நவராத்திரி நான்காம் நாளுக்கான தேவி கூஷ்மாண்டா எனப்படுவாள். உலகைப் படைத்தவள் என்னும் பொருளில் ஆதி சக்தி துர்கா தேவியை இந்தப் பெயரில் அழைத்து இன்று வழிபடுகின்றனர். சிலர் வாராஹியாகவும் வழிபடுவதுண்டு.
படத்துக்கு நன்றி கூகிளார்
அன்னை ராஜராஜேஸ்வரியின் பஞ்ச பாணங்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்படும் வாராஹி அன்னையின் படைக்குத் தலைமை வகித்தவள். சத்ருக்களிடமிருந்து துன்பம் நேராமல் பாதுகாக்க அன்னை வாராஹியை வழிபட வேண்டும். இன்றைய தினம் மஹாலக்ஷ்மியாக சிங்காதனத்தில் அமர்ந்திருக்கும்படி அன்னையை அலங்கரிக்கலாம். ஷோடதசாக்ஷரி என்னும் பெயராலும் அழைக்கப்படுவாள். அக்ஷதை, மலர்கள் இரண்டாலும் கோலம் போடலாம். படிக்கட்டுக் கோலம் போடவேண்டும். கீழே குறுகி மேலே செல்லச் செல்ல அகலமாக இருப்பது போல் போட வேண்டும். வாழ்வில் படிப்படியாக உயர்வு ஏற்படும் என்பது ஐதீகம்.
செந்தாமரை, ரோஜா மலர்கள், கதிர் பச்சை, கஸ்தூரி மஞ்சள் பொடி போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ஜயதுர்கையாக நினைத்து வழிபடும் அன்னையை ரோகிணி என்னும் பெயரால் அழைக்கலாம். ஐந்து வயதுப் பெண் குழந்தையை ரோகிணியாகப் பாவித்து வழிபட வேண்டும். நிவேதனத்திற்குக் கதம்ப சாதம் செய்யலாம். மாலை பட்டாணிச் சுண்டல் செய்யலாம். கதம்ப சாதம் என்பது கிட்டத்தட்ட சாம்பார் சாதம் போலத் தான். காய்கறிகள் நிறையப் போடணும் என்பதோடு நாட்டுக்காய்களாகவும் இருக்கவேண்டும். பூஷணி, பறங்கி, வாழைக்காய், முருங்கைக்காய்( விருப்பமானால்), கத்திரிக்காய், சேனைக்கிழங்கு, அவரை, கொத்தவரை போன்றவை போடலாம். மொச்சை இருந்தால் ஊற வைத்துச் சேர்க்கலாம்.
அரிசி ஒரு கிண்ணம் எனில் சரி சமமாகத் துவரம்பருப்புப் போடலாம். இரண்டையும் நன்கு குழைவாக வேகவிட்டுக் கொள்ள வேண்டும். புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு எடுத்து நீர்க்கக் கரைத்துக் கொள்ள வேண்டும். காய்களை நீள வாட்டில் நறுக்கிக் கொஞ்சம் நல்லெண்ணெயில் வதக்கி ஒரு கிண்ணம் நீர் சேர்த்து வேக விட வேண்டும்.. காய்கள் பாதி வேகும்போது புளி ஜலத்தைச் சேர்க்கவும். காய்கள் நன்கு வெந்து பதமாகும் தருணம் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்க்கவும். ஒரு சிலர் சாம்பார்ப் பொடியே சேர்ப்பார்கள். ஆனால் மி.வத்தல், தனியா, கடலைப்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், தே.துருவல் எல்லாவற்றையும் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து போட்டால் இன்னமும் நன்றாக இருக்கும். கலவை கெட்டிப்பட்டு வரும்போது இந்த வறுத்த பொடியைப் போடலாம். சாம்பார்ப் பொடி எனில் அரிசி, பருப்புக் கலவையைச் சேர்க்கையிலேயே சேர்க்கவேண்டும்.
தனியே ஒரு வாணலியில் நெய்யை ஊற்றிக் கடுகு, மிவத்தல், கருகப்பிலை வறுத்துக் கொஞ்சம் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து அதைச் சாதக் கலவையில் கொட்டவும். கொத்துமல்லி தூவவும். இதற்குக் குழம்புக் கறிவடாம் இருந்தால் அதையும் வறுத்துச் சேர்க்கலாம். சிலர் இதற்கெனத் தனியாக வடைக்கு அரைத்து வடையை போண்டோ போல உருட்டிப் பொரித்துச் சேர்ப்பார்கள். அப்படியும் செய்யலாம். கொத்துமல்லி தூவவும்.
பட்டாணியை முதல் நாளே ஊற வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்து நன்கு கழுவவும். வழவழப்பு அப்போது தான் போகும். பின்னர் மறுநாள் குக்கரில் பட்டாணியை உப்புச் சேர்த்து வேக வைக்கவும். கடாயில் அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கொண்டு, கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, மாங்காய், தேங்காய்(கீற்றுக்களாக நறுக்கியது) போட்டுக் கொண்டு கருகப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும். வெந்த பட்டாணியைச் சேர்த்துக் கலக்கவும். வழக்கம் போல் ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்தச் சுண்டலுக்குத்ஹ் தேங்காய்த் துருவலை விடத் தேங்காயைப்பொடியாக நறுக்கிச் சேர்த்தால் நன்றாக இருக்கும்.
இன்னிக்கு நான் சிவப்புக் காராமணிச் சுண்டல் செய்தேன். இன்னிக்குச் சுண்டல் நல்லாவே வந்திருக்கு! ஹிஹிஹி, நேத்திக்கு திருஷ்டிப் பரிகாரம். :) என்னடா பொம்மை ஒண்ணும் புதுசா இல்லை, திரும்பத் திரும்பப்பார்த்ததையே போடறானு நினைக்காதீங்க. பொம்மை புதுசா வாங்கணும்னு தான் நேத்திக்குப் போனேன். சின்னதாக ஆறங்குலம் ராமர் பட்டாபிஷேஹ செட் 600 ரூபாயாம். வேணாம், பொம்மையிலே ராமரைப் பார்க்கிறதை விட நேரிலேயே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். :(
நான்காம்நாள் நவராத்திரியும் நன்றாய் போனது.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி.
Deleteநான்காம் நாள் நவராத்திரி கண்டேன். மீதி நாள்களைக் காணக் காத்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteவருடா வருடம் ஒரு புது பொம்மையாவது வாங்க வேண்டாமோ? இன்று பாஸுக்கு எஸ்கார்ட் ஆக முதல் சுண்டல் விஜயம். சுண்டலுக்கு பதில் குணுக்குவும், திருக்கண்ணமுதும் கிடைத்தது!
ReplyDeleteவாங்கணும் தான்! இங்கே இந்த வருஷம் வரவும் கம்மி, செலவும் கம்மி! :)
Deleteஅட கதம்பம் மணக்க இன்றைய நான்காவது நாள் சூப்பர்.
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஆஜர் ....!
ReplyDeleteநன்றி.
Deleteநான்காம் நாள் கதம்ப சாதம் - இங்கே இருக்கும் திருப்பதி தேவஸ்தான கோவிலில் சில சமயம் பிரசாதமாகக் கொடுப்பார்கள்.....
ReplyDeleteதொடர்கிறேன்...
பொதுவாப் பெருமாள் கோயில்களிலேயே வயிற்றுக்குக் கொடுக்காமல் அனுப்ப மாட்டாங்க! :)
Delete