போதே செல்ஃபோன், ஐபாட், பைக் போன்றவை. பாக்கெட் மனி என்னும் பெயரில் செலவழிக்கக் கைநிறையக் காசு! :( ஆனால் இப்படி வளர்ந்த பிள்ளைகளை விட இப்போது தவறு செய்திருக்கும் பையர்களெல்லாம் அடித்தட்டு மக்களிடையே பிறந்து வளர்ந்தவர்களே! அவர்கள் தான் அதிகம் சினிமாவினால் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாக் கதாநாயகனுக்கு நடப்பதெல்லாம் தங்களுக்கும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

      Delete
  14. *வன் கொடுமை என்று வாசிக்கவும்.

    ReplyDelete
  15. இந்தச் செய்திகளைப் படிக்கும்போதே மனது துடித்துப் போய்விடுகிறது. எப்படி வரும் தலைமுறையை மாற்றப்போகிறோம்? உங்களின் ஆதங்கம் தான் எனக்கும்.

    ReplyDelete
    Replies
    1. முடியலை! வர வர நம்பிக்கை குறைந்து கொண்டே வருது. :(

      Delete
  16. ஒரு நாள் வீட்டில் இருக்கவில்லை. அதுதான் வரத்தாமதம் காதல் பற்றிய புரிதலே சரியில்லை காமமும் காதலும் வேறுபட்டவை விதவித மான காரணங்கள் பின்னூட்டங்களில்

    ReplyDelete
    Replies
    1. காதல் என்பது இரு மனங்களிடையே தோன்றும் அன்பின் பிரதிபலிப்பு என்று நான் நினைக்கிறேன். ஆனால் இங்கே காதல் என்பதே இனக்கவர்ச்சியாக மாறி விட்டது.

      Delete

  17. ராமனோ ,சீதையோ வந்தால்கூட அவர்களை எதிர்த்து ராமனாகவோ ,சீதையாகவோ நடித்தவர்கள் election -l ல் நின்றால் , பின்னவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற நிலைக்கு சினிமா 'ஜெய்த்து விட்டதுஎன்பதே 'தவிர்க்க முடியாத உண்மை ..இது தான் காலத்தின் கோலம் ( ?)..

    மாலி

    ReplyDelete
    Replies
    1. சினிமாவின் தாக்கம் மிக அதிகமாகத் தான் இருக்கிறது. அதே சமயம் சினிமாவில் வருவதெல்லாம் உண்மை இல்லை என்னும் பிள்ளைகளும் இருக்கத் தான் செய்கிறார்கள். அதனால் தான் இன்னும் ஓரளவுக்காவது கல்யாணம், குடும்பம் எல்லாம் தாக்குப் பிடிக்கிறது! இல்லைனா காட்டுமிராண்டி போலத் தான் நடந்துக்குவாங்கனு நினைக்கிறேன். :(

      Delete
  18. தேவதாஸ் , மற்றும் 'அன்மோல் கடி ' போன்ற காதல் காவியங்களாக கருதப்பட்ட சினிமா படங்களை பற்றி , ஒரு
    இடத்தில சுஜாதா காதல் என்பது தவிர்க்க பட கூடிய ,தவிர்க்க பட வேண்டிய unnecessary emotional burden என்று குறிப்பிட்டிருந்தார் ..இந்த கருத்தை இளைஞர் -இளைஞி களுக்கு கொண்டு செல்ல தவறிவிட்டோம் ..
    மாலி

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னமோ தேவதாஸ் (அன்மோல் கடி பார்த்ததில்லை) அப்படி ஒண்ணும் உயர்ந்த திரைப்படமாகத் தோன்றியதில்லை! :( காதல் என்பதில் அவ்வளவு ஈடுபாடும் தோன்றவில்லை. எங்க வீட்டில் நிறையக் காதல் திருமணங்கள் அடுத்த தலைமுறையில் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அந்தக் காதலர்கள் எங்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அதோடு இணையத்திலேயும் நெருங்கிப் பழகும் பல நண்பர்கள் தாங்கள் காதல் கல்யாணம் செய்து கொள்வதை என்னிடம் பகிர்ந்ததில்லை. அந்த அளவுக்கு நான் காதலுக்கு விரோதி என்று நினைக்கிறார்கள்! :))))))

      Delete
  19. பகுத்தறிவு பரவலாக வேண்டும் என்பத ற்காக ஒரு சமூக இயக்கமே நடத்தப்பட்ட தமிழ் நாட்டில் , இப்போது "பகுத்தறிவு " ஒரு நடிகனின் cut -out -டிற்கு பாலபிக்ஷேகமும் , கற்பூரம் கட்டுதலும் விமரிசையாக இளைஞர்களால் நடத்தப்படும் நிலையில் இருப்பது,நமது பகுத்தறிவு
    செம்மல்களுக்கு உறைக்காதது விசித்திரம் தான்
    மாலி

    ReplyDelete
    Replies
    1. முதல்லே பகுத்தறிவின் அர்த்தமே இங்கே தப்பாய்ச் சொல்லப்படுகிறது ஐயா! கடவுள் மறுப்பும், பிராமண எதிர்ப்பும் பகுத்தறிவுனு சொல்றாங்க. அது உண்மையான பகுத்தறிவே அல்ல! தனி மனிதத் துதியும் சினிமாக் கதாநாயகர்களைத் தொழுவதும் பகுத்தறிவு என்றாகி விட்டது. :(

      Delete