எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 12, 2016

நாங்களும் திம்போமுல்ல!

சிறு தானிய லாடு

கம்பு, குதிரைவாலி, தினை, சாமை, வரகு,(சோளம் இருந்தால் சோளரவை) அனைத்தும் சேர்த்து சமமாக ஒரு குழிக்கரண்டி போட்டு எடுத்துக் கொள்ளவும். இதற்குச் சமமாக கோதுமை ரவை எடுத்துக் கொள்ளவும். நான் கோதுமை ரவை ஒரு கிண்ணம் (200 கி) எடுத்துக் கொண்டேன். மற்றவை ஒவ்வொரு கரண்டி. எல்லாவற்றையும் நன்கு சிவக்க வறுக்கவும். வறுத்ததை மிக்சி ஜாரில் போட்டுப் பொடிக்கவும். நைசாக இருக்கணும்னா சலிக்கவும். நான் சலிக்கலை. அப்படியே போட்டுட்டேன். ரவையும் இல்லாமல் மாவும் இல்லாமல் கோலப் பொடி பதத்தில் இருக்கும். இதை அளந்து கொண்டு ஒரு கிண்ணம் ரவை மாவு எடுத்துக் கொள்ளவும் ஒன்றரைக்கிண்ணம் சர்க்கரை எடுத்துக்கவும். மிக்சி ஜாரில் சர்க்கரையைப் பொடிக்கவும். பொடிக்கையிலேயே அதிலே ஏலக்காயைச் சேர்க்கவும்.

இப்போது மாவு, சர்க்கரைப் பொடியை ஒன்றாகக் கலந்து வைக்கவும். ஒரு கிண்ணம் நெய் எடுத்துக்கவும். ஒரு வாணலியில் அரை க்கரண்டி நெய்யில் முந்திரிப்பருப்புகளை ஒடித்துப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு கலந்த மாவில் கொட்டி விட்டு, அதே வாணலியில் மிச்சம் நெய்யை ஊற்றவும். நெய்யிலிருந்து புகை வரும் வரை சூடு செய்யவும். அந்தச் சூடு குறையாமல் தேவையான நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக லாடு மாவுக் கலவையில் ஊற்றவும். கொஞ்சம் நெய்யை நிறுத்திக் கொண்டு மாவைக் கரண்டியால் அல்லது இலைக்கரண்டியால் நன்கு கிளறி நெய்யும், மாவும் ஒன்றாகக் கலக்கும்படி கிளறி விடவும். சற்றே இளகின பதத்தில் இருந்தால் மாவு சரியாக வந்திருக்குனு அர்த்தம். ரொம்ப இளகி இருந்தால் எடுத்து வைத்திருக்கும் மாவை இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம். உதிர் உதிராக இருந்தால் நெய்யை இன்னும் கொஞ்சம் ஊற்றிக் கலக்கவும்.

முந்திரிப்பருப்பையும் போட்டு நன்கு கலந்த பின்னர் தனியாக எடுத்து வைக்கவும். நன்கு ஆறட்டும். உருண்டை பிடிக்கலாம். ஒவ்வொருவர் அடுப்பில் நெய்யைக் காய்ச்சிய வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாவில் நெய்யை ஊற்றிக் கொண்டு சுடச் சுடக் கையையும் சுட்டுக் கொண்டு உருட்டுவார்கள். இந்த முறையில் அதெல்லாம் தேவையே இல்லை. நல்லா ஆறிடுச்சுனு தெரிஞ்சதும் உருண்டைகளாக உருட்டவும். நேரம் ஆக ஆக உருண்டை நல்லா கெட்டிப்பட்டு விடும். நேத்திக்கு நெய் கலந்த மாவைப் பார்த்த ரங்க்ஸ் இதென்ன இப்படி இளகி இருக்குனு கிண்டல் பண்ணினார். இன்னிக்கு உருண்டை கெட்டியாக இருக்கு பாருங்க! தைரியமா எப்போ என்ன உருண்டை செய்தாலும் ரவா லாடு, பொட்டுக்கடலை லாடு, கடலைமாவு லாடு, ஜவ்வரிசி லாடு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு கலந்த மாவு லாடு, கோதுமை மாவு லாடுனு எதுவா இருந்தாலும் இம்முறையில் நெய்யைக் காய்ச்சி ஊற்றினால் ஆறியதும் நிதானமா உருண்டைகள் பிடிக்கலாம். சுவையான சத்தான உருண்டைகள்.


17 comments:

 1. நல்லா இருக்கும் போல இருக்கே! செய்து பார்க்கச் சொல்லணும்....

  ReplyDelete
  Replies
  1. நல்லாத் தான் இருக்கு! சாப்பிட்டுப் பாருங்க! :)

   Delete
 2. கடிக்கக் கஷ்டமா இருக்குமா? சுடச்சுட உருண்டை பிடித்தால்தான் வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் இல்லை. பொக்கைவாய்க் கிழங்கள் கூடச் சாப்பிடலாம். உதிர்த்தால் உதிரும்! பிடித்தால் பிடிக்க வரும்! :) சுடச் சுடவெல்லாம் எந்த உருண்டையும்பிடிக்க வேண்டாம். இதையும் ஏற்கெனவே சொல்லி இருக்கேனே! :)

   Delete
 3. குதிரைவாலி, சாமை எல்லாம் நாங்கள் வாங்கியதே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்கிப் பாருங்க. கொஞ்சமா! கால் கிலோவில் ஆரம்பித்துப் பின்னர் கூட வாங்கலாம். (பிடித்தால்) எல்லாவற்றிலும் அரிசிப் பயன்பாட்டைப் போலவே செய்ய முடியும்! சாம்பார் சாதம், எலுமிச்சை, புளி, தேங்காய், தக்காளி சாதங்கள், காய்கறிகள் போட்ட பிரியாணி, எள் சாதம், மசாலா சாதம் என்று பண்ணலாம். கம்பில் அடை நன்றாக இருக்கு. இட்லியும் நன்றாக இருக்கும். நிறம் தான் கொஞ்சம் மங்கல்!

   Delete
  2. இதிலே பார்லியும் ஒரு அரைக்கிண்ணம் போட்டிருக்கேன். அதைச் சொல்ல மறந்துட்டேன் ஶ்ரீராம். :)

   Delete
 4. ஆமாம். இந்த சிறுதானியங்கள் சேர்த்த கஞ்சிதான் குடித்தாகிறது. லட்டு ஸரியாகப் பதம் சொல்லியுள்ளீர்கள். நெய் சூட்டில் சர்க்கரை இளகி பொரிமாவு பிசைந்த மாதிரி இருந்து பிறகு இருகுகிறது. இதே பதம்தான் எல்லா மாவு உருண்டைகளும். நல்ல பகிர்வு. சிறிது பயறும் சேர்த்தால் வறுத்துபொடிக்கும் போது இன்னும் வாஸனையாக இருக்கும். அவியல் மாவு லட்டு என்று நான் விளையாட்டாகச் சொல்வது வழக்கம். வாஸ்தவமாகவே இந்த தானியங்கள் நன்றாகவே இருக்கிறது. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அம்மா, நெய்யை அதிகச் சூட்டில் விடவேண்டும் என்பதும் சர்க்கரை அளவு சரியாக இருக்கணும் என்பதும் தான் இங்கே முக்கியம்! :) தானே இறுகிவிடும். பாசிப்பருப்பைத் தனியாக வறுத்து வெல்லம் போட்டு லாடு பிடிப்பேன். இதிலே போட்டதில்லை. இனி செய்தால் போட்டுப் பார்க்கிறேன், நன்றி அம்மா.

   Delete
 5. புதியதாக செய்து பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை என்மனைவி

  ReplyDelete
 6. ஒரு காலத்தில் மாலாடு (ரவா, பயத்தம்உருண்டை...) எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதன் செய்முறை படித்தபின், ஜீனி, நெய் அளவெல்லாம் தெரிந்தபின் சாப்பிடுவதில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஆசைதான் ஆனால் எடை கூடிவிடுமே என்று பயம். ஆனால் செய்முறை சுலபமாகத்தான் இருக்கு.

  ReplyDelete
 7. ஐயோ அப்போ இவ்ளோ நாள் கையை சுட்டுக்கிட்டது எல்லாம் போச்சா :(

  ReplyDelete
 8. மாலை நேரம். மழை வேறு பெய்கிறது. கிளப்பி விட்டீர்கள் இன்னும் பசியை

  ReplyDelete
 9. உடல் நலனுக்குப் பயனுள்ள பதார்த்தம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 10. படிக்கும்போதே சாப்பிட்ட உணர்வு ஏற்படுகிறது. சாதாரண லட்டைவிட இது உடலுக்கு நல்லது. செய்து பார்த்துவிடுகிறேன்.!

  ReplyDelete
 11. இதே போன்றுதான் செய்து மகனுக்குக் கொடுத்துவிட்டேன். நல்லதொரு ரெசிப்பி க்கா...

  கீதா

  ReplyDelete