எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 03, 2016

ஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன??

நாளை சாமவேதிகளுக்கு ஆவணி அவிட்டம். இது ஆவணி மாசத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் வருவதாலே எல்லாரும் ஆவணி அவிட்டம்னே சொல்லிக்கொண்டிருக்கோம். பார்க்கப் போனால் இதை உபாகர்மா என்றே அழைக்கவேண்டும். வேத அத்யயனம் என்பது ஒரு காலத்தில் தினமும் செய்யப் பட்டது. அதன் ஆரம்பம் உண்மையில் சிராவணமாசம் பெளர்ணமி தினத்தில் வேத பாடங்கள் ஆரம்பிக்கப் பட்டன. மேலும் நம்முடைய கல்வித் திட்டத்தில் வெறும் வேத அத்யயனம் மட்டுமில்லாமல் மற்றப் பாடங்களையும் சேர்த்தே கற்பித்தனர். அது இந்த வேத அத்யயனம் உத்ஸர்ஜனம் செய்து முடித்தவுடன் ஆரம்பம் ஆகும். உத்ஸர்ஜனம் செய்வது தை மாசத்தில் நடக்கும். நம்முடைய புராதனக் கல்வித் திட்டம் இரு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன. முதலில் ஆரம்பிப்பது ஐந்து மாசங்களில் நடக்கும் வேதபாடங்கள். வேத அத்யயனம் என்றே சொல்லலாம். இரண்டாவது பகுதி ஏழு மாதங்கள். அப்போ வேத அத்யயனம் செய்வதை உத்ஸர்ஜனம் என்றும் சொல்லும் பகுதி நேர முடிவுக்கு வந்துவிட்டு மற்றப் பாடங்களைப் படிக்க ஆரம்பிக்கவேண்டும்.

அதாவது முன்பெல்லாம் மலையாளிகள் கொண்டாடும் திருவோணம் நக்ஷத்திரத்திலேயே ஆவணி மாத பெளர்ணமி வந்து கொண்டிருந்திருக்கிறது. ஆவணி மாசம் ஸ்ரவண நக்ஷத்திரம் எனப்படும் திருவோணம் நக்ஷத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நன்னாளில் வேத பாடம் கற்க ஆரம்பிப்பார்கள். முன்னால் இப்படி வந்து கொண்டிருந்த பெளர்ணமி காலப் போக்கில் சில வருடங்கள் ஒரு நாள் தள்ளி அவிட்ட நக்ஷத்திரத்திலும் வர ஆரம்பித்தது. அப்போது யஜுர்வேதிகள் பெளர்ணமி திதியைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்களை ஆரம்பித்தனர். ரிக்வேதிகளோ சிராவண நக்ஷத்திரத்தைக் கணக்கு வைத்துக்கொண்டு பாடங்கள் ஆரம்பித்தனர். ஆனால் சாமவேதிகள் எப்போதுமே அமாவாசையையே கணக்கு வைத்துக்கொண்டனர். ஆகவே அவர்கள் ஒரு மாசம் தள்ளி ஆவணி அமாவாசையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையுள்ள காலத்தில் வரும் ஹஸ்த நக்ஷத்திரத்தில் பாடங்களை ஆரம்பித்தனர். ஹஸ்த நக்ஷத்திரம் மட்டுமின்றி அன்றைய தினம் பஞ்சமி திதியாக இருப்பதும் விசேஷம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்லுவதாய்த் தெரிகிறது. ஆனால் இப்போதெல்லாம் த்ரிதியையிலேயே ஹஸ்த நக்ஷத்திரம் வந்துவிடுகிறது.

உபாகர்மா என்றே இதற்குப் பெயர். ஆனால் இதை ஆவணி அவிட்டம் என்று சொல்லி நன்றாய்ச் சாப்பிட (போளி, ஆமவடையோடு) ஒரு பண்டிகையாக நாளாவட்டத்தில் மாற்றிவிட்டோம். தை மாசம் பிறக்கும் வரையில் வேதத்தை மட்டும் ஆசாரியர் கற்றுக் கொடுத்து சீடர்கள் சொல்லிக் கொள்வார்கள். தை மாதம் பெளர்ணமியிலோ அல்லது தை மாதத்து ரோகிணி நக்ஷத்திரத்திலோ இந்த அத்யயன காலத்தை முடிப்பார்கள். அத்யயன காலம் குறைந்த பக்ஷமாக நாலரை மாசமாவது இருக்கவேண்டும் என்பது விதி. ஆகவே தாமதமாய் ஆரம்பிக்கும் சாமவேதிகள் தை அமாவாசைக்குப் பின் வரும் பெளர்ணமியில் வேத அத்யயன காலத்தை முடிப்பார்கள்.

அடுத்த ஏழு மாசங்களுக்கு வேதத்தின் அங்கங்களான சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவதோடு ஏனைய வித்யைகளில் மாணாக்கர்களுக்கு எதில் ருசியும் தேவையும் இருக்கிறதோ அவற்றையும் கற்றுக் கொள்வார்கள்/கற்றுக் கொடுப்பார்கள். பின் மீண்டும் இந்த ஏழு மாசப் பாடங்கள் முடிந்ததும், அடுத்த வருடம் ஆவணி மாசம் இந்தப் பாடங்களை நிறுத்திவிட்டு மீண்டும் வேத அத்யயனம் ஆரம்பிப்பார்கள். இப்படிச் சுழற்சி முறையில் பாடம் கற்பிப்பார்கள். ஆனால் இப்போல்லாம், ஆவணி அவிட்டம் என்று சொல்லப் படும் அன்றே ஆரம்பித்து அன்றே முடிப்பதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பின் மறந்துடறோம்.

இதில் தன் வேதம் மட்டுமில்லாமல் மற்ற மூன்று வேதங்களையும் சேர்த்துக் கற்கும் மாணாக்கர்களும் இருந்திருக்கின்றனர். அதே போல் வேதாங்கம் கற்கும் நாட்களில் மற்ற வித்தைகள் மட்டுமின்றி இதர ஜாதியினருக்கான வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றனர். மேலும் இந்த ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றுவதும், உபநயனம் செய்து வைப்பதும் அந்தணர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்ரீராமரும், ஸ்ரீகிருஷ்ணருமே இந்த உபாகர்மாவைச் செய்தனர் என்று வைதிகஸ்ரீ என்றொரு புத்தகம் சொல்கிறது. இப்போது விஸ்வகர்மா என அழைக்கப் படும் ஆசாரிகள் என்றும் அழைக்கப் படும் இனத்தவரும் செட்டியார்களில் சிலரும் இந்த ஆவணி அவிட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.

ஸாமவேதிகளின் உபாகர்மா அமாவாசைக்குப் பின்னர் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி வரும்.  .  இந்த வருடம் செப்டம்பர் நான்காம்  தேதி ஞாயிறு அன்று சாமவேதிகளுக்கான உபாகர்மா!

தகவல்களுக்கு நன்றி:தெய்வத்தின் குரல்!

டிஸ்கி: பலரின் வேண்டுகோளை அடுத்து  இந்த மீள் பதிவு. முன்னால் பதிவு போட்டபோது பதிவின் ஆரம்பத்தில் சாமவேத ஆவணி அவிட்டத்தின் போது எழுதியதால் இன்று ஸாமவேதிகளின் உபாகர்மா எனக் குறிப்பிட்டிருந்ததை மட்டும் மாற்றி உள்ளேன்.  .  பொதுவாக மீள் பதிவு போடுவதில்லை;  என்றாலும் இது ஒரு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்பதால் கடந்த சில வருடங்களாகப் போட்டு வருகிறேன்.  ஏற்கெனவே படித்தவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.  நன்றி. பொறுத்தருள்க! :)))))


19 comments:

 1. இது மீள்பதிவுதானே என்று கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டே தொடர்ந்தேன். பார்த்தால் டிஸ்கி "அடேய் ஸ்ரீராம்.. நீ நினைத்தது சரிதாண்டா" என்கிறது! ஹிஹிஹி.. எங்களுக்கெல்லாம் எப்பவோ ஓவர்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு ஐந்தாறு வருடங்கள் முன்னர் தனிமடலில் ஒருத்தர் கேட்டதுக்காகப் போட்டேன். அதிலிருந்து வருடா வருடம் மீள் பதிவு! :) சொல்லிட்டுத் தானே போடறேன். :)

   Delete
  2. அத மொதல்லயே சொல்லணும். அக்காங்!

   Delete
 2. நல்ல விவரங்கள். நான் இப்போதுதான் பார்த்தேன், அன்புடன்

  ReplyDelete
 3. Replies
  1. சு.தா. என்ன சிரிப்பு? இல்லை, என்ன சிரிப்புங்கறேன்? பிரியலையே!

   Delete
 4. 1. சாமவேத ஆவணி அவிட்டம் என்று 4 செப், ரிக்/யஜுர் 18 ஆகஸ்ட் என்று சொன்னார்கள். உங்கள் விளக்கத்திலிருந்து புரிந்துகொண்டேன்.

  2.(போளி, ஆமவடையோடு) - எனக்குத் தெரிந்து எங்கள் வீட்டில், இட்லி, அப்பம்தான். ஆமவடையெல்லாம் யார் பண்ணுகிறார்கள்? போளி கேள்விப்பட்டமாதிரி இருக்கிறது (சந்தேகம்தான்). ஸ்மார்த்தாக்களுக்கு இது பண்ணும் ஐட்டமும் வித்யாசமா? அல்லது இது அவர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்ததா?

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழன், இந்த போளி, ஆமவடை என்பதெல்லாம் அவரவர் வீட்டுப் பழக்கம். என் அப்பா வீட்டில் ஆவணி அவிட்டத்தன்றும் கிருஷ்ண ஜயந்திக்கும் அப்பம் கட்டாயம் இருக்கும். போளியும் இருக்கும். மாமனார் வீட்டில் அப்பம் பிரமசாரிப் பிள்ளைகள் இருந்தால் தான் பண்ணுவாங்களாம். ஆனால் போளி, ஆமவடை நிச்சயம் உண்டு. மற்றபடி சமையலில் ஒரு சில மாறுதல்கள் இருக்கும் ஸ்மார்த்தர்கள் தான் போளி, ஆமவடை பண்ணறாங்கனு நான் நினைக்கிறேன். மாத்வர்கள் பண்ணுவாங்க. அடிக்கடி போளி பண்ணுவாங்க முன்னெல்லாம். இப்போதெல்லாம் குறைச்சிருக்காங்க போல! மற்றபடி பண்டிகை நாட்களில் எங்க வீடுகளில் எல்லாம் (இரண்டு பக்கமும் ஆமவடை தான்!) அதுவும் அம்மா வீட்டில் எப்போவுமே முப்பருப்பு வடை தான்! உளுந்து வடை கூட விசேஷங்களுக்கு, நாள், கிழமைக்குப் பண்ணினால் (உதாரணமாக பிள்ளையார் சதுர்த்தி, ஆடி அமாவாசை, கிருஷ்ண ஜயந்தி, சரஸ்வதி பூஜை, அனுமன் ஜயந்தி) இப்படிப் பண்டிகைகளுக்குப் பண்ணினால் வெறும் உளுந்து மட்டுமே போடுவதில்லை! அச்சானியம் என்பார்கள். ஆகவே உளுந்து தேவையானதைப் போட்டுவிட்டு அதிலேயே ஒரு அரைக்கரண்டி துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி(தேவையானால்) சேர்த்து ஊற வைச்சு அரைச்சுடுவோம். புரட்டாசி சனிக்கிழமை வெங்கடாஜலபதி சமாராதனைக்குப் பண்ணும் உளுந்து வடைக்கும் இப்படித்தான் அரைப்போம். இது ஒவ்வொருத்தர் வீட்டுப் பழக்கத்தைப் பொறுத்து!

   Delete
  2. 'நன்றி உங்கள் விளக்கத்துக்கு. அன்று வெங்காயம்சே, பூண்டு சேர்ப்பது உண்டா? (அதாவது விசேஷ நாட்களில்) என் ஹஸ்பண்ட் அவள் அம்மாவிடம் கேட்டு, கல்யாணத்துக்கு முன்பு இதெல்லாம் டாகுமென்ட் பண்ணியிருக்கிறாள். அப்போதான் பரம்பரை வழக்கத்தை அடுத்த ஜெனெரேஷனுக்குக் கடத்த முடியும் என்பதால்.

   Delete
  3. கடவுளே, வார நாட்களிலேயே செவ்வாய், சனிக்கிழமைகளில் வெங்காயம் சேர்ப்பதில்லை. பூண்டுக்கு எப்போதுமே தடா தான். எப்போதாவது மருந்தாகப் பூண்டு பயன்படுத்துவோம். அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி போன்றவை எந்தக் கிழமைகளில் வந்தாலும் அன்று நோ வெங்காயம் தினம்! அமாவாசைக்கு முதல் நாளும் நோ வெங்காயம்! மறுநாள் எங்கானும் வெளியே சாப்பாடு என்றால் அன்று பார்க்க முடியாது. என்றாலும் கூடியவரை வெங்காயத்தைத் தவிர்ப்போம். சிராத்தம் என்றால் சிராத்தத் தேதிக்கு ஒரு மாசம் முன்னிருந்தே வெங்காயம், பூண்டு, முருங்கை, முள்ளங்கி போன்றவை சேர்ப்பதில்லை. சிலர் முருங்கை சேர்க்கின்றனர். அவரவர் மனதைப் பொறுத்தது.

   Delete
 5. நான் பழைய பதிவைப் படித்ததில்லை. எனக்குப் புதிது. நிறையவே சொல்லிப் போகிறீர்கள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாகப் போட்டு வருகிறேன் ஐயா. மறந்திருப்பீர்கள்.

   Delete
 6. தெரிந்துகொள்ளவேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. ஆவணி அவிடடம் அன்று பூணூல் மாற்றுவார்கள் என்றளவுக்கு மட்டுமே தெரியும் . விபரங்களுக்கு நன்றி மேடம்.

  ReplyDelete