தமிழன் தலை நிமிர்ந்து நிற்கும்படியா இருக்கு இன்றைய நிலைமை?
இன்று மஹாகவியின் நினைவு நாள். மஹாகவி மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைத் தான் கொளுத்தச் சொன்னான். ஆனால் இன்றைய இளைஞர்கள் தங்களைக் காதலிக்க ( என்ன அர்த்தம் இதுக்கு) மறுக்கும் பெண்களை வரிசையாய்க் கொன்று கொண்டிருக்கிறார்கள்! இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு நேற்றுப் பிரபலமான தொலைக்காட்சி சானலின் பிரபலமான தொடரில் பள்ளி செல்லும் பெண்ணை ஒருவன் துரத்தித் துரத்திக் காதலிப்பதோடு அந்தப் பெண்ணை, "ஐ லவ் யூ" என்று சொல்லும்படி வற்புறுத்துகிறான். அப்படி அந்தப் பெண் செய்யவில்லை எனில் அவள், அவள் அம்மா, கூட இருக்கும் இன்னொரு பெண்மணி மூவரையும் வீட்டுக்குள் அடைத்துப் போட்டுப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் போவதாகவும் பயமுறுத்துகிறான். அவன் பெரிய இடத்துப் பிள்ளை என்றும் அவன் செல்வாக்கிற்கு யாராலும் ஏதும் செய்ய முடியாது என்றும் பீத்தல், அலட்டல்! இப்போது நாடு அதிலும் முக்கியமாய்த் தமிழ்நாடு இருக்கும் நிலைமையில் இத்தகைய காட்சிகளோ அல்லது வசனங்களோ தேவையா என்றே தோன்றுகிறது!
பதினைந்து வயதிலிருந்து முப்பது வயதுக்குள்ளாகப் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர் பெண்ணின் பாதுகாப்புக்கும் உயிருக்கும் பயப்படுகிறார்கள் எனில், முப்பது வயதும் அதற்கும் மேல் ஆன கல்யாணம் ஆன பெண்களோ கள்ளக் காதலில் ஈடுபட்டுக் கணவனைக் கொலை செய்வது, காதலனைக் கொல்வது, கள்ளக் காதலியைக் கொல்வது என்று ஏதோ கத்திரிக்காய், வாழைக்காயை நறுக்குவது போல் நறுக்கித் தள்ளுகின்றனர். முந்தாநாள் தினசரியில் மனைவி குடிக்கக் காசு தராத காரணத்தால் மனைவியின் கழுத்தை அரிவாளால் வெட்டிவிட்டுத் தலை மறைந்த கணவன் பற்றிய செய்தி! வரவரப் பத்திரிகைகள் முக்கியமாய் தினசரிகள், தொலைக்காட்சிச் செய்திகள்னு பார்க்கவே மனசுக்கு பயமாய் இருக்கிறது. எப்போ மாறும் இந்த நிலைமை?
மஹாகவியின் நினைவு நாளைக் குறித்துச் சொல்ல வந்துட்டு என்ன என்னவோ சொல்லிட்டுப் போறேன். ஆனால் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க விரும்பிய மஹாகவி இன்று உயிருடன் இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பான் என்பது என்னமோ நிச்சயம்.
கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய் பேப்பர் பார்க்காமல் தொல்லை காட்சி பார்க்காமல் கிருஷ்ணா ராமா என்று நாட்களைக் கழித்தால் இந்த பொருமல்கள் இல்லாமல் சந்தோசமாக பதிவுகள் எழுதலாம்.
ReplyDelete
நல்லதையே நினைத்து நல்லதையே செய்தால் நல்லதே வந்து சேரும்.
--
Jayakumar
தொல்லைக் காட்சி பார்க்கணும்னு எல்லாம் இல்லையே! செய்திகள் காதில் வந்து விழுகின்றன. அதோடு தினசரிகள் வேறு! நல்லதை நினைக்காமலா இருப்பாங்க! அல்லது நான் ஒருத்தி தொலைக்காட்சி பார்த்துக் கெட்டதை நினைத்ததால் இதெல்லாம் நடக்கிறதா? நல்லது அனைவருக்கும் வரணும்ங்கற எண்ணத்திலே எழுதப்பட்டது தான் இது! :(
Deleteஉங்கள் வருத்தம் புரிகிறது. வக்கிரபுத்தி அதிகரித்து வருகிறது. பெண்களை போற்றும் நம் நாட்டில் இத்தகைய வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு காரணங்கள் பல. 1. சமுதாயம் அக்கறையில்லாமல் எல்லா இழவுகளையும் ஜீரணித்துக்கொள்கிறது. 2. சட்ட நிர்வாகம் படுத்து விட்டது.3. அரசு பலமும், செல்வ பலமும் எல்லா குற்றங்களுக்கும் உறைவிடமாகி விட்டது. 4. இந்த நிலைக்கு ஆண்களும், பெண்களும் தங்கள் நடத்தையினால் ஆளாகி நிற்கின்றனர்.
ReplyDeleteஇன்னம்பூரான்
ஆமாம், வக்கிரபுத்தியைத் தான் சுட்டிக் காட்டுகிறேன். புரிதலுக்கு நன்றி. எந்த அரசும் எவ்விதமான அக்கறையையும் காட்டுவதில்லை! :(
Deleteநெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்......
ReplyDeleteஎன்ன செய்ய முடியும்? கர்நாடகாவில் தமிழ் இளைஞரை அடித்து நொறுக்குவதைத் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். யாரும் எவ்விதமான கண்டனமோ விருதுகளைத் திருப்பிக் கொடுத்தலோ செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இருக்கும் இடமே தெரியவில்லை! :(
Deleteதொலைக்காட்சிககளுக்கும் சென்ஸார் அவசியம் என்று தெரிகிறது. அவர்களுக்கெல்லாம் தானாக பொறுப்பு வராது என்றும் தெரிகிறது.
ReplyDeleteதொலைக்காட்சிகளுக்கு எப்போவோ சென்சார் செய்திருக்கணும். தொடர் எடுப்பவர்களுக்கு அவங்க தொடர் முன்னணியில் பேசப்படணும் என்பதே ஒரே குறிக்கோள்.
Deleteகாதல் என்கிற ஒன்றை, அதன் அழகை, மென்மையை, மேன்மையை சிறிது சிறிதாகச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டன நமது சினிமாக்களும், டிவி தொடர்களும். அடடா, எத்தகைய உன்னத சமூக சேவை!
ReplyDeleteதனக்குத் தகுதியிருக்கிறதோ இல்லையோ, பளிச்சென்று பார்ப்பதற்கு அழகாயிருக்கிறாள் என்கிற ஒரே பாவத்திற்காக, மென்மையான ஒரு அப்பாவி இளம்பெண்ணைச் செக்குமாடுபோல் தினம் சுற்றிசுற்றிவந்து, அவள் முன் நின்று `` என்னை விரும்புவதாக இப்போது நீ சொல்லப்போகிறாயா இல்லை, இல்லை, உன்னையும் உன்னைச் சார்ந்தோரையும் கொன்றுபோடவா?`` என மிரட்டுவதும், குற்றம், தண்டனை என்கிற பிரக்ஞை ஏதுமின்றி அவ்வாறே நடந்துகொள்வதும் ஒரு ஆணின் மனதின் அதீத வன்மம், வக்கிரம் மட்டுமன்றி அவனைத் தன்னகத்தே கொண்டிருக்கும் சமூகத்தின் சீரழிவைத்தானே காட்டுகிறது? மனநிலை பிறழ்ந்த இத்தகைய ஆண்களின் சிந்தனைப்போக்கிற்கு, நெறியற்ற வாழ்விற்கு யார் காரணம்? வெறுப்பு, குரோதம், வன்மம், வக்கிரம், பழிவாங்கல் போன்ற துர்குணங்களைப் திரையில் பிரகாசப்படுத்திக் காட்டி பணம்பண்ணும், நமது ஜனரஞ்சக சினிமாவும், டிவி சேனல்களும்தானே? இவைதானே காலந்தோறும் இத்தகைய இளைஞர்களைத் தீட்டி, தீட்டி உருவாக்கி குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன? இதற்கு உடன்போகிறவர் அனைவரும் சமூகவிரோதிகள் அல்லாமல் வேறென்ன? பெண்களின் கௌரவமான வாழ்விற்கும், பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் குற்றங்கள், வன்மங்களுக்கு ஆதாரமானவற்றைக் களைந்தெறியாமல் நமது தமிழ்ச் சமூகம், இந்திய சமூகம் உருப்பட வழியுண்டா?
காதலில் இப்போது உடல் சார்ந்த காமம் தவிர வேறொன்றும் இல்லை! :(விருப்பமில்லாத பெண்ணை வலியச் சென்று துன்புறுத்தி அவளை அடைவது வீரம் எனத் திரைப்படங்கள் மூலமாகவும் தொலைக்காட்சி மூலமாகவும் போதிக்கப்பட்டு வருகிறதே!
Deleteசமுதாயம் செல்லும் நிலையைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சமூக ஊடகங்களின் போக்கு சமுதாயத்தை அதிகம் பாதித்துவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ReplyDeleteஎல்லோருமே காரணம். முக்கியமாய்ப் பெற்றோர்! பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை!
Deleteநெஞ்சு பொறுக்குதில்லையே.....
ReplyDeleteபொறுக்கத் தான் முடியலை! :(
Deleteநெஞ்சு பொறுக்குதிலையே.
ReplyDeleteநினைக்கவே கோபமா வருது!.. என்ன செய்ய?.
ReplyDeleteசில ஊர்களில், 15 வயதிலிருந்து 19க்குள்ளாக இருக்கும் பெண்களுக்கு அவசரமாக கல்யாணம் செய்வது அதிகரித்திருக்கிறதாம்!.. இது அவர்களுக்குப் பாதுகாப்பு என்று நினைப்பது சரியா?..
நெஞ்சு பொறுக்குதிலையே! நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....நிலைகெட்ட தொலைக்காட்சித் தொடர்களை நினைத்தால் பற்றிக் கொண்டு வருகிறது இப்போது ஊடகங்கள் ரொம்பவே பாதிக்கிறது மக்களை குறிப்பாக இளைஞர்களை....ம்ம்ம்ம் என்னசெய்ய ..நல்ல பதிவு
ReplyDelete